Sunday, 7 December 2025

Dolby,Stereo,Mono & Woody Allen

 கடந்த பத்தாண்டுகளாக வெளியான தமிழ்ப்படங்களை பொறுத்தளவில் (ஆர்.ஓ வில் பத்துமுறை வடிகட்டி பிறகுதான் ஒரு புது தமிழ்ப்படத்தை எப்போதாவது பார்க்கிறோம் என்றாலும்)சப்டைட்டில் உதவியுடன்தான் பல காட்சிகளை புரிந்துகொள்ள முடிகிறது.  பிறமொழி புதுப்படங்களை எப்படியும் சப்டைட்டில்  சகிதம் தான் பார்க்கிறோம் என்பதால் பிரச்சனையில்லை!


படத்தின் ஒலி அளவை கூட்டி வைத்தால் "ஓ ஓ" என்று பின்னணி இசை முன்னணியில் உச்ச ஸ்தாயியில்  அலறும்.ஆனால் அதனூடே வரும் வசனம் என்னன்னே கேட்காது! இசையே இல்லாமல் தனியே வசனம் வந்தாலும் இதே நிலைதான். 
 

        டால்பி ஆரோ என்றெல்லாம் மிக்ஸ் செய்ய ஆரம்பித்த பிறகுதான் இந்தநிலை.மிக்சிங் பிழை என்று சொல்ல முடியாது.ஏனெனில் மிகச்சிறந்த கலைஞர்கள் மிக்ஸ் செய்த படங்களும் அப்படித்தான் ஒலிக்கிறது!சாதாரண ஸ்டீரியோ மிக்ஸ் தான் எல்லா ஒலிப்பெருக்கி சாதனங்களிலும் துல்லியமாக ஒலிக்கிறது!

           இது ஒருவகையில் ஏ.ஆர்.ஆர் மீது வைக்கப்பட்ட" பாடலில் வரிகள் சரியாக கேட்கவில்லை" குற்றச்சாட்டுக்கு அவர் அளித்த பதில் நினைவுக்கு வருகிறது ."நல்ல சிஸ்டத்தில் கேளுங்க" என்று சுருக்கமா முடித்தார்.அது உண்மைதான்.அவரது பாடல்களை ஸ்டுடியோ மானிட்டரிங் ஹெட்போன் மாதிரி கேட்டால்தான் அவர் சொன்னது புரியும்.அதுபோல திரைப்படங்களும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.அவை சாதாரண ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுக்கு உகந்தவை அல்ல!2.0 வுக்கு Downmix செய்தாலே அன்றி இதில் மாற்றமில்லை!

 

    சன் நெக்ஸ்ட்-ல் டால்பி & ஸ்டீரியோ தேர்வுகள் உண்டு.ஆனால் அதில் ஸ்டீரியோ தேர்வு செய்தாலும் டால்பி வாசனை பலமாக "ஓ ஓ " என்று அடிக்கிறது.அப்போதும் வசனங்கள் சுமாராக தான் கேட்கிறது.ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படங்களில் வடிவேலு காமெடி எல்லாம் அப்படி பளிச்சென்று ஒலிக்கும்!
    ஆங்கிலப்படங்களை பொறுத்தளவில் 1940,50 களில் வந்த மோனோ ஒலியில் பதிவான படங்களை சப்டைட்டில் இல்லாமலே பார்த்தாலும் புரியும்.ஆனால் அதன்பிறகான காலகட்ட படங்களில் அப்படி இல்லை. நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது இந்த பிரச்சனை இல்லை.ஆனால் தனியே OTT மாதிரி பார்க்கும்போது இது பெரிய எரிச்சலாகி விடுகிறது.
    சாதா சேனல்களில் நகைச்சுவை காட்சிகளை டவுன்மிக்ஸ் செய்து போடுவதால் வசனம் புரியும்.அதிலேயே முழு படத்தை போடும்போது அப்படி செய்யாததால் அதே 'ஓ ஓ அலறல்' தான் அதிகமாக கேட்கும். ஹெச். டி சேனல்களில் டால்பி சவுண்ட் சில படங்களுக்கு லோகோ வரும். சிலதுக்கு வராது.எப்படி இருந்தாலும் ஒலி அளவை பல மடங்கு கூட்டி வைத்தாலும் அதே ஓ ஓ அலறல் தான் அதிகமாக இருக்கும்!

    வூடி ஆலன் டால்பி எல்லாம் பிரபலமான இரண்டாயிரங்களில் கூட தனது படங்களை மோனோவில் தான் மிக்ஸ் செய்து வெளியிட்டார்.அவரை பொறுத்தளவில் பின்னணி இசை ,கார் இடவலமாக செல்லும் எபெக்ட்,துல்லியமான காலடி சத்தம் ..etc ..etc..போன்றவைகளை விடவும் வசனம் பிரதானமாக துல்லியமாக கேட்க வேண்டும் என்று விரும்பினார்.காரணம் அவரது படங்களில் வசனங்கள் தான் முதுகெலும்பு!
 

No comments:

Post a Comment