Thursday, 3 January 2019

கோலிவுட் ரவுண்டப் 3.0


முதலில் நாம் சென்றது பன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சேட்ட படப்பிடிப்பு தளத்திற்கு.
வழியில் இரண்டு பவுன்சர்கள் வழிமறித்து "சேட்ட கராக்!!!" என்று சத்தமாக மூன்று முறை சொல்லவைத்து அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாவில் உடனே அப்லோட் செய்தனர்.பணியாற்றும் தொழிலாளர்கள் டெக்னீசியன்கள் எல்லார் தலையிலும் சேட்ட கராக் என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.இதையெல்லாம் ஒருவாறு தாண்டி படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு சென்றோம்.
மூர்த்தி குப்புராசு கஜினியிடம் காட்சியை விவரித்து கொண்டிருந்தார்.

மூர்த்தி குப்புராசு: தலைவா இந்த படத்துல நீங்க செம கெத்தான டான்.ஊரே உங்களை பாத்து நடுங்குது.ஆனா வார்டன் ரோல்ல அமைதியா இருக்கீங்க.அப்புறம்...
கஜினி இடைமறித்து: அஜய் கேதுபதி ஒரு காலேஜ் ஸ்டூடன்ட். தான் ஒரு வளர்ந்துவரும் உதவி டைரக்டர் என்றும் அடுத்து தானே ஒரு பயங்கர தாதாவின் கதையை படமா எடுக்க போறதாவும் கேரக்டர் ஸ்டடி பண்ணுறதுக்காக எங்கூட இருக்க பர்மிஷன் கேக்குறா மாதிரி சீன்!அதான?
மூர்த்தி: நம்மகிட்ட இருக்குற ஒரே கதை அதான்.இப்படி அதையும் மைன்ட் வாய்ஸ்ல கண்டுபிடிச்சிட்டாரே! சார் இல்ல அதுவந்து...
கஜினி: இரு கண்ணா...இன்னும் இருக்கு...அவன் கேடக்டர் ஸ்டடி பண்ணுறேன்னுட்டு கெத்தா ஒரு வார்டனா இருக்கும் என்ன கிமிரு பட வெடிவேலு மாதிரி டம்மி வார்டனாக்கிடுறான்.  
மூர்த்தி: எந்த பால் போட்டாலும் கோல் போட்டுடுறாரே!
கஜினி: பால் போட்டா எப்படிடா கோல் போட முடியும்?சிக்ஸ் அடிக்குறேன்னு சொல்லு!
மூர்த்தி: மைன்ட் வாய்ஸ் அவ்வளவு சத்தமாவா கேக்குது?
கஜினி: இஹா ஹா ஹா ஹா நீ சத்தாமாதாண்டா இவ்வளவு நேரம் பேசிட்டு இருந்த வெண்ண!ஆளாளுக்கு என்ன கெத்து டானா காட்டுறேன்னுட்ட்டு கோமாளியாக்கிட்டு இருக்கீங்க.இப்படித்தான் இதுக்கு முன்னாடி பஞ்சித் ரெண்டு படத்துலயும் கெத்து டான்னு சொல்லிட்டு கடைசில ஏதோ ஒரு நாய் வந்து என்ன சுட்டு கொல்லுறாப்ல டம்மி பண்ணான்.ஏண்டா உங்ககிட்ட வேற எந்த கதையுமே இல்லையா?அசிஸ்டன்ட் டைரக்டரா இல்லாம நேரா குறும்படம் எடுத்துட்டு வந்தா இப்படித்தான் சரக்கு சீக்கிரம் காலியாகிடும்.நீ ரீ.காஜேந்தர் கிட்ட கடைசி அசிஸ்டன்ட்டா சேரு போ!
.
அடுத்து பசுவாசம் படப்பிடிப்பு.
பெருத்த கிவா: கல நீங்க பல  வருசமா போலீஸ்-தாதா  ரோல்கள மட்டும்தான் மாத்தி மாத்தி பண்ணிட்டு இருக்கீங்க.போன படத்துல நீங்க போலீஸ்.அதனால இந்த படத்துல நீங்க தாதா!
கஜீத்: யு மீன் லைக் பில்லா?
கிவா: இல்ல தல.அது சிட்டி கெட்டப் இது கிராமத்து கெட்டப்.
கஜீத்: லைக் இன் வேலர்?
கிவா: ஆமா தல கீரம் படத்தையே புதுசா அவன்ல சுட்டு குடுக்க போறோம்
கஜீத்: சோ நோ பைக் ஸ்டான்ட்ஸ்?
கிவா: அது இல்லாம எப்படி கல?வழக்கமா பேக் வீல்ல வண்டிய ஓட்டுவீங்க..இந்த படத்துல ஹீரோயினை வில்லன் கார்ல  கடத்திட்டு போயிடுறான்.நீங்க பரபரன்னு சுத்தி முத்தி பாக்குறீங்க.ஒரு மெக்கானிக் ஷாப்ல மெக்கானிக் ஒரு பைக்கை சர்வீஸ் பண்ணிட்டு இருக்கான்.பேக் விலை கழட்டி ட்யூப் செக் பண்ணிட்டு இருக்கான்.நீங்க உடனே அந்த பைக்க பிரண்ட் விலை மட்டும் ரோட்டுல பதிச்சு வேகமா போய் வில்லனை மறிச்சு துவைக்குரீங்க.
கஜீத்: ஹவ் இட்ஸ் பாசிபிள் யா?எஞ்சின் இஸ் அட்டாச்ட் டு பேக் வில் ஒன்லி.
கிவா: அதெல்லாம் நம்புவாங்க கல.க்ரீன் மேட் போட்டு அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.எதாச்சும் புதுசா பண்ணாட்டி ஜனங்க மறந்துடுவாங்க
.
அடுத்து இதயநிதி தயாரித்து நடிக்கும் புஷ்கின் இயக்கம் பொய்க்கோ ஷூட்டிங் ஸ்பாட்.
இதயநிதி வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி கட்டி மேலே ஒரு துண்டு.
புஷ்கின்: துண்டை நல்லா பின்னாடி இழுத்து விடு.டிக்கி கிட்ட வரைக்கும் வரணும்....ம்ம்..அப்படித்தான்.
இதயநிதி: ஐ ஆப் தி லவ் ஆப் தி பாலிங் ஆப் தி...
புஷ்கின்: ஆக்சுவலி நீ என்ன வேணும்னாலும் உளறிக்க.நா காலுக்குத்தான் ஷாட் வைக்க போறேன்.
இதயநிதி: ஜி இந்த படத்துல எனக்கு ஜோடி யாருஜி?
புஷ்கின்: ஜோடியா?நீயே ஒரு பொய்க்கோ கேரக்டர்!கடைசி வரைக்கும் தனியாத்தான் நிக்கணும்!
இதயநிதி: மைன்ட் வாய்ஸ் : ப்ச்...டென்தாரா பன்சிகா கஜீனான்னு மஜாவா நடிச்சிட்டு இருந்தேன். இப்ப இப்படி காய உடுறாரு!தகப்பருக்கு ஒரு மைக்கோனா எனக்கொரு பொய்க்கோ!வந்து வாய்க்குதுங்க!
புஷ்கின்: கைல வயலினை புடி...தலைய கவுரு...ம்...அப்படியே லைட்டா கைய மேலையும் கீழையும் அசை...ம்..அப்படிதான்...
....நாம் எஸ்கேப் ஆனோம்!
.
அடுத்து பஞ்சித் இயக்கத்தில் டென்தாரா நடிக்கும் நீலா.
படப்பிடிப்பு தளமே முழுக்க நீல பெயின்ட் அடிக்கப்பட்டிருந்தது.பணியாளர்கள் எல்லாரும் நீல பேண்டு சட்டை போட்டிருந்தனர்.
கதுல் புல்கர்னி : நீலா!கைசா நாம் ஹே ரே?
பமுத்திரகனி: நீலான்னா நீலம்.கிஸ்ஜே கூர்யாவுக்கு புடிச்ச கலர்.
அப்போது திடீர்னு தளத்தில் ஒரு பரபரப்பு.கூட்டத்தில் இருந்து கிஸ்ஜே கூர்யா பரபரப்பாக உள்ளே வந்து “நீலப்படம் எடுக்குறாங்கன்னு சொன்னாங்க..எங்க நீலப்படம்?எங்க நீலப்படம்?” என்று ஆர்வமாக சுத்தியும் பார்க்கிறார்.
கவுன்டர்: டேய் அது நீலப்படம் இல்லடா!நீலா படம்!போ போய் ஒரு ஓரமா ஒக்காரு!

டென்தாரா:டைரக்டர் இந்த படத்துல எனக்கு  பாமசாமி பேத்தி கேரக்டர்தான?
பஞ்சித்: ஆமா மேம்.முற்போக்கான புரச்சி கேரக்டர்.
டென்: அப்போ பேதி பாபு, பாளி கங்கட், குத்தார்த் கிபின், கூஜகுமாரன் இந்தமாதிரி நாலஞ்சு டம்மி பீஸ்களை என்ன ஒன்சைட் லவ் பண்ணிகிட்டே  என்னோட வீட்டை சுத்திலும் பொட்டி கடை வச்சிருக்குற கேரக்டரா போட்டுடுங்க.அஜய் கேதுபதிக்கு பிரதான டம்மி கேரக்டர் குடுத்துடுங்க.
கஞ்சித்: ஒகே மேம்.
டென்: அஜய் கேதுபதி வேலை வெட்டி இல்லாம வீட்ல சமைச்சி போட்டுட்டு துணி துவைச்சிகிட்டு பாத்திரம் விளக்கிட்டு இருக்குற கேரக்டரா இருக்கணும்.அஜய் கேதுபதி அழுதுகிட்டே “கீயும் சாவியும் அன்பே கண்கள் பூட்டிக்கொண்டு ஒன்றாக வாழலாம்... இஹு..இஹு”ன்னு அழுதுகினே பாடுறாப்ல பிதின் ராஜை அழவிடுறோம்!அதையும் இந்த ஜனங்க “ஆகா இதாண்டா பாட்டு”ன்னு பாராட்டுவான்!
கஞ்சித்: அதோட கூனா கோலாவையும் கத்த விடுறோம்!
”என்னடி நினைச்ச?
எங்க நீலா பத்தி
”அட்ச்சா  மூஞ்சி பேந்துடும்..
மஞ்சாசோறு வெளிய உழும்.”
டங்குடக்கர டார டக்கர....
டென்:அது முக்கியம்!இந்த கல்லிக்கட்டு பாமசாமி  சமத்துவம் பொதுவுடைமை  சாதி மத ஒழிப்புன்னு நடுநடுவுல வரிய போட்டுடுங்க.
கஞ்சித்: ஒகே மேம்.
டென்: எல்லாத்தையும் விட முக்கியமான விஷயம்.நா தூங்குற சீன்லேயும் கரோஜா கேவி மாதிரி புல் மேக்கப்ல  தான் நடிப்பேன்.மேக்கப் போட்டதும் அடுத்த ஒன் அவருக்குதான் நடிப்பேன்.அப்புறம் பேக்கப்.
கஞ்சித்: ம்ம்ம்..கஜினியவே வச்சி கோமாளி மாதிரி ஆட்டி வச்ச என்னைய இப்படி கண்ல விரல விட்டு ஆட்டுறா!பாமசாமி பேத்தின்னா சும்மாவா!
.


அடுத்து பங்கர் இயக்கம் கிண்டியன் 2.
கிண்டியன் யூனிபார்மில் விமலகாசன் நிக்குறாப்ல ஆயிரம் பேனர்கள் ஆயிரம் அடி உயரத்தில் படப்பிடிப்பு தளம் முழுக்க வைக்கப்பட்டிருந்தது.வெண்ணை மாநகரத்தை முழுக்க செட் போட்டிருந்தார்கள்.
பங்கர்: ஜி நீங்க பஸ்ல ஏறி கொருக்குபேட்டை டு வண்டலூர் போறீங்க.அப்போ டிக்கட் காசு குடுத்ததும் மிச்சம் சில்ற ரெண்டு ரூவா கேக்குறீங்க.கண்டக்டர் “டேய் அதெல்லாம் குடுக்க முடியாதுடா.ஆனத்த பாத்துக்க”ன்னு சொல்ல கர்மக்கலை பயன்படுத்தி கண்டக்டர் பேகை பிடுங்கி அதுல இருக்குற நோட்டுகளை எல்லாம் பஸ்ல வீசி எறிஞ்சிட்டு இறங்கி நடக்குறா மாதிரி.
விமலகாசன்: வெல் வெறுமனே நடக்குறா மாதிரி இல்லாம விசில் அடிச்சிகிட்டே நடக்குறேன்.பின்னாடி ஒரு பேனர்ல கய்யம் விசில் ஆப் டவுன்லோட் பண்ணுங்க விளம்பரம் இருக்குறாமாதிரி பாத்துக்குங்க.
பங்கர்:க்கும்.இவரு கட்சி ஆரம்பிச்சதுக்கு ப்ரொட்யூசர் காசுல விளம்பரமா?அதுசரி நாம பண்ணாத அலப்பறையா?
விமல்:அப்புறம் நம்ம கம்பனி ஆர்டிஸ்ட் எல்லாரும் இதுலயும் இருக்கணும்.பாண்ட்ரியா,கூஜா புமார்,கரவிந்த் கமேஷ்,பூகி கேது,பம்.எஸ்.காஸ்கர்  எல்லாரும் இருக்கணும்.ம்யூசிக் ககமது பிப்ரானை போட்டுடுங்க..அப்புறம்.....
பங்கர்: ஸ்..ஸ்...சப்பா!மிடில!பல வருசமா டம்மி டைரக்டர போட்டு இவரே டைரக்ட் பண்ணி நடிச்சிட்டதால இவரை கட்டி மேய்க்கிறது ரொம்ப கஷ்டம் போலிருக்கே!பேசாம குஜய வச்சே படத்த எடுத்திருக்கலாம் போல!
.
கங்கட் கிரபு இயக்கம் பாட்டி பட ஷூட்டிங் ஸ்பாட்.பத்து மணி ஷூட்டிங் என்று சொன்னாலும் மதியம் மூணு மணிக்குதான் டைரக்டருக்கு ஹேங்ஓவர் தெளிஞ்சிது. தயாரிப்பாளர் எலுமிச்சை சாறு குடுத்து மூஞ்சில ஐஸ் வாட்டர் ஊத்தி ஒரு மாதிரி தெளிய வச்சு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூட்டி வந்திருந்த நேரம்...
பழைய நாடக நடிகர்கள் எல்லாரும் எண்பதுகள் கெட்டப்பில் டிஸ்கோ ஆடிக்கொண்டிருந்தனர்.
கங்கட் கிரபு:என்னாதிது?இந்த ஷாட் நா எப்ப வச்சேன்னு எனக்கே நியாபகம் வரலியே!சரி விடு!இதுக்கு ஆடியன்ஸ் எப்படி விழுந்து விழுந்து சிரிக்க போறான் பாரு!
கவுன்டர்: ஆடியன்ஸ் சிரிக்கிறானோ இல்லையோ. ப்ரொட்யூசர் தெருவுல சந்திசிரிக்க போறான் .அது நிச்சயம்! 
கங்கட்: வழக்கம் போல சொந்தமா எந்த வசனமும் எழுதாம...
கவுன்டர்: டேய் நிப்பாட்டு..உனக்கு எழுத தெரிஞ்சா எழுத மாட்டியாடா?எப்பவும் போல எவனாச்சும் எழுதி பேமஸ் ஆன வசனத்த சுட்டு போடு!
கங்கட்:மைன்ட் வாய்ஸ் நம்ம தொழில் ரகசியம் பூரா இவருக்கு தெரிஞ்சிருக்கே!
கவுன்டர்: ஆமா இவுரு பெரிய அம்பானி.அப்படியே தொழில் ரகசியத்த தெரிஞ்சிகிட்டாலும்...ஊசிப்போன ஊத்தப்பத்த சுடவச்சு குடுக்குறவன்தான நீயி?
கங்கட்: ஒகே!வழக்கம் போல என்னோட தம்பி கேம்ஜி இதுல காமெடி பன்னவச்சு  ஆடியன்சை கதற விடுறோம்! நீ அடிச்சா பீசு!நா அடிச்சா ப்யூசு!
கத்யராஜ்: பாஸ் இந்த விக் ரொம்ப அரிக்குது.அது தவிர டைட்டா போட்ட பேண்ட் வேற கவ்வுது.சீக்கிரம் ஷூட் பண்ணிட்டா நா கிளம்பிடுவேன்!
கங்கட்: இருங்க சார்.கம்யா ப்ரிஷ்ணன் மேக்கப் போட்டுட்டு வர எப்படியும் நைட்டு ஒன்பதாகிடும்.அதுவரைக்கும் இப்படிதான் இருக்கணும்!
கத்யராஜ்:மைன்ட் வாய்ஸ்: யூத் வேஷம் போட ஆசைப்பட்டு இவன் படத்துல நடிக்க ஒத்துகிட்டது தப்பா போச்சு.பேசாம பிவமூர்த்திகேயன் எடுக்கும் பனா படத்துல பெரியார் பேத்திக்கு அப்பாவா நடிச்சிட்டு போயிருக்கலாம்!கெரகம்!
.
.
அடுத்து பட்லி இயக்கி குஜய் நடிக்கும்  கண்ணாமலை பட உல்டா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போகும் அளவு திராணி இல்லாததால் இத்தோட முடிச்சிகினோம்!

Sunday, 16 December 2018

ராட்சசன்,prosthetic மற்றும் தேஜாவூ


   கச்சிதமான திரைக்கதை உள்ள முதல் தமிழ் படம் என்றெல்லாம் சில ஒலக விமர்சகர்கள் பில்டப் கொடுத்திருந்தது படம் பார்ப்பதை மேலும் தள்ளிப்போட வைத்தது.
              படம் நெடுக "இத எங்கையோ பாத்திருக்கமே" மைன்ட் வாய்ஸ் ஓடிட்டே இருந்தது.
உதாரணமா பட துவக்கத்தில் நாயகனுக்கு போலீசில் சேர பெரிதாக விருப்பமில்லை.அவனுக்கு இயக்குனர் ஆகவே விருப்பம்.அவனது மாமாவின் சிபாரிசில் எஸ்ஐ ஆகிறான்.முதல் நாள் தயங்கியபடி ஸ்டேசனுக்குள் நுழைந்தால் அங்கே ஒரு கைதியை மேலதிகாரி போட்டு துவைத்துக்கொண்டிருக்கிறார்...இவன் பயந்தபடியே பார்க்கிறான்..etc..etc..அப்புறம் ஒரு தொடர்கொலை வழக்கு பற்றிய  விசாரணை குழுவில் சேர்க்கப்படுகிறார்...நிற்க..இதெல்லாம் அஞ்சாதே படமா?ராட்சசன் படமா?என்ற முதல் குழப்பம்.
அஞ்சாதே!


       அப்புறம் அந்த பிரேத பரிசோதனை டாக்டர் நிழல்கள் ரவி பண்ணியிருக்கார்.அப்புறம் அங்கங்க மர்மமான பெட்டிகள் கண்டெடுக்கப்படுது ..நிற்க....என்னவோ யுத்தம் செய் மாதிரி..யூதாஸ்(ஜெயப்பிரகாஷ்) கேரக்டர் மாதிரி. ஆனா நிழல்கள் ரவியினது யூதாஸ் போல   metaphysical  தன்மைகள் எதுவும்  இல்லாத  கேரக்டர் !
                 இதெல்லாம் ஒரு மேட்டரா?இயக்குனர் மிஸ்கின் ரசிகனா இருந்திருக்க கூடும் என்று விட்டுட்டேன்.அப்புறம் அந்த முக்கிய காட்சி.அந்த கணக்கு வாத்தி அந்த மாணவியை மட்டும் இருக்க சொல்லிட்டு மத்தவங்களை அனுப்பிவிட்டு சில்மிஷம் செய்துகொண்டிருக்கும் அந்த வேளையில் ..அதெப்படி சொல்ல..பள்ளியில் மேஜிக் ஷோ நடப்பதாக இரண்டும் மாறி மாறி காட்டப்படுது!ஏன்?
பெண் வேடமிட்ட ஆண்!
         மேஜிக்ல முக்கியமான அம்சம் பார்வையாளனின் கவனத்தை ஒரு பொருள்/இடத்தில் குவிய செய்துவிட்டு அந்த மைக்ரோ விநாடிப்பொழுதில் மேஜிக் நிபுணர் வேறொரு வித்தையை செய்து தயாராக இருப்பார்!தயாரானதும் மக்களின் பார்வையை அந்த தயார் செய்யப்பட்ட இடம்/பொருளின் மீது கவனத்தை குவிய செய்வார்.அந்த மாதிரி இந்த இரண்டு காட்சிகள்.இங்கே இயக்குனர் மக்களின் பார்வை நிச்சயமாக படும் என்று கருதும் அந்த கணக்கு வாத்தியின் சேட்டை..அந்த நேரத்தில் பள்ளி மேஜிக் ஷோவில் அந்த வினோத தோற்றத்தில் மேஜிக் செய்துகொண்டிருக்கும் அந்த நபர்.
திசை திருப்பலுக்கு இக்காட்சி!

          இயக்குனர் நிச்சயமாக நம்பியது மக்களின் கவனம் அந்த வினோத தோற்ற நபர் மீது விழாது என்பதே!ஏனெனில் அந்த மாணவிக்கு ஒன்னும் ஆகிட கூடாதே!அந்த நேரத்தில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடாதா?நாயகன் கதவை உடைத்து வந்துவிட மாட்டானா?என்று தவித்துக்கொண்டிருப்பர். அப்ப போய் "என்னாதிது?வினோதமா ஒரு நபர் மேஜிக் பண்ணிட்டு இருக்குது?" என்ற சந்தேகமே எழுந்திருக்காது.

    ஆனா நான் அதை கவனிக்க நேர்ந்தது.கண்டிப்பாக அதை வேறு சிலரும் கவனித்திருக்க கூடும் என்றாலும் அவர்களுக்கு இங்க மறுபடியும் ஒரு தேஜாவூ வந்திருக்காது.இங்கே strike ஆனது ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதிய அலெக்ஸ் க்ராஸ் சீரிஸ்.அலெக்ஸ் க்ராஸ் எனும் ஆப்ரிக்க அமெரிக்க டிடெக்டிவ் -தன் தாய் மற்றும் மகளோடு வசித்துவருகிறார்.மனைவி இறந்து பல வருடங்கள் ஆனாலும் மறுமணம் புரியாதவர்.மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை மீது அவருக்கொரு ரொமாண்டிக் பந்தம் ஏற்படுது...நிப்பாட்டு.இங்கயும் நாயகனுக்கு தன் மகள் இல்லாட்டாலும் மாமா பொண்ணு படிக்கும் அந்த பள்ளியின் ஆசிரியை மீது லவ்வு.சரி இதை விட்டுடுவோம்.முக்கியமான மேட்டருக்கு வருவோம்.
        முன்ன சொன்ன அந்த வினோத உருவம் பார்த்ததும் எனக்கு Along came a spider(அலெக்ஸ் க்ராஸ் வரிசையில் முதல் நாவல்.)திரைப்படமாக மார்கன் ப்ரீமேன் நடித்து வந்தது.அதுல கேரி சோனிஜி என்று வினோத உருவம் கொண்ட ஒரு ஆசிரியர்.
Gary Soneji

பின்னர்தான் தெரியுது.அந்த நபரின் உண்மை பெயரும் அதுவல்ல.தோற்றமும் உண்மையல்ல.செனேடரின் மகள் படிக்கும் பள்ளியில் தீவிர கண்காணிப்பில் அவள் இருக்கும்போதே அவளை பள்ளியில் இருந்து கடத்தி சென்றுவிடுவான்.

மேக்கப் கலைத்த கேரி சோனிஜி  &கிறிஸ்டபர் 


                   அதன் பின் அந்தக்கதை வேறெங்கோ திசைமாறி போய்டும் என்றாலும் இப்படம் அதை நினைவுபடுத்தியது.
அப்புறம் படத்தின் பிற்பகுதியில் கிறிஸ்டபர் பெண் வேடம் கலைத்துவிட்டு ஆணாகவே வரும் காட்சிகள்  பலவற்றில் படத்தில்   வியாதியால் பாதிப்புற்ற லிங்கேசனை நினைவூட்டுகிறார்!
யாரு லிங்கேசன் ?யாரு கிறிஸ்டபர்?
           
                    அப்புறம் ஒரு வில்லன் அதுவும் சைக்கோவான வில்லன் என்றாலே உடனே அந்த நபருக்கொரு பிளேஷ்பேக் போட்டு எப்படி இருந்த இந்தாளு இப்படி ஆகிட்டாரு?என்று பார்வையாளர்களை உச்சுகொட்ட வச்சிட்டு கடைசில அதே நபர் ஈரோ கையால் சாகும்போது கைதட்ட வைத்தல்.ராட்சசன் மட்டுமல்ல 2.0 ல கூட அதான் நடந்துச்சு.
z             உண்மையில் எதுக்கு இந்தமாதிரி  பிளேஷ்பேக் ?இதை தெரிஞ்சிக்கிட்டு குற்றம் செய்வோரின் psychological profile உருவாக்கி அதை வச்சு வேற படங்களின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போறோமா?விறுவிறுப்பான படங்களுக்கு அது தேவையில்லை என்பது என் கருத்து.இதுமாதிரியான உளவியல் தன்மைகளை மட்டும்  மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு அவை தேவைப்படும்.
              மற்றபடி இதுவொரு நல்ல வணிக சினிமா.மேற்சொன்ன தேஜாவூ உணர்வுகள் தோன்றாமல் இருந்திருந்தால் படத்தை ரசித்திருக்க முடியும்.மற்றவர்களுக்கு அம்மாதிரியான உணர்வுகள் இல்லை  என்பதை படம் குறித்த அவரவர் பதிவுகளை பார்த்தப்போ புரிஞ்சிது.
              இங்க குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் prosthetic.கிறிஸ்டபர் கேரக்டருக்கு மேக்கப் பண்ண எவ்வளவு மெனக்கேட்டோம்...எவ்வளவு மணி நேரங்கள் ஆனது..etc...etc.. மாதிரியான தகவல்கள்.முன்பே Synecdoche New York பதிவில் prosthetic பற்றி குறிப்பிட்டிருந்தேன்.குறிப்பாக கமலால் ப்ரோஸ்தட்டிக்

என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்துவிட்டதை குறிப்பிட்டிருந்தேன்.அதையே இங்கும் சொல்ல வேண்டியுள்ளது.
       குறிப்பாக இந்த படத்தின் ஓட்டத்திலிருந்து விலகி அலெக்ஸ் க்ராஸ் சீரிசுக்கு குறிப்பா Along Came a Spider படத்துக்கு கவனம் சென்றதற்கு காரணமும் வில்லன் அணிந்திருந்த ப்ரோஸ்தட்டிக்  மேக்கப்தான். இந்த prosthetic அணிந்த முகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட எனக்கு ஒன்றாகவே தெரிகிறது.
 உதாரணமாக Sin City படத்தின் Marv  கேரக்டரின் முகமும் தசாவதாரம் பிளெட்சர் கேரக்டர் முகமும் ஒன்றாகவே இருப்பதை கவனிக்கலாம்(தசாவதாரம் படத்தில் ப்ரொஸ்தடிக் அணிந்த எல்லா   கேரக்டருமே  ஒரேமாதியான முகபாவம் கொண்டதாகவே தோன்றியது)
Fletcher and Marv

அதுபோல சீதக்காதி விசய் சேதுபதி முகம் இந்தியன்  கமல் முகம் போலவே(அவ்வை ஷண்முகியையும் சேர்க்கலாம்)!அது ப்ரொஸ்தடிக் மேக்கப்புக்கே உண்டான limitation என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடியுது.

       இந்த படத்தில் அந்த மேஜிக் செய்யும் அந்த "பெண்"னை பார்த்ததும் முதலில் ரெமோ பட நர்ஸ் நினைவுக்கு வந்தது :D .அப்போதே அது பெண்ணல்ல பெண் வேடமிட்ட ஆண் என்று விளங்கி இவன்தான் கொலைகாரன் என்பதையும் யூகிக்க முடிந்துவிட்டது(பின்ன எதுக்காக ஒருத்தன் மெனக்கெட்டு பெண் வேடம் போட்டுகினு இங்க மேஜிக் பண்ணுறானாம்?).அதுவே அந்த மேஜிக் செய்யும் கேரக்டரின் பின்புறத்தில் இருந்து கேமரா கோணத்தை வைத்திருந்தால்  அதாவது ஒரு பெண்ணின் உருவம் மட்டும் தெரியும்படி காட்டியிருந்தால் அந்த யூகத்துக்கு  இடமில்லாமல் போயிருக்கும்.
.

   டிஸ்கி:          "மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?" என்று சிலர் கேட்கலாம். ஒரு படம் பார்க்கும்போது தோன்றும் உணர்வுகளை எண்ணங்களை எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்வதே நம்ம வழக்கம்.வெளியில் இருந்து பார்க்கும் பார்வைகள் மாறுபடலாம்!
                சினிமா விமர்சனம் என்ற வார்த்தையை எங்குமே நான் பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணமும் இதுவே!விமர்சனம் என்று வரும்போது தனிப்பட்ட நபரின் எண்ணங்களை மட்டும் பதிவு செய்ய முடியாது.பொதுப்படையான மக்களின் சிந்தனை ஓட்டத்தை கருத்தில் கொண்டே எழுத முடியும்.அது நமக்கு வராது!

Thursday, 22 November 2018

பரியேறும் பெருமாள்

                        இந்தப்படத்தை தாமதமாக பார்க்க காரணம் ஒலக விமர்சகர்கள்!அவர்கள் எந்த ஒரு படத்தையும்  ஆகா!ஓகோ என்றாலே கொஞ்சம் உசாராகி 'சரி படத்த அப்புறம் பாத்துக்கலாம்!' என்று ஒத்திப்போடுவதே வழக்கம்!
        படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாது வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதை காண முடிகிறது.இந்தப்படம் வெற்றி பெறவும் ரஞ்சித் இயக்கிய கடந்த இரண்டு படங்கள் ரசினி நடித்திருந்தபோதும் பெரிய வெற்றியை பெறாததன் காரணத்தையும்  பிறகு பார்க்கலாம்.

      சாதிய ஒடுக்குமுறை சாதி ஆணவ படுகொலைகள் என்பது வட இந்தியாவை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே இருந்தது(இருக்கிறது என்றே நினைக்கிறன்).ஆனா சமீப காலமா இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நிகழ ஆரம்பித்துள்ளன.பல்வேறு சாதிய இயக்கங்கள் கட்சிகள் தமிழன் என்ற முகமூடி அணிந்து பின்னே செய்யும் தகிடுதத்தங்கள் ஒருபுறம் இருக்க இப்போதுள்ள இளைய தலைமுறையில் பலரும் பெயருக்கு பின்னாடி சாதி பேரை போடுவதை ஒரு பேஷனாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் சென்ற தலைமுறையை விட சாதிய பிரக்ஞை கூடுதலாக உள்ளவர்களாக இருப்பதகாவே தோன்றுகிறது.
          சமூக வலைதள ஊடகங்களில் காணப்படும் சாதிவெறி பதிவுகள்- எதிர்வினைகள்; தன் சாதியை சார்ந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக சில நடிகர்களை தலைமேல் தூக்கிவைத்து ஆடுதல்,சினிமாக்காரனை கூத்தாடி என்று விமர்சிக்கும் இவர்களே 'தன் சாதி நடிகன்' படத்தை DP யாக வைத்துக்கொள்ளும் நகைமுரணையும் காண முடிகிறது.
       ஆணவ படுகொலைக்கான ஆணிவேர் உடலில் இருக்கிறது.உயர்ந்த சாதி ஆண்ட பரம்பரை என்றெல்லாம் உசுப்பிவிடப்பட்ட மக்கள் தங்கள் வீட்டு மகள்களை(கவனிக்க மகள்கள் தான் பிரதானம்) ஒரு சுய சிந்தனை கொண்ட பெண்ணாக பார்க்காமல் தன் குடும்ப-சாதி பெருமையை காப்பாற்றப்போகும் தன் சாதிக்கு வாரிசுகளை தரப்போகும் ஒரு புனித உருவாகவே பார்க்கப்படுகிறாள்.இது மதங்களின் மீது தீவிர பற்று கொண்டோருக்கும் பொருந்தும்.
           அத்தகைய புனித உருவை தன் சாதி ஆண்மகன் கையில் பிடித்துக்கொடுப்பதன் மூலம்   கலப்படமே இல்லாத 100% தன்- சாதியை சார்ந்த - pure bred வாரிசுகளை பெற்றெடுக்க வைப்பதே அவர்கள் லட்சியம்!அப்படியல்லாமல் வேறு சாதி அதிலும் தன் சாதியை விட தாழ்ந்த சாதியை சார்ந்த ஒருவனை இவள் காதலித்தாள்/திருமணம் செய்துகொண்டாள் என்றால் அவள் களங்கப்பட்டுவிட்டாள்!இனி அவள் தனது வாரிசே இல்லை!என்று கைகழுவுவதோடு நிற்காமல் அவர்கள் இருவரையும் போட்டு தள்ளவும் ஏற்பாடு செய்ய தயங்குவதில்லை.
        சில நேரங்களில் கூலிப்படை மூலம் அல்லாது பெற்ற தந்தையே கலப்பு மணம் புரிந்த மகளின் கழுத்தை வெட்டிட்டு நெஞ்சை நிமிர்த்திட்டு தனியாகவோ மனைவியுடனோ சரணடையும் செய்திகளை பார்த்திருப்போம்!
       இப்படத்தில் அதைவிட நுட்பமாக அந்த கிழவன் பேருந்தில் புட்போர்டு அடிப்பது போல நின்றுகொண்டு தன் சாதி பெண்ணை காதலித்த அந்த  தலித்  இளைஞனை நாசூக்காக கை நழுவ வைத்து கொலை செய்தல்,ஆற்றில் ஒரு இளைஞனை மூழ்கடித்து விபத்தில் இறந்ததாக நிறுவுதல் என்று செல்லும் காட்சிகளை குறிப்பிடலாம்!அடுத்தநாள் செய்தியில் வாலிபர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து சாவு!நீரில் மூழ்கி சாவு என்று முடிந்து விடுவதாக வசனமே இல்லாமல் மிக வலிமையாக அதை பதிவு செய்துள்ளார் இயக்குனர்!
                அப்புறம் ஜோ மற்றும் ஆனந்த் கதாபாத்திரங்கள் ஒரே சாதியை சார்ந்தவர்கள் .ஆனால்  பரியனோடு நட்பாக இருப்பதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை.ஜோவை லூசுப்பொண்ணு கேரக்டர் என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது.அவளுக்கு சமூகத்தில் நிலவும் சாதிய ஒடுக்குமுறைகள் பற்றிய பிரக்ஞையே இல்லை என்று சொல்லலாம்!ஒருவேளை ஜோவும் தீவிர போராளி போல கட்டி எல்லோரும் கடுமையாக தத்துவ விசாரணை செய்வதாக காட்சிகள் வைத்திருந்தால் இப்படம் கலைப்படமாகி பத்து பேரு பாத்து பாராட்டியதோடு முடிந்திருக்கும்!

       ஆக அந்த சமரசம் என்பதை பெரிய குறையாக பார்க்க தேவையில்லை.ஆனால் ஆனந்த் சாதிய ஒடுக்குமுறைகள் குறித்து அறிந்தவனாக இருக்கிறான்.அதே நேரத்தில் பரியனோடு சாதி வித்தியாசம் பார்க்காமல் பழகுகிறான்.இடைநிலை சாதியினர் எல்லோருமே  சாதி வெறியர்கள் என்று காட்டாமல் இப்படிப்பட்டவர்களும் உள்ளார்கள் என்பதை இயக்குனர் காட்டியது கூடுதல் பலம்.வெறுமனே கருப்பு-வெள்ளை க்குள் சிக்கிக்கொள்ளாமல் இருந்திருக்கிறார்.


         அதேநேரம் ஜோவின் தந்தை.மகளின் திருமணத்திற்கு வந்த பரியனை தனியறைக்கு கூட்டிக்கொண்டு போய் அவனை தன் சாதிக்கார வெறியன்கள் அடித்து நொறுக்கியதும்  "உன்ன கொல்றதோட இல்லாம என்னோட புள்ளையையும் கொன்னுடுவாங்கடா!உன்னை கையெடுத்து கும்பிடுறேன்டா!" என்று கெஞ்சும் போது- தான் இதை இயல்பாக எடுத்துக்கொண்டாலும் தன்னை மீறிய தனது சாதிக்காரன் விடமாட்டான் என்று சொல்ல வருவதாக விளங்குது.ஆனா படத்தின் கடைசி காட்சியில்  ஜோவின் தந்தை தான் செய்த தவறுகளுக்கு வருந்துவதால் மட்டுமே  இந்த கொடுமை  முடிவுக்கு வந்துவிடாது என்பதையும் நாம் உணரலாம்!
           அதே போல பரியனின் தந்தையை அம்மணமாக்கி உண்மையில் அவர் ஆணா?என்று பார்க்கும் அந்த தருணத்தில் சாதிவெறி மட்டுமல்லாது இன்னொரு பொதுபுத்தியையும் காண முடிகிறது. நாம் காணும் மனிதர்களை வெளிப்புற தோற்றம் சார்ந்து எடை போடுதல்.அதாவது ஆண் என்பவன் தோற்றத்தில் 100% ஆணாக இருக்க வேண்டும்.கொஞ்சம் பெண் தன்மை உள்ளவனாக இருந்தால் அவன் எதிர்கொள்ளும் கேலி கிண்டல்களுக்கு அளவே இல்லை.அதிலும் ஆண் என்பவன் கட்டையான ஆண் குரலோடு இருக்க வேண்டும்.
    பெண் குரல் கொண்ட ஆணும், ஆண் குரல் கொண்ட பெண்ணும் இருந்தாலும் இதில் கேலிக்குள்ளாவது பெண் குரல் கொண்ட ஆண்தான்!இதன் பின்னால் உள்ள உளவியல் தனிக்கதை. அப்படி அதற்கு முன்பே பலமுறை பரியனின் தந்தை அப்படி அம்மணமாக்கி அசிங்கப்படுத்தப்பட்டிருக்கிறார் என்று அவரது மனைவி சொல்வதாகவும் வருகிறது.பரியனே தனது தந்தை பற்றி சொல்ல கூச்சப்பட்டு 'அப்பா வண்டி மாடு வச்சிருக்காரு' என்று மழுப்புகிறான்.
             
       உறியடி படம் போல சாதி இயக்கத்தின் தலைவனை போட்டு தள்ளுனா எல்லாம் சரியாகிடும் என்பது மாறியான அபத்தங்கள் இப்படத்தில் இல்லை.ஆணவப்படுகொலை செய்வோர் ஒன்றும் ஸ்லீப்பர் செல் இல்லை.மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்தால் இயங்குவதும் வராட்டி அமைதியாக இருப்பதற்கும்!இவர்களுக்கு மேலிடமும் வேண்டாம் இயக்கங்களும் வேண்டாம்!தனி மனிதனாகவே இத்தகைய கொலைகளை "சாதிப்பெருமையை தூய்மையை" நிலைநாட்டும் பொருட்டு செய்துவிட்டு ஜெயிலுக்கு போகவும் தயங்காதவர்கள்!அம்முயற்சி தோல்வியடைந்தால் தன் சாதிக்கே தான் இழுக்காக போய்விட்டதாக எண்ணி தன் உயிரை மாய்த்துக்கொள்ளவும் அவர்கள் தயங்க மாட்டார்கள்.இப்படத்தில் அந்த கிழவன் பயமில்லாது ரயிலுக்கு முன்னே போய் உக்காரும் அந்த காட்சியை சொல்லலாம்!

                கறுப்பி எனும் நாய் அது நீலமாக மாறுதல் இவையெல்லாம் மாரி செல்வராஜே வைத்தாரா இல்லை ரஞ்சித்தின் யோசனையா என்ற கேள்வி எழாமல் இல்லை.இருந்தாலும் அது கதையோட்டத்திற்கு வெளியே நிற்காமல் கதை நகர்வுக்கு பயன்பட்டுள்ளது.
         கதிர் இதற்கு முன்னாடி நடிச்ச படங்களில் "இந்த காட்சில எப்படி ரியாக்ட் பண்ணலாம்?" என்று முடிவெடுக்க முடியாத நிலையில் முழிப்பதாகவே அவரது முகபாவம் இருந்துவந்துள்ளது.இந்த படத்தில் அது இல்லை.

            ஒரு தீர்வை இறுதியில் முன்வைத்ததால் இதனை வணிக சினிமா என்றே கூறலாம்!படங்களில் கூறப்படும் நேர்மறை கருத்துக்கள் சிந்தனைகள் சமூகத்தில் எந்தவித நல்ல விளைவையும் ஏற்படுத்திவிடும் என்று நான் என்றுமே நம்பியதில்லை.இருந்தாலும் தீவிர கொள்கை, கோட்பாடு, விவாதங்கள், குறியீடுகளை வைக்கிறேன் என்று பிரதான கதையிலிருந்து பார்வையாளனின் கவனத்தை திசை திருப்பி படத்தையே டம்மியாக்கி விடுதல் வெகுசன மக்களுக்கு புரியாமல் ஏதோ ஒரு அறிவாளி elite  கள் மட்டுமே சிலாகிக்கும் படமாக அல்லாது வலிமையாக அதேநேரத்தில் விறுவிறுப்பாக்கவும் ஒரு படத்தை கொடுப்பது எளிதான காரியமல்ல!
          ரஞ்சித் தோற்ற இடம் இதுதான்!அவரின் அட்டகத்தி இன்ன்றைக்கும் எனதபிமான படம்.அதில் வடசென்னை தலித் மக்களின் வாழ்க்கையை கதையோடு பதிவு செய்திருப்பார்.அதற்கு பிறகான படங்களில் குறியீடுகளை முன்னிறுத்தி கதை ஓட்டத்தை நீர்க்க செய்துவிட்டார்!இப்படம் அடைந்திருக்கும் அந்த balance ஐ அவரும் அடைய முயலட்டும்!
         இப்போது மாரி செல்வராஜின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இரண்டாவது படமாகவே இருக்கும்!இதே போன்று வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் திருப்திப்படுத்தும் (ஒரு சரியான சமநிலையில்) இன்னொரு படத்தை அவர் கொடுத்தாலேயொழிய அவர் onetime wonder என்பதாக ஓரங்கட்டப்பட்டுவிடும் அபாயமும் உள்ளது.
        

Saturday, 8 September 2018

Being There 1979

           

இப்படம் வெளியான காலத்தில் அன்றைய அமெரிக்க சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்திருக்கலாம்.ஆனால் இன்று இப்படம் இந்திய- குறிப்பாக- தமிழ் சமூகத்தின் அவலங்களுள் முக்கியமான ஒன்றைப்பற்றிய satire ஆக புரிந்து கொள்ளலாம்.



                         சான்ஸ்(Chance) ஆரம்ப காட்சியில் காட்டப்படும் விதம் என்பது வேறுஅதை காண்போர் அவர்தான் அந்த பெரிய வீட்டின் முதலாளி என்று எண்ணக்கூடும்.ஆனா கொஞ்ச நேரத்தில் அவர் அந்த வீட்டின் தோட்டக்காரன் என்பது தெரிய வருகிறது.படுத்த படுக்கையாக இருக்கும் ஒரு முதியவர்தான் வீட்டின் முதலாளி.அவருக்கு பணிவிடை செய்யும் பணிப்பெண்  லூயிஸ்(Louise)  .அவள் பரிதாபப்பட்டு சான்சுக்கு வேளாவேளைக்கு உணவளிக்கிறாள்.வீட்டின் ஒவ்வொரு அறையிலும் டிவி பெட்டிகள்.சான்ஸ்க்கு எல்லாமே டிவிதான்.தோட்ட வேலை செய்யும் இடத்தில்கூட ஒரு டிவி ஓடிக்கொண்டிருக்கிறது. 


வீட்டின் முதலாளி இறக்கும் வரை அங்கே தோட்ட வேலை செய்துவரும் சான்ஸ் பிறகு அங்கிருந்து அட்டர்னி ஒருவரால்  வெளியேற்றப்படுகிறார்.அந்த நேரத்தில் சோகமான இசையாக அல்லாமல் upbeat பின்னணி இசை ஒலிப்பதிலிருந்து தொடங்கும்  மெல்லிய முரண்பாடான  நகைச்சுவை என்பது கடைசிவரை நீடிக்கிறது.

               யாரையுமே தெரியாத நிலையில் சாலையில் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு சிறு கார் விபத்து.பிறகு there is no looking back என்பது போல தொடர் ஏற்றங்கள்.காரில் இருக்கும் ஈவ் ரேண்ட்(Eve Rand) சான்சுக்கு காலில் அடிபட்டிருப்பதை கண்டு இரக்கமுற்று தன் பங்களாவிற்கு அழைத்து செல்கிறாள்.அங்கு ஈவின் வயதான கணவன் பென் ரேண்ட்(Ben Rand) அவரை கவனித்துக்கொள்ள ஒரு மருத்துவர்.அவரே சான்ஸின் கால்களையும் குணப்படுத்துகிறார்.கால் குணமாக இரு நாட்கள் அவ்வீட்டில் தாங்கும் சான்ஸ் பிறகு பென் மற்றும் ஈவின் மனதில் நிரந்தர இடம் பிடிக்கிறார்.
               சான்ஸ் அப்போதுதான் நிஜ உலகை காண்கிறார்."டிவி காட்சிகள் போலத்தான் இருக்கு.என்ன இன்னும் கொஞ்சம் கூடுதலா பார்க்க முடியுது" என்று ஈவிடம் சொல்கிறார்!

           பென் பில்லியனர்.அமெரிக்க சனாதிபதிக்கே ஆலோசகராக இருப்பவர்.அமெரிக்க சனாதிபதி தனிப்பட்ட முறையில் பென்னின் பங்களாவிற்கு விஜயம் செய்யுமளவு நெருக்கம்.நீங்கள் யார்?உங்களுக்கு வீடில்லையா?என்று பென் கேட்க அதற்கு சான்ஸ் தோட்ட வேலை சார்ந்து சில பதில்களை சொல்ல பென் அவற்றை தொழில் சார்ந்த மாபெரும் தத்துவங்களாக காண்கிறார்.
     
Ben
                   என் பெயர் சான்ஸ், நான் ஒரு கார்டனர் என்று சொல்ல அவரை  சான்ஸி கார்டினர் என்பதாக அழைக்க தொடங்குகிறார்கள்.எந்த கேள்வி கேட்டாலும் சான்ஸ்  தன் மனதுக்கு தோன்றியதை அப்படியே சொல்கிறார்.அதை இவர்கள் வேறுமாதிரி அர்த்தம் செய்துகொள்ள ஒரே ரகளை!
               இங்கே பல நுட்பமான நகைச்சுவை தருணங்கள் சற்று கவனம் தவறினாலும் கண்டுகொள்ளாமல் போய்விடக்கூடும்.உதாரணமாக சான்சை சக்கர நாற்காலியில் தள்ளிக்கொண்டு லிப்டில் வைத்து லிப்ட் மேலே செல்லும்போது
சான்ஸ்"இதில் செல்வது இதான் முதன்முறை." என்று அவர் லிப்டை குறிப்பிட்டு இதுல டிவி இல்லையா? என்று கேட்க  பணியாளோ அவர் சக்கர நாற்காலியை சொல்வதாக நினைத்து முதலாளி ஒன்று மோட்டாரோடு வைத்திருக்கிறார் என்று சொல்ல அங்கே அந்த முரண்பட்ட புரிதலால் நகைச்சுவை மிளிர்கிறது.லிப்டில் இருக்கும்போது சான்ஸ் பயப்படுகிறார்.மணிக்கணக்கில் இப்படியே இருக்க வேண்டும்போல என்று மிரள்கிறார்.அவையும் நகைச்சுவையாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.
Lift scene
                   
             பென்னின் பங்களாவிற்கு வருகை தரும் அமெரிக்க சனாதிபதியிடம் பல்வேறு பருவ நிலைகள் பற்றி சான்ஸ் ஏதோ தோட்டக்கலை சார்ந்து சொல்ல அதையே வேதவாக்காக நினைத்து சனாதிபதி அதை டிவியிலும் குறிப்பிட யாரிந்த சான்ஸ்?எங்கிருந்து வந்தார்?என்று தேடல் படலம் துவங்குகிறது.பதினாறு நாடுகள் அவரின் பின்னணியை ஆராய்கிறது.டிவி சேனலுக்கு ஒரு பேட்டியும் அளிக்கிறார்.பத்திரிகைகள் அவரின் பின்னணியை அறிய படாத பாடுபடுகிறார்கள்.அமெரிக்க சனாதிபதியே தனது ரகசிய உளவாளிகள் மூலம் அவரைப்பற்றி அறிய முயல்கிறார்.
அமெரிக்க சனாதிபதி 

                 சான்ஸ் எந்த இனக்குழுவை  சார்ந்தவர் என்பதை அறிய  குரல்  பதிவுகள் கணினியில் ஆராயப்படுகின்றன.அவரின் கோட்டு சூட்டு அண்டர்வேர் வரை ஆராய்ந்து அமெரிக்க சனாதிபதிக்கு ரிப்போர்ட் அனுப்புகிறார்கள்.கோட்டு சூட்டு 1930 களில் தைக்கப்பட்டது.அண்டர்வேர்  1940 களில் செய்யப்பட்டது என்று அறிக்கை தருகிறார்கள் .முன்னாள் CIA agent  என்று FBI யும் முன்னாள் FBI agent என்று CIA வும் சொல்கிறது.CIA வுக்கும் FBI க்குமான ஏழாம் பொருத்தத்தை இக்காட்சி பகடி செய்கிறது!
         சான்ஸ் எப்போதுமே ரெண்டு இன்ச் மேக்கபுடனேயே வருகிறார்.பென்னின் பழைய கோட்டு சூட்டுக்களை அணிந்துகொள்கிறார்(கணுக்காலுக்கு மேல் பேண்ட்!).எப்போதுமே தனது இயல்பிலேயே இருக்கிறார்.சாமானிய மனிதர்கள் போல இருக்கும் சூழலுக்கு ஏற்பவோ சூழ்ந்திருக்கும் மனிதர்களுக்கு தக்கவாரோ துளியும் மாறாமல் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதையே பேசுகிறார்.அதனாலேயே அவர் அனைவராலும் விரும்பப்படுகிறார்.போலி பேச்சுக்கள் உணர்ச்சிகள் உடல்மொழிகள் இவைகளையே கண்டு சலித்த அந்த elite மனிதர்களுக்கு இவரின் சிக்கலற்ற எளிமை சொல்ல நினைத்ததை சொல்லும் துணிச்சல்(ஒரு பத்திரிக்கைகாரன் நீங்கள் உங்கள் வாழ்க்கை வரலாற்றை புத்தகமா எழுதாலமே?என்று கேட்க I cant read ...I cant write...I only watch TV என்று சொல்ல ஆமாம்  மிகப்பெரும் புள்ளிகள் யார்தான் பேப்பரோ புக்கையோ வாசிக்கிறார்கள்?என்று அவனாகவே ஒரு கற்பனை அர்த்தத்தை கொடுத்துக்கொள்கிறான்.) எல்லாம் பெரும் ஈர்ப்பையும் மரியாதையையும் பெற்று தருகிறது.
Eve

                பென்னின் மனைவி ஈவ் சான்சை விரும்புகிறார்.பென்னும் தன் மரணத்துக்கு பிறகு என் மனைவியை நீதான் கவனித்துக்கொள்ள வேண்டும் என்கிறார்.தொலைகாட்சியில் என்ன காட்சி வருகிறதோ அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்பவர் சான்ஸ்.யோகா பயிற்சி ஓடிக்கொண்டிருந்தால் எந்த இடம் என்றும் யோசிக்காமல் அவரும் யோகா செய்ய ஆரம்பித்துவிடுவார்!முத்தக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும்போது ஈவை அனைத்து முத்தம் கொடுக்க காட்சி முடிந்ததும் அவளை விட்டுவிட்டு அமைதியாக உட்கார்ந்து விடுகிறார்.அதற்குப்பின்னர் நடப்பவை அதகளம்! :D

            பென் இறந்துவிட அவரின் சவப்பெட்டியை அடக்கம் செய்ய எடுத்துசெல்லும் நபர்கள் இந்த அமெரிக்க சனாதிபதி அடுத்தமுறை வரக்கூடாது.வேறு நபரைத்தான் நாம் முன்னிருத்தணும்.பின்னணி எதுவுமே இல்லாத அல்லது மிக குறைவாக பின்னணியால் அறியப்படும் நபரே சிறந்த தேர்வு என்கிறார்கள்.அதுக்கு சான்ஸ்தான் சிறந்த நபர்.அவரின் பின்னணி என்னன்னு யாருக்குமே தெரியாது.எனவே எதிர்கட்சிகள் எதையும் கிண்டி கிளற வாய்ப்பே இல்லை என்று பேசிக்கொண்டிருக்க அந்த இறுதி சடங்கிலிருந்து விலகி சான்ஸ் ஆற்றங்கரையோரம் நடந்து செல்கிறார்...
       பிறகு ஆற்றின் குறுக்கே நடந்து பாதி ஆற்றுக்கு நடுவே நின்றபடி வியந்து தனது குடையை ஆற்றுக்குள் விட அது மிக ஆழமாக உள்ளே செல்வதாக படம் முடிகிறது.

          ஆற்றின் மேலேயே நடக்கிறார்!எனவே  இவர் அபூர்வ சக்தி கொண்டவர்!கடவுளின் தூதர் என்றெல்லாம் reading between the lines செய்ய  தேவையில்லை .அப்படி செய்வது இப்படத்திற்கும் சான்ஸ் கேரக்டருக்குமே இழுக்காக முடியும்(சில திரைப்பட ஆராய்ச்சி மாணவர்கள் அது மூழ்கியிருக்கும் pier அதன் மேல் இவர் நிற்கிறார் என்றெல்லாம் ஆராய்ந்திருக்கிறார்கள் என்று  படித்தேன்).அது அப்படிதான்!என்று எளிமையாக கடந்து செல்வதே சரியான புரிதலாக இருக்கும்!

            ஒரு சமூகம்-அதன் கலாச்சாரம்-தொலைக்காட்சியே பிரதானமாகிப்போன  அன்றாட வாழ்க்கை-ஓவர்நைட்டில் ஒரு சாமானிய நபரை டிவி மூலம் பிரபலமாக்குவது(நம்மூர்லையே அதான நடக்குது!-கும்மாங்கோ) என அனைத்தின் மீதான satire ஆக இப்படம் இருக்கு.


                  சான்ஸாக பீட்டர் செல்லர்ஸ். அவரின் தனித்தன்மை என்பது " இந்தக்காட்சியில் இப்படி நடித்து மக்களை சிரிக்க வச்சிடணும் என்றோ இப்ப நம்ம நடிப்ப பாத்து ஆடியன்ஸ் என்னமா சிரிச்சிட்டிருப்பான்" என்றோ பிரக்ஞை இல்லாது ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தீவிரத்தோடே நடிப்பவர்!அதுதான் இன்னும் கூடுதலாக  சிரிப்பை வரவைப்பது!இப்படத்தில் அனைவரும் அமெரிக்க ஆங்கிலம் பேசினாலும் இதை அமெரிக்க படமாக பார்க்க முடியாது.நகைச்சுவை பாணி என்பது ஐரோப்பிய குறிப்பாக பிரிட்டிஷ் படமாகவே இது தெரிந்தது!