Sunday, 18 May 2025

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 
 Institute of human anatomy - YouTube channel 

Jonathan Bennion

பார்க்க டாம் குரூஸ் தம்பி மாதிரி இருந்தாலும் இவர்  அனாட்டமி வகுப்பு எடுப்பவர் ! எல்கேஜி பிள்ளைகளுக்கு விளக்குவது போல இவர் பிரேதங்களின் ஒவ்வொரு உறுப்பையும் குறுக்காக நெடுக்காக துல்லியமாக வெட்டி விளக்குவதை பார்க்கும்போது இவரது மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று விளங்கும்!

 
    படங்களில் ஒரே  வாள் வீச்சில் எதிராளியின் மொத்த குடலும் தரையில் கொட்டுவது போன்ற காட்சிகளை கேலி செய்கிறார்.இருபது மீட்டர் சிறுகுடல் உள்வயிற்றுபகுதியின் சுவற்றோடு ஒட்டியபடி இருப்பதும் அதை மாணவர்களுக்கு பாடரீதியாக விளக்க வசிதியாக வெளியில் தனியே எடுப்பதற்கே தனக்கு பல மணிநேரங்கள் ஆனதை சொல்கிறார்.
 

இனி சினிமா எடுப்பவர்கள் உடற்கூறியல் சம்மந்தமான ஆலோசனைகளை தன்னை அணுகிப்பெறலாம் என்றும் கிண்டலாக குறிப்பிடுகிறார்.அவ்வளவு முனைப்பாக எத்தனை இயக்குநர்கள் உள்ளார்கள் என்று யோசித்தபடி.......



****************************************


உலக வரலாற்றில் சோவியத்து/ சீனாவுக்கு ஈடுகொடுக்கும் தணிக்கை முறை கொண்ட ஒரு நிறுவனமென்றால் அது ஜெயா டிவி தணிக்கை குழு தான்!
ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மேலும் சரமாரியாக வெட்டி எறிந்து குதறி வைப்பதில் அவர்களுக்கு நிகரில்லை! உதாரணமாக ஹரி இயக்கிய தமிழ் படத்தின் உயிர்நாடியே பிரசாந்த் அவமானப்படுத்தபடுவதும் அதனால் கொந்தளித்து ஆசிஷ் வித்யார்த்தியின் கையை வெட்டுவதும் தான்!ஆனால் ஜெயா குழுமத்தில் அது மொத்தமும் கட்!
    காக்க காக்க படம் கொத்து புரோட்டா போட்ட விதத்தை தனிப்பதிவாக தான் எழுத வேண்டும்! கௌதம் மேனனை ஜெயா டிவியில் காக்க காக்க படம் பார்க்க வைத்து அவரது கொந்தளிப்பை நேரலையாக பதிவு செய்யும் ஆசை நமக்கு எப்போதுமே உண்டு!
ஆனால் இதே குழுமம் நடத்தும் செய்தி சேனலில் வெட்டு குத்து குண்டுவெடிப்பு சாலை விபத்து சிசிடிவி வீடியோக்கள் எவ்வித தணிக்கையும் இல்லாமல் 24x7 காட்டப்படும்!என்ன தணிக்கை கொள்கையோ என்ன மண்ணோ!
இது தவிர சாலையில் வரும் காட்சிகளில் பின்னணியில் கடையின் முகப்பு பேனர்,நிறுவனங்களின் இலச்சினை ஆகியவை பட்டர் பேப்பர் போட்டு மறைக்கப்பட்டு நடுவில் கதாபாத்திரத்தின் முகம் மட்டும் தெரியும்.presbyopia வந்தவன் படம் பாக்குற எபெக்ட்!

 மேலும் வசனத்தில் ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரையோ அது தயாரித்த ஒரு பொருளின் பெயரையோ சொன்னால் அதுவும் மியூட் செய்யப்படும்!
உதாரணமாக பாலக்காட்டு மாதவன் படத்தில் ஷீலா விவேக்கிடம் " மாதவா ஹார்லிக்ஸ் போட்டு கொண்டா" என்று சொல்லும் காட்சியில் ஹார்லிக்ஸ் மியூட் செய்யப்பட்டிருக்கும்!



 இதுக்கு மேல ஒரு அக்கப்போர் சேனலின் இலச்சினை பக்கத்தில் HD என்று சேர்த்து செலவே இல்லாமல் HD சேனல் ஆக்கிய ஒரே சேனல் உலகில் ஜெயா டிவி தான்!

*******************
Bromance :
அண்ணனைத்தேடும் தம்பியின் கதை. அயல்வாசி படம் போலவே இதுவும் ஒரு மெல்லிய முடிச்சை சுற்றி அமைக்கப்பட்ட கதை என்றாலும் அதைவிட இது நமக்கு பிடித்திருந்தது.ஆனால் இவ்வளவு இழுத்திருக்க வேண்டாம்.

     பக்கத்து வீட்டு திருட்டு வைஃபை ரௌட்டரை மாப் மூலம் ஆன் செய்யமுயன்று அதில் ஏற்படும் பின்விளைவுகளை இன்னும் கொஞ்சம் காட்டி இருந்திருக்கலாம். இந்த மாதிரி சின்னச்சின்ன கிறுக்குத்தனங்களை காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமா முன்னணியில் உள்ளது. 

 
     பின்டோவாக வரும் மேத்யூ தாமஸ் ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி கொந்தளிப்பது, அண்ணனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வெறும் ஐநூறு ஜிபே பெற்று தனது Asus Tuf gaming RGB variant லேப்டாப்பை ஹரிஹரசுதன் திறப்பது , அண்ணனும் தம்பியும் ஐபோன் ஆப்பிள் வாட்ச் என்று வைத்திருப்பதை கேள்விப்பட்டு "என்னங்கடா BBD sale ஆ?" என்று ஹரிஹர்சுதன் கேட்பது என்று சுவாரசியம் வாய்ந்த தருணங்கள் உண்டு.ஆனால் படம் நெடுக அது இல்லை!
 RDX படத்தில் ரெண்டு இன்ச் குரூட் ஆயில் மேக்கப்போடு வந்த மஹிமா நம்பியார் இதில் அந்தமாதிரி எந்த விஷபரிட்சை தோற்றத்திலும் வராதது பெரும் ஆறுதல்!



இதுபோல  [( கிங்ஸ் லெவன்)^ n] கலந்த கேக்கை ஷபீர் தின்றுவிட்டு அந்த பாவத்தை கழிக்க(!) திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருக்கும் காட்சி ரணகளம்!அந்தமாதிரி காட்சிகளை தமிழ் சினிமாவில் கனவிலும் நினைக்க முடியாது.அப்படியே வைத்தாலும் படம் ரிலீ....ahem ahem....

  சங்கீத் பிரதாப் ஏற்கெனெவே பிரேமலு படத்தில் முக்கிய பங்காற்றியவர்.யாருக்கும் தெரியாமல் ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்து அது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு திருட்டு முழி அவரது மிகப்பெரும் பலம்!  அஜூ வர்கீஸ் மாதிரி சீரியஸ் வேடங்கள் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.

 

 அந்தப்பக்கம்  கொடுவா பெருமை இந்தப்பக்கம் மலையாளி பெருமை என்று சம்மந்தமே இல்லாமல் நடுவில் வந்த வசனங்கள் ஆயாசத்தை உண்டாக்கியது!
அந்த கூர்க் கதைப்பகுதியே ரொம்பவும் இழுவை! வைஃபை ரௌட்டர் ஆன் செய்யும் காட்சிகள் போல இன்னும் நிறைய வந்திருந்தால் படம் அற்புதமாக இருந்திருக்கும்!

*******************

Wednesday, 14 May 2025

E.D - Extremely Dangerous

 ஒரு வருடத்தில் பலமுறை 'எந்த மொழிப்படமும் பார்க்க வேண்டாம்' என்ற எண்ணம் வரும்.அப்போது மட்டுமே பிரம்மாஸ்திரமாக மலையாள படங்களை பார்ப்பது வழக்கம்.காரணம் எந்த மனநிலையில், எந்த சூழலில் பார்த்தாலும் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் ஒன்றிவிட முடியும்.
   இது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.நபருக்கு நபர் ரசனைகள் மாறலாம்.கடைசியாக பார்த்த மலையாள படம் ஐ ஆம் காதலன்.மிகவும் ரசித்து பார்த்த அந்தப்படத்திற்கு பிறகு வேறு கருப்பு வெள்ளை ஆங்கில படங்களுக்கு சென்று பிறகு மீண்டும் அந்த வெறுமை தோன்ற அதை கடக்க பார்த்ததுதான் இப்படம்!

 
    ஒருவகையில் தெக்கு வடக்கு படத்தின் ஷங்குன்னி கேரக்டரின் இளம் பருவத்தை படமாக எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?இப்படித்தான் இருந்திருக்கும்! 😃
    "ரொம்ப ஓவரா போறமோ? போய் பாப்போம் " என்ற வடிவேலு பேசிய வசனத்தை தெக்கு வடக்கு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.அதையே இப்படத்துக்கும் சொல்லலாம்.என்னங்கடா எல்லைக்கோடு? அழிங்கடா எனும்படி இந்த சென்டிமென்ட் அந்த சென்டிமென்ட் சொந்த சென்டிமென்ட் எல்லாத்தையும் போட்டு துவைத்து விட்டார்கள் 😃

 
     குறிப்பாக அம்மா சென்டிமென்ட் எனும் பர்னிச்சர் உடைக்கப்பட்ட விதம் !
  தலைவர் சூர்ய பார்வை படத்தில் ஒருவனிடம் " டேய் டேய் தாலி சென்டிமென்ட் வச்சுத்தான்டா தமிழ் சினிமாவே ஓடுது!அதுக்கே ஆப்படிச்சிட்டியே " அது மாதிரி இங்கே தமிழ் சினிமா வாத்தியார் ஒருகாலத்தில் சொன்னது போல 'ஸ்டரெச்ச்ர்  கேஸாக' இருந்தாலும் அதுக்கு வென்டிலேட்டர் ஆக இருப்பது சென்டிமென்ட் மட்டும்தான்!அதை இப்படத்தில் மொத்தமாக துவம்சம் செய்து விட்டார்கள்!

     
    தெக்கு வடக்கு படத்தில் மாதவன் (விநாயகன்) இறந்ததும் கையில் டார்ச் எடுத்துக்கொண்டு 😃 ஷங்குன்னி செய்யும் சேட்டைகளை மறக்க முடியுமா? குறிப்பாக "சைஸ்" பார்த்து வாழை இலை அறுக்கும் காட்சி 😃😃😃
   இதிலும் அதுபோன்ற காட்சி என்றால் கடைசியில் வரும் பினு கார் ஓட்டும் காட்சி தான் 😃😃😃




   படத்தின் மையக்கரு கொஞ்சம் பாக்யராஜ் பாணி "சமாச்சாரமாக" இருந்தாலும் பாக்யராஜ் பாணியில் சாஃப்ட் பார்ன் அருகே சென்று விளையாடவில்லை.முழுக்க முழுக்க பினுவின் சைக்கோத்தனம்  தான் படத்தின் மையம் ! அமெரிக்கன் சைக்கோ மாதிரி கேரள சைக்கோ என்ற பட்டம் இவருக்கு பொருந்தும்! 😃
இளம் வயதில் கண்ணெதிரே அண்ணனை பறிகொடுத்த அதிர்ச்சி ஒருபக்கம் பிறகு படித்து முடித்து எவ்வளவு முயன்றும் எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டில் தந்தையிடம் தண்டசோறு பட்டம் வாங்கி தினந்தோறும் வசைக்கு ஆட்பட்டு பிறகு திடீரென்று ஒரு தருணத்தில் தனது தங்கையின் பிறப்பு "ரகசியத்தை" கண்டுபிடித்த பிறகு அப்படியே ஆள் தலைகீழாக மாறி மொத்த குடும்பத்தையும் தனது இரும்புப்பிடியில் கொண்டுவருதல் குறிப்பாக தனது நண்பன் ஒருவன் முதிர்ந்த  தம்பதி குறித்த செய்தி ஒன்றை படிக்கக்கேட்டு பெற்றோர் மீதே சந்தேகப்பட்டு வீட்டில் சிசிடிவி வைத்து தொடர்ந்து கண்காணிப்பது ,மகன் இறந்த அன்று உணவு உண்ணக்கூடாது,மொபைல் பார்க்க கூடாது,டிவி கூடவே கூடாது என்று ஒவ்வொன்றாக பிடுங்கும் காட்சிகள் ரணகளம்!அண்ணா பாணியில் பபுள் கம்மை வாயில் ஸ்டைலாக போட்டுவிட்டு நக்கலாக சிரித்தபடி பெற்றோர்,தங்கை, தங்கை விரும்பும் காதலன்,காதலனின் குடும்பத்தார் என்று எல்லாரையும் போட்டு வாங்கும் காட்சிகள் சிலருக்கு "என்னய்யா இவ்வளவு குரூரமாகவா ஒருத்தன் இருப்பான்" என்று தோன்றக்கூடும்! ஆனால் தெக்கு வடக்கு படத்தை ரசித்தவர்களுக்கு இதை ரசிப்பதில் என்ன பிரச்சனையும் இருக்காது! 😃
இறுதிக்காட்சியில் கார்ல இடமிருக்கு வாங்க என்று சொல்லி எல்லாரையும் தம்மாத்தூண்டு காருக்குள் ஏற்றும் காட்சியே பெரும் அவல நகைச்சுவை தான்.அவர்கள் உட்கார வைக்கப்படுவதை காட்டாமல் உள்ளே அத்தனை பேர் உட்காந்திருப்பதாக காட்டும் போது ஆனந்தம் பட ஶ்ரீவித்யா மாதிரி " கார்ல அவ்வளவு இடம் எங்கடா இருக்கு? சொல்லுங்கடா" என்று கேட்க தோன்றுகிறது!
சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு இம்மாதிரியான சைக்கோ கதாபாத்திரங்கள் அட்டகாசமாக பொருந்தி வருகிறது 😃.


   மேலும் மலையாளிகள் படத்துக்கு தலைப்பு வைக்கும் விதம் வேறு எந்த மொழி சினிமாவும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளது.ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் பிரேமம் படம் வந்த அடுத்த ஆண்டே பிரேதம் என்று டைட்டில் வைத்து அவர்களுக்குள்ளேயே கலாய்த்துக்கொண்டார்கள்
இதற்கு ஈ.டி என்று வைத்துள்ளார்கள் ! எஸ்ட்ரா டீஸன்ட் என்று விளக்கம்  வைத்தாலும் அசல் ஈடி தான் நினைவுக்கு வருது! 😃 ஈடி  அவரை பிடித்தது இவரை பிடித்தது என்று கரடி விட்டாலும் இறுதியில் ஒன்றுமே ஆகாது! ஆனால் இப்படத்தில் தீர்க்கமான  ஒரு முடிவு உண்டு 😃

   

Saturday, 3 May 2025

ஊமை விழிகள்,உதயா & ஊடக அவியல் ஆளர்கள்!

 ஊமை விழிகள் படத்தை பார்த்த அந்த சிறுவன் மனதில் அப்படத்தின் ஒருவிஷயம் ஆழ்மனதில் பதிந்தது! பிற்காலத்தில் இயக்குனர் ஆன அந்த சிறுவன் அதை தன் படத்தில் அந்த விஷயத்தை மையமாக வைத்தான்! ( யோவ் கே.என்.சிவராமன் ஸ்டைல் எல்லாம் அவருக்குத்தான்.நீ சொந்த நடையில் எழுது - கும்மாங்கோ).

 எப்பேர்பட்ட பெரும்புள்ளியாக இருந்தாலும் அவர் செய்த தில்லாலங்கடி வேலையை அச்சு/காட்சி ஊடகம் மூலமாக அம்பலப்படுத்தினால் மக்கள் கொத்திதெழுந்து அந்த புள்ளியை சாய்ப்பார்கள்! 
 

 
 
இந்த utopian சிந்தனையைத்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அமல்படுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
  ஷைன் டாம் சாக்கோ கேரக்டர் நிஜத்தில் வாழ்ந்த ஒரு பெரும்புள்ளியை நினைவுபடுத்தும் விதத்தில் இருந்தாலும் அவரின்  விழுதுகள்  இதை எதிர்த்து போராடுகிறேன் பேர்வழி என்று  படத்திற்கு இலவச  பப்ளிசிட்டி கொடுக்காமல் விட்ட சாதுர்யத்தை வியக்கிறோம்!

 

இதுல தியேட்டரில் ஒரு duel வேறு! எழுபதுகளில் நடக்கும் கதை என்பதை உணர்த்த எல்லாருக்கும் பெரிய கிருதா ஒட்டப்பட்டுள்ளது! எஸ்ஜே.சூர்யா  கதைப்படி சத்யஜித்ரே உதவியாளர் என்று எங்கோ படித்த நியாபகம்.நல்லவேளை அந்த மகாகலைஞன் இந்தக்கொடுமைகளை பார்க்காமல் எப்போதோ போய்விட்டார்!
- அப்புறம் அந்த மக்களின் பெருங்கோபம் பற்றி ஒரு சம்பவம்:
 ஹைதராபாத்தில்  ஒரு பிரபல டிவி சீரியலில் நடித்தவர்கள் பங்குபெற்ற நிகழ்வு ஒன்று நடந்தபோது அந்த சீரியலில் வில்லனாக நடித்தவரை  அந்நிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பெண்மணி அவரை விடாது துரத்தி, அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் கிடைக்கும் தேடிப்பாருங்கள்! மக்களின் கோபம் எல்லாமே நியாயமானது& அது பெரும் சக்தி வாய்ந்தது(!)  என்ற வாதம் அங்கே அடிபட்டு போகிறது!மேலும் இத்தகைய மக்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளல் நன்று!
.
ஜிகர்தண்டா XX படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் தற்செயலாக டிவியில் பார்த்தபோது தோன்றியது! இதுல XXX வரும் என்று வேறு பீடிகை போட்டு பீதியை கிளப்பியுள்ளார்கள்!
(நல்லவேளை முழுப்படத்தையும் பார்த்திருந்தால் ரெண்டு வால்யூம் எழுதியிருப்ப! - கும்மாங்கோ)


*********************

இப்ப இதே வரிசையில் ஊடக அவியல் ஆளர்கள் எல்லாருமே அரசையே அசைத்துப்பார்க்க கூடியவர்கள் அது இதுவென்று ஏகப்பட்ட திரைப்படங்கள் உண்டு!இது எதுவுமே இல்லாமல் ஜாலியா எதார்த்தமாக ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் என்றால் அது உதயா(படத்த ரெண்டா நாளு பாத்து நொந்த கதையை சொல்லிடாத- கும்மாங்கோ) படத்தில் வரும் பிரமிட் நடராஜன் கேரக்டர் தான்!

 

   இதற்கு முன்பே கல்யாண வைபோகம் படத்தில் சுந்தரராஜன் இந்தமாதிரி ஒரு அஜால் குஜால் பத்திரிக்கையாளர் கேரக்டரில் உதவியாளர் படிக்கும் வாசகர் கேள்விகளுக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் காட்சி இருந்தாலும் அதைவிடவும் சிறந்தது இந்தப்படத்தின் காமெடி தான்!

    உதவியாளர் விவேக் வாசகர் கேள்விகளை ஒவ்வொன்றாக படிக்க கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நக்கலாக சிரித்தபடி பிரமிட் நடராஜன் பதிலளிக்கும் காட்சி அட்டகாசம்!

 
   உண்மையான ஊடக அவியல் ஆளர் சித்தரிப்பு என்றால் கண்டிப்பாக இந்த கேரக்டருக்கு விருது கொடுக்கலாம்!

Friday, 21 March 2025

800

 பொதுவாக இந்தமாதிரி வாழ்க்கை வரலாற்று படங்கள் பெரும்பாலும் காண்பவரிடம் அவ்வப்போது மனவெழுச்சி ஏற்படுத்தும் தருணங்களை பிரதானமாக வைத்தே எடுக்கப்படுகின்றன.

 

   பார்வையாளன் படத்தின் மைய கதாபாத்திரத்தின் சமகாலத்தவராக இருந்தால் இயக்குனருக்கு மேலும் சுலபம்.காரணம் அந்த தருணம் நிகழ்ந்த காலத்தை பார்வையாளன் தனது தனிப்பட்ட வாழ்வோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி கொண்டிருப்பான்.அந்தத்தருணங்களை மிகச்சரியாக திரையில் கொண்டுவந்தாலே போதும்!

    இப்படத்தில் அது சாத்தியப்பட்டுள்ளது. முத்தையா முரளீதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு நன்றி.இல்லாவிட்டால் திரையில் யார் முரளிதரன்? யார் ரணதூங்கா? என்று பெருங்குழப்பம் வந்திருக்கும்.


    முரளிதரனாக நடித்த மதுர் மிட்டல் அச்சு அசலாக பொருந்துகிறார்.அதிலும் மிக முக்கியமாக பந்து வீசும் அந்த தொனி - ஒரு தனித்தன்மையான பாணியில் ஓடிவந்து கண்களை அகல விரித்து(இதற்கும் ஒரு காட்சி வருகிறது) மணிக்கட்டை சுழட்டி பந்து வீசும் அத்தனை உடல்மொழியும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.


 

   படத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக  நடந்த கலவரங்கள் காட்டப்படுகின்றன.தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படும் காட்சிகளும் உண்டு .அதற்கு பயந்து முரளியை ஒரு கிறிஸ்தவ கான்வெண்டில் சேர்த்து விடுவதாக படம் செல்கிறது.
  கத்திமேல் நடப்பது போன்றதே இப்படத்தை எடுப்பது! ஒருபக்கம் ரொம்பவும் இலங்கையை விமர்சிக்க கூடாது.அதே நேரம் ரொம்பவும் இருட்டடிப்புச் செய்ய கூடாது.இந்தியாவையும் பகைத்துக்கொள்ள கூடாது என்று சர்வ எச்சரிக்கையாக படத்தை எடுத்துள்ளார்கள் .மேலும் இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்று படங்கள் பார்வையாளனுக்கு ஒருவித நேர்மறை எழுச்சியை கொடுப்பதற்காகவே எடுக்கப்படுகிறது.இதில் ஏன் அந்த கலவரத்தை நுணுக்கமாக காட்டவில்லை?ஏன் இந்த பிரச்சனை குறித்து ஆழமாக பேசவில்லை? என்றெல்லாம் கேட்பதே அபத்தம்.
    

    தற்கால தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கும் மாஸ்டர் ரித்விக்  இந்தப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளான்.தொடர்ந்து இவன் நடித்த ஐந்து படங்கள் நூறு கோடி வசூல் என்கிறார்கள். தொடர்ந்து பப்படங்களாக கொடுத்து வரும்  ஒங்க இவரு இதையெல்லாம் பார்த்து கற்க வேண்டும் 🤪
பய நடிப்புல பின்னிட்டான்!


 
     அர்ஜுனா ரணதூங்கா மட்டுமே பிரதானமாக காட்டப்படுகிறார்.அவர் இலங்கை அரசியலில் முக்கிய பொறுப்பில் சில காலம் முன்பு இருந்ததாக கேள்விப்பட்டதுண்டு .அதன் காரணமாக கூட இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் அப்படி எதுவும் இல்லாவிட்டால் கூட தனது அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸி நாட்டின் நடுவர்கள் பத்திரிகையாளர்கள் விளையாட்டு வீரர்களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் உறுதுணையாக அவருடன் நின்றவர் என்ற வகையில் இந்த படத்தில் எப்படி இருந்தாலும் அவர் பிரதான கேரக்டர் தான்.கிங் ரத்னம் தொப்பை வரையில் ரணதூங்கா கேரக்டரில் பொருந்துகிறார்.

 
    96 உலக கோப்பை வெற்றி காட்டப்படுகிறது.ஈடன் கார்டன் அரை இறுதியில் இந்திய அணி அதன் ரசிகர்களாலேயே எதிர்கொண்ட அவமானங்களை காட்டாமல் மானத்தை காப்பாற்றி உள்ளனர் . ஈடன் கார்டன் கலவர காட்சிகள் இன்னமும் கண்முன் நிற்கிறது!

 
 
 
ஜெயசூர்யா காட்டடி அடித்த ரெண்டு ஷாட்டாவது வச்சிருக்கலாம்.அதேபோல எப்படி முரளிதரன் பந்தை எறிகிறார் என்ற குற்றசாட்டு வந்ததோ அப்படி ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்து அடிக்கிறார் என்று யாரோ கிளப்பி விட்டனர்.ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.
 

 
மேலும் பிற்காலத்தில் சங்ககரா எனும் குறும்புக்கார விக்கெட் கீப்பர் கையில் பந்தே இல்லாமல் ரன் அவுட் செய்வது போல பாவனை செய்து பேட்ஸ்மேன்களை கீழே விழவைத்து  கடுப்பேற்றிய காட்சிகளும் இடம்பெறவில்லை .அதை சேர்த்திருக்கலாம் 😃
 

      ஷேன் வார்ன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பார்க்க மார்க் வா மாதிரி இருந்தார்! (தினத்தந்தியில் மார்க் வாக் என்று எழுதுவார்கள்). கபில் தேவ் சட்டென்று பார்க்க கபில் போலவும் சற்றுநேரம் கூடுதலாக பார்த்தால் கவிதாலயா கிருஷ்ணன் போலவும் இருந்தார்.
 


       தமிழனா? சிங்களனா?சிங்கள ஆதரவு தமிழனா?இந்திய தமிழனா?இலங்கை தமிழனா?புலிகள் ஆதரவு தமிழனா?புலிகள் எதிர்ப்பு தமிழனா?அசல் திறமை கொண்ட சுழற்பந்து வீச்சாளனா?இல்லை தில்லாலங்கடி செய்து பந்தை எறியும் மோசடியா? என்றெல்லாம் வாழ்நாள் முழுக்க இப்படியான ஏடாகூட இடியாப்ப சிக்கல் கொண்ட அடையாளமற்ற ஒரு சூழலில் சிக்கிக்கொண்டவர் முரளி.படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சி வருது.  

 

    தமிழ்ப்பெயர் கொண்டதாலேயே பயிற்சி ஆட்டத்திற்கு மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்காமல் பையில் வெடிகுண்டு என்ற சந்தேகத்தில் வெளியிலேயே இலங்கை இராணுவம் முரளியை முட்டி போட வைப்பதாக ஒரு காட்சியும் வருகிறது.
    மேலும் வாழ்க்கை வரலாற்று படங்கள் என்றாலே ஒரு பத்திரிகையாளர் கேரக்டர் இருக்கும். இதில் நாசர் அந்த கேரக்டரை செய்துள்ளார் .தனது மகன் முரளி போல வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தவர் குண்டு வெடிப்பில் கால்களை இழந்து வாழ்க்கையையும் இழந்த ஒருவனின் தந்தையாக வருகிறார்.சில இடங்களில் படத்தின் தொனிக்கு வெளியே சென்று விடும் காட்சிகளாக இருந்தாலும் சில ஏடாகூட சர்ச்சைகள் விமர்சனங்களை தவிர்க்கவே இத்தகைய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்று புரிந்து கொண்டோம் .

   பாகிஸ்தான் டூருக்கு செல்ல பாதுகாப்பு காரணங்களை சொல்லி இந்தியா மறுக்க நட்புக்கரம் நீட்டுவதாக நினைத்து அனுப்பப்பட்ட இலங்கை விளையாட்டு வீரர்கள் மயிரிழையில் தீவிரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய காட்சிகளும் உண்டு.
 .    
 . முரளிதரன் பந்தை எறிகிறார் என்று கொந்தளித்த அதே ஆஸி ஊடகங்கள் 2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் கிளவுசுக்குள் கோல்ஃப் பந்தை வைத்து அதன் மூலம் 150+ அடித்ததை விவாதிக்கவில்லை.
  2007 2011 இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு வந்தது இலங்கை.2007 இல் மழை இருட்டிக்கொண்டு வந்து எதிரில் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் இலங்கை பேட்டிங் செய்தது.

 

     இந்த படத்தை எதிர்த்த உள்ளூர் போராளிகள் பற்றி பார்ப்போம்.இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று சொன்னது படத்திற்கு மிகப்பெரும் உதவி தான்.அடுத்து என்ன பேச போகிறோம் என்ன செய்ய போகிறோம் என்ற குழப்பத்தில் என்னாச்சு? பாணி முகபாவத்திலேயே வி.சே நடித்திருப்பார்.அதில் கண்டிப்பாக முரளிதரன் தெரிந்திருக்கவே மாட்டார்.



   மேலும் லைகா நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு பிறகு "என்ன மாயமோ மந்திரமோ" மொத்தமாக அடங்கி போனது!எப்ப இங்க இலங்கை பிரச்சனை பெரிதாக ஆதாயம் தராது என்று உணர்ந்தார்களோ அப்போதே அதை கைவிட்டு விட்டார்கள்.ஒருவகையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் "ஆள விட்டதற்கு நன்றி!" என்று நினைத்திருப்பார்கள்.
 

      தான் பந்தை எறியவில்லை  என முரளிதரன் இருமுறை நிரூபித்தது,அம்பயர் நோபால் கொடுத்த வன்மம் (பொதுவாக ஆசிய அணிகளே இம்மாதிரியான குறிவைத்த தாக்குதல்களில் சிக்கியுள்ளன),96 உலகக்கோப்பை வென்ற தருணம்,முரளிதரன் முதன்முதலில் விளையாடிய மேட்ச் ( டெண்டுல்கர் முதலில் விளையாடிய மேட்சை லைவில் பார்த்தது போல இதையும் நாம்  பார்த்துள்ளோம்) இதெல்லாம் நிஜத்தில் நிகழும்போதே நாம் தொடர்ந்து கண்டு வந்ததால் இப்படத்தின் பல தருணங்கள் மிக நெருக்கமாக உணர முடிந்தது.அத்தகைய அனுபவம் இல்லாதவர்கள் கூட கண்டிப்பாக படத்தை ரசிக்கலாம் .கிரிக்கெட் ஆர்வலராக இருப்பது அவசியம்!

       

  

Friday, 7 March 2025

பின்னணியில் நின்றுவிட்ட குரல்கள்

 ஃபெபி மணியின் பெயரை நாம் ஏற்கெனவே முத்து ஆடியோ கேசட்டில் பார்த்திருந்தாலும் முதலில் கண்டுகொண்டது ஒரு முழுப்பாடலில்.காதல் மன்னன் படத்தில் வரும் கன்னிப்பெண்கள் நெஞ்சத்தில் பாடல்தான் அது.யாருய்யா இவ்வளவு ஸ்டைலா பாடி இருக்காங்க என்று கேசட்டை பார்த்தபோது இவரா?ஏற்கெனவே சில பாடல்களில் வரும் சின்ன சின்ன பகுதிகளை பாடியவர் ஆச்சே! என்று தோன்றியது.
Febi Mani - Tanvi Shah

 
    அதற்கு முன்பு  முத்து - கொக்கு சைவ கொக்கு பாட்டில் கோரஸ்,மின்சார கனவில் ஸ்ட்ராபெரி கண்ணே பாடலில் - பழைய பைத்தியம் நானுமில்லை என்று பாடி இருப்பார்.பாரதி கண்ணம்மா சின்னச்சின்ன கண்ணம்மா  அற்புதமாக பாடியிருப்பார்.இடையில் வரும் வீணையும் அவர் குரலும் அட்டகாசமாக ஒத்திசைந்து ஒலிக்கும்!

 

    ஆனால் அதன்பிறகு இந்த அதியற்புத ஸ்டைலான குரலை முழுப்பாடலுக்கு பெரும்பாலும் யாரும் பயன்படுத்தவில்லை.
   பெரும்பாலும் ஹம்மிங் கோரஸ் போன்றவற்றில் மட்டுமே அவர் பெயரை காண முடிந்தது.குறிப்பாக ஏ.ஆர்.ஆர் அதிகமாக இவர் குரலை அவ்வாறு பயன்படுத்தினார்.

   ஜீன்ஸ் படத்தின் தீம் இசையான "நிசரி சா..." என்று அற்புதமாக பாடியிருப்பார்.பிறகு படையப்பாவில் "கிக்கு ஏறுதே" பாடலின் இடையில் "சஜூனானே சஜூனானே" என்று மிக உருக்கமாக  பாடி இருப்பார்.

 

   Dil Se படத்தில் Dil Se Re பாடலின் இறுதியில் அனுபமா(கொஞ்சம் நிலவு புகழ்) & அனுராதா ஶ்ரீராம் பாடி இருப்பார்கள்.அதுவே தமிழில் சந்தோஷ கண்ணீரே பாடலின் இறுதியில் அனுராதா ஶ்ரீராம் மற்றும் ஃபெபி மணி ஆகியோர் பாடி இருப்பார்கள்."பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே" என்று தொடங்கி இரண்டே இரண்டு வரிகள்.

    ஹிந்தி தமிழ் இரண்டிலுமே இன்னும் கொஞ்சம் இவர்கள் பாடி இருக்கலாமே என்று தோன்றும்.இரண்டு பாடல்களிலும் அனுராதா ஶ்ரீராம் குரல் பொருந்தாமல் ஒலிக்கும்.அந்த பாடலையே ஏ.ஆர்.ஆர் ஃபெபி மணி ஆகியோர் பாட ஒரு டூயட் பாடலாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே! என்று தோன்றும்!
 
Annupama


 
ஏ.ஆர்.ஆர் ஹிந்தி தமிழ் என்று இரண்டு மொழிகளில் ஒருசேர இசை அமைத்தால் ஹிந்தி பதிப்பை மட்டுமே கேட்கும் வழக்கம் நமக்குண்டு.ஆனால் இந்த ஒரு பாடலுக்கு மற்றும் விதிவிலக்காக இவர் குரலுக்காக கேட்பதுண்டு.

   
ஹாரிஸ் மாம்ஸ் இவருக்கு சில பாடல்களை பாட கொடுத்தார்.

மஜ்னு ஹரிகோரி போன்சாயி பாடலில் உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள் என்று கோரசாக பாடினாலும் இவர் குரல் தனித்து ஒலிக்கும்.
 

 இவர் குரலை இடைநிரவலாக மட்டுமே அரசாட்சி(இருபது வயசு) &  காக்க காக்க படத்தில் பயன்படுத்தி இருப்பார்.தூது வருமா பாடலில் சுனிதா சாரதி பிரதானமாக பாட "தூது இல்லே" என்று இடையில் பாடுவார்.
Sunitha Sarathy

 

    பிறகு ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஜித்தன் படத்தில் "கோயமுத்தூர் பொண்ணு நீயா" பாடலை ஶ்ரீகாந்துடன் பாடியிருப்பார்.ஆனால் அந்தப்பாடல் அவரது comfort zone க்கு வெளியே வரும் பாடல் என்பதால் அவரது குரல் மிகச்சுமாராக ஒலித்திருக்கும்.
    ஶ்ரீகாந்த் தேவாவை மணமுடித்த கையோடு பாடுவதை நிறுத்திக்கொண்டார்.அவர் பாடுவதை நிறுத்தியது அப்போது வருத்தமாக தெரியாமல் அதன்பிறகு வேறு சில பாடல்களை கேட்கும்போது "இந்தப்பாடலை ஃபெபி பாடியிருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்" என்று தோன்றியது மூன்று பாடல்களை கேட்டபோது.
   1. கஜினி படத்தில் ரஹத்துள்ள பாடல்
   2.அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதை அவர் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றும்.
3. அயன் படத்தில் ஹனி ஹனி பாடல்


இப்படி மிகக்குறுகிய காலத்தில் ஒரு அற்புத குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது தமிழ்த்திரையிசைக்கு இழப்புதான்.அதிலும் அவரை நிறைய முழு பாடல்களுக்கு பாட வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது அதைவிட பெரிய அவலம்.

***************************
தன்வி ஷா :

     இவரும் ஃபெபி போலத்தான்.துண்டு துக்கடா இடைநிரவல்களுக்கு மட்டுமே வருவார்.யுவன் இசையில்தான் அதிகமாக அப்படி பாடியுள்ளார்.ஏ.ஆர்.ஆர் இசையில் வரலாறு படத்தில் இன்னிசை அளபெடைய பாடலில் இடையில் கொஞ்சமாக வந்துபோவார்( இந்தப்பாடல் மூன்று வகையாக வரும்.அதை விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்).

   அதற்கு முன்பே ஆய்த எழுத்து படத்தில் யாக்கை திரி பாடலில் "ஜென்மம் விதை காதல் பழம்" என்று இடையில் பாடி இருப்பார்.

     நமதபிமான ஷ்ரேயா கோஷால் பாடியதாலேயே பல ஆயிரம் முறை கேட்ட பனித்துளி பனித்துளி பாடலின் இடையில் அற்புதமாக ஹம்மிங் செய்திருப்பார்.

 

   என் காதல் சொல்ல நேரமில்லை என்று யுவன் பாடிய பாடலின் இடையே "இவரைத்தவிற எவரும் இந்த மாதிரி ஹம்மிங் கொடுத்திருக்க முடியாது" என்கிற அளவில் பாடியிருப்பார்.
 இறகைப்போலே  அலைகிறேனே பாடலிலும் பின்னணி ஹம்மிங் தான்.

     

 
இதில் பிரச்சனை என்னவென்றால் அவர் ஹம்மிங் இடைநிரவல் கோரஸ் என்று பாடும்போது அற்புதமாக அவரது comfort zone க்குள் அதேநேரம் ஒரே மாதிரியான சட்டகத்தில் அடைக்காமல் பாட வைத்திருப்பார்கள் யுவன் மற்றும் ஏ.ஆர்.ஆர்.

   ஆனால் தனிப்பாடல்கள் என்றால் க்ளீஷே என்று சொல்லத்தக்க வண்ணம் ஒருமாதிரி ஆங்கிலத்தனமாக மட்டுமே பாட வைத்து (ஜில்லென்று ஒரு காதல் படத்தில் அதே வரிகளில் ,சிவாஜி படத்தில் ஸ்டைல், சரோஜாவில் My Life) அவரது குரலின் வேறு பரிணாமங்கள் வெளிப்பட வாய்ப்பில்லாமல் செய்தனர்.
   புதுப்பேட்டை படத்தில் புல் பேசும் பாடல் கொஞ்சம் அந்த சட்டகத்தில் இருந்து வெளியே வந்த பாடல்.தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் அதே வரிகளில் ஆண்ட்ரியாவுடன் பாடியிருப்பார்.ஏற்கெனவே ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தனமான பாடல்களை பாடி வந்ததால்( கண்ணும் கண்ணும் நோக்கியா மாதிரி) அந்த இடத்தில் தன்வியின் தனித்தன்மை அடிபட்டு போனது.
    நாம் விரும்பியது என் காதல் சொல்ல பாடலின் இடையில் அவர் ஹம்மிங் செய்யும் அந்த தொனியில் ஒரு முழுப்பாடல்.அது நடக்கவில்லை.
   ஆனால் ஹிந்தியில்  Pappu can't dance Saala (Jaane Tu ya jaane naa) உள்ளிட்ட பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.ஆனால் பதிவின் தலைப்பில் சொல்லப்பட்ட அந்த கருத்துக்கு வெளியே அது சென்று விடும் என்பதால் அதைப்பற்றி எழுதவில்லை.
   மேலும் தலைப்பை இருவிதமாக அர்த்தம் கொள்ளலாம்.
- தமிழில் இந்த இரு குரல்களையும் இப்போது கேட்க முடியாது.
- பெரும்பாலும் இருவரும் பின்னணியில் ஹம்மிங் கோரஸ் இடைநிரவல் என்றே குறுகிய வட்டத்திற்குள் வைக்கப்பட்டுவிட்டனர்.

Sunday, 2 March 2025

டாக்டர்ஸ்

 அனூஜை பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக ஒரு யூட்யூப் வீடியோவில் பார்த்தது.அதன்பிறகு அவரது சேனலை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.சிறுவயதில் அவர் போட்ட அறிவியல் விளக்க வீடியோக்கள் பார்த்தபோதே ஒரு prodigy என்று தெரிந்தது.அவர் சேனலை தொடர ஆரம்பித்து ஒரு பனிரெண்டு வருடங்கள் இருக்குமா?நினைவில்லை!
Dr.Anuj Pachhel

 

   அவ்வாறே நீட் UG ல பெரும் சாதனை செய்து நாக்பூர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.ஏன் தில்லி எயிம்ஸ் போகவில்லை என்பதையும் விளக்கினார்.பிறகு நீட் UG ஐ விட பல நூறு மடங்கு கடினமான நீட் PG ஐயும் அசால்ட்டாக தேறினார்.உண்மையில் இவருக்கு ஒரு மூளை தானா?இல்லை external hard disc போல ஏகப்பட்ட மூளைகளை அவ்வப்போது thunderbolt கொண்டு கனெக்ட் செய்துகொள்கிறாரா? என்ற சந்தேகம் உண்டு!

   உச்சத்தில் இருக்கும் ஒரு விழுக்காடு நபர்கள் மட்டுமே படிக்க கூடிய நியூரோ சர்ஜரி படிப்பார் என்று பார்த்தால் எம்டி ஜெனரல் மெடிசின் நாக்பூர் GMC லையே சேர்ந்துவிட்டார்.காரணமாக அவர் சொன்னது "மன திருப்திக்காக யூ ட்யூப் சேனல் நடத்துகிறேன். சர்ஜரி/ஆர்த்தோ/நியூரோ என்று போனால் ஒரு நிமிடம் கூட வீணாக்க முடியாது".
 . 
 யாராவது மேலே வந்துவிட்டால் உடனே அவனை கீழ தள்ளி மிதிக்க ஒரு கூட்டம் இருக்கே! அனூஜ் பற்றி இல்லாததும் பொல்லாததும் அடித்துவிட்டு அவர் ஒரு பிராடு என்பதாக ஒரு வெட்டி கூட்டம் கிளம்ப அவர்களை இவர் கேசமாக கூட மதிக்காமல் தன் வேலையை பார்த்து வருகிறார்! வேறொருவராக இருந்தால் சகதியில் இறங்கி குழாயடி சண்டையில் சிக்கி காணாமல் போயிருப்பார்.அந்த முதிர்ச்சி வியக்கத்தக்க ஒன்று!

       அனூஜ் பள்ளியில் படிப்போருக்கு நீட் சம்மந்தமான அத்தனை உதவிகளையும் செய்து வருகிறார்.அதற்கான வீடியோக்களும் அவர் சேனலில் உள்ளது.அவரது இணையதளமும் உள்ளது.காசர் பாணியில் சொல்வதென்றால் "சார்ந்தோர் பயன்படுத்திக்கொள்க"!




  யோவ் இரும்படிக்கிற இடத்தில உனக்கென்ன வேலை? படிப்புக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்??? மேட்டருக்கு வா!- கும்மாங்கோ

.
அதுவும் சரிதான் .  முக்கியமாக நம்ம department டான சினிமா பற்றியும் பேசுகிறார். உலக விமர்சன அக்கப்போர் இல்லை.தான் பார்த்த படங்களில் வரும் மருத்துவம் சம்மந்தமான காட்சிகளில் உள்ள பிழைகள் அபத்தங்கள் நகைச்சுவைகள் என்று சுட்டிக்காட்டும் வீடியோக்கள் உள்ளன .

   ஜெராக்ஸ் கடை அட்லீ எடுத்த ஜவான் படம் பற்றியும் பேசியுள்ளார்(AMBU bags!) .ஆயுஷ்மான் குரானா நடித்த Doctor G படத்தின் அவலத்தையும் சுட்டி காட்டுகிறார்.

 
     டாக்டர் G நாம் பார்க்கவில்லை.ஆனால் அப்படத்தின் ஒன்லைனை படித்தபோது அபத்தத்தின் உச்சம் என்று புரிந்தது. 

 

   ஏனய்யா எம். பி. பி.எஸ் படிக்கும்போதே OBG ஒரு பாடமாக வரும்.அதில் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளுக்கு மட்டும் பாடம் நடத்துவதில்லை.அனாடமி பாடம் வரும். ஃபிசியாலஜி வரும். அப்படி இருக்கையில் எம். பி. பி.எஸ் முடித்த ஒரு மாணவன் OBG முதுகலையில் சேரும்போது அங்கே என்ன பாடம் என்ன வழிமுறைகள் பெண் உடல்கூறு அமைப்பு மற்றும் அது சார்ந்த  மருத்துவ பிரச்சனைகள் எதுவுமே தெரியாமல் போய் முழித்தபடி நிற்கிறார் .அதுதான் படம் என்று அனூஜ் விளக்கியபோது "நல்லவேளை இந்த படத்தை நாம் பார்க்கவில்லை.பார்த்திருந்தால் முனியாண்டி சொல்லும் உவமையான ' கை காலை கட்டி மலக்கிடங்கில் போட்டது போல'த்தான் இருந்திருக்கும்.தப்பித்தோம்" என்று நினைத்துக்கொண்டோம்!
   என்ன படம் இதெல்லாம்?எந்நேரமும் இடுப்புக்கு கீழேயே சிந்திக்கும் எதோ சில தற்குறிகள் சேர்ந்து இந்தக்கதையை சிந்தித்திருக்க வேண்டும்!எஸ்.ஜே.சூர்யா கூட இப்படியெல்லாம் சிந்தித்தது இல்லையேடா!மருத்துவ கண்ணோட்டம் வேறு!சாமானிய கண்ணோட்டம் வேறு என்பது கூட புரியாத மழு மட்டைகள் உருவாக்கிய படம் போல!
************************
இந்த நேரத்தில் இப்படத்தில் நடித்த ஆயிஷ்மான் குரானா பற்றியும் சொல்ல வேண்டும் .அந்தாதூன் பார்த்தபோது ஆயுஷ்மான் வேறொரு உயரத்திற்கு செல்லப்போகிறார் என்று நினைத்தால் நடந்ததோ வேறு!

     கிரேசி மோகன் நாடகங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு தமிழில் பல காமெடி வேடங்கள் செய்த சாம்ஸ் சுவாமிநாதன் நினைவுக்கு வந்தார்.வடநாட்டு சாம்ஸ் ஆயுஷ்மான் குரானா என்று புரிந்தது.


 
  அவர்தான் தொடர்ந்து ஒருபாலின விழைவு கொண்ட கேரக்டர்,பெண் வேட கேரக்டர்,ஆணுக்குள் பெண்ணாக உணரும் கேரக்டர் என்று "அஜால் குஜால் கேரக்டர் என்றால் கூப்பிடு சாம்சை" என்பது எழுதப்படாத விதியாக தமிழ் சினிமாவில் உள்ளது.

 

   ஆயுஷ்மான் படங்களை அந்தாதூனுக்கு பிறகு நாம்  பார்க்கவில்லை.படங்களின் போஸ்டரை பார்த்தே காத தூரம் ஒடிவிடுவோம்.அவரும் வடநாட்டு சாம்சாக ஒருபாலின விழைவு,பெண் வேடம், ஆணுக்குள் பெண் என்பதாக நடித்து வருவதை போஸ்டர் மூலம் புரிந்து கொண்டோம்.What a wasted talent! Go Woke go broke என்பார்கள்.அதுபோல இப்படியே நடிச்சிட்டு இருந்தால் அவர் நிரந்தர காமெடி பீஸாகவே நீடிப்பார்!

    Inception படத்தில் நடித்த Elliot Page இப்படித்தான் woke பாதிப்பில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார் .இப்போது ஒரே புலம்பல் " தன்னை இப்போதும் எல்லோரும் பெண்ணாகவே கருதுகிறார்கள்" என்று.
 

இனி புலம்பி என்ன பலன்?Woke கோஷ்டி வந்தாலே ஆயிரம் மைல் தாண்டி ஓடிவிட வேண்டும் என்பது புரியாமல் சிக்கியவர் இவர் . ஆயுஷ்மான் கூட இதே அளவு தீவிரமாக அல்லாமல் ஆனால் வலுவாக woke கோஷ்டி பிடியில் சிக்கிவிட்டார். இனி மீள்வது கடினம்!

*************************************

அமெரிக்காவில் Gastro surgeon ஆக இருக்கும் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் என்ற Dr.Pal நகைச்சுவை மூலமாகவே சாப்பிடும் உணவு குறித்த ஆரோக்கிய தகவல்கள் மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லி வருபவர்.
 

அவரும் இப்போது அனூஜ் பாணியில் படங்களில் உள்ள மருத்துவ பிழைகளை சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளார்.அந்நியன் படத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டும் வீடியோ இது:

 

இது ஒரு நல்ல ஆரம்பம் தான்.இப்படி கேலி கிண்டல் செய்தாலாவது மருத்துவம் சார்ந்த காட்சிகளில் இயக்குனர்கள்  கூடுதல் முனைப்போடு செயல்பட ஒரு உந்து சக்தியாக இருக்க கூடும்.நாம் சொல்வது புரச்சி புடலங்காய் என்று ஊரை ஏமாற்றாமல் சினிமா துறையில்  தன்னை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்ற முனைப்பு கொண்ட சில அதிசயப்பிறவி இயக்குனர்களை மட்டும்!
  

Thursday, 20 February 2025

Tag?? No it's a Rolex!

 பில்லா படத்தில் பிரபு தனக்கு கீழ் பணிபுரியும்  ஆதித்யாவிடம் இந்த கேள்வியை கேட்பதாக வரும்.இந்த பதிலை கேட்டதும் ஆதித்யா மேல் சந்தேகம் அதிகமாவதாக காட்சி செல்லும்.( "கிஃப்ட்டா கொடுத்தாங்க" என்று ஆதித்யா சமாளிப்பது கண்டு பிரபுவுக்கு வியப்பும் சந்தேகமும் வரும்)
    


சம்பளம் தவிர்த்து வேறு எதோ வழியில் வருமானம் வருகிறது என்பதை வழமையாக 'புது வீடு வாங்கிட்டீங்க போல', 'புது கார் வாங்கிட்டீங்க போல' என்று வைக்காமல் இப்படி புதுமையாக வைத்தது அப்போதே  நமக்கு சற்று இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
              Tissot PRX Chronograph?
 

    காரணம் திரையுலகில் உள்ளவர்களுக்கு இந்த luxury watches hierarchy எல்லாம் தெரிந்தாலும், மிகப்பெரிய luxury watches collection வைத்திருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் தன்னை ஒரு கம்யூனிஸ்ட் போராளி புரட்சியாளன் என்றெல்லாம் காட்டிக்கொள்ளவே விழைவார்கள்(விஜய் சேதுபதி,தனுசு,சூர்யா ,ஆர்.ஜே.பாலாஜி, செராக்ஸ் கடை அட்லீ ஆகிய சில உதாரணங்கள் உண்டு).ஆனால் விஷ்ணுவர்தன் unabashed என்பார்களே!அதுபோல அந்த ரசனையான அறிவை ஒரு காட்சியாக்கியது உண்மையில் அற்புதம்.தன்னை போராளி என்று காட்டிக்கொள்ள சற்றும் விழையாத அஜீத்தையும் பாராட்ட வேண்டும்.அதன்பின்னும் சரி முன்பும் சரி தமிழ் சினிமாவில் வாட்ச் hierarchy சம்மந்தமாக ஒரு காட்சி நாம் பார்க்கவில்லை.
   24 என்ற டுபாக்கூர் படத்தில் ஒரு watch maker கதாபாத்திரம் என்று கூறப்பட்டாலும் அதில் சூர்யா வாட்ச் குறித்த எந்த காத்திரமான உரையாடலும் செய்ய மாட்டார்.விடலைத்தனமாக "basically I am a watchmaker" என்று தேய்ந்து போன ரெக்கார்டாக அறுத்து தள்ளுவார்.இதே watchmaker கேரக்டரை விஷ்ணுவர்தன் இன்னும் nunanced ஆக ரசனையாக காட்டியிருப்பார் என்று தோன்றியது.ஆனால் அதையும் போராளி இமேஜில் இருக்கும் ஈரோ அனுமதிக்க வேண்டுமே!
சூர்யாவிடம் ஏகப்பட்ட luxury watches இருந்தாலும் அந்த அறிவை படத்தில் வைக்காததன் காரணம் தெரிந்ததே!போராளியாக ஃபார்ம் ஆகிட்டா பிறகு அதை அப்படியே மெயின்டெய்ன் செய்ய வேண்டுமே!
  *******************************
Pulp fiction படத்தில் அத்தனை chapter களுமே நன்றாக இருக்கும் என்றாலும் நம்மை கவர்ந்தது Butch Coolidge (ப்ரூஸ் வில்லிஸ்) வரும் பகுதி. அதிலும் குறிப்பாக வாட்ச் மீட்கும் காட்சி!

   சிறுவனான கூலிட்ஜிடம் கேப்டன் கூன்ஸ் (கிறிஸ்டோபர் வால்கென்) ஒரு கோல்ட் வாட்சை மிக நீண்ட போராட்டத்திற்கு எப்படி இவன் கையில் அது கிடைத்துள்ளது என்ற மகிமையை ரொம்பவும் தீவிரமாக விளக்குவார்.தந்தை தந்தைக்கு தந்தை என்று பரம்பரையாக வந்த வாட்ச்.தான் வேலை பார்க்கும் மார்செல்லஸ் என்ற ஈவிறக்கம் இல்லாத தாதாவிடமிருந்து தப்பித்து காதலியுடன் வேறொரு ரகசிய இடத்தில் ஒரு மோட்டலில் தங்கி இருப்பார்.

 

    அப்போதுதான் அந்த வாட்ச் தனது வீட்டிலேயே இருப்பதை உணர்வார்.மீண்டும் தனது வீடு இருக்கும் ஏரியாவுக்குள் நுழைந்தாலே மேலே டிக்கெட் உறுதி என்று தெரிந்தும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஏகப்பட்ட ரத்தக்களரி உதைகள் தாண்டி தனது வீட்டில் அந்த வாட்சை கண்டுபிடித்து அதை அணியும் அந்தத்தருணம் 🫰🫰🫰
   Lancet trench watch என்று அழைக்கப்பட்டாலும் அது ஒரு பாக்கெட் வாட்ச் தான்.அதில் ஸ்ட்ராப் போட்டு கூலிட்ஜ் அணிவதாக கார்சிவிருக்கும்
Tarantino எந்தளவு ரசனையான ஒரு படைப்பாளி என்பதை அந்தக்காட்சி உணர்த்தும்.அந்தக்காட்சியை ஏகப்பட்ட விசில் கைத்தட்டல் பறக்கும் பேப்பர் துண்டுகள் மத்தியில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தம் நமக்கு இப்போதும் உண்டு!


 
  இதுவே தமிழ் சினிமாவாக இருந்திருந்தால்???

" ஆமா தாத்தா காலத்து இத்துப்போன வாட்ச்.அதுக்கு இவ்வளவு ரிஸ்க் எடுக்கணுமா?பேசாம குவாட்டர் அடிச்சிட்டு தூங்குவோம்" என்று "அதிஉன்னத ரசனை"யோடு சொல்லிவிட்டு தூங்குவதாக காட்சி வந்திருக்கும்!

(பிரியாணி குவாட்டர் புரச்சி தவிர நம்மூர் ஈரோக்களுக்கு வேறெதுவும் தெரியாது! - கும்மாங்கோ)

   *************************************

ஜான் விக் படத்தில் ரீவ்ஸ் Carl F Bucherer watch அணிந்திருப்பார்.வழமையான ரோலக்ஸ் ஒமேகா என்றில்லாமல் அது முற்றிலும் புதுமையாக இருந்தது. 
 

ஆனால் ரோலக்ஸ் நிறுவனம் இந்த நிறுவனத்தை வாங்கி விட்டது.இனி எந்த புது மாடலும் வெளியிடப்படாது.ஏற்கனவே Bucherer வைத்திருப்பவர்கள் சர்வீஸ் செய்து கொள்ளலாம்.உண்மையில் ஸ்மார்ட் வாட்ச் என்ற டுபாக்கூர் வாட்ச் வரவால் இம்மாதிரி பாரம்பரிய நிறுவனங்கள் மூடப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது மாபெரும் அவலம்!
   


அதிலும் கடிகாரத்தை டயல் உட்புறமாக கட்டி இருப்பார் ஜான் விக்.காரணம் வெளிப்புறமாக டயல் இருந்தால் ரகசியமாக பல இடங்களில் செல்ல நேரிடும்போது எங்கிருந்தாவது ஒளி பட்டு பிரதிபலித்து இவரை காட்டிக்கொடுத்து விடும் என்பதால்!