Showing posts with label மார்லன் பிராண்டோ. Show all posts
Showing posts with label மார்லன் பிராண்டோ. Show all posts

Wednesday, 2 September 2020

Reflections in a Golden Eye (1967)

                              அசோகமித்திரன் கதைகளை வாசிக்கும்போது    'இவ்வளவு எளிமையா?' என்ற எண்ணமே முதலில் ஏற்படும்.பிறகு கதை மனவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து விரிந்து பல்வேறு புது பரிமாணங்கள் வெளிப்பட்டு  வியக்க வைக்கும்.இப்படம்   அப்படித்தான்.
                           லாஸ்ட் டேங்கோ இன் பாரிஸ் படத்தில் ஒரு இழப்பு ஏற்படுத்திய மன விரிசலை பிராண்டோ கதாபாத்திரம்  புறவய ரீதியில்  வெளிப்படுத்துவதாக இருந்தால் இப்படத்தில் அடக்கி வைக்கப்பட்ட ஒருபாலின விழைவு அகவயமாக கடும் விரிசலை ஏற்படுத்துகிறது. க்ளாஸ் எடுக்கும் காட்சியில் மேஜர் வெல்டன்  (பிராண்டோ)  திடீரென்று  பேசுவதை நிறுத்திவிட்டு உடைந்து அழும் காட்சி படத்தின் உச்சகட்ட காட்சிகளுள் ஒன்று!இந்த அண்டர்ப்ளே என்ற வார்த்தையை க்ளீஷே ஆக்காமல் இருந்திருந்தால் இங்கே அதை பயன்படுத்தியிருக்கலாம்!


 

 

        படம் வந்த சமயத்தில் திரையரங்கில் அந்த அழும் காட்சி வந்தபோது பார்வையாளர்கள் சிரித்ததாக சொல்வார்கள்!எருமைத்தோல் போர்த்தப்பட்ட  ஆசாமிகளால் செய்ய முடிந்தது அதுதான்!

               ஒருபுறம் அடக்கப்பட்ட ஒருபாலின  விழைவுகள் உண்டாக்கிய  மன கொந்தளிப்புகள் அகவயமாக இறுக்க இன்னொருபுறம் புறவய இறுக்கங்கள் தனி.அதில் ஒருபக்கம் தனது பலவீனங்கள் முழுமையாக தெரிந்த தனது மனைவி தன்னை மிக இழிவாக நடத்துவதோடு மட்டுமல்லாமல் கணவனுக்கு தெரிந்தே வேறொரு ஆணுடன் உறவு வைத்துக்கொள்ளுதல்.

இன்னொரு பக்கம் ப்ரைவேட் வில்லியம்ஸ்   வெல்டனின் பலகீனங்களை ரகசியமாக வீட்டில் உளவு பார்த்து தெரிந்துகொண்டு தொடர்ந்து வெல்டனை கடுப்பேற்றும் விதமாக பல்வேறு வினோதமான செயல்களை செய்வது என்று இருப்பக்கமும் கடும் இறுக்கத்தில் சிக்கி தவிக்கிறார் வெல்டன்.


                         

மார்லன் பிராண்டோவின்  பகுதி ஒருபுறமிருந்தால் இன்னொரு புறம் கர்னலின் மனைவியாக வரும் அலிசன் லேங்டன் பற்றி சொல்ல வேண்டும்!In Cold Blood என்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவலில் வரும் ஹெர்பர்ட் கிளட்டரின் மனைவி பான்னியின்  தன்மைகளை கொண்டவராக உள்ளார்.


                             பான்னி கிளட்டர் கணவன் இல்லாத தருணங்களில் மிகமுக்கிய முடிவுகள் எடுக்கவேண்டி இருந்தால் பதறிப்போய் அதில் இருந்து தப்பிக்க   தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொள்பவர்.

Bonnie Clutter
Bonnie Clutter


                         இந்த படத்தில் அலிசன் கதாபாத்திரம்(ஜூலி ஹாரிஸ்) வாழ்வது வேறொரு உலகில்!இந்த உலகின் சிறு சத்தங்கள் கூட அவரை மிரள வைக்கிறது!தனது தனிப்பட்ட உலகிலிருந்து இந்த நிஜ உலகிற்கு அழைத்து வரும் எதுவும் அவருக்கு கடும் பதற்றத்தை உண்டாக்குகிறது.அலிசனின் தனி உலகம் குறித்து எவ்வித புரிதலும் இல்லாதவராக கணவன் மாரிஸ்.அலிசனின் உலகில் நுழையக்கூடிய ஒரே நபர் பணியாள் அனக்லெடோதான்!ஒவ்வொரு முறை நிஜ உலகின் ஏதோ ஒரு கூறு அலிசனின் மிக பலகீனமான சமநிலையை குலைக்கும்போதேல்லாம் அவரை மீட்டெடுத்து ஆற்றுப்படுத்துவது அனக்லெடோதான்!

Alison

    அனக்லெடோவாக வரும்  சோர்ரோ டேவிட் என்பவர் அசாத்தியமாக நடித்துள்ளார்!அவரின் ஒவ்வொரு உடல்மொழியும் வலிந்து திணித்ததாகவோ செயற்கையாக வரவழைத்துக்கொண்டதாகவோ ஒரு இடத்திலும் காண முடியவில்லை!ஒரு நதியின் இயல்பான நீரோட்டம் போல அவர் நடித்துள்ளார்.இப்படியான ஒரு அசாத்திய திறமைசாலி இந்த ஒரே படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது சோகம்!

Anacleto & Alison


     படத்தில் மொத்தமே ஆறு கதாபாத்திரங்கள்தான்!கொஞ்சம் அசந்தாலும் ஒரு மேடை நாடகம் போல தெரிந்துவிடும் அபாயம் இருந்தாலும் அப்படி எதுவும் நிகழாமல் பார்த்துக்கொண்டுள்ளார் இயக்குனர்.


Private Williams


 ஆனால் படம் நன்றாக இருந்தும் இது மார்லன் பிராண்டோவின்/எலிசபெத்டெய்லரின் ஆகச்சிறந்த படங்களுள் ஒன்றாக சொல்லப்படுவதில்லை!காரணம் நான் முதல் பத்தியில் குறிப்பிட்டதுதான்!அந்த "கொஞ்சம் கொஞ்சமாக விரியும்தன்மை கொண்ட படைப்புகள் உடனடி நிறைவுணர்வுதேடி படம் பார்க்கவரும்/புத்தகம் வாசிக்கும் ஆசாமிகளிடம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.அவர்களுக்கு அவை மிக சுமார் ராகமாகவே தோன்றும்! அதற்காக படைப்பை குறைசொல்ல கூடாது!

   படத்தின் அசாத்திய ஒளிப்பதிவையும் குறிப்பிட வேண்டும்!டிஜிட்டலில் கருப்பு/இருட்டு சாணி அடிச்சாமாதிரி படமாகும் வேளையில் இப்படத்தை பார்க்கும்போது  ஃபிலிமில் படமாக்கும் மறந்துபோன அற்புத  பழக்கத்தை சிலராவது நினைவு கூர்வர்!



Saturday, 28 January 2017

The Young lions(1958)

                     போர் பின்னணி கொண்ட  படங்களில் ஒரு  டெம்ப்ளேட் இருக்கும்.உதாரணமாக  இரண்டாம்  உலகப்போர் பின்னணி  என்றால்  ஜெர்மானியர்கள்  அனைவரும் கெட்டவர்கள்
 என்பதுபோலவும்  அமெரிக்கர்கள் அல்லது பிரித்தானியர்கள்   வந்து  அந்நாட்டிற்கு  பாவ விமோசனம் கொடுப்பதாகவும் சித்தரித்திருப்பார்கள்.ஹிட்லர்  எழுச்சி பெற்ற காலத்தில்  அவரை அமேரிக்கா  உள்ளிட்ட  நாடுகள்  ஆதரித்ததை பற்றி எவரும் பேசுவதில்லை.
            போர்  சார்ந்த  படங்களில் மற்றொன்று-  மிகையான  தேசபக்தி என்ற  பேரில்  அமெரிக்க வீரர்கள்  அனைவரும் அண்ணன் தம்பி போல  பழகுவதாகவும் ஒற்றை  எதிரி  ஜெர்மானிதான்  என்பதுபோன்ற    சித்தரிப்புகளை கொண்ட  படங்களும்  உண்டு.
டீன் மார்டின்

          ஆனால்  இப்படம்  அப்படியல்ல.வெவ்வேறு பின்னணியில் வந்த இரண்டு  இளைஞர்கள் அமெரிக்க ராணுவத்தில்  சேர்கிறார்கள்.நோஞ்சான் போல  இருக்கும்   யூதர்   மான்ட்காமரி க்ளிப்ட்(Montgomery Clift),வசதியான  பின்னணியில் வந்த  டீன்  மார்ட்டின்(Dean Martin) இருவரும்  ராணுவத்தில்  நட்பு  பாராட்டுகிறார்கள்.அது  ஒருபுறம்  இருந்தாலும்  நோஞ்சான் ஆக்கேர்மேன்(மாண்ட்காமரி) தொடர்ந்து சக  ராணுவ  வீரர்களால்  தொடர்ந்து கேலிக்கும்  கிண்டலுக்கும்  அடி   உதைக்கும்  ஆட்படுத்தப்படுகிறார்.ஆனாலும்  அவர் அதைக்கண்டு  அஞ்சாமல் அவர்களை  எதிர்கொள்கிறார்.நான்கு பேரோடு தினம்  ஒருவராய்  சண்டை போடும் காட்சியை சொல்லலாம்.மூன்று பேரிடம்  செம அடி வாங்கி விடுகிறார்.நான்காவது ஆளை திரும்ப  அடித்து வெல்கிறார்.
ஆக்கேர்மேன்

                        சுற்றி இருப்பவர்கள் stay down man என  சொன்னாலும் கேட்காமல்   ஆக்கேர்மேன் அடி    வாங்குவதை  பார்க்கும்போது  Cool Hand Luke படத்தில்  வரும்  லூக் நினைவுக்கு வராமல்  இல்லை.இதைப்பார்த்து  அந்த  கதாபாத்திரத்தை  உருவாக்கினரா  என்பது  தெரியவில்லை.
       இது ஒருபுறம்  இருக்க  மற்றொரு  கதைக்களனாய்  ஜெர்மனியர்கள்.ஜெர்மனியரான கிறிஸ்டியன்  டீஸ்டேல்(மார்லன் பிராண்டோ) பனிச்சறுக்கு பயிற்றுவிப்பராய் உள்ளவர்.ஹிட்லரின் பேச்சுக்களால்  கவரப்படுகிறார்.தொடர்ந்து நசுக்கப்படும் ஜெர்மனியை மீட்டெடுக்கும்  மீட்பராய்  அவரைக்காண்கிறார்.இது குறித்து  அவருக்கும்  அவரது காதலிக்கும்  இடையே நடக்கும் விவாதம்  மிக  நுட்பமாய் கயிற்றின் மேல்  நடப்பது போல எழுதப்பட்டுள்ளது.
 And with political discussions we go round and round and nothing is ever settled!
             
                               இரண்டாம்  உலகப்போர்  துவங்கியவுடன் ஆவலோடு படையில்  இணைகிறார் கிறிஸ்டியன்.ஆனால்  அதற்குப்பின்  நடக்கும்  எதுவுமே  அவருக்கு  உடன்பட்டதாய் இல்லை.வறுபுறுத்தி ஜெர்மானியர்களை வீடு  வீடாய் தேடிப்பிடித்து  ராணுவத்தில்  சேர்க்கும்  பணியில் இருக்கும்போதும்  சரி,உயரதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கும்போது பக்கத்து  அறையில் கெஸ்தாபோ யூதர்களை  அடித்து நொறுக்கும்  சத்தம் கேட்டு பொறுக்காமல் அதை  தடுக்க முற்படுவதாய் இருக்கட்டும்,பிறகு  முற்றிலும்  ஹிட்லரின் கொள்கைகளில்  செயல்பாடுகளில்  போரில் நம்பிக்கை இழந்தவராய் கடமைக்கு ராணுவத்தில் இருப்பதாய்  இருக்கட்டும் .ஹிட்லரின் படையில் இருப்பவர்  என்பதாலேயே  அவர்  ஹாஹா  என  சிரித்தபடி  அனைவரையும்  கொடுமைப்படுத்தும்  கதாபாத்திரமாக  வடிவமைக்காமல்  இப்படி மனிதத்தன்மையுள்ள ஒருவராய்  கிறிஸ்டியன் கதாபாத்திரம்  வடிவமைக்கப்பட்டுள்ளது.அப்படி  வடிவமைத்தது பெரிதல்ல!அதை நம்பகத்தன்மையோடு திரையில் நடிக்க  ஒரு  நடிகர் வேண்டும்!

                         

                   அமெரிக்க  படைகள்  நடத்திய  தாக்குதலில் தப்பித்து  இரண்டு  நாட்கள்  சோறு  தண்ணி  உறக்கம்  இல்லாமல் ஒரு  ஜெர்மானிய ராணுவ முகாமுக்கு வந்து சேரும்  பிராண்டோவின் முகத்தை உடல்மொழியை கவனித்தால்  இவர்  நிஜமாகவே இரண்டு  நாட்கள்  உண்ணாமல்  உறங்காமல்  கடும்  மன  உளைச்சலில்  இருந்தபடியே நடித்திருப்பார்  என்றுதான் தோன்றுகிறது!அவர்  அப்படி  செய்யக்கூடிய  ஆள்தான்!இவரின்  நடிப்பை  பார்த்துவிட்டு  கொஞ்சநாளக்கி வேற  யார்  நடிச்ச  படத்தையும்  பார்க்கமுடிவதில்லை!

என்னைப்பொறுத்தளவில்  போர் என்ற விஷயத்திலேயே உடன்பாடு இருந்ததில்லை!வெறுமனே தேசபக்தியை கிளறிவிட்டு மக்களை உணர்ச்சியின் உச்சத்தில் நிறுத்தி சண்டை போடவைத்து அவர்கள் உயிரை எடுப்பது அர்த்தமற்றது!மேலும் போரில் தோற்றதாக சொல்லப்படும் நாடு மட்டுமல்ல வென்றதாக சொல்லப்படும் நாட்டின் பொருளாதாரம்,மக்களின் வாழ்க்கைத்தரம் எல்லாமே அதலபாதாளத்திற்கு செல்லும்!
              முதல் உலகப்போரில் ஜெர்மனி நசுக்கப்பட்டதன் விளைவாகவே ஹிட்லர் எழுச்சி பெற்றார்!அதனால் இரண்டாம் உலகப்போர்!அத்தோடு  உலகம் திருந்தியதா  என்றால் இல்லை!வியட்நாம் ,ஈராக்,ஆப்கன் சிரியா என்று கொலைவெறி யுத்தங்கள் இன்றும் தொடர்கதையே!அதன் எதிர்வினையாக இன்று மூலைக்கு மூலை பல்வேறு தீவிரவாத இயக்கங்கள்!அதற்கும் காரணம் வல்லரசு நாடுகளின் போர் வெறியே!
              நாஸி படையை சேர்ந்தவர்/அல்லது ஜெர்மானியர் என்பதாலேயே ஒருவர் தீயவர் என்ற பொதுபுத்தியில் காட்டாமல் ,நாஸி அரசு என்ற ஈவிரக்கமில்லா எந்திரத்தின் கட்டாயத்தாலேயே படையில் சேர்ந்தோர் பலர்.அல்லது ஹிட்லரின் கருத்தால் ஈர்க்கப்பட்டு படையில் சேர்ந்து பிறகு disillusion ஆகி வெளியேறவும் முடியாமல் எதிர்ப்பை தெரிவிக்கவும் முடியாமல் நடைபிணமானோர்களில் ஒருவராக பிராண்டோ கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
            இப்படம் வெறுமனே இருபக்கமும் இருநாடுகள் நின்று சண்டை போடுவதை வீர சாகசமாக காட்டாமல் போரில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவ வீரர்களின்/பொதுமக்களின் மனஓட்டத்தை விரக்தி நிலையை,இழப்புகளை கண்ணீரை சொல்வதாக உள்ளது!