Saturday, 28 September 2019

11/22/63-Stephen King


       ஸ்டீபன் கிங் கதைகள் சிலவற்றோடு பரிச்சயம் உண்டு.ஆரம்பத்தில் இயல்பாக துவங்கி செல்லும் கதை ஒருகட்டத்தில் அமானுஷ்ய சக்திகள்-நிகழ்வுகள் என்று  சென்றுவிடும்.உதாரணமாக The Shining மற்றும் சென்ற வருடம் வந்த The Outsider.இவற்றை ரசிப்போருக்கு இவை நிச்சயம் திருப்தியை தரும் என்றாலும் இம்மாதிரி அமானுஷ்ய தன்மைகள் இல்லாமல் அவர் எழுதிய கதைகள் பற்றி தேடிக்கொண்டிருந்தபோது கண்டடைந்ததே இந்த நாவல்.

    பொதுவாக ஒரு சாமானியனின் கொலை சம்பவத்தை எடுத்துக்கொண்டாலே நேரடியாக சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்ட வழக்குகள் தவிர்த்து பல்வேறு குழப்பங்கள் நிறைந்த வழக்குகளை சுற்றி எப்போதுமே விலகாத மர்மங்கள் இருந்துவந்துள்ளன. ஒரு சாமானியனின் கொலைக்கே இவ்வளவு சந்தேகங்கள் கேள்விகள் எழும்போது உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பதவி எனப்படும் அமெரிக்க அதிபர் கொலை என்பது எவ்வளவு சந்தேகங்கள்-கேள்விகள்- ஊகங்கள்-குழப்பங்கள் நிறைந்ததாக இருக்கமுடியும் என்று விளக்கிசொல்ல தேவையில்லை.
   அத்தகைய கொலைவழக்குகள் குறித்த பல்வேறு சந்தேகங்கள் சதித்திட்டங்கள் குறித்த கோட்பாடுகள் காலம் தோறும் மாற்றத்துக்கு உட்பட்டவாறே இருக்கும்.இந்நாவலில் ஜான் பிட்ஸ்ஜெரால்ட் கென்னடி சுட்டு கொல்லப்பட்ட 22 நவம்பர் 1963 ஐ மையமாக வைத்து எழுதப்பட்டதால் அதையே தலைப்பாக கொண்டுள்ளது.
இறுதி பயணம்!

   கென்னடி கொலை குறித்து அறுபதுகள் தொடங்கி இன்றுவரையிலும் பல்வேறு சதித்திட்டங்கள் குறித்த கேள்விகள், சந்தேகங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவாறே இருந்துவருகிறது.அவ்வப்போது இந்த வழக்கில் நேரடியாகவோ மறைமுகமாகவோ  சம்பந்தப்பட்ட நபர்கள் கொடுக்கும் பேட்டிகள்; எழுப்பும் கேள்விகள்; சிஐஏ மற்றும் எப்பிஐ வெளியிடும் ரகசிய  ஆவணங்கள்  இந்த சதித்திட்ட சந்தேகங்களை மென்மேலும் வலுப்பெற செய்கின்றன.
   கென்னடியை சுட்டுகொன்றதாக கைது செய்யப்பட்டவன் லீ ஹார்வி ஆஸ்வால்ட்.டெக்சாஸ் ஸ்கூல் புக் டெபாசிட்டரி எனப்படும் பள்ளி புத்தகங்கள் வைக்கும் அந்த கட்டிடத்தில் தற்காலிக பணியாளனாக வேலைபார்த்துக்கொண்டிருந்த ஆஸ்வால்ட் கென்னடி அந்த கட்டிடத்தின் முன்னே உள்ள பிரதான சாலை வழியே திறந்த காரில் பயணம் செய்வதை தெரிந்துகொண்டு ஆறாவது மாடி ஜன்னலருகே துப்பாக்கியால் செய்து சுட்டதில் கென்னடி மூளை சிதறி பலியானதாக சொல்வார்கள்.
ஆஸ்வால்ட் 

  ஆஸ்வால்ட் கென்னடியை சுட்டுவிட்டு கட்டிடத்தின் வெளியே வந்துகொண்டிருந்தபோது அவனை விசாரித்த போலீஸ் அதிகாரிகள் அவன்மேல் சந்தேகம் வராததால் அவனை விட்டுவிடுகிறார்கள்.பின்பு  ஜே.டி.டிப்பிட் எனும்  போலீஸ்காரர் வேறொரு இடத்தில்  அவனைக்கண்டு சந்தேகப்பட்டு நிற்க சொல்ல அவரை சுட்டுவிட்டு தப்பிக்கிறான்(என்றுதான் அதிகாரப்பூர்வ தகவல் சொல்கிறது.உண்மை என்னன்னு இன்னமும் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.உதாரணமாக டிப்பிட்டை கொன்றதே ஆஸ்வால்ட்தானா?)
 
J.D.Tippit

.பிறகு அவனை ஒரு தியேட்டரில் வைத்து கைது செய்கிறார்கள்..அதாவது கென்னடி கொலை நடந்து நாற்பது நிமிடங்கள் கழித்தே அவன் சிக்குகிறான்.அந்தளவு டெக்சாஸ் போலீஸ் அலட்சியமாகவும் திறனற்றும் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.அதற்கு சிகரம் வைத்தாற்போல் ஆஸ்வால்டை காவல் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டுவரும் போது ஜாக் ரூபி  என்ற பார் ஓனர் அவனை சுட்டு கொல்கிறான்.
ஆஸ்வால்டை  சுடும் ஜாக் ரூபி


           கென்னடியை கொன்றவனை மனசு ஆறாமல் கொன்றதாகவும் இதன்மூலம் போலீசுக்கும் கென்னடியின் மனைவிக்கும் பெரும் சுமையை தான் அகற்றியதாகவும் கூறினான்.அவனுக்கு சிறை தண்டனை பிறகு நுரையீரல் புற்றுநோய் வந்து(??!!) இறந்துபோகிறான்.ஆனால் உண்மையில் அவன் தானாக அதை செய்யவில்லை என்றும் வேறொரு பெரும் கை அவனை இயக்கியதாகவும் இன்றளவும் சொல்வோர் உண்டு,
    இந்நாவலில் ஜேக் எப்பிங்  ஒரு பள்ளி ஆசிரியர்.ஆல் டெம்பிள்டன் என்பவர் ஆல்ஸ் டைனர் என்று  ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அவர் உணவகத்தில் மிக குறைந்த விலையில் பேக்கன் ஹேம் சிக்கன் உணவு வகைகள் விற்கப்படுகிறது.நாய்க்கறியை சமைத்து  விற்கிறார் என்று மக்களுக்கு ஒரு சந்தேகம்.உண்மையில் அவர் உணவகத்தின் பின்புற படிக்கட்டுகள் வழியே(Rabbit hole!) 1958 க்கு சென்று அங்கே பன்றி,கோழி,ஆடு,மாடு மாமிசங்களை 1958 ன் விலையில் வாங்கிக்கொண்டுவந்து 2011(நாவலில் தற்காலம்) ல் சமைத்து கொடுப்பதே அந்த குறைந்த விலைக்கு காரணம்!
   அப்படி அவர் வெறுமனே கறி மீன் வாங்க மட்டும் இதை பயன்படுத்தாமல் வேறு பயனுள்ள வகையில் ஏதேனும் செய்யலாமே என்று நினைக்கிறார்.தந்தையோடு வேட்டைக்கு செல்லும் மகள் காட்டுக்குள் வேட்டையில் மும்முரமாக இருக்கையில் காட்டின் மற்றொரு புறத்தில் வேட்டையாடிக்கொண்டிருக்கும் ஒருவன் மான் என்று நினைத்து சுட இவளின் ஸ்பைனல் கார்ட் சேதமடைந்து காலம் முழுதும் சக்கர நாற்காலியில் இருக்கும்படி ஆனதை தற்காலத்தில் கண்டுகொண்ட ஆல் காலத்தில் பின்சென்று அந்த தினத்தில் வேட்டைக்கு செல்லும் அந்த நபரின் காருக்கு முன்பு மாரடைப்பு வந்தது போல நடித்து அவனை வேட்டைக்கு செல்லவிடாமல் தடுக்கிறார்.அதன்மூலம் அந்த பெண் காப்பாற்றப்படுகிறாள்.
         இது கடந்தகாலத்தின் ஒரு மாற்றம்!அது நிகழ்காலம் வரையில் எதிரொலிக்கிறது.இதேபோல கென்னடி கொல்லப்படுவதை நாம் தடுத்தால் என்ன?என்று நினைக்கிறார்.கென்னடி கொல்லப்பட்டதும் அதிபரான லிண்டன் ஜான்சன் வியத்நாமுடன் போரை மேலும் தீவிரபடுத்துவதாக   அறிவிக்க லட்சகணக்கான அமெரிக்க ராணுவ வீரர்களின் உயிர் போகிறது.பல ஆயிரக்கணக்கானோர் ஆயுளுக்கும் முடமாக்கப்படுகிறார்கள்.
கென்னடி இறந்து இரண்டு  மணி நேரம் கழித்து   ஜான்சன் பதவியேற்கிறார்..அருகில் கணவன் மூளை சிதறி இறந்ததை மிக  அருகில் பார்த்த அதிர்ச்சியில் ஜாக்குலின் கென்னடி

        கென்னடி கொலையை தடுத்தால் இத்தனை லட்சம் பேரை காப்பாற்றலாமே!என்று ஆல் நினைக்கிறார்.ஆனால் அதற்குள் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் வந்துவிட அந்த பொறுப்பை ஜேக் எபிக்கிடம் ஒப்படைக்கிறார்.ஜேக் தனது பள்ளியில் பழைய மாணவர் ஒருவர் எழுதிய கட்டுரை கண்ணில்பட அதை வாசிக்கையில் பள்ளி வாட்ச்மேனாக உள்ளவனின் தந்தை பிரான்க் டன்னிங் தனது தாய் மற்றும்  சகோதரிகளை கொலை செய்து தன்னையும் கொல்லும் முயற்சியில் தோல்வியடைந்த (அதனால் தான் ஆயுசுக்கும் நொண்டியே நடக்க வேண்டிய அவல)சம்பவத்தை எழுதியதை வாசிக்கிறான்.
நாவலில் ஒரு கதாபாத்திரம்போலவே வரும் Texas School Book  Depository Buliding
            
         கென்னடி கொலையை தடுப்பதற்கு முன் இவற்றை தடுத்து பரிசோதித்து பார்க்கிறான்.இதில் ஒரு சாதகமான விஷயம் என்னவெனில் டைனருக்கு பின்புற படிக்கட்டில் எப்போது வெளியே சென்றாலும் செப்டம்பர் ஒன்பது  1958 தேதிக்கே செல்ல முடியும்.கடந்த காலத்தில் எத்தனை வருடங்கள் இருந்துவிட்டு திரும்பவும் டைனருக்கு வந்தாலும் தற்காலத்தில்(நாவல்படி 2011) இரண்டு நிமிடங்களே கடந்திருக்கும்!
        ஆனால் ஒருமுறை கடந்த காலத்திற்கு சென்று எதையேனும் மாற்றிவிட்டு வந்தால் பிரச்சனை இல்லை.ஆனால் திரும்பவும் கடந்த காலத்திற்குள் நுழைந்தால் முன்பு செய்த மாற்றங்கள் அத்தனையும் ரீசெட் ஆகிவிடும்!ஆக கடந்த காலத்தில் ஒரு கொலை நிகழாமல் தடுத்துவிட்டு நிகழ்காலத்திற்கு வரலாம்!ஆனால் திரும்பவும் கடந்த காலத்திற்குள் நுழைந்ததுமே அந்த கொலை திரும்பவும் நடக்கும்!   அந்த பெண்ணை காப்பாற்றுகிறான்.பிரான்க் டன்னின்கை கொல்கிறான்.தற்காலத்திற்கு வருகிறான்.ஆனால் டன்னிங் குடும்பத்தை சேர்ந்தவன் ராணுவ வீரனாக வியத்நாமுக்கு சென்று உயிரை விட்டதை அறிந்து வேதனை அடைகிறான்.இப்போது திரும்பவும் கடந்த காலத்திற்கு செல்ல வேண்டும்.

              இம்முறை அந்த பெண்ணை திரும்பவும் காப்பாற்ற வேண்டும்.பிரான்க் டன்னின்கை திரும்பவும் கொல்ல வேண்டும்.பிறகு கென்னடியை காப்பாற்ற வேண்டும்!ஆனால் 1958 ல் நுழைபவன் ஐந்து வருடங்கள் காத்திருந்தே கென்னடியை காப்பாற்ற இயலும்.காரணம் கென்னடியை கொன்றவன் ஆஸ்வால்ட் என்று சொல்லப்பட்டாலும் வேறு யாரேனும் இதில் ஈடுபட்டுள்ளனரா என்று தெரியாததால் ஆஸ்வால்டை மட்டும் கொல்லுவதால் கென்னடியை காப்பாற்ற இயலுமா என்ற சந்தேகம் ஜேக்கிற்கு உள்ளது.ஜார்ஜ் ஆம்பர்சன் என்ற போலி பேரில்(போலி ஓட்டுனர் உரிமம் ஐம்பதுகளில் புழக்கத்தில் இருந்த டாலர்கள்,மேலும் பண தேவையை பூர்த்தி செய்ய கால்பந்து, மல்யுத்த போட்டி முடிவுகள்(அதை வைத்து பெட்டிங் கட்டி பன்மடங்கு சம்பாதிக்க)என்று அனைத்தையும் கொடுக்கிறார் ஆல்.பின் அவர் இறந்து போகிறார்.
    ஐந்தாண்டுகள்  சும்மா உட்காந்திருக்க மனமில்லாமல் பள்ளி ஆசிரியர் வேலையில் சேர்கிறான்.ஒருபள்ளியில் தற்காலிக பணி செய்து வெளியே வந்து சிறிது காலம் கழித்து வேறொரு பள்ளியில் சேர்கிறான்.அங்கு அனைவரது மனதையும் கவர்கிறான். ஸேடி டன்ஹில் எனும் நூலகரை காதலிக்க துவங்குகிறான்.
          ஒருகட்டத்தில் ஸேடி இவன் வருங்காலத்தில் இருந்து வந்தவன் என்பதை அறிந்துகொள்கிறாள்.ஜேக் அனைத்து உண்மைகளையும் சொல்கிறான்.தானும் கென்னடியை காப்பாற்ற வருகிறேன் என்கிறாள்."வேண்டாம்!அது ஒரு ராட்சச எந்திரம்.அதன் அருகில் வேறு நபர்கள் வந்தால் கடுமையான எதிர்விளைவுகள் ஏற்படும்" என்ற எச்சரிக்கையையும் மீறி அவள் அவனோடு செல்கிறாள்.
             கென்னடி காபாற்றபட்டாரா?ஸேடிக்கு என்ன நடந்தது?ஜேக் திரும்ப 2011 க்கு வந்தானா?கென்னடி காப்பாற்றப்பட்டதால் தற்காலத்தில்  எத்தகைய மாற்றங்களை அவன் கண்டான்...என்பதை மிக சுவாரஸ்யமாக சொல்லியுள்ளார் கிங்.குறிப்பாக கென்னடி கொலையை தடுக்க முயலும் அந்த பகுதி Prison Break டிவி சீரிஸ் ஏற்படுத்திய பரபரப்பையும் பதைபதைப்பையும் தருவதாக உள்ளது.மேலோட்டமான பரபரப்புணர்வை  மட்டுமே நாவல் தராமல் கடந்த காலத்தில் வாழ்ந்த (கென்னடி கொலையை சுற்றிய வட்டத்திற்குள் உள்ள)நிஜ மனிதர்களை நேரிலேயே கண்ட உணர்வை தருவதாக உள்ளது.
             குறிப்பாக ஆஸ்வால்ட் சோவியத்திலிருந்து அமெரிக்காவுக்கு வருவது தொடங்கி,ஆளுமை மிக்க-மகனை சபித்துக்கொண்டே இருக்கும் அவனது தாய்,தண்ணீருக்கு வெளியே விழுந்த மீன் போல அமெரிக்காவில் அன்னியமாக உணரும்  மனைவி மரீனா,
மரீனா ஆஸ்வால்ட் 
அவளை அவ்வப்போது  அடித்து உதைத்து கொண்டிருக்கும் ஆஸ்வால்ட், அவர்களது குழந்தை ஜூன் அவனை பார்க்க வரும் ஜார்ஜ் டிமோரென்ஸ்சில்ட்  உள்ளிட்ட பரிச்சயங்கள் இவை அனைத்தும் மிக துல்லியமாக விவரிக்கப்பட்டுள்ளது.நாமே அங்கு சென்று இவற்றை காணும் உணர்வை தருகிறது(இதைத்தாண்டி இந்த உணர்வை வார்த்தைகளில் சொல்ல முடியவில்லை).அவன் மெர்சிடிஸ் தெரு வீட்டிற்கு வாடகைக்கு வந்ததும் எதிர் வீட்டை வாடகைக்கு எடுத்து தாங்கும் ஜேக் டேபிள் லாம்பில் bug வைத்து அவர்களது உரையாடல்களை ஓட்டு கேட்பது, பைனாகுலர் வைத்து அவர்களது வீட்டை கண்காணிப்பது...இவை எல்லாமே வாசகனையே ஜேக்கின் இடத்தில் நிறுத்திவிடுகிறது .

   நாவலுக்கு அப்பால் கென்னடியை கொன்றது ஆஸ்வால்ட் மட்டும்தானா?இரண்டாவது ஆசாமி புல்வெளியில் இருந்து சுடவில்லையா?சோவியத்தில் இருந்துவந்த ஆஸ்வால்ட் எப்பிஐ மற்றும் சிஐஏ கண்காணிப்பிலிருந்து தப்பித்து இந்த கொலையை எவ்வாறு திட்டமிட முடிந்தது?மேலும் நான்கரை வினாடிகளில் மூன்று முறை எவ்வாறு குறி தவறாமல் சுடமுடிந்தது?ஆஸ்வால்ட் மரீனஸ்ல் இருந்தவன் என்றாலும் இத்தனை துல்லியமாக எவவாறு சுடமுடிந்தது?(இந்த சந்தேகத்தை திசைதிருப்ப ரெண்டே ரெண்டுமுறை தான் சுட்டான்.அந்த ஒரு புல்லட் கென்னடி தொண்டை வழியே வெளியேறி டெக்சாஸ் ஆளுநர் நெஞ்சு வழியே வந்து அவரின் மணிக்கட்டை துளைத்து தொடையில் தஞ்சமடைந்து பின்னர் வெளியே விழுந்ததாக சொல்வார்கள்).இதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
புல்வெளியின் பின்னணியில் இருந்து துப்பாக்கி வெடிக்கவில்லையென்றால்  இவர்கள் ஏன் இப்படி பதுங்கினார்கள்?


           கென்னடியை கொன்றது ஆஸ்வால்ட் மட்டும்/தான் என்பதை கொஞ்சம் மூளை சரியாக இருக்கும் ஆசாமி கூட நம்ப மாட்டான்.ஆனால் அந்த குழப்பத்திற்குள் போனால் நாவலின் கதை முடிவேயில்லாத ஒரு limbo விற்குள் சிக்கிக்கொண்டுவிடும் என்று ஸ்டீபன் கிங் நினைத்திருக்கலாம்.அதனால் ஆஸ்வால்ட் மட்டுமே கொலைகாரன் என்ற எளிய உத்தேசத்தை வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.
அந்த தவறை தவிர்த்து இந்நாவல் ஒரு துணிச்சலான முயற்சி என்றே சொல்லவேண்டும்.நம்ம ஊர்லயும் பல தலைவர்களின் மர்ம மரண வரலாறுகள் உண்டு.அதையெல்லாம் வைத்துக்கொண்டு இப்படி ஒரு கதை எழுதினால் அந்த எழுத்தாளரின்  கதி என்ன என்று நினைத்து பார்க்கவே பயமா இருக்கு!
வெட்டி ஒட்டப்பட்ட முகம்?


                           இந்த கால பயணத்தில் ஜேக் உணர்வது ஒரு உண்மையை.கடந்த காலத்திற்கு சென்று அப்போது நிகழ்ந்த ஏதேனும் ஒரு சம்பவத்தை நிகழாமல் செய்தோ வேறுமாதிரி நிகழ வைப்பதோ வெறுமனே அந்த சம்பவத்தோடோ அந்த கால கட்டத்தோடோ முடிந்துவிடுவதில்லை.அந்த மாற்றம் ஏற்படுத்தும் அதிர்வுகள் என்பது காலம்தோறும் நீடிக்கும் ஒன்று.
        அந்த அதிர்வின் வீச்சு என்பது மாற்றப்படும் சம்பவத்தை பொறுத்து.உதாரணமாக 1958  பிராங்க் டன்னிங்கை கொன்று அவன் குடும்பத்தை காப்பாற்றுதல் என்பது தற்காலத்தில் பெரிய அளவில் இல்லாவிட்டாலும்   குறிப்பிடத்தகுந்த அதிர்வுகளை உண்டாக்கவே செய்கிறது.ஒரு சாமானிய நபரின் வாழ்வை முடித்துவைக்கும் போதே இத்தகைய அதிர்வுகள் இருக்குமானால் உலகின் சக்திவாய்ந்த அமெரிக்க அதிபரை காப்பாற்றினால் அது எத்தகைய அதிர்வுகளை கால இழைகளில் உண்டாக்கும்?அதன் பின்விளைவுகள் எத்தகையவை?
             காலத்தில் பின்னோக்கி சென்ற பின் அந்த கால கட்டத்திய நடை உடை பாவனைகளை மாற்றிகொண்டாலும் கூட சில நபர்கள் ஜேக்கை ஒரு அந்நியனாகவோ அல்லது  வேறு உலகில் இருந்து வந்தவனாகவே பார்க்கிறார்கள்.came out of nowhere என்கிறார் எப்பிஐ அதிகாரி.1958 க்கு சென்றாலும் அடுத்த ஐம்பதாண்டு வரலாற்று  நிகழ்வுகள் குறித்த பிரக்ஞை என்பது ஒரு மனிதனை 1958 ஐ சேர்ந்தவனாக ஏற்க மறுக்கிறதா?
டயம் ட்ராவல் குறித்த பல படங்கள் குறிப்பாக சில தமிழ் படங்கள் வரை விளையாட்டாக கடந்த காலத்திற்கு சென்று சகட்டு மேனிக்கு நிகழ்வுகளை மாற்றுதல் என்பது உண்மையில் சாத்தியமில்லை.கால இழைகளில் கடும் அதிர்வுகளை உண்டாக்காமல் அது சாத்தியமேயில்லை !(அந்த Green/Yellow/Black card man  ஜேக்கிடம்  பேசும் அந்த தருணங்கள் இதற்கு சாட்சி).


              கடந்த காலம் என்பது தன்னை சுற்றி ஒரு கடினமான தற்காப்பு வளையத்தை கொண்டது.

அதை கிழித்துக்கொண்டே ஒவ்வொரு முறையும் கால பயணத்தை மேற்கொள்கிறார்கள்.பல நூறு முறை கடந்த காலத்திற்கு சென்றுவந்த ஆல்(மலிவு விலையில் மாமிசம் வாங்க சென்றாலுமே)அந்த பாதிப்பு அவரின் உடலை பாதித்து நுரையீரல் புற்றுநோய் வந்து இறக்கிறார்.ஜேக் அத்தனை முறை சென்று வராததால் உடல்ரீதியாக பெரிய பாதிப்பு இல்லை (இரண்டு நிமிடத்தில் முப்பத்தைந்து வயதிலிருந்து நாற்பது வயதுக்கு போய்விட்டாலும்).ஆனால் மனதளவில் அது பல பாதிப்புகளை குழப்பங்களை உருவாக்கவே செய்யும் என்பதை உணர்கிறான்.தனக்கு ஏற்படும் பாதிப்புகள் தவிர கடந்த காலத்தை மாற்றியமைப்பதால் கடந்த கால மனிதர்களின் நினைவு இழைகளிலும் ,பொதுவாக  உலகம் முழுமைக்குமே பெரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதை காண்கிறான்(பட்டர்பளை எபெக்ட்).
.
இத்தகைய ஒரு நாவல் கடும் உழைப்பைக்கோருவது.இதை சிரமேற்கொண்டு முடித்த ஸ்டீபன் கிங் பாராட்டுக்குரியவர்.

ஸ்டீபன் கிங் 
ஆனால் இது  முற்றிலும் அசல் வரலாற்று தகவல் அடிப்படையில் எழுதப்பட்டது  என்பதை ஏற்க முடியவில்லை.தவிர கிங் நாவல்களில்(Carrie,The Outsider ..etc..) அடிக்கடி வரும் பள்ளிச்சூழல், பள்ளி மாணவர்களுக்கு இடையேயான உறவு,ஆசிரிய-மாணவ உறவு போன்றவைகளை இதிலும் காணலாம்(இரண்டு பள்ளிகள்).சில நேரங்களில் அதுவே நாவலின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டதோ என்ற எண்ணத்தையும் தவிர்க்க இயலவில்லை. மற்றபடி இது ஒரு நல்ல முயற்சி. காலநிலை பயணத்தை நாமே மேற்கொண்ட உணர்வை தருகிறது.

.
 P.S - In Cold Blood நாவலை(இந்நாவல் பற்றிய பதிவினை படிக்க இடதுபுற லிங்கை க்ளிக்கவும்) படித்த உடனே ஹெர்பர்ட் க்ளட்டர் குடும்ப போட்டோக்கள்,கொலை செய்த டிக் பெர்ரி புகைப்படங்கள் அந்த வீடு அதற்கு செல்லும் வழி எல்லா புகைப்படங்களையும் சில நிமிடங்களாவது பார்க்காமல் இருக்கமுடியாது.

அதுமாதிரி இதை படித்ததும் கென்னடி கொலை தொடர்பான புகைப்படங்கள் என்று ஆரம்பித்து மேலும் ஆர்வம் அதிகரிக்க வீடியோக்கள், ஆவணங்கள், கென்னடியின் பிரேத பரிசோதனை அறிக்கை என்று விடாமல் தேடி பார்க்க வைத்தது.இந்த புகைப்படங்கள், ஆவணங்கள், வீடியோக்கள் இவைகளை பார்க்க பார்க்க கென்னடி கொலை என்பது பூசி மெழுகப்பட்ட ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது உறுதியாகிறது.இதில் ஆஸ்வால்ட்க்கு எந்தளவு பங்கு என்பதை உறுதிபடுத்த முடியவில்லை(ஆஸ்வால்ட் வெறும் பலியாடாக கூட இருந்திருக்கலாம்) என்றாலும்  பலரது பங்கு(சிஐஏ எப்பிஐ,மாபியா,நாஜிக்கள்????) இருந்திருப்பதை மறுக்க முடியாது.
.

Sunday, 21 July 2019

ஒரு கடலோர கிராமத்தின் கதை -தோப்பில் முகமது மீரான்



                   இக்கதை என்பது முழுக்க முழுக்க ஒரு குடும்பத்தின் வீழ்ச்சியை பதிவு செய்வது.அதோடு நில்லாமல் அந்த கடலோர கிராமமான தேங்காய்பட்டினம் என்ற ஊரில் உள்ள மக்களின் வாழ்க்கைமுறை, பேச்சுவழக்கு, மதநம்பிக்கையே பிரதானமான ஒரு வாழ்க்கை என்று மிக நுட்பமான சித்தரிப்பாக உள்ளது.உண்மையில் தோப்பில் முகம்மது மீரான் அவர்கள் வாழ்ந்த சூழலை பதிவு செய்திருக்கிறார்.    

               வடக்குவீட்டு முதலாளி எனப்படும் அகமதுகண்ணு, மேற்கு வீட்டு முதலாளி இருவருக்கும் இடையே நடக்கும் ஈகோ போட்டியாக துவங்கும் கதை பின்னர் பல்வேறு கிளைக்கதைகளாக விரிகிறது.
           சாகுல் ஹமீது என்பவரின் மகன் அகமதுகண்ணு.அவரின் சகோதரி நூஹு பாத்திமா.சகோதரி பருவமடைந்ததுமே தந்தை மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்கிறார்.ஊரே அசந்து போகும் ஒரு கல்யாணம்.யானை குதிரை சகிதம்.மாப்பிள்ளை படகில் வந்து இறங்கும் தருணத்தில் அவருக்கு பத்து பவுன் சங்கிலி போட்டு தடபுடலாக வரவேற்க செல்கிறார் அகமதுகண்ணு.அங்கே மாப்பிள்ளையை கண்டதும் அவர் மட்டுமல்லாது பலரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.அங்கே நிற்பது அறுபது வயது முதியவர்.தனது மகனுக்குத்தான் பெண் பார்த்ததாகவும் அவனுக்கு பதினேழு வயதே ஆவதால் தானே திருமணம்(மூன்றாவது)செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் சொல்லி சிரிப்பதாக வருகிறது.
                பின்னர் திருமணம் முடிந்து ஒரே வருடத்தில் நூஹு பாத்திமாவின் கிழ கணவன் மரணமடைய சகோதரன் அகமதுகண்ணு வீட்டுக்கே வந்துவிடுகிறாள்.அப்படியாக இருபது வருடங்கள்!அந்த திருமணத்தின் மூலம் பிறந்தவன் பரீது.அவனுக்கு இருபது வயதானாலும் கொஞ்சம் மன வளர்ச்சி குறைந்தவன்.அகமதுகண்ணு வீட்டில் மாடுகளை கவனிப்பது சாணி அள்ளி போடுவது சாக்கடை அடைப்பை எடுப்பதுவரை அனைத்தும் பரீதுதான்!
தோப்பில் முகமது மீரான்
 அகமது கண்ணுவுக்கு ஆயிஷா என்றொரு மகள்.ஆயிஷாவுக்கு பரீது மீது அளவில்லா பிரியம்.பரீதுக்கும் அத்தகைய பிரியம் இருந்தாலும் தான் மனவளர்ச்சி குறைபாடுல்லவன்.தான் ஆயிஷாவுக்கு எந்த விதத்திலும் தகுதி இல்லை என்று கருதிக்கொண்டவன்.
ஆயிஷாவுக்கு அவள் விருப்பத்திற்கு மாறாக(வழக்கம் போல)திருமணம் செய்துவைக்கிறார் அகமதுகண்ணு.ஒரே வாரத்தில் அவளும் தனியே  வீடு திரும்புகிறாள்.காரணம் மாப்பிள்ளை ஒரு மனநோயாளி.நூஹுவுக்காவது வாழ்க்கையை முன்நடத்தி செல்ல பரீது எனும் மகன் உள்ளான்.ஆனால் ஆயிஷாவுக்கோ எந்த பிடிப்பும் இல்லாமலேயே மீத காலத்தை கடத்தியாக வேண்டும்!அது அகமதுகண்ணுவை உடைத்துப்போடுகிறது.பட்ட  காலிலே படும் எனும்படி தொடர்ந்து வேறுபல சிக்கல்கள் சோதனைகள் இக்கட்டுக்கள் அகமதுகண்ணு குடும்பத்தை சூழ்கிறது.
    அகமதுகண்ணு பல்லக்கில்தான் பயணம் செய்வார்.அவர் பல்லக்கில் வரும்போது ஊர் மக்கள் எவரும் அந்த பாதையை மறித்து நிற்கவோ நடக்கவோ கூடாது.பாதை ஓரமாக நின்று மரியாதை செலுத்த வேண்டும்.அப்படி மரியாதை செலுத்தாமல் திமிராக நடக்கிறான் மஹ்ம்மூது.அவன் சுறாப்பீலி விற்பவன்.எவருக்கும் அஞ்சாதவன்.
   அகமதுகண்ணு உத்தரவு கிடைத்தபின்னரே ஊர் பள்ளிவாசலில் ஒவ்வொரு வேலை தொழுகை துவங்கும்.அப்படி அவர் வரமுடியாத/விரும்பாத பட்சத்தில் அவர் தனது தலையை சுற்றி தலைப்பாகை மாதிரி ஒரு வெள்ளை துணியை சுற்றி எடுத்து அதை அனுப்பி தொழுகையை ஆரம்பிக்கலாம் எனும் அங்கீகாரத்தை கொடுப்பார்.
   இவரின் இத்தகைய செயல்களை கடுமையாக எதிர்க்கிறான் மஹ்ம்மூது.அதுமட்டுமல்லாது ஒரே ஒரு மதரசா பெயரளவுக்கு நடக்கும் ஊரில் ஆங்கில பள்ளிக்கூடம் அமைப்பதற்கான இடத்தையும்(தனது மகள் திருமணத்திற்கு வரதட்சணையாக கொடுக்க வைத்திருந்த நிலம்)தானமாக கொடுக்கிறார்.அங்கு ஆங்கில பள்ளியும் வருகிறது.
  ஆங்கில பள்ளி என்பது நரகத்திற்கான வழி!”மூணாம் வேதத்துக்காரன்(கிறிஸ்தவர்கள்) நம்மை காபிராக்க பார்க்கிறான்”.”கால்சராய், கிராப்பு எல்லாம் காபிரின் அடையாளங்கள்” என்பது மாதிரியான பிரச்சாரத்தின் பயனாக(!!) பள்ளிக்கு வெகுசில மாணவர் தவிர்த்து யாருமே வருவதில்லை!அவர்களிலும் ஒருத்தரை தவிர அனைவரும் முஸ்லிமல்லாதவர்கள்.ஒரே ஒரு முஸ்லிம் மாணவன்.அது மஹ்ம்மூதுவின் மகன்.
   அந்த பள்ளியையும் தீவைத்து கொளுத்துகிறார் அகமதுகண்ணு.பள்ளி ஆசிரியரையும் அவரது மனைவியையும் ஊரே பலவாறாக அசிங்கப்படுத்துகிறது.அதையும் தாங்கிக்கொண்டு எப்படியாவது இந்த கிராமத்தின் இருள்நீக்க  அவர் அங்கே இருக்கிறார்.கடைசியாக பள்ளியும் தீயில் கருகிவிட கதறி அழுவதாக வருகிறது.
மதரசாவில் அசனார் லெப்பைதான் எல்லாம்.பத்து நாட்களுக்கு ஒருமுறை குளிப்பவர்.மாணவர்களில் நீண்ட நகம் கொண்டவனை அழைத்து உடம்பெங்கும் சொறிய சொல்கிறார்.மதரசா கரும்பலகையில் ஒரு மாணவன் தமிழில் ஏதோ எழுதிவிட "குரானின் புனித வசனங்கள்  எழுதும் பலகையில் காபிரின் மொழியை எழுதியது யார்?" என்று கண்டுபிடித்து பிரம்படி கொடுக்கிறார்.

    அந்த ஊருக்கு ஜின் விரட்ட தங்ஙள் ஒருவர் வருகிறார்.மேற்குவீட்டு முதலாளி வீட்டில் தங்கும் அவருக்கு ராஜ மரியாதை என்று கேள்விபட்டதும் அகமதுகண்ணு அவரை தன் வீட்டில் இரண்டு மாதங்கள் வைத்து அதை மிஞ்சும் உபசாரம் அளிக்கிறார்.அதற்காக பெரும்பணத்தை செலவழிக்கிறார்.
   தங்ஙளை காண பல மக்கள் பல்வேறு பிரச்சனைகளோடு வருகிறார்கள்.சிலருக்கு மந்திரம் ஓதிய நீரை கொடுப்பது(அதில் ஒருவன் “எச்சில் தெளித்த தண்ணிய நா ஏன் குடிக்கணும்?” என்று தங்ஙள் முன்பே தன் தாயிடம் வாதம் செய்கிறான்),மந்திரித்த கயிறு கொடுப்பது, பரிகாரங்கள் சொல்வது மாதிரி செய்துகொண்டிருக்கிறார்.அப்போது திருமணமாகி பன்னிரண்டு வருடமாக பிள்ளை இல்லாத ஒரு பெண்ணும் அவள் தாயும் வருகிறாள்.
              இதுபற்றி தங்ஙள் விசாரிக்க “கணவன் ஒரு மரக்கட்டை” என்கிறாள் அவள்.கதவு ஜன்னல்களை அடைக்கசொல்லி அந்த பெண்ணின் காலில் ஒரு கருப்பு கயிரை கட்டி இன்னொரு முனையை கதவின் சாவி துவாரத்தின் துளை வழியே வெளிய பரீதை பிடித்துக்கொள்ள சொல்லிவிட்டு(கதவை சாத்தியதும் அவள் காலில் உள்ள கயிற்றை கட்டில் காலில் கட்டிவிட்டு) அவளுக்கு பிள்ளைவரம் தருகிறார்!சில காலம் கழித்து கர்ப்பம் தரித்த அவள் தாயோடு வந்து நன்றி சொல்கிறாள்!
     இந்த தங்ஙள் பகுதி பெரும் எள்ளல் தொனியோடே சொல்லப்பட்டுள்ளது. தங்ஙள் நூஹு பாத்திமாவை மறுமணம் புரிய விரும்பும் விருப்பத்தை அகமதுகண்ணு கேள்விப்பட்டு தங்ஙளை வீட்டை விட்டு விரட்டுகிறார். தங்ஙள் இப்படி ஊருக்கு ஊர் திருமணம் புரிந்து பிள்ளைகுட்டி ஆனதும் கைவிட்டு வேறூருக்கு சென்றுவிடுகிறார்.
    இங்கே வடக்குவீட்டு அகமதுகண்ணு நினைவுபடுத்தியது இரண்டு திரைப்பட கதாபாத்திரங்களை.ஜல்சாகர் படத்தின் பிஸ்வம்பர் ராய் கதாபாத்திரம்.இன்னொன்று எலிப்பத்தாயம் படத்தின் உண்ணி.
ஜல்சாகர் படத்தில் மனைவி பிள்ளைகளை வெள்ளத்தில் பறிகொடுத்த பிஸ்வம்பர் ராய் எனும்  முதியவர் தான் ஒருகாலத்தில் வாழ்ந்த ராஜவாழ்க்கையை விடமுடியாமலும் தற்கால சமூக மாற்றங்களுக்கு  ஈடுகொடுத்து அதோடு ஒட்டி வாழ முடியாமலும் தவிப்பவர்.அடுத்த வீட்டில் குடியேறும் புதுப்பணக்காரன் பெரும்பணம் செலவழித்து ஒரு இசை கச்சேரியை தனது பங்களாவில் நடத்துவதை கேள்விப்பட்டதும் தானும் மீதமிருக்கும் நகை பணத்தை கொண்டு ஒரு இசை கச்சேரி நடத்துகிறார் பிஸ்வம்பர் ராய்.
பிஸ்வம்பர் ராய்-ஜல்சாகர்
  அதுபோலத்தான் இங்கேயும் தங்ஙளுக்கு மேற்குவீட்டில் ராஜவிருந்து என்றதும் தனது வசமிருக்கும் தென்னம்  தோப்புக்களை விற்று தினம் மீன் கறி என்று தங்ஙளுக்கு  விருந்தளிக்கிறார்.
             எலிப்பத்தாயம் உண்ணியும் ஒரு மேட்டுக்குடி வம்சத்தை சேர்ந்தவர்தான்.அவராலும் கால மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.தனது சகோதரிகள் இல்லாமல் அவராலே எதையும் செய்யமுடிவதில்லை.அவர்களுக்கு  திருமணம் செய்துகொடுக்காமல் அதைப்பற்றிய எந்தவித கவலையும் இல்லாமல் இருப்பவர்.தனக்கு கீழே பணியாற்றும் பணியாட்களை இழிவாக நடத்துபவர்.தனது சகோதரிகளையும்கூட!
உண்ணி-எலிப்பத்தாயம்
அகமதுகண்ணுவின்  சகோதரி மறுமணம் புரிய மறுத்துவிடுகிறார் எனும்போதிலும்   தனது மகள் வாழ்க்கை நாசமாக ஒரு காரணமாக(உண்ணி போல) இருப்பவர்.இவர்கள் மூவருக்குமே சாய்வு நாற்காலி என்பது உடலின் ஒரு அங்கமாக மாறிப்போனது மற்றொருoஒற்றுமை!
   அகமதுகண்ணுவிடம் உதவி என்று வருவோர் கண்டிப்பாக தொழுதிருக்க வேண்டும்.அதன் அடையாளங்களை கண்ட பின்பே அவர் உதவி செய்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பார்.அதனால் இவரிடம் உதவி கேட்பதற்கு இருவாரங்கள் முன்பிலிருந்தே தொழுது அதன் அடையாளங்கள் இருப்பதை உறுதி செய்தபின்பே இங்கே உதவி கேட்டு வருவர்.
    இங்கே கதையின் ஒரு இடத்தில் மதம் சார்ந்த பகடி கொஞ்சம் கூராகவே இருக்கும்.அகமதுகண்ணு திண்ணை சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க திடீரென்று நாற்காலியோடு பூமியால் தான் விழுங்கப்படுவது போல அவருக்கு hallucination ஆகிறது.அப்போது அவர் “சரி, பூமியின் அடிப்பாகம் காளை மாட்டின் கொம்பால் தாங்கப்பட்டிருக்கும்”.அந்த இரு கொம்புகளை பிடித்துக்கொண்டுவிடலாம் என்று தனக்குத்தானே ஆசுவாசப்படுத்திக்கொல்வதாக வரும் அந்த இடம்.
                  இந்த அசனார் லெப்பை கதையின் முன்பகுதியில் ஒரு caricature போல காட்டப்பட்டாலும் பிற்பகுதியில் தங்ஙள் பெயரைசொல்லி சம்பாதித்து(தங்ஙள் சட்டியில் வறுபட்டிருந்த கோழிக்கு உயிர் கொடுத்ததை நேரில் கண்டதாக சொல்லி)பெரும் செல்வந்தனாகவும் ஊர் மதிக்கும் ஒரு பெரிய மனிதனாகவும் மாறுவதாக வருகிறது.
 இன்னொரு பக்கம் பரீது இலங்கை சென்றுவிடுகிறான்.ஒருநாள் திரும்பிவருவேன் என்று ஆயிஷாவிடம் உறுதியளித்து செல்கிறான்.ஆயிஷா நீரால்  விழுங்கப்படுகிறாள்.அகமதுகண்ணு முழுமையாக மனநலம் பிரழ்ன்றவறாக மாறுகிறார்.
     ஒற்றை கலாச்சாரம்-ஒற்றை பண்பாடு-'சவுதி சொல்வதே சட்டம்'  என்று straight jacket போல  அந்தந்த நாட்டின் ஊரின்  பழக்கவழக்கங்களின் கழுத்தை நசுக்கி  அனைத்தையும் ஒற்றை பண்பாடாக  திணிக்க முயலும் வாகாபிய சூழலில்  இசுலாமிய  சமூகத்தில் இருந்தே இதுமாதிரியான சுயபகடி கொண்ட  படைப்புகளும் விமர்சனங்களும் சுயபரிசோதனைகளும்  எழுவதன்  தேவை மிக அவசியமான  ஒன்றாக இருக்கிறது.தோப்பில் செய்த அந்த பணியை இன்று தொடர எத்தனை பேர் உள்ளனர் என்று நினைத்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது!