Sunday, 29 September 2024

Played you like a violin then cut your strings!

 சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்கள் சாதாரண மணித்தன்மை கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்ட படங்கள் சமீபத்தில் ஏராளம்.அதை நோலன் போல ஒரு வரம்புக்குள் நிறுத்தி வைத்துக்கொள்ளுதல் நலம்.இல்லாவிட்டால் சாதாரண படங்களுக்கும் சூப்பர் ஹீரோ படங்களுக்குமான வேறுபாடு இல்லாமல் ஆகிவிடும்.

       சூப்பர் ஹீரோ படங்களின் வில்லன்களுக்கும் அதையே தான் சொல்ல வேண்டும்!உதாரணமாக 2019ல் வந்த ஜோக்கர் படம்!அது உண்மையில் எந்த கதாபாத்திரத்தை சித்தரித்தது என்பது இன்று வரையில் நமக்கு புரியாத புதிர்!

    காரணம் ஜோக்கர் எந்த காரண காரியமும் இல்லாமல் காசு சொத்து பெண் பொன் போன்றவற்றுக்கும் ஆசைப்படாமல் வெறுமனே தொடர் குழப்பங்களை சமூகத்தில் விளைவித்து அதில் ஆனந்தம் காண்பவர்.

   


    I’m like a dog chasing cars, I wouldn’t know what to do if I caught one, you know, I just do…things   என்று The Dark Knight படத்தில் ஜோக்கர் சொல்வதாக வசனம் வரும்.அதுதான் ஜோக்கரின் அசல் தன்மை.

 

   ஆனால் இந்த ஜோக்கர் படத்தில் சுய பச்சாதாபம்,கழிவிரக்கம் இரண்டினால் ரொம்பவும் அவதிப்படும் ஒரு கதாபாத்திரமாக காட்டப்படுகிறார்.
       அதோடு நில்லாமல் ஒரு காலத்தில் தில்லியில் கலகம் செய்த( இன்றும் செய்து வருகிற??) anarchist என்று மீடியாவால் விதந்தோதப்பட்ட அந்த அரசியல் தலைவர் போலவே இந்த ஜோக்கர் கேரக்டரின் செயல்பாடுகள் உள்ளன!

        இது போதாதென்று இப்படத்தின் இரண்டாம் பாகம் வேறு வரப்போகிறது.அதில் ஹார்லி க்வின் ,கோவை சரளா போல " அமெரிக்காவுல மைக்கேல் சாக்சன் கூப்பிடாக ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்பிட்டாக" என்று புலம்புவாரோ என்ற பயம் வேறு இருக்கு!

 

   The Killing Joke  காமிக்ஸ்ல் ஒரு standup comedian ஆகத்துடிக்கும் ஒருவன்& அவனது கர்ப்பிணி மனைவி.இவன் பணத்துக்காக இரு திருடர்களுடன் ஒரு இரசாயன கம்பெனியில் கொள்ளையடிக்க செல்கிறான்.அங்கே உடன் வந்த இருவர் கொல்லப்படுகிறார்கள்.கர்ப்பிணி மனைவி கொல்லப்பட்ட அதிர்ச்சி செய்தியோடு இரசாயன தொட்டியில் விழுந்த மற்றொரு அதிர்ச்சி இரண்டும் சேர்ந்ததும்....snap ....snap...snap....அவ்வளவுதான்.அதற்குப்பிறகு ஜோக்கர் பழைய சம்பவங்களை சொல்லி புலம்புவதாக கதை அதில் இல்லை!
        

          இதையெல்லாம் விட அபத்தம் NR வகை மருந்துகளின் withdrawal effect என்பதே இல்லாமல் ஜோக்கர் இரும்பினால் செய்யப்பட்டவர் போல இருக்கிறார்.ஏழு வகை NR மருந்துகளை ஜோக்கர் சாப்பிட்டு வருவார்.திடீரென்று இலவச மருத்துவ சேவை நிறுத்தப்படும்.அதன் பிறகு அவருக்கு மருந்துகள் கிடைப்பதில்லை.ஆனாலும் எந்த withdrawal effect ஆலும் பாதிக்கப்படாமல் குறி பார்த்து ராபர்ட் டி நிரோ கேரக்டரை சுடுகிறார்.காரின் மீது ஏறி நடனம் போல ஆடுகிறார்.

 

     இந்த மாதிரி NR மருந்துகளை தடாலடியாக நிறுத்தி பிறகு வந்த withdrawal effect இல் இருக்கும் ஒருவர் இது மாதிரி யாராவது வெற்றிகரமாக கார் மீது ஏறி காண்பித்தால்(நடனம் எல்லாம் கூட ஆட வேண்டாம்) அவர்களுக்கு lifetime setllement!!!

இந்தப்பதிவின் தலைப்பு ஆர்க்கம் அசைலம் வீடியோ கேமில் ஜோக்கருடன் batman ஆக கேமை விளையாடுபவர் மோத வேண்டும்.அதில் நாம் தோற்றால் batman இறந்து விழுவார்.அப்போது ஜோக்கர் டைட் குளோசப்பில் நமது முகமருகே வந்து அந்த வசனத்தை சொல்வார்.அவர் சொல்லும் விதம் பிடித்துப்போய் வேண்டுமென்றே பலமுறை பேட்மேன் சாகும்படி விளையாடினோம்! :D
     

Thursday, 26 September 2024

Happy Birthday to me (2024)

 கன்னட சினிமாவோடு நமக்கு பெரிய பரிச்சயம் இருந்ததில்லை.நண்பர்கள் பல சமயங்களில் அப்படங்களை கிண்டல் செய்து கேட்டிருக்கிறோம்.சப்டைட்டில் இல்லாமை ,நமக்கு பெரிதாக ஈடுபாடு ஏற்படாமை போன்ற காரணங்களும் உண்டு.தேசிய விருது பெற்ற கன்னட படங்களின் டெம்ப்ளேட் குறித்து ஒருமுறை அசோகமித்திரன் விமர்சித்து எழுதி இருந்ததால் அவற்றையும் கண்டதில்லை!



       பத்தாண்டுகளுக்கு முன்பு ஷங்கர் நாக் இயக்கிய Accident (படத்திற்கு இசை ராசையா) சப்டைட்டில் சகிதம் கிடைத்ததால் அதை பார்த்தோம் .படத்தில் ஷங்கர் நாகின் சகோதரர் அனந்த் நாக் வயதான கெட்டப்பில் வருவார்.இளம் நடிகர்கள் வயதான கெட்டப் போட்டால் வழக்கமாக ஆ ஊ என்று முக்கியபடி நடிப்பதே வழக்கம்.ஆனால் அது எதுவுமில்லாமல் இயல்பாக அந்த கேரக்டரை செய்திருந்தது நமக்கு வியப்பை உண்டாக்கியது!



       இப்ப Accident சப்டைட்டில் சகிதம் இருந்த பிரின்ட்டை யூ டியூபில் தூக்கி விட்டார்கள் என்பது வேறு கதை!பிறகு சில ஆண்டுகளுக்கு முன்பு Godhi Banna Sadharana Mykattu பார்த்தோம்.இதுவும் அனந்த் நாக் நடித்த படம் தான்.ஆனால் ஷங்கர் நாக் அளவுக்கு இவரிடமிருந்து சிறந்த நடிப்பை இயக்குனர் ஹேமந்த் ராவால் பெற முடியவில்லை!தவிர சென்டிமென்ட் தூக்கலான ஒரு சாதாரண படம்.அதை தமிழிலும் ரீமேக் செய்தார்கள்.அந்தப்படத்தாலோ என்னவோ கன்னட படங்கள் பார்க்கும் கொஞ்சநஞ்ச ஆர்வமும் மொத்தமாக போனது.

      பிறகு கடந்த சில வருடங்களாக ஹரன் பிரசன்னா தொடர்ந்து தனது தளத்தில் கன்னட படங்கள் குறித்து மிகவும் விரிவாக எழுதி வந்தார்.கன்னட படங்களை சப் டைட்டில் இல்லாமல் கன்னடத்திலேயே பார்த்து எழுதுவதால் படத்தை இன்னும் அனுக்கமாக விளங்கி எழுத அவரால் முடிந்தது.
       அப்படியாகத்தான் மீண்டும் கன்னட படங்களை பார்க்க ஆரம்பித்தோம் .Sapta Sagaradhache Ello Side A&B நமக்கு பிடித்திருந்தது.Side B இல் நடித்த சைத்ராவின் ரசிகனாக மாறிவிட்டோம்!

    அப்படி சைத்ரா நடித்த படங்களாக பார்த்து வந்தபோது கண்ணில் பட்டதே இப்படம்.அவர் நடித்துள்ளார் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இப்படத்தை நாம் பார்த்தோம்.ஆனால் இன்ப அதிர்ச்சியாக இப்படம் ரணகளமாக இருந்தது!ஒரு வருத்தமும் உண்டு.அதை கடைசியில் பார்ப்போம்!


     Trainspotting (நாம் இன்னும் T2 பார்க்கவில்லை) படம் பார்த்தவர்களுக்கு இப்படம் அதே flavor-ல் இருப்பதை உணர்வார்கள். இரண்டிலும் [(கிங்ஸ் லெவன்)^ n] தான்! :D

 
       பஞ்சதந்திரம் படத்தில் ஐந்து பேர் சேர்ந்து செய்த காமெடியை இப்படத்தில் இரண்டே....இல்லை.....ஒருவரே செய்துள்ளார் .அது Siddu Moolimani  .அட்டகாசம்!மொத்த படத்தின் முதுகெலும்பு இவர்தான்!


 
இவர் தவிர வீட்டு உரிமையாளராக வரும் GopalKrishna Deshpande வேறு!வீட்டில் வாஷ் பேஷினை தானே ரிப்பேர் செய்கிறேன் பேர்வழி என்று வந்து அங்கே கீழே கிடக்கும் [(கிங்ஸ் லெவன்)^n] மாத்திரை ஒன்றை......மீதியை திரையில் காண்க! :D
 

பொதுவாகவே இவர்போல முகத்தில் நிரந்தர நக்கல் சிரிப்பு கொண்டவர்கள் நகைச்சுவை வேடங்களில் அசத்தி விடுவார்கள்!
   வாட்ச்மேன் கேரக்டரில் வரும் Natya Ranga சினிமாவில் நடிக்கும் ஆர்வத்தில் கே.பாலி படத்தின் வசனத்தை ' ஒங்க இவரு' மாதிரி பேசிக்காட்டும் காட்சி அருமை.


      படத்தில் மிகப்பிடித்த மற்றொரு விஷயம் பாடல்கள்&பின்னணி இசை.அடப்பாவிகளா! ...இப்படியா ரகளை செய்வீர்கள்??!!! ஒவ்வொரு சூழலுக்கும் அட்டகாசமாக பொருந்தும் நர்சரி ரைம்கள்,நக்கலான வரிகள் ,சில புத்தக மேற்கோள்கள் என்று பின்னியெடுத்து விட்டார்கள்!
       இவ்வளவு மகிழ்ச்சி இருந்தாலும் இரண்டு வருத்தங்கள்!
1.மீண்டும் சைத்ரா!

மேடை நாடகம் போடுகிறோம் பேர்வழி என்று இரண்டு மூன்று நாடகங்களை இயக்கிய(!!!!!!?????????????) நினைவுகள் மண்டையில் ஓடிக்கொண்டே இருப்பதுண்டு!அந்த நாடகங்கள் ஆகச்சிறந்த திராபை என்பதால் அப்போதே அவற்றை போட்டு நாமே கொளுத்திவிட்டோம்(மக்கள் பிழைத்தார்கள் - கும்மாங்கோ).ஆனால் அந்த அனுபவத்தால் ஒரு நடிகன்/நடிகையை காணும்போது இவரால் எந்தளவு நடிக்க முடியும் என்று நமக்கு தெளிவாக தெரிந்து விடுகிறது.இந்த ஆற்றல் எப்படியோ தப்பித்தவறி நமக்கு வந்துவிட்டது போல!அவ்வகையில் ஏற்கனவே அனிமல் பார்க் படத்தை பற்றிய பதிவில் ராஷ்மிகா காமெடி கேரக்டர்கள் செய்யலாம் என்று சொல்லி இருந்தோம்!
      

சைத்ராவை பொறுத்தளவில் மிகச்சிறந்த நடிப்புத்திறன் கொண்டவர்.கிராமத்து ரோல் நவநாகரீக ரோல் எதையும் அவரால் இயல்பாக அலட்டல் இல்லாமல் செய்ய முடியும்.ஆனால் அவருக்கு கனமான கேரக்டர்கள் தொடர்ச்சியாக அமையவில்லை!SSE Side B இல் அமைந்தது.பிறகு Blink மற்றும் Toby பரவாயில்லை என்பதாக கேரக்டர் இருந்தது.இப்படம் சுத்தம்!Spoiler alert தேவையில்லை.நீங்களே படத்தை பாருங்கள்.

    இப்போது ஆகச்சிறந்த நடிகைகள் என்று சிலாகிக்கப்படும் over-rated நடிகைகளை(ஸ்லோ மோஷனில் நடிக்கும் அந்த நடிகை உட்பட) விடவும் இவரால் நன்றாக நடிக்க முடியும்.பல தேசிய வி......வேண்டாம் அந்த விருதுகளை இவருக்கு கொடுத்தால் இவரை அவமதித்தது போல ஆகிவிடும் ....அந்த நடிகைகளுக்கு கிடைத்தது போன்ற கேரக்டர்கள் கிடைத்தால் இவரின் சிறந்த நடிப்புத்திறன் கண்டிப்பாக வெளிப்படும்.பார்ப்போம்!
.

2.படத்தில் ஹிந்தி பாடல் வரிகள்,திரைப்பட வசனங்கள்,சொல்லாடல்கள் மிகச்சிறந்த டைமிங்கில் பயன்படுத்தப்பட்ட விதத்தை சப் டைட்டில் உதவி இல்லாமலேயே புரிந்துகொள்ள முடிந்தபோது ஏற்பட்ட வருத்தம் இது.இப்படத்தை கன்னட மொழியிலேயே புரிந்து பார்த்தால் சப் டைட்டில் வடிகட்டி இல்லாமல் இன்னும் பலமடங்கு ரசித்து சிரித்திருக்கலாமே! என்று தோன்றியது .
   குறிப்பாக நம்ம பேவரைட் பாடலான Kabhi Kabhi Aditi (Jaane Tu Ya Jaane Na) பாடலையும் பாடல் வரிகளையும் பயன்படுத்திய விதம் :D . மேலும் Jaane Bhi Dho Yaaro படம் குறித்த வசனமும் வருகிறது.

 

       இந்திய சினிமாவில் ட்ராக் காமெடி என்றால் சிறந்தது தமிழ் சினிமா(வடிவேலுவுடன் முடிந்தது).ஆனால் கதையோடு ஒட்டிய காமெடி என்றாலே என்றும் மலையாள சினிமா தான்!மலையாளி ரத்தத்திலேயே நக்கல் நையாண்டி குசும்பு எல்லாம் இருக்கும் போல!இந்தப்படம் அந்த உயரத்திற்கு சென்றுள்ளது!
       சில காலத்திற்கு பிறகு இப்படத்தை மீண்டும் பார்ப்போம்.
- படம் Hungama OTT ல் உள்ளது.ஏர்டெல் Xstream App மூலமாகவும் காணலாம்.

    

Sunday, 1 September 2024

Clean U எனும் அக்கப்போர்!

 "குடும்பத்தோடு பார்க்கலாம்" என்று பரிந்துரை செய்யப்படும் படங்கள் உண்மையில் அப்படித்தான் உள்ளனவா?வன்முறை காட்சி என்றால் வெறும் வெட்டுக்குத்து, இரத்தம் ,குண்டு வீச்சு - இவைகள் மட்டும்தானா??
     கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கலாம் என்று எல்லாரும் சொல்லும் படங்களில் நிச்சயமாக மொழி படம் இடம்பெறும்!
      படத்தில் ஒரு வன்முறை காட்சி இல்லை என்பார்கள்!Clean U என்பார்கள்!உண்மை அதுதானா?
          பேராசிரியர் ஞானப்பிரகாசம் தனது மகன் பாபுவை பறிகொடுத்த அந்த தருணத்திலேயே நின்று விட்டவர்.ஒரு Mental Trauma!ஆனால் படத்தில் அந்த கேரக்டரை ஒரு கோமாளியை போலவே காட்டி இருப்பார்கள்!
     இதில் உச்சகட்ட வன்முறையாக கார்த்திக்(பிரித்விராஜ்) ஞானப்பிரகாசத்தை உலுக்கி எடுத்து அவர் மகன் இறந்துபோன உண்மையை அவருக்கு உணர்த்துகிறாராம்.இந்த காட்சியை சிலாகிக்காதவர்கள் இல்லை!சினிமா வரலாற்றில் இடம்பெற்ற குரூர காட்சிகளில் இதுவும் ஒன்று!



    ஏனய்யா அந்த கேரக்டர் எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் வீட்டில் வேளா வேளைக்கு தின்னுட்டு தூங்கும் ஆளா?இல்லை போவோர் வருவோரிடம் கையை பிடித்து இழுப்பது; வன்முறையாக நடந்து கொள்வது என்பது மாதிரி எதேனும் செய்யும் கேரக்டரா?இல்லை! நள்ளிரவில் அலறும் கேரக்டரா?இல்லை!கத்தி எடுத்துக்கொண்டு சகட்டுமேனிக்கு கொலை செய்பவரா?இல்லை!
     பிறகு ஏன் அவரை உலுக்கி நிகழ் காலத்திற்கு அவரை கொண்டுவர வேண்டும்??மீதமிருக்கும் காலம் முழுக்க புத்திர சோகத்தில்  எரிந்து சாம்பலாக மற்றொரு புறம் கார்த்திக் அர்ச்சனா(ஜோதிகா) வுடன் ஜாலியாக டூயட் பாடுவார்!இது குரூர வன்முறை இல்லையா? கோணலான எல்லாவற்றையும் நிமிர்த்தித்தான் ஆக வேண்டுமா?
    இதற்குத்தான் நாம் தொடர்ந்து சொல்வது ஒன்றே!
இந்த மனித நேயம் பேசுகிறேன் என்று டார்ச்சர் பார்ன் எடுப்பது,மொழி மாதிரி "Clean U" படங்கள் என்ற பேரில் வன்முறை காட்சியை வேறு வகையில் திணிப்பது இவற்றை எல்லாம் விட மேலானது நேரடியாக இரத்தம் தெறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படங்கள்!அவை எதையும் மறைப்பதில்லை.போலி லேபிள்கள் சகிதம் அவை வருவதில்லை!அத்தகைய படங்களை வன்முறை காட்சிகள் பார்க்க விரும்புவோர் மட்டுமே பார்ப்பார்கள்!ஆனால் மேற்கூறிய பசுந்தோல் போர்த்திய படங்கள்???

     
       
    

Sunday, 2 June 2024

NTR

 என்.டி. ராமாராவ் என்றாலே தமிழ் மக்களுக்கு இரண்டு விஷயங்கள் உடனே நினைவுக்கு வரும்
- படங்களில் ராமர் கிருஷ்ணர் வேடம் போட்டவர்

- எம்.ஜி.ஆர் போல தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனவர்.

 
    முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.இருபதுக்கும் மேற்பட்ட  படங்களில் அவர் ராமர் மற்றும் கிருஷ்ணர் வேடம் போட்டார். பி.ஆர்.பந்துலு இயக்கிய கர்ணன் படம் வெற்றி பெற்றது.அதில் கர்ணன் கதாபாத்திர சித்தரிப்பு என்பது அசல் மகாபாரதத்தில் உள்ளதற்கு துளியும் தொடர்பில்லாத ஒன்று என்பது அசல் புராணத்தை வாசித்தவர்களுக்கு தெரியும்.


 

     கர்ணன் ரொம்ப உத்தமன்.ஏகப்பட்ட தான தர்மங்கள் செய்தவன்.தன்போக்கில் அமைதியாக இருந்தவன்.
சூழல் காரணமாகவே அவன் வில்லனாக மாறினான் என்று பார்ப்போருக்கு கழிவிரக்கம் உண்டாகும் வகையிலேயே அந்த போலி சித்தரிப்பு இருக்கும்.அதைப்பார்த்து என்.டி.ஆர் தானவீரசூரகர்ணன் மாதிரியான படங்களை எடுத்தார் .கர்ணனும் அவரே துரியோதனனும் அவரே கிருஷ்ணரும் அவரே.அதில் கர்ணன் படப்பாணியில் கர்ணன் துரியோதனன் ஆகியோர் மீது கழிவிரக்கம் வருவது மாதிரியான காட்சிகளை வைத்தார்.
      நிஜ வாழ்வில் என்.டி.ஆர் தீவிர பக்திமான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.அத்தனை புராணப்படங்களில் நடித்தவர், பிற்காலத்தில் காவி உடையில் வலம் வந்தவர் என்றெல்லாம் சொன்னாலும் அவர் பெரிய பக்தி ஈடுபாடு கொண்டவர் அல்ல என்பதே உண்மை.வீட்டில் பெரிதாக பூஜைகள் செய்பவர் இல்லை.வெளியில் ஷூட்டிங், பிற்காலத்தில் பிரச்சாரம் என்று சென்றாலும் தனது உடனிருப்பவர்களை கோவிலுக்கு செல்ல சொல்லி விபூதி குங்குமம் பிரசாதம் மட்டும் வாங்கிவர சொல்வார்.
      ஆனால் அவருக்கு வேறு ஈடுபாடு இருந்தது.நள்ளிரவில் தனது பங்களாவில் சில தாந்த்ரீக பூஜைகள் செய்தார் என்ற குற்றசாட்டு எழுந்தது.அதெல்லாம் உண்மையா என்று தெரியாது.ஆனால் அந்த குற்றச்சாட்டு எழுந்ததும் என்.டி.ஆர் தனது பண்ணை வீட்டிற்கு செல்வதை நிறுத்தினார் .ஆனால் அவர் என்றும் செலக்ட்டிவ் நாத்திகம் பேசியதில்லை.இந்த ஒன்றுதான் வித்தியாசம்!இந்த விஷயத்தில் அவர் கொஞ்சம் எம்ஜியாருக்கு நெருக்கமானவர் என்றே கூறலாம்.

     இப்போது இரண்டாவது விஷயம்.எம்.ஜி.ஆர் போல கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர் என்பது மேலோட்டமாக உண்மையாக இருக்கலாம்.ஆனால் பலத்த வேறுபாடுகள் உண்டு.

 
     எம் ஜி ஆர் முதலில் காங்கிரஸ், பிறகு திமுக என்று இருபது வருடங்களுக்கு மேல் அரசியல் கட்சியில் தொண்டனாக பிறகு பல்வேறு பதவிகளில் இருந்தவர்.அரசியல் ஆர்வம் என்பது அவருக்கு இருந்தது.தொடர்ந்து அன்றாட அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவராக இருந்தார்.பிற்காலத்தில் தான் தனிக்கட்சி முதல்வர் பதவி எல்லாம் வந்தது.

    ஆனால் என்.டி.ஆர் அப்படியல்ல!நடிகராக இருக்கும்வரை அரசியல் உள்ளிட்ட எந்த அன்றாட நிகழ்வு குறித்தும் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தார்.செய்தித்தாள் வாசிப்பு பழக்கம் கிடையாது .எந்த கட்சியிலும் இருந்ததில்லை.தனது அறுபதாவது பிறந்தநாளில் அரசியலில் நுழையப்போவதாக அறிவிக்கிறார் .
       மேலும் எம்ஜியார்  தானதர்மங்கள் செய்பவர்.அந்த விஷயத்தில் அவர் கணக்கு பார்ப்பதில்லை.ஆனால் என்.டி.ஆர் அப்படியல்ல.ஒரு பைசா செலவு செய்வதாக இருந்தாலும் அதை கையில் எடுத்து இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மீண்டும் ஜேபுக்குள் போட்டுக்கொள்பவராக இருந்தார்
     கட்சி ஆரம்பித்த பிறகு கூட தனது ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் ஓரமாக கிடந்த பழைய வேனை ரிப்பேர் செய்து அதையே பயன்படுத்தினார்.ஆந்திரா முழுக்க அதிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பகல் முழுவதும் மக்களை சந்திப்பது.இடையில் கிடைத்ததை வாங்கி சாப்பிடுவது.இரவில் எதாவது தொண்டர் வீட்டில் தூக்கம்.காலையில் சாலையோரமாக குளித்து விட்டு(அந்த போட்டோ அப்போது பிரபலமாக இருந்தது) மீண்டும் பிரச்சாரம் ஆரம்பம்.
      


அப்போது காங்கிரஸ் ஆட்சி.மேலிடத்தில் இருந்து 'நியமிக்கப்பட்ட ' முதல்வர்கள் மூன்று பேர் மூன்றாண்டுகளில் மாற்றப்பட்டிருந்தார்கள்.ஒருவகையில் அதுவே ராவுக்கு கட்சி ஆரம்பிக்கும் உத்வேகத்தை உண்டாக்கியது. "தெலுகு பிரைட்" என்பதை அவர் முன்வைத்தார்.அதுவே அவர் கட்சியின்/ஆட்சியின் பிரதானமாக இருந்தது.

    ஆனால் எதிர்கட்சியினர் தெலுகு தேசம் கட்சியை கம்மா கட்சி என்றார்கள். கம்மா பிரிவு நபர்களுக்கே கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. "அதெல்லாம் இல்லை.என் கட்சி அத்தனை தெலுங்கு மக்களுக்காகவும் தான்"  என்று ராவ் எத்தனை சொல்லிப்பார்த்தும் அந்த பிம்பத்தை அவரால் உடைக்க முடியவில்லை.அந்தப்பக்கம் ஆந்திரா காங்கிரஸ்-  ரெட்டி கட்சி என அறியப்பட்டது!
      யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியை பிடித்ததும் இந்திரா அரசு மூலம் ஆந்திரா காங்கிரஸ் கட்சி இவருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறது.உச்சகட்டமாக பாஸ்கர ராவ் என்ற தெலுகு தேசம் கட்சியின் அமைச்சரை வைத்தே ஆளுநர் உதவியுடன் ஆட்சியை கவிழ்த்து பாஸ்கர ராவ் முதல்வராகிறார்.



      இதை என்.டி.ஆர் எதிர்பார்க்கவே இல்லை.அதிர்ந்து போகிறார்.இரா.செழியன்,சோ ராமசாமி,வாஜ்பாய் ஆகியோர் ஆந்திரா ஆளுநரை சந்தித்து இது சட்டப்படி தவறு என்று விளக்குகிறார்கள்.
     பிறகு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் ஜனாதிபதி மாளிகை முன்பு நிறுத்துகிறார் என்.டி.ஆர்.கடும் போராட்டத்திற்கு பிறகு அவர் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்.அப்போதெல்லாம் அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அவர் மகன் ஹரிகிருஷ்ணா மற்றும் மருமகன் சந்திரபாபு நாயுடு!



        இந்த சமயத்தில் அவர் மனைவி பசவ தாரகம் இறந்து போகிறார்.இவருக்கு இருதய பைபாஸ் செய்யப்படுகிறது.
      சென்றமுறை எதோ மூன்றாவது நபரான பாஸ்கர ராவ் ஆட்சியை கவிழ்த்தார்.ஆனால் அடுத்தமுறை சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவே அதை செய்கிறார்.இம்முறை அதை வெற்றிகரமாக செய்கிறார்.  
    ஆட்சி கவிழ்ப்பு வெற்றிபெற மிக முக்கிய காரணம் லக்ஷ்மி பார்வதியை என்.டி.ஆர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது.ஆம் இருவருக்கும் அது இரண்டாம் திருமணம் தான். கதாகாலட்சேபம் செய்பவரின் மனைவியாக இருந்தவர் லக்ஷ்மி பார்வதி.பட்டப்படிப்பு படித்தவர்.புத்தக வாசிப்பு பழிக்கம் கொண்டவர்.ராமா ராவ் சுயசரிதை எழுத அவருடன் தினம் நடத்திய உரையாடலில் ராவுக்கு இவரின் துணை ஆறுதல் தருவதாக இருப்பதை உணர்கிறார்.ஏற்கெனவே மனைவியின் மரணம்,சொந்த உடல்நிலை கோளாறுகள், தில்லி கொடுக்கும் குடைச்சல் போக சொந்த கட்சியிலேயே ஏகப்பட்ட குழிபறிப்புகள் என்று கடும் நெருக்கடியில் இருந்தவர் இந்த உறவில் ஆறுதல் காண்கிறார்.
    இடையில் காங்கிரசுக்கு எதிராக நாடு முழுக்க ஒரு அரசியல் அணியை திரட்டுகிறார்.ஐக்கிய முன்னணி 1989 இல் ஆட்சியை பிடிக்கிறது.ஆனால் தெலுகு தேசம் ஒரு எம்பி ஸீட் கூட வெல்லவில்லை என்றாலும் அவர் மீதுள்ள மரியாதையில் ஆட்சியின் முக்கிய முடிவுகள் என்.டி.ஆர் உடன் கலந்தாலோசித்து பிறகே எடுக்கப்படுகிறது.

மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது அவரது பிரதான நோக்கமாக இருந்தாலும் அவர் என்றும்  தேச பிரிவினைவாதம் பேசியதில்லை.
     ஆனால் பிள்ளைகளுக்கு அசல் தாய் தந்தை தான் என்றும் மனதில் நிற்பார்கள்.அது இயல்பு.அவரது மகன் மகள்கள் மருமகன் மருமகள்கள் என்று யாருமே இவரின் இரண்டாம் திருமணத்தை ஏற்கவில்லை.குறிப்பாக சந்திரபாபு நாயுடு!

 

      சென்றமுறை பாஸ்கர ராவ் தில்லி தயவை நம்பி கண்மூடித்தனமாக ஆட்சியை கவிழ்த்து தோல்வி அடைந்தார்.காரணம் பெரும்பான்மை எம்.எல். ஏக்கள் ராவ் பக்கம் இருந்தனர்.இந்தமுறை அந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொண்டார் நாயுடு.
ஆட்சியில் லக்ஷ்மி பார்வதி தலையீடு என்பதை நிறுவி கட்சி எம்.எல். ஏக்களை தன் பக்கம் இழுத்தார்.மேலும் ராவின் பிள்ளைகளான பாலகிருஷ்ணா ஹரிகிருஷ்ணா ஆகியோரை வைத்து பொதுவெளியில் தனக்கு ஆதரவு திரட்டினார் .
     இது போதாதென்று ரஜினிகாந்த் உதவியையும் நாடினார் .ஆட்சியை கவிழ்த்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கிறார் நாயுடு.அங்கு வந்து ரஜினி உள்ளிட்டோர் ராவின் இரண்டாம் திருமணம் குறித்தும், ஆட்சியில் லக்ஷ்மியின் தலையீடு குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்
     அந்த ஹோட்டலுக்கு வெளியே வந்து எம்.எல்.ஏ க்களை அழைத்த என்.டி.ஆர் மீது செருப்பு உள்ளிட்டவற்றை வீசுகிறார்கள்.மனம் நொந்து வீடு திரும்புகிறார் .நாயுடு முதல்வர் ஆகிறார்.
       இது பிரச்சனையில்லை.நான் மக்களிடம் ஆதரவு பெற்றுத்தானே முதல்வர் ஆனேன்.மீண்டும் அவர்களை சந்தித்து இந்த அநியாயத்தை எடுத்து கூறி 1984 இல் மீண்டும் ஆட்சியை பிடித்தது போல வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு இருந்தவர் மாரடைப்பால் காலமாகிறார்.
        ரஜினி மோகன் பாபு இருவரும் அவர் உடலுக்கு மரியாதை செலுத்த அவர் வீட்டுக்கு செல்ல முயன்ற போது என்.டி.ஆர் ரசிகர்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

        எம்ஜியார் ஆட்சியில் இருந்தபோதும் அவருக்கு எதிராக எஸ்.டி.எஸ் போன்றோர் குடைச்சல் கொடுத்தனர்.வேறொரு "பெரிய" தலைவர் ராஜீவை சந்தித்து எம்ஜியார் பதவிக்கு வேட்டு வைக்க முயன்றதாக சொல்லப்பட்டது.வெளியில் நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்கள்.ஆனால் எம்ஜியார் தன்னை தன் கட்சியினரே கவிழ்ப்பதற்கான பெரிய காரணங்கள் எதையும் கடைசி வரை கொடுக்காதது அவர் சாமர்த்தியம்.ஆனால் என்.டி.ஆர் அந்த காரணத்தை வழங்கினார்.லக்ஷ்மி பார்வதியை மறுமணம் செய்ததுதான் அந்தக்காரணம்!

 



     என்.டி.ஆர் கதானாயக்கடு ,என்.டி.ஆர் மஹாநாயக்கடு ஆகிய படங்களில் என்.டி. ஆராக பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.தோற்றத்தில் நன்றாக பொருந்தி வந்துள்ளார் பாலகிருஷ்ணா.

இராவணன் கதாபாத்திரத்திற்கு பத்து தலைகளையும் தனித்தனியே படமாக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட பத்து மணிநேரம் மிக அதிக வெளிச்சத்தில் அசையாமல் என்.டி.ஆர் நின்ற காட்சி காட்டப்படுகிறது.கதாநாய்க்கடு படம் அவரது திரை வாழ்வை பற்றியது.என்.டி.ஆரை பொறுத்தளவில் திரை வாழ்க்கை அரசியல் வாழ்க்கை என்று தனித்தனியே சுலபமாக பிரிக்கலாம்.அறுபது வயது வரை திரை வாழ்க்கை.அதற்குப்பின் அரசியல் வாழ்க்கை.ஆனால் எம்ஜியாருக்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருந்தது .
     கதாநாயக்கடு படத்தில் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ் நடிக நடிகைகள் எவரும் காட்டப்படுவது இல்லை.ஏற்கெனவே நடிகையர் திலகம் படத்திலும் அவ்வாறே செய்திருந்தனர். மஹாநாயக்கடு படத்தில் அனைத்து முதல்வர்கள் மாநாட்டு காட்சியில் எம்ஜியார் இவரா?அவரா?என்று சந்தேகிக்கும் வண்ணம் ஒரு எக்ஸ்டிரா நடிகரை டம்மி போல உட்கார வைத்திருந்தனர் !
      மேலும் பசவ தாரகம் கேரக்டரில் வித்யா பாலன்.இவர் எல்லா படத்திலும் ஸ்லோ மோஷனில் நடிப்பது வழக்கம்.இப்படத்திலும் அப்படியே!ஏனென்று நமக்கு தெரியவில்லை!இதனால்தான் மனசெல்லாம் படத்தில் இவரை இயக்குனர் நிராகித்தாரோ??
     மஹாநாய்கக்கடு படம் அவரது அரசியல் வாழ்வு பற்றியது.ஆனால் அது முழுமையாக காட்டப்படவில்லை.நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் இறுதிக்காலம் காட்டப்படாமல் முடிக்கப்பட்டதோ அதேபோல என்.டி.ஆரின் வீழ்த்தப்பட்டது குறித்த காட்சிகள் இதில் இல்லை. சில காரணங்கள் நமக்கு தோன்றியது
- அப்படி அவர் வீழ்த்தப்பட்ட காலத்தை காட்ட வேண்டும் என்றால் பாலகிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் அவருக்கு எதிராக பேசியது செயல்பட்டது போன்றவற்றை காட்ட வேண்டும்.
- நடிகர் கிருஷ்ணா(மகேஷ் பாபுவின் தந்தை) தீவிர காங்கிரஸ் அபிமானி.அவர் என்.டி.ஆரை மிக கடுமையாக கேலி கிண்டல் செய்வதை காட்ட வேண்டி இருந்திருக்கும்.
- கதாநாயக்கடு படத்தில் நாகேஸ்வர ராவ் உடனான நெருக்கமான நட்பு காட்டப்படுகிறது.ஆனால் அதே நாகேஸ்வர ராவ் பிறகு காங்கிரசில் சேர்ந்து என்.டி.ஆரை வறுத்ததெடுக்கிறார்.
- ரஜினி  சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசியதை காட்ட வேண்டி இருந்திருக்கும்.
இதெல்லாம் திரை உலகில் பெரிய சர்ச்சைகளை கிளப்பி பாலகிருஷ்ணாவின் பொதுவெளி பிம்பத்திற்கே வேட்டு வைப்பதாக அமைந்திருக்கும்.அது மட்டுமல்லாது சந்திரபாபு நாயுடுவின் பெயரும் அடிபட்டு தெலுகு தேசம் கட்சியின் செல்வாக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்திருக்கும்.இதையெல்லாம் கருத்தில் கொண்டே பாலகிருஷ்ணா அந்தப்பகுதிகளை தவிர்த்திருக்கலாம்.தவிரவும் தெலுங்கு சினிமாவில் ரொம்பவும் இருண்மையான சித்தரிப்புகளை மக்கள் விரும்ப மாட்டார்கள்(நடிகையர் திலகம் கூட அவற்றை தவிர்த்தது).

   ஆனால் ராம்கோபால் வர்மா இயக்கிய Lakshmi's NTR படத்தில் அவர் 1989 தேர்தலில் தோல்வியடைந்து அனைவரும் கைவிட்ட நிலையில் லக்ஷ்மி பார்வதி அவரின் சுயசரிதையை எழுத வருவதாக காட்டி இருப்பார்.இந்தப்படம் மஹாநாயக்கடு படத்தை விட பல மடங்கு உண்மைக்கு நெருக்கமாக வந்திருப்பதை காண முடிந்தது.

 
      இந்த மூன்று படங்கள் உருவாக்கிய என்.டி.ஆர் குறித்தான பிம்பத்தை விடவும் Ramesh Kandula எழுதிய Maverick Messiah புத்தகம் உருவாக்கிய பிம்பம் இன்னும் தெளிவாக ஒளிவு மறைவு அவ்வளவாக இல்லாமல் இருந்தது.
 

 
சென்ற வருடம் என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு,பாலகிருஷ்ணா,ரஜினிகாந்த் போன்றோர் பங்கேற்று அவரை புகழ்ந்து தள்ளினர். இறந்தவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லையல்லவா!

    
     

Thursday, 23 May 2024

Kagemusha(1980)

 ஒரு மனிதனின் தனித்தன்மையான அடையாளம் என்பது அவன் தோற்றம் மட்டும்தானா? என்று கேட்டால் மேம்போக்காக ஆமாம் என்று சொல்லலாம்.ஆனால் இன்னும் சற்று நுட்பமாக பார்க்கும்போது அது மட்டுமல்ல என்பது விளங்கும்.

 

     இரட்டை வேடங்களில் ஒரு நடிகர் அல்லது நடிகை நடித்த படங்கள்  தமிழிலேயே ஏராளம் உண்டு.ஒருவர் நல்லவர்.மற்றொருவர் கெட்டவர்.ஒருவர் உயரம் மற்றொருவர் குள்ளம்.இப்படி நேரெதிர் தோற்றங்கள்/குணாதசியங்கள் கொண்ட படங்களை கண்டிருப்போம்.

       இப்படம் அப்படியான ஒரு படமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம்.ஷின்ஜென் என்ற அரசர் எதிரியின் துப்பாக்கி குண்டுபட்டு உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது.அப்போது அவரைப்போலவே தோற்றம் கொண்ட ஒரு திருடனை அவர் முன் நிறுத்துகிறார் ஷின்ஜென்னின் தம்பி.

     பல காலமாக ஷின்ஜென்னுக்கு ஆபத்து நேரக்கூடிய இடங்களுக்கு அவருக்கு பதில் சென்றவர் அவர் தம்பி.தொலைவில் எதிரி நாட்டு ஒற்றர்கள் உளவு பார்க்கும்போது ஷின்ஜெண் போலவே இருப்பார்.தொடர்ந்து ஷின்ஜென்னின் நிழல் போலவே இருந்து ஷின்ஜென் இல்லாமல் போகும்போது தம்பிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!தனக்கான ஆளுமை என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதை அப்போதுதான் அவன் உணர்கிறான்.
    ஷின்ஜென் உயிர் துறந்ததுன் அந்த இடத்தில் இந்த திருடனை அமர வைக்கின்றனர்.அதுவரை அவரது தம்பி செய்த தோற்றமயக்க வித்தைகள் வெளியாட்களுக்கு மட்டுமே.வீட்டுக்குள் அல்ல.ஆனால் இந்த திருடன் செய்யப்போகும் ஆள் மாறாட்டம் வெளியிலும் வீட்டிலும்.

அசலும் நிழலும்


      ஷின்ஜென் ஒரு மலையோடு உவமானம் செய்யப்படுகிறார்.குறிப்பிட்ட தியான முறை ஒன்றில் அரை மணிநேரம் மலை போல அசைவற்று அமர்ந்திருப்பது குறித்து பலருக்கு தெரிந்திருக்கலாம்.அப்போது உடலை அசைவற்று வைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு நிலைபெற்று சமநிலைக்கு வரும்.பிறகு அதைப்பின்தொடர்ந்து மனதும் அடங்க ஆரம்பிக்கும்.

    ஒருவகையில் இப்படம் பார்ப்பதே நமக்கு மூன்று மணிநேரம் தியான செய்த ஆழ்ந்த அமைதியான உணர்வை தந்தது.ஒவ்வொரு முறை இப்படத்தை பார்க்கும்போதும் அவ்வாறே இருக்கிறது.
        நெருப்பைப்போல உக்கிரமாக காற்றைப்போல துரிதமாக காட்டைப்போல அமைதியாக மலையைப்போல் எதற்கும் அசைந்து கொடுக்காத நிலை குறித்து பேசப்படும் வசனங்கள் அவ்வளவு ஆழம் பொதிந்தவை.
       போர்க்காட்சிகள் என்றால் ஆவேசமாக இருபக்கமும் வெட்டி சாய்ப்பதை காட்டாமல் வெறுமனே துப்பாக்கியின் தொடர் வெடிப்புகளை ஒலிக்க வைத்து பிறகு சில குதிரைகள் மற்றும் குற்றுயிராக துடிக்கும் வீரர்களை காட்டுவதன் மூலம் அந்த குரூரத்தை பதிவு செய்கிறார்.

     மேலும் அந்த திருடனின் கனவில் ஷின்ஜென் இவனை துரத்தும் அந்த surreal காட்சி மிகவும் உணர்ச்சிப்பெருக்காக இருந்தது.படத்தின் ஆன்மாவை அக்காட்சி வெளிப்படுத்தியது.
 


    கடைசியில் போலி ஷின்ஜென்னும் சுடப்பட்டு ஆற்றில் அந்த ராஜ்ஜியத்தின் கொடியை கடந்து மிதந்து செல்கிறான்.அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதமும் கட்சிக்கான பின்னணி இசையும் ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது உலுக்கி விடுகிறது!
    ஷின்ஜென்னாகவும் திருடனாகவும் Tatsuya Nakadai அற்புதமாக நடித்துள்ளார்.ஷின்ஜென் கதாபாத்திரத்தில் அதிகார தோரணையில் பார்ப்போர் மரியாதை செலுத்தும் வண்ணம் இருப்பதும்,திருடன் கதாபாத்திரத்தில் எதை திருடலாம் ( ஷின்ஜென்னின் உடல் வைக்கப்பட்டிருக்கும் தாழியை உடைத்து அதில் பொக்கிஷம் இருக்கும் என்று பார்க்கிறான்.ஆனால் உள்ளே இருப்பதோ வேறு) என்று முழிப்பது,பிறரை எகத்தாளமாக பார்ப்பது என்று இருந்துவிட்டு பிற்பகுதியில் தன்னால் ஷின்ஜென்னின் மாபெரும் ஆளுமையை நிரப்ப முடியாமல் போனதை எண்ணி வருந்துவது,தனது அதிகபிரசிங்கித்தனத்தால் மாபெரும் போருக்கு காரணமாகி அத்தனை உயிர் போனதை கண்டு கலங்கும் காட்சி என்று ஒரு மிகப்பெரிய கேன்வாசில் வரையப்பட்ட மாபெரும் ஓவியம் போல ஒரு பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அட்டகாசமாக செய்துள்ளார்.
     அதிகார உள்வட்டத்தின் சிலரைத்தவிற மற்ற எல்லாருமே இந்த திருடனை ஷின்ஜென்னாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.முதலில் "இது எனது தாத்தா இல்லை" என்று உண்மையை கண்டுபிடித்த பேரப்பிள்ளையும் அவனை ஏற்றுக்கொண்டு விடுகிறான்.ஷிஞ்சென் மட்டுமே பயன்படுத்த முடிந்த குதிரை ஒன்று இருக்கிறது .அதில் ஏறி குதிரை தூக்கி எறிய போலி அம்பலப்பட்டு நிற்கிறான்.ஏன் அதை செய்தான்?அவன் பாட்டுக்கு  வேடத்தில் இருந்திருக்கலாம்.
    சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவனுக்கு கொடுத்த ராஜமரியாதையை அவன் தனக்கானது என்று நம்பியதால் ஏற்பட்ட சறுக்கல் தான் இது!அந்த மரியாதை ஷின்ஜென்னுக்கானது!

Sunday, 5 May 2024

Blow Out மற்றும் சில மர்ம வழக்குகள்!

 பொதுவாக இந்த பிரபல படுகொலை வழக்குகள்,மர்ம மரணங்கள் ஆகியவைகளுக்கு இடையே ஒருவித ஒற்றுமை உண்டு. இரண்டுவகையான வழக்குகள் குறித்த பேச்சுக்கள் விவாதங்கள் எல்லாம் அந்த சம்பவம் நடந்தவுடனே சுனாமி போல எழும்.பிறகு அதிகபட்சம் சில மாதங்கள்; ரொம்ப பிரபலமாக இருந்தால் சில ஆண்டுகள் அதைப்பற்றி பேச்சு ; அந்த வழக்கு என்னவானது என்ற கேள்வி போன்றவைகள் இருக்கும்.பிறகு? நிசப்தம்!

    Brian De Palma  இயக்கிய Blowout படம் அந்தவகையில் நமக்கு மிக மிக பிடித்த படம்.படம் எடுக்கப்பட்ட விதம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் படத்தில் நம்மை ஈர்த்தது அந்த நேர்மை.யதார்த்தத்தை நேர்மையாக காட்டிய படமது.



     அமெரிக்க ஜனாதிபதிக்கான பிரைமரி போட்டியில் முன்னணியில் இருக்கும் ஒருவர்,நிச்சயமாக அவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று அனைவருமே நம்பும் ஒருவர் காரோடு நீர் நிலையில் விழுந்து இறக்கிறார் .
       அந்த இடத்திற்கு அருகே தனது திரைப்பட ஒலி தொகுப்பிற்காக இயற்கை ஒலிகளை பதிவு செய்துகொண்டிருக்கும் நாயகன் அந்த கார் விழும் ஒலியையும் பதிவு செய்கிறான்.அந்த பிரபலம் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருப்பதை ரகசியமாக போட்டோக்கள் எடுக்கிறார் இன்னொருவர்.அவைகளை பிறகு இணைத்து ஒரு வீடியோவாக ஆக்கி பார்த்தால் காரின் டயர் சுடப்பட்டு அதனாலேயே நிலை தடுமாறி கார் நீரில் விழுந்தது என்பதை கண்டுபிடிக்கிறார் நாயகன்.
     பிறகு அதை அம்பலப்படுத்த எடுக்கும் முயற்சி கடைசியில் மொத்தமாக சின்னாபின்னமாகி விடுகிறது .தனது காதலியையும் இழக்கிறான்.படம் அத்தகைய வெறுமையில் தான் முடிகிறது.
     நிஜ வாழ்வில் ஜான் எஃப் கென்னடி அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி ஆகியோரின் படுகொலை வழக்குகளை சில ஆண்டுகளுக்கு முன் டாப் டூ பாட்டம் படித்ததில் தலை சுற்றியதுதான் மிச்சம்.அவ்வளவு குளறுபடிகள் குழப்பங்கள் வினோத திசை திருப்பல்கள்.வாரன் கமிஷன் அறிக்கை என்பது ஒரு கட்டுக்கதை என்பது கென்னடி இருந்த ஜனநாயக் கட்சிக்கும் தெரியும்.அமெரிக்க மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும்.இருந்தாலும் என்ன செய்ய முடிந்தது??நிசப்தம்!




     ராஜீவ் படுகொலை நிகழ்ந்த அடுத்த நாள் தொடங்கி ஜெயின் கமிஷன் அறிக்கை வரை தொடர்ந்து விடாமல் நாள்தோறும் செய்தித்தாளில் அந்த செய்தியை வாசிப்பது நமது வழக்கமாக இருந்தது.ராஜேஷ் குமார் நாவலில் வருவது போல " முதல் பக்கம் எட்டு பத்திக்கு இருந்த செய்தி கடைசி பக்கத்தில் கால் பத்தியாக .." மாறும் வரையில் வாசித்தோம்.
     ஏகப்பட்ட குழப்பங்கள் ஓட்டைகள் பல்டிக்கள்....பிறகு bigger conspiracy ஐ கண்டுபிடிக்க 1999 இல் பல்நோக்கு விசாரணை குழுமம் அமைக்கப்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ஆயுளும் முடித்து வைக்கப்பட்டது.சரி இத்தனை ஆண்டுகள் செயல்பட்ட அந்த குழுமத்தின் கண்டுபிடிப்புகள் என்ன?யாரையெல்லாம் விசாரித்தார்கள்?இத்தனை ஆண்டுகள் என்னதான் செய்தார்கள்???நிசப்தம்!
     சில ஆண்டுகளுக்கு முன் மீடியாவை உலுக்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம்.அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது மேனேஜர் திஷா சாலியான் மர்ம மரணம் .இருவர் மரணமும் "தற்கொலை" என்றார்கள்.



    சமீபத்தில் சுஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்த மார்ச்சுரி காவலாளி சுஷாந்த் உடலில் ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் இது குறித்து மருத்துவர்களிடம் கூறிய போது அமைதியாக இருக்கும்படி அவர்கள் கூறியதாக சொன்னார் .இவரே வழக்கு நடக்கும்போது இதை பேசவில்லை.

திஷா சாலியான்


    மேலும் திஷாவின் மர்ம மரணத்தில் சம்மந்தப்பட்ட அந்த இரு பெரும் மராட்டிய  புள்ளிகள் சுஷாந்த் வழக்கிலும் சம்பந்தப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. சுஷாந்த் நடிகர் மட்டுமல்லாது தீவிர அறிவியல் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.அவர் மிக குறைந்த செலவில் படம் தயாரிக்கும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.அதற்கும் அவரது மர்ம மரணத்துக்கும் சம்மந்தம் உண்டா?அவரோடு தொடர்புடைய நான்கைந்து நண்பர்கள் மர்மமாக இறந்தது/காணாமல் போனது என்று ஏகப்பட்ட குழப்பங்கள்.சி. பி.ஐ விசாரணைக்கு எடுத்து நான்காண்டுகள் ஆகிறது.வழக்கில் என்ன முன்னேற்றம்??நிசப்தம்.
     இதேபோல ஜியா கான் மரணம்,(காதலர் தினம்) குணால் மும்பையில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் என்னாவாகின?சுனந்தா புஷ்கர் மரணம் நிகழ்ந்து பத்தாண்டுகள் ஆகிறது.அந்த வழக்கின் நிலை என்ன???நிசப்தம்!
     இப்போது பதிவின் ஆரம்பத்தில் பகிரப்பட்ட Blowout போஸ்டரில் ஜான் டிரவோல்ட்டாவின் முகபாவத்தை பாருங்கள்.தொடர்ந்து இந்த மர்மமான குழப்பங்கள் நிறைந்த வழக்குகளை பின் தொடர்ந்த ஒரு நபரின் முகபாவம் அப்படித்தான் இருக்கும்!
     





Sunday, 28 April 2024

Animal Park

 இப்படியொரு வெளியானதே முதலில் நமக்குத்தெரியாது.படம் வெளியான பிறகு ஆளாளுக்கு cringe cringe cringe என்று கிரிஞ்சித்தள்ளிய போதுதான் "இப்படி எல்லாரும் cringe ஆகிறார்கள் என்றால் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படமாகத்தான் இருக்கும்" என்றொரு எண்ணம் ஏற்பட்டது.(முனியாண்டியின் ஆரம்பக்கால எழுத்துக்களை ஒன்று விடாமல் படித்த உதயாவின் சிந்தனை வேறு எந்தமாதிரி இருக்கப்போகிறது?? - கும்மாங்கோ)

 

       தற்கால படங்கள் ,அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி - wokism தளும்பத்தளும்ப இருப்பது வழக்கம்.அதுதவிற புது மோஸ்தர் பெண்ணியம் முதலாளித்துவ எதிர்ப்பு விவசாய ஆதரவு ..etc...etc..,
     எந்த மொழி புதுப்படத்தையும் பார்ப்பதற்கு முன்னர் ஆர். ஓ வில் வடிகட்டி பார்ப்பதற்கு காரணம் அதுதான்.
      மேலும் ஆல்ஃபா மேல் என்பதெல்லாம் தொண்ணூறுகள் வரையில் ரஜினி நடித்த படங்களை அவ்வகையில் சொல்லலாம்.பிறகு அவரை முள்ளும் மலரும் எங்கேயோ கேட்ட குரல் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கபாலி காலா லால் ஸலாம் என்றெல்லாம் சரிந்துவிட்டார்.மற்ற ஹீரோக்களும் அவ்வாறே! கேப்புடனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் ஆக்ஷன் அத்தியாயம் முடிந்தது தனிக்கதை.
       ஆனால் மேற்குறிப்பிட்ட படங்களில் ' ஆல்ஃபா மேல் ' குறித்த வசனங்கள் இடம்பெறாது.இப்படத்தில் அது கடுப்பை உண்டாக்கியது.
     மற்றபடி இப்படம் தந்தை மகன் பாசப்பிணைப்பை மையமாக கொண்டதாக கூறப்பட்டாலும் ஒரு மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால் படம் நெடுக "மகனே" "அப்பா" என்று பாச குழைவுகள் இல்லை .இன்னும் சொல்லப்போனால் தந்தை மகனை வெறுக்கிறார். தன் அருகிலேயே அவன் இருப்பது பிடிக்காதவராக இருக்கிறார்.
    மகன்தான் தந்தையை சூப்பர் ஹீரோவாக பார்க்கிறான்.தனது கடைசி காலத்தில் தான் மகன் மீது பாசத்தை காட்டுகிறார்.இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.படத்தில் பலம் இதுதான்.
      மற்றபடி படம் நெடுக ஜட்டி ஜி string என்றெல்லாம் வருகிறது.ஒருகட்டத்தில் அது ஓவர் டோசாக போய்விடுகிறது என்றாலும் முனியாண்டியின் எழுத்துக்களில் ஊறியவர்களுக்கு இது சங்கடமாக தெரியாது 😃 (பின்னே உதயாவின் சிந்தனை உருப்படியாக இருக்கும் என்றா நினைத்தீர்கள்? - த.மணியன்).
     படத்தின் சண்டைக்காட்சிகளில் நமக்கு பிடித்தது அந்த ஹோட்டல் காரிடாரில் வரும் ரத்தக்களரி தான்.அந்நியன் படத்தில் இப்படி ஒரே ஆக் நூற்றுக்கணக்கான ஆட்களுடன் மோதும் காட்சி இருந்தாலும் அதில் மேட்ரிக்ஸ் பாதிப்பு ஓவராக போய் படம் பார்த்து கொண்டிருப்பவனையே ரோப்ல தொங்க விடும் அளவு சென்றது . அன்னியனில் இந்த காட்சி படமாக்கப்பட்ட போது வாத்தியார் ஷூட்டிங் ஸ்பாட் சென்றிருந்தார் ."அந்நியன் துரத்த ...சதா ஓட...ஆக்ஷன் பிளாக் ...இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நான் இருந்தால் என்னையும் கயிற்றில் கட்டி மிதக்க விட்டுவிடுவார்கள் என்று அங்கிருந்து தப்பித்தேன்" என்று எழுதி இருந்தார் (அசல் வார்த்தைகள் அல்ல.நினைவில் இருந்து எழுதுகிறோம்).
      அது மாதிரி எல்லாரும் சம்பந்தமில்லாமல் காற்றில் பறக்காமல் ஒரு சண்டைக்காட்சி.நன்றாகவே இருந்தது. அசுரவதம் என்ற மகா திராபை படத்தில் இதே போல ஹோட்டல் காறிடாரில் சசிகுமார் ஒற்றை ஆணியை வைத்து வில்லன்களை காலி செய்வார்(திலீப் சுப்பராயன்).கொஞ்சம் அதையே மிக பிரம்மாண்டமாக எடுத்தது போல இருந்தது.
    பாபி தியோல் படங்களை அதிமாக நாம் பார்த்ததில்லை. பிச்சூ  பார்த்ததாக நினைவு .இப்படத்தில் ஒரு வினோதமான தோற்றத்துடன் வருகிறார் .அந்த மத்திய கிழக்கு தோற்றம் அந்த கேரக்டருக்கு பொருந்துகிறது. மெட்ரோ ஆட்டாம் பிரித்விராஜ் வீணடிக்கபட்டுள்ளார்.சிக்ஸ் பேக்ஸ் சகிதம் குறுக்க மறுக்க நடப்பதோடு சரி.இவர் வயதான அல் பசினோவை சில கோணங்களில் நினைவூட்டுகிறார் (நடிப்பில் அல்ல.தோற்றத்தில் மட்டும்).
     ரன்பீர் கபூர் சஞ்சு பட பாதிப்பில் இருந்து மீளவே இல்லையா?இல்லை சஞ்சு படம் பார்த்த நமக்கு அந்த கதாபாத்திர நினைவு கண்முன் நட்டுகுத்தலாக நிற்கிறதா என்று சொல்லத்தெரியவில்லை.ஆனால் பெரிய ஃபங்க் தலைமுடியுடன் வரும் பிளேஸ் பேக் காட்சியில் அப்படியே சஞ்சு பாபா போலவே இருக்கிறார்!ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் கட்டுடல் மேனியோடு வருவது சக் நாரிஸ் & ரஜினிகாந்த் ஆகியோரை ஒன்றாக பார்த்த உணர்வு வந்தது 😃
     ராஷ்மிகா நடித்த படத்தை பார்ப்பது இதுவே முதல்முறை .பிந்து கோஷ்  குண்டு ஆர்த்தி ஆகியோர் திரையில் வந்தால் எப்படி பார்வையாளன் "ஓ இப்ப காமெடி காட்சி வரும் " என்று நினைப்பானோ அப்படியான உணர்வே இவரைக்கண்டால் வருகிறது 😃

       தான் ஆங்கிலம் பேசத்தெரியாமல் இருப்பது போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று இன்று பல பெற்றோர் பிள்ளைகளை லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்கும் பள்ளியில் சேர்ப்பதோடு நில்லாமல் அவர்களை ஆங்கிலத்தில் மட்டுமே பேச வைத்து பழகுகிறார்கள்.ஆனால் என்னதான் தமிழோ அல்லது வேறு தாய்மொழியோ தெரியாமல் வளர்த்தாலும் அந்த பிள்ளைகள் பேசும் ஆங்கிலம் அப்படியே அந்த தாய் மொழி போலத்தான் ஒலிக்கிறது!பீட்டர் செல்லர்ஸ் The Party படத்தில் "இந்திய" ஆங்கிலத்தில் அட்டகாசமாக பேசி நடித்திருப்பார் .அதே accent தான் இன்றும் உள்ளது!அதே தொனியில் தான் ராஷ்மிகா ஆங்கிலம் பேசுகிறார்! 😃அந்தக்காட்சிகள் எல்லாம் அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்கியது.குறிப்பாக பல்லை கடித்துக்கொண்டு ஆறடி ரன்பீரை அண்ணாந்து பார்த்தபடி அவர் பேசும் முகபாவம் அதைவிட தமாஷாக இருந்தது.உண்மையில் இவர் கொஞ்சம் முயன்றால் சிறந்த நகைச்சுவை நடிகை ஆகலாம்!(கிண்டல் அல்ல).
     நமக்கு cringe ஆகும் விஷயங்கள் என்றால் புது மோஸ்தர் பெண்ணியம்,wokism,கார்ப்பரேட் எதிர்ப்பு,ஏழ்மையை விதந்தோதுதல்,தற்கால அரசியல் நிகழ்வுக்கு "ஆட்சிக்கு தகுந்தாற்போல்" பொங்கல் வைத்தல் போன்றவைகளே!
    இப்படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள்.பொதுவாக எந்தப்பட இரண்டாம் பாகமும் (இந்திய மொழிகளில்)எடுபட்டதில்லை.பார்ப்போம்!