Sunday, 7 June 2026

Deva,Nelson & prejudice!

 ரெட் படத்தில் ஒரு காட்சி. மாயக்காவுக்கு செல்லூர் சீனி....சாரி...சாரி...(யோவ் கதாபாத்திரங்களின் அசல் பேரை சொல்லி சிக்கிக்காத - கும்மாங்கோ).... ரெட் மீது தீராத ஆசை.சார்லியிடம் மாயக்கா பேசிக்கொண்டிருக்கையில் கனவு....டூயட்....ஸ்டாப்...

 

   இந்த காலகட்டத்தில் இங்க ஒரு டூயட் பாட்டென்றால் எப்படி இருக்கும்?அப்படியே லோக்கல் மண்ணை குழைத்து கேட்பவன் காதில் ஊற்றுகிறேன் பேர்வழி என்று டப்பாங்குத்த கிழித்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள்!

    ஆனால் தேவா அப்படியே அதற்கு எதிர் திசையில் சிந்தித்தார்! ஏன் இவர்கள் "உலகில் உள்ள உயர்ந்ததெல்லாம் புசிக்கும் ரசிகர்களாக" இருக்கக்கூடாது? ஏன் இவர்கள் மேற்கத்திய அதிரடி beats கொண்ட பாடலுக்கு ஆடக்கூடாது?

 
    ஆத்மன் பாடியதிலேயே நமக்கு மிகவும் பிடித்த பாடலென்றால் இதுதான்.இத்தனைக்கும் அவர் ஹீரோவாக அந்தாண்டு இறுதியில் அறிமுகம் ஆகும்முன்பே அஜீத்துக்கு பாடியதெல்லாம் பெரிய சாதனை.( சரி ஆத்மன் பாசறை வேலை போதும்.வந்த விஷயத்தை சொல்லு - கும்மாங்கோ)

 
    இப்ப கட் பண்ணா ஜெயிலர் படம்.விநாயகன் சிலைகடத்தல் பேர்வழி.அடியாட்களை வைத்துக்கொண்டு ராஜ்ஜியம் செய்கிறான்.அவனுக்கு ரிலாக்ஸ் செய்ய அவ்வப்போது பாட்டு போட்டு தனது அல்லக்கைகளை ஆட விடுகிறான்.

டிக் டாக் ரமேஷ் - மறைந்துபோன ஒரு அற்புத கலைஞன் 


 

    நிற்க! வழக்கமான  முற்போக்கு இயக்குநர் யாராவது இக்காட்சியை எடுத்திருந்தால் "ஏ... ஆயி..." என்று கிழவியின் ஒப்பாரியில் ஒரு டப்பாங்குத்து இசையை சேர்த்திருப்பார்கள்.
    நெல்சனிடம் பிடித்த விஷயமே இதுதான்.சட்டென்று பார்வையாளன் யூகிக்க முடியாத ஒரு எதிர்வினையை/இசையை/வசனத்தை வைத்துவிடுவார்.

    
இப்படத்திலும் அப்படித்தான்.Taal Se Taal Mila என்று சுக்விந்தர் சிங் (பாடலை உருவாக்கியதே அவர்தான் என்றொரு சர்ச்சையும் ஓடிட்டு இருக்கு) பாட அல்லக்கைகள் ஆட...உண்மையிலேயே அக்கட்சி புதுமையாக இருந்தது.

   அதிலும் பாடல்கள் ஒலிப்பது அட்டகாசமான Bose Sound link Revolve II மாடல் ஸ்பீக்கரில்....


   பிறகு வேறொரு தருணத்தில் ஒங்க இவருக்கு செக் வைத்துவிட்டு மற்றொரு பாடல்..

கண்ணோடு காண்பதெல்லாம்....



    "பொதுமைப்படுத்துதல் என்பதே கூடாது"."இவர்கள் இப்படித்தான் என்று முன்முடிவுக்கு வருவது தவறு" என்றெல்லாம் ஊருக்கு உபதேசம் செய்யும் அதே போராளி இயக்குநர்கள் வைக்கும் காட்சிகள் கதாபாத்திர சித்தரிப்புகள் எல்லாமே அதே முன்முடிவு/ பொதுமைப்படுத்துதல் வகையறாவில் வருவதாகத்தான் இருக்கு.நாம் ஏற்கெனவே வேட்டையன் பற்றிய பதிவில் "அபிராமி கெட்ட கதாபாத்திரம் என்பதால் அவர் vaping செய்கிறார் என்று காட்டுதல் பொதுமைப்படுத்துதல் வகையறாவில் வராதா?" என்று கேட்டிருந்தோம். இயக்குநர்,வேட்டையன் படத்தை ஞானவேல் எடுத்ததே பொதுமைப்படுத்துதல் &முன்முடிவுகள் கூடாது என்று உணர்த்தவே எனும்போது இந்த ஒற்றை முரணில் அவரது மொத்த நோக்கமும் அடிபட்டு போனது!

 
     ஏன் அடித்தட்டு மக்கள் இசை ரசனை என்பது சொல்லி வைத்தாற்போல ஒரே மாதிரி தான் இருக்க வேண்டுமா?ஏன் அது மேற்கத்திய இசை சார்ந்து இருக்க கூடாதா? "அவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை" எனும் முன்முடிவால் தானே நீங்கள் அப்படி கட்சிகள் வைப்பதில்லை? அது தவறில்லையா?எதுக்கிந்த இரட்டை வேடம்?
 

   எப்படி இருந்தாலும் புரட்சி முற்போக்கு என்று ஊரை ஏமாற்றாத தேவா மற்றும் நெல்சன் ஆகியோர் தான் இந்த பொதுமைப்படுத்துதல் மற்றும் முன்முடிவுகளை தாண்டி சிந்தித்துள்ளனர்!அவர்கள் பாராட்டுக்குரியவர்கள்!

 

Sunday, 31 May 2026

சினிமா சீக்ரெட் - கலைஞானம்

 

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவ் ஆனந்த் சென்னை வந்திருந்தார். இரு கூட்டங்கள். ஒன்று சினிமாத்துறையினர் நடத்தியது. இரண்டாவது, கிட்டத்தட்ட பொதுக்கூட்டம்போல. அன்றுதான் சென்னையில் அவரால் படைக்கப்பட்ட ரொமான்சிங் வித் லைஃப் (வாழ்க்கையோடு விளையாடியபடி) நூல் வெளியிடப்பட்டது. அதில் புகைப்படங்கள் இருந்தன. முன்னூறு பக்கப் புத்தகத்தில் இருபது படங்கள்; மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட குறிப்புகள். நூலே பொறுப்போடு எழுதப்பட்டிருந்தது. தேவ் ஆனந்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குக் கொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லை. ஆனால், புத்தகத்தில் ஓரிடத்தில்கூட கசப்பு இல்லை. குறைகூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை - அசோகமித்திரன்,திரைக்குப்பின்.
 

 
கலைஞானம் என்றாலே சாமானியர்களுக்கு "இது நம்ம ஆளு படத்தில் வந்த ஐயர்" என்று சொன்னால்தான் தெரியும்.ஆனால் அதற்கு பலகாலம் முன்பிலிருந்தே பல்வேறு திரைப்படங்களுக்கு கதை திரைக்கதை அமைத்து கொடுத்தவர்,முடிக்கப்பட்ட படத்தில் ஏதோ ஓட்டை இருக்கே என்று இயக்குநர்கள் கலங்கி நின்றபோது அதை நிவர்த்தி செய்ய வழி செய்தவர், சாண்டோ சின்னப்பா தேவர் குடும்பத்தின் வாழ்நாள் விசுவாசி,கடும் நிதி நெருக்கடி நேரங்களில் தனது கதைகளையே அடமானம் வைத்தவர்,அப்பாவித்தனமாக இவர் பல இடங்களில் கதையை சொல்லிவைக்க இவருக்கே தெரியாமல் அதை படமாக்கி இவருக்கு காசு கொடுக்காமல் ஏமாற்றிய பலர் என்று பல்வேறு விரிவான அனுபவ தொகுப்பாக இப்புத்தகம் ஐந்து பாகங்களாக உள்ளது
.மேலே அசோகமித்திரன் தேவ் ஆனந்த் பற்றி குறிப்பிட்டது அப்படியே கலைஞானத்துக்கும் பொருந்தும்.ஐந்து பாகங்கள் கிட்டத்தட்ட ஆயிரம் பக்கங்கள்.எங்கும் ஒரு வெறுப்பு வன்மம் விரோதம் தென்படவில்லை! நேரில் சந்தித்தே இராத மனிதர்கள் பற்றியெல்லாம் வன்மத்தை கொட்டிவரும் இணைய போராளிகள் இவரிடம் கற்க நிறைய உள்ளது!


  - தேவர் மகன் கதை இவருடையது.ஆனால் அதற்கு கிரெடிட் கொடுக்காமல் காசர் வெறும் 25000 கொடுத்து இவரை அனுப்பி விடுகிறார்.தனது உதவியாளருக்கு தான் அப்போது கொடுத்த சம்பளமே அவ்வளவு என்கிறார் கலைஞானம்.

 
-புதுப்பட்டி பொன்னுத்தாயி படம் அசல் பொன்னுத்தாயி எனும் நாதஸ்வர கலைஞர் தனது கணவரின் மறைவுக்கு பிறகு வாசிப்பதையே நிறுத்தி விட்டதை கற்பனை கலந்து சொன்ன படம்.அப்பட பாடல் ஒலிப்பதிவில்  திருவிழா ஆர்.ஜெய்சங்கர் என்ற நாதஸ்வர கலைஞர் மொட்டையின் பூங்காற்று திரும்புமா பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க மொட்டை அப்படியே அசைவற்று கண்கலங்கி ரசிக்கிறார்.கலைஞானத்திடம் மெதுவாக "மீண்டும் அவரை அதே பாடலுக்கு வாசிக்க சொல்லுங்கள்" என்று சொல்லி 'கண்ணீர் வழிய அப்படியே கலங்கி நின்றபடி ரசித்தார் ' என்கிறார் கலைஞானம்.அதே பட பாடல் பதிவின்போது நாதஸ்வரம் வெடித்து இரண்டாக பிளக்கிறது.மொட்டை ஞானோதயமாக "மங்கல கருவி உடைந்தது நல்லதா படல அண்ணே" என்று கலைஞானத்திடம் சொல்கிறார்.சொன்னபடியே படம் பெட்டிக்குள் போகிறது.
 

திருவிழா ஜெய்சங்கர்

   - ரஜினியை வில்லனாக மட்டுமே சித்தரித்து வந்த இயக்குநர்களுக்கு மத்தியில் இவர் ஏன் ஹீரோவாக கூடாது? என்று பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக்குகிறார்.இதை கேள்விப்பட்ட தேவர் "டேய் வேண்டாம்டா! அதே படத்தில் ஶ்ரீகாந்த் செஞ்ச கேரக்டருக்கு வேணும்னா ரஜினியை போடு.விஷப்பரிட்சை பண்ணாத" என்று எச்சரித்ததையும் மீறி படமெடுக்கிறார்.அதன்பின் நடந்தது வரலாறு!"அந்த ரஜினி உங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லையா?நீங்கள் ஏன் இப்படி ஒரு பொந்தில் வாழ்கிறீர்கள்" என்று பலரும் கேட்டதற்கு ரஜினியை குறை கூறாமல் "கொடுப்பதும் கொடுக்காததும் அவரது விருப்பம்.அதைப்பற்றி நான் விமர்சிக்க மாட்டேன்" என்று பெருந்தன்மையாக சொல்கிறார்.இப்புத்தகம் வெளியான காலத்திற்கு சில ஆண்டுகள் கழித்து ரஜினி கலைஞானத்துக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசளித்தார் என்று செய்தி வந்தது!

 
 -இளஞ்சோடிகள் படம் இவருக்கே தெரியாமல் ஹிந்தியில் லவ் 86 என்று கோவிந்தாவை அறிமுகம் செய்து வெளியிடப்பட்டு மெகா ஹிட் ஆகிறது.தற்செயலாக டிவியில் அப்படத்தை பார்க்க நேரும் கலைஞானம் பிலிம் சேம்பர் தலைவராக இருந்த முக்தா சீனிவாசன் மூலம் மும்பை சென்று அங்குள்ள தயாரிப்பாளரிடம் இதுபற்றி கேட்க அவர் கதறி அழுதபடி இவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்.நிதி நெருக்கடியால் இதை செய்துவிட்டதாக சொல்கிறார்(இவர் ஏற்கெனவே இளஞ்சோடிகள் பட உரிமையை வாங்க கலைஞானத்தை சந்தித்து பிறகு நிதியில்லை என்று மும்பை திரும்பியவர்) .பிறகு அறுபதாயிரம் தான் தன்னால் தர முடியும் என்று சொல்லி மன்னிப்பு கேட்க இவர் பெருந்தன்மையுடன் அதை ஏற்கிறார்.


 
-மிஸ்டர் இந்தியா படத்தை பாலாஜி தமிழில் தயாரிக்க முடிவுசெய்து பாக்யராஜை அணுகுகிறார்.இந்த மாயாஜால கதைகள் எல்லாம் தனக்கு சரியா வராது என்று சொன்னவர் பிறகு ஒருமாதிரி ஒப்புக்கொண்டு "வசனப்பகுதிகளை மட்டும்தான் நான் எடுப்பேன்.மாயாஜால பகுதிகளை வேறு யாரையாவது வைத்து இயக்கி கொள்ளுங்கள்.எனக்கு அது சரி வராது" என்கிறார்.அந்த மாயாஜால காட்சிகளை எடுப்பதற்கான பட்ஜெட்டும் இல்லை தொழில்நுட்பமும் இங்கில்லை என்பதை பாக்யராஜ் உணர்கிறார்.இடையில் பாலாஜிக்கும் இவருக்கும் பெரிய முட்டல் மோதல்.ரஜினி வந்து சமாதானம் முயன்றும் தோல்வி."பாலாஜி துப்பாக்கி எல்லாம் வச்சிகிட்டு மிரட்டுகிறார்" என்கிறார் பாக்யராஜ்.பிறகு பூர்ணிமா பாக்யராஜின் தலையீட்டால் சமாதானம் ஏற்படுகிறது.பாக்யராஜும் பாலாஜியும் ராசியாகி போகிறார்கள்!படம் வெளியாகி படத்தில் பாக்யராஜுக்கு பெரிய பங்கில்லை என்று தெரிந்ததும் மக்கள் கூட்டமும் வருவது நிற்க பெருத்த தோல்வி.
 


    போனி கபூர் தனது தம்பி அனில் கபூரை பெரிய ஹீரோ ஆக்கியே தீர்வது என்ற வெறியில் இருநூறு பிலிம் ரீல்களில் (ஒரு ரீல் ஆயிரம் அடி!!!!!) படமாக்கி அதை பதினான்கு ரீல்களாக எடுத்த படத்தை குறைந்த பட்ஜெட் வச்சு எப்படி எடுக்க முடியும் என்று கேட்கிறார் கலைஞானம்.

 
- கே.பாலச்சந்தரை ஒருமுறை சந்தித்து ஒரு 'கண் மாற்று ' கதையை சொல்கிறார் கலைஞானம்.அதாவது ஒரு  பெண் தனது காதலனை சந்தர்ப்பவசத்தால் பிரிந்து வேறு ஒருவனுக்கு மனைவி ஆகிறாள்.அவனுக்கு விபத்து ஏற்பட்டு பார்வை போகிறது.அப்போது அந்த காதலன் வேறு ஏதோ ஒரு வகையில் இறந்துவிட அவனது கண்களை கணவனுக்கு பொருத்தி விடுகிறார்கள்.அந்த கண்ணின் வெண் விழி படலத்தில் மச்சம் போன்று ஒரு புள்ளி.கணவனின் கண்களில் காதலனின் கண்களை ஒவ்வொருமுறை கண்டதும் அலறியபடி மயங்கி விழுகிறாள் என்பதாக கதை செல்கிறது."கண்களை இவ்வளவு க்ளோசப்பில் படமாக்குற அளவுக்கு கேமரா வசதியெல்லாம் இல்லையே" என்று சொல்லி அனுப்புகிறார் கேபி.பல ஆண்டுகள் கழித்து சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் குறிப்பிட்ட நேரத்தில் பத்து கதைகள் சொல்ல வேண்டும் என்று இவரிடம் கேட்க இவர் கடகடவென பத்து கதைகள் சொல்கிறார். அதில் இந்த கண் கதையும் ஒன்று!இதை சொல்லி அடுத்த ஆண்டே அந்தக்கதையை இவரிடம் சொல்லாமல் வேறொரு இயக்குநர் படமாக்கி விட்டதையும் குறிப்பிடுகிறார்!
 

அது என்ன படமென்று உடனே புரிந்திருக்குமே! (ஆனால் இதில் ஒரு தவறாக கண் மாற்று சிகிச்சை என்றால் விழிப்படலத்தை மட்டும் தான் மாற்றுவார்களே அன்றி மொத்த கண் உருண்டையையும் மாற்ற மாட்டார்கள்).
 - ஶ்ரீதர் இயக்கத்தில் அண்ணா நீ என் தெய்வம் நாலாயிரம் அடி எடுத்ததோடு எம்ஜியார் முதல்வர் ஆகிவிட்டதால் நின்றுபோனது.சில ஆண்டுகள் கழித்து அப்படத்தின் தயாரிப்பாளர் நலிந்த நிலையில் இருப்பதை அறியும் எம்ஜியார் பாக்யராஜிடம் அந்த ஃபுடேஜ் ஐ கொண்டு ஒரு முழுநீள படம் எடுத்து தர சொல்கிறார்.அகமகிழும் பாக்யராஜ் கலைஞானம் உதவியுடன் அவசர போலீஸ் படத்தை எடுக்கிறார்.முதல் இரண்டு நாட்கள் திரையரங்கில் கடும் கூட்டம்.அதன்பின் ஒருவரையும் காணோம்! படம் பிளாப்.காரணம் எம்ஜியார் மறைந்த பின்னர் வந்த படமென்பதால் "தலைவரை" காண எம்ஜியார் ரசிகர்கள்  அடித்து மோதி வந்து பார்த்தால் அது பாக்யராஜ் படமாகவே இருந்ததால் கடும் ஏமாற்றம் அடைந்தனர்!  சம்மந்தமே இல்லாமல் ஒரு பாக்யராஜ் தெலுங்கு பேசி நடித்தது ஒருவித அந்நிய தன்மையை உண்டாக்கி விட்டது மற்றொரு காரணம் என்பது நம் கருத்து!

 
 
- தான் எடுத்த மிருதங்க சக்கரவர்த்தி படத்தில் உமையாள்புரம் சிவராமனின் இறுதி காட்சி மிருதங்க வாசிப்பை கேட்டு யாரையுமே எளிதில் பாராட்டாத சங்கீத விமர்சகர் சுப்புடு "இந்தமாதிரி உலகத்திலேயே வேறு யாராலும் வாசிக்க முடியாது" என்று பாராட்டியதை சிவராமன் நன்றியுடன் நெகிழ்ந்து பகிர்ந்து கொண்டதை குறிப்பிடுகிறார்.இதே படத்தை பார்க்கும் அப்போதைய முதல்வர் எம்.ஜி. ஆர் சிவராமனிடம்  அந்த வாசிப்பை சிலாகித்து சொல்லி "என்ன பிரமாதமா வாசிச்சிருக்க!உனக்கு என்ன வேணும்?" என்று கேட்க "உங்க அன்பிருந்தா போதும்" என்று சிவராமன்  சொல்கிறார்.படத்தை பார்த்துவிட்டு தம்பி சிவாஜி மாதிரி உலகத்திலேயே யாராலும் நடிக்க முடியாது" என்று எம்ஜியார் மனமார பாராட்டியதையும் சொல்கிறார்.
உமையாள்புரம் சிவராமன் 


 

-வேதம் புதிது கண்ணன்  என்ற பெயர் வெகு பிரபலம்.ஆனால் உண்மையில் வேதம் புதிது கதையை ஒருமாதிரி தயார் செய்து பாரதிராஜாவிடம் சொல்கிறார் கண்ணன்.அது ஒரு ஹோட்டல் அறை. அதில் பாரதிராஜா சில மாற்றங்களை சொல்ல கண்ணன் அதை மறுக்க வழக்கம்போல கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் பாரதிராஜா அந்த கதை பேப்பர்களை கண்ணனின் முகத்தில் விட்டெறிந்து விட்டு "கலைஞானம் நாளைக்கு நீங்க இன்னொரு கதை ரெடி பண்ணி கொண்டுவாங்க.இவன் வேண்டாம்" என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறார்.

வேதம் புதிது கண்ணன்

    
 மற்றொருவராக இருந்தால் 'இதான்டா ஜாக்பாட்' என்று பாரதிராஜாவுக்கு தனியாக கதை பண்ணி கொடுத்து எங்கோ சென்றிருப்பார்.ஆனால் கலைஞானம் ஒரு சக படைப்பாளி இப்படி அவமானப்படக்கூடாது என்று நினைத்து கண்ணனிடம் " தம்பி நா இந்தக்கதையை மாத்தி தரேன்.நீ எழுதுனதா சொல்லி எடுத்துட்டுப்போய் முதல்ல அவர் கால்ல விழுந்துடு.அப்பத்தான் அவர் அமைதி ஆவார்" என்று சொல்லி கதையில் திருத்தங்கள் செய்துகொடுத்து அனுப்புகிறார்.பிறகு நடந்தது எல்லாருக்கும் தெரியும்!
-யேசுதாஸ் இவரது படத்திற்கு பாட வருகிறார்."பொதுவாகவே யேசுதாஸ் பாடுகிறார் என்றால் இசையமைப்பாளர் பயத்தில் அவர்கள் வராமல் உதவியாளரை அனுப்பி வைப்பார்கள்.அந்தளவு நுட்பமாக பாடலில் உள்ள ராகத்தில் சந்தத்தில் பல்லவியில் சரணத்தில், வார்த்தைகள் ராகத்துக்குள் மிகச்சரியாக பிசிரில்லாமல் உட்காருகிறதா என்றெல்லாம் நுட்பமாக குறைகளை கண்டுபிடித்து துளைத்து எடுப்பார்" என்கிறார் கலைஞானம். சங்கர் கணேஷ் வராமல் அவரது உதவியாளர் சொல்லி கொடுக்கிறார்.அப்படித்தான் அன்றும்!கலைஞானம் இருபதாண்டுகளுக்கு முன்பு எழுதிய பாடலுக்கு மெட்டமைத்திருந்தார் சங்கர் கணேஷ்.அதை பாடும் முன்பு  குறிப்பிட்ட சில வரிகள் சந்தத்துத்துக்குள் வரவில்லை என்று கடிந்து கொள்கிறார் யேசுதாஸ்.

 

     கலைஞானத்துக்கு திடீரென்று ஒரு கோபம் அவர் பதிலுக்கு திட்டுகிறார். வார்த்தைகள் தடிக்க கடும் சொற்போர்!பிறகு கலைஞானம் கோபித்து கொண்டு ஸ்டுடியோவின் வேறொரு அறைக்கு சென்றுவிட பிறகுதான் யேசுதாசுக்கு தான் சண்டை போட்ட நபர்தான் படத்தின் தயாரிப்பாளர் என்று தெரிகிறது.அவரே ஓடிவந்து மன்னிப்பு கேட்கிறார். ஜீசஸ் தனக்கு இதன்மூலம் பெரிய பாடம் புகட்டிவிட்டதாக சொல்கிறார்.கலைஞானம் அந்தக்கணமே உருகிப்போய்  கண்ணீர் விட்டு ஒரு மகா கலைஞனை தான் அப்படி பேசி இருக்க கூடாது என்று அவரும் வருந்த நட்பு உறுதியாகிறது.
    "சார் இனி நீங்க தயாரிக்கும் எல்லா படத்திலும் நான் பாடுவேன். ஜீசஸ் மீது ஆணையாக அதுக்கு சம்பளமும் வாங்க மாட்டேன் " என்று உறுதி அளிக்கிறார் யேசுதாஸ்.அகமகிழ்ந்து போகிறார் கலைஞானம்.
    ஆனாலும் அவருக்கு மனசு கேட்கவில்லை.எப்படியாவது இவர் பாடிய பாடல்களுக்கு ஒரு பெருந்தொகையை கொடுத்துவிட வேண்டுமென்று முடிவெடுக்கிறார்.மற்றொரு சொந்த தயாரிப்பு படத்திற்கு யேசுதாஸ் பாடவரும் போது அதற்கு இராம.நாராயணன் தான் தயாரிப்பாளர் என்று நம்ப வைத்து அவர் கையாலேயே ஒரு பெரிய தொகையை யேசுதாசிடம் கொடுக்க வைக்கிறார் கலைஞானம்!

- கே. பி.சுந்தராம்பாள் வயதான காலத்தில் இவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கிறார்.சுந்தராம்பாள் தினமும் ஒருவேளை மட்டுமே உணவருந்துவார்.சரியாக மதியம் பனிரெண்டு மணிக்கு சாப்பாடு கொடுத்துவிட வேண்டும்.சில நிமிடங்கள் தாமதமானாலும் அன்று முழுவதும் உபவாசம் போல இருந்துவிடுவார் என்கிறார் கலைஞானம். 
 

சுந்தராம்பாளின் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரது குடும்பத்தினர் சிலரே அவருக்கு எதிராக செய்வினை வைத்தது; கலைஞானம் தனக்கு தெரிந்த ஜோதிடர் மூலம் அதை எடுத்து காப்பாற்றியது, சுந்தராம்பாளின் கொடுமுடி சொத்துக்கள் (கொடுமுடி பேலஸ் மர்மங்கள் என்று மர்மப்படம் போல விளக்குகிறார்)அனைத்தையும் முறையாக மதிப்பீடு செய்து அதை அவரது வாரிசுகளுக்கு சரியான விகிதப்படி சொத்துக்களை பிரித்து கொடுத்தது என்று அனைத்தையும் செய்கிறார் கலைஞானம்.
- சிறுமி மீனா தனது தாய் ராஜ்மல்லிகாவுடன்ஒருமுறை இவரை சந்திக்கிறார்.அப்போது மீனாவின் முன் பற்கள் சற்று தெத்தலாக இருப்பதை கவனித்து ஒரு பல் மருத்துவரை குறிப்பிட்டு அவரிடம் சென்றால் இதை சரி செய்வார் என்கிறார்.மீனாவின் தாயும் அதை மதித்து மருத்துவரிடம் சென்று மீனாவின் பற்களை செம்மையாக்குகிறார்.இதையே தயங்கி தயங்கி தான் மீனாவின் தாயாரிடம் சொல்கிறார்.
 

அதற்கு ராஜ்மல்லிகா " என்னண்ணே இதுக்கு ஏன் இவ்வளவு தயங்கிறீங்க?" என்று கேட்க கலைஞானம் முன்பு ஒருமுறை ஶ்ரீதேவியின் தாயிடம் ஒரு யோசனை  சொல்லி வாங்கிக்கட்டிக்கொண்ட அனுபவத்தையும் சொல்கிறார்.ஶ்ரீதேவியின் மூக்கை சரி செய்யும் விதமாக இவர் ஒரு மருத்துவரை குறிப்பிட்டு யோசனை சொல்ல ஶ்ரீதேவியின் தாய் கொதித்துப்போய் உங்க படமே வேண்டாமென்று கதை சொல்லவந்த இவரை வீட்டை விட்டே அனுப்புகிறார்.சில ஆண்டுகள் கழித்து ஶ்ரீதேவி நடித்த ஏதோ ஒரு ஹிந்தி படத்தை இவர் பார்க்கும்போது இவர் சொன்ன மூக்கு தொடர்பான மாற்றங்களுடன் அவர் இருப்பதை காண்கிறார்!

 
- அண்ணாவின் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துவந்த தருணம். எஸ்.ஏ.சந்திரசேகர் நேரடியாக கலைஞானம் அலுவலகத்திற்கு சென்று காத்திருக்கிறார்.கலைஞானம் பதறிப்போய் "என்ன சார் நீங்க சொல்லி அனுப்பி இருந்தா நானே வந்திருப்பேனே!" என்று கேட்க "இல்லண்ணே நா வர்றதுதான் முறை" என்று சொல்லிவிட்டு அண்ணாவின் படங்கள் தொடர் தோல்வி அடைவதை சொல்லி "நீங்கதான் ஒரு படத்தை பாத்துட்டு அதுல உள்ள குறைகள் இல்லாம விஜய்க்கு தகுந்தமாதிரி ஒரு கதை பண்ணி கொடுக்கணும்" என்று கேட்க தேவா படத்தை பார்த்துவிட்டு தோல்விக்கு இதெல்லாம் காரணம் என்று குறிப்பிட்டு பிறகு விஷ்ணு படத்தின் கதையை சொல்ல அது வெற்றி பெற்றதாக குறிப்பிடுகிறார்.
 

.
இவ்வளவு வருட அனுபவங்கள் இருந்தாலும் பிழைக்கத்தெரியாத ஒருவனாகவே தான் திரையுலகில் இருந்து விட்டதாக சொல்கிறார்.பெரிதாக காசு பணம் சம்பாதித்தில்லை என்கிறார்.இவரின் கதைகளை வாங்கிக்கொண்டு சில்லறை காசாக கொடுத்தவர்கள்,பைசா கொடுக்காமல் இவர் கதைகளை களவாடி எடுத்து பல லட்சம் பார்த்தவர்கள்,இவரால் ஆதாயம் பல பெற்று இவரை கண்டுகொள்ளாமல் போனவர்கள் என்று எவரை பற்றியும் இந்த புத்தகத்தொகுப்பில் அவர் குறையாக கூறவில்லை."அவர்களது சூழ்நிலை அப்படி!" என பெருந்தன்மையாகவே கடந்து செல்கிறார்!

 

Sunday, 7 December 2025

Dolby,Stereo,Mono & Woody Allen

 கடந்த பத்தாண்டுகளாக வெளியான தமிழ்ப்படங்களை பொறுத்தளவில் (ஆர்.ஓ வில் பத்துமுறை வடிகட்டி பிறகுதான் ஒரு புது தமிழ்ப்படத்தை எப்போதாவது பார்க்கிறோம் என்றாலும்)சப்டைட்டில் உதவியுடன்தான் பல காட்சிகளை புரிந்துகொள்ள முடிகிறது.  பிறமொழி புதுப்படங்களை எப்படியும் சப்டைட்டில்  சகிதம் தான் பார்க்கிறோம் என்பதால் பிரச்சனையில்லை!


படத்தின் ஒலி அளவை கூட்டி வைத்தால் "ஓ ஓ" என்று பின்னணி இசை முன்னணியில் உச்ச ஸ்தாயியில்  அலறும்.ஆனால் அதனூடே வரும் வசனம் என்னன்னே கேட்காது! இசையே இல்லாமல் தனியே வசனம் வந்தாலும் இதே நிலைதான். 
 

        டால்பி ஆரோ என்றெல்லாம் மிக்ஸ் செய்ய ஆரம்பித்த பிறகுதான் இந்தநிலை.மிக்சிங் பிழை என்று சொல்ல முடியாது.ஏனெனில் மிகச்சிறந்த கலைஞர்கள் மிக்ஸ் செய்த படங்களும் அப்படித்தான் ஒலிக்கிறது!சாதாரண ஸ்டீரியோ மிக்ஸ் தான் எல்லா ஒலிப்பெருக்கி சாதனங்களிலும் துல்லியமாக ஒலிக்கிறது!

           இது ஒருவகையில் ஏ.ஆர்.ஆர் மீது வைக்கப்பட்ட" பாடலில் வரிகள் சரியாக கேட்கவில்லை" குற்றச்சாட்டுக்கு அவர் அளித்த பதில் நினைவுக்கு வருகிறது ."நல்ல சிஸ்டத்தில் கேளுங்க" என்று சுருக்கமா முடித்தார்.அது உண்மைதான்.அவரது பாடல்களை ஸ்டுடியோ மானிட்டரிங் ஹெட்போன் மாதிரி கேட்டால்தான் அவர் சொன்னது புரியும்.அதுபோல திரைப்படங்களும் அப்படித்தான் என்று தோன்றுகிறது.அவை சாதாரண ஸ்டீரியோ ஸ்பீக்கர்களுக்கு உகந்தவை அல்ல!2.0 வுக்கு Downmix செய்தாலே அன்றி இதில் மாற்றமில்லை!

 

    சன் நெக்ஸ்ட்-ல் டால்பி & ஸ்டீரியோ தேர்வுகள் உண்டு.ஆனால் அதில் ஸ்டீரியோ தேர்வு செய்தாலும் டால்பி வாசனை பலமாக "ஓ ஓ " என்று அடிக்கிறது.அப்போதும் வசனங்கள் சுமாராக தான் கேட்கிறது.ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்த படங்களில் வடிவேலு காமெடி எல்லாம் அப்படி பளிச்சென்று ஒலிக்கும்!
    ஆங்கிலப்படங்களை பொறுத்தளவில் 1940,50 களில் வந்த மோனோ ஒலியில் பதிவான படங்களை சப்டைட்டில் இல்லாமலே பார்த்தாலும் புரியும்.ஆனால் அதன்பிறகான காலகட்ட படங்களில் அப்படி இல்லை. நீங்கள் திரையரங்கில் பார்க்கும் போது இந்த பிரச்சனை இல்லை.ஆனால் தனியே OTT மாதிரி பார்க்கும்போது இது பெரிய எரிச்சலாகி விடுகிறது.
    சாதா சேனல்களில் நகைச்சுவை காட்சிகளை டவுன்மிக்ஸ் செய்து போடுவதால் வசனம் புரியும்.அதிலேயே முழு படத்தை போடும்போது அப்படி செய்யாததால் அதே 'ஓ ஓ அலறல்' தான் அதிகமாக கேட்கும். ஹெச். டி சேனல்களில் டால்பி சவுண்ட் சில படங்களுக்கு லோகோ வரும். சிலதுக்கு வராது.எப்படி இருந்தாலும் ஒலி அளவை பல மடங்கு கூட்டி வைத்தாலும் அதே ஓ ஓ அலறல் தான் அதிகமாக இருக்கும்!

    வூடி ஆலன் டால்பி எல்லாம் பிரபலமான இரண்டாயிரங்களில் கூட தனது படங்களை மோனோவில் தான் மிக்ஸ் செய்து வெளியிட்டார்.அவரை பொறுத்தளவில் பின்னணி இசை ,கார் இடவலமாக செல்லும் எபெக்ட்,துல்லியமான காலடி சத்தம் ..etc ..etc..போன்றவைகளை விடவும் வசனம் பிரதானமாக துல்லியமாக கேட்க வேண்டும் என்று விரும்பினார்.காரணம் அவரது படங்களில் வசனங்கள் தான் முதுகெலும்பு!
 

Sunday, 9 November 2025

HMT- ன் சொதப்பல்கள்

    ஜப்பான் மேக் ஸ்விஸ் மேக் என்று போய்க்கொண்டிருந்த காலத்தில் ஜப்பானின் சிட்டிசன் நிறுவன தொழில்நுட்ப உதவி +மத்திய அரசின் நிதி+இடவசதி உதவியுடன் ஆரம்பித்து பிறகு சொந்தமாகவே movements தயாரித்து பயன்படுத்தியது ஹெச்.எம்.டி.
        பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஹெச்.எம்.டி ஜனதா கடிகாரத்தை கட்டியிருந்தார்.அனைவரும் வாங்கக்கூடிய விலை அதைவிட முக்கியமாக நல்ல தரத்தில் நீடித்து உழைக்கக்கூடிய(இப்போதும் நம்மிடம் உள்ள ரஜத், ஜனதா & பைலட் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன)  தயாரிப்பாக இருந்ததால் மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

 

      கிட்டதட்ட விற்பனை ஆன மாடல்கள் பெரும்பாலும் குறைந்த விலையிலான சாவி கொடுக்கும் வகை மெக்கானிக்கல் மாடல்கள் தான்.ஆட்டோமேட்டிக் மாடல்களும் இருந்தன.
     பிறகு அலட்சியம்,திட்டமிடாமை, தொலைநோக்குப்பார்வை இல்லாமை போன்ற காரணங்களால் 2016 இல் மூடப்பட்டது.மக்களின் தொடர் கோரிக்கைக்கு பின்னர் 2019 இல் மீண்டும் விற்பனையை ஆரம்பித்தது ஹெச்.எம்.டி.
  ஆனால் ஒரு பெரிய ஃன்னாவாக இப்போது எந்த கடிகாரமும் ஹெச்.எம்.டியால் தயாரிக்கப்படுவதில்லை! Outsourcing என்ற பேரில் உதிரி பாகங்கள் உட்பட அனைத்தும் வெளியில் இருந்து தருவிக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படுகிறது.In house movement என்று சொந்தமாக movement தயாரிப்பது கூட நிறுத்தப்பட்டுவிட்டது. மியோட்டா அல்லது சீக்கோ movement கள் தான் பயன்படுத்தப்படுகிறது!
   அதைவிட கொடுமை இந்த ஹெச்.எம்.டி கடிகாரத்தை மக்கள் ஏன் விரும்பினார்களோ அந்த அடிப்படை காரணங்கள் இப்போது இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது!
   குறைந்த விலையில் இயந்திர கடிகாரங்கள் என்பது போய் இப்போது பழைய மாடல் கேசில் குவார்ட்ஸ் மூவ்மென்ட் போட்டு விற்கிறார்கள்.

    ஜனதா கோஹினூர் தாரிக் சங்கம் போன்ற கிளாசிக் மாடல்களின் நிலை இதுதான்.எல்லாமே குவார்ட்ஸ் ஆக்கப்பட்டு விட்டது!அதுவும் நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாது.ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம் ஸ்டாக் இருப்பதாக வந்த அடுத்த கணமே விற்று தீர்ந்துவிடும்.ஸ்டாக் அலர்ட் போட்டாலும் நீங்கள் தளத்தின் பக்கத்திற்கு சென்று வாங்கும் பொத்தானை அழுத்துவதற்குள் out of stock என்றாகிவிடும்!


 

   இதுபோக புதிய மாடல்கள் என்ற பேரில் அதுவும் குவார்ட்ஸ் தான்.அவை இரண்டாயிரத்துக்கு கீழே விற்கப்படுவதால் பிரச்சனை இல்லை.தானியங்கி மாடல்களான Stellar போன்றவை பத்தாயிரத்துக்கு மேலே செல்லும்.அதுவும் மேற்சொன்னப்படி லேசில் கிடைக்காது!Stellar open heart மாடலுக்கு கடும் தேவை உள்ளது.ஆனாலும் கிடைக்காது!அவைகளில் பல நன்றாகவும் உள்ளன.ஆனால் ஹெச்.எம்.டி நிறுவனத்தின் ஆன்மா அதுவல்லவே!

    இளைய தலைமுறைக்கு குவார்ட்ஸ் தான் பிடிக்கும் என்று எந்த அறிவுஜீவி ஹெச்.எம்.டி நிறுவனத்துக்கு யோசனை சொன்னார்களோ தெரியவில்லை!இன்றைக்கும் தானியங்கி & சாவி கொடுக்கும் மாடல்களின் மீதான மோகம் அப்படியே உள்ளது.ஆனால் நிறுவனம் அதையெல்லாம் உணர்ந்ததாகவே தெரியவில்லை!

   இப்போதும் மேற்சொன்ன கோஹினூர் ஜனதா பைலட் தாரிக் சங்கம் ரஜத் ...etc..etc.. கிளாசிக் மாடல்களை தானியங்கி வகையாகவோ அல்லது பழையபடி சாவி கொடுக்கும் வகையாகவோ தயாரித்து வெளியிட்டால் உடனே விற்று தீரும் நிலைதான் உள்ளது.

 
    இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழியிலும் அந்தந்த மொழியில் எழுதப்பட்ட எண்கள் கொண்டு வெவ்வேறு மாடல்கள் வெளியிடப்பட்டன .தமிழ் எண்களைக்கொண்ட  டயல் மாடல்களும் உண்டு (தமிழனுக்கு சாதா தமிழே வராது.இதுல எண்களை படித்து தள்ளிவிட போகிறான்!- கும்மாங்கோ)

 

    இப்போதும் பலர் பெங்களூருவில் உள்ள ஹெச்.எம்.டி ஷோரூம் சென்று தோண்டித்துருவி அரிய மாடல்களை அள்ளிக்கொண்டு போய்க்கொண்டு தான் உள்ளார்கள்.இதை அந்த நிறுவனமும் உணரவில்லை அரசும் உணரவில்லை.

   Kannadiga pride என்ற வகையில் கர்நாடக அரசே கூட இதை எடுத்து செய்யலாம்(HMT Gandaberunda கன்னட மக்கள் அல்லாதவர்களும் விரும்பிய ஒரு மாடல்) .ஆனாலும் யாரும் செய்ய முனையவில்லை!
உண்மையிலேயே கடிகார ஆர்வலராக உள்ள ஒருவரை தலைமை பொறுப்பில் நியமித்தால் இவைகளை செய்ய முடியும்.ஆனாலும் red tape முனைப்பு இல்லாமை கடிகாரங்கள் குறித்த ஆர்வமில்லாமை... அது இதுவென்று ஏகப்பட்ட தடைகள் உள்ளன!
 
  Timex போன்ற நிறுவனங்கள் தங்களது பழைய கிளாசிக் மாடல்களை reissue என்ற பேரில் ( Q series) பழமை மாறாமல் புதிதாக வெளியிட்டு அவை விற்பனையில் சக்கை போடு போடுகிறது.இதெல்லாம் ஹெச்.எம்.டி கண்ணுக்கு தெரியாமல் போனது ஏனோ?
Timex Q  Series 1972 Reissue 

 

  தற்போதைக்கு கிணற்றில் போட்ட கல் என்ற நிலைதான் உள்ளது!

Saturday, 1 November 2025

கொரியர் அலப்பறைகள்!

 கொரியர் சேவைகள் நாட்டில் பிரபலமாகத்துவங்கியிருந்த நேரம்.மக்கள் ஆச்சரியத்தில் இருந்தார்கள்."அதெப்படி இன்னைக்கு போட்டா நாளைக்கு போயிடுமா?" 

பலர் இதை நம்பி உடனடி பணம் அனுப்ப வேண்டியவர்களுக்கு உறையில் பணத்தை மட்டும் வைத்து கொரியர் செய்தார்கள்.அந்த உறை மிக பத்திரமாக போய் சேர்ந்தது.ஆனால் உள்ளே பணம் இருக்காது!
  இன்னும் சிலர் தங்களை மேதாவியாக கருதிக்கொண்டு உறையில் ஒரு புத்தகத்தை வைத்து அதனுள் ரகசிய அறை உண்டாக்கி அதில் பணத்தை வைத்து அனுப்பினார்கள்.வழக்கம் போல புத்தகம் ரகசிய அறை எல்லாம் பத்திரமாக போய் சேர்ந்தது.பணத்தை தவிர!
    பல வாடிக்கையாளர்கள் இதுகுறித்து கொரியர் அலுவலகத்தில் தகராறு செய்ய, முதலில் "இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை.நீங்கள் கொடுத்த உறையை பத்திரமாக சேர்த்துவிட்டோம்.அவ்வளவுதான்", என்றவர்கள் பிறகு பருப்பு சாரி பொறுப்புத்துறப்பு என்ற வகையில் "பணம் நகை விலை மதிப்புள்ள பொருட்களை அனுப்பினால் நிர்வாகம் பொறுப்பல்ல" என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள்.
     ஒருவேளை இதே நிகழ்வு ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ நடந்திருந்தால் அத்தனை கொரியர் நிறுவனங்களுக்கும் நிரந்தர திண்டுக்கல் பூட்டு தான்!ஆனால் இந்தியாவாச்சே!எந்த நிறுவனம் வாடிக்கையாளரை எப்படி கசக்கி பிழிந்தாலும் நிவாரணமோ பாதுகாப்பு கிடையவே கிடையாது!எத்தனை வழக்குகளை போட்டாலும் நிலை இதுதான்.ஏதோ அத்தி பூத்தார்போல ஒரு வழக்கில் வாடிக்கையாளருக்கு பொருளின் விலை+ அபராதம் விதிக்கும் நிகழ்வு நடக்கும்.அப்படி நடக்காமல் போல ஆயிரக்கணக்கான சம்பவங்களும் உண்டு.
   தற்காலத்தில் வேறுவகை சேட்டை செய்கிறார்கள்.ஒருகாலத்தில் பதினைந்து பைசா தபால் அட்டையில் "தலைவெட்டியாம்பட்டி P.O" என்றெழுதி பின் கோட் சரியாக போட்டால் வாரம் பத்து நாளில் கண்டிப்பாக உரியவரிடம் ஒப்படைக்கப்படும்!அப்போது எந்த மொபைலும் கிடையாது.ஏன் லேன்ட்லைன் கூட இல்லை!

   ஆனால் கொரியர் சேவைகள்???அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டும் அழைப்பு விடுக்கப்படும்.இரண்டு ரிங் தாண்டி எடுக்காவிட்டால் மேட்டர் ஓவர்!அந்த பார்சல் கொரியர் அலுவலகத்தில் விட்டெறியப்படும்(காதல் மன்னன் பட நாயகி போல போன் அடித்த நொடியே எடுக்க வேண்டும்)!அதன்பிறகு அவரவர் சாமர்த்தியம்.இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு டெலிவரி ஹப் எங்கே என்று கண்டுபிடித்து "அய்யா சாமி போனை எடுக்காம போனது என்னோட தப்புதான் சாமி" என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பெற வேண்டும்.
போன் எடுக்க முடியல சாமி!பார்சலை கொடுங்க சாமி!

 
   அதிலும் டெலிவரி ஹப் எங்கே என்று கண்டுபிடிப்பதற்கு வேட்டையாடு விளையாடு ராகவன் லெவலுக்கு யோசித்து-விசாரித்து-ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும்.ஏனெனில் பல கொரியர் நிறுவனங்கள் தங்கள் அலுவலக தொடர்பு எண்ணையோ, முகவரியையோ ,டெலிவரி செய்ய வந்த பிரகஸ்பதி எண்ணையோ கொடுப்பதில்லை.இணையத்தில் தேடினாலும் கிடைப்பது ஒரு டப்பா டோல் ஃப்ரீ எண்தான்.அது எப்போதுமே வேலை செய்யாது.மின்னஞ்சல் முகவரியும் அவ்வாறே!

  

 இங்க ஒரு கொரியர் கம்பெனி இருந்துச்சே?அது எங்க?
.
இப்படியே அந்த குட்டி யானை டயர் மார்க்கை ஃபாலோ பண்ணிக்கிட்டு போ!

    இதுகூட பரவாயில்லை இன்னும் சில கொரியர் நிறுவனங்கள் போனும் செய்யாமல் வீட்டுக்கும் வராமல் "fake delivery updates" என்ற வகையில் ஒவ்வொரு நாளும் காலையில் "Out for delivery " என்றும் இரவில் "Consignee not available" "Door locked" " Consignee dead.Oor singing Alaala Kanda around his body" என்றெல்லாம் வெக்கமே இல்லாமல் போலி அப்டேட்ஸ் கொடுப்பார்கள்.அப்படி வந்தால் மீண்டும் ராகவனாக மாறி அந்த டெலிவரி ஹப் எங்கே என்று தேடி அங்கே போனால் "போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா?தினம் விடாமல் செய்தோம்" என்று வாய் கூசாமல் அடித்து விடுவார்கள்!

     பெரும்பாலான டெலிவரி ஆசாமிகளுக்கு ஒரு முகவரியை சொந்தமாக கண்டுபிடித்து வரும் திறன் சுத்தமாக இல்லை.நாம் தான் போன் வரும்போது இரண்டாவது ரிங்கில் எடுத்து " ஜே பூர்லேந்து சூர்யா பேசறேன்!அந்த சாக்கடையை தாண்டி ஜம்ப் பண்ணி இடதுகை பக்கம் திரும்பி அண்ணாந்து பார்த்து....etc...etc.." என்று உச்ச ஸ்த்யாயில் வழி சொல்ல வேண்டும். சிம்பிளாக அனைத்தையும் கேட்டுவிட்டு "நான் வேற ஏரியாவுல இருக்கேன். அந்தப்பக்கம் நாளைக்கு வரேன்" என்று பதில் அளிப்பார்கள்.மீண்டும் அடுத்தநாள் "ஜே பூர்லேந்து சூர்யா பேசறேன்.... " என்று கத்த வேண்டும்!

 

     பல தபால்கள் மொத்தமாகவே காணாமல் போய்விடும்."எங்களுக்கு தெரியாது.ஆட்டையாம்பட்டி ஆபீசில் கேளுங்கள்..." அப்படி இப்படி என்று வாடிக்கையாளனை பிங்க் பாங் விளையாடுவார்கள்!
   லண்டனில் டாக்சி ஓட்டுநராக மிக கடுமையான சோதனை ஒன்றுண்டு.
The Knowledge என்று அழைக்கப்படும் அந்த பல்வேறு கட்டங்களை கொண்ட தேர்வு முறையில்
 லண்டன் நகரத்தின் அத்தனை சந்து பொந்துகளும் மனப்பாடமாக தெரிந்திருக்கிறதா என்ற சோதனை உண்டு.ஆனால் இங்கே எதற்கும் எந்த சோதனை பரீட்சை கிடையாது!
   ஆனால் மக்களுக்கு எல்லாமே அதிவிரைவாக நடக்க வேண்டுமே!அதனால் தனியார் கொரியர் கொண்டுவரப்பட்டது."தனியார் கிட்ட கொடுத்தாத்தான் வேலை ஒழுங்கா நடக்கும்" என்ற மக்களின் மூட நம்பிக்கை  பொய்த்துப்போனது!
     சமீபத்தில் கூட ஏர் இந்தியா டாடா வசம் ஒப்படைக்கப்பட்டபோது மக்கள் ஆர்கஸம் அடைந்தார்கள்.ஆனால் இப்போ சேவையின் லட்சணம் என்ன? யார் மனதும் புண்பட்டுவிட கூடாது என்று கவனமாக ஒவ்வொரு வாரத்தைக்கு இடையேயும் பன் பட்டர் ஜாம் வைத்து எழுதும் பாடகர்  ஹரீஷ் ராகவேந்திராவே ஏர் இந்தியா அடாவடிக்கு எதிராக பொங்கினார்!
   தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதையெல்லாம் விட அது எப்படி நடத்தப்படுகிறது என்பதே முக்கியம்! நாம் தொடர்ந்து அரசின் தபால் சேவையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.தபால்காரருக்கு இன்றளவும் இந்த வீட்டில் இன்னார் என்ற விவரம் தெரியும் என்பதால் போனை எடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அல்லது அண்டை வீட்டாரிடம் கொடுத்து விடுவார்கள்!
ஆனால் நமக்கு அனுப்பும் ஆசாமி அதை செய்யாமல் நம்மை பாடாய் படுத்தி விடுகிறார். 

   கொரியர் தபால்கள் அதிகம் ஆட்கள் குறைவு என்கிறார்கள்.அப்படியே தேவையான அளவு ஆட்களை போட்டுவிட்டாலும்..... ஏனய்யா ஒரு நாளைக்கு மூன்று முறை சாதா சைக்கிளில் தபால் டெலிவரி ஆன காலங்கள் உண்டு.சைக்கிள் பின் பக்கம் முழுக்க தபால்கள்.அது தவிர கையில் முழுங்கை முழுக்க தபால்கள் அடக்கிக்கொண்டு மிகச்சரியாக டெலிவரி செய்த தபால்க்காரர்கள் உண்டு!இந்த வெட்டி சாக்கு எதுக்கு?

 
   GDP இல் இந்தியா ஜப்பானை மிஞ்சியது ஜெர்மனியை மிஞ்சியது என்றெல்லாம் மார்தட்டி கொள்கிறார்கள்.ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோருக்கு மரியாதை ,கண்ணியமாக நடத்தப்படுதல், நுகர்வோர் உரிமை இதில் எல்லாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மேற்சொன்ன நாடுகளை இந்தியா தாண்டாது!

.

P.S: "டேய் பாசிஸ்டு!முதலாளித்துவ திமிரில் ஆடாதே! ஒரு தொழிலாளி படும்பாடு தெரியுமாடா? " என்றெல்லாம் பொங்கல் வைத்தால் அவர்களுக்கு தொடர்ச்சியாக பத்து கொரியர் தபால் அனுப்பி தொடர் மண்டைக்குடைச்சல் கொடுக்கப்படும்! ஜா.. ..ஆ.. ஆ.. ஆ..க்கிரதை!
 

 

    

Sunday, 26 October 2025

Eureka!

 இண்டர்ஸ்டெல்லர் படத்தில் ஜோசப் கூப்பர் ( Matthew McConaughey) அயல்வெளியில் இருந்து தனது மகள் மர்ஃபி கூப்பருக்கு(Jessica Chastain) தந்தி சமிக்ஞை மூலம் தொடர்பு கொண்டு புவியீர்ப்பு தொடர்பான சமன்பாடுகளை நிறைவு செய்து அதன் மூலம் மனிதகுலத்தை காப்பாற்றுவதற்கான ஒருவழி கிடைப்பதாக 
ஒரு காட்சி வரும்.படத்தில் மிக முக்கிய காட்சிகளுள் ஒன்று.

 
   அதில் ஒரு கைக்கடிகாரத்தின் முட்கள் தந்தி சமிக்ஞைகளுக்கு ஏற்ப துடிப்பதாகவும் மர்ஃபி அவற்றை குறிப்பெடுத்து சாதாரண மொழிக்கு மாற்றம் செய்வதாகவும் வரும்! Eureka!



அந்தக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட கடிகாரம் உண்மையில் அப்போது தயாரிப்பில் இல்லாத ஒரு மாடல். நோலன் விருப்பப்படி ஹாமில்டன் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளில் ஒரு கடிகாரத்தின் முட்கள் மற்றொரு கடிகாரத்தின் டயல் என்பதாக ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு prop! அவ்வளவே!
 

   ஆனால் அந்தக்காட்சி கடிகார ஆர்வலர்கள் உட்பட அனைவரிடமும் ஒரு உணர்வெழுச்சியை உண்டாக்கியிருந்தது.
   பொதுவாக ஒரு கடிகார நிறுவனம் இம்மாதிரி வெட்டி ஒட்டப்பட்ட மாடல்களை பொது சந்தையில் விற்க விரும்பாது.ஹாமில்டன் நிறுவனமும் அவ்வாறே பிடிவாதம் செய்தது.பிறகு கடிகார ஆர்வலர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக Hamilton  Khaki Field "Murph" version ஐ அந்த மகள் கதாபாத்திரத்தின் பெயரிலேயே வெளியிட்டது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்பார்களே! அப்படி விற்று தீர்ந்தது.

   அதில் வினாடி முள்ளின் மேல் Eureka என்பதைக்குறிக்கும் தந்தி சமிக்ஞை இடம்பெற்றிருக்கும்.இது 40mm டயல் மாடல்.பிறகு 38mm டயல் மாடலை வெளியிட்டது.ஆனால் அதில் தந்தி சமிக்ஞை இருக்காது.

 
   எப்படி இருந்தாலும் மக்களின் நிற்பந்தத்தால் ஒரு கடிகார நிறுவனம் பணிந்து ஒரு மாடலை வெளியிட்டது பெரிய சாதனை தான்.அந்த மாடல் கடிகாரத்தை எப்போது பார்த்தாலும் ஹான்ஸ்  சிம்மர் அமைத்த அந்த ஆர்கன் பின்னணி இசை(First step OST) தானாக மனதிற்குள் ஒலிக்கும்!  


    இப்போது அந்த மாடலின் பல்வேறு வகையான சிறு மாறுபாடுகளைக்கொண்ட கடிகாரங்களை ஹாமில்டன் அறிமுகம் செய்து வைத்தாலும் (சென்ற வாரம் கூட வெள்ளை நிற டயல் மாடல், ஸ்டீல் பிரேஸ்லெட் மாடல் உள்ளிட்ட மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது) கடிகார ஆர்வலர்கள் மத்தியில் அந்த அசல் 40mm "Eureka" Murph model என்றும் முதன்மை இடத்தை பிடித்திருக்கும்!

    இது இந்தியாவில் கிடைக்காது.அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டும்.சுங்கவரி அது இதுவென்று விலை எகிறிவிடும்!அமெரிக்கா ராஜீவ் தயவிருந்தால் சல்லிசாக வாங்கி விடலாம்!