Sunday, 22 June 2025

சுஜாதா-50

 சுஜாதா மோகன் திரையுலகில் பாடவந்து ஐம்பதாண்டுகள் என்றதும் பல பாடல்கள் பல நினைவுகள் & சில வருத்தங்கள் நினைவுக்கு வந்தன.

 
    ஜானி படத்தில் ஒரு இனிய மனது பாடலை ஶ்ரீதேவி படுவதாகவும் அதை ரஜினி கேரக்டர் ஒரு இனிமையான குரலை தவற விட்டுவிட கூடாது என்று தனது வாக்மேனில் பதிவு செய்வதாகவும் படமாக்கி இருப்பார்.

 

  ராசையா அதைப்பார்த்தாவது "இவரது அற்புத குரலில் இன்னும் பல பாடல்களை பதிவு செய்ய வேண்டும்" என்ற எண்ணம் உண்டாகியிருக்க வேண்டும்!

ஆனால் அவர் என்ன செய்தார்?இந்தப்பாடல் சேர்த்து விரல் விட்டு எண்ணக்கூடிய சில பாடல்களை மட்டுமே சுஜாதாவுக்கு  கொடுத்தார்.அத்தோடு சரி.எண்பதுகளில் அவர் காணாமல் போனார்!

 
 ஒவ்வொருமுறை ஜானி பாடலை கேட்கும்போதும் வருத்தமும் கோபமுமே மிஞ்சி நிற்கிறது!பன்னிரண்டு வயதில் பாடவந்து பதின்ம வயதுகளில் அத்தனை அற்புதமாக பாடும் திறனெல்லாம் எல்லாருக்கும் வாய்க்காது!


    மீண்டும் ரோஜா படத்தில் ரஹ்மான் உன்னி மேனன் &  சுஜாதா இருவரையும்  மறு அறிமுகம் செய்தார் என்றே சொல்ல வேண்டும்!அதன் பிறகே சுஜாதாவுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கினார்கள்!  பூப்பூக்கும் ஓசை பாடியதற்கு தேசிய விருது வாங்கினார்.காற்று குதிரையிலே(காதலன்),முதன்முறையே(சங்கமம்) ,காதல் ரோஜாவே ஹம்மிங் என்று மறக்க முடியாத பாடல்கள் உண்டு!

 
 
நேற்று இல்லாத மாற்றம் பாடல் உருவாக்கம்
 

   வித்யாசாகரின் இசையில் அவரது குரல் தனித்தன்மையாக ஒலிக்கும்! ஆனந்தம் ஆனந்தம்(முறைமாமன்), உன் சமையல் அறையில்,ஆசை ஆசை ,அழகூரில் பூத்தவளே என்று தொடர்ந்து மெலடி பாடல்களை பாட வைத்தார்.மலையாளத்திலும் அப்படியே!



   செங்கோட்டை படத்தில் வரும் பூமியே பூமியே பாடலே ஒரு மெலடி தான்.எஸ்பிபி பாடியிருப்பார்.அதை மலையாளத்தில் யத்ரையோ ஜென்மமாய் (Summer in Bethlehem) என்று இன்னும் மென்மையான பாடலாக மாற்றி ஶ்ரீனிவாஸ் சுஜாதா ஆகியோரை பாட வைத்திருப்பார்.ஶ்ரீனிவாஸ் சும்மா ஆரம்பத்தில் பாடிவிட்டு செல்ல முழு பாடலும் சுஜாதாவின் ராஜ்ஜியம் தான்!
   ராரா(சந்திரமுகி) முதலில் கேட்டபோது சுஜாதா பாடியது என்றே நினைத்தோம்.ஆனால் பின்னி கிருஷ்ணகுமார் பாடியிருந்தார்.இதில் ஒரு வினோத ஒற்றுமை சந்திரமுகியின் அசல் மூலமான மணிச்சிதிரதாழ் படத்தில் ராரா பாடல் வரும் இடத்தில் வந்த ஒருமுறை வந்து பார்த்தாயா? பாடல் தமிழில் வரும்.முழுப்பாடலாக வரும் பாடலை சித்ரா பாட சின்னதாக வரும் பாடலை சுஜாதா பாடியிருப்பார்!
     லோகேஷால் மீண்டும் பிரபலமான சக்குசக்கு வத்திக்குச்சி & தாமர பூவுக்கும் பாடல்களை பாடியவரும் அவரே!அடுத்து அதைப்போல் மீண்டும் பிரபலமாக்கப்பட போகும் "வாடி வாடி நாட்டுக்கட்ட" பாடியவரும் அவரே!

   எஸ். ஏ.ராஜ்குமார் இன்னும் தாராள மனதுக்காரர்.தனது படங்களில் வந்த அத்தனை முக்கிய பாடல்களையும் சுஜாதாவையே பாட வைத்தார்.

 

    கண்ணாளனே பாடலையே கொஞ்சம் அப்படி இப்படி போட்டு கேட்பதற்கு அசல் பாடல் போலவே இனிமையாக அமைத்த சொல்லாமலே யார் பார்த்தது (பூவே உனக்காக)  பாடலை பாடியிருப்பார்.பிறகு சூரிய வம்சம் படத்தில ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ஏதோ ஒரு பாட்டு,வானம்பாடியின் வாழ்விலே,மல்லிகை பூவே,எங்கள் வீட்டில்(வானத்தை போல),நிலவே வான் நிலவே(மாயி) என்று கொடுக்க அந்தப்பக்கம் சிற்பி சிட்டு சிட்டு குருவிக்கு(உள்ளத்தை அள்ளித்தா),காற்றுக்கு பூக்கள்(கண்ணன் வருவான்), உனக்கென உனக்கென(விண்ணுக்கும் மண்ணுக்கும்),என்னை தாலாட்டும் பூங்காற்று(உன்னை நினைத்து) என்று  பல பிரபல  பாடல்களை கொடுத்தார்.

   தொண்ணூறுகளில்  திரும்பவும் ராசையா அதே தவறை செய்தார்.எழுபதுகளின் இறுதியில் எப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய பாடல்களை மட்டுமே அவருக்கு பாட கொடுத்தாரோ அதே போல அப்போதும் அப்படியே கொடுத்தார்! ஒரு பட்டாம்பூச்சி(காதலுக்கு மரியாதை), மஞ்சள் பூசும் - ஃப்ரெண்ட்ஸ்,சரணம் பவ(சேது),தாலாட்டும் காற்றே (தேவன்) என்று வெகுசில பாடல்கள் மட்டுமே!குறிப்பாக மஞ்சள் பூசும் பாடலின் இரண்டாவது பத்தியில் தென்றல் வந்து ஜன்னல் திறந்தது என்று பாடுவதை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் "இதுபோன்று எத்தனை பாடல்களில் ராசையா இவரை பாட வைத்திருக்கலாம்!" என்று அங்கலாய்ப்பு தோன்றும்!


 தேவா முற்றிலும் புதிதான முறையில் அவரது குரலை பயன்படுத்திய பாடலொன்று உண்டு.என் உயிர் நீதானே படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய ஜனகனின் மகளே பாடலில் "பொய் சொல்லாதே" என்பதையே பாடல் முழுக்க பல்வேறு உணர்வுகளில் தொனிகளில் ராகங்களில் பாடி இருப்பார்!

 

  அப்புறம் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் இவர் பாடிய நல்ல பாடல்கள் உண்டு.சரவணபவகுக (காதலா காதலா),நிலவே நிலவே(பெரியண்ணா),சோலைக்குயில் பாடும் (ஆனந்த பூங்காற்றே),ஹே மோனா (கண்ணோடு காண்பதெல்லாம்),உன் பேர் சொல்ல (மின்சார கண்ணா),நீதானா(உன்னை தேடி) என்று எப்படி  எண்பதுகளின் திரையிசைக்குரலாக எப்படி ஜானகி இருந்தாரோ அப்படி தொண்ணூறுகளின் குரலாக இவர் இருந்தார்!

இதையெல்லாம் விட மறக்க முடியாத பாடல்கள் என்றால் காதல் வேதம் என்ற ஆல்பம் தான்.ஏதோ ஒரு கம்பெனி கேசட் வாங்கப்போய் அப்போது கடையில் இந்த கேசட் பார்த்ததும் அத்தனை பாடல்களையும் ஹரிஹரன் பாடியுள்ளாரே (பிறகு ராசையாவின் காசி படத்தில் அதுவே நடந்தது) வித்தியாசமா இருக்கே என்று வாங்கினோம்.இத்தனைக்கும் இசை அமைத்த உத்பல் பிஸ்வாஸ் யாரென்றே நமக்கு தெரியாது.ஆனால் அத்தனை பாடல்களும் அட்டகாசம்.அதில் இரண்டு பாடல்களை சுஜாதா பாயிருப்பார்.என் நெஞ்சில் தூங்கவா நிலாவே கேட்டால் ஆளில்லாத தீவில் நிம்மதியாக சஞ்சரிப்பது போன்ற உணர்வைத்தரும்.இந்த ஆல்பம் அவ்வளவாக மக்களுக்கு தெரியாது என்பதால் வந்த உணர்வாக இருக்கலாம்!

 

    இப்போதும் சுஜாதா என்றால் நினைவுக்கு வரும் பல பாடல்களில் இந்த ஆல்பத்தின் பாடல்களும் அடக்கம்!
    இப்போது இவரது மகள் ஸ்வேதா மோகனும் பாட வந்துவிட்டார். அவர் பாடும் முறை குரல் வளம் எல்லாம் சுஜாதாவிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று!
சூழல்கள் மாறி சுஜாதாவின் குரலை சரியாக பயன்படுத்தும் அளவுக்கெல்லாம் இப்போது நல்ல நிலையில் திரையிசை இல்லை!இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை!  வரி வரியாக பாடல் வரிகளை படிக்க பின்னணியில் இசைக்கருவிகளை உருட்டி ஆட்டோ ட்யூன் ரிக்ஷா ட்யூன் என்று ஒருமாதிரி எதையோ கொடுத்து விடுகிறார்கள்!ராசையா பாடத்தெறிந்த சுஜாதாவுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்காமல்  பாடவே வராத தனுசை எல்லாம் வைத்து மன்னாடி கொண்டிருக்கிறார்!
   
  

No comments:

Post a Comment