சுஜாதா மோகன் திரையுலகில் பாடவந்து ஐம்பதாண்டுகள் என்றதும் பல பாடல்கள் பல நினைவுகள் & சில வருத்தங்கள் நினைவுக்கு வந்தன.
ஜானி படத்தில் ஒரு இனிய மனது பாடலை ஶ்ரீதேவி படுவதாகவும் அதை ரஜினி கேரக்டர் ஒரு இனிமையான குரலை தவற விட்டுவிட கூடாது என்று தனது வாக்மேனில் பதிவு செய்வதாகவும் படமாக்கி இருப்பார்.
ராசையா அதைப்பார்த்தாவது "இவரது அற்புத குரலில் இன்னும் பல பாடல்களை பதிவு செய்ய வேண்டும்" என்ற எண்ணம் உண்டாகியிருக்க வேண்டும்!
ஆனால் அவர் என்ன செய்தார்?இந்தப்பாடல் சேர்த்து விரல் விட்டு எண்ணக்கூடிய சில பாடல்களை மட்டுமே சுஜாதாவுக்கு கொடுத்தார்.அத்தோடு சரி.எண்பதுகளில் அவர் காணாமல் போனார்!
ஒவ்வொருமுறை ஜானி பாடலை கேட்கும்போதும் வருத்தமும் கோபமுமே மிஞ்சி நிற்கிறது!பன்னிரண்டு வயதில் பாடவந்து பதின்ம வயதுகளில் அத்தனை அற்புதமாக பாடும் திறனெல்லாம் எல்லாருக்கும் வாய்க்காது!
மீண்டும் ரோஜா படத்தில் ரஹ்மான்உன்னி மேனன் & சுஜாதா இருவரையும் மறு அறிமுகம் செய்தார் என்றே சொல்ல வேண்டும்!அதன் பிறகே சுஜாதாவுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கினார்கள்! பூப்பூக்கும் ஓசை பாடியதற்கு தேசிய விருது வாங்கினார்.காற்றுகுதிரையிலே(காதலன்),முதன்முறையே(சங்கமம்) ,காதல் ரோஜாவே ஹம்மிங் என்று மறக்க முடியாத பாடல்கள் உண்டு!
நேற்று இல்லாத மாற்றம் பாடல் உருவாக்கம்
வித்யாசாகரின் இசையில் அவரது குரல் தனித்தன்மையாக ஒலிக்கும்! ஆனந்தம் ஆனந்தம்(முறைமாமன்), உன்சமையல் அறையில்,ஆசை ஆசை ,அழகூரில் பூத்தவளே என்று தொடர்ந்து மெலடி பாடல்களை பாட வைத்தார்.மலையாளத்திலும் அப்படியே!
செங்கோட்டை படத்தில் வரும் பூமியேபூமியே பாடலே ஒரு மெலடி தான்.எஸ்பிபி பாடியிருப்பார்.அதை மலையாளத்தில் யத்ரையோஜென்மமாய் (Summer in Bethlehem) என்று இன்னும் மென்மையான பாடலாக மாற்றி ஶ்ரீனிவாஸ் சுஜாதா ஆகியோரை பாட வைத்திருப்பார்.ஶ்ரீனிவாஸ் சும்மா ஆரம்பத்தில் பாடிவிட்டு செல்ல முழு பாடலும் சுஜாதாவின் ராஜ்ஜியம் தான்!
ராரா(சந்திரமுகி) முதலில் கேட்டபோது சுஜாதா பாடியது என்றே நினைத்தோம்.ஆனால் பின்னிகிருஷ்ணகுமார் பாடியிருந்தார்.இதில் ஒரு வினோத ஒற்றுமை சந்திரமுகியின் அசல் மூலமான மணிச்சிதிரதாழ் படத்தில் ராரா பாடல் வரும் இடத்தில் வந்த ஒருமுறை வந்து பார்த்தாயா? பாடல் தமிழில் வரும்.முழுப்பாடலாக வரும் பாடலை சித்ரா பாட சின்னதாக வரும் பாடலை சுஜாதா பாடியிருப்பார்!
லோகேஷால் மீண்டும் பிரபலமான சக்குசக்கு வத்திக்குச்சி & தாமர பூவுக்கும் பாடல்களை பாடியவரும் அவரே!அடுத்து அதைப்போல் மீண்டும் பிரபலமாக்கப்பட போகும் "வாடி வாடி நாட்டுக்கட்ட" பாடியவரும் அவரே!
எஸ். ஏ.ராஜ்குமார் இன்னும் தாராள மனதுக்காரர்.தனது படங்களில் வந்த அத்தனை முக்கிய பாடல்களையும் சுஜாதாவையே பாட வைத்தார்.
கண்ணாளனே பாடலையே கொஞ்சம் அப்படி இப்படி போட்டு கேட்பதற்கு அசல் பாடல் போலவே இனிமையாக அமைத்த சொல்லாமலே யார் பார்த்தது (பூவே உனக்காக) பாடலை பாடியிருப்பார்.பிறகு சூரிய வம்சம் படத்தில ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ஏதோ ஒரு பாட்டு,வானம்பாடியின்வாழ்விலே,மல்லிகை பூவே,எங்கள்வீட்டில்(வானத்தை போல),நிலவே வான்நிலவே(மாயி) என்று கொடுக்க அந்தப்பக்கம் சிற்பி சிட்டு சிட்டுகுருவிக்கு(உள்ளத்தை அள்ளித்தா),காற்றுக்குபூக்கள்(கண்ணன் வருவான்), உனக்கென உனக்கென(விண்ணுக்கும் மண்ணுக்கும்),என்னை தாலாட்டும்பூங்காற்று(உன்னை நினைத்து) என்று பல பிரபல பாடல்களை கொடுத்தார்.
தொண்ணூறுகளில் திரும்பவும் ராசையா அதே தவறை செய்தார்.எழுபதுகளின் இறுதியில் எப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய பாடல்களை மட்டுமே அவருக்கு பாட கொடுத்தாரோ அதே போல அப்போதும் அப்படியே கொடுத்தார்! ஒருபட்டாம்பூச்சி(காதலுக்கு மரியாதை), மஞ்சள் பூசும் - ஃப்ரெண்ட்ஸ்,சரணம் பவ(சேது),தாலாட்டும் காற்றே (தேவன்) என்று வெகுசில பாடல்கள் மட்டுமே!குறிப்பாக மஞ்சள் பூசும் பாடலின் இரண்டாவது பத்தியில் தென்றல் வந்து ஜன்னல் திறந்தது என்று பாடுவதை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் "இதுபோன்று எத்தனை பாடல்களில் ராசையா இவரை பாட வைத்திருக்கலாம்!" என்று அங்கலாய்ப்பு தோன்றும்!
தேவா முற்றிலும் புதிதான முறையில் அவரது குரலை பயன்படுத்திய பாடலொன்று உண்டு.என் உயிர் நீதானே படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய ஜனகனின் மகளே பாடலில் "பொய் சொல்லாதே" என்பதையே பாடல் முழுக்க பல்வேறு உணர்வுகளில் தொனிகளில் ராகங்களில் பாடி இருப்பார்!
அப்புறம் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் இவர் பாடிய நல்ல பாடல்கள் உண்டு.சரவணபவகுக (காதலா காதலா),நிலவேநிலவே(பெரியண்ணா),சோலைக்குயில்பாடும் (ஆனந்த பூங்காற்றே),ஹேமோனா (கண்ணோடு காண்பதெல்லாம்),உன் பேர் சொல்ல (மின்சார கண்ணா),நீதானா(உன்னை தேடி) என்று எப்படி எண்பதுகளின் திரையிசைக்குரலாக எப்படி ஜானகி இருந்தாரோ அப்படி தொண்ணூறுகளின் குரலாக இவர் இருந்தார்!
இதையெல்லாம் விட மறக்க முடியாத பாடல்கள் என்றால் காதல் வேதம் என்ற ஆல்பம் தான்.ஏதோ ஒரு கம்பெனி கேசட் வாங்கப்போய் அப்போது கடையில் இந்த கேசட் பார்த்ததும் அத்தனை பாடல்களையும் ஹரிஹரன் பாடியுள்ளாரே (பிறகு ராசையாவின் காசி படத்தில் அதுவே நடந்தது) வித்தியாசமா இருக்கே என்று வாங்கினோம்.இத்தனைக்கும் இசை அமைத்த உத்பல் பிஸ்வாஸ் யாரென்றே நமக்கு தெரியாது.ஆனால் அத்தனை பாடல்களும் அட்டகாசம்.அதில் இரண்டு பாடல்களை சுஜாதா பாயிருப்பார்.என்நெஞ்சில் தூங்கவா நிலாவே கேட்டால் ஆளில்லாத தீவில் நிம்மதியாக சஞ்சரிப்பது போன்ற உணர்வைத்தரும்.இந்த ஆல்பம் அவ்வளவாக மக்களுக்கு தெரியாது என்பதால் வந்த உணர்வாக இருக்கலாம்!
இப்போதும் சுஜாதா என்றால் நினைவுக்கு வரும் பல பாடல்களில் இந்த ஆல்பத்தின் பாடல்களும் அடக்கம்! இப்போது இவரது மகள் ஸ்வேதாமோகனும் பாட வந்துவிட்டார். அவர் பாடும் முறை குரல் வளம் எல்லாம் சுஜாதாவிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று! சூழல்கள் மாறி சுஜாதாவின் குரலை சரியாக பயன்படுத்தும் அளவுக்கெல்லாம் இப்போது நல்ல நிலையில் திரையிசை இல்லை!இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை! வரி வரியாக பாடல் வரிகளை படிக்க பின்னணியில் இசைக்கருவிகளை உருட்டி ஆட்டோ ட்யூன் ரிக்ஷா ட்யூன் என்று ஒருமாதிரி எதையோ கொடுத்து விடுகிறார்கள்!ராசையா பாடத்தெறிந்த சுஜாதாவுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்காமல் பாடவே வராத தனுசை எல்லாம் வைத்து மன்னாடி கொண்டிருக்கிறார்!
படத்தை பார்த்ததற்கு முக்கிய காரணம் அஜூ வர்கீஸ்.சமீபத்தில் ஐடென்டிட்டி படத்தில் சீரியஸான அதுவும் வயதான தோற்றத்தில் நடித்ததை பார்த்ததும் "என்னாத்துக்கு இப்படி ரிஸ்க் எடுக்கிறார்?" என்று தோன்றியது.விளையாட்டான - பெரிய அறிவாளியாக எல்லாம் இல்லாமல் - சிறு சிறு அபத்தமான தவறுகளை செய்து பல்பு வாங்கி பேந்த பேந்த முழிக்கும் - அந்த அஜூ வர்கீஸ் தான் இயல்பானவர்.
கிளி போயி என்றால் கிளிக்கு றெக்க மொளச்சு பறந்து போச்சு என்பதாக அல்லாமல் மலையாள பேச்சு வழக்கில் வாய்ப்பு பறிபோனது,மன நிம்மதி போனது(துடரும் படத்தில் ஷோபனா தனது மகளிடம் மோகன்லாலுக்கு மன நிம்மதி குலைந்தது பற்றி கிளி போயி என்று பேசுவதாக காட்சி வரும்) என்று அர்த்தமாகும்.காசர்கோல்ட் படம் போலவே தான் இதுவும்.அதில் தங்க கடத்தல்.இதில் [(கிங்ஸ் லெவன்)^n] கடத்தல்.ஆனால் அதைவிட இந்தப்படம் கொஞ்சம் பரவாயில்லை.அதில் விநாயகனை வீணடித்திருப்பார்கள்!இதில் அதுபோன்றதொரு கேரக்டரில் சம்பத்!படத்தில் முக்கியமான கேரக்டர் அவரே!
அவருக்கு வரும் தமிழ் வசனங்களை அவரையே பேச சொல்லிவிட்டார்கள் போலும்.மனிதர் ****** ..கோ** என்று பின்னி பெட்டல் எடுத்து விட்டார்.அதிலும் வெற்றிமாறன்கௌதம் மேனன் பாணி வசைகளாக இல்லாமல் தொண்ணூறுகளில் டப்பிங் ஆகிவரும் சுரேஷ் கோபி நடித்த ஆக்ரோஷமான ஆக்ஷன் படங்களில் வருவது போன்ற வசைகள்!மகாத்மா பட ஆரம்ப காட்சியில் சுரேஷ் கோபி பேசும் அந்த வைரமான வசனத்தை நினைவுபடுத்தியது! 😜
வாழ்க்கை படத்தில் மெல்ல மெல்லஎன்னைத்தொட்டு பாட்டில் ஆடிய அதே ரவீந்திரன் இதில் அந்தப்பாட்டுக்கே டான்ஸ்ஆடும் காட்சியில் "இவன் என்னையா ஆடுறான்?" என்று ஆசிப் நக்கலாக கேட்கும் காட்சியும் உண்டு!
மலையாளம் தவிர்த்து தமிழ் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழி வசனங்களும் சரளமாக வருகிறது.
படம் ஓடும் நேரம் குறைவு என்பதால் திரைக்கதை சொதப்பல்கள் பெரிதாக உறுத்தவில்லை.இன்னும் பத்து நிமிடங்கள் நீண்டிருந்தால் தாங்க முடியாமல் போயிருக்கும்! காவல் அதிகாரி அறிவுரை சொல்லும்போது அவர் பேசுவதற்கு பதில் பின்னணியில் கிங்ஸ் லெவன் எச்சரிக்கை வாசகம்(படங்களின் துவக்கத்தில் வருமே!) ஒலிக்க அது தாங்காமல் ஆசிப் அலி தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போல வரும் காட்சி மலையாளிகளுக்கே உரிய குசும்பு வெளிப்பட்ட தருணம்!
டாய்லெட்டில் இரு பெண்கள் மோதிக்கொள்ளும் சண்டை காட்சி இன்ப அதிர்ச்சி! இன்னும் கொஞ்ச நேரம் அதை எடுத்திருக்கலாம்.அவ்வளவு இயல்பான சண்டைக்காட்சிகள் அமைத்த அன்பறிவ் இப்ப கிரீன் மேட் ரோப் என்று அந்தப்பக்கம் போனது பெரிய அவலம்!இந்தமாதிரி மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் தான் சண்டைக்காட்சிகள் தரமாக வருகிறது.
ரொம்ப பெரிய பட்ஜெட் என்றாலே க்ரீன் மேட் தான்! கொரிய படங்களில் வரும் உக்கிரமான சண்டைக்காட்சிகள் போல அமைக்கக்கூடிய திறமைசாலிகள் இங்கும் உள்ளனர்.குறிப்பாக இந்திய அளவில் தமிழ் சினிமாவில் தான் அத்தனை திறமை கொண்ட சண்டைபயிற்சியாளர்கள் சண்டை கலைஞர்கள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்வதில் இயக்குநர்களுக்கு அப்படியென்ன சிரமம் என்று தெரியவில்லை! கதை காட்சி என்று எல்லாமே குப்பையாக இருக்கும் படங்களில் கூட சில சமயம் அற்புதமான சண்டைக்காட்சிகள் அமைந்துவிடுவதுண்டு.
நாம் பலமுறை குறிப்பிட்ட அசுரவதம் ஹோட்டல் வராண்டா சண்டைக்காட்சி(திலீப் சுப்பராயன்); முகமூடி படத்தில் நரேன் மற்றும் செல்வா மோதிக்கொள்ளும் அந்தக்காட்சி! வெறும் உடல் ரீதியாக செல்வாவை தோற்கடிக்கவே முடியாது என்று புரிந்துகொள்ளும் நரேன் உளவியல் ரீதியாக வீழ்த்தி அந்த பலவீன தருணத்தில் செல்வா இருக்கும்போது மொத்தமாக வீழ்த்திவிடுவார்
திலீப் சுப்பராயன்
முகமூடி படம் குப்பைதான்.ஆனால் அந்தப்படத்தின் இந்த குறிப்பிட்ட சண்டைக்காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒன்று. புரூஸ்லீஜாக்கிசான் போன்றோருடன் பணியாற்றிய Tony Leung Siu Hung இப்படத்தில் சண்டைக்காட்சி அமைத்திருப்பார்.அது output ல நல்லாவே தெரியும்.சண்டைக்காட்சிகள் என்றால் அப்படி இருக்க வேண்டும்!
ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக ஹீரோ(அல்லது பிரதானமாக யார் சண்டை போட போகிறார்களோ அவர்கள்), இயக்குனர் ,சண்டைப்பயிற்சியாளர் ஒளிப்பதிவாளர் ஆகியோர் ஒரு ஒருமித்த நிலையில் முன்பே விவாதித்து சரியாக திட்டமிட்டு அதை படமாக்கினால் அற்புதமாக அமையும்!
Tony Leung Siu Hung
கேப்புடன் பற்றி மற்றவர்கள் கூறும்போது சண்டை கலைஞர்களிடம் "நீங்க வேணும்னா ரோப் கட்டிக்குங்க.ஆனா நா ரோப் போட்டு நடிச்சா இத்தன வருஷம் பண்ணது எல்லாம் போலின்னு ஆகிடும்" என்று சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அவரே பிற்காலத்தில் ரோப் போட்டு நடித்து நம்மை பெரும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினார்! விவேக் அடிக்கடி கேப்புடன கிண்டல் செய்ய சொல்லும் "செவுத்துல லெஃப்ட் லெக்க வச்சு ரைட் லெக்கால சுழட்டி சுழட்டி அடிப்பார்" வசனம் பலருக்கும் நினைவிருக்கும்.
ஸ்டண்ட்மேன் அழகுசித்ராலட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் "அப்படி எல்லாம் ஒரு காலை செவுத்துல வச்சிட்டு இன்னொரு கால்ல லேண்ட் ஆகிறது அவ்வளவு சுலபமில்ல.ஆனா அவர் அதை செஞ்சார்".அழகு முறைப்படி களரி பயின்றவர்.
கேப்புடனின் தோள்பட்டை மூட்டு அவ்வப்போது கழண்டு விடும் என்பதால கால்களாலேயே சண்டையிடும் விதத்தில் தனது பாணியை மாற்றிக்கொண்டார் என்றும் சொல்வதுண்டு.
ஆனால் அலெக்சாண்டருக்கு பிந்தைய படங்களில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி என்றாலே காற்றில் எல்லாரும் பறக்க வேண்டும் என்பதாக மாறிப்போனதில் ஏற்பட்ட வீழ்ச்சி! அந்தப்பாணியில் கேப்புடனும் சென்று நகைப்புக்குரிய காட்சிகளாக இன்று பார்க்கப்படும் சில சண்டைக்காட்சிகளில் நடித்து ஏற்கெனவே உயிரை பணயம் வைத்து நடித்த பல சண்டை காட்சிகளுக்காக பாராட்டு பெற்றதை விட இம்மாதிரி பறக்கும் காட்சிகளுக்காக கேலி கிண்டலுக்கு அதிகமாக உள்ளானார்!
ஜான் விக் படத்தில் யாரும் ஆகாயத்தில் பறப்பதில்லை!ஆனாலும் அந்த பிரம்மாண்டத்தை சண்டைக்காட்சிகளில் காணலாம்!சும்மா ரோப் க்ரீன் மேட் சிஜி இருக்குன்னு சகட்டுமேனிக்கு படமாக்கி அதை பிரம்மாண்டம் என்று சொல்லக்கூடாது!
யூ ட்யூப் தமிழ் வீடியோக்கள் குறிப்பாக சிலவற்றை மட்டுமே பார்ப்பதுண்டு.சித்ரா லட்சுமணன் பேட்டிகள் கூட பேட்டி கொடுக்கும் நபர் சார்ந்தே இருக்கும்.பயில்வான் திரை விமர்சனம் மிஷ்கின் பேச்சு, ராதாரவி பேச்சு (இதெல்லாம் எங்க உருப்பட போவுது? - த.மணியன்) என்று மட்டுமே பார்ப்பதுண்டு.
அதையும் தாண்டி சில குப்பைகள் காற்றில் எழும்பி புழுதி கிளப்பி பல நாட்கள் ஒவ்வாமையை உண்டுபண்ணி விடுகிறது. அப்படியான ஒரு சேனல் LEMS.Let's make Engineering Simple. சரி ஊர்ல தடுக்கி விழுந்தால் ஒரு என்ஜினியர் என்று இருக்கும் நிலையில் இது மற்றுமொரு வேலையற்ற என்ஜினியர் உருவாக்கிய சேனல் என்று விட்டுவிடலாம் தான்.ஆனால் இவர்கள் இன்று பல பள்ளிகளில் நாங்கள் workshop நடத்துகிறோம் ; தனியாக கோடை விடுமுறை வகுப்புகள் உண்டு என்றெல்லாம் சொல்லும்போது தான் பீதி கிளம்புகிறது. காரணம் இவர்களின் லட்சணம் எத்தகையது? என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் சொல்கிறோம். ஒரு நாளைக்கு ஆயிரத்தைநூறு கலோரிகள் சாப்பிட்டால் உடல் எடை குறையும்(அதாவது ஒரு நாள் தேவை இரண்டாயிரம் கலோரி என்பதை கணக்கில் கொண்டு) என்றொரு மருத்துவ ஆய்வு சார்ந்த முடிவு உண்டு. அதை மையமாக வைத்து LMES சேனலில் ஒரு வீடியோ.பொரியல் சாரி பொறியியலுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம் என்று யாரும் கேட்க கூடாது.நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஐயாயிரம் வருட இரும்பு பதிவின்படி ஒரு சேனலை உருவாக்கிவிட்டு வானத்திற்கு கீழே மேலே சைடில் என அனைத்தைப்பற்றியும் பேசுவது புதிதல்ல.
அதாவது ஒரு நாளைக்கு ஆயிரத்தைநூறு கலோரிக்கு மூன்று வேளையும் பிரியாணி மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம் என்றொரு வீடியோ .ஆகா! இதல்லவோ இஞ்சி-ன்-earring தகவல்! இந்த சொறிய சாரி அரிய கண்டுபிடிப்பை ஹார்வர்ட் மருத்துவர்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை! மருத்துவ உலகே யோசிக்காத இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது இந்த LEMS! இப்படியான அரிய கண்டுபிடிப்பாளர் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் வகுப்பு எடுத்தால் அவர்கள் எப்படியாக வளர்வார்கள்????????
இந்த அவல நகைச்சுவை ஒருபக்கம் என்றால் இந்த LEMS கரகாட்ட கோஷ்டியில் இருந்து விலகிச்சென்ற மற்றொரு பக்ரா buying facts & engineering facts என்று இரு சேனல்கள் ஆரம்பித்துள்ளது.
அதுவும் இப்படித்தான்.சாதா ஏசிக்கும் இன்வெர்ட்டர் ஏசிக்கும் மின்சார பயன்பாட்டில் எந்த வித்தியாசமும் இல்லை என்றொரு வீடியோ!
அடங்கப்பா! இன்வெர்ட்டர் ஏசி என்பதே மிக சிக்கலான ஒரு சாதனம்.நீங்கள் எந்தமாதிரி அறையில் இதை மாட்டுகிறீர்கள் என்பதை பொறுத்தே மின் பயன்பாடு இருக்கும். உதாரணமாக அதிகமான ஜன்னல்கள்,நேரடி சூர்ய வெளிச்சம் அறையின் மேற்கூரையில் விழுதல் அடிக்கடி அறையின் கதவுகள் திறந்து மூடப்படுமா? ஜன்னல் கதவுகள் இடுக்குகளில் சரியான இன்சுலேஷன் உள்ளதா என்று ஏகப்பட்ட காரணிகள் உள்ளன. மேற்சொன்ன இருக்க கூடாது பட்டியல் உள்ள ஒரு அறையில் இன்வெர்ட்டர் ஏசி போட்டால் கண்டிப்பாக சாதா ஏசி அளவுக்கு மின் பயன்பாடு இருக்கும்!
அறை எத்தகையது?பயன்பாடு எவ்வளவு நேரம்?தொடர்ச்சியாகவா அல்லது விட்டு விட்டு பயன்பாடா? என்பதெல்லாம் கவனித்தே இதை பொருத்த....ஆம்... ஏசி மாடல் எந்த மாடலாக இருந்தாலும் அது எந்த லட்சணத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அதன் செயல்பாடு அமையும்.காப்பர் குழாய்களை வளைக்க bender பயன்படுத்தாமல் கையால் வளைத்து அதனால் ஒரே வாரத்தில் கேஸ் லீக்கான சம்பவங்கள் உண்டு!
மேலும் புதிதாக ஏசி பொருத்தும்முன்
Indoor unit ஐ vacuum செய்தல்,காப்பர் குழாய்கள் மேல் காட்டன் சுற்றுதல்,இதுதவிர தரமான ஸ்டெபிலைஸர் பொருத்துதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்தல்,Outdoor unit ஐ சீதோஷ்ண மாறுதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் டாப் போடுதல் என்று ஏற்கப்ப சமாச்சாரங்கள் உண்டு. இன்வெர்ட்டர் ஏசி பென்ஸ் கார் மாதிரி.பக்காவாக பராமரிக்காமல் போர்டு போச்சு என்று புலம்புவதில் நியாயமில்லை!
இத்தனை விஷயங்கள் இருக்க இது எதைப்பற்றியும் கவலையேபடாமல் ஏதோ சொந்தமா ஒரு ஆய்வு(!!??)முடிவு என்று அடித்து விட்டுள்ளார்கள்!
இதே சேனலில் முடி உதிர்தல் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வீடியோவும் உண்டு!
அப்புறம் வழக்கம்போல எந்த யூ ட்யூப் சேனலாக இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்தால் செய்வதை இந்த சேனலும் செய்கிறது.கண்ணாடி கடை விளம்பரம் சுத்தமான முறையில் புட்டியில் அடைக்கப்பட்ட இளநீர் விளம்பரம் என்று இவர்களுக்கு பிழைப்பு நன்றாகவே ஓடுகிறது! மொத்தத்தில் இவர்கள் இன்ஜினியரிங் கத்து கொடுக்காட்டியும் எப்படி மக்களிடம் குறளி வித்தை காட்டி அதிக பார்வையாளர்கள்,அதிக விளம்பரதாரர்கள்,அப்புறம் அந்த யூ ட்யூப் வெள்ளி கேடயம் தங்க கேடயம் இவைகள் மூலம் அதிக டப்பு பெறுவது என்று டெமோ காட்டியுள்ளார்கள்! பள்ளி கல்லூரிகளில் இவர்கள் கேம்ப் அது இதுவென்று நடத்துவதை பார்த்தால் இந்த சேனல்களை பார்ப்பவர்களை விட பரிதாபத்துக்குரியவர்கள் அந்த மாணவ -மாணவிகள்தான்! . டிஸ்கி : உதயா: ஆமா இவங்க பொறியியல் வல்லுநர்கள் தானே?அப்புறம் ஏன் எந்த பொறியியல் கம்பெனியும் இவர்களுக்கு வேலை கொடுக்கல?
படம் நம்மை ஈர்த்ததில் முக்கிய பங்கு பசில் ஜோசப்பின் கெட்டப்புக்கே.அசல் சுராத்தை படத்தில் இரு ரூபங்களில் காணலாம்.
தோற்றத்தில் மட்டுமல்லாது ; காலி பெருங்காய டப்பாவாக இருந்தாலும் ஓவர் பில்டப் & பந்தா ,தன்னை சுற்றி ஒரு துதி பாடும் கூட்டத்தை தயார் செய்து வைத்திருத்தல்,ஏடாகூடமாக ஏதாவது செய்து ஊரை அலற விடுதல் என்று லூக் (பசில் ஜோசப்) நடத்தையிலும் அசல் சுராத்துதான்.
தனது தந்தையைக்காணோம் என்றதும் பெண்கள் கழிப்பிடத்தில் மகன் தேடும் காட்சி,பட்டாயா தொடர்பான உரையாடல்,அந்த கண்டக்டர் அருவிகேசவ குரூப் மார்பில் குத்தப்பட்ட பச்சை போலவே தனது மார்பில் இருக்க "யப்பா!" என்று உணர்ச்சிவசப்படுதல் அதகளம்! பார்க்கும் எல்லோருக்கும் அதேமாதிரி பச்சை குத்திவிட்ட குரு சோமசுந்தரத்தை ஜோசியராக காட்டியதும் வந்த பீதி ஒரே ஷாட்டோடு அவரை அனுப்பி வைத்து இயக்குனர் பால் வார்த்தார்! ஒரு பஃப் கிங்ஸ் லெவன் மற்றொரு பஃப் ஆஸ்த்துமா இன்ஹேலர் என்று கேசவ குரூப் இழுப்பதாக காட்டி கீழே எச்சரிக்கை வாசகம் போடும் சென்சாருக்கே சவால் விட்டுள்ளார்கள் ! 😃 சீரியல் கொலையாளி வேடம் செய்த ஶ்ரீகுமார்(ராஜேஷ் மாதவன்) மற்றும் கேசவ குரூப்( புலியனம் பௌலோஸ்) ஆகிய இருவருமே பார்க்க ஏதோ AI உருவாக்கிய உருவம் உயிர்பெற்று வந்ததுபோல இருக்கிறார்கள். குறிப்பாக நேரு உடை அணிந்து வரும் SK surreal அனுபவத்தை உண்டாக்குகிறார்! நமதபிமான சைத்ரா ஆச்சார் நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம் Happy Birthday to me .கிட்டத்தட்ட அந்தப்படம் தந்த அனுபவம் இதிலும் கிடைத்தது.பல இடங்களில் விடாது சிரிப்பு தான் 😃 ( உதயா சீரியஸ் காட்சிகளைக்காணும் போதே சிரிப்பான்.இப்ப சிரிப்புக்கு கேட்கணுமா? - கும்மாங்கோ).
சீரியல் கொலையாளி சுற்றி வளைப்பு என்றதும் வரும் சுராத்து அறிமுக காட்சி அட்டகாசம்! சுராத்து அண்ணாயிஸ்ட்டாக காட்டப்படுகிறார்.அறிமுக காட்சியும் மெர்சல் அண்ணா ஸ்டைல் தான் 😃 . தியேட்டராக இருந்திருந்தால் ஃபயர் விட்டிருக்கலாம்!
கிராமபஞ்சாயத்து தலைவரின் கூகுள் சர்ச் ஹிஸ்டரியை பிரிண்ட் போட்டு பஞ்சாயத்து அலுவலகம் வாயிலிலேயே ஒட்டியது,சர்ச் பாவ மன்னிப்பு உரையாடல்களை ரகசிய மைக் மூலம் ஸ்பீக்கரில் ஒலிபரப்பியது,சுராத்து கைது செய்யப்பட்டதும் ஊர் மக்கள் திரண்டு கண்டிப்பது,நீச்சல் வீரர் இறந்ததும் நீச்சலை தடை செய் என்று போராடுதல்,பேப்பர் ஸ்ப்ரே அடித்து கொன்றதாக காதலி சொல்ல "என்ன ஃபிளேவர்?" என்று கூலாக கேட்பது,இடுகாட்டில் "டென்சனா இருக்கு ஒரு பீடி பத்த வச்சிக்கிறேன்" என்று கேசவ குரூப் பையில் இருந்த [(கிங்ஸ் லெவன்)^n] கலந்த பீடியை இழுத்து அடுத்த நொடியே 'விண்வெளி நாயக்கடு'வாக மாறி பேசுதல் என்று சின்ன சின்ன கிறுக்குத்தனங்கள் அட்டகாசம்.
சீரியல் கொலையாளி (SK) சிறுவர் சிறுமிகள் மத்தியில் நின்றபடி வெட்டு குத்து என்று கதை சொல்லும்போது எல்லோரும் அலறி அழ ஒரு சிறுவன்(அவன் அட்டகாசமாக நடித்துள்ளான்) "மிச்ச கதையை சொல்லு!" என்று கேட்பது( ஒருவேளை அவன் உதயா உள்வட்ட வாசகனாக இருப்பானோ? - கும்மாங்கோ) என்று வகைதொகை இல்லாது புகுந்து விளையாடி விட்டார்கள்.
கதாநாயகித்தனம் இல்லாத கதாநாயகி என்ற பெருமையை நஸ்ரியாவுக்கு அடுத்து அனிஷ்மா பெறுகிறார்.ஏற்கெனவே இவர் ஐ ஆம் காதலன் படத்தில் நடித்தவர்.அதற்காக இவர் அடுத்த நஸ்ரியா என்றெல்லாம் அடித்து விட மாட்டோம்.கடைசியில் எல்லாரும் எஸ்கேவிடம் அடிவாங்கி விழுந்து கிடக்கும்போது ஜெஸ்ஸி ஆவேசமாக வந்து நின்றபோது "இவர் புரட்டி எடுப்பதாக காட்டினால் சாதாரண run of the mill காட்சியாகி விடுமே!" என்று வருத்தப்பட்டதை புரிந்துகொண்டதை போல "கலாய்ப்பதில் ஆண் பெண் பேதமே இல்லை" என்று டாப் கியரில் அடித்து தூக்கி விட்டனர்!
வினீத் ஶ்ரீனிவாசன் நடித்த ஒருசெகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் இறுதியில் மிக சீரியஸாக ஒரு அடக்கம் செய்யும் காட்சி வரும்.அதாவது டபுள் அடக்கம்.ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட ஒரு சவப்பெட்டியின் மேலேயே கொல்லப்பட்டவர்(யாரென்று சொல்ல மாட்டோம்.படம் பார்க்காதவர்கள் கடுப்பாகி விடுவார்கள்) பிரேதத்தை போட்டு மூடி விடுவார்கள்.
இந்தப்படத்திலும் அப்படியான ஒரு முயற்சி வருகிறது.ஆனால் இனி எப்போதாவது அந்த செகண்ட் கிளாஸ் யாத்ரா பட அடக்க காட்சியை பார்த்தால் இந்தப்பட காட்சி நினைவுக்கு வந்து சிரிப்புதான் வரும்! சூர்யா தனக்கு கேரளாவில் வாசகர்கள் அதிகம் என்பார்.அது உண்மையோ பொய்யோ ஆனால் சூர்யா, சுராத்து ஆகியோர் குறித்து சூர்யாவின் எழுத்து மூலமாக பரிச்சயம் ஆனவர் யாரோ அவர்களை வில்லங்கமாக சித்தரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் நமக்கு இப்போதும் உண்டு 🤪 சுராத்து - லூக் சூர்யா - படம் பார்த்தாலே புரியும்! 😜
ஒரே குறை அந்த கேரக்டர் ஆன்லைனில் கில்மா சாட்டிங் செய்வதாக காட்டியிருந்தால் முழுமை பெற்றிருக்கும்!
இந்தமாதிரி அவல நகைச்சுவை படங்களாக பார்த்து சிரித்து பழகிவிட்டதால் சாதாரண நகைச்சுவை காட்சிகள் அவ்வளவு சிரிப்பை உண்டாக்குவதில்லை!
ஒலக விமர்சகர்கள் இப்படம் குறித்து எழுதும்போது அலுத்தபடி "இன்னும் எத்தனை murder mystery படங்களைத்தான் மலையாளத்தில் எடுப்பார்கள்" என்பதாக எழுதியதை படித்ததும் தலை சுற்றியது. அடங்கப்பா ஒரு சிபிஐ டயரி குறிப்பு மாதிரியான படமா இது??இது ஒரு அவல நகைச்சுவை படம்.கொலையாளி இவர்தான் என்று ஆரம்பத்திலேயே காட்டி விடுகிறார்கள்.இருந்தும் இப்படியாக எழுதுகிறார்கள்.இவர்களே தமிழில் வரும் மிகை உணர்ச்சி படங்களை உச்சிமுகர்ந்து "இந்த படமெல்லாம் மலையாளத்தில் வந்திருந்தால் கொண்டாடப்பட்டிருக்கும்" என்று மூக்கு சிந்துவார்கள்! இன்னொரு க்ரூப் cringe என்று வருகிறது.எல்லாரும் cringe என்ற அனிமல் பார்க் படத்தையே ரசித்தோம்! ஆக cringe சான்றிதழ் வழங்கும் கோஷ்டி மொத்தமாக அத்தகைய படங்களின் பட்டியலை வெளியிடவும்! நீங்கள் பாராட்டும் படங்களை விட cringe ஆகும் படங்கள் அட்டகாசமாக இருக்கிறது! நாம் சுராத்துக்காக ரிப்பீட் ஆடியன்சாக படத்தை மீண்டும் பார்ப்போம்!(அப்போ சூர்யாவுக்காக இன்னொருக்கா பாக்க மாட்டியா?- கும்மாங்கோ)
பார்க்க டாம் குரூஸ் தம்பி மாதிரி இருந்தாலும் இவர் அனாட்டமி வகுப்பு எடுப்பவர் ! எல்கேஜி பிள்ளைகளுக்கு விளக்குவது போல இவர் பிரேதங்களின் ஒவ்வொரு உறுப்பையும் குறுக்காக நெடுக்காக துல்லியமாக வெட்டி விளக்குவதை பார்க்கும்போது இவரது மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று விளங்கும்!
படங்களில் ஒரே வாள் வீச்சில் எதிராளியின் மொத்த குடலும் தரையில் கொட்டுவது போன்ற காட்சிகளை கேலி செய்கிறார்.இருபது மீட்டர் சிறுகுடல் உள்வயிற்றுபகுதியின் சுவற்றோடு ஒட்டியபடி இருப்பதும் அதை மாணவர்களுக்கு பாடரீதியாக விளக்க வசிதியாக வெளியில் தனியே எடுப்பதற்கே தனக்கு பல மணிநேரங்கள் ஆனதை சொல்கிறார்.
இனி சினிமா எடுப்பவர்கள் உடற்கூறியல் சம்மந்தமான ஆலோசனைகளை தன்னை அணுகிப்பெறலாம் என்றும் கிண்டலாக குறிப்பிடுகிறார்.அவ்வளவு முனைப்பாக எத்தனை இயக்குநர்கள் உள்ளார்கள் என்று யோசித்தபடி.......
****************************************
உலக வரலாற்றில் சோவியத்து/ சீனாவுக்கு ஈடுகொடுக்கும் தணிக்கை முறை கொண்ட ஒரு நிறுவனமென்றால் அது ஜெயா டிவி தணிக்கை குழு தான்! ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மேலும் சரமாரியாக வெட்டி எறிந்து குதறி வைப்பதில் அவர்களுக்கு நிகரில்லை! உதாரணமாக ஹரி இயக்கிய தமிழ் படத்தின் உயிர்நாடியே பிரசாந்த் அவமானப்படுத்தபடுவதும் அதனால் கொந்தளித்து ஆசிஷ்வித்யார்த்தியின் கையை வெட்டுவதும் தான்!ஆனால் ஜெயா குழுமத்தில் அது மொத்தமும் கட்! காக்க காக்க படம் கொத்து புரோட்டா போட்ட விதத்தை தனிப்பதிவாக தான் எழுத வேண்டும்! கௌதம் மேனனை ஜெயா டிவியில் காக்க காக்க படம் பார்க்க வைத்து அவரது கொந்தளிப்பை நேரலையாக பதிவு செய்யும் ஆசை நமக்கு எப்போதுமே உண்டு! ஆனால் இதே குழுமம் நடத்தும் செய்தி சேனலில் வெட்டு குத்து குண்டுவெடிப்பு சாலை விபத்து சிசிடிவி வீடியோக்கள் எவ்வித தணிக்கையும் இல்லாமல் 24x7 காட்டப்படும்!என்ன தணிக்கை கொள்கையோ என்ன மண்ணோ! இது தவிர சாலையில் வரும் காட்சிகளில் பின்னணியில் கடையின் முகப்பு பேனர்,நிறுவனங்களின் இலச்சினை ஆகியவை பட்டர் பேப்பர் போட்டு மறைக்கப்பட்டு நடுவில் கதாபாத்திரத்தின் முகம் மட்டும் தெரியும்.presbyopia வந்தவன் படம் பாக்குற எபெக்ட்!
மேலும் வசனத்தில் ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரையோ அது தயாரித்த ஒரு பொருளின் பெயரையோ சொன்னால் அதுவும் மியூட் செய்யப்படும்! உதாரணமாக பாலக்காட்டு மாதவன் படத்தில் ஷீலாவிவேக்கிடம் " மாதவா ஹார்லிக்ஸ் போட்டு கொண்டா" என்று சொல்லும் காட்சியில் ஹார்லிக்ஸ் மியூட் செய்யப்பட்டிருக்கும்!
இதுக்கு மேல ஒரு அக்கப்போர் சேனலின் இலச்சினை பக்கத்தில் HD என்று சேர்த்து செலவே இல்லாமல் HD சேனல் ஆக்கிய ஒரே சேனல் உலகில் ஜெயா டிவி தான்!
******************* Bromance : அண்ணனைத்தேடும் தம்பியின் கதை. அயல்வாசி படம் போலவே இதுவும் ஒரு மெல்லிய முடிச்சை சுற்றி அமைக்கப்பட்ட கதை என்றாலும் அதைவிட இது நமக்கு பிடித்திருந்தது.ஆனால் இவ்வளவு இழுத்திருக்க வேண்டாம்.
பக்கத்து வீட்டு திருட்டு வைஃபை ரௌட்டரை மாப் மூலம் ஆன் செய்யமுயன்று அதில் ஏற்படும் பின்விளைவுகளை இன்னும் கொஞ்சம் காட்டி இருந்திருக்கலாம். இந்த மாதிரி சின்னச்சின்ன கிறுக்குத்தனங்களை காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமா முன்னணியில் உள்ளது.
பின்டோவாக வரும் மேத்யூ தாமஸ்ரட்சகன்நாகார்ஜூனா மாதிரி கொந்தளிப்பது, அண்ணனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வெறும் ஐநூறு ஜிபே பெற்று தனது Asus Tuf gaming RGB variant லேப்டாப்பை ஹரிஹரசுதன் திறப்பது , அண்ணனும் தம்பியும் ஐபோன் ஆப்பிள் வாட்ச் என்று வைத்திருப்பதை கேள்விப்பட்டு "என்னங்கடா BBD sale ஆ?" என்று ஹரிஹர்சுதன் கேட்பது என்று சுவாரசியம் வாய்ந்த தருணங்கள் உண்டு.ஆனால் படம் நெடுக அது இல்லை!
RDX படத்தில் ரெண்டு இன்ச் குரூட் ஆயில் மேக்கப்போடு வந்த மஹிமாநம்பியார் இதில் அந்தமாதிரி எந்த விஷபரிட்சை தோற்றத்திலும் வராதது பெரும் ஆறுதல்!
இதுபோல [( கிங்ஸ் லெவன்)^ n] கலந்த கேக்கை ஷபீர் தின்றுவிட்டு அந்த பாவத்தை கழிக்க(!) திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருக்கும் காட்சி ரணகளம்!அந்தமாதிரி காட்சிகளை தமிழ் சினிமாவில் கனவிலும் நினைக்க முடியாது.அப்படியே வைத்தாலும் படம் ரிலீ....ahem ahem....
சங்கீத் பிரதாப் ஏற்கெனெவே பிரேமலு படத்தில் முக்கிய பங்காற்றியவர்.யாருக்கும் தெரியாமல் ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்து அது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு திருட்டு முழி அவரது மிகப்பெரும் பலம்! அஜூவர்கீஸ் மாதிரி சீரியஸ் வேடங்கள் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.
அந்தப்பக்கம் கொடுவா பெருமை இந்தப்பக்கம் மலையாளி பெருமை என்று சம்மந்தமே இல்லாமல் நடுவில் வந்த வசனங்கள் ஆயாசத்தை உண்டாக்கியது! அந்த கூர்க் கதைப்பகுதியே ரொம்பவும் இழுவை! வைஃபை ரௌட்டர் ஆன் செய்யும் காட்சிகள் போல இன்னும் நிறைய வந்திருந்தால் படம் அற்புதமாக இருந்திருக்கும்!
ஒரு வருடத்தில் பலமுறை 'எந்த மொழிப்படமும் பார்க்க வேண்டாம்' என்ற எண்ணம் வரும்.அப்போது மட்டுமே பிரம்மாஸ்திரமாக மலையாள படங்களை பார்ப்பது வழக்கம்.காரணம் எந்த மனநிலையில், எந்த சூழலில் பார்த்தாலும் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் ஒன்றிவிட முடியும்.
இது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.நபருக்கு நபர் ரசனைகள் மாறலாம்.கடைசியாக பார்த்த மலையாள படம் ஐ ஆம் காதலன்.மிகவும் ரசித்து பார்த்த அந்தப்படத்திற்கு பிறகு வேறு கருப்பு வெள்ளை ஆங்கில படங்களுக்கு சென்று பிறகு மீண்டும் அந்த வெறுமை தோன்ற அதை கடக்க பார்த்ததுதான் இப்படம்!
ஒருவகையில் தெக்கு வடக்கு படத்தின் ஷங்குன்னி கேரக்டரின் இளம் பருவத்தை படமாக எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?இப்படித்தான் இருந்திருக்கும்! 😃
"ரொம்ப ஓவரா போறமோ? போய் பாப்போம் " என்ற வடிவேலு பேசிய வசனத்தை தெக்கு வடக்கு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.அதையே இப்படத்துக்கும் சொல்லலாம்.என்னங்கடா எல்லைக்கோடு? அழிங்கடா எனும்படி இந்த சென்டிமென்ட் அந்த சென்டிமென்ட் சொந்த சென்டிமென்ட் எல்லாத்தையும் போட்டு துவைத்து விட்டார்கள் 😃
குறிப்பாக அம்மா சென்டிமென்ட் எனும் பர்னிச்சர் உடைக்கப்பட்ட விதம் !
தலைவர்சூர்ய பார்வை படத்தில் ஒருவனிடம் " டேய் டேய் தாலி சென்டிமென்ட் வச்சுத்தான்டா தமிழ் சினிமாவே ஓடுது!அதுக்கே ஆப்படிச்சிட்டியே " அது மாதிரி இங்கே தமிழ் சினிமா வாத்தியார் ஒருகாலத்தில் சொன்னது போல 'ஸ்டரெச்ச்ர் கேஸாக' இருந்தாலும் அதுக்கு வென்டிலேட்டர் ஆக இருப்பது சென்டிமென்ட் மட்டும்தான்!அதை இப்படத்தில் மொத்தமாக துவம்சம் செய்து விட்டார்கள்!
தெக்கு வடக்கு படத்தில் மாதவன் (விநாயகன்) இறந்ததும் கையில் டார்ச் எடுத்துக்கொண்டு 😃 ஷங்குன்னி செய்யும் சேட்டைகளை மறக்க முடியுமா? குறிப்பாக "சைஸ்" பார்த்து வாழை இலை அறுக்கும் காட்சி 😃😃😃 இதிலும் அதுபோன்ற காட்சி என்றால் கடைசியில் வரும் பினு கார் ஓட்டும் காட்சி தான் 😃😃😃
படத்தின் மையக்கரு கொஞ்சம் பாக்யராஜ் பாணி "சமாச்சாரமாக" இருந்தாலும் பாக்யராஜ் பாணியில் சாஃப்ட் பார்ன் அருகே சென்று விளையாடவில்லை.முழுக்க முழுக்க பினுவின் சைக்கோத்தனம் தான் படத்தின் மையம் ! அமெரிக்கன்சைக்கோ மாதிரி கேரள சைக்கோ என்ற பட்டம் இவருக்கு பொருந்தும்! 😃
இளம் வயதில் கண்ணெதிரே அண்ணனை பறிகொடுத்த அதிர்ச்சி ஒருபக்கம் பிறகு படித்து முடித்து எவ்வளவு முயன்றும் எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டில் தந்தையிடம் தண்டசோறு பட்டம் வாங்கி தினந்தோறும் வசைக்கு ஆட்பட்டு பிறகு திடீரென்று ஒரு தருணத்தில் தனது தங்கையின் பிறப்பு "ரகசியத்தை" கண்டுபிடித்த பிறகு அப்படியே ஆள் தலைகீழாக மாறி மொத்த குடும்பத்தையும் தனது இரும்புப்பிடியில் கொண்டுவருதல் குறிப்பாக தனது நண்பன் ஒருவன் முதிர்ந்த தம்பதி குறித்த செய்தி ஒன்றை படிக்கக்கேட்டு பெற்றோர் மீதே சந்தேகப்பட்டு வீட்டில் சிசிடிவி வைத்து தொடர்ந்து கண்காணிப்பது ,மகன் இறந்த அன்று உணவு உண்ணக்கூடாது,மொபைல் பார்க்க கூடாது,டிவி கூடவே கூடாது என்று ஒவ்வொன்றாக பிடுங்கும் காட்சிகள் ரணகளம்!அண்ணா பாணியில் பபுள் கம்மை வாயில் ஸ்டைலாக போட்டுவிட்டு நக்கலாக சிரித்தபடி பெற்றோர்,தங்கை, தங்கை விரும்பும் காதலன்,காதலனின் குடும்பத்தார் என்று எல்லாரையும் போட்டு வாங்கும் காட்சிகள் சிலருக்கு "என்னய்யா இவ்வளவு குரூரமாகவா ஒருத்தன் இருப்பான்" என்று தோன்றக்கூடும்! ஆனால் தெக்கு வடக்கு படத்தை ரசித்தவர்களுக்கு இதை ரசிப்பதில் என்ன பிரச்சனையும் இருக்காது! 😃
இறுதிக்காட்சியில் கார்ல இடமிருக்கு வாங்க என்று சொல்லி எல்லாரையும் தம்மாத்தூண்டு காருக்குள் ஏற்றும் காட்சியே பெரும் அவல நகைச்சுவை தான்.அவர்கள் உட்கார வைக்கப்படுவதை காட்டாமல் உள்ளே அத்தனை பேர் உட்காந்திருப்பதாக காட்டும் போது ஆனந்தம் பட ஶ்ரீவித்யா மாதிரி " கார்ல அவ்வளவு இடம் எங்கடா இருக்கு? சொல்லுங்கடா" என்று கேட்க தோன்றுகிறது!
சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு இம்மாதிரியான சைக்கோ கதாபாத்திரங்கள் அட்டகாசமாக பொருந்தி வருகிறது 😃.
மேலும் மலையாளிகள் படத்துக்கு தலைப்பு வைக்கும் விதம் வேறு எந்த மொழி சினிமாவும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளது.ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் பிரேமம் படம் வந்த அடுத்த ஆண்டே பிரேதம் என்று டைட்டில் வைத்து அவர்களுக்குள்ளேயே கலாய்த்துக்கொண்டார்கள்
இதற்கு ஈ.டி என்று வைத்துள்ளார்கள் ! எஸ்ட்ரா டீஸன்ட் என்று விளக்கம் வைத்தாலும் அசல் ஈடி தான் நினைவுக்கு வருது! 😃 ஈடி அவரை பிடித்தது இவரை பிடித்தது என்று கரடி விட்டாலும் இறுதியில் ஒன்றுமே ஆகாது! ஆனால் இப்படத்தில் தீர்க்கமான ஒரு முடிவு உண்டு 😃
ஊமை விழிகள் படத்தை பார்த்த அந்த சிறுவன் மனதில் அப்படத்தின் ஒருவிஷயம் ஆழ்மனதில் பதிந்தது! பிற்காலத்தில் இயக்குனர் ஆன அந்த சிறுவன் அதை தன் படத்தில் அந்த விஷயத்தை மையமாக வைத்தான்! ( யோவ் கே.என்.சிவராமன் ஸ்டைல் எல்லாம் அவருக்குத்தான்.நீ சொந்த நடையில் எழுது - கும்மாங்கோ).
எப்பேர்பட்ட பெரும்புள்ளியாக இருந்தாலும் அவர் செய்த தில்லாலங்கடி வேலையை அச்சு/காட்சி ஊடகம் மூலமாக அம்பலப்படுத்தினால் மக்கள் கொத்திதெழுந்து அந்த புள்ளியை சாய்ப்பார்கள்!
இந்த utopian சிந்தனையைத்தான் ஜிகர்தண்டாடபுள்எக்ஸ் படத்தில் அமல்படுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
ஷைன் டாம் சாக்கோ கேரக்டர் நிஜத்தில் வாழ்ந்த ஒரு பெரும்புள்ளியை நினைவுபடுத்தும் விதத்தில் இருந்தாலும் அவரின் விழுதுகள் இதை எதிர்த்து போராடுகிறேன் பேர்வழி என்று படத்திற்கு இலவச பப்ளிசிட்டி கொடுக்காமல் விட்ட சாதுர்யத்தை வியக்கிறோம்!
இதுல தியேட்டரில் ஒரு duel வேறு! எழுபதுகளில் நடக்கும் கதை என்பதை உணர்த்த எல்லாருக்கும் பெரிய கிருதா ஒட்டப்பட்டுள்ளது! எஸ்ஜே.சூர்யா கதைப்படி சத்யஜித்ரே உதவியாளர் என்று எங்கோ படித்த நியாபகம்.நல்லவேளை அந்த மகாகலைஞன் இந்தக்கொடுமைகளை பார்க்காமல் எப்போதோ போய்விட்டார்! - அப்புறம் அந்த மக்களின் பெருங்கோபம் பற்றி ஒரு சம்பவம்: ஹைதராபாத்தில் ஒரு பிரபல டிவி சீரியலில் நடித்தவர்கள் பங்குபெற்ற நிகழ்வு ஒன்று நடந்தபோது அந்த சீரியலில் வில்லனாக நடித்தவரை அந்நிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பெண்மணி அவரை விடாது துரத்தி, அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் கிடைக்கும் தேடிப்பாருங்கள்! மக்களின் கோபம் எல்லாமே நியாயமானது& அது பெரும் சக்தி வாய்ந்தது(!) என்ற வாதம் அங்கே அடிபட்டு போகிறது!மேலும் இத்தகைய மக்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளல் நன்று! . ஜிகர்தண்டா XX படத்தின் கிளைமாக்ஸ்மட்டும் தற்செயலாக டிவியில் பார்த்தபோது தோன்றியது! இதுல XXX வரும் என்று வேறு பீடிகை போட்டு பீதியை கிளப்பியுள்ளார்கள்! (நல்லவேளை முழுப்படத்தையும் பார்த்திருந்தால் ரெண்டு வால்யூம் எழுதியிருப்ப! - கும்மாங்கோ)
*********************
இப்ப இதே வரிசையில் ஊடக அவியல் ஆளர்கள் எல்லாருமே அரசையே அசைத்துப்பார்க்க கூடியவர்கள் அது இதுவென்று ஏகப்பட்ட திரைப்படங்கள் உண்டு!இது எதுவுமே இல்லாமல் ஜாலியா எதார்த்தமாக ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் என்றால் அது உதயா(படத்த ரெண்டா நாளு பாத்து நொந்த கதையை சொல்லிடாத- கும்மாங்கோ) படத்தில் வரும் பிரமிட் நடராஜன் கேரக்டர் தான்!
இதற்கு முன்பே கல்யாண வைபோகம் படத்தில் சுந்தரராஜன் இந்தமாதிரி ஒரு அஜால் குஜால் பத்திரிக்கையாளர் கேரக்டரில் உதவியாளர் படிக்கும் வாசகர் கேள்விகளுக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் காட்சி இருந்தாலும் அதைவிடவும் சிறந்தது இந்தப்படத்தின் காமெடி தான்!
உதவியாளர் விவேக் வாசகர் கேள்விகளை ஒவ்வொன்றாக படிக்க கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நக்கலாக சிரித்தபடி பிரமிட் நடராஜன் பதிலளிக்கும் காட்சி அட்டகாசம்!
உண்மையான ஊடக அவியல் ஆளர் சித்தரிப்பு என்றால் கண்டிப்பாக இந்த கேரக்டருக்கு விருது கொடுக்கலாம்!
பொதுவாக இந்தமாதிரி வாழ்க்கை வரலாற்று படங்கள் பெரும்பாலும் காண்பவரிடம் அவ்வப்போது மனவெழுச்சி ஏற்படுத்தும் தருணங்களை பிரதானமாக வைத்தே எடுக்கப்படுகின்றன.
பார்வையாளன் படத்தின் மைய கதாபாத்திரத்தின் சமகாலத்தவராக இருந்தால் இயக்குனருக்கு மேலும் சுலபம்.காரணம் அந்த தருணம் நிகழ்ந்த காலத்தை பார்வையாளன் தனது தனிப்பட்ட வாழ்வோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி கொண்டிருப்பான்.அந்தத்தருணங்களை மிகச்சரியாக திரையில் கொண்டுவந்தாலே போதும்!
இப்படத்தில் அது சாத்தியப்பட்டுள்ளது. முத்தையா முரளீதரன் கதாபாத்திரத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு நன்றி.இல்லாவிட்டால் திரையில் யார் முரளிதரன்? யார் ரணதூங்கா? என்று பெருங்குழப்பம் வந்திருக்கும்.
முரளிதரனாக நடித்த மதுர் மிட்டல் அச்சு அசலாக பொருந்துகிறார்.அதிலும் மிக முக்கியமாக பந்து வீசும் அந்த தொனி - ஒரு தனித்தன்மையான பாணியில் ஓடிவந்து கண்களை அகல விரித்து(இதற்கும் ஒரு காட்சி வருகிறது) மணிக்கட்டை சுழட்டி பந்து வீசும் அத்தனை உடல்மொழியும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.
படத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கலவரங்கள் காட்டப்படுகின்றன.தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படும் காட்சிகளும் உண்டு .அதற்கு பயந்து முரளியை ஒரு கிறிஸ்தவ கான்வெண்டில் சேர்த்து விடுவதாக படம் செல்கிறது. கத்திமேல் நடப்பது போன்றதே இப்படத்தை எடுப்பது! ஒருபக்கம் ரொம்பவும் இலங்கையை விமர்சிக்க கூடாது.அதே நேரம் ரொம்பவும் இருட்டடிப்புச் செய்ய கூடாது.இந்தியாவையும் பகைத்துக்கொள்ள கூடாது என்று சர்வ எச்சரிக்கையாக படத்தை எடுத்துள்ளார்கள் .மேலும் இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்று படங்கள் பார்வையாளனுக்கு ஒருவித நேர்மறை எழுச்சியை கொடுப்பதற்காகவே எடுக்கப்படுகிறது.இதில் ஏன் அந்த கலவரத்தை நுணுக்கமாக காட்டவில்லை?ஏன் இந்த பிரச்சனை குறித்து ஆழமாக பேசவில்லை? என்றெல்லாம் கேட்பதே அபத்தம்.
தற்கால தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கும் மாஸ்டர் ரித்விக் இந்தப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளான்.தொடர்ந்து இவன் நடித்த ஐந்து படங்கள் நூறு கோடி வசூல் என்கிறார்கள். தொடர்ந்து பப்படங்களாக கொடுத்து வரும் ஒங்கஇவரு இதையெல்லாம் பார்த்து கற்க வேண்டும் 🤪
பய நடிப்புல பின்னிட்டான்!
அர்ஜுனா ரணதூங்கா மட்டுமே பிரதானமாக காட்டப்படுகிறார்.அவர் இலங்கை அரசியலில் முக்கிய பொறுப்பில் சில காலம் முன்பு இருந்ததாக கேள்விப்பட்டதுண்டு .அதன் காரணமாக கூட இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் அப்படி எதுவும் இல்லாவிட்டால் கூட தனது அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸி நாட்டின் நடுவர்கள் பத்திரிகையாளர்கள் விளையாட்டு வீரர்களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் உறுதுணையாக அவருடன் நின்றவர் என்ற வகையில் இந்த படத்தில் எப்படி இருந்தாலும் அவர் பிரதான கேரக்டர் தான்.கிங் ரத்னம் தொப்பை வரையில் ரணதூங்கா கேரக்டரில் பொருந்துகிறார்.
96 உலக கோப்பை வெற்றி காட்டப்படுகிறது.ஈடன் கார்டன் அரை இறுதியில் இந்திய அணி அதன் ரசிகர்களாலேயே எதிர்கொண்ட அவமானங்களை காட்டாமல் மானத்தை காப்பாற்றி உள்ளனர் . ஈடன் கார்டன் கலவர காட்சிகள் இன்னமும் கண்முன் நிற்கிறது!
ஜெயசூர்யா காட்டடி அடித்த ரெண்டு ஷாட்டாவது வச்சிருக்கலாம்.அதேபோல எப்படி முரளிதரன் பந்தை எறிகிறார் என்ற குற்றசாட்டு வந்ததோ அப்படி ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்து அடிக்கிறார் என்று யாரோ கிளப்பி விட்டனர்.ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.
மேலும் பிற்காலத்தில் சங்ககரா எனும் குறும்புக்கார விக்கெட் கீப்பர் கையில் பந்தே இல்லாமல் ரன் அவுட் செய்வது போல பாவனை செய்து பேட்ஸ்மேன்களை கீழே விழவைத்து கடுப்பேற்றிய காட்சிகளும் இடம்பெறவில்லை .அதை சேர்த்திருக்கலாம் 😃
ஷேன் வார்ன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பார்க்க மார்க் வா மாதிரி இருந்தார்! (தினத்தந்தியில் மார்க் வாக் என்று எழுதுவார்கள்). கபில் தேவ் சட்டென்று பார்க்க கபில் போலவும் சற்றுநேரம் கூடுதலாக பார்த்தால் கவிதாலயா கிருஷ்ணன் போலவும் இருந்தார்.
தமிழனா? சிங்களனா?சிங்கள ஆதரவு தமிழனா?இந்திய தமிழனா?இலங்கை தமிழனா?புலிகள் ஆதரவு தமிழனா?புலிகள் எதிர்ப்பு தமிழனா?அசல் திறமை கொண்ட சுழற்பந்து வீச்சாளனா?இல்லை தில்லாலங்கடி செய்து பந்தை எறியும் மோசடியா? என்றெல்லாம் வாழ்நாள் முழுக்க இப்படியான ஏடாகூட இடியாப்ப சிக்கல் கொண்ட அடையாளமற்ற ஒரு சூழலில் சிக்கிக்கொண்டவர் முரளி.படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சி வருது.
தமிழ்ப்பெயர் கொண்டதாலேயே பயிற்சி ஆட்டத்திற்கு மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்காமல் பையில் வெடிகுண்டு என்ற சந்தேகத்தில் வெளியிலேயே இலங்கை இராணுவம் முரளியை முட்டி போட வைப்பதாக ஒரு காட்சியும் வருகிறது. மேலும் வாழ்க்கை வரலாற்று படங்கள் என்றாலே ஒரு பத்திரிகையாளர் கேரக்டர் இருக்கும். இதில் நாசர் அந்த கேரக்டரை செய்துள்ளார் .தனது மகன் முரளி போல வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தவர் குண்டு வெடிப்பில் கால்களை இழந்து வாழ்க்கையையும் இழந்த ஒருவனின் தந்தையாக வருகிறார்.சில இடங்களில் படத்தின் தொனிக்கு வெளியே சென்று விடும் காட்சிகளாக இருந்தாலும் சில ஏடாகூட சர்ச்சைகள் விமர்சனங்களை தவிர்க்கவே இத்தகைய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்று புரிந்து கொண்டோம் .
பாகிஸ்தான் டூருக்கு செல்ல பாதுகாப்பு காரணங்களை சொல்லி இந்தியா மறுக்க நட்புக்கரம் நீட்டுவதாக நினைத்து அனுப்பப்பட்ட இலங்கை விளையாட்டு வீரர்கள் மயிரிழையில் தீவிரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய காட்சிகளும் உண்டு.
.
. முரளிதரன் பந்தை எறிகிறார் என்று கொந்தளித்த அதே ஆஸி ஊடகங்கள் 2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் கிளவுசுக்குள் கோல்ஃப் பந்தை வைத்து அதன் மூலம் 150+ அடித்ததை விவாதிக்கவில்லை.
2007 2011 இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு வந்தது இலங்கை.2007 இல் மழை இருட்டிக்கொண்டு வந்து எதிரில் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் இலங்கை பேட்டிங் செய்தது.
இந்த படத்தை எதிர்த்த உள்ளூர் போராளிகள் பற்றி பார்ப்போம்.இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று சொன்னது படத்திற்கு மிகப்பெரும் உதவி தான்.அடுத்து என்ன பேச போகிறோம் என்ன செய்ய போகிறோம் என்ற குழப்பத்தில் என்னாச்சு? பாணி முகபாவத்திலேயே வி.சே நடித்திருப்பார்.அதில் கண்டிப்பாக முரளிதரன் தெரிந்திருக்கவே மாட்டார்.
மேலும் லைகா நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு பிறகு "என்ன மாயமோ மந்திரமோ" மொத்தமாக அடங்கி போனது!எப்ப இங்க இலங்கை பிரச்சனை பெரிதாக ஆதாயம் தராது என்று உணர்ந்தார்களோ அப்போதே அதை கைவிட்டு விட்டார்கள்.ஒருவகையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் "ஆள விட்டதற்கு நன்றி!" என்று நினைத்திருப்பார்கள்.
தான் பந்தை எறியவில்லை என முரளிதரன் இருமுறை நிரூபித்தது,அம்பயர் நோபால் கொடுத்த வன்மம் (பொதுவாக ஆசிய அணிகளே இம்மாதிரியான குறிவைத்த தாக்குதல்களில் சிக்கியுள்ளன),96 உலகக்கோப்பை வென்ற தருணம்,முரளிதரன் முதன்முதலில் விளையாடிய மேட்ச் ( டெண்டுல்கர் முதலில் விளையாடிய மேட்சை லைவில் பார்த்தது போல இதையும் நாம் பார்த்துள்ளோம்) இதெல்லாம் நிஜத்தில் நிகழும்போதே நாம் தொடர்ந்து கண்டு வந்ததால் இப்படத்தின் பல தருணங்கள் மிக நெருக்கமாக உணர முடிந்தது.அத்தகைய அனுபவம் இல்லாதவர்கள் கூட கண்டிப்பாக படத்தை ரசிக்கலாம் .கிரிக்கெட் ஆர்வலராக இருப்பது அவசியம்!