Friday, 9 September 2016

ட்வின் பீக்ஸ் சீஸன் 1(1990-91)



         
               தொலைகாட்சி  சீரிஸ்களுக்கும்  திரைப்படங்களுக்குமான  வேறுபாடுகள்  பல  உண்டென்றாலும்  மிக  முக்கியமானதாக  நான்  கருதுவது  character establishment.2.30-3 மணி  நேர  திரைப்படத்தில்  கதையோடு  தொடர்புள்ள  அனைத்து  கதாபாத்திரங்களையும் அவர்களின்  குணாதிசயங்களையும்   பார்வையாளனுக்கு  அறிமுகம்  செய்துவைத்து  அவர்களுக்குள்ளான  உறவு  போன்றவைகளையும்  சொல்லிவிட  வேண்டும்(சில திரைப்படங்கள்  அப்படி  சொல்லாமலும்  இருப்பதுண்டு).
         தொலைக்காட்சி  சீரிஸ்களில்  அந்த  நெருக்கடியில்லை.நிதானமாக  போகிற  போக்கில் ஒவ்வொரு  கதாபாத்திரமாக  அறிமுகம்  செய்துவைத்து  அவர்களின் தன்மைகளை  மேலோட்டமாக  அல்லாமல்  ஆழமாக  பதிவு  செய்யமுடியும்.
          லோரா  பால்மர்  என்ற  பெண்  கொல்லப்படுகிறாள்.அதைத்தொடர்ந்து  நடக்கும்  விசாரணையும்  அதையொட்டிய  சம்பவங்களுமே  ட்வின் பீக்ஸ்.
         சாதாரணமாக  ஒரு  கொலை  அதைத்தொடர்ந்த  விசாரணை  துப்பறியும்  வேலைகள்  போன்ற  கதைகளில்  கொலை,வாக்  த க்ரிட்,அட்டாப்சி,டெண்ட்டல்,டி என் ஏ  அது  இதுவென்று  பரபரப்பாக  அடுத்தடுத்த  காட்சிகள்  அமையும் .இதில்  அப்படியில்லை.
          கொலை  அதை ஒட்டிய  விசாரணை  என்பது  காட்டப்பட்டாலும்  அதைத்தாண்டி  ட்வின்  பீக்ஸ்  எனும்  சிறு  நகரத்தில்  வசிக்கும்  மக்கள்;அவர்களின்  வினோதங்கள்  மிக  சுவாரஸ்யமாக  படமாக்கப்பட்டுள்ளது.
           Mindful (ஜென்  நிலை  என்ற  வார்த்தையை  தமிழ் இணையபோராளிகள் க்ளீஷே ஆக்கிவிட்டதால் பயன்படுத்தவில்லை) ஆன  எஃப்.பி.ஐ அதிகாரி டேல் கூப்பர் அற்புதமான பாத்திரப்படைப்பு.டயான்  என்ற  கற்பனை(??!!)  கேரக்டரோடு  தனது  வாய்ஸ்  ரெகார்டரில்  அவ்வப்போது நடக்கும்  நிகழ்வுகளை  பதிவுசெய்துகொண்டே  வருவது;பிளாக்  காஃபி மீதான  அலாதி  அலாதி  பிரியம்;உண்ணும்போது  ஒவ்வொரு வாய்  உணவையும்  அலாதியாக  ரசித்து  உண்பது.எந்தவொரு  நெருக்கடியிலும்  டென்சன்  ஆவதோ  கத்துவதோ  அல்லாமல்  மெல்லிய  சிரிப்புடனேயே  பிரச்னையை  அணுகுவது;கொலை  வழக்கை  விசாரிக்க  வந்த  இடத்திலும்  சுற்றுசூழலை  ரசிப்பது;
     அது  என்ன  மரம்??

என்னவொரு  காற்று?

என  செம  ரகளையான  பாத்திரப்படைப்பு.நடித்த Kyle MacLachlan  ம்  பட்டையை  கிளப்பியிருக்கிறார்.இவர் ஏற்கெனவே டேவிட்  லின்ச் இயக்கிய  Blue Velvet  படத்தில்  நடித்திருப்பது  தெரிந்திருக்கும்.


டேவிட்  லின்ச்  எழுபதுகள் துவங்கி  சில  தியான  முறைகளை  பழகி  வந்ததாக  கேள்விப்பட்டேன்..அதாவது  ஆழ்மனம்  என்பது  கடல்  போலவும்  அதில்  வரும்  ஐடியாக்கள்  மீன்கள்  போலவும்  அவர்  சொல்வதுண்டு..ஆழமான  தியானம்  மூலம்  அந்த  மீன்களை  பிடிப்பதாக  சொல்வார்..

அவ்வப்போது  அவருக்கு வரும் வினோதமான   கனவுகள்(டேவிட்  லின்ச்  படைப்பில்  கனவுகள்  இல்லாமலா!) தனிரகம்.
           அனைத்து  எபிசொடுமே  நன்றாக  இருந்ததென்றாலும் குறிப்பாக  Zen, or the Skill to Catch a Killer எபிஸோடில், யார் குற்றவாளி என்பதை டேல் கூப்பர் கண்டுபிடிக்கும் முறை-"weird"! தொலைவில் ஒரு  பியர் பாட்டிலை  ஒரு  பாறைமீது வைத்துவிட்டு போர்டில் சந்தேக  நபர்களின் பெயர்களை  வரிசையாக  எழுதி ஒவ்வொரு  பெயராக  சத்தமாக  படிக்க   சொல்கிறார்.ஒவ்வொரு  பெயர் வாசிக்கப்ப்படும்போதும்   ஒவ்வொரு  கல்லாக  எடுத்து   அந்த பாட்டிலின்  மீது  வீசுகிறார்.எந்த  பெயர்  சொல்லப்படும்போது கல்  பாட்டிலின் மீது  படுகிறதோ அவர்தான் குற்றவாளி என்பதாக அவர்  நம்புகிறார்!


              பொதுவாகவே  ஒரு  ஆண்  கொல்லப்பட்டால்  அவ்வளவு  பரபரப்பு  உண்டாவதில்லை.அதே  ஒரு  பெண்,  அதிலும்  இளம்பெண்  கொல்லப்பட்டால்  வதந்திகளுக்கும் கதையாடல்களுக்கும் யூகங்களுக்கும்   முடிவே  இருக்காது .இதிலும்  லோரா  பால்மர்  என்ற  மாணவி  கொல்லப்பட்டதும்  பல  யூகங்கள்  கிளம்புகிறது.அந்த  யூகங்களும்  அதையொட்டிய  மர்மங்களும்தான்  கதையை  முன்னகர்த்துகின்றன.

Laura Palmer

                லோரா பால்மர்  சீரிஸ்(சீசன்1)  முழுவதுமே  காட்டப்படுவதில்லை.அவர்  எப்படிப்பட்டவர்?எப்படி  பேசுவார்?எப்படி  நடப்பார்  என்பதெல்லாம்  நமக்கு  தெரிவதில்லை(பிற்சமயத்தில் வேறொரு  டபுள்  அவரைப்போல  உடையணிந்து வந்தாலும்).தொடக்கத்திலேயே  அவர்  பிணம்தான்  காட்டப்படுகிறது. அவர்  எப்படிப்பட்டவர்,அவரின்  ஆளுமை  எத்தகையது  என்பது  அவரின்  நெருங்கிய  நண்பர்களுக்கும்  பெற்றோருக்கும்  ஏன் காதலனுக்குமே (லோரா இறந்தபிறகு அவரது  தோழியிடம் "எனக்கே   தெரியாமல் உன்னைத்தான்  நான்  காதலித்திருக்கிறேன்"..  என்கிறான்) தெரியவில்லை.லோராவை  சுற்றியுள்ள  அந்தவொரு  மர்ம  பிம்பம் அதுதான்  இந்த  மொத்த  கதையின்  அடிநாதமாக  நான்  பார்க்கிறேன்.பல்வேறு  layer  களை  கொண்ட  ஒரு  பெண்ணாகவே  அவர்(அதாவது  அவர்  பிம்பம்)  காட்டப்படுகிறார்.   

 
                அதைத்தவிர்த்து  பல  விசித்திரமான  மக்கள்.இதில்  மிகவும்  ஈர்த்தது  Lucy Moran  தான்.வினோதமான  குரல்,ஹேர்  ஸ்டைல் ஒவ்வொருமுறையும்  ஒரு  அரையோ  பொருளோ  எங்கிருக்கிறது  என்பதை  சளைக்காமல்  விவரிக்கும் விதம்  என  நன்றாக  நடித்துள்ளார்..

Lucy Moran



             Drapes  வடிவமைப்பில்  ஏதாவது  புதிதாக  கண்டுபிடித்துவிட  வேண்டும்  எனத்துடிக்கும்  eccentric ஆன ஒரு மனைவி  கேரக்டர் ;
மகளின்  சவப்பெட்டி  மேல்  படுத்துக்கொண்டு  எழுதுகொள்ள  மறுத்து  கதறுவதும்   பிறகு  புத்தி  கலங்கி பார்ட்டிகளில்  வந்து  சம்மந்தமில்லாமல்  கற்பனையாக  லோராவோடு  டான்ஸ்  ஆடும்  லோராவின்  தந்தை  லீலன்ட்  பால்மர் ;லோராவின்  காதலனாக  அறியப்பட்ட  ஜேம்ஸ்  லோராவின்  mutual  தோழியான  டோன்னாவை  காதலிப்பது ;கையில்  இருக்கும்  மரத்துண்டை  உயிருள்ள  பொருளாக  கருதும்  log lady என்று  ரொம்ப  diversified கதாபாத்திரங்கள்.
     சீரிஸின் மிகப்பெரும் பலம் Angelo Badalamenti ன் இசைதான்.எனக்கு மிகமிக  பிடித்தது  டைட்டில்  இசை..அதனோடு  காட்டப்படும்  சில  (சர்ரியலிச??)காட்சிகள்..பழைய இசை/பாடல்கள் பழங்காலத்து நினைவுகளை  கண்முன்  கொண்டுவருவதும்..புது  பாடல்கள்  சமீபத்திய  நினைவுகளை  ஞாபகப்படுத்துவதும்  இயல்பு.ஆனால்  இந்த  இசை  சமீபத்திய  ஒரு  நிகழ்வினை  தொடர்ந்து  நினைவுபடுத்துகிறது..    
 
            ஜோஸியின் மில்  தீவைக்கப்படுவது;  ஏஜென்ட் கூப்பர்  மர்ம  மனிதனால்  சுடப்படுவது;  
தப்பிக்க  முயலும் ____ கைது  செய்யப்பட்டு  மருத்துவமனையில் அனுமதிப்படுவது..மகளை கொன்ற _____ ஐ  தன்  கையாலேயே  கொல்லும்  லோராவின் தந்தை  என பல   திருப்பங்களோடு சீசன் 1 முடிகிறது.     






Wednesday, 8 June 2016

Porco Rosso(1992)

படத்தைப்பற்றி  பக்கம்பக்கமாக  எழுதுதலோ  குறியீட்டு  ஆய்வோ  செய்யப்போவதில்லை.படம்  பார்க்கும்போது  தோன்றிய  சில  எண்ணங்களின்  பதிவாக  மட்டும்  ....

-  ஒரு  லைவ்  மூவியை  பார்க்கும்போது  ஏதோ  ஒரு நடிகரின்  நடிப்பு  நம்மை  ஈர்க்கும்.லயிக்க  வைக்கும்."ஆகா  இத்தன  நாளா  நாம  இவரை  கண்டுகொள்ளாமல்  விட்டுட்டமே"  என்ற  ஆதங்கம்  பிறக்கும்.உடனே  விக்கிலையோ  IMDB  லையோ   இவர்  நடித்த  வேறு  திரைப்படங்கள்  என்னென்ன?அதில்  சிறந்தவை  எவை?போன்ற  தகவல்களை  பார்த்து  பிற  படங்களையும்  பார்ப்போம்.

-அப்படியாக  இந்தப்படத்தை  பார்த்தபோது  Fio  கதாபாத்திரம்  மிகமிக  ரசனையாக  உருவாக்கப்பட்டுள்ளதை  காண முடிந்தது.உடனே  மனதில்  Fio வாக  நடித்தவர்  வேறென்ன  படங்களில்  நடித்திருக்கிறார்  என்று  பார்க்கவேண்டும்  என்ற  வினோதமான  எண்ணம்  ஒருகணம்  தோன்றி பின்  "ச்சே!இது  அனிமேஷன்  படம்லா!" என்ற சிந்தனை  பிறகு  தோன்றியது.இதுதான்  படத்தின்  இயக்குனரும்  எழுதியவருமான (வரைந்தவர்!)  Hayao Miyazaki ன்  திறனுக்கொரு  சான்று.
Fio


-Miayazaki  பொறுத்தளவில்  கணினி  வரைகலை  எல்லாம்  எவ்வளவோ  முன்னேறிவிட்டாலும்  இன்னமும்  கையால்  ஒவ்வொரு  காட்சியையும்  வரைவதையே  விரும்புபவர்.இவரின் இயக்கத்தில்  வந்த   Spirited Away மிக  பிரபலமான   படம்
Hayao Miyazaki


-முதல் உலகப்போரின் போது விமானப்படையில் இருப்பவர்  Porco Rosso.போரில் இவரின் அனைத்து சகாக்களும் கொல்லப்பட இவர் மட்டும் பிழைக்கிறார்.அந்தக்காட்சி வித்தியாசமான  ஒன்று.அதாவது  போரில்  கொல்லப்பட்ட  இவரின்  சகாக்கள்  அனைவரின்  விமானமும்  மேலுலகம்  நோக்கி  சென்று  கொண்டிருக்க  ஆர்வமிகுதியால் இவரும் அந்த விமானக்கூட்டத்தில் செல்ல முயற்சிக்க சாபத்தால் பன்றியாக மாற்றப்படுகிறார்.

-அனிமேஷன்  படங்கள்  என்றாலே  அது குழந்தைகளுக்கானது  மட்டுமே  என்று  எண்ணும்  "வளர்ந்த  குழந்தைகள்"  பிற  நாட்டைவிட  நம்  நாட்டில்  அதிகம்.அந்தக்குழந்தைகள்  இப்படத்தை  பார்த்தால்  முடிவை  மாற்றிக்கொள்ள  வாய்ப்புண்டு.  ஒரு  சீரியசான  தொனி படம்  முழுக்கவே உண்டு.ஆங்காங்கே  அட்டகாசமான  வசனம்..உதாரணத்திற்கு
"I'd much rather be a pig than a fascist" என்று  போர்கோ  சொல்லும் இடம்.
Porco Rosso


-1920 களின்  இறுதியில்  வந்த  The great Depression  கதைக்களத்தின்  பின்னணியில்  சொல்லப்படுகிறது.அதனால்  விமான  கட்டமைப்பு  யார்டில்  இருக்கும்  ஆண்  ஊழியர்கள்  அனைவரும்  வெளியேறிவிட  முழுக்க  முழுக்க  பெண்களாலேயே  போர்கோவின்  சேதமடைந்த  விமானம்  மறு  உருவாக்கம்  செய்யப்படுகிறது.

-குழந்தைகள்  வன்முறை  பிரியர்கள்  என்பது  அனைவரும்  அறிந்ததே(அதை  நான்தான்  சொன்னேன்-முனியாண்டி).இப்படத்தில்  பள்ளி  குழந்தைகளை  கொள்ளையர்கள்   விமானத்தில்  கடத்திக்கொண்டு  போக  வருகிறார்கள்.அப்போது குழந்தைகள்  செம  ஜாலியாக  "ஹை  நீங்க  எங்கள  கடத்த  போறீங்களா?" என  கேட்பதும்  கடத்தப்பட்டு  விமானத்திற்குள்   இண்டு  இடுக்கெல்லாம்  தொங்கிக்கொண்டும்,  அங்கிருக்கும்  துப்பாக்கி,கையெறி  குண்டு  மிஷின்கன்  இவற்றை  வைத்து  விளையாடும்  காட்சிகள்  சிரிப்பை  வரவைக்கிறது.குறிப்பாக கொள்ளையர்கள்  போர்கோவின்  விமானத்தை  சுடும்  போது  அந்த  மிஷின்  கன்னை  ஜாலியாக  பிடித்துக்கொண்டு  தொங்கும்  காட்சி! :D


-கொரிய  சீன  ஜப்பானிய  படங்களை  ஸ்டார்  மூவிஸ் ,மூவிஸ்  நவ்  போன்ற  சேனல்களில்  காண சகிக்காது .காரணம் அதில்  எரிச்சலூட்டும்  விஷயம்  இங்குலீசு  டப்பிங்தான்.என்னைப்பொறுத்தளவில்  படம்  எந்த  மொழியில்  எடுக்கப்பட்டதோ   அந்த  மொழியில்  பார்ப்பதே  படத்தோடு  ஒன்ற  மிகச்சிறந்த வழி.சப் டைட்டில் பார்க்க  சோம்பேறித்தனம்  படும்  ஆசாமிகள்  பற்றி  நான்  பேசப்போவதில்லை.

-இந்தப்படத்திலும்  இங்குலீசு  audio feed இருந்தாலும்  நான்  பார்த்தது  ஜப்பானிய  ஆடியோவில்தான்.குறிப்பாக  ஜப்பானிய  அனிமேஷன்  படங்களில்  எனக்கு  மிக  மிக  பிடித்தது   பெண்கள் மற்றும் குழந்தைகள்(டப்பிங்)  குரல்கள்.வசனங்களை   மிக  வேகமாக  அவர்கள்  பேசுவதை  கேட்பதே  தனி  ஜாலிதான்.அந்த  ஒரு  தொனி  இங்குலீசு  டப்பிங்கில்  இருப்பதில்லை.

Sunday, 28 February 2016

Sleeper(1973)

படத்தைப்பற்றி  பொதுவாக  எழுதுவதைவிட  அதில்  விவாதிக்கப்பட்ட  சில  விஷயங்களை  முன்வைத்து  ஓரிரு  எண்ணங்களை  பதிவு  செய்யவே  இப்பதிவு.

           ஒரு  கடை  உரிமையாளராக  இருக்கும் மைல்ஸ்  மன்றோ (வுடி  ஆலன்)  ஒரு சிறு அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.  இரநூறு ஆண்டுகள் உறைநிலையில் வைக்கப்பட்டு அதன்பின்  எழுப்பப்படுகிறார்.அங்கே  ஒரு  ஒடுக்குமுறை  ஆட்சி.அதற்கெதிரான  போராட்டம்.....


        இதில்  சில முக்கியமான  காட்சிகளை  தமிழக  அரசியலை  முன்வைத்து  விவாதிக்க  வேண்டியுள்ளது.
        மன்றோவை  அமரவைத்து  இரநூறு  ஆண்டுகளுக்கு  முன்பான  பிரபலங்களின்  புகைப்படங்கள்  காட்டப்படுகிறது.அமெரிக்க  சனாதிபதியாக  இருந்த  நிக்ஸனின்  புகைப்படமும்  காட்டப்படுகிறது.
                    "இவர்  அமெரிக்க  சனாதிபதியாக  இருந்திருக்கிறார்.ஆனால்  அவர்  ஏதோ  பெருந்தவறு  செய்திருந்ததால்  அவர்  பற்றிய  எந்த  தகவலும்  இங்கே  இல்லை.ஸ்டாம்ப்  கூட"..
  மன்றோ: "ஆம்.இவர்  அமெரிக்க  சனாதிபதியாக  இருந்தவர்தான்.இவர்  ஒவ்வொருமுறையும்  வெள்ளை  மாளிகையை  விட்டு  வெளியே  சென்றபோது  சீக்ரட்  சர்வீஸ்  (வெள்ளை  மாளிகையில்  உள்ள) வெள்ளி  பாத்திரங்களை  சரிபார்த்தது"

          கவனியுங்கள்.இப்படம்  வந்தபோது  இப்படிப்பட்ட  ஒரு  வசனம்  பேசப்பட்டபோதும்  நிக்ஸன்தான்  பதவியில்  இருந்துள்ளார்.வாட்டர்கேட்  ஊழல்  பரபரப்பில்  இவ்வசனம்  பேசப்பட்டுள்ளது.

     எனக்கு உடனே  தோன்றிய  கேள்வி.."ஒருவேளை  தமிழகத்தில்  பதவியில்  இருப்பவர்  பற்றியோ  இருந்தவர்  பற்றியோ    ஒரு  சினிமாவில்  நகைச்சுவையாகவோ/சீரியஸாகவோ  ஒரு  வசனத்தை  பேசிவிட  முடியுமா?படம்  ரிலீசாகுமா?அதற்கும்மேல்  பேசிய  நடிகரின்  கதி?வசனம்  எழுதியவர்  கதி?இயக்குனர்  கதி?தயாரிப்பாளர்  கதி?கதியோ  கதி!!!
    
               தவறு  நடந்துவிட்டது..சம்மந்தமே  இல்லாத  ஒரு  போட்டோ  மேலே  இடம்பெற்றுவிட்டது..(அந்த  பயம்  இருக்கட்டும்..ahem  ahem-கும்மாங்கோ ..)
            இப்போது  மேற்கத்திய  நாடுகளில்  இருக்கும்  கருத்து  சுதந்திரம்  பற்றி  பாராட்டும்   அதேநேரம்  பொதுவாகவே  உலகில்  எந்த  ஒரு  அரசியல்  கட்சியோ/ராணுவ  அமைப்போ  நடத்தும்  ஆட்சிகள்  என்பது சகிக்க  முடியாத  கொடூரங்களாகத்தான்  இருந்திருக்கிறது/இருந்துகொண்டிருக்கிறது(சில  விதிவிலக்குகள்  உண்டு).
             இப்படத்தில்   சர்வாதிகாரியாக  இருக்கும்  தலைவரை(தலைவர்னாலே சர்வாதிகாரிதானே?-முனியாண்டி)  ஒரு  எதிர்புரட்சி  குழு  வெடிகுண்டு  வைத்து  கொன்றுவிடுகிறது.அவரின்  மூக்கு  மட்டுமே  மிஞ்சியுள்ள  நிலையில் அனைத்து  விஞ்ஞானிகளும்  அழைக்கப்பட்டு  அந்த  மூக்கை  வைத்து  மீண்டும்  தலைவரை  க்ளோனிங்  முறையில்  உருவாக்க  கேட்டுக்கொள்கிறார்கள்  அதிகாரிகள்.
            செம  காமெடி..  ("கிட்ட  வந்தா  உங்க  தலைவரை  கொன்றுவிடுவேன்"  என்று  மூக்கில்  துப்பாக்கியை  வைத்து  மிரட்டுவது...BANG!)
         



லூனா(டயான் கீட்டன்): புரட்சிக்குழுவின்  தலைவன்  எர்னோ  புரட்சியை  முன்னடத்தி  ஆட்சியை  பிடிக்கப்போகிறான்.
மன்றோ:  ஆறு  மாதம்  கழித்து  எர்னோவின்  மூக்கை  திருடிக்கொண்டிருப்போம்..Political solutions don't work ..It doesn't matter who's up there..they are all  terrible..
               இந்த  சமயத்தில்  எனக்கு  தமிழக  அரசியல்தான்  நினைவுக்கு  வந்தது.அவர்  வந்தால்  தமிழகம்  சுபீட்சமாகிடும்..இவர்  வந்தால்  தேனாறும்  பாலாறும்  ஓடும்...நான்  வந்தால்  ஊத்தாப்பத்தை  ஒழிப்பேன்...என்பதெல்லாம்    வெற்று  வாக்கியங்களாகவே தெரிகிறது(அதானே  உண்மையும்??) .ஒரு  நல்லவர்  தலைமை பதவிக்கு  வந்துவிட்டால்  நாடே  திருந்திடும்  என்பதெல்லாம்  naivety ன்  உச்சம்.
   இதன்பிறகு  வரும்  உரையாடல்...
லூனா:  நீ  அறிவியலை  நம்பவில்லை..அரசியல்  தீர்வுகளை  நம்பவில்லை..கடவுளை  நம்பவில்லை...பின்  எதைத்தான்  நம்புகிறாய்?
மன்றோSex and death - two things that come once in a lifetime... but at least after death, you're not nauseous.
          
 

Friday, 29 January 2016

பாலேரி மாணிக்கம் (2009)

                         தொடர்ந்து  மனிதர்களை  ஈர்ப்பது  குற்ற  செயல்கள் ; குறிப்பாக  கொலைகள்.வாழ்வில்  எந்த  கிரிமினல்  குற்றத்தையும்  செய்யாதவர்களும்  கூட  கொலை  வழக்கு,குற்றம்  சார்ந்த  செய்திகளை  ஆர்வமாக  வாசிப்பதை  காண  முடியும்.புத்தக  விற்பனையிலும்  சரி  திரைப்படங்களானாலும் (சமீபத்திய  படம்  தல்வார்  ஒரு  உதாரணம்) சரி  கொலை  வழக்குகள்  சம்மந்தப்பட்டவை  என்றால்  அவை  கூடுதல்  வரவேற்பை பெறுவதை  நாம்  காண்கிறோம்.
                   சாதாரண  மனிதர்களுக்கே  இப்படியொரு  ஈர்ப்பை  உண்டாக்கும்  கொலை  வழக்குகள்  ஒரு  துப்பறியும்  நிபுணராக    இருக்கும்  ஒருவருக்கு  அதிலும்  அவர்  பிறந்த  அதேநாளில்(அந்த  பிரசவ  காட்சியும் பாலியல்  வன்புணர்வு  காட்சியும் interposed ஆக  காட்டப்பட்டவிதம்  அற்புதம்) கொலை  செய்யப்பட்ட  ஒரு பெண்மணியின்  கொலை  வழக்கு  இனம்  புரியாத  ஒரு  ஈடுபாட்டை  உண்டாக்குவதை  நம்மால்  புரிந்துகொள்ள முடிகிறது.

                               சாதாரணமாக  துப்பறியும்  கதைகள்  என்றாலே  ஒரு  ஃபார்மேட்  உண்டு.ஒருவர்  கொலை  செய்யப்படுவார்.முதலில்  ஒரு  குழு  விசாரிக்கும்.அதன்  திறனின்மையால்  வழக்கு  வேறொரு  அமைப்புக்கு  மாற்றப்படும் அல்லது  அத்தோடு  முடித்துவைக்கப்பட்டிருக்கும்.பின்னர்   வேறொருவர்   உண்மைகளை  கண்டுபிடிப்பார்.இங்கேயும்  கிட்டத்தட்ட  அதே  போன்ற  லைன்தான்  என்றாலும்  முதல்  குழு  விசாரிக்கப்பட்டதற்கும்  பின்னர் ஹரிதாஸ்(மம்முட்டி) விசாரிப்பதற்குமான  கால  இடைவெளி.கிட்டத்தட்ட  கொலை  நடந்தபோது  வாழ்ந்த  அனைத்து  மனிதர்களுமே  மரித்துவிட்ட  நிலையில்  மீதமிருக்கும்  நபர்களை  விசாரித்து  உண்மையை வெளிக்கொணர்வது  சுலபமல்ல.ஆனால்  இதிலும்  ஒரு பிளஸ்  பாயின்ட்  இருக்கத்தான்  செய்கிறது.கொலை  நடந்த  சமயத்தில்  விசாரிக்கப்பட்ட  நபர்கள் முன்னுக்குப்பின்  முரணாக  பல்வேறு  மிரட்டல்களுக்கு  பயந்து  உண்மையை  திரித்துக்கூறியிருக்கலாம்.ஆனால்  இத்தனை  வருடங்கள்  சென்ற  பிறகு  "பொய்  சொல்லிவிட்டோமே?"  என்ற  எண்ணத்தோடு, இறந்த  அந்தப்பெண்  வாழாமல்  விட்டுசென்ற  வாழ்க்கை இவை  அழுத்தும்போது உண்மையையே  அவர்கள்  விளம்பக்கூடும்.
                ஊடக  வெளிச்சம்  உச்சத்தில்  இருக்கும்  இன்றைய  காலகட்டத்திலும்கூட  பல்வேறு  கொலை  வழக்குகள்  முடிவு  காணப்பட  இயலாமலோ /அதிகார  அழுத்தத்துக்கு,மிரட்டலுக்கு  பயந்து  விசாரிக்கப்படாமலேயே  பாதியில்  விடப்பட்ட  வழக்குகள் பல்லாயிரம் உண்டு.ஊடக  வெளிச்சம்  அதிகமாக  இருந்தாலும்  அதன்  ஆயுட்காலம்  என்பது  அதிகபட்சம்  ஒருவாரமே.அதன்பின்  வேறொரு  செய்தி  அதன்  இடத்தை  ஆக்கிரமித்துக்கொள்ளும்.
               'தாழ்த்தப்பட்டவரின்  பிணத்தை  இந்த  தெருவழியா  கொண்டு  போகக்கூடாது,அவர்களுக்கு  இரட்டைக்குவளை,நகராட்சி  குழாயைக்கூட  அவர்கள்  தொடக்கூடாது'  என்றெல்லாம்  சாதிவெறி  மேலோங்கி இருக்கும் இன்றைய  காலகட்டத்திலேயே  இப்படி  என்றால்  படிப்பறிவே  இல்லாத  சாதீய  நிலப்பிரபுத்துவ  வன்கொடுமைகள்  மேலோங்கி  இருக்கும்  ஒரு  கிராமத்தில்  ஒரு  கொலை வழக்கு  எங்ஙனம்  சரியாக  விசாரிக்கப்பட்டிருக்கும்  என்பதை  விளங்கிக்கொள்ளலாம்.
           
               இதில்  ஒருவிஷயத்தை  கவனிக்க  வேண்டும்.இந்த  கீழ்  சாதி,வேறு  மதத்தை  சார்ந்தவன்,ஏழை போன்ற  வேறுபாடுகள்  எல்லாம்  ஆண்களுக்கே  பொருந்தும்.அதே  தாழ்த்தப்பட்ட  சமூகத்தை  சார்ந்த  இளம்பெண்களுக்கு  அது  பொருந்தாது.அதே  போலத்தான்  ஏழைப்பெண்கள், பிச்சைகாரிகள்,  ஏன்  இறந்த  நடிகையை  சவக்கிடங்கில்  உறவு கொண்ட  சம்பவங்கள்  எல்லாமுண்டு.பெண்கள்  என்றுவந்துவிட்டால்    எந்த  தீட்டோ,இழிவோ    ஆண்களுக்கு கிடையாது.

                இப்படத்தில்  அது  தெளிவாக  சொல்லப்படுகிறது.நிலப்பிரபுத்துவ  ஆதிக்க  சிந்தனை  கொண்ட அகமது  ஹாஜி(அதுவும்  மம்முட்டிதான்)   தன்  தோப்பில்  தேங்காய்  திருடிய  ஒரு  தொழிலாளியை  ஏரில்  பூட்டி  நிலத்தை  உழ  வைக்கிறான்.ஆனால்    வேறொரு  தொழிலாளியின்  மனைவி சீரு(ஸ்வேதா மேனன்) என்று  வரும்போது  அவனுக்கு  எவ்வித  ஏற்றத்தாழ்வும்  தென்படவில்லை.அதற்கும்  ஒரு  எல்லையுண்டு.சீருவுக்கு வயதானபின்  வழக்கம்போல  அவளை  மற்ற  ஆண்  கூலித்தொழிலாளர்களைப்போலத்தான்   இழிவாக   நடத்துகிறான்.
              மேலும்  கம்யூனிஸ்டுகள்  கேரளத்தில்  வேரூன்ற  தொடங்கிய  காலம்;  பின்னர்  ஈ.எம்.எஸ்  ஆட்சி  அமைப்பது  போன்ற  வரலாற்றுப்பின்னணியில் கதை சொல்லப்படுகிறது. கேசவனின் தந்தை  முடிதிருத்தும்  தொழில்  செய்பவராக  இருக்கிறார்.ஆனால் கேசவன்  அத்தொழிலை  செய்ய  மறுக்கிறான்.கம்யூனிஸ்டுகள்  ஆட்சி  வந்தவிட்டதால்  பெரிதொரு  சமூக  மாற்றத்தை  அவன்  எதிர்ப்பார்க்கிறான்.அவன்  மட்டுமல்ல  பல  இளைஞர்கள்  பெரும் எதிர்பார்ப்பை  கொண்டவர்களாக  இருக்கிறார்கள்.ஆனால்  கம்யூனிஸ்ட்  ஆட்சி  அவைகளை  பூர்த்தி  செய்ததா  என்பதை  ஒரு  காட்சியில்  காட்டுகிறார்கள்.
        வயதான  கேசவனிடம் (ஸ்ரீனிவாசன்)  ஹரிதாஸ்  கேட்கிறார்: 
"நீங்கள்  இறைநம்பிக்கை  கொண்டவராக  மாறிவிட்டீர்களா?"
அதற்கு  கேசவன்  "நான்  கம்யூனிஸ்டும்  இல்லை..இறை  நம்பிக்கையாளனும்  இல்லை.நான் ஒரு  முடிதிருத்தும்  தொழிலாளி  மட்டுமே"

            வயதான  கேசவனிடம்  இருப்பது  விரக்தி  மட்டுமே. தான்  மிகப்பெரும்  அளவில்  நம்பிக்கை  வைத்த  இயக்கம்  என்னவிதமான  சமூக  மாற்றத்தை  உண்டாக்கியிருக்கிறது? தனது  எதிர்பார்ப்புக்கும்  நிதர்சனதுக்குமான  இடைவெளி  எவ்வளவு  பெரிதாக  இருக்கிறது? என்பதே  அவரை   பெரும்  விரக்தியாளராக மாற்றிவிட்டது.அவரைப்போன்றே பலப்பல எக்ஸ் காம்ரேடுகளை இன்றும் காண முடியும்.
       தந்தையின்  தொழிலை  தான்  செய்யக்கூடாது  என்ற  வைராக்கியம்  தந்தை  இறந்தபின்  மேல் சாதிக்கார்களால்  உடைக்கப்படுகிறது   
 காம்ரேடுகள் முதன்முதலாக ஆட்சி   பொறுப்பேற்கும்  நாளில்  முடிதிருத்தும்  கடைக்கு  விடுமுறை விடுகிறான் கேசவன் . ஹாஜியின்  அடைக்கலத்தில்  இருக்கும்  நாயர்  சவரம்  செய்யுமாறு  கேசவனை  அழைத்தால்  அவன்  வரமறுக்க  ஹாஜி  அவனை அடித்து   உதைத்து சவரம்  செய்ய  வைக்கிறான்.சக  காம்ரேடுகள்  இதை  பெரிதாக  கண்டுகொள்ளாதது  அவருக்கு    அவநம்பிக்கையின் விதைகளை  விதைக்கிறது.
          
           காம்ரேடு  ஹம்ஸா  ஹாஜியிடம்  கொலை  வழக்கை  மறைக்க  'துவக்கப்பள்ளியை  மேல்நிலைப்பள்ளியாக  மாற்ற  வேண்டும்.அதற்கு  நீங்கள்  பத்து  ஏக்கர்  நிலம்  தரவேண்டும்'  என்று  கேட்டுவாங்கி  பள்ளி  கட்டுகிறார்.கொலையை  மறைக்க உடன்பட்டது  தவறா?அவர்  தனக்காக  எதுவும்   செய்துகொள்ளவில்லையே..பொதுமக்களுக்கான  பள்ளியைத்தானே  கட்டினார்  என்ற  கேள்வியும்  எழுகிறது.கேசவன்  சொல்லும்போது  பெரும் பணக்காரர்கள்  நிலச்சுவான்தார்கள்  மேல்சாதிக்கார்கள்  செய்யும்  தவறுகளை  மறைக்க  அவர்களிடம்  இதுமாதிரி  பல  பொதுமக்களுக்கான  உதவித்திட்டங்கள்  பெறப்பட்டன  என்கிறார்.இப்படி  பல்வேறு  முரண்பாடுகளுக்கிடையேதான்  கேரளத்தில் குறிப்பாக  கேரளா  கிராமங்களில் கம்யூனிஸ்ட் கட்சி  வளர்ந்திருக்கிறது.


             படத்தின்  பலம்  கண்டிப்பாக  மம்முட்டியும்  ஸ்வேதா  மேனனும்தான்.குறிப்பாக  ஹரிதாஸ்  கேரக்டரை  விடவும்  ஹாஜியாக  வரும்  மம்முட்டி  மிளிர்கிறார்.சீருவை  ஆற்றங்கரையில்  கள்ளப்பார்வை  பார்ப்பது;பல  வருடங்கள்  கழித்து  சீருவின்  மருமகள்  மாணிக்கத்தையும்  அதே போல்  பார்ப்பது.சீருவை  அடைய  அவள்  கணவனை  சங்கில்  மிதித்து  கொல்வது ;அதே  சீரு ஒரு பாலியல்  தொழிலாளியாக  மாறி  வயதானபின்  அவளை  கீழ்மையாக  பார்ப்பது;மாணிக்கத்தை  அடைய  நாடகம்  ஏற்பாடு  செய்து  ஊரையே  காலி  செய்யவைப்பது,மாணிக்கத்தின்  கணவனையும்  மாந்த்ரீகத்தில்  உதவ  அழைத்துசெல்ல  வைப்பது  எல்லாவற்றையும் இயல்பான  நடிப்பில்  வெளிப்படுத்தியுள்ளார்.ஸ்வேதா  மேனனும்  கதாபாத்திரத்தில்  சரியாக  பொருந்துகிறார்.ஹாஜியின் மீது  விருப்பம்  கொல்வது கணவன்  கண்முன்னே  கொல்லப்பட்டதும்  கொன்ற  ஹாஜியோடு  உல்லாசமாக  இருப்பது;பின்னர்  பாலியல் தொழில்  செய்வது;  மருமகள்  சீரழிக்கப்பட்டு  கொல்லபட்டாலும்  அதைப்பற்றி  பேசமறுப்பது என்று   நல்லவரா  கெட்டவரா  வரைமுறைக்கு  அப்பாற்பட்டே(படத்தில்  பல  கதாபாத்திரங்கள்  அப்படி  உண்டு) சீரு  கதாபாத்திரம்  அமைந்துள்ளது.

          படத்தின்  குறைகள்  என்றால்   படத்தை  டிஜிட்டல்  கேமராவில்  படமாக்கியுள்ளார்கள்.அது  ஒரு  நாடகத்தன்மையை  அளித்து  படத்தோடு  ஒன்றுவதற்கு  தடையாக  உள்ளது.ஆனாலும்  மம்முட்டியின்  சிறந்த  நடிப்பு  அதையும்  தான்டி  படத்தோடு  ஒன்ற  வைக்கிறது.மற்றொன்று  SPOILER
*************
                          ஹாஜியின்  முதல்  மனைவியின்  மகனான கலீத்  அகமத்(அதுவும்  மம்முட்டி)  கதாபாத்திரம்.அதை  பூடகமாக  சொல்லி  முடித்திருக்கலாம்.ஆனால்  ஏதோ  கமல்  பட  பாதிப்பில்  கொஞ்சம் நாயக  பிம்பத்தோடு   அவரை  அறிமுகப்படுத்துவது ; பின்னர்  வரும்  சம்பவங்கள்  எல்லாம்  மிகையாக  உள்ளது.குறிப்பாக மிக  இயல்பாக  சென்ற  படத்தை  இப்படி  மிகையாக  முடிக்க  வேண்டிய அவசியம்  புரியவில்லை.இருந்தாலும் படம்  நன்றாகவே  இருந்தது.

            
              

Saturday, 3 October 2015

ஒரு ஓடை நதியாகிறது (1983)

                    காலம்  காலமாக  குழந்தைகள்  என்றாலே  நாம்  நமது  மனதில் சில  பிம்பங்களை  சுமந்துவருகிறோம்.
  • பொய்  சொல்ல  மாட்டார்கள்..
  • குழந்தையும்  தெய்வமும்  ஒன்னு(மனுசன  டார்ச்சர்  பண்றதுலையா  உதயா?-முனியாண்டி)
  • கள்ளம்  கபடமற்றவர்கள் 
  • உள்ளொன்று  வைத்து  புறமொன்று  பேசாதவர்கள் 
இப்படி  பலப்பல..நம் மனதில்  இருக்கும்  இந்த  முன்முடிவுகளை  குழந்தைகள்  மேல்  திணிக்கிறோம்.அல்லது  இரண்டையும்  ஒப்பிட்டு  பார்த்து  ஏமாற்றமடைகிறோம்.எரிச்சல்  அடைகிறோம்.அது அந்த  உறவில்  சரிசெய்ய முடியா  ஒரு விரிசலை  உண்டுபண்ணி  விடும்.
                    சமூகத்திலும்  சரி  சினிமாவிலும்  சரி  தந்தை  கேரக்டர்  பெரும்பாலும்  மகனால்  வெறுக்கப்படும்  ஒரு  சர்வாதிகாரி  போலத்தான்  பார்க்ப்படுகிறது/சித்தரிக்கப்படுகிறது.காரணம்  மேற்சொன்ன  அந்த  முன்முடிவுகள்!எவ்வித  எதிர்பார்ப்பும்  முன்முடிவுகளும் இல்லாமல்  குழந்தைகளை  அணுகுவதே  சிறந்தது.
                  இந்தப்படம்  கூட  ஒரு  சிறுவனின்  கணிக்க  முடியா  மன  ஓட்டத்தை  சொல்வதாகவே  உள்ளது.
                 பதினெட்டு  வயதானால்  மேஜர்  என்பது  சட்டவிதி.ஆனால்  அதற்குமுன்பே  ஏதோ  ஒரு  தருணத்தில்;  யாரோ  ஆற்றும்  எதிர்வினையில்;  ஏதோ  ஒரு  அனுபவத்தால் குழந்தைத்தனம்  விலகி பெரிய  மனுசத்தனம்  என்று  சொல்லமுடியாவிட்டாலும்  ஓரளவு maturity குழந்தைகளுக்கு  வந்துவிடும்.
                 இப்படத்தில்  அந்தத்தருணம்  மிக  அற்புதமாக  காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தந்தை  பெயர்  தெரியாது  வளரும்  சிறுவன்.அவனின்  தாய்  நோய்வாய்ப்பட்டு  இறந்துபோகிறார்.அவனை  எடுத்து வளர்ப்பது  யார்?என்ற  கேள்வி  வருகிறது.திருமணத்திற்கு  முன்பு    உணர்ச்சி  வேகத்தில் செய்த  செயலின்  விளைவு  இப்போது  சிறுவனாக  நிற்பதை  ரகுவரன்  பார்க்கிறார்.மனைவி  குழந்தை  என்று  செட்டிலாகிவிட்டார்.வேலை  கிடைத்ததேகூட  அந்த  ஏமாற்றப்பட்ட  பெண்ணின்  தந்தையின்  உதவியால்தான்.இவ்விரண்டு  விஷயமும்  அவரின் குற்ற  உணர்ச்சியை  நாளுக்கு  நாள்  அதிரிக்கரிக்கச்செய்கிறது.

               என்னவானாலும்  சரி  மகனை  தானே  வளர்ப்பது  என்று  முடிவெடுத்து  மனைவியிடம் தைரியமாக  சொல்லும்  அந்த  தருணத்தில்தான்  ஒட்டு  கேட்கும்  சிறுவன்  உளவியல்  ரீதியில் பெரியவனாகிறான்(அதைத்தான்  ஒரு  ஓடை  நதியாகிறது  என்று  டைட்டில்  வைத்திருக்கிறார்கள்).
                தான்  தந்தை  வீட்டில்  வளர்ந்தால் அவரது  மனைவிக்கு பெரிய  தர்மசங்கடத்தை  கொடுத்துவிடும்  என்று  வேறொரு  ஊருக்கு  கிளம்புகிறான்.பேருந்து  நிலையத்தில்  அவனை  கண்டுபிடிக்கும் ரகுவரனிடம்  "நான் ஒரு  நல்ல  நிலைக்கு  வந்தபின்  உங்களை  கண்டிப்பாக சந்திக்கிறேன்" என்று  சொல்லி  பெங்களூரு  செல்லும் பேருந்தில் தனியே  கண்ணீர்  மல்க  செல்வதாக  முடிகிறது.அவனுக்கு  தந்தையோடு  இருக்க  விருப்பம்தான்.ஆனால்  தாய்க்கும்  அவரது  குழந்தைக்கும்  இது  பிற்காலத்தில்  பல  பிரச்ச்னனைகளை  உண்டாக்குமே? என்று முதிர்ந்த மனநிலையில்   சிந்தித்து உறுதியான  முடிவெடுக்கிறான்.அது  தன்னைத்தானே  அச்சூழலில்  இருந்து  விளக்கிக்கொள்ளுதல்.ஸோ காலட்  பெரிய  மனிதர்களே  இப்படியாக அடுத்தவர்  உணர்வுகளுக்கு  மதிப்பு  கொடுத்து  முடிவெடுக்காத   நிலையில்  ஒரு  சிறுவன்  இவ்வளவு  மெச்சூரிட்டியோடு  சிந்திப்பதை  ரொம்ப  இயல்பாக  அதேநேரம்  மணிரத்னம்  பாணி  குழந்தைகளைப்போல  ஓவர்  ரியாக்ட்  பண்ணாதவகையில்  காட்சிப்படுத்தியிருப்பார் ஸ்ரீதர்.

                 ரகுவரனை  பொறுத்தளவில்  கொடூர  வில்லத்தனம் என்றாலும்  சரி  மிக  மென்மையான கதாபாத்திரம்(கூட்டுப்புழுக்கள்,ஆஹா,முகவரி...etc.,) இரண்டுக்கும்  இடைப்பட்ட  சம்சாரம்  அது  மின்சாரம்   கதாபாத்திரமானாலும்  சரி  அனாயசமாக  செய்துவிடக்கூடியவர்.இப்படத்திலும் முதலில்  மைனர்  வேலைகள்  செய்வது;பின்னர் சின்ஸியராக வேலை செய்து நல்லநிலைக்கு வருதல்; பிறகு அந்தச்சிறுவனையும் மரணப்படுக்கையில்  இருக்கும்  அவன் தாயையும்   நினைத்து  உருகுதல்  என்று அட்டகாசமாய்  நடித்திருக்கிறார்.அந்த  சிறுவனுக்கு  தமிழ்  தெரியாது  என்று  நினைக்கிறேன்(ஏதோ  ஹிந்தி  படத்தில்  பார்த்ததாக  நினைவு).ஆனாலும்  சரியாக  வாயசைத்து  நன்றாகவே நடித்திருக்கிறான்.

               படத்தின் குறைகள்  இரண்டு.  ஒன்று   ரகுவரனுக்கு  எஸ்.என்.சுரேந்தரின்  டப்பிங் குரல் .அது  மோகனுக்கு அட்டகாசமாய்  பொருந்திய  அளவில்  பாதிகூட  இங்கே பொருந்தவில்லை..ஏன்  ரகுவரனே  மென்மையான  பல  கதாபாத்திரங்கள்  செய்யக்கூடியவர்தானே(கூட்டுப்புழுக்கள்)!அவர்  குரல்  ஒன்றும்  கர்ணகொடூரமானது  இல்லையே!இரண்டு அந்த  சிறுவனுக்கு  ஒரு பெண்ணின் குரலை  டப்பிங்  கொடுக்க  செய்தது.மிகப்பெரிய இயக்குனரான  ஸ்ரீதர்  இதை  எப்படி  கவனிக்காமல்  விட்டார்  என்று  தெரியவில்லை
     (வழக்கம்போல)  படத்தின்  ஆணிவேராக    இசையராஜா  இசை. 

     பி.கு:         ரகுவரன்  ஹீரோவாக  நடித்ததில்லை..வில்லனாக  மட்டுமே  நடித்திருக்கிறார்  என்று  தனுசு  போன்ற  விஷக்கொசுக்கள்  விஷமத்தனமாக  பொய்த்தகவலை  மக்கள் மனதில்  பதிய  வைப்பது கேடுகெட்ட  ஒரு  சூழலை  காட்டுகிறது.அதற்கு  மறுப்பாக கூட  இப்பதிவை  எடுத்துக்கொள்ளலாம்.

Tuesday, 29 September 2015

சாம்ராட்(1997)

                                                         ஒரு படம் வெளியாகும்  முன்பே  அதைப்பார்க்கும் ஆவலைத்தூண்டுவதில் போஸ்டரும்  டிரைலரும்  முக  முக்கிய  பங்காற்றும்.
அவ்வகையில்  இப்படத்தின்  டிரைலர்  கூட  அல்ல  டிரைலரில்  வந்த  ஒருநொடி  காட்சிதான்  இதைப்பார்க்கும்  ஆவலைத்தூண்டியது.ராம்கி கண்ணில்  காண்டாக்ட்  லென்ஸ்  மாட்டும் காட்சி.இதேபோன்றதொரு காட்சி  பிறகு  விஜய்ஆண்டனி  நடித்த  நான்  பட  போஸ்டராகவும் காட்சியாகவும்   வந்தது  அனைவருக்கும்  தெரிந்ததே.
             படத்தின்  கதை   தாய்  தந்தையின் மரணத்திற்கு காரணமானவர்களை  பழிவாங்குதல் என்ற  வழக்கமான  ஒன்றுதான் .மோகன்  நடராஜன்தான்  அதற்கு  காரணம்  என்றாலும்  ஹீரோ அவரை  உடனே  கொல்லாமல்  கொஞ்சம்  கொஞ்சமாக  கொல்கிறான்.காரணம்  மரணம்தான்  சிறந்த  விடுதலை.அதைவிடவும்  கொடுமையான  தண்டனைகள்  உலகில்  உண்டு.இப்படத்தில்  மோ.ந வின்  இரண்டு  மகள்களை  திருமணம்  செய்துகொண்டு  ஏமாற்றி  அதன்மூலம்  மோ.ந வை  ஒவ்வொரு  நொடியும்  சாகடித்தல்  என்பதே  படம்.
               வில்லனை பழிவாங்க  ஹீரோ  பல்வேறு  கெட்டப்புகள் போடுவது என்பது  இதற்குமுன்பும்  கைதியின்  டைரி,சுகமான  ராகங்கள்   போன்ற  பல படங்களில்  வந்துள்ளது.
                 ஹீரோ  படம்  துவங்கியதில்  இருந்தே  வில்லத்தனம்  செய்துவந்தால்  பிற்பகுதியில்  அவர்  ஏன்  அப்படி  ஆனார்?எதற்காக  இவைகளை  செய்கிறார்  என்று  ஒரு  பிளேஸ்பேக்  கண்டிப்பாக  இருக்கும்.அதுமாதிரியான  விளக்கங்கள்  தேவையில்லை  என்பது  என்  கருத்து.காரணம்  மனிதர்கள் சிடுமூஞ்சிகளாக  சேடிஸ்டுகளாக கொலைகாரனாக நெஞ்சழுத்தம் கொண்டவர்களாக   இருப்பதற்கெல்லாம்  பின்னணி  காரணம்/சம்பவங்கள்  இல்லாமலேயே இயல்பாக  வரக்கூடிய  சமாச்சாரங்கள்தான்.மனித மனத்தின்  இயல்பே  தான்  வாழ  எதையும்  செய்யும்  தன்மை கொண்டதே(இதை  நோலன் இன்டர்ஸ்டெல்லார் மேட்  டேமன்  கதாபாத்திரம்  மூலம்  காட்டியிருப்பார்).பொதுநலப்புடலங்காய்  எல்லாம்   மேடைப்பேச்சுகளுக்கு  வேண்டுமானால்  பயன்படலாம்.ஆனால்  மனித  இயல்பு  அதுவல்ல  என்பதை  நாள்தோறும்  செய்தித்தாள்  வாசித்தாலே  தெரிந்துகொள்ள  முடியும்.
                   முதல்  மகளை  ஏமாற்றிவிட்டு  போனவர்  இரண்டாவது  மகளான  வினிதா(போலீசு)வை  ஏமாற்ற  முடிந்ததா?என்பதே  படம்..தனது  குடும்பம்  அழிந்ததற்கு பழிவாங்க  வேண்டும் ..அதற்காக  எதையும் செய்யத்தயாராக  இருக்கும்  குரூர  குணம்,  இடி,மழை  வந்தால்  வலிப்பு  வந்துவிடும்  இயலாமை, முதல்  மகளை  தான்தான்  ஏமாற்றியது  என்று  தெரிந்துகொண்ட  டாக்டரை  கொன்றுவிட்டு  அவர்  தன் பெயரை  ரத்தத்தால்  தரையில் எழுதிவைத்ததை  தனது  விரலை  அறுத்து  அந்த  ரத்தத்தால்  மறைக்கும்  கில்லாடித்தனம் என்று ராம்கி  கேரக்டருக்கு சரியாக  பொருந்தியிருக்கிறார்.குறிப்பாக  முதல்  மகளை  கண்டுபிடிக்கும்  பொறுப்பில்  இருக்கும் வினிதா  உடனேயே  தைரியமாக  விசாரணை  நடக்கும்  இடங்களுக்கு  செல்லுதல்; இவரின்  ப்ரேஸ்லெட்டை  பிணத்திற்கு  அருகில்  வினிதா  எடுத்தவுடன்  தலையை  ஸ்டைலாக  கோதுவது   போல கையில் ப்ரேஸ்லெட்  இருப்பதை  காட்டுதல் சுவாரஸ்யமான  காட்சி.
                      நிஜ  வாழ்வின்  சம்பவங்களைத்தான்  சினிமாவாக்குகிறோம்  என்று  சினிமாக்காரர்கள்  சொல்ல ,சினிமாவைப்பார்த்துத்தான்  சமூகம்  கெடுகிறது  என்று மக்கள்  சொல்ல  இந்த  விவாதத்திற்கு  முடிவே  இல்லை.இப்படத்திலும் முதல்  மகளுக்கு  தாலி  கட்டும் விடியோவில்  மறைக்கப்பட்ட  முகம்  யாருடையது? என்று  போலீஸ்  விசாரிக்க ராம்கி  அந்த விடியோகிராபரை  கொன்று  பார்ட் பார்ட்டா  அறுத்து  ரோலர் சூட்கேஸில்  எடுத்துக்கொண்டு  செல்லும்  காட்சி  நாவரசு  கொலை  வழக்கு  உச்சத்தில்  இருந்த  நேரத்தில்  அந்த  பாதிப்பில்  எடுத்துள்ளார்கள்.குறிப்பாக  சூட்கேஸை  தள்ளிக்கொண்டு வரும் வேளையில்  எதிரில்  வினிதா  வர  "சும்மா!  புது  சூட்கேஸ்  பர்சேஸ்"  என்று  சிரித்துக்கொண்டே  சொல்லிவிட்டு  செல்லும்  காட்சி சூப்பரு.
                    மற்றபடி  கிளைமாக்ஸ்  இழுவையாய்  இழுக்கிறார்கள்.அந்த  சண்டைக்காட்சியை  இன்னும்  கொஞ்சம்  சுவாரஸ்யமாய்  க்ரிஸ்பாய்  அமைத்திருக்கலாம்.மற்றபடி  இது  நல்லதொரு  பொழுதுபோக்கு  சினிமா.லாஜிக்  எல்லாம்  பார்க்காமல் ரசிக்கலாம்.ராஜ்  டிஜிட்டலில்  அவ்வப்போது  காண முடியும்.