Sunday, 9 November 2025

HMT- ன் சொதப்பல்கள்

    ஜப்பான் மேக் ஸ்விஸ் மேக் என்று போய்க்கொண்டிருந்த காலத்தில் ஜப்பானின் சிட்டிசன் நிறுவன தொழில்நுட்ப உதவி +மத்திய அரசின் நிதி+இடவசதி உதவியுடன் ஆரம்பித்து பிறகு சொந்தமாகவே movements தயாரித்து பயன்படுத்தியது ஹெச்.எம்.டி.
        பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஹெச்.எம்.டி ஜனதா கடிகாரத்தை கட்டியிருந்தார்.அனைவரும் வாங்கக்கூடிய விலை அதைவிட முக்கியமாக நல்ல தரத்தில் நீடித்து உழைக்கக்கூடிய(இப்போதும் நம்மிடம் உள்ள ரஜத், ஜனதா & பைலட் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன)  தயாரிப்பாக இருந்ததால் மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

 

      கிட்டதட்ட விற்பனை ஆன மாடல்கள் பெரும்பாலும் குறைந்த விலையிலான சாவி கொடுக்கும் வகை மெக்கானிக்கல் மாடல்கள் தான்.ஆட்டோமேட்டிக் மாடல்களும் இருந்தன.
     பிறகு அலட்சியம்,திட்டமிடாமை, தொலைநோக்குப்பார்வை இல்லாமை போன்ற காரணங்களால் 2016 இல் மூடப்பட்டது.மக்களின் தொடர் கோரிக்கைக்கு பின்னர் 2019 இல் மீண்டும் விற்பனையை ஆரம்பித்தது ஹெச்.எம்.டி.
  ஆனால் ஒரு பெரிய ஃன்னாவாக இப்போது எந்த கடிகாரமும் ஹெச்.எம்.டியால் தயாரிக்கப்படுவதில்லை! Outsourcing என்ற பேரில் உதிரி பாகங்கள் உட்பட அனைத்தும் வெளியில் இருந்து தருவிக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படுகிறது.In house movement என்று சொந்தமாக movement தயாரிப்பது கூட நிறுத்தப்பட்டுவிட்டது. மியோட்டா அல்லது சீக்கோ movement கள் தான் பயன்படுத்தப்படுகிறது!
   அதைவிட கொடுமை இந்த ஹெச்.எம்.டி கடிகாரத்தை மக்கள் ஏன் விரும்பினார்களோ அந்த அடிப்படை காரணங்கள் இப்போது இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது!
   குறைந்த விலையில் இயந்திர கடிகாரங்கள் என்பது போய் இப்போது பழைய மாடல் கேசில் குவார்ட்ஸ் மூவ்மென்ட் போட்டு விற்கிறார்கள்.

    ஜனதா கோஹினூர் தாரிக் சங்கம் போன்ற கிளாசிக் மாடல்களின் நிலை இதுதான்.எல்லாமே குவார்ட்ஸ் ஆக்கப்பட்டு விட்டது!அதுவும் நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாது.ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம் ஸ்டாக் இருப்பதாக வந்த அடுத்த கணமே விற்று தீர்ந்துவிடும்.ஸ்டாக் அலர்ட் போட்டாலும் நீங்கள் தளத்தின் பக்கத்திற்கு சென்று வாங்கும் பொத்தானை அழுத்துவதற்குள் out of stock என்றாகிவிடும்!


 

   இதுபோக புதிய மாடல்கள் என்ற பேரில் அதுவும் குவார்ட்ஸ் தான்.அவை இரண்டாயிரத்துக்கு கீழே விற்கப்படுவதால் பிரச்சனை இல்லை.தானியங்கி மாடல்களான Stellar போன்றவை பத்தாயிரத்துக்கு மேலே செல்லும்.அதுவும் மேற்சொன்னப்படி லேசில் கிடைக்காது!Stellar open heart மாடலுக்கு கடும் தேவை உள்ளது.ஆனாலும் கிடைக்காது!அவைகளில் பல நன்றாகவும் உள்ளன.ஆனால் ஹெச்.எம்.டி நிறுவனத்தின் ஆன்மா அதுவல்லவே!

    இளைய தலைமுறைக்கு குவார்ட்ஸ் தான் பிடிக்கும் என்று எந்த அறிவுஜீவி ஹெச்.எம்.டி நிறுவனத்துக்கு யோசனை சொன்னார்களோ தெரியவில்லை!இன்றைக்கும் தானியங்கி & சாவி கொடுக்கும் மாடல்களின் மீதான மோகம் அப்படியே உள்ளது.ஆனால் நிறுவனம் அதையெல்லாம் உணர்ந்ததாகவே தெரியவில்லை!

   இப்போதும் மேற்சொன்ன கோஹினூர் ஜனதா பைலட் தாரிக் சங்கம் ரஜத் ...etc..etc.. கிளாசிக் மாடல்களை தானியங்கி வகையாகவோ அல்லது பழையபடி சாவி கொடுக்கும் வகையாகவோ தயாரித்து வெளியிட்டால் உடனே விற்று தீரும் நிலைதான் உள்ளது.

 
    இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழியிலும் அந்தந்த மொழியில் எழுதப்பட்ட எண்கள் கொண்டு வெவ்வேறு மாடல்கள் வெளியிடப்பட்டன .தமிழ் எண்களைக்கொண்ட  டயல் மாடல்களும் உண்டு (தமிழனுக்கு சாதா தமிழே வராது.இதுல எண்களை படித்து தள்ளிவிட போகிறான்!- கும்மாங்கோ)

 

    இப்போதும் பலர் பெங்களூருவில் உள்ள ஹெச்.எம்.டி ஷோரூம் சென்று தோண்டித்துருவி அரிய மாடல்களை அள்ளிக்கொண்டு போய்க்கொண்டு தான் உள்ளார்கள்.இதை அந்த நிறுவனமும் உணரவில்லை அரசும் உணரவில்லை.

   Kannadiga pride என்ற வகையில் கர்நாடக அரசே கூட இதை எடுத்து செய்யலாம்(HMT Gandaberunda கன்னட மக்கள் அல்லாதவர்களும் விரும்பிய ஒரு மாடல்) .ஆனாலும் யாரும் செய்ய முனையவில்லை!
உண்மையிலேயே கடிகார ஆர்வலராக உள்ள ஒருவரை தலைமை பொறுப்பில் நியமித்தால் இவைகளை செய்ய முடியும்.ஆனாலும் red tape முனைப்பு இல்லாமை கடிகாரங்கள் குறித்த ஆர்வமில்லாமை... அது இதுவென்று ஏகப்பட்ட தடைகள் உள்ளன!
 
  Timex போன்ற நிறுவனங்கள் தங்களது பழைய கிளாசிக் மாடல்களை reissue என்ற பேரில் ( Q series) பழமை மாறாமல் புதிதாக வெளியிட்டு அவை விற்பனையில் சக்கை போடு போடுகிறது.இதெல்லாம் ஹெச்.எம்.டி கண்ணுக்கு தெரியாமல் போனது ஏனோ?
Timex Q  Series 1972 Reissue 

 

  தற்போதைக்கு கிணற்றில் போட்ட கல் என்ற நிலைதான் உள்ளது!

No comments:

Post a Comment