Sunday, 1 September 2024

Clean U எனும் அக்கப்போர்!

 "குடும்பத்தோடு பார்க்கலாம்" என்று பரிந்துரை செய்யப்படும் படங்கள் உண்மையில் அப்படித்தான் உள்ளனவா?வன்முறை காட்சி என்றால் வெறும் வெட்டுக்குத்து, இரத்தம் ,குண்டு வீச்சு - இவைகள் மட்டும்தானா??
     கண்டிப்பாக குடும்பத்தோடு பார்க்கலாம் என்று எல்லாரும் சொல்லும் படங்களில் நிச்சயமாக மொழி படம் இடம்பெறும்!
      படத்தில் ஒரு வன்முறை காட்சி இல்லை என்பார்கள்!Clean U என்பார்கள்!உண்மை அதுதானா?
          பேராசிரியர் ஞானப்பிரகாசம் தனது மகன் பாபுவை பறிகொடுத்த அந்த தருணத்திலேயே நின்று விட்டவர்.ஒரு Mental Trauma!ஆனால் படத்தில் அந்த கேரக்டரை ஒரு கோமாளியை போலவே காட்டி இருப்பார்கள்!
     இதில் உச்சகட்ட வன்முறையாக கார்த்திக்(பிரித்விராஜ்) ஞானப்பிரகாசத்தை உலுக்கி எடுத்து அவர் மகன் இறந்துபோன உண்மையை அவருக்கு உணர்த்துகிறாராம்.இந்த காட்சியை சிலாகிக்காதவர்கள் இல்லை!சினிமா வரலாற்றில் இடம்பெற்ற குரூர காட்சிகளில் இதுவும் ஒன்று!



    ஏனய்யா அந்த கேரக்டர் எந்த வேலை வெட்டிக்கும் போகாமல் வீட்டில் வேளா வேளைக்கு தின்னுட்டு தூங்கும் ஆளா?இல்லை போவோர் வருவோரிடம் கையை பிடித்து இழுப்பது; வன்முறையாக நடந்து கொள்வது என்பது மாதிரி எதேனும் செய்யும் கேரக்டரா?இல்லை! நள்ளிரவில் அலறும் கேரக்டரா?இல்லை!கத்தி எடுத்துக்கொண்டு சகட்டுமேனிக்கு கொலை செய்பவரா?இல்லை!
     பிறகு ஏன் அவரை உலுக்கி நிகழ் காலத்திற்கு அவரை கொண்டுவர வேண்டும்??மீதமிருக்கும் காலம் முழுக்க புத்திர சோகத்தில்  எரிந்து சாம்பலாக மற்றொரு புறம் கார்த்திக் அர்ச்சனா(ஜோதிகா) வுடன் ஜாலியாக டூயட் பாடுவார்!இது குரூர வன்முறை இல்லையா? கோணலான எல்லாவற்றையும் நிமிர்த்தித்தான் ஆக வேண்டுமா?
    இதற்குத்தான் நாம் தொடர்ந்து சொல்வது ஒன்றே!
இந்த மனித நேயம் பேசுகிறேன் என்று டார்ச்சர் பார்ன் எடுப்பது,மொழி மாதிரி "Clean U" படங்கள் என்ற பேரில் வன்முறை காட்சியை வேறு வகையில் திணிப்பது இவற்றை எல்லாம் விட மேலானது நேரடியாக இரத்தம் தெறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட படங்கள்!அவை எதையும் மறைப்பதில்லை.போலி லேபிள்கள் சகிதம் அவை வருவதில்லை!அத்தகைய படங்களை வன்முறை காட்சிகள் பார்க்க விரும்புவோர் மட்டுமே பார்ப்பார்கள்!ஆனால் மேற்கூறிய பசுந்தோல் போர்த்திய படங்கள்???

     
       
    

Sunday, 2 June 2024

NTR

 என்.டி. ராமாராவ் என்றாலே தமிழ் மக்களுக்கு இரண்டு விஷயங்கள் உடனே நினைவுக்கு வரும்
- படங்களில் ராமர் கிருஷ்ணர் வேடம் போட்டவர்

- எம்.ஜி.ஆர் போல தனிக்கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆனவர்.

 
    முதல் விஷயத்தை எடுத்துக்கொள்வோம்.இருபதுக்கும் மேற்பட்ட  படங்களில் அவர் ராமர் மற்றும் கிருஷ்ணர் வேடம் போட்டார். பி.ஆர்.பந்துலு இயக்கிய கர்ணன் படம் வெற்றி பெற்றது.அதில் கர்ணன் கதாபாத்திர சித்தரிப்பு என்பது அசல் மகாபாரதத்தில் உள்ளதற்கு துளியும் தொடர்பில்லாத ஒன்று என்பது அசல் புராணத்தை வாசித்தவர்களுக்கு தெரியும்.


 

     கர்ணன் ரொம்ப உத்தமன்.ஏகப்பட்ட தான தர்மங்கள் செய்தவன்.தன்போக்கில் அமைதியாக இருந்தவன்.
சூழல் காரணமாகவே அவன் வில்லனாக மாறினான் என்று பார்ப்போருக்கு கழிவிரக்கம் உண்டாகும் வகையிலேயே அந்த போலி சித்தரிப்பு இருக்கும்.அதைப்பார்த்து என்.டி.ஆர் தானவீரசூரகர்ணன் மாதிரியான படங்களை எடுத்தார் .கர்ணனும் அவரே துரியோதனனும் அவரே கிருஷ்ணரும் அவரே.அதில் கர்ணன் படப்பாணியில் கர்ணன் துரியோதனன் ஆகியோர் மீது கழிவிரக்கம் வருவது மாதிரியான காட்சிகளை வைத்தார்.
      நிஜ வாழ்வில் என்.டி.ஆர் தீவிர பக்திமான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.அத்தனை புராணப்படங்களில் நடித்தவர், பிற்காலத்தில் காவி உடையில் வலம் வந்தவர் என்றெல்லாம் சொன்னாலும் அவர் பெரிய பக்தி ஈடுபாடு கொண்டவர் அல்ல என்பதே உண்மை.வீட்டில் பெரிதாக பூஜைகள் செய்பவர் இல்லை.வெளியில் ஷூட்டிங், பிற்காலத்தில் பிரச்சாரம் என்று சென்றாலும் தனது உடனிருப்பவர்களை கோவிலுக்கு செல்ல சொல்லி விபூதி குங்குமம் பிரசாதம் மட்டும் வாங்கிவர சொல்வார்.
      ஆனால் அவருக்கு வேறு ஈடுபாடு இருந்தது.நள்ளிரவில் தனது பங்களாவில் சில தாந்த்ரீக பூஜைகள் செய்தார் என்ற குற்றசாட்டு எழுந்தது.அதெல்லாம் உண்மையா என்று தெரியாது.ஆனால் அந்த குற்றச்சாட்டு எழுந்ததும் என்.டி.ஆர் தனது பண்ணை வீட்டிற்கு செல்வதை நிறுத்தினார் .ஆனால் அவர் என்றும் செலக்ட்டிவ் நாத்திகம் பேசியதில்லை.இந்த ஒன்றுதான் வித்தியாசம்!இந்த விஷயத்தில் அவர் கொஞ்சம் எம்ஜியாருக்கு நெருக்கமானவர் என்றே கூறலாம்.

     இப்போது இரண்டாவது விஷயம்.எம்.ஜி.ஆர் போல கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்தவர் என்பது மேலோட்டமாக உண்மையாக இருக்கலாம்.ஆனால் பலத்த வேறுபாடுகள் உண்டு.

 
     எம் ஜி ஆர் முதலில் காங்கிரஸ், பிறகு திமுக என்று இருபது வருடங்களுக்கு மேல் அரசியல் கட்சியில் தொண்டனாக பிறகு பல்வேறு பதவிகளில் இருந்தவர்.அரசியல் ஆர்வம் என்பது அவருக்கு இருந்தது.தொடர்ந்து அன்றாட அரசியல் நிகழ்வுகளை கூர்ந்து கவனிப்பவராக இருந்தார்.பிற்காலத்தில் தான் தனிக்கட்சி முதல்வர் பதவி எல்லாம் வந்தது.

    ஆனால் என்.டி.ஆர் அப்படியல்ல!நடிகராக இருக்கும்வரை அரசியல் உள்ளிட்ட எந்த அன்றாட நிகழ்வு குறித்தும் எந்த ஆர்வமும் இல்லாமல் இருந்தார்.செய்தித்தாள் வாசிப்பு பழக்கம் கிடையாது .எந்த கட்சியிலும் இருந்ததில்லை.தனது அறுபதாவது பிறந்தநாளில் அரசியலில் நுழையப்போவதாக அறிவிக்கிறார் .
       மேலும் எம்ஜியார்  தானதர்மங்கள் செய்பவர்.அந்த விஷயத்தில் அவர் கணக்கு பார்ப்பதில்லை.ஆனால் என்.டி.ஆர் அப்படியல்ல.ஒரு பைசா செலவு செய்வதாக இருந்தாலும் அதை கையில் எடுத்து இரண்டு பக்கமும் பார்த்துவிட்டு மீண்டும் ஜேபுக்குள் போட்டுக்கொள்பவராக இருந்தார்
     கட்சி ஆரம்பித்த பிறகு கூட தனது ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் ஓரமாக கிடந்த பழைய வேனை ரிப்பேர் செய்து அதையே பயன்படுத்தினார்.ஆந்திரா முழுக்க அதிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.பகல் முழுவதும் மக்களை சந்திப்பது.இடையில் கிடைத்ததை வாங்கி சாப்பிடுவது.இரவில் எதாவது தொண்டர் வீட்டில் தூக்கம்.காலையில் சாலையோரமாக குளித்து விட்டு(அந்த போட்டோ அப்போது பிரபலமாக இருந்தது) மீண்டும் பிரச்சாரம் ஆரம்பம்.
      


அப்போது காங்கிரஸ் ஆட்சி.மேலிடத்தில் இருந்து 'நியமிக்கப்பட்ட ' முதல்வர்கள் மூன்று பேர் மூன்றாண்டுகளில் மாற்றப்பட்டிருந்தார்கள்.ஒருவகையில் அதுவே ராவுக்கு கட்சி ஆரம்பிக்கும் உத்வேகத்தை உண்டாக்கியது. "தெலுகு பிரைட்" என்பதை அவர் முன்வைத்தார்.அதுவே அவர் கட்சியின்/ஆட்சியின் பிரதானமாக இருந்தது.

    ஆனால் எதிர்கட்சியினர் தெலுகு தேசம் கட்சியை கம்மா கட்சி என்றார்கள். கம்மா பிரிவு நபர்களுக்கே கட்சியிலும் ஆட்சியிலும் முக்கிய பதவிகள் வழங்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்தது. "அதெல்லாம் இல்லை.என் கட்சி அத்தனை தெலுங்கு மக்களுக்காகவும் தான்"  என்று ராவ் எத்தனை சொல்லிப்பார்த்தும் அந்த பிம்பத்தை அவரால் உடைக்க முடியவில்லை.அந்தப்பக்கம் ஆந்திரா காங்கிரஸ்-  ரெட்டி கட்சி என அறியப்பட்டது!
      யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியை பிடித்ததும் இந்திரா அரசு மூலம் ஆந்திரா காங்கிரஸ் கட்சி இவருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறது.உச்சகட்டமாக பாஸ்கர ராவ் என்ற தெலுகு தேசம் கட்சியின் அமைச்சரை வைத்தே ஆளுநர் உதவியுடன் ஆட்சியை கவிழ்த்து பாஸ்கர ராவ் முதல்வராகிறார்.



      இதை என்.டி.ஆர் எதிர்பார்க்கவே இல்லை.அதிர்ந்து போகிறார்.இரா.செழியன்,சோ ராமசாமி,வாஜ்பாய் ஆகியோர் ஆந்திரா ஆளுநரை சந்தித்து இது சட்டப்படி தவறு என்று விளக்குகிறார்கள்.
     பிறகு தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் ஜனாதிபதி மாளிகை முன்பு நிறுத்துகிறார் என்.டி.ஆர்.கடும் போராட்டத்திற்கு பிறகு அவர் மீண்டும் ஆட்சிக்கு வருகிறார்.அப்போதெல்லாம் அவருக்கு பக்கபலமாக இருந்தவர்கள் அவர் மகன் ஹரிகிருஷ்ணா மற்றும் மருமகன் சந்திரபாபு நாயுடு!



        இந்த சமயத்தில் அவர் மனைவி பசவ தாரகம் இறந்து போகிறார்.இவருக்கு இருதய பைபாஸ் செய்யப்படுகிறது.
      சென்றமுறை எதோ மூன்றாவது நபரான பாஸ்கர ராவ் ஆட்சியை கவிழ்த்தார்.ஆனால் அடுத்தமுறை சொந்த மருமகன் சந்திரபாபு நாயுடுவே அதை செய்கிறார்.இம்முறை அதை வெற்றிகரமாக செய்கிறார்.  
    ஆட்சி கவிழ்ப்பு வெற்றிபெற மிக முக்கிய காரணம் லக்ஷ்மி பார்வதியை என்.டி.ஆர் இரண்டாம் திருமணம் செய்துகொண்டது.ஆம் இருவருக்கும் அது இரண்டாம் திருமணம் தான். கதாகாலட்சேபம் செய்பவரின் மனைவியாக இருந்தவர் லக்ஷ்மி பார்வதி.பட்டப்படிப்பு படித்தவர்.புத்தக வாசிப்பு பழிக்கம் கொண்டவர்.ராமா ராவ் சுயசரிதை எழுத அவருடன் தினம் நடத்திய உரையாடலில் ராவுக்கு இவரின் துணை ஆறுதல் தருவதாக இருப்பதை உணர்கிறார்.ஏற்கெனவே மனைவியின் மரணம்,சொந்த உடல்நிலை கோளாறுகள், தில்லி கொடுக்கும் குடைச்சல் போக சொந்த கட்சியிலேயே ஏகப்பட்ட குழிபறிப்புகள் என்று கடும் நெருக்கடியில் இருந்தவர் இந்த உறவில் ஆறுதல் காண்கிறார்.
    இடையில் காங்கிரசுக்கு எதிராக நாடு முழுக்க ஒரு அரசியல் அணியை திரட்டுகிறார்.ஐக்கிய முன்னணி 1989 இல் ஆட்சியை பிடிக்கிறது.ஆனால் தெலுகு தேசம் ஒரு எம்பி ஸீட் கூட வெல்லவில்லை என்றாலும் அவர் மீதுள்ள மரியாதையில் ஆட்சியின் முக்கிய முடிவுகள் என்.டி.ஆர் உடன் கலந்தாலோசித்து பிறகே எடுக்கப்படுகிறது.

மாநில உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்பது அவரது பிரதான நோக்கமாக இருந்தாலும் அவர் என்றும்  தேச பிரிவினைவாதம் பேசியதில்லை.
     ஆனால் பிள்ளைகளுக்கு அசல் தாய் தந்தை தான் என்றும் மனதில் நிற்பார்கள்.அது இயல்பு.அவரது மகன் மகள்கள் மருமகன் மருமகள்கள் என்று யாருமே இவரின் இரண்டாம் திருமணத்தை ஏற்கவில்லை.குறிப்பாக சந்திரபாபு நாயுடு!

 

      சென்றமுறை பாஸ்கர ராவ் தில்லி தயவை நம்பி கண்மூடித்தனமாக ஆட்சியை கவிழ்த்து தோல்வி அடைந்தார்.காரணம் பெரும்பான்மை எம்.எல். ஏக்கள் ராவ் பக்கம் இருந்தனர்.இந்தமுறை அந்த தவறு நிகழாமல் பார்த்துக்கொண்டார் நாயுடு.
ஆட்சியில் லக்ஷ்மி பார்வதி தலையீடு என்பதை நிறுவி கட்சி எம்.எல். ஏக்களை தன் பக்கம் இழுத்தார்.மேலும் ராவின் பிள்ளைகளான பாலகிருஷ்ணா ஹரிகிருஷ்ணா ஆகியோரை வைத்து பொதுவெளியில் தனக்கு ஆதரவு திரட்டினார் .
     இது போதாதென்று ரஜினிகாந்த் உதவியையும் நாடினார் .ஆட்சியை கவிழ்த்து தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்க வைக்கிறார் நாயுடு.அங்கு வந்து ரஜினி உள்ளிட்டோர் ராவின் இரண்டாம் திருமணம் குறித்தும், ஆட்சியில் லக்ஷ்மியின் தலையீடு குறித்தும் கடுமையாக விமர்சிக்கிறார்கள்
     அந்த ஹோட்டலுக்கு வெளியே வந்து எம்.எல்.ஏ க்களை அழைத்த என்.டி.ஆர் மீது செருப்பு உள்ளிட்டவற்றை வீசுகிறார்கள்.மனம் நொந்து வீடு திரும்புகிறார் .நாயுடு முதல்வர் ஆகிறார்.
       இது பிரச்சனையில்லை.நான் மக்களிடம் ஆதரவு பெற்றுத்தானே முதல்வர் ஆனேன்.மீண்டும் அவர்களை சந்தித்து இந்த அநியாயத்தை எடுத்து கூறி 1984 இல் மீண்டும் ஆட்சியை பிடித்தது போல வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையோடு இருந்தவர் மாரடைப்பால் காலமாகிறார்.
        ரஜினி மோகன் பாபு இருவரும் அவர் உடலுக்கு மரியாதை செலுத்த அவர் வீட்டுக்கு செல்ல முயன்ற போது என்.டி.ஆர் ரசிகர்களால் விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

        எம்ஜியார் ஆட்சியில் இருந்தபோதும் அவருக்கு எதிராக எஸ்.டி.எஸ் போன்றோர் குடைச்சல் கொடுத்தனர்.வேறொரு "பெரிய" தலைவர் ராஜீவை சந்தித்து எம்ஜியார் பதவிக்கு வேட்டு வைக்க முயன்றதாக சொல்லப்பட்டது.வெளியில் நாராயணசாமி நாயுடு நடத்திய போராட்டங்கள்.ஆனால் எம்ஜியார் தன்னை தன் கட்சியினரே கவிழ்ப்பதற்கான பெரிய காரணங்கள் எதையும் கடைசி வரை கொடுக்காதது அவர் சாமர்த்தியம்.ஆனால் என்.டி.ஆர் அந்த காரணத்தை வழங்கினார்.லக்ஷ்மி பார்வதியை மறுமணம் செய்ததுதான் அந்தக்காரணம்!

 



     என்.டி.ஆர் கதானாயக்கடு ,என்.டி.ஆர் மஹாநாயக்கடு ஆகிய படங்களில் என்.டி. ஆராக பாலகிருஷ்ணா நடித்துள்ளார்.தோற்றத்தில் நன்றாக பொருந்தி வந்துள்ளார் பாலகிருஷ்ணா.

இராவணன் கதாபாத்திரத்திற்கு பத்து தலைகளையும் தனித்தனியே படமாக்க வேண்டும் என்பதற்காக கிட்டத்தட்ட பத்து மணிநேரம் மிக அதிக வெளிச்சத்தில் அசையாமல் என்.டி.ஆர் நின்ற காட்சி காட்டப்படுகிறது.கதாநாய்க்கடு படம் அவரது திரை வாழ்வை பற்றியது.என்.டி.ஆரை பொறுத்தளவில் திரை வாழ்க்கை அரசியல் வாழ்க்கை என்று தனித்தனியே சுலபமாக பிரிக்கலாம்.அறுபது வயது வரை திரை வாழ்க்கை.அதற்குப்பின் அரசியல் வாழ்க்கை.ஆனால் எம்ஜியாருக்கு இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து இருந்தது .
     கதாநாயக்கடு படத்தில் சிவாஜி கணேசன் எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தமிழ் நடிக நடிகைகள் எவரும் காட்டப்படுவது இல்லை.ஏற்கெனவே நடிகையர் திலகம் படத்திலும் அவ்வாறே செய்திருந்தனர். மஹாநாயக்கடு படத்தில் அனைத்து முதல்வர்கள் மாநாட்டு காட்சியில் எம்ஜியார் இவரா?அவரா?என்று சந்தேகிக்கும் வண்ணம் ஒரு எக்ஸ்டிரா நடிகரை டம்மி போல உட்கார வைத்திருந்தனர் !
      மேலும் பசவ தாரகம் கேரக்டரில் வித்யா பாலன்.இவர் எல்லா படத்திலும் ஸ்லோ மோஷனில் நடிப்பது வழக்கம்.இப்படத்திலும் அப்படியே!ஏனென்று நமக்கு தெரியவில்லை!இதனால்தான் மனசெல்லாம் படத்தில் இவரை இயக்குனர் நிராகித்தாரோ??
     மஹாநாய்கக்கடு படம் அவரது அரசியல் வாழ்வு பற்றியது.ஆனால் அது முழுமையாக காட்டப்படவில்லை.நடிகையர் திலகம் படத்தில் சாவித்திரியின் இறுதிக்காலம் காட்டப்படாமல் முடிக்கப்பட்டதோ அதேபோல என்.டி.ஆரின் வீழ்த்தப்பட்டது குறித்த காட்சிகள் இதில் இல்லை. சில காரணங்கள் நமக்கு தோன்றியது
- அப்படி அவர் வீழ்த்தப்பட்ட காலத்தை காட்ட வேண்டும் என்றால் பாலகிருஷ்ணா உள்ளிட்ட அனைவரும் அவருக்கு எதிராக பேசியது செயல்பட்டது போன்றவற்றை காட்ட வேண்டும்.
- நடிகர் கிருஷ்ணா(மகேஷ் பாபுவின் தந்தை) தீவிர காங்கிரஸ் அபிமானி.அவர் என்.டி.ஆரை மிக கடுமையாக கேலி கிண்டல் செய்வதை காட்ட வேண்டி இருந்திருக்கும்.
- கதாநாயக்கடு படத்தில் நாகேஸ்வர ராவ் உடனான நெருக்கமான நட்பு காட்டப்படுகிறது.ஆனால் அதே நாகேஸ்வர ராவ் பிறகு காங்கிரசில் சேர்ந்து என்.டி.ஆரை வறுத்ததெடுக்கிறார்.
- ரஜினி  சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக பேசியதை காட்ட வேண்டி இருந்திருக்கும்.
இதெல்லாம் திரை உலகில் பெரிய சர்ச்சைகளை கிளப்பி பாலகிருஷ்ணாவின் பொதுவெளி பிம்பத்திற்கே வேட்டு வைப்பதாக அமைந்திருக்கும்.அது மட்டுமல்லாது சந்திரபாபு நாயுடுவின் பெயரும் அடிபட்டு தெலுகு தேசம் கட்சியின் செல்வாக்கும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்திருக்கும்.இதையெல்லாம் கருத்தில் கொண்டே பாலகிருஷ்ணா அந்தப்பகுதிகளை தவிர்த்திருக்கலாம்.தவிரவும் தெலுங்கு சினிமாவில் ரொம்பவும் இருண்மையான சித்தரிப்புகளை மக்கள் விரும்ப மாட்டார்கள்(நடிகையர் திலகம் கூட அவற்றை தவிர்த்தது).

   ஆனால் ராம்கோபால் வர்மா இயக்கிய Lakshmi's NTR படத்தில் அவர் 1989 தேர்தலில் தோல்வியடைந்து அனைவரும் கைவிட்ட நிலையில் லக்ஷ்மி பார்வதி அவரின் சுயசரிதையை எழுத வருவதாக காட்டி இருப்பார்.இந்தப்படம் மஹாநாயக்கடு படத்தை விட பல மடங்கு உண்மைக்கு நெருக்கமாக வந்திருப்பதை காண முடிந்தது.

 
      இந்த மூன்று படங்கள் உருவாக்கிய என்.டி.ஆர் குறித்தான பிம்பத்தை விடவும் Ramesh Kandula எழுதிய Maverick Messiah புத்தகம் உருவாக்கிய பிம்பம் இன்னும் தெளிவாக ஒளிவு மறைவு அவ்வளவாக இல்லாமல் இருந்தது.
 

 
சென்ற வருடம் என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சந்திரபாபு நாயுடு,பாலகிருஷ்ணா,ரஜினிகாந்த் போன்றோர் பங்கேற்று அவரை புகழ்ந்து தள்ளினர். இறந்தவர்களால் எந்தப்பிரச்சனையும் இல்லையல்லவா!

    
     

Thursday, 23 May 2024

Kagemusha(1980)

 ஒரு மனிதனின் தனித்தன்மையான அடையாளம் என்பது அவன் தோற்றம் மட்டும்தானா? என்று கேட்டால் மேம்போக்காக ஆமாம் என்று சொல்லலாம்.ஆனால் இன்னும் சற்று நுட்பமாக பார்க்கும்போது அது மட்டுமல்ல என்பது விளங்கும்.

 

     இரட்டை வேடங்களில் ஒரு நடிகர் அல்லது நடிகை நடித்த படங்கள்  தமிழிலேயே ஏராளம் உண்டு.ஒருவர் நல்லவர்.மற்றொருவர் கெட்டவர்.ஒருவர் உயரம் மற்றொருவர் குள்ளம்.இப்படி நேரெதிர் தோற்றங்கள்/குணாதசியங்கள் கொண்ட படங்களை கண்டிருப்போம்.

       இப்படம் அப்படியான ஒரு படமா? என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம்.ஷின்ஜென் என்ற அரசர் எதிரியின் துப்பாக்கி குண்டுபட்டு உடல்நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது.அப்போது அவரைப்போலவே தோற்றம் கொண்ட ஒரு திருடனை அவர் முன் நிறுத்துகிறார் ஷின்ஜென்னின் தம்பி.

     பல காலமாக ஷின்ஜென்னுக்கு ஆபத்து நேரக்கூடிய இடங்களுக்கு அவருக்கு பதில் சென்றவர் அவர் தம்பி.தொலைவில் எதிரி நாட்டு ஒற்றர்கள் உளவு பார்க்கும்போது ஷின்ஜெண் போலவே இருப்பார்.தொடர்ந்து ஷின்ஜென்னின் நிழல் போலவே இருந்து ஷின்ஜென் இல்லாமல் போகும்போது தம்பிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!தனக்கான ஆளுமை என்ற ஒன்றே இல்லாமல் இருப்பதை அப்போதுதான் அவன் உணர்கிறான்.
    ஷின்ஜென் உயிர் துறந்ததுன் அந்த இடத்தில் இந்த திருடனை அமர வைக்கின்றனர்.அதுவரை அவரது தம்பி செய்த தோற்றமயக்க வித்தைகள் வெளியாட்களுக்கு மட்டுமே.வீட்டுக்குள் அல்ல.ஆனால் இந்த திருடன் செய்யப்போகும் ஆள் மாறாட்டம் வெளியிலும் வீட்டிலும்.

அசலும் நிழலும்


      ஷின்ஜென் ஒரு மலையோடு உவமானம் செய்யப்படுகிறார்.குறிப்பிட்ட தியான முறை ஒன்றில் அரை மணிநேரம் மலை போல அசைவற்று அமர்ந்திருப்பது குறித்து பலருக்கு தெரிந்திருக்கலாம்.அப்போது உடலை அசைவற்று வைத்ததும் கொஞ்சம் கொஞ்சமாக மூச்சு நிலைபெற்று சமநிலைக்கு வரும்.பிறகு அதைப்பின்தொடர்ந்து மனதும் அடங்க ஆரம்பிக்கும்.

    ஒருவகையில் இப்படம் பார்ப்பதே நமக்கு மூன்று மணிநேரம் தியான செய்த ஆழ்ந்த அமைதியான உணர்வை தந்தது.ஒவ்வொரு முறை இப்படத்தை பார்க்கும்போதும் அவ்வாறே இருக்கிறது.
        நெருப்பைப்போல உக்கிரமாக காற்றைப்போல துரிதமாக காட்டைப்போல அமைதியாக மலையைப்போல் எதற்கும் அசைந்து கொடுக்காத நிலை குறித்து பேசப்படும் வசனங்கள் அவ்வளவு ஆழம் பொதிந்தவை.
       போர்க்காட்சிகள் என்றால் ஆவேசமாக இருபக்கமும் வெட்டி சாய்ப்பதை காட்டாமல் வெறுமனே துப்பாக்கியின் தொடர் வெடிப்புகளை ஒலிக்க வைத்து பிறகு சில குதிரைகள் மற்றும் குற்றுயிராக துடிக்கும் வீரர்களை காட்டுவதன் மூலம் அந்த குரூரத்தை பதிவு செய்கிறார்.

     மேலும் அந்த திருடனின் கனவில் ஷின்ஜென் இவனை துரத்தும் அந்த surreal காட்சி மிகவும் உணர்ச்சிப்பெருக்காக இருந்தது.படத்தின் ஆன்மாவை அக்காட்சி வெளிப்படுத்தியது.
 


    கடைசியில் போலி ஷின்ஜென்னும் சுடப்பட்டு ஆற்றில் அந்த ராஜ்ஜியத்தின் கொடியை கடந்து மிதந்து செல்கிறான்.அந்தக்காட்சி எடுக்கப்பட்ட விதமும் கட்சிக்கான பின்னணி இசையும் ஒவ்வொரு முறையும் படம் பார்க்கும்போது உலுக்கி விடுகிறது!
    ஷின்ஜென்னாகவும் திருடனாகவும் Tatsuya Nakadai அற்புதமாக நடித்துள்ளார்.ஷின்ஜென் கதாபாத்திரத்தில் அதிகார தோரணையில் பார்ப்போர் மரியாதை செலுத்தும் வண்ணம் இருப்பதும்,திருடன் கதாபாத்திரத்தில் எதை திருடலாம் ( ஷின்ஜென்னின் உடல் வைக்கப்பட்டிருக்கும் தாழியை உடைத்து அதில் பொக்கிஷம் இருக்கும் என்று பார்க்கிறான்.ஆனால் உள்ளே இருப்பதோ வேறு) என்று முழிப்பது,பிறரை எகத்தாளமாக பார்ப்பது என்று இருந்துவிட்டு பிற்பகுதியில் தன்னால் ஷின்ஜென்னின் மாபெரும் ஆளுமையை நிரப்ப முடியாமல் போனதை எண்ணி வருந்துவது,தனது அதிகபிரசிங்கித்தனத்தால் மாபெரும் போருக்கு காரணமாகி அத்தனை உயிர் போனதை கண்டு கலங்கும் காட்சி என்று ஒரு மிகப்பெரிய கேன்வாசில் வரையப்பட்ட மாபெரும் ஓவியம் போல ஒரு பிரம்மாண்டமான கதாபாத்திரத்தை அட்டகாசமாக செய்துள்ளார்.
     அதிகார உள்வட்டத்தின் சிலரைத்தவிற மற்ற எல்லாருமே இந்த திருடனை ஷின்ஜென்னாக ஏற்றுக்கொண்டு விட்டனர்.முதலில் "இது எனது தாத்தா இல்லை" என்று உண்மையை கண்டுபிடித்த பேரப்பிள்ளையும் அவனை ஏற்றுக்கொண்டு விடுகிறான்.ஷிஞ்சென் மட்டுமே பயன்படுத்த முடிந்த குதிரை ஒன்று இருக்கிறது .அதில் ஏறி குதிரை தூக்கி எறிய போலி அம்பலப்பட்டு நிற்கிறான்.ஏன் அதை செய்தான்?அவன் பாட்டுக்கு  வேடத்தில் இருந்திருக்கலாம்.
    சுற்றி இருப்பவர்கள் அனைவரும் அவனுக்கு கொடுத்த ராஜமரியாதையை அவன் தனக்கானது என்று நம்பியதால் ஏற்பட்ட சறுக்கல் தான் இது!அந்த மரியாதை ஷின்ஜென்னுக்கானது!

Sunday, 5 May 2024

Blow Out மற்றும் சில மர்ம வழக்குகள்!

 பொதுவாக இந்த பிரபல படுகொலை வழக்குகள்,மர்ம மரணங்கள் ஆகியவைகளுக்கு இடையே ஒருவித ஒற்றுமை உண்டு. இரண்டுவகையான வழக்குகள் குறித்த பேச்சுக்கள் விவாதங்கள் எல்லாம் அந்த சம்பவம் நடந்தவுடனே சுனாமி போல எழும்.பிறகு அதிகபட்சம் சில மாதங்கள்; ரொம்ப பிரபலமாக இருந்தால் சில ஆண்டுகள் அதைப்பற்றி பேச்சு ; அந்த வழக்கு என்னவானது என்ற கேள்வி போன்றவைகள் இருக்கும்.பிறகு? நிசப்தம்!

    Brian De Palma  இயக்கிய Blowout படம் அந்தவகையில் நமக்கு மிக மிக பிடித்த படம்.படம் எடுக்கப்பட்ட விதம் என்பது ஒருபக்கம் இருந்தாலும் படத்தில் நம்மை ஈர்த்தது அந்த நேர்மை.யதார்த்தத்தை நேர்மையாக காட்டிய படமது.



     அமெரிக்க ஜனாதிபதிக்கான பிரைமரி போட்டியில் முன்னணியில் இருக்கும் ஒருவர்,நிச்சயமாக அவர்தான் அடுத்த ஜனாதிபதி என்று அனைவருமே நம்பும் ஒருவர் காரோடு நீர் நிலையில் விழுந்து இறக்கிறார் .
       அந்த இடத்திற்கு அருகே தனது திரைப்பட ஒலி தொகுப்பிற்காக இயற்கை ஒலிகளை பதிவு செய்துகொண்டிருக்கும் நாயகன் அந்த கார் விழும் ஒலியையும் பதிவு செய்கிறான்.அந்த பிரபலம் வேறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருப்பதை ரகசியமாக போட்டோக்கள் எடுக்கிறார் இன்னொருவர்.அவைகளை பிறகு இணைத்து ஒரு வீடியோவாக ஆக்கி பார்த்தால் காரின் டயர் சுடப்பட்டு அதனாலேயே நிலை தடுமாறி கார் நீரில் விழுந்தது என்பதை கண்டுபிடிக்கிறார் நாயகன்.
     பிறகு அதை அம்பலப்படுத்த எடுக்கும் முயற்சி கடைசியில் மொத்தமாக சின்னாபின்னமாகி விடுகிறது .தனது காதலியையும் இழக்கிறான்.படம் அத்தகைய வெறுமையில் தான் முடிகிறது.
     நிஜ வாழ்வில் ஜான் எஃப் கென்னடி அவரது சகோதரர் ராபர்ட் கென்னடி ஆகியோரின் படுகொலை வழக்குகளை சில ஆண்டுகளுக்கு முன் டாப் டூ பாட்டம் படித்ததில் தலை சுற்றியதுதான் மிச்சம்.அவ்வளவு குளறுபடிகள் குழப்பங்கள் வினோத திசை திருப்பல்கள்.வாரன் கமிஷன் அறிக்கை என்பது ஒரு கட்டுக்கதை என்பது கென்னடி இருந்த ஜனநாயக் கட்சிக்கும் தெரியும்.அமெரிக்க மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரியும்.இருந்தாலும் என்ன செய்ய முடிந்தது??நிசப்தம்!




     ராஜீவ் படுகொலை நிகழ்ந்த அடுத்த நாள் தொடங்கி ஜெயின் கமிஷன் அறிக்கை வரை தொடர்ந்து விடாமல் நாள்தோறும் செய்தித்தாளில் அந்த செய்தியை வாசிப்பது நமது வழக்கமாக இருந்தது.ராஜேஷ் குமார் நாவலில் வருவது போல " முதல் பக்கம் எட்டு பத்திக்கு இருந்த செய்தி கடைசி பக்கத்தில் கால் பத்தியாக .." மாறும் வரையில் வாசித்தோம்.
     ஏகப்பட்ட குழப்பங்கள் ஓட்டைகள் பல்டிக்கள்....பிறகு bigger conspiracy ஐ கண்டுபிடிக்க 1999 இல் பல்நோக்கு விசாரணை குழுமம் அமைக்கப்பட்டது.சில ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ஆயுளும் முடித்து வைக்கப்பட்டது.சரி இத்தனை ஆண்டுகள் செயல்பட்ட அந்த குழுமத்தின் கண்டுபிடிப்புகள் என்ன?யாரையெல்லாம் விசாரித்தார்கள்?இத்தனை ஆண்டுகள் என்னதான் செய்தார்கள்???நிசப்தம்!
     சில ஆண்டுகளுக்கு முன் மீடியாவை உலுக்கிய சுஷாந்த் சிங் ராஜ்புத் மர்ம மரணம்.அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் அவரது மேனேஜர் திஷா சாலியான் மர்ம மரணம் .இருவர் மரணமும் "தற்கொலை" என்றார்கள்.



    சமீபத்தில் சுஷாந்த் உடலை பிரேத பரிசோதனை செய்த மார்ச்சுரி காவலாளி சுஷாந்த் உடலில் ஏகப்பட்ட காயங்கள் இருந்ததாகவும் இது குறித்து மருத்துவர்களிடம் கூறிய போது அமைதியாக இருக்கும்படி அவர்கள் கூறியதாக சொன்னார் .இவரே வழக்கு நடக்கும்போது இதை பேசவில்லை.

திஷா சாலியான்


    மேலும் திஷாவின் மர்ம மரணத்தில் சம்மந்தப்பட்ட அந்த இரு பெரும் மராட்டிய  புள்ளிகள் சுஷாந்த் வழக்கிலும் சம்பந்தப்பட்டதாக பேச்சுக்கள் எழுந்தன. சுஷாந்த் நடிகர் மட்டுமல்லாது தீவிர அறிவியல் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார்.அவர் மிக குறைந்த செலவில் படம் தயாரிக்கும் ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தியதாக கூறப்படுகிறது.அதற்கும் அவரது மர்ம மரணத்துக்கும் சம்மந்தம் உண்டா?அவரோடு தொடர்புடைய நான்கைந்து நண்பர்கள் மர்மமாக இறந்தது/காணாமல் போனது என்று ஏகப்பட்ட குழப்பங்கள்.சி. பி.ஐ விசாரணைக்கு எடுத்து நான்காண்டுகள் ஆகிறது.வழக்கில் என்ன முன்னேற்றம்??நிசப்தம்.
     இதேபோல ஜியா கான் மரணம்,(காதலர் தினம்) குணால் மும்பையில் ஒரு அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட வழக்குகள் என்னாவாகின?சுனந்தா புஷ்கர் மரணம் நிகழ்ந்து பத்தாண்டுகள் ஆகிறது.அந்த வழக்கின் நிலை என்ன???நிசப்தம்!
     இப்போது பதிவின் ஆரம்பத்தில் பகிரப்பட்ட Blowout போஸ்டரில் ஜான் டிரவோல்ட்டாவின் முகபாவத்தை பாருங்கள்.தொடர்ந்து இந்த மர்மமான குழப்பங்கள் நிறைந்த வழக்குகளை பின் தொடர்ந்த ஒரு நபரின் முகபாவம் அப்படித்தான் இருக்கும்!
     





Sunday, 28 April 2024

Animal Park

 இப்படியொரு வெளியானதே முதலில் நமக்குத்தெரியாது.படம் வெளியான பிறகு ஆளாளுக்கு cringe cringe cringe என்று கிரிஞ்சித்தள்ளிய போதுதான் "இப்படி எல்லாரும் cringe ஆகிறார்கள் என்றால் கண்டிப்பாக பார்க்கக்கூடிய படமாகத்தான் இருக்கும்" என்றொரு எண்ணம் ஏற்பட்டது.(முனியாண்டியின் ஆரம்பக்கால எழுத்துக்களை ஒன்று விடாமல் படித்த உதயாவின் சிந்தனை வேறு எந்தமாதிரி இருக்கப்போகிறது?? - கும்மாங்கோ)

 

       தற்கால படங்கள் ,அது எந்த மொழிப்படமாக இருந்தாலும் சரி - wokism தளும்பத்தளும்ப இருப்பது வழக்கம்.அதுதவிற புது மோஸ்தர் பெண்ணியம் முதலாளித்துவ எதிர்ப்பு விவசாய ஆதரவு ..etc...etc..,
     எந்த மொழி புதுப்படத்தையும் பார்ப்பதற்கு முன்னர் ஆர். ஓ வில் வடிகட்டி பார்ப்பதற்கு காரணம் அதுதான்.
      மேலும் ஆல்ஃபா மேல் என்பதெல்லாம் தொண்ணூறுகள் வரையில் ரஜினி நடித்த படங்களை அவ்வகையில் சொல்லலாம்.பிறகு அவரை முள்ளும் மலரும் எங்கேயோ கேட்ட குரல் என்று உசுப்பேத்தி உசுப்பேத்தி கபாலி காலா லால் ஸலாம் என்றெல்லாம் சரிந்துவிட்டார்.மற்ற ஹீரோக்களும் அவ்வாறே! கேப்புடனுக்கு பிறகு தமிழ் சினிமாவின் ஆக்ஷன் அத்தியாயம் முடிந்தது தனிக்கதை.
       ஆனால் மேற்குறிப்பிட்ட படங்களில் ' ஆல்ஃபா மேல் ' குறித்த வசனங்கள் இடம்பெறாது.இப்படத்தில் அது கடுப்பை உண்டாக்கியது.
     மற்றபடி இப்படம் தந்தை மகன் பாசப்பிணைப்பை மையமாக கொண்டதாக கூறப்பட்டாலும் ஒரு மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால் படம் நெடுக "மகனே" "அப்பா" என்று பாச குழைவுகள் இல்லை .இன்னும் சொல்லப்போனால் தந்தை மகனை வெறுக்கிறார். தன் அருகிலேயே அவன் இருப்பது பிடிக்காதவராக இருக்கிறார்.
    மகன்தான் தந்தையை சூப்பர் ஹீரோவாக பார்க்கிறான்.தனது கடைசி காலத்தில் தான் மகன் மீது பாசத்தை காட்டுகிறார்.இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை.படத்தில் பலம் இதுதான்.
      மற்றபடி படம் நெடுக ஜட்டி ஜி string என்றெல்லாம் வருகிறது.ஒருகட்டத்தில் அது ஓவர் டோசாக போய்விடுகிறது என்றாலும் முனியாண்டியின் எழுத்துக்களில் ஊறியவர்களுக்கு இது சங்கடமாக தெரியாது 😃 (பின்னே உதயாவின் சிந்தனை உருப்படியாக இருக்கும் என்றா நினைத்தீர்கள்? - த.மணியன்).
     படத்தின் சண்டைக்காட்சிகளில் நமக்கு பிடித்தது அந்த ஹோட்டல் காரிடாரில் வரும் ரத்தக்களரி தான்.அந்நியன் படத்தில் இப்படி ஒரே ஆக் நூற்றுக்கணக்கான ஆட்களுடன் மோதும் காட்சி இருந்தாலும் அதில் மேட்ரிக்ஸ் பாதிப்பு ஓவராக போய் படம் பார்த்து கொண்டிருப்பவனையே ரோப்ல தொங்க விடும் அளவு சென்றது . அன்னியனில் இந்த காட்சி படமாக்கப்பட்ட போது வாத்தியார் ஷூட்டிங் ஸ்பாட் சென்றிருந்தார் ."அந்நியன் துரத்த ...சதா ஓட...ஆக்ஷன் பிளாக் ...இன்னும் கொஞ்ச நேரம் இங்கே நான் இருந்தால் என்னையும் கயிற்றில் கட்டி மிதக்க விட்டுவிடுவார்கள் என்று அங்கிருந்து தப்பித்தேன்" என்று எழுதி இருந்தார் (அசல் வார்த்தைகள் அல்ல.நினைவில் இருந்து எழுதுகிறோம்).
      அது மாதிரி எல்லாரும் சம்பந்தமில்லாமல் காற்றில் பறக்காமல் ஒரு சண்டைக்காட்சி.நன்றாகவே இருந்தது. அசுரவதம் என்ற மகா திராபை படத்தில் இதே போல ஹோட்டல் காறிடாரில் சசிகுமார் ஒற்றை ஆணியை வைத்து வில்லன்களை காலி செய்வார்(திலீப் சுப்பராயன்).கொஞ்சம் அதையே மிக பிரம்மாண்டமாக எடுத்தது போல இருந்தது.
    பாபி தியோல் படங்களை அதிமாக நாம் பார்த்ததில்லை. பிச்சூ  பார்த்ததாக நினைவு .இப்படத்தில் ஒரு வினோதமான தோற்றத்துடன் வருகிறார் .அந்த மத்திய கிழக்கு தோற்றம் அந்த கேரக்டருக்கு பொருந்துகிறது. மெட்ரோ ஆட்டாம் பிரித்விராஜ் வீணடிக்கபட்டுள்ளார்.சிக்ஸ் பேக்ஸ் சகிதம் குறுக்க மறுக்க நடப்பதோடு சரி.இவர் வயதான அல் பசினோவை சில கோணங்களில் நினைவூட்டுகிறார் (நடிப்பில் அல்ல.தோற்றத்தில் மட்டும்).
     ரன்பீர் கபூர் சஞ்சு பட பாதிப்பில் இருந்து மீளவே இல்லையா?இல்லை சஞ்சு படம் பார்த்த நமக்கு அந்த கதாபாத்திர நினைவு கண்முன் நட்டுகுத்தலாக நிற்கிறதா என்று சொல்லத்தெரியவில்லை.ஆனால் பெரிய ஃபங்க் தலைமுடியுடன் வரும் பிளேஸ் பேக் காட்சியில் அப்படியே சஞ்சு பாபா போலவே இருக்கிறார்!ஏகப்பட்ட அறுவை சிகிச்சை செய்த பிறகு மீண்டும் கட்டுடல் மேனியோடு வருவது சக் நாரிஸ் & ரஜினிகாந்த் ஆகியோரை ஒன்றாக பார்த்த உணர்வு வந்தது 😃
     ராஷ்மிகா நடித்த படத்தை பார்ப்பது இதுவே முதல்முறை .பிந்து கோஷ்  குண்டு ஆர்த்தி ஆகியோர் திரையில் வந்தால் எப்படி பார்வையாளன் "ஓ இப்ப காமெடி காட்சி வரும் " என்று நினைப்பானோ அப்படியான உணர்வே இவரைக்கண்டால் வருகிறது 😃

       தான் ஆங்கிலம் பேசத்தெரியாமல் இருப்பது போல தன் பிள்ளைகள் ஆகிவிடக்கூடாது என்று இன்று பல பெற்றோர் பிள்ளைகளை லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்கும் பள்ளியில் சேர்ப்பதோடு நில்லாமல் அவர்களை ஆங்கிலத்தில் மட்டுமே பேச வைத்து பழகுகிறார்கள்.ஆனால் என்னதான் தமிழோ அல்லது வேறு தாய்மொழியோ தெரியாமல் வளர்த்தாலும் அந்த பிள்ளைகள் பேசும் ஆங்கிலம் அப்படியே அந்த தாய் மொழி போலத்தான் ஒலிக்கிறது!பீட்டர் செல்லர்ஸ் The Party படத்தில் "இந்திய" ஆங்கிலத்தில் அட்டகாசமாக பேசி நடித்திருப்பார் .அதே accent தான் இன்றும் உள்ளது!அதே தொனியில் தான் ராஷ்மிகா ஆங்கிலம் பேசுகிறார்! 😃அந்தக்காட்சிகள் எல்லாம் அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்கியது.குறிப்பாக பல்லை கடித்துக்கொண்டு ஆறடி ரன்பீரை அண்ணாந்து பார்த்தபடி அவர் பேசும் முகபாவம் அதைவிட தமாஷாக இருந்தது.உண்மையில் இவர் கொஞ்சம் முயன்றால் சிறந்த நகைச்சுவை நடிகை ஆகலாம்!(கிண்டல் அல்ல).
     நமக்கு cringe ஆகும் விஷயங்கள் என்றால் புது மோஸ்தர் பெண்ணியம்,wokism,கார்ப்பரேட் எதிர்ப்பு,ஏழ்மையை விதந்தோதுதல்,தற்கால அரசியல் நிகழ்வுக்கு "ஆட்சிக்கு தகுந்தாற்போல்" பொங்கல் வைத்தல் போன்றவைகளே!
    இப்படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள்.பொதுவாக எந்தப்பட இரண்டாம் பாகமும் (இந்திய மொழிகளில்)எடுபட்டதில்லை.பார்ப்போம்!
      
     
      
     
     
     

Saturday, 9 December 2023

குரோதம் & நான் சிகப்பு மனிதன்

 

இரண்டு படங்களுமே டெத் விஷ் படத்தின் காப்பி தான்.சமீபத்தில் டெத் விஷ் ஐந்து பாகங்களும் ரிப்பீட் ஆடியன்ஸ் ஆக பார்த்தபோது குரோதம் படம் நினைவுக்கு வந்தது.அதை மீண்டும் பார்த்தோம்.நான் சிகப்பு மனிதன் எப்போது பார்த்தோம் என்று நினைவிலில்லை.


 

       ஒருவகையில் மூலப்படத்திற்கு நெருக்கமாக இருப்பது குரோதம் படம் தான்.டெத் விஷ் போலவே இதிலும் நாயகன் ஒரு ஆர்க்கிடெக்ட்.டெத் விஷ் படத்தில்  பாலியல் பலாத்காரத்தில்  மனைவி இறந்துவிட,பலாத்காரத்தில் பாதிக்கப்பட்ட மகளை  தனது மருமகனுடன் மன சிதைவுக்கான சிகிச்சைக்கு வேறொரு ஊருக்கு அனுப்பி வைப்பார்.


 

     குரோதம் மற்றும் நான் சிகப்பு மனிதன் படங்களில் இளம் நாயகன் என்பதால் தங்கை கதாபாத்திரம் மட்டும்.

குரோதம் படத்தில் தங்கை நல்லெண்ணெய் சித்ரா மற்றும் மச்சான் (மாஸ்டர்) ஶ்ரீதர் ஆகியோரை வேறொரு ஊருக்கு அனுப்பி வைக்கிறார் பிரேம்.

     அதன் பிறகு தனது உறவினர் தங்கவேலுவை வேலை சம்மந்தமாக பார்க்க செல்கிறார்.அவர் ஒரு துப்பாக்கியை பரிசாக கொடுக்க அதை வைத்து சமூக விரோதிகளை காலி செய்கிறார்.இந்த வகையில் இது டெத் விஷ் படத்தை ஒட்டியே நகர்கிறது.நான் சிகப்பு மனிதனில் இப்படி வந்தது போல தெரியவில்லை.


 

     மேலும் தங்கவேலு& லூஸ் மோகன் கூட்டணி வித்தியாசமாக இருந்தது.”சிரிப்ப சலிச்சு சலிச்சு அவனே முழுங்குறான் “ என்று லூஸ் மோகனை பார்த்து தங்கவேலு அடிக்கும் கமன்ட் அட்டகாசம் :D

        தங்கை பலாத்காரம் செய்யப்பட்ட காட்சியை படம் நெடுக காட்டுவார் எஸ்.ஏ.சி.ஆனால் குரோதம் படத்தில் மூலப்படம் போலவே புகைப்படத்தை மட்டும் பார்த்து வருத்தமடைவதாக காட்டி இருப்பார்கள்.

     பாக்யராஜ் கதாபாத்திரம் என்ற எக்ஸ்டிரா ஃபிட்டிங் குரோதமில் இல்லை.

“காந்தி தேசமே காவல் இல்லையா?” என்று பொது மேடையில் ஆவேசமாக பாடி தன்னைத்தானே காட்டிக்கொடுக்கும் அளவுக்கு பிரேம் செல்வதில்லை.ரொம்பவும் கமுக்கமாகவே சமூக விரோதிகளை தீர்த்து கட்டுகிறார்.

      அந்த வகையில் குரோதம் ஒரு subtle ஆன பிரதி.நான் சிகப்பு மனிதன் மசாலா கொஞ்சம் தூக்கலாக எடுக்கப்பட்ட பிரதி.

    Posh ஆன நாயகன் கதாபாத்திரத்தில் பிரேம் சரியாக பொருந்துகிறார்.அவரின் நடை உடை பாவனை பேசும் விதம் எல்லாமே அதை பிரதிபலிக்கிறது.இந்தப்படத்தில் மட்டுமல்ல குரோதம் 2 அசோகா படங்களிலும் அதை காணலாம்.குரோதம் 2 படமும் இதே போல தங்கையை கொன்றவர்களை ஹை டெக்காக போட்டு தள்ளுவது தான் கதை.அதில் கொஞ்சம் டூயட் பாடல்கள்,கதையோடு பொருந்தாத செந்தில் காமெடி என்று  ஊளை சதை அதிகம். குரோதமில் அது இல்லை.

 

குரோதம் படத்தில் கொடுமையான ஒரே விஷயம் என்றால் அது பிரேமின்  மீசை.சார்ல்ஸ் பிரான்சன் மீசை கொஞ்சம் சீனத்தனமாக இருக்கும்.அதுபோலவே இருக்க வேண்டும் என்று பிரேமின் மூக்குக்கு கீழான மீசையை வழித்து விட்டுள்ளார்கள். பாக்க கொடுமையா இருக்கு..

     மேலும் இன்றைய woke கும்பல் இந்த கதையின் நாயகன் செய்தது தவறு அது இதுவென்று பொங்கி எழுவார்கள்! படத்தை நிம்மதியாக உட்கார்ந்து பார்க்கலாம் என்பதற்கான அடையாள குறியீடு அதுவே!

      

Friday, 1 December 2023

Leo மற்றும் A History of Violence

 

சமகால தமிழ்ப்படங்களில் லோகேஷ் படங்களை பார்ப்பதுண்டு.காரணம் அவர் படங்களில் wokism,புது மோஸ்தர் பெண்ணியம், நசுக்கி



ட்டான் கதை, மாவோயிஸ பஜனை,பொதுவுடைமை பிதற்றல்,ஏழ்மையை விதந்தோதுதல் ஓவர் சென்டிமென்ட் போன்ற டார்ச்சர் வஸ்துக்கள் இருக்காது.போதை வஸ்துக்கள் இருப்பது பற்றி நமக்கு கவலையில்லை.படத்தை முழுமையாக பார்க்க முடிகிறதா?இல்லையா? என்பதே ஒரு வணிக சினிமாவுக்கான நமது வரைமுறை.அதில் அவர் படங்கள் தேறுகின்றன !

 

        இந்தப்படம் LCU வை சார்ந்த படமாக சொல்லப்படுகிறது.ஆனால் கைதி மற்றும் விக்ரம் படங்களோடு இணைக்கும் வகையிலான வலுவான காட்சிகள் எதுவுமில்லை.அந்த போலீசு+ ஆ …ஊ… மாயா ஆகியோர் தான் இணைப்பு சங்கிலிகள் .கடைசியில் காசர் நா தழுதழுக்க குரல் கொடுக்கிறார்!அவ்வளவே.

மாஸ்டர் படத்தை பொறுத்தளவில் பெரும் குழப்பம்.விஜய் சென்னை கல்லூரியில் டப்பாங்குத்த்து ஆடுகிறார்.விஜய் சேதுபதி தென் மாவட்டத்தில் கொலைகள் செய்கிறார்.பிறகு எங்கு இருக்கிறது என்றே தெரியாத ஒரு சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு விஜயை ஏன் அனுப்புகிறார்கள்?ஒரே குழப்பமோ குழப்பம்.

        கைதி படம் நன்றாக இருந்தாலும் அந்த மகள் சென்டிமென்ட் ரொம்ப ஓவராக போனது+ அந்த லாரி கிளீனர் பையன் பனை மட்டையில் எதோ பெய்த  மாதிரி ஓயாமல் பேசிக்கொண்டே வந்தது(குறிப்பாக சமகால அரசியல் விஷயங்களை கமன்ட் அடிக்கிறேன் பேர்வழி என்று அடித்த மொக்கை கமண்டுகள்) எரிச்சலை உண்டாக்கியது.விக்ரம் படத்தில் திடீரென்று காசர் சமூகத்துக்கே தான் தான் பேராசிரியர் எனும் தொனியில் லெக்சர் அடிச்ச காட்சிகள் எரிச்சலை உண்டு பண்ணியது+கடைசியில் முகத்தை “நடிக்கிறேன் பாருடா” என்ற பாவனையில் கூலிங்கிலாஸ் அணிந்த வண்ணம் விட்ட லுக்கு (இந்த மிகையான முக பாவனையை வைத்தே ரோலக்ஸ் கூட்டத்தில் ஒரு கருப்பாடு இருப்பதை உடனே  கண்டுபிடித்து இருக்கலாம்!பயிற்சி பத்தாது).

         இந்த படத்தை பொறுத்தளவில் முதல் பாதி பார்க்கும்படியாக இருந்தது.முக்கிய காரணம் அந்த லொக்கேஷன் .ஹிமாச்சல் பிரதேச அழகை படத்துக்கு தேவைப்படுகிறார் போல பயன்படுத்தியது பாராட்டுக்கு உரியது.ஆனால் இதே டேராடூன்/டார்ஜீலிங் ஆகிய லொக்கேஷன் அற்புதங்களை பேட்ட & கெத்து படத்தில் மகா மொக்கையாக வீணடித்து இருந்தார்கள்.

         A History of Violence படத்தின் பிரதி தான் இந்தப்படம்.அதில் சந்தேகம் வேண்டாம்.ஆனால் அதில் சில பட்டி டின்கரிங் செய்துள்ளார்கள் . சிலது நன்றாக வந்துள்ளது.சிலது சரியில்லை.

      உதாரணமாக அந்த காபி ஷாப் சண்டைக்காட்சி நன்றாக உள்ளது.தனியாக பி ஜி எம் பயன்படுத்தாமல் ஏற்கெனவே ஓரளவுக்கு பிரபலமான பாடல்களை பயன்படுத்தும் யுக்தி சாமர்த்தியமான முடிவு.விக்ரம் படத்தில் அய்யய்யோ யம்மா யம்மா பாடல் நமக்கு அந்தளவு மனதில் பதியவில்லை.ஆனால் இந்தப்படத்தில் பசும்பொன் பாடல் குறிப்பாக அந்த இடைநிரவலில் வரும் புல்லாங்குழல்& ஷெனாய்(??) இசை அப்படியே காட்சியோடு(மிஷ்கின் நடு மண்டையில் குண்டு :D) பதிந்து விட்டது.இதுவே ஆங்கில மூலத்தில் அதே காட்சி சப்பேன்று இருந்தது!

          பிற சண்டைக்காட்சிகள் அந்தளவு இல்லை .லியோ காற்றில் பறக்கும் காட்சிகளில் அழிக்கப்பட்ட ரோப் நம் கண்ணுக்கு வழக்கம் போல தெரிந்தது.பைக்கில் விஜய் செல்லும் காட்சி முழுக்க கிரீன் மேட் தான் தெரிந்தது.அவ்வளவு போலி!இரட்டையர்கள் அன்பறிவ் இது மாதிரியான ரோப்& கிரீன் மேட் சண்டைக்காட்சிகள் அமைப்பதை குறைத்துக்கொண்டால் நலம்!

         படத்தின் பலகீனம் இரண்டாம் பாதி.திடீரென்று எதோ இந்திரா சௌந்தரராஜன் எழுதிய கதையை படிக்கும் உணர்வு!

     மேலும் “நீதான் லியோன்னு ஒத்துக்கோ” என்று தொடர்ந்து சஞ்சு பாபா தொடங்கி கடைமட்ட அடியாட்கள் வரை மிரட்டுவது எதற்கு என்றே புரியவில்லை! லியோவை கொல்லவா?அப்படி என்றால் லியோ குடும்பத்தை தாக்க வந்த ஒருவனை கடை வாசலில் சஞ்சு தூக்கில் தொங்கி விடுவது ஏன்?

     ஒருவேளை எதோ ஒரு விலைமதிப்புள்ள பொக்கிஷம் ஒரு ரகசிய இடத்தில் உள்ளது.அது லியோவுக்கு மட்டும்தான் தெரியும் என்பதாக இருந்தால் கூட இவர்கள் லியோவை தேடுவதிலும் லியோ என்று ஒத்துக்கொள் என்று மிரட்டுவதில் ஒரு நம்பகத்தன்மை இருந்திருக்க கூடும்.

மேலும் ஆங்கில படத்தில் ஜோயி அண்ணன் கோஷ்டிக்கு பெரும் சேதாரத்தை உண்டாக்கிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான்.ஆனால் தங்கையை பறிகொடுத்த லியோ அதற்கு பழி வாங்காமல் அமைதி காத்தது ஏன் என்ற குழப்பமும் இருக்கு!

    அசல் ஆங்கில படத்தில் அண்ணன் ரிச்சி தம்பி ஜோயிய போட்டு தள்ளத்தான் அழைக்கிறான் என்பது பார்த்த மாத்திரத்தில் புரிய வைத்து விடுகிறார்கள்.ஆனால் இதில் எதற்கு லியோவை தேடுகிறார்கள்? என்றே புரியவில்லை.சஞ்சு லியோ குடும்பத்தை பார்த்து கண் கலங்கிய காட்சி மேலும் குழப்பத்தை தான் உண்டாக்குகிறது.

     விஜய் கெட்டப் பற்றி சொல்ல வேண்டும்.மெய் சிலிர்த்த சேவல் போல ஒரு ஹேர்ஸ்டைல் .பெயிண்ட் அடிக்கும் பிரஷ் போல தாடி.இந்த கெட்டப்பை பிளாஷ் பேக் லியோவுக்கு வைத்து அந்த திருத்தமான லுக்கை கொஞ்சம் வெள்ளை அடித்து பார்த்திபனுக்கு வைத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.குடும்பஸ்தன் லுக் இது அல்ல!வியாதியஸ்தன் மாதிரி இருக்கு! 

      விஜய்க்கு மகள் என்றதும் நமக்கு அடிவயிறு கலங்கியது.தெறி என்ற படத்தை பார்க்காவிட்டாலும் அதில் உள்ள ஓவர் மகள் சென்டிமென்ட் பற்றி தெரியும் என்பதால் இந்த பீதி!ஆனால் இதில் சென்டிமென்ட் அளவாக பயன்படுத்திய விதத்தில் லோகேஷ் பாராட்டை பெறுகிறார் .மகனை பார்த்து “நீ நல்லா ஆப்படிச்சு…சாரி…நல்லா படிச்சு பெரிய டாக்குடர் ஆகோனும் “ என்பது மாதிரியான காட்சிகள் இல்லாதது பெரும் ஆறுதல்.கிங்ஸ் லெவன் சம்மந்தமாக மகன் சத்தியம் வாங்கும் காட்சி நன்றாக இருந்தது. : D (அதான!நல்ல விஷயம் எதுவும் புடிக்காது.ஆனா இது மட்டும்….- கும்மாங்கோ)

        ஆங்கில படத்தில் ஜோயி தான் டாம் என்பது குடும்பத்திற்கு தெரியும்.ஆனால் இதில் மகனுக்கு மட்டும் தெரியும் என்பதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது.மேலும் இங்கே ஆக்ஷன் படத்தின் மூலப்படமும் அப்படியே இருக்கும் என்று நினைத்தது தவறு.அது ஒரு slow burner படம்.ஆக்ஷன் காட்சிகள் அவ்வளவு கிடையாது.மேலும் அது ஒரு லோ பட்ஜெட் படமும் கூட.

    மேலும் விஜய் சமூக அக்கறை வசனங்கள்,கம்யூனிசம்,ஜி எஸ் டி அது இதுவென்று அறுக்காமல் இருந்ததே பெரிய ஆறுதல்!மேலும் விஜய் தன்னை தரை லோக்கலாக காட்டிக்கொள்ளும் காட்சிகள் இதில் இல்லை.சிறுவர்& பதின்ம வயது ரசிகர்களை உற்சாகப்படுத்த அங்க சேஷ்டைகள் எதுவும் செய்யவில்லை.யப்பாடா!

 

லோகேஷ் இதேபோல எந்த புதை மணலிலும் சிக்காமல் காட்சிகள் வசனங்கள் இருப்பதை பார்த்துக்கொள்ளுதல் நன்று.

     மேலும் லோகேஷ் எல்லா படத்திலும் போதைப்பொருட்களை மையமாக வைத்து கதையை நகர்த்துகிறார் என்பதொரு குற்றசாட்டு.எடுக்கும் எல்லா படத்திலும் நசுக்கிட்டான் என்று கதையை நகர்த்தும் இயக்குனர்களை  விமர்சிக்க தவறியவர்கள் இதை மட்டும் விமர்சிப்பது ஏன்?