Showing posts with label ஜெமினி. Show all posts
Showing posts with label ஜெமினி. Show all posts

Tuesday, 15 May 2018

நடிகையர் திலகம்

                         தமிழ் சினிமா உலகுக்கும் தெலுங்கு சினிமா உலகுக்குமான மிகப்பெரும் வித்தியாசமாக ஒன்றை குறிப்பிடலாம்.நான் சொல்லும் தமிழ் சினிமா உலகம் கடந்த பத்து-பதினைந்து ஆண்டுகால கட்டத்தை சார்ந்தது.என்ன வித்தியாசம்னா தெலுங்கு படம்னா "ஆமா!இது கமர்ஷியல் படம்தாய்யா" என்று அழுத்தம் திருத்தமாகவே படமெடுப்பார்கள்.
        ஆனா சமீபகால தமிழ்ப்படங்கள் வணிக சினிமாவா?கலைப்படமா?பேரலல் சினிமாவா? என்பது படத்தை தேங்காய் உடைத்து துவக்குவது முதல் பூசணிக்கா உடைத்து முடித்து,post production, விளம்பரம் செய்து வெளியிட்ட பிறகும் இயக்குனர் துவங்கி படம் பாத்தவர் வரை  எவருக்குமே இது எந்த வகையறா?என்ற குழப்பமே மிஞ்சுகிறது .

             ஒரு கலைஞர் என்பவன் கொந்தளிப்பான மன நிலை கொண்டவர்.9-5 பக்ராக்களுக்கு அவர்களின் unexpected நடத்தைகள் புதிராகவும் அபத்தமாகவுமே தோன்றும்.அதை எதிர்கொள்ள முடியாத சில பக்ராக்கள் அவர் திமிர் பிடித்தவர்!இவர் சரக்கடிப்பவர்!அவர் எவரையுமே மதிக்க மாட்டார்!என்று சாமானியனுக்கான நடத்தை விதிகளை கலைஞன் மேல் திணித்து கீழ்மைப்படுத்தவே முயல்வார்கள்.
              அப்படியான ஒரு கலைஞரின் வாழ்க்கையை மூணு மணி நேர சினிமாவா கொடுப்பது அவ்வளவு சுலபமல்ல.மார்லன் பிராண்டோ வாழ்க்கையை படமாக்குறேன் என்று சில கால கட்டத்தை மட்டும் எடுத்து சில un-official படங்கள் வந்துள்ளன.அது சிறு குவளையால் கடலை அள்ளுவது போன்ற முயற்சிதான்.

               ஒரு கலைஞரின் வாழ்வின் ஒரு பகுதியையோ அல்லது முழு வாழ்க்கையயுமே படமாக எடுக்கலாம்.இரண்டுமே மேற்சொன்ன குவளையால் கடலை அள்ளும் முயற்சிதான்.சம்மந்தப்பட்ட அந்த கலைஞனே தன் வரலாறாக ஒரு படம் எடுத்தாலும் அதிலும் factual errors இருக்கும்.
           இங்கு ஒரு இயக்குனரால் செய்ய முடிவது ஒரு கலைஞரின்  வாழ்க்கையை  ஒருவித outline ஆக  சுட்டிக்காட்டுதல்!ஏன் இப்படி செய்தார்?ஏன் அப்போது அந்த சிக்கலில் இருந்து வெளிவராமல் போனார்!ஏன் அப்படியொரு அபத்தமான முடிவை எடுத்தார்? என்று கேள்விகளையெல்லாம் கேட்டுக்கொண்டிருக்காமல் ஒரு வாழ்க்கையை பதிவு செய்தல்!மேலோட்டமாக இருந்தாலும்  ஆழமாக இருந்தாலும்   பார்வையாளனால் அந்த வாழ்க்கையோடு  தொடர்புபடுத்திக்கொள்ள முடிவதான ஒரு முயற்சியாக இருந்தால் அதுவே வெற்றிதான்!

         
            வணிகரீதியாக ஒரு நடிகையின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்கள்.அதுவும் வாழ்ந்து-வீழ்ந்த ஒரு நடிகை!ரொம்பவும் இருண்மையாக போய்விட கூடாது என்பதற்காக சமந்தா பகுதியையும் சேர்த்திருக்கிறார்கள்(தெலுங்கு ஸ்டைல்).அங்கே சாவித்திரி வீழ வீழ இங்கே சமந்தா கதாபாத்திரம்  திக்குவாய்-சமையல்பத்தி பத்திரிக்கையாளர் என்பதில் இருந்து சரளமாக பேசக்கூடிய- முதல் பக்கத்தில் பத்தி எழுதும்-முக்கிய பத்திரிக்கையாளராக உயர்வதும், தனது காதலை கண்டு கொண்டவராகவும் காட்டப்படுகிறார்.ஒருவித balancing act.
            இதில் பிரதானமாக இருப்பது சாவித்திரி-ஜெமினி காதல்.ஜெமினி மீதான அளவில்லா காதலால் ஏற்கெனவே திருமணமானவர் என்று தெரிந்திருந்தும் அவரை திருமணம் செய்துகொள்கிறார்.பிறகு சாவித்திரியின் வளர்ச்சி பொறுக்காமல் ஜெமினி பொறுமுவது,சில திரைப்படங்களை வாங்கி வெளியிடுவது தொடர்பான சாவித்திரியின் தவறான முடிவுகளை கண்டிப்பது என்று அக்கறை கொண்டவராக இருந்தாலும் ஒருகட்டத்தில் சாவித்திரியின் புகழ் தனது புகழைவிட மிக அதிக அளவில் போய்விட்டது அவரை கடுப்பேற்றுகிறது.

         வேறொரு பெண்ணுடன் உறவு கொள்வதை சாவித்திரி நேரில் கண்டு  கொதித்து போகிறார்.பிறகு அவர் தனித்து வாழ துவங்குகிறார்.மதுவுக்கு அடிமையாகிறார்,படங்கள் தயாரிக்கிறார் இயக்குகிறார் கடனாளி ஆகிறார்.நிற்க! இது இப்படத்தில் காட்டப்பட்ட காட்சிகள்  சார்ந்து நான் சொல்வது."இது பொய்!நிஜத்தில் அப்படியெல்லாம் இல்லை...what actually happened was... "என்று இஸ்திரி புத்தகத்தை எடுத்துகினு வர வேணாம்.
         
            படத்தில் பாராட்ட வேண்டிய விஷயங்கள் கண்டிப்பா இருக்கு.
இப்பட அறிவிப்பு வந்த சமயத்தில் 'சாவித்திரி கேரக்டர்ல கீர்த்தி சுரேஷா?' என்ற மாபெரும் சந்தேகம்/அதிர்ச்சி எனக்கும் இருந்தது.ஏற்கெனவே கீர்த்தியை ட்ரோல் செய்துகொண்டிருக்கும் இணைய மொண்ணைகளுக்கு இது இன்னும் பெரிய தீனியாக இருக்கும் என்றே நானும் நினைத்தேன்.
        படத்தின் முதல் பாதியில் சில இடங்களில் கீர்த்தியே தெரிந்தாலும் மீதுமுள்ள  படத்தில்  சாவித்திரியை திரையில் கண்ட உணர்வை தந்திருக்கிறார்.அதை மறுக்க முடியாது.கண்டிப்பாக அவரது நடிப்பை  பாராட்டலாம்.இதுபோன்ற இன்னொரு கதாபாத்திரம் அவருக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!பட ஒளிப்பதிவாரின் மாபெரும்  பங்கையும் இதில் மறுக்க முடியாது.

          அப்புறம் எம்ஜிஆர்,சிவாஜி,சந்திரபாபு,நாகேஷ்-தங்கவேலு இவங்கல்லாம் எங்க?என்ற கேள்வியை சிலர் கேட்டிருக்கிறார்கள். இது ஜெமினி-சாவித்திரி உறவையும் அந்த உறவில் விரிசல் ஏற்பட்டதும் சாவித்திரியின் வீழ்ச்சியையும் பேசும் படம்.அப்போ இதில் முக்கியமானது ஜெமினி&சாவித்திரி  கேரக்டர்கள்தான்.ஜெமினி இவ்வளவு ஒல்லியாகவா இருந்தார் என்ற கேள்வி எழுது .அதேபோல ஹீரோவான ஜெமினியை வில்லனாக்கிவிட்டார்களா என்று கேட்கிறார்கள்.ஜெமினி ஒரு கேசனோவா என்பத்தைதாண்டி உண்மையில் ஜெமினி-சாவித்திரி இடையே  என்ன பிரச்சனை என்பதை அறிந்தோர் இதைப்பற்றி விளக்கம் அளித்தால் நன்று. இதை பெரிய விவாதம் ஆக்கி மண்டையை உடைத்துக்கொள்ள நான் தயாரில்லை!

           ஒருவேளை எம்ஜிஆர் சிவாஜி சந்திரபாபு  இவர்களையும் காட்டுறேன்னு ஏதாவது சிஜி/prosthetic அணிந்த நடிகர்களை வரிசையா திரையில் காட்டிக்கொண்டிருந்தால்   தசாவதாரம் பாத்த எபெக்டே மிஞ்சியிருக்கும்.தசா படம் பாத்துகினு இருந்தப்போ ஒவ்வொரு கமலாக prosthetic மாட்டிக்கொண்டு வந்துகொண்டே இருந்தபோது இது படமா?இல்ல மாறுவேட போட்டியா?என்ற கேள்வியே மிஞ்சியது.அந்த கோமாளித்தனத்தை இங்கே செய்யாதது நிம்மதி!
          சாவித்திரி கேரக்டருக்கு கூட இரண்டாம் பாதியில் சில இடங்களில்(எடை மிகவும் அதிகரித்த தருணங்களில்)  மட்டும் prosthetic பயன்படுத்தியுள்ளார்கள்.துல்கருக்கு லேசாக வீங்கிய ஈறுகள் மாதிரியான மேக்கப்பையும் காண முடியுது.அதிகமா பல்செட்டு, உப்பிய கன்னம், பெருத்த வயிறு  என்று போயிருந்தால் அது மாபெரும் திசைதிருப்பும் காரணியாக இருந்திருக்கும்(இந்த ஓவர் மேக்கப்பால் திசைதிருப்பப்படுதல் என்பதற்கு Hitchcock படத்தில் ஆந்தனி ஹாப்கின்ஸ் மேக்கப்பை குறிப்பிடலாம்).
            படத்தில் முக்கியமான குறையாக நான் பார்த்தது இதை தமிழ் தெலுங்கு என்று இருமொழிப்படமாக எடுக்காது போனதுதான்!அதனால் லிப் சின்க் பிரச்சனை இருக்கு;பிரதானமான சிலரை தவிர பிற நடிகர்கள் அன்னியமாக தெரிகிறார்கள்   .அப்புறம் அர்ஜுன் ரெட்டி பெற்ற மாபெரும் வெற்றியால் அப்பட ஜோடிக்கும் இதில் முக்கிய கதாபாத்திரங்களை கட்டாயமாக இடம் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.அப்புறம் இரு கதைகள் பேரலல்ஆக செல்வதால் படத்தின் நீளம் அதிகமானது.

       ரொம்ப படம் முழுக்கவுமே vintage மாதிரி தெரிந்துவிட கூடாது என்பதற்காக சமந்தா-அர்ஜுன் தேவரகொண்டா காட்சிகள் சேர்த்துள்ளார்கள் .பிரம்மானந்தத்தை வைத்து காமெடி காட்சி வைக்கிறேன்; ஐட்டம் டான்ஸ் வைக்கிறேன்(பாகுபலி நியாபகம் இருக்கா?) என்று எதுவும் செய்யாதது பெரிய ஆறுதல் .என்டிஆரை தேவுடா லெவல்லையே இதிலும் மெயின்டெயின் செய்துள்ளார்கள்.

        இது பிரதானமாக ஒரு தெலுங்குப்படம்.சாவித்திரி&கீர்த்தி சுரேஷ்  தமிழில் பிரபலமானவர்கள் என்பதால் இப்படத்தை டப்பிங் செய்துள்ளார்கள்.அப்படி இருக்கும்போது எம்ஜிஆர் ஏன் நாக்கை கடிக்கவில்லை சிவாஜி ஏன் உதட்டை கடிக்கவில்லை என்றெல்லாம் கேள்வி எழுப்புவது அபத்தமாகவே பார்க்கிறேன் ! இருமொழிகளில் அப்படத்தை எடுத்திருந்தா தமிழ் பதிப்பில் எங்கடா எம்சிஆரு?எங்கடா சிவாசி?என்று கேட்டிருக்கலாம்!
                           ஒலக விமர்சகர்கள் இப்படத்தை இடக்கையால் புறந்தள்ளிவிடுவர்.அவர்களோடு எவ்வித தொடர்பும் தவறியும் வைத்துக்கொள்ளாத சாமானிய ரசிகர்கள் தெலுங்கு வாடையை பொறுத்துக்கொண்டால்  இப்படத்தை ரசிக்க வாய்ப்புண்டு.அப்புறம் "தமிழன் ஜெமினியை வில்லனாக்கி தெலுங்கர் சாவித்திரியை அப்பாவியாக்கியுள்ளார்கள்" என்ற நாதக conspiracy ஐ கூட ஒலக விமர்சகர்கள் கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.அவிங்களுக்கும் பொழுதுபோக வேணாமா?
.
டிஸ்கி: இப்படம் தமிழ்நாட்டில் குறைந்த தியேட்டர்களில் மட்டும் ரிலீஸ் ஆகியிருக்கும் போல.ஒரு ஊர்ல நாலு தியேட்டர் இருந்தா அதுல மூணே முக்கா தியேட்டர்களில் விஷாலின் இரும்புத்திரை தொங்குது!மீதமுள்ள தியேட்டர்களில் இதை திரையிட்டுள்ளார்கள்.இப்படத்தை  தமிழக மக்கள் ஏற்பார்களா? என்ற வினியோகஸ்தர்களின் தயக்கமா?அல்லது விஷால் செய்த சேட்டையா?(பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தையும் காணோம்) என்பது தெரியல.எப்படி இருந்தாலும் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம்னு இரட்டை குதிரை சவாரி செய்யுறேன்னுட்டு ரெண்டுக்கும் விஷால் ஆப்படிக்க போவதாகவே எனக்கு தோணுது!