Sunday, 15 June 2025

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 படத்தை பார்த்ததற்கு முக்கிய காரணம் அஜூ வர்கீஸ்.சமீபத்தில்  ஐடென்டிட்டி படத்தில் சீரியஸான அதுவும் வயதான தோற்றத்தில் நடித்ததை பார்த்ததும் "என்னாத்துக்கு இப்படி ரிஸ்க் எடுக்கிறார்?" என்று தோன்றியது.விளையாட்டான - பெரிய அறிவாளியாக எல்லாம் இல்லாமல் - சிறு சிறு அபத்தமான தவறுகளை செய்து பல்பு வாங்கி பேந்த பேந்த முழிக்கும் - அந்த அஜூ வர்கீஸ் தான் இயல்பானவர்.

 

    கிளி போயி என்றால் கிளிக்கு றெக்க மொளச்சு பறந்து போச்சு என்பதாக அல்லாமல் மலையாள பேச்சு வழக்கில் வாய்ப்பு பறிபோனது,மன நிம்மதி போனது(துடரும் படத்தில் ஷோபனா தனது மகளிடம் மோகன்லாலுக்கு மன நிம்மதி குலைந்தது பற்றி கிளி போயி என்று பேசுவதாக காட்சி வரும்) என்று அர்த்தமாகும்.காசர்கோல்ட் படம் போலவே தான் இதுவும்.அதில் தங்க கடத்தல்.இதில் [(கிங்ஸ் லெவன்)^n] கடத்தல்.ஆனால் அதைவிட இந்தப்படம் கொஞ்சம் பரவாயில்லை.அதில் விநாயகனை வீணடித்திருப்பார்கள்!இதில் அதுபோன்றதொரு கேரக்டரில் சம்பத்!படத்தில் முக்கியமான கேரக்டர் அவரே!

 

      அவருக்கு வரும் தமிழ் வசனங்களை அவரையே பேச சொல்லிவிட்டார்கள் போலும்.மனிதர் ******  ..கோ** என்று பின்னி பெட்டல் எடுத்து விட்டார்.அதிலும் வெற்றிமாறன் கௌதம் மேனன் பாணி  வசைகளாக இல்லாமல் தொண்ணூறுகளில் டப்பிங் ஆகிவரும் சுரேஷ் கோபி நடித்த ஆக்ரோஷமான ஆக்ஷன் படங்களில் வருவது போன்ற வசைகள்!மகாத்மா பட ஆரம்ப காட்சியில் சுரேஷ் கோபி பேசும் அந்த வைரமான வசனத்தை நினைவுபடுத்தியது! 😜


வாழ்க்கை படத்தில் மெல்ல மெல்ல என்னைத்தொட்டு பாட்டில் ஆடிய அதே ரவீந்திரன் இதில் அந்தப்பாட்டுக்கே டான்ஸ்ஆடும் காட்சியில் "இவன் என்னையா ஆடுறான்?" என்று ஆசிப் நக்கலாக கேட்கும் காட்சியும் உண்டு! 
 

மலையாளம் தவிர்த்து தமிழ் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழி வசனங்களும் சரளமாக வருகிறது.

படம் ஓடும் நேரம் குறைவு என்பதால் திரைக்கதை சொதப்பல்கள் பெரிதாக உறுத்தவில்லை.இன்னும் பத்து நிமிடங்கள் நீண்டிருந்தால் தாங்க முடியாமல் போயிருக்கும்!
      காவல் அதிகாரி அறிவுரை சொல்லும்போது அவர் பேசுவதற்கு பதில் பின்னணியில் கிங்ஸ் லெவன்  எச்சரிக்கை வாசகம்(படங்களின் துவக்கத்தில் வருமே!) ஒலிக்க அது தாங்காமல் ஆசிப் அலி தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போல வரும் காட்சி மலையாளிகளுக்கே உரிய குசும்பு வெளிப்பட்ட தருணம்! 

  டாய்லெட்டில் இரு பெண்கள் மோதிக்கொள்ளும் சண்டை காட்சி இன்ப அதிர்ச்சி! இன்னும் கொஞ்ச நேரம் அதை எடுத்திருக்கலாம்.அவ்வளவு இயல்பான சண்டைக்காட்சிகள் அமைத்த அன்பறிவ் இப்ப கிரீன் மேட் ரோப் என்று அந்தப்பக்கம் போனது பெரிய அவலம்!இந்தமாதிரி மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் தான் சண்டைக்காட்சிகள் தரமாக வருகிறது.

 

   ரொம்ப பெரிய பட்ஜெட் என்றாலே க்ரீன் மேட் தான்!
          கொரிய படங்களில் வரும் உக்கிரமான சண்டைக்காட்சிகள் போல அமைக்கக்கூடிய திறமைசாலிகள் இங்கும் உள்ளனர்.குறிப்பாக இந்திய அளவில் தமிழ் சினிமாவில் தான் அத்தனை திறமை கொண்ட சண்டைபயிற்சியாளர்கள் சண்டை கலைஞர்கள் உள்ளனர்.
   அவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்வதில் இயக்குநர்களுக்கு அப்படியென்ன சிரமம் என்று தெரியவில்லை!
     கதை காட்சி என்று எல்லாமே குப்பையாக இருக்கும் படங்களில் கூட சில சமயம் அற்புதமான சண்டைக்காட்சிகள் அமைந்துவிடுவதுண்டு.

   நாம் பலமுறை குறிப்பிட்ட அசுரவதம் ஹோட்டல் வராண்டா சண்டைக்காட்சி(திலீப் சுப்பராயன்); முகமூடி படத்தில் நரேன் மற்றும் செல்வா மோதிக்கொள்ளும் அந்தக்காட்சி!  வெறும் உடல் ரீதியாக  செல்வாவை தோற்கடிக்கவே முடியாது என்று புரிந்துகொள்ளும் நரேன் உளவியல் ரீதியாக வீழ்த்தி அந்த பலவீன தருணத்தில் செல்வா இருக்கும்போது மொத்தமாக வீழ்த்திவிடுவார்
திலீப் சுப்பராயன் 

 
   முகமூடி படம் குப்பைதான்.ஆனால் அந்தப்படத்தின் இந்த குறிப்பிட்ட சண்டைக்காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒன்று. புரூஸ்லீ ஜாக்கிசான் போன்றோருடன் பணியாற்றிய  Tony Leung Siu Hung இப்படத்தில் சண்டைக்காட்சி அமைத்திருப்பார்.அது output ல நல்லாவே தெரியும்.சண்டைக்காட்சிகள் என்றால் அப்படி இருக்க வேண்டும்!
 


    ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக ஹீரோ(அல்லது பிரதானமாக யார் சண்டை போட போகிறார்களோ அவர்கள்), இயக்குனர் ,சண்டைப்பயிற்சியாளர் ஒளிப்பதிவாளர் ஆகியோர் ஒரு ஒருமித்த நிலையில் முன்பே விவாதித்து சரியாக திட்டமிட்டு  அதை படமாக்கினால் அற்புதமாக அமையும்!
                       Tony Leung Siu Hung
 

   கேப்புடன் பற்றி மற்றவர்கள் கூறும்போது சண்டை கலைஞர்களிடம் "நீங்க வேணும்னா ரோப் கட்டிக்குங்க.ஆனா நா ரோப் போட்டு நடிச்சா இத்தன வருஷம் பண்ணது எல்லாம் போலின்னு ஆகிடும்" என்று சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அவரே பிற்காலத்தில் ரோப் போட்டு நடித்து நம்மை பெரும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினார்!
   விவேக் அடிக்கடி கேப்புடன கிண்டல் செய்ய சொல்லும் "செவுத்துல லெஃப்ட் லெக்க வச்சு ரைட் லெக்கால சுழட்டி சுழட்டி அடிப்பார்" வசனம் பலருக்கும் நினைவிருக்கும்.

  ஸ்டண்ட்மேன்  அழகு சித்ரா லட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் "அப்படி எல்லாம் ஒரு காலை செவுத்துல வச்சிட்டு இன்னொரு கால்ல லேண்ட் ஆகிறது அவ்வளவு சுலபமில்ல.ஆனா அவர் அதை செஞ்சார்".அழகு முறைப்படி களரி பயின்றவர்.
 

    கேப்புடனின் தோள்பட்டை மூட்டு அவ்வப்போது கழண்டு விடும் என்பதால கால்களாலேயே சண்டையிடும் விதத்தில் தனது பாணியை மாற்றிக்கொண்டார் என்றும் சொல்வதுண்டு.

   ஆனால் அலெக்சாண்டருக்கு பிந்தைய படங்களில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி என்றாலே காற்றில் எல்லாரும் பறக்க வேண்டும் என்பதாக மாறிப்போனதில் ஏற்பட்ட வீழ்ச்சி! அந்தப்பாணியில் கேப்புடனும் சென்று நகைப்புக்குரிய காட்சிகளாக இன்று பார்க்கப்படும் சில சண்டைக்காட்சிகளில் நடித்து ஏற்கெனவே உயிரை பணயம் வைத்து நடித்த பல சண்டை காட்சிகளுக்காக பாராட்டு பெற்றதை விட இம்மாதிரி பறக்கும் காட்சிகளுக்காக கேலி கிண்டலுக்கு அதிகமாக உள்ளானார்!

 

  ஜான் விக் படத்தில் யாரும் ஆகாயத்தில் பறப்பதில்லை!ஆனாலும் அந்த பிரம்மாண்டத்தை சண்டைக்காட்சிகளில் காணலாம்!சும்மா ரோப் க்ரீன் மேட் சிஜி இருக்குன்னு சகட்டுமேனிக்கு படமாக்கி அதை பிரம்மாண்டம் என்று சொல்லக்கூடாது!
    

No comments:

Post a Comment