Wednesday, 14 May 2025

E.D - Extremely Dangerous

 ஒரு வருடத்தில் பலமுறை 'எந்த மொழிப்படமும் பார்க்க வேண்டாம்' என்ற எண்ணம் வரும்.அப்போது மட்டுமே பிரம்மாஸ்திரமாக மலையாள படங்களை பார்ப்பது வழக்கம்.காரணம் எந்த மனநிலையில், எந்த சூழலில் பார்த்தாலும் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் ஒன்றிவிட முடியும்.
   இது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.நபருக்கு நபர் ரசனைகள் மாறலாம்.கடைசியாக பார்த்த மலையாள படம் ஐ ஆம் காதலன்.மிகவும் ரசித்து பார்த்த அந்தப்படத்திற்கு பிறகு வேறு கருப்பு வெள்ளை ஆங்கில படங்களுக்கு சென்று பிறகு மீண்டும் அந்த வெறுமை தோன்ற அதை கடக்க பார்த்ததுதான் இப்படம்!

 
    ஒருவகையில் தெக்கு வடக்கு படத்தின் ஷங்குன்னி கேரக்டரின் இளம் பருவத்தை படமாக எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?இப்படித்தான் இருந்திருக்கும்! 😃
    "ரொம்ப ஓவரா போறமோ? போய் பாப்போம் " என்ற வடிவேலு பேசிய வசனத்தை தெக்கு வடக்கு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.அதையே இப்படத்துக்கும் சொல்லலாம்.என்னங்கடா எல்லைக்கோடு? அழிங்கடா எனும்படி இந்த சென்டிமென்ட் அந்த சென்டிமென்ட் சொந்த சென்டிமென்ட் எல்லாத்தையும் போட்டு துவைத்து விட்டார்கள் 😃

 
     குறிப்பாக அம்மா சென்டிமென்ட் எனும் பர்னிச்சர் உடைக்கப்பட்ட விதம் !
  தலைவர் சூர்ய பார்வை படத்தில் ஒருவனிடம் " டேய் டேய் தாலி சென்டிமென்ட் வச்சுத்தான்டா தமிழ் சினிமாவே ஓடுது!அதுக்கே ஆப்படிச்சிட்டியே " அது மாதிரி இங்கே தமிழ் சினிமா வாத்தியார் ஒருகாலத்தில் சொன்னது போல 'ஸ்டரெச்ச்ர்  கேஸாக' இருந்தாலும் அதுக்கு வென்டிலேட்டர் ஆக இருப்பது சென்டிமென்ட் மட்டும்தான்!அதை இப்படத்தில் மொத்தமாக துவம்சம் செய்து விட்டார்கள்!

     
    தெக்கு வடக்கு படத்தில் மாதவன் (விநாயகன்) இறந்ததும் கையில் டார்ச் எடுத்துக்கொண்டு 😃 ஷங்குன்னி செய்யும் சேட்டைகளை மறக்க முடியுமா? குறிப்பாக "சைஸ்" பார்த்து வாழை இலை அறுக்கும் காட்சி 😃😃😃
   இதிலும் அதுபோன்ற காட்சி என்றால் கடைசியில் வரும் பினு கார் ஓட்டும் காட்சி தான் 😃😃😃




   படத்தின் மையக்கரு கொஞ்சம் பாக்யராஜ் பாணி "சமாச்சாரமாக" இருந்தாலும் பாக்யராஜ் பாணியில் சாஃப்ட் பார்ன் அருகே சென்று விளையாடவில்லை.முழுக்க முழுக்க பினுவின் சைக்கோத்தனம்  தான் படத்தின் மையம் ! அமெரிக்கன் சைக்கோ மாதிரி கேரள சைக்கோ என்ற பட்டம் இவருக்கு பொருந்தும்! 😃
இளம் வயதில் கண்ணெதிரே அண்ணனை பறிகொடுத்த அதிர்ச்சி ஒருபக்கம் பிறகு படித்து முடித்து எவ்வளவு முயன்றும் எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டில் தந்தையிடம் தண்டசோறு பட்டம் வாங்கி தினந்தோறும் வசைக்கு ஆட்பட்டு பிறகு திடீரென்று ஒரு தருணத்தில் தனது தங்கையின் பிறப்பு "ரகசியத்தை" கண்டுபிடித்த பிறகு அப்படியே ஆள் தலைகீழாக மாறி மொத்த குடும்பத்தையும் தனது இரும்புப்பிடியில் கொண்டுவருதல் குறிப்பாக தனது நண்பன் ஒருவன் முதிர்ந்த  தம்பதி குறித்த செய்தி ஒன்றை படிக்கக்கேட்டு பெற்றோர் மீதே சந்தேகப்பட்டு வீட்டில் சிசிடிவி வைத்து தொடர்ந்து கண்காணிப்பது ,மகன் இறந்த அன்று உணவு உண்ணக்கூடாது,மொபைல் பார்க்க கூடாது,டிவி கூடவே கூடாது என்று ஒவ்வொன்றாக பிடுங்கும் காட்சிகள் ரணகளம்!அண்ணா பாணியில் பபுள் கம்மை வாயில் ஸ்டைலாக போட்டுவிட்டு நக்கலாக சிரித்தபடி பெற்றோர்,தங்கை, தங்கை விரும்பும் காதலன்,காதலனின் குடும்பத்தார் என்று எல்லாரையும் போட்டு வாங்கும் காட்சிகள் சிலருக்கு "என்னய்யா இவ்வளவு குரூரமாகவா ஒருத்தன் இருப்பான்" என்று தோன்றக்கூடும்! ஆனால் தெக்கு வடக்கு படத்தை ரசித்தவர்களுக்கு இதை ரசிப்பதில் என்ன பிரச்சனையும் இருக்காது! 😃
இறுதிக்காட்சியில் கார்ல இடமிருக்கு வாங்க என்று சொல்லி எல்லாரையும் தம்மாத்தூண்டு காருக்குள் ஏற்றும் காட்சியே பெரும் அவல நகைச்சுவை தான்.அவர்கள் உட்கார வைக்கப்படுவதை காட்டாமல் உள்ளே அத்தனை பேர் உட்காந்திருப்பதாக காட்டும் போது ஆனந்தம் பட ஶ்ரீவித்யா மாதிரி " கார்ல அவ்வளவு இடம் எங்கடா இருக்கு? சொல்லுங்கடா" என்று கேட்க தோன்றுகிறது!
சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு இம்மாதிரியான சைக்கோ கதாபாத்திரங்கள் அட்டகாசமாக பொருந்தி வருகிறது 😃.


   மேலும் மலையாளிகள் படத்துக்கு தலைப்பு வைக்கும் விதம் வேறு எந்த மொழி சினிமாவும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளது.ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் பிரேமம் படம் வந்த அடுத்த ஆண்டே பிரேதம் என்று டைட்டில் வைத்து அவர்களுக்குள்ளேயே கலாய்த்துக்கொண்டார்கள்
இதற்கு ஈ.டி என்று வைத்துள்ளார்கள் ! எஸ்ட்ரா டீஸன்ட் என்று விளக்கம்  வைத்தாலும் அசல் ஈடி தான் நினைவுக்கு வருது! 😃 ஈடி  அவரை பிடித்தது இவரை பிடித்தது என்று கரடி விட்டாலும் இறுதியில் ஒன்றுமே ஆகாது! ஆனால் இப்படத்தில் தீர்க்கமான  ஒரு முடிவு உண்டு 😃

   

No comments:

Post a Comment