Tuesday, 13 January 2015

கரைந்த நிழல்கள்



  நாட்டின் மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாட்டில் சினிமாவின் வீச்சு அதிகம்.கடந்த ஐம்பதாண்டு அரசியலை தீர்மானித்தது சினிமாத்துறையை சார்ந்தவர்கள்தான்.இதன் காரணமாகவே இன்று பிரபலமாக இருக்கும் நடிகர்களும் ஆட்சியை பிடிக்க முயலும் அவலங்கள் தெரிந்ததே.அதைப்பற்றி பேசினால் திசை திரும்பிவிடும்.
              இன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலானோருக்கு சினிமா மோகம் உண்டு.சினிமா பார்க்கும் மோகம் தெரிந்ததே.நான் சொல்வது சினிமாவில் சேர்ந்து சாதித்து பெரியாளாக புகழ் பெற வேண்டும் என்பதற்காகவே ஊரை விட்டு படிப்பை விட்டு குடும்பத்தை விட்டு கோடம்பாக்கத்தில் பத்துக்கு பத்து அறைகளில் இருபது பேர் போராடி கொண்டிருப்பதைத்தான்.இவை அனைத்தும் சினிமாவில் பேர் புகழ் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே.
             இந்த கரைந்த நிழல்கள் நாவல் சினிமா துறையை சர்க்கரை பூச்சு,பகட்டுகள் இல்லாமல் அப்பட்டமாக காட்டுகிறது.

             இந்த நாவலை பற்றிய பல விஷயங்களை சொல்ல வேண்டும் .
முதலில் இது வழக்கமான நாவல் இல்லை.அதாவது ஒரு துவக்கம் .அங்கே நாவலின் கதாபாத்திரங்கள் வாசகனுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே அறிமுகம் செய்யப்படும்.பிறகு ஒருவித linear வழியில் துவக்கம், இடையில் பல்வேறு திருப்பங்கள், முடிச்சுக்கள் பிறகு அவை தீர்ந்து ஒரு முடிவு.சில நாவல்கள் முடிவில்லாமல் தொக்கி நிற்கும்.
        ஆனால் இந்த நாவல் மேற்குறிப்பிட்ட அந்த டெம்ப்ளேட்டை உடைத்தெறிகிறது.முழு நாவலுமே எடிட் செய்யப்படாத ஒரு திரைப்படம் போல ஒருவித jumble போல கலைந்து கிடக்கிறது(முன்னுரையில் "நாவல் புரியவில்லை" என்று பலர் சொன்னதாக சொல்கிறார் அசோகமித்திரன்.காரணம் இதுவாக இருக்கலாம்).வாசித்து முடித்ததும் நாமாக அவைகளை ஆங்காங்கே பொருத்தி பார்த்துக்கொள்ள வேண்டும்.பொருத்தி பார்க்காவிட்டாலும் பிரச்சனை இல்லை.Raymond Chandler எழுத்து போல கதை முடிந்ததா?முடிச்சுகள் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைவிட கதாபாத்திரங்கள் தங்களுக்குள் interact செய்துகொள்ளும் விதம் ,கதாபாத்திரங்களின் மன ஓட்டங்கள்,அவர்களின் பிரச்சனைகள், அதை தீர்க்க முடியாமல் அவர்கள் மனதில் எழும் ஆற்றாமை அனைத்துமே வாசகனை உச்சு கொட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அல்லாமல்  ஒருவித சமநிலையில் ஆசிரியர் இதை நம் முன் வைத்துள்ளார்.அதை எப்படி எடுத்துக்கொள்வது என்பது அவரவர் அனுபவங்களைப்பொறுத்த்து!
         உதாரணமாக பட தயாரிப்பாளர் ரெட்டியார் படத்தை கிட்டத்தட்ட முடித்து விட்டார்.கொஞ்சமே பாக்கி.நடிகை ஷூட்டிங் வர மறுக்க அங்கே சென்று இவர் சத்தம் போடுகிறார்.நடிகை மயக்கம் போட்டு விழுகிறாள்.அத்தோடு ரெட்டியார் segment முடிந்தது.ரெட்டியாருக்கு என்னானது என்பதை 2 வருடம் கழித்து வேறொரு தயாரிப்பாளர் அந்த முடிக்காத படத்தை தூசு தட்டி பார்க்கும் போது ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது.கடன் நெருக்கி மூழ்கிப்போனார்
         ஒரு  நாவலின் எழுத்துநடை என்பது அந்த எழுத்தாளரை காட்டிகொடுத்து விடும்.இந்த எழுத்தாளர் இப்படித்தான் எழுதுவார்.வார்த்தை பிரயோகம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கலாம்.இந்த நாவல் அதையும் நொறுக்கி விட்டது.அசோகமித்திரன் அவர்களின் எழுத்து நடை என்பது மென்மையானது என்றுதான் பலர் நினைக்கிறார்கள் . உதாரணமாக ஒற்றைவிரல் டைப் ரைட்டர் கதையை படித்தால் தெரியும்.இந்த நாவல் அத்தகைய மென்மையான மொழிநடையின் சாயல் துளியும் தெரியாமல் எழுதப்பட்டுள்ளது.

          இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டுமானால் நாவலில் ஆசிரியர் கதை சொல்லவில்லை.அவர் வசனங்களை எழுதவில்லை.அந்தந்த கதாபாத்திரங்களை  தங்களுக்குள் interact செய்ய வைத்துவிட்டார். குவென்டின் டரண்டினோ ஒரு பேட்டியில்எனது படத்திற்கு நான் வசனங்கள் எழுதுவதில்லை.படத்தில் வரும் கதாபாத்திரங்களே அதை எழுதுகிறார்கள்” என்று சொன்னது நினைவுக்கு வருகிறது.இதைத்தான் அசோகமித்திரன் செய்துள்ளார்.தவறாமல் வாசிக்கவேண்டிய ஒரு அற்புத படைப்பு.

Monday, 6 October 2014

ஜீன்சும் பாலியல் குற்றங்களும்....

                              பழைய எம்.ஜி.ஆர் படங்களில் தொடங்கி டாக்குடர் படங்கள் வரை இந்த காட்சி கண்டிப்பாக இருந்தே தீரும்.நாயகி மாடர்ன் டிரெஸ் போட்டுக்கொண்டு வரும்போது சிலர் அவரை கலாட்டா செய்துகொண்டே அவரை நெருங்க   முயல நாயகன் ஏர்ல டைவ் அடிச்சி நாயகியை காப்பாத்திட்டு "பொம்பளன்னா இப்படி டிரெஸ் பண்ண கூடாது..நம்ம கலாச்சாரப்படி டிரெஸ் போட்டிருந்தா இது நடந்திருக்குமா?" என்று முழநீள அட்வைஸ் கொடுப்பார்கள்.நாயகிக்கு நாயகன் மீது காதல் வரும்.அடுத்த சீனில அவர் "கலாச்சாரப்படி" புடவை கட்டிக்கொண்டு வர, அதை பார்க்கும் நாயகன்.கட் பண்ணா டூயட்.அதுல "கலாச்சாரமில்லாத"(நாயகனின் சொல்படி) உடையணிந்து நாயகி ஆட அவர் அங்கங்ககளை நம்ம கலாச்சார காவலர் வரிக்கு வரி வர்ணிப்பார்.
                              சரி கலாச்சார உடை என்றால் என்ன?பெண்களை கலாச்சாரப்படி உடை அணியச்சொல்லும் ஆண்கள் கலாச்சாரப்படி உடை அணிகிறார்களா?உண்மையில் நம் நாட்டு கலாச்சாரப்படி உடையணிய வேண்டுமென்றால் ஆண்கள் இடுப்புல ஒரு லங்கோடு+ஒரு வேட்டி.அம்புட்டுதான் அணிய முடியும்.இந்த சட்டை, டி ஷர்ட், உள்பனியன், ஜட்டி எல்லாம் மேற்கத்திய கலாச்சாரம்தான்.ஷூ, சாக்ஸ், கூலிங்க்ளாஸ் இதைப்பத்தி எல்லாம் சொல்லத்தேவையில்லை.
                            சரி பாலியல் குற்றங்களுக்கு பெண்கள் அணியும் உடைதான் காரணமா?நேற்றுவரை நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவங்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் சொல்படி "கலாச்சார" உடையணிந்த பெண்கள்தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதை காண முடியும்.(அதற்காக மாடர்ன் டிரெஸ் அணிந்தால் தப்பிக்கலாம் என்று சொல்லவில்லை.இவர்களின் கூற்றில் உள்ள பொய்யை நிரூபிப்பதற்கே இந்த வாதம்).

                         நேற்று பிறந்த குழந்தையையும் ரேப் செய்கிறார்கள்.எண்பது வயது மூதாட்டியையும் ரேப் செய்கிறார்கள்.பக்கத்து நாட்டில் இறந்த பெண்களை கூட புணர்ந்த இனவெறி ராணுவம்பற்றி உலகறிந்தும் கள்ள மௌனம் சாதிக்கிறது.அதற்கெல்லாம் இந்த கலாச்சார காவலர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்?
    -"இரண்டு வயது குழந்தை அம்மணமாக இருந்ததாலேயே ரேப் செய்யப்பட்டது" என்று சொன்னாலும் சொல்வார்கள்.
-எண்பது வயது மூதாட்டி "கலாச்சரப்படிதானே உடையணிந்திருப்பார்?அவர் ஏன் ரேப் செய்யப்பட்டார்?
-"இறந்து போன பெண்கள் கண்ணியமாக நடந்துகொள்ளவில்லை.அதனால் அவர்கள் புணரப்பட்டனர்" என்றும் இந்த காவலர்கள் சொல்வார்கள்.
                              மற்றொரு வாதம் "ஐம்பது வருசத்துக்கு முன்னாடி இவ்வளவு பாலியல் குற்றங்கள் இருந்ததா?இல்லை.ஏன்?பெண்கள் கலாச்சாரப்படி உடையணிந்தார்கள்" என்பதும் இவர்கள் வாதம்.இது உண்மையா?
                           பாலியல் குற்றங்கள் மட்டுமா ஐம்பது வருஷத்தில் பெருகி இருக்கு?ஊழல்,திருட்டு,கொலை,லஞ்சம் இவைகூடத்தான் பெருகியிருக்கு.அதுக்கு என்னப்பா பின்னணி காரணம் வைத்திருக்கிறீர்கள் காவலர்ஸ்?...
                   குற்றங்கள்,அது எந்த குற்றமாக இருப்பினும் அதிகரித்துள்ளதற்கு காரணம் குப்பையான கல்விமுறை,பிள்ளைகளை வளர்க்கும் விதம்,சமூக சீரழிவு,குப்பையான சினிமா, நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கமே ஒழிந்து போனது,குடும்ப வாழ்க்கை சிதைவு  போன்று பல்வேறு காரணங்கள்.ஆனால் இவர்கள் ஏதோ இல்லாத காரணத்தை பிடித்து தொங்கி கொண்டிருப்பதில் பேரானந்தம் காண்கிறார்கள்..
            காலம் காலமாக மதம் இனம் சாதி மற்றும் இன்னபிற அம்சங்களை கொண்டு அதிகமாக ஒடுக்கப்பட்டது பெண்கள்தான்.தாழ்த்தப்பட்டவர்களைவிடவும் கீழான நிலையில் பெண்கள் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.

           "கலாச்சாரப்படி" உடையணியும் பல்வேறு கடுமையான சட்டங்கள் இருக்கும் அரபு நாடுகளும் இதற்கு விதிவிலக்கில்லை எனும்போது பிரச்சனை பெண்களிடம் இல்லை என்பதை இன்னும் உணர மறுப்பதேன்?சமீபத்தில் இரானில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான கர்ப்பிணி பெண்ணை தூக்கில்   போட்டு(தான் ரேப் செய்யப்பட்டோம் என்பதற்கான நான்கு சாட்சிகளை அவர் காண்பிக்க முடியாததால்)  "நியாயத்தை" நிலைநாட்டினர்.இதை எந்த காவலர்ஸ் விமர்சித்தார் என்று தெரியவில்லை.எந்நேரமும் புரட்சி நரம்பை சொறிந்துகொண்டிருக்கும் வினவு உட்பட.கடும் சட்டங்கள் கொண்ட சவுதியில் 23% குழந்தைகள் ரேப் செய்யப்பட்டிருப்பதாக ஆய்வு சொல்கிறது.
                  2020 ல் "வல்லரசாகப்போகும்" இந்தியாவில் பாதி சனத்தொகைக்கு சரியான கழிப்பறை வசதியே இல்லை.பெண்கள் வயல்வெளிகள் அல்லது வேறு மறைவிடங்களில் ஒதுங்கும்போது பாலியல் வண்புணர்வுக்கு ஆளாகிறார்கள்.சமீபத்தில் உ.பியின் படுவான் என்ற இடத்தில் இயற்கை உபாதை கழிப்பதற்கு சென்ற அக்காள் தங்கை இருவரும் காணாமல் போக பிறகு விசாரணைக்கு பிறகு அவர்கள் ரேப் செய்யப்பட்டு மரத்தில் தொங்க விடப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதில் கொடுமை என்னவெனில் அந்த இரண்டு உடல்களும் முறையான பிரேத பரிசோதனை செய்யப்படாமலேயே கங்கை நதிக்கரையில் புதைத்து "அடையாளத்துக்கு" ரெண்டு முள்ளு செடியைநட்டு வைத்திருந்தார்கள்.பிறகு அங்கே வெள்ளம் வந்து அனைத்தும் அடித்து செல்லப்பட்டுவிட்டது.பிரேத பரிசோதனை முறையாக செய்யப்படவுமில்லை.அந்த உடல்களும் வெள்ளத்தில் சென்றுவிட்டதால் எந்த மைனர் குஞ்சு(கள்)இதை செய்தனவோ அவை அடுத்த ரேப்பை அட்வான்ஸ் புக்கிங்கில் செய்ய தயங்காது என்பதை சொல்லத்தேவையில்லை.இதைப்பற்றி காவலர்ஸ் என்ன சொல்ல போறேள்?கழிப்பறை இல்லாதது அந்த பெண்களின் குற்றமா?இல்லை பெண்கள் இயற்கை உபாதைகளை கழிப்பது குற்றமா?
                  மேலும் இந்த பேருந்துகளின் "இடி" மன்னர்களுக்கு எந்த உடையும் ஒன்றுதான்.
              அப்போ உடையும் காரணமில்லை.இளம்பெண் என்பதும் காரணம் இல்லை.பிறகு என்னதான் காரணம்?ஆண்களின் மனோபாவம்.அவர்கள் வளர்க்கப்படும் விதம்.
           சிறு வயதில் இருந்தே பெண்கள் என்றாலே அவள் கண்டிப்பாக ஏதோ ஒரு ஆணுக்கு சொந்தமாகப்போகும் பண்டம் என்றே ஆண் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கபபடுகிறது.இந்த ஆண் குழந்தை, இளைஞன் ஆனதும் ஒரு பெண்ணை பார்க்கிறான்.இவனுக்கு பிடித்திருக்கிறது.உடனே அவள் தனக்கு மட்டுமே சொந்தமான பண்டம் என்ற எண்ணம் ஆழமாக மனதில் பதிந்துவிடுகிறது.இவன் அவளிடம் போய் இதை சொல்கிறான்.அவள் மறுக்கிறாள்..உடனே "எனக்கு கிடைக்காத இந்த பண்டம் யாருக்கும் கிடைக்கூடாது" என்று அமிலத்தை வீசுகிறான்.
                    இந்த காவலர்ஸ் அமில வீச்சுக்களை தடுக்க என்ன வழி சொல்ல போறேள்?பெண்கள் இரும்பு கவச உடையணிந்து சென்றால் அமில வீச்சில் இருந்து தப்பிக்கலாம் என்று ஐடியா வந்தாலும் வரும்.
                         சினிமாவும் இதே எண்ணத்தைதான் ஆண்களின்(குறிப்பாக இளைஞர்கள்) மனதில் பதிய வைக்கிறது.சில உதாரணங்கள்:
 -யூத் படத்தில் டாக்குடர் நாயகியிடம் லவ்வை சொல்ல அவள் ஐ டோன்ட் லவ் யூ என்பார்.."எனக்கு அதபத்தி கவலை இல்ல" என்று மகா புத்திசாலித்தனமாக பதில் அளிப்பார் டாக்குடர்.
-எட்டு  வயது சிறுவன்  மனதளவில்   28 வயது இளைஞன் ஆகிவிட (மனதளவில் எட்டு வயதுதான்)அவனுக்கு நாயகி சக்கர இனிக்கிற சக்கர என்று "வகுப்பெடுக்கும்" மகோன்னத காட்சி ந்யூவில்.
- காயம்பட்ட சிம்புவுக்கு ரத்தம் கொடுத்த நாயகியை பார்த்த உடனேயே லவ்வை சொல்லி அவள் மறுத்தாலும் தொடர்ந்து அவளை மிரட்டி பணிய வைத்து திருமணம் செய்யும் காவிய காட்சி தம் படத்தில்.
-எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்ற தத்துவத்தை பதிய வைத்தது பிரியமுடன்.
-தம்பி பொண்டாட்டியை அடைய அண்ணன் செய்யும் சேட்டைகள் வாலி.

              இதை தவிர்த்து  இசையுலகில் இருந்து எவ்வளவு மகத்தான பாடல்கள் வந்துள்ளன?
-வேணாம் மச்சா வேணாம் இந்த பொண்ணுங்க காதலு
-ஆணோட காதல் கைரேக போல பெண்ணோட காதல் கைக்குட்ட போல
-இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சிபோச்சுடா
-அடிடா அவள ஒதடா அவள வெட்றா அவள...
         இந்த கருமாந்திர லிஸ்டை இனியும் தொடர விருப்பமில்லை.இப்படியாகத்தான் இருக்குது சமூக நிலைமை.ஆனால் மேற்குறிப்பிட்ட எந்த விஷயத்தையும் விமர்சிக்காத காவலர்ஸ் பெண்கள் உடை மட்டும் கண்ணை உறுத்துது என்றால் நல்ல கண் டாக்டரை அணுகவும்.
         
                               

Saturday, 9 August 2014

Safety Last(1923)- மரண சாகசம்

                                          படத்தை பற்றி சொல்வதற்கு முன் ஒருவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.அவர்தான் பிரபல திரைப்பட விமர்சகர் மறைந்த Roger Ebert.இவரின் ஒரு விமர்சனத்தை வாசித்துகொண்டிருந்த போது அதில் silent film trio என்று மூவர் பெயரை குறிப்பிட்டிருந்தார்.
ரோஜர் எபர்ட்

                  அதுவரை எனக்கு மவுனப்படம் என்றாலே சாப்ளின்(ஆங்கில படங்களை பொறுத்தளவில்) மட்டும்தான் தெரியும்.மேற்சொன்ன trio வாக அவர் குறிப்பிட்டிருந்த மூன்று பெயர்கள் சாப்ளின்,Buster Keaton மற்றும்  Harold Lloyd. கீட்டோனின் The General படம் பற்றி ஐந்து வருடங்கள் முன்பு கேள்விபட்டிருந்தாலும் படத்தை பார்க்கவில்லை.சமீப காலத்தில் மீண்டும் கீட்டோன் பெயரை கேட்க நேர்ந்தது.காரணம் சந்தானம் நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படம் கீட்டோனின் Our Hospitality படத்தின் உல்டா என்பதாலேயே.சரி உல்டாவை பார்ப்பதை விட ஒரிஜினலை பார்ப்பதே மேல் என்று பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் அதை மனக்குறிப்பாக குறித்துக்கொண்டேன்.
                   மூன்றாவது பெயரான ஹரோல்ட் லாய்ட் பற்றி தேடி கொண்டிருந்த போது Safety Last படத்தின் போஸ்டரை இணையத்தால் கண்டபோது ஒரு சுவாரஸ்ய காட்சி நினைவுக்கு வந்தது.
அது விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐ.பி.எஸ் படத்தின் காட்சிதான். பெரிய கடிகாரம் ஒன்று பன்னிரண்டு மணி அடித்தால் குண்டு வெடிப்பது போல செட் செய்யப்பட்டிருக்கும்.இவர் அதில் ஏறி அந்த நிமிட முள்ளில் தொங்குவார்.அது பதினொன்று ஐம்பத்தைந்தில் இருந்து பதினொன்றரைக்கு சரியும்.அந்த காட்சியின் ஷூட்டிங்கை அப்போது தூர்தர்ஷனில் காட்டினார்கள்.டூப் போடாமல் நிஜமாகவே ஏறியதை கண்ட அந்த காட்சி Safety Last பட போஸ்டரால் மீண்டும் நினைவுக்கு வந்தது.ஆனால் S.L படத்தை பார்த்து வாசு இந்த காட்சியை சேதுபதி படத்தில் வைத்திருக்க மாட்டார்.S.L பட பாதிப்பில் பல்வேறு படங்களில் அதே போன்று நாயகன் கடிகார முள்ளில் தொங்கும் காட்சிகள் வந்துள்ளன.ஜாக்கி சானின் ப்ரோஜக்ட் ஏ படத்திலும் பிறகு 1991 ல் சில்வஸ்டர் ஸ்டால்லோன் நடித்த Oscar படத்திலும் வந்தது.அதை பார்த்து இயக்குனர் அதே போன்றதொரு காட்சியை வைத்துள்ளார்.பிறகு ஸ்கார்ஸீஸ் இயக்கிய மௌனப்படங்களுக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் எடுத்த  Hugo படத்திலும் அப்படி ஒரு காட்சி உள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும்.


                        இப்போது படத்தைப்பற்றி பார்ப்போம்.தான் வேலை செய்யும் துணிக்கடையின் விற்பனையை பெருக்க ஐடியா சொன்னால் ஆயிரம் டாலர்(1923 ல் அது எவ்வளவு மதிப்பு என்பதை நீங்களே கணக்கு போட்டுக்கொள்ளுங்கள்) என்கிறார் முதலாளி.நான் அதை செய்து காட்டுகிறேன் என்று தனது நண்பனை மனதில் வைத்து சொல்கிறார் ஹரோல்ட் .ஆனால் அந்த நண்பனை போலீஸ் தேடுகிறது(ஹரோல்ட் தனது போலீஸ் நண்பன் ஒருவனிடம் விளையாடுவதாக நினைத்துக்கொண்டு வேறொரு போலீஸ் அதிகாரியிடம் சேட்டை செய்ததன் விளைவு.நண்பனை அந்த அதிகாரி துரத்துகிறார்).அதனால் ஹரோல்டே பன்னிரண்டு மாடி கட்டிடத்தில் ஏறுவதாக படம்.

                      படத்தில் வரும் பல்வேறு நகைச்சுவை காட்சிகள் இன்றுவரை தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கிறது.உதாரணமாக வழுக்கை தலையை பார்த்து நாயகன் தலை சீவுவது பிற்காலத்தில் தலைவர் கவுண்டர் வகையறா காமெடியானது தெரிந்திருக்கும்.அவர் மட்டுமல்லாது பல்வேறு நபர்கள் இந்த மாதிரி காட்சியை பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.
                       மற்றொரு காட்சி துணிக்கடையில் துணி எடுத்துப்போடும் வேலை செய்யும் ஹரோல்ட் தனது காதலியிடம் தான்தான் முதலாளி என்று ஏமாற்றுவது கல்யாண பரிசு வகையறா.இப்படி பல்வேறு காட்சிகள் இன்றுவரை அதன் மூல காட்சியை எடுத்தவர் பெயர் தெரியாமல் பயன்படுத்திகொண்டிருக்கிறார்கள்.

              அந்த கட்டிடம் ஏறும் காட்சி படமாக்கப்பட்ட விதம் பற்றி பல்வேறு கருத்துக்கள் உலாவுவதை கண்டேன்.உதாரணமாக மலை உச்சியில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் ஹரோல்ட் ஏறுவது போல காட்டியதால் தரைமட்டத்தில் இருந்தாலும் உயரமானது போல தோன்றியது என்கிறார்கள்.இது அபத்தம்!தொலைவில் கீஈஈஈழே சாலை தெரிகிறது(ப்ளூ ரே பிரிண்டில் பார்த்ததால் இவைகளை தெளிவாக காண முடிகிறது).தவிர body double எனப்படும் டூப் போட்டதாக சொல்லப்படுவதும் அபத்தம்.கட்டிடம் ஏறும் காட்சியில் தெளிவாக அவர் முகத்தை  காண முடிகிறது.முகத்தில் க்ரீன் மேட் துணி போட்டு மூடி பிறகு கிராபிக்ஸில் இவர் முகத்தை பொருத்தும் தொழில்நுட்பம் எல்லாம் அப்போது வரல.அதனால் அவரேதான் அதில் நடித்துள்ளார்.        
                            பொதுவாகவே சாப்ளின் கீட்டோன் அல்லது பொதுவாக (நகைச்சுவை) மௌனப்படங்களில் நடிப்போர் டூப் போடாமலேயே கீழே விழவேண்டும்.விழுந்த வேகத்தில் எழுந்திருப்பது, ஓடும் ரயில்/பேருந்தில்ஏறுதல் போன்றவைகளை செய்திருப்பதை கண்கூடாக நாம் காணலாம்.

                          சாப்ளின் படங்களை விட அதிக வசூல் செய்தது ஹரோல்ட் லாய்ட் படங்களே.ஆனால் அவர், தான் எடுத்த பல படங்களை ரிலீஸ் செய்யாமலேயே புதுக்கரு கழியாமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த பிரிண்டுகள் ஒவ்வொன்றாக இப்போது வெளிவர தொடங்கியுள்ளன.சாப்ளின் கீட்டோன் அளவுக்கு ஹரோல்ட் லாய்ட் பிரபலமாகவில்லை என்பது சோகம்!