Sunday, 18 May 2025

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 
 Institute of human anatomy - YouTube channel 

Jonathan Bennion

பார்க்க டாம் குரூஸ் தம்பி மாதிரி இருந்தாலும் இவர்  அனாட்டமி வகுப்பு எடுப்பவர் ! எல்கேஜி பிள்ளைகளுக்கு விளக்குவது போல இவர் பிரேதங்களின் ஒவ்வொரு உறுப்பையும் குறுக்காக நெடுக்காக துல்லியமாக வெட்டி விளக்குவதை பார்க்கும்போது இவரது மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று விளங்கும்!

 
    படங்களில் ஒரே  வாள் வீச்சில் எதிராளியின் மொத்த குடலும் தரையில் கொட்டுவது போன்ற காட்சிகளை கேலி செய்கிறார்.இருபது மீட்டர் சிறுகுடல் உள்வயிற்றுபகுதியின் சுவற்றோடு ஒட்டியபடி இருப்பதும் அதை மாணவர்களுக்கு பாடரீதியாக விளக்க வசிதியாக வெளியில் தனியே எடுப்பதற்கே தனக்கு பல மணிநேரங்கள் ஆனதை சொல்கிறார்.
 

இனி சினிமா எடுப்பவர்கள் உடற்கூறியல் சம்மந்தமான ஆலோசனைகளை தன்னை அணுகிப்பெறலாம் என்றும் கிண்டலாக குறிப்பிடுகிறார்.அவ்வளவு முனைப்பாக எத்தனை இயக்குநர்கள் உள்ளார்கள் என்று யோசித்தபடி.......



****************************************


உலக வரலாற்றில் சோவியத்து/ சீனாவுக்கு ஈடுகொடுக்கும் தணிக்கை முறை கொண்ட ஒரு நிறுவனமென்றால் அது ஜெயா டிவி தணிக்கை குழு தான்!
ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மேலும் சரமாரியாக வெட்டி எறிந்து குதறி வைப்பதில் அவர்களுக்கு நிகரில்லை! உதாரணமாக ஹரி இயக்கிய தமிழ் படத்தின் உயிர்நாடியே பிரசாந்த் அவமானப்படுத்தபடுவதும் அதனால் கொந்தளித்து ஆசிஷ் வித்யார்த்தியின் கையை வெட்டுவதும் தான்!ஆனால் ஜெயா குழுமத்தில் அது மொத்தமும் கட்!
    காக்க காக்க படம் கொத்து புரோட்டா போட்ட விதத்தை தனிப்பதிவாக தான் எழுத வேண்டும்! கௌதம் மேனனை ஜெயா டிவியில் காக்க காக்க படம் பார்க்க வைத்து அவரது கொந்தளிப்பை நேரலையாக பதிவு செய்யும் ஆசை நமக்கு எப்போதுமே உண்டு!
ஆனால் இதே குழுமம் நடத்தும் செய்தி சேனலில் வெட்டு குத்து குண்டுவெடிப்பு சாலை விபத்து சிசிடிவி வீடியோக்கள் எவ்வித தணிக்கையும் இல்லாமல் 24x7 காட்டப்படும்!என்ன தணிக்கை கொள்கையோ என்ன மண்ணோ!
இது தவிர சாலையில் வரும் காட்சிகளில் பின்னணியில் கடையின் முகப்பு பேனர்,நிறுவனங்களின் இலச்சினை ஆகியவை பட்டர் பேப்பர் போட்டு மறைக்கப்பட்டு நடுவில் கதாபாத்திரத்தின் முகம் மட்டும் தெரியும்.presbyopia வந்தவன் படம் பாக்குற எபெக்ட்!

 மேலும் வசனத்தில் ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரையோ அது தயாரித்த ஒரு பொருளின் பெயரையோ சொன்னால் அதுவும் மியூட் செய்யப்படும்!
உதாரணமாக பாலக்காட்டு மாதவன் படத்தில் ஷீலா விவேக்கிடம் " மாதவா ஹார்லிக்ஸ் போட்டு கொண்டா" என்று சொல்லும் காட்சியில் ஹார்லிக்ஸ் மியூட் செய்யப்பட்டிருக்கும்!



 இதுக்கு மேல ஒரு அக்கப்போர் சேனலின் இலச்சினை பக்கத்தில் HD என்று சேர்த்து செலவே இல்லாமல் HD சேனல் ஆக்கிய ஒரே சேனல் உலகில் ஜெயா டிவி தான்!

*******************
Bromance :
அண்ணனைத்தேடும் தம்பியின் கதை. அயல்வாசி படம் போலவே இதுவும் ஒரு மெல்லிய முடிச்சை சுற்றி அமைக்கப்பட்ட கதை என்றாலும் அதைவிட இது நமக்கு பிடித்திருந்தது.ஆனால் இவ்வளவு இழுத்திருக்க வேண்டாம்.

     பக்கத்து வீட்டு திருட்டு வைஃபை ரௌட்டரை மாப் மூலம் ஆன் செய்யமுயன்று அதில் ஏற்படும் பின்விளைவுகளை இன்னும் கொஞ்சம் காட்டி இருந்திருக்கலாம். இந்த மாதிரி சின்னச்சின்ன கிறுக்குத்தனங்களை காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமா முன்னணியில் உள்ளது. 

 
     பின்டோவாக வரும் மேத்யூ தாமஸ் ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி கொந்தளிப்பது, அண்ணனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வெறும் ஐநூறு ஜிபே பெற்று தனது Asus Tuf gaming RGB variant லேப்டாப்பை ஹரிஹரசுதன் திறப்பது , அண்ணனும் தம்பியும் ஐபோன் ஆப்பிள் வாட்ச் என்று வைத்திருப்பதை கேள்விப்பட்டு "என்னங்கடா BBD sale ஆ?" என்று ஹரிஹர்சுதன் கேட்பது என்று சுவாரசியம் வாய்ந்த தருணங்கள் உண்டு.ஆனால் படம் நெடுக அது இல்லை!
 RDX படத்தில் ரெண்டு இன்ச் குரூட் ஆயில் மேக்கப்போடு வந்த மஹிமா நம்பியார் இதில் அந்தமாதிரி எந்த விஷபரிட்சை தோற்றத்திலும் வராதது பெரும் ஆறுதல்!



இதுபோல  [( கிங்ஸ் லெவன்)^ n] கலந்த கேக்கை ஷபீர் தின்றுவிட்டு அந்த பாவத்தை கழிக்க(!) திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருக்கும் காட்சி ரணகளம்!அந்தமாதிரி காட்சிகளை தமிழ் சினிமாவில் கனவிலும் நினைக்க முடியாது.அப்படியே வைத்தாலும் படம் ரிலீ....ahem ahem....

  சங்கீத் பிரதாப் ஏற்கெனெவே பிரேமலு படத்தில் முக்கிய பங்காற்றியவர்.யாருக்கும் தெரியாமல் ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்து அது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு திருட்டு முழி அவரது மிகப்பெரும் பலம்!  அஜூ வர்கீஸ் மாதிரி சீரியஸ் வேடங்கள் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.

 

 அந்தப்பக்கம்  கொடுவா பெருமை இந்தப்பக்கம் மலையாளி பெருமை என்று சம்மந்தமே இல்லாமல் நடுவில் வந்த வசனங்கள் ஆயாசத்தை உண்டாக்கியது!
அந்த கூர்க் கதைப்பகுதியே ரொம்பவும் இழுவை! வைஃபை ரௌட்டர் ஆன் செய்யும் காட்சிகள் போல இன்னும் நிறைய வந்திருந்தால் படம் அற்புதமாக இருந்திருக்கும்!

*******************

No comments:

Post a Comment