Tuesday, 5 August 2025

Alappuzha Gymkhana

 வழக்கமான விளையாட்டு சார்ந்த படங்கள் என்றாலே ஒரு ஊசிப்போன டெம்ப்ளேட் இருக்கும்.ஒரு கோச்.எப்போதும் தண்ணியில் அல்லது விரக்தியில் பார்ப்பவர்கள் எல்லாரிடமும் சிடுசிடுத்தபடி(அல்லது இரண்டுமாக) இருப்பார்.அப்புறம் அவர் தலையில் தண்ணி கொட்டி அல்லது வேறு எப்படியோ உசுப்பிவிட்டு பழையபடி கோச் வேலையை பார்க்க வைப்பார்கள்
  அவருக்கொரு பின்னணி!இளம்வயதில் ஆகச்சிறந்த விளையாட்டுத்திறன் கொண்டவராக இருந்தும் ஏதோ  சதி வேலையால் அவர் ஒரு சாம்பியன் ஆவது தடைபட்டிருக்கும். விரக்தியில் குடி குடி குடி என்று இருப்பார்.
    அப்புறம் இவரிடம் பயிற்சி பெற வருபவர்களிடம் எறிந்து விழுதல் அப்புறம் அவர்கள் இவரின் பரிதாப பின்னணி தெரிஞ்சு அனுதாபப்படுதல் என்று செல்லும்.இறுதியில் கோப்பையை வாங்க வைத்துவிடுவார்!
   ஆலப்புழா ஜிம்கானா படத்தில் அதெல்லாம் இல்லை என்பதே பெரும் ஆறுதல்! அந்த இளைஞர்கள் அவர்களாகவே விருப்பப்பட்டு குத்துச்சண்டை பயிற்சியில் சேர்கிறார்கள். அந்த கோச் நிகழ்கால சாம்பியனாக உள்ளார்!



     இது தவிர மேற்கூறிய டெம்ப்ளேட்படி பயிற்சி பெறவரும் ஒவ்வொருவரின் பின்னணியும் "ஏ .... ஆயி" என்ற ஒப்பாரியின் பின்னணியில் காட்டப்படும்! அதெல்லாம் இப்படத்தில் இல்லை.
   தள்ளுமாலா படத்தில் இருந்த அதே எனர்ஜி லெவல் இதிலும் படம் முழுக்க விரவிக்கிடக்கிறது! மூக்கு சிந்துதல் சுய பச்சாதாபம் அனுதாப அலை என்று எந்த சீரியல் ஐட்டமும் இதில் கிடையாது!
   ஒவ்வொரு குத்துச்சண்டை போட்டியும் படமாக்கப்பட்ட விதம் அருமை! ஜோபில் லால் மற்றும் கலை கிங்ஸன் ஆகியோர் சண்டைப்பயிற்சியாளர்களாக இருந்துள்ளனர்.அவர்கள் பணி மகத்தானது!உண்மையில் குத்துச்சண்டை பயிற்சி பெற்றவர்களாக இருக்கக்கூடும் என்று தோன்றியது!அவ்வளவு இயல்பான சண்டைக்காட்சி அமைப்பு!
    Good Bad Ugly படத்தில் இளமை இதோ இதோ பாடலின் தாள லயத்தோடு ஒன்றியதாக சண்டைக்காட்சி ஒன்று வரும்.பாடலின் ஒவ்வொரு டிரம் பீட்ஸ்க்கும்  ஒத்திசைந்து அஜீத் எதிரிகளை அடிப்பதாக இருக்கும்(Stunts: Kaladian Vodenchardy & Supreme Sundar).
  அதைவிடவும் இன்னமும் நளினமாக இன்னும் லயத்தோடு இன்னும் ஒத்திசைவோடு பின்னணியில் ஓடும் ஒரு பாடலுக்கு கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் அனகா ரவி சிரித்தபடி குத்துச்சண்டை போடுவதாக  வந்த காட்சி அட்டகாசம்!

   

     நஸ்லென் இப்படத்திற்காக கடும்பயிற்சி எடுத்திருப்பது தெரிகிறது. ஆனால் அவரைத்தவிர மற்ற எல்லாரும் அவ்வளவு மெனக்கெடவில்லை.அது இயல்பானதே.காரணம் ஹீரோவாக நடிப்பவருக்கு அந்தப்படம் மட்டும்தான்.ஆனால் துணை நடிகர்களுக்கு பல படங்களுள் இது ஒன்று என்பதால் உடல் ரீதியாக பெரிய மாற்றங்களை செய்துவிட்டு ஷூட்டிங் வருவது சாத்தியமில்லை.தமிழில் என்றால் இதையெல்லாம் பட ரிலீசுக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடியே BTS workout videos என்ற பேரில் ஓவர் பில்டப் கொடுத்திருப்பார்கள்!ஆனால் இவர்கள் அதை எதையும் செய்யவில்லை. படம் நடக்கும் அந்தந்த இடங்களிலேயே படமாக்கியுள்ளனர்.இதுவே மணிரத்னமாக இருந்தால் ஆலப்புழாவில் படமாக்கினால் செலவு!( MBA! MBA!! என்று மனோபாலா ஸ்டைலில் படிக்கவும்) என்று ஆழ்வார்பேட்டையில் படமாக்கியிருப்பார்!

 

   தமிழ் சினிமா கடந்த பதிமூன்று ஆண்டுகளாக வடசென்னையை தாண்டிப்போகாமல் குண்டுசட்டியில் குதிரை ஓட்ட மலையாளத்தில் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஊர் சார்ந்து எடுக்கிறார்கள்!இதில் ஆலப்புழா!

    இதில் மற்றுமொரு விந்தை ஹீரோ உட்பட செல்லும் குழுவில் உண்மையில் ஜெயிப்பது ஹீரோ அல்ல!அவனது சோகை  நண்பன் (Franco Francis)! கில்லி படத்தில் தேசிய அளவில் தமிழ்நாட்டுக்காக கபடி விளையாடும் அணியில் அண்ணாவை தவிர மற்ற எல்லாரும் டம்மி என்று காட்டிய அவலம் இதில் இல்லை! 

 

        தமிழ் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் சிலாகிக்கப்பட்ட படங்கள் எல்லாமே  மிதமிஞ்சிய சென்டிமென்ட் தளும்பும் படங்களே! பார்க்கின்ற பார்வையாளனின் மூக்கை திரையில் இருந்து கையை நீட்டி  சிந்திவிடும்படியான தருணங்கள் இடம்பெறக்கூடிய இடங்கள் பல சாத்திக்கூறுகள் இருந்தாலும் அதை எதுவுமே செய்யாத இயக்குனருக்கு பாராட்டுகள்!