இப்படத்தை பார்க்க காரணமே இது விளம்பரம் செய்யப்பட்ட விதத்தினால் தான்! ரத்தம் தெறிக்கும் வன்முறைக்காட்சிகளை பார்த்தபோது "ஆகா!நமக்கு விருந்துதான்!" என்று தோன்றியது.
ஆனால் படம் வன்முறையை மையமாக கொண்டு நகர்வதில்லை.வன்முறை கதையின் ஒரு (அத்தியாவசிய?) பகுதி என்று சொல்லலாம்.
இப்படி படத்தை விளம்பரம் செய்ததால் சில இழப்புகளும் உண்டு.இந்த "குடும்பத்தோடு படம் பார்ப்போர் சங்கம்/இனிமையாக மென்மையாக மலரும் காட்சிகளை ரசிப்போர் சங்கங்கள்" இப்படத்தை வெறும் ரத்தக்களரி மட்டுமே நிறைந்த படமென்று ஒதுக்கிவிட்டது. படத்தின் மையக்கருத்தை விளம்பரப்படுத்தி இந்த பக்ராக்கள் அப்படத்தை பார்த்திருந்தாலும் இதையெல்லாம் அவர்கள் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று நாம் நம்பவில்லை!
தேவதாஸ் பார்வதி சந்திரா என்ற அந்த நூறாண்டு பிரசித்தி பெற்ற அந்த மையக்கருவை நிகழ்கால அவலங்கள் குரூரங்கள் பாலியல் அத்துமீறல்கள் அதிகார வர்க்கத்தில் இருப்போர் போடும் சாமர்த்தியமான இரட்டை வேடங்கள் ஆதரவற்ற பெண்கள் நடத்தப்படும் விதம் என்று பல்வேறு விஷயங்களை தொட்டு செல்கிறார்.
படத்தை பார்க்கும்போது ஏனோ அனுராக் காஷ்யப் இயக்கிய Dev D மற்றும் முனியாண்டி எழுதிய பிணவறை காப்பாளன் ( இந்த சிறுகதையிலும் சமூகத்தின் மிக உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் ஒரு பிணவறை காப்பாளன் உதவியுடன்....இதற்கு மேல் இதைப்பற்றி இங்கே எழுத முடியாது!ஆனால் அது உண்மை சம்பத்தின் அடிப்படையில் அமைந்த கதை)& தேகம் நினைவுக்கு வந்தது.Dev D படமும் தேவதாஸ் கதைதான்.அதில் வன்முறை குறைச்சல் ஆனால் போதை தூக்கல் என்பதாக ஒருவித psychedelic அனுபவத்தை கொடுத்தது.அமித் திரிவேதியின் அற்புத இசையை மறக்க முடியுமா?
இப்படத்தின் மையக்கருத்தாக நாம் கண்டது பெண்களை சமூகம் பார்க்கும் விதம்! படத்தின் ஆரம்பத்தில் பணத்துக்காக அநியாயமாக அடித்து கொல்லப்பட்ட தனது கணவனுக்கு நீதி கேட்டு செல்லும் அந்த பெண்ணை "பிராத்.தல் வழக்கில் உள்ளே தள்ளிவிடுவேன்" என்று ஒரு காவல் அதிகாரி மிரட்டுகிறார்.பிற்பகுதியில் சந்திரா பற்றி மற்றொரு காவல் அதிகாரி தாசிடம் அதே பொருள்படும் விதத்திலான அந்த வார்த்தையை சொல்கிறார்.அந்த வார்த்தையை படம் நெடுக பலர் சொல்கிறார்கள். தாஸ் அவர்கள் அத்தனை பேரையும் கடுமையாக தண்டிக்கிறான்.
ஒருகாலத்தில் படிப்பறிவற்ற மக்கள் தெருவில் சண்டை போடும்போது சரளமாக(பெண்களுமே சக பெண்கள் மீது)பயன்படுத்தும் அந்த வார்த்தை இப்போது பரிணாம வளர்ச்சி(!) பெற்று பட்டதாரிகளும் சரளமாக அவ்வார்த்தையை நிஜ உரையாடல்களிலும் இணையத்தில் அதைவிட பலமடங்கு அதிகமாகவும் பயன்படுத்தி வருகிறார்கள்!
மாற்றுக்கருத்து சொல்லும் ஆண்களை இழிவுபடுத்தவேண்டும் என்றாலும் இந்த வார்த்தையை அந்த ஆணின் வீட்டிலிருக்கும் பெண்களை குறிப்பிட்டு வசைபாடப்படும்! மாற்றுக்கருத்து சொல்லும் பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம்!இந்தியாவிலேயே அதிக படிப்பறிவு கொண்ட மாநிலம் அடைந்த "மகத்தான" வளர்ச்சி இது!(?).இதையெல்லாம் தம் கட்டி சொல்வதற்கு காரணம் பதிவின் இறுதியில்...
மிக சமீபத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுமே (ஒரு மணி நேரத்தில் இத்தனை லட்சம் பேர் இணைந்ததாக செய்தி வந்தது) இப்படித்தான் இணையத்தில் "கண்ணியமாக" உரையாடுகிறார்கள்! இந்த விஷயத்தில் யாரும் எந்தவித மாற்றத்தையும் உண்டுபண்ணிவிட முடியும் என்று நாம் நம்பவில்லை. ஞாநி சங்கரன் சொன்ன " பள்ளியிலேயே சமூக வலைதளங்களை கண்ணியமான முறையில் பயன்படுத்துதல் பற்றிய பாடத்தை கொண்டுவர வேண்டும்" என்ற யோசனையெல்லாம் எடுபடும் என்று நாம் நம்பவில்லை!
ஆனால் இந்த விஷயத்தை படத்தில் அழுத்தமாக பதிவுசெய்த அருண் மாதேஸ்வரனை பாராட்டலாம்.இவர் இதற்கு முன் எடுத்த படங்கள் என்ன என்று நாம் தேடித்தான் தெரிந்து கொண்டோம்.அவைகளையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை இப்படம் உண்டாக்கியுள்ளது.
படத்தில் சின்னசின்ன அற்புத தருணங்கள் உண்டு.சமூகத்தில் பெரிய பெரிய பதவிகளில் இருப்போர் பாலியல் தொழிலாளர்களிடம் நடந்துகொள்ளும் விதம் ஒருவிதமாகவும் வெளியே அவர்கள் போடும் வேடம் வேறொரு விதமாகவும் இருப்பதை அற்புதமாக படம் சொல்கிறது.தங்களது "பெரிய மனுஷன்" இமேஜ் போய்விட கூடாது என்பதற்காக சந்திராவிடம் காவல் அதிகாரி மருத்துவர் தொழில் அதிபர் என்றெல்லாம் பலதரப்பட்ட "பெரிய மனுஷன்கள்" பணத்தை அள்ளிக்கொடுக்கும் காட்சி சிரிப்பதா வருந்துவதா என்று தெரியாத ஒரு மனநிலையை உண்டாக்கியது!அந்த மருத்துவரை சந்திரா கொல்லும் காட்சி உண்மையிலேயே அற்புதம்!குறிப்பாக தனக்கு சிறுவயதில் இழைக்கப்பட்ட அந்த ஈடுசெய்ய முடியாத இழப்பிற்கு காரணமான அந்த டாக்டரை கோபத்தின் வெறியின் உச்சத்தில் வார்த்தைகளே வராமல் போக உறுமியபடியே சுட்டு தள்ளும் காட்சி காலத்திற்கும் பேசப்படும்! இது வாமிகாவிற்கு வாழ்நாள் வேடம். வித்தியாசமான தமிழ் உச்சரிப்பில்(கதைப்படி அவர் பெங்காலி என்று சொல்லி தேவதாஸ் கதைக்கு வலு சேர்த்துள்ளார்கள்!) புதுமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்!
இதில் பெரிதும் பாராட்டப்படவேண்டிய விஷயம் படத்தில் "சமூகவிரோத" செயல்களை செய்வதாக காட்டப்படும் தாஸ் & கோ எந்த இடத்திலும் கொள்கை கோட்பாடு மோவாயிஸம் என்றெல்லாம் அடித்துவிடுவதில்லை.அவர்கள் அனைவருமே அந்தந்த சூழ்நிலைக்கு தக்கவாறே நடந்துகொள்கிறார்கள்.இதுவே வெற்றிமாறன் படமாக இருந்தால் தாஸ் பக்கம் பக்கமாக மோவாயிஸம் பேசியிருப்பார்!
டிஜிட்டல் கேமரா எனும் திராபையை வைத்துக்கொண்டே இடைவேளை தருணத்தில் அந்த ஏரிக்கரை சூரியஒளி பிரதிபலிப்பு காட்சி ,படத்தின் பிற்பகுதியில் தாஸ் மற்றும் சந்திரா ஒரு குன்றின் உச்சியில் நின்று பேசும் சமயத்தில் பின்னணியில் சூரியன் தெரியும் காட்சி எல்லாம் உண்மையிலேயே அற்புத தருணங்கள்!முகேஷ் ஜி - ன் ஒளிப்பதிவு பாராட்டுக்குரியது!
"அனிருத் என்றாலே இரைச்சல்" மாதிரியான sweeping statements எதையும் நாம் எப்போதுமே சொன்னதில்லை.காரணம் அனிருத்திடம் கண்டிப்பாக இசைத்திறன் உள்ளது(அவர் சில நல்ல மெலடி பாடல்களை கொடுத்துள்ளார்).அதை சரியாக வெளிக்கொண்டு வந்தால் இயக்குநருக்கு லாபம்."இல்ல...வழக்கமா போடுற டப்பாங்குத்தையே போடு" என்றால் அதையே கொடுப்பார்.விக்ரம் படத்தின் பின்னணி இசைக்கு பிறகு(கொஞ்சம் நெல்சன் படங்களிலும்)மற்றொரு அற்புதமான இசை அனுபவம் இப்படம். தாஸ் சந்திரா இருவரும் தனிமையில் அந்த வேனில் பேசிக்கொள்ளும் காட்சியில் வரும் பின்னணி இசை ஒரு உதாரணம்(Das and Parvathy track)! இது தவிர Raga of revenge,Bum ba diga diga,Raga of rage, ஜெய ஜெய சங்கர, Echoes of DC எல்லாமே அட்டகாசம்! இதில் Rose (Instrumental) கொஞ்சம் ராஜேஷ் முருகேசன் இசையமைத்த பிரேமம் படத்தின் Unfinished Hope போல இருக்கு.
லோகேஷ் நாயகனாக நடிக்கிறார் என்றதுமே "எதுக்கு விஷப்பரிட்சை" என்றே தோன்றியது.அதை பொய்ப்பித்துவிட்டார்.என்ன லோகேஷ் மாஸ்டர் & விக்ரம் படங்களை இயக்கிய சமயத்தில் இருந்த தோற்றத்திலேயே இப்படத்திலும் நடித்திருக்கலாம்.எதற்கு புட்டபர்த்தி ஹேர்ஸ்டைல் என்று புரியவில்லை.பார்வதியுடனான உரையாடலில் "எனக்கு புடிச்ச சக்குச்சக்கு வத்திக்குச்சி பாட்டை பாட சொல்லு" என்று நக்கல் அடிக்கிறார். அந்தப்பாட்டை லோகேஷ் தொடர்ந்து பிரபலப்படுத்திவருவது தெரிந்ததே!
 |
| இதே கெட்டப்பில் கூட அவர் நடித்திருக்கலாம்! |
படத்தின் சண்டைக்காட்சிகள் ரணகளம். ஸ்டண்ட் மாஸ்டர் விஜய் கபிலன்( ஆஸ்கர் ரவிச்சந்திரன் மாதிரி இவரின் ஒரு புகைப்படமும் கிடைக்கவில்லை) ஏற்கெனவே மகாராஜா மற்றும் ஆத்மன் நடித்த வெந்து தணிந்தது காடு படங்களில் எதார்த்தம் கலந்த உக்கிரமான சண்டைக்காட்சிகளை அமைத்தவர்.இப்படத்தின் இடைவேளை சண்டைக்காட்சி ரணகளம்! வெட்டப்பட்ட கை மற்றொரு நபரின் கையை பிடித்தபடியே தொங்கி கொண்டிருப்பது ஆஷம்! ஏற்கெனவே விஸ்வரூபம் படத்தில் எவனென்று நினைத்தாய் பாடலில்
இதேமாதிரி ஒரு தருணம் வரும்!
படத்தில் ரசனையான கிங்ஸ் லெவன் தருணங்கள் பல உண்டு.பார்வதி கிங்ஸ் லெவனை தாசிடம் நீட்டும்போது "விட்டுட்டேன்" என்று மறுக்கிறான்.பிறகு பார்வதி கொல்லப்பட்டதும் மீண்டும் கிங்ஸ் லெவனை ஆரம்பிக்கிறான்.சந்திராவின் காதலை ஏற்கும் தருணத்தில் அதை விடுகிறான்! எப்போதுமே கிங்ஸ் லெவன் உதவியுடன் ஏகப்பட்ட அற்புத தருணங்களை திரையில் கொண்டுவரலாம் என்று நாம் தொடர்ந்து சொல்லி வருவது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது!
தற்கால தமிழ் சினிமா பாணியிலேயே இப்படத்திலும் கல்வியின் மகத்துவம் வசனங்களால் அல்லாது காட்சிகளால் உணர்த்தியுள்ளார்கள். "அந்த குரூரமாக கொல்லப்பட்ட விவசாயி மகனின் கல்வி செலவுக்காக காசு கொடுக்காமல் நான் ஆந்திரா போகமாட்டேன்" என்கிறான் தாஸ்.அவனிடம் "படி" என்று வழக்கமான தமிழ் சினிமா ஹீரோ வசனத்தை சொல்கிறார்.
எல்லாம் சரிதான்.படித்து வேலைக்கு போனால் தற்கால குடும்பத்தின்... ஏன் அடுத்தடுத்த தலைமுறைகளின் வாழ்க்கைத்தரம் மேம்படும் என்பதை நாம் மறுக்கவில்லை.கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்கு காரணமும் அதுவே! ஆனால் இங்கே ஒரு ஃ- ன்னா வாக இதே படத்தில் மெத்த படித்தவர்கள் தான் சந்திராவிடம் ஈவிரக்கமின்றி பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறார்கள்! சந்திராவை குரூரமாக கொடுமைப்படுத்தி மகிழ்கிறார்கள்! இவர்களும் நன்றாக படித்து நல்ல வேலையில் இருப்பவர்கள்தான்.ஆக கல்வி என்பது முக்கியம் என்றாலும் அதையும் தாண்டிய ஒரு கற்றல் தேவைப்படுகிறது.அதை இதுவரை எந்த தமிழ்ப்படமும் பேசியதாக நாம் கண்டதில்லை!
ஆனால் அதையெல்லாம் ஒத்திவைத்துவிட்டு பார்த்தால் இது மீண்டும் ஒருமுறை பார்க்கத்தூண்டும் படம் என்பதில் சந்தேகமில்லை!
No comments:
Post a Comment