Showing posts with label பரிந்துரை. Show all posts
Showing posts with label பரிந்துரை. Show all posts

Tuesday, 10 October 2017

Prison Break (2005-17)



          ஜெயில்ப்ரேக் வகையறா நம்ம பேவரைட்களுள் ஒன்று.Escape from Alcatraz அதை பட்டி டிங்கரிங் பாத்து ரிலீஸ் செய்யப்பட்ட The Shawshank Redemption ,A man Escaped,Midnight express, ஸ்டால்லோன் அர்னால்ட் இணைந்து நடித்த மிக சுமாரான  Escape plan என்று பட்டியல் நீளும்..
        இதில் ஜெயிலில் அடைக்கப்பட்ட பிரதான கதாபாத்திரம் தனியாகவோ சகாக்களுடன் சேர்ந்தோ  அங்கிருந்து திட்டம் போட்டு தப்பிப்பதாக வெகு சுவாரஸ்யமாக இருக்கும்.Prison Break பார்க்க நினைத்ததன் காரணமே அதுதான்.
          தற்செயலாக முதல் சீசனில் முதல் எபிசொட் பார்க்க ஆரம்பித்ததுதான்.பத்தாயிரம் வாலாவை கொளுத்தி உட்டா மாதிரி சரசரன்னு செல்லும் திரைக்கதை,எதிர்பாராத திருப்பங்கள்,அடுத்த நொடி ஒரு முக்கிய கதாபாத்திரம் போலீசில் சிக்கிக்கொண்டு விடுவார்களோ என்று விளிம்பு வரை பதட்டமடைய செய்து கடைசியில் தப்பிப்பதாக காட்டுவது,பரபரப்பான துரத்தல்கள் என்று வெகு விரைவாகவே சென்றது.
             செய்யாத கொலைக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட தனது அண்ணன் லிங்கன் பர்ரோசை அதே ஜெயிலுக்கு வாண்டனாக கைதியாக வந்து மீட்கும் தம்பி மைக்கேல் ஸ்காஃபீல்ட்.தப்பிப்பதோடு கதை முடியாமல் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள், அதனால் கொல்லப்படும் நபர்கள், அமெரிக்க அரசே துரத்தும் நிலை என்று மூச்சுவிடாமல் ஓடும் சகோதரர்கள்.அதற்குள் இழுக்கப்பட்ட சிறை மருத்துவர்-கவர்னரின் மகள்-சாரா டேன்க்ரேடி(மைக்கேலின் GF),இரு சகோதர்களோடு தப்பித்த இன்னும் ஆறு பேர்,அவர்களின் கதி என்று பரபரப்பான திரைக்கதையில் நகர்கிறது.
              முதல் சீசனில் தப்பித்தல், இரண்டாவது சீசனில் எப்பிஐ ஏஜன்ட் மஹோன் அவர்களை துரத்துதல்,மஹோனை பின்னணியில் இயக்கும் The Company என்று இன்னும் அதிவேகம்!மூன்றாவது சோனா ஜெயிலில்-மெக்சிகன் ப்ளேவர்!முதலிரண்டு சீசன்கள் அளவுக்கு பரபரப்பு இல்லையென்றாலும் இதிலும் சோனா ஜெயிலில் இருந்து விஸ்லர் என்பவனை தப்பிக்க வைக்க மைக்கேல் எடுக்கும் முயற்சிகள்,அதில் லெசெரோ என்னும் பெரிய போதைக்கடத்தல் கும்பல் தலைவன் சிக்கவைக்கப்படுவது,டி பேகின் துரோகம் என்று செல்கிறது.
 நான்காவது சீசன் Fast and the furious படம் போல ஆரம்பித்து(ஒரு வேர்ஹவுசில் அதிநவீன கார்கள் கணினிகள் பிற வசதிகள்) அப்புறம்  திசைமாறிபோகிறது.
ஐந்தாவது சீசன் மேரா நாம் அப்துல் ரகுமான் என்று சம்மந்தமே இல்லாமல் ஏமனில் உள்ள ஜெயிலில்  இருந்து மைக்கேல் தப்பிப்பதாக வருகிறது.ஆனால் இதில் அவ்வளவு விறுவிறுப்பு இல்லை என்றே கூறவேண்டும்.
மேரா நாம் அப்துல் ரகுமான்!
            லிங்கன் பர்ரோஸ் சிக்கவைக்கப்பட்டதன் காரணம் அவரது தந்தை கம்பெனி என்ற ரகசிய அமைப்பில் இருந்து விலகி அதற்கெதிராக செயல்பட ஆரம்பித்தவர்.இந்த கம்பெனியின் வேலை அமெரிக்க அரசு எந்த நாட்டோடு போருக்கு செல்ல வேண்டும்(அதனால் ஆயுத கம்பெனிகள் கொள்ளை லாபம் அடையலாம்),எதுவரை போரை நடத்த வேண்டும்(அப்போது மருத்துவ சேவை வழகுவதாக மருந்து கம்பெனிகள் லாபமடையலாம்),எப்போது போரை நிறுத்துவது(அப்போது நகர உட்கட்டமைப்பு நிறுவனங்கள் லாபமடையலாம்)...etc...etc... என்று அரசின் முகமூடியில் லாபம் கொழிக்கும் பன்னாட்டு கம்பெனிகள்.லிங்கனின் தந்தை அவைகளை அம்பலப்படுத்த முயல அவருக்கு செக் வைக்க லிங்கன் சிக்கவைக்கப்படுகிறார்.துணை ஜனாதிபதியின் சகோதரரை  லிங்கன் கொன்றதாக சிக்கவைக்கிரார்கள்.மின்சார சேரில் கடைசி நொடி வரை இருந்து தப்பிக்கிறார் லிங்கன்.
Lincoln Burrows
             லிங்கன் முரட்டு ஆசாமி.ஆறடி உயரத்தில் எந்நேரமும் முன்கோபம்,அடிதடியில் ஈடுபடுதல்,கடத்தல் வேலைகள் என்றிருப்பவர்.அதில் வரும் வருமானத்தில் தம்பியை படிக்கவைக்கிறார்.மைக்கேல் ஸ்காஃபீல்ட் ஸ்ட்ரக்சுரல் எஞ்சினியர்.கட்டுமான அமைப்புகள் பற்றி மட்டுமல்லாது அனைத்து விஷயங்களை பற்றியும் அத்துபடி.எப்பிஐகே கல்தா கொடுப்பவர்.எப்படி திட்டம் போடா வேண்டும்,எப்போது செயல்படுத்த வேண்டும்,அந்த திட்டம் நினைத்தபடி நடக்காவிடில் வேறொரு திட்டத்தை பேக்கப்பாக வைத்திருந்து அதை செயல்படுத்துதல்,மின்னணு சாதனங்கள் குறித்த அறிவு என்று அவரை தேடும் அனைவருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்.அறிவைக்கொண்டே வெல்பவர்.மனிதர்களை கொல்வதில் உடன்பாடு இல்லாதவர்.
Michael Scofield
        எப்பிஐ ஏஜன்ட் மஹோன் –ஆரம்பத்தில் நேர்மையான ஏஜண்டாக இருந்து பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ரத்தவெறி பிடித்தவராகி தனக்கிருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி  extra judicial killings செய்யும் கொலைகாரனாக மாறுதல்,அந்த மாற்றம் உண்டாக்கிய குற்ற உணர்வை,மன உளைச்சலை சமாளிக்க போதைப்பொருளுக்கு அடிமையாதல்,பிறகு சோனா ஜெயிலில் மைக்கேலால் சிக்க வைக்கப்பட்டதும் withdrawal effect ல் கைகால் நடுங்க வியர்வை வழிய hallucinationல் சிக்கிக்கொள்ளுதல்,பிறகு மீண்டு மைக்கேலுக்கு உதவியாகி மீண்டும் ஏஜண்டாக பணியில் சேருதல் என்று ஒருவித edge லேயே இருக்கும் ஒரு கேரக்டர்.இவரை பார்த்ததும் எனக்கு நினைவுக்கு வந்தது ரகுவரன்.தமிழில் இவருக்கு இப்படியொரு ரோலை கொடுத்திருந்தால் அட்டகாசமாய் செய்திருப்பார்!
Agent Mahone
      அடுத்து  T bag.Pedophile ஆக இருந்து அதனால் சிறை சென்று பிறகு தப்பித்து ஒரு கையை இழந்து மைக்கேலை பழிவாங்க துடிப்பவர்.ஐந்தாவது சீசனில் இவர் சம்மந்தப்பட்ட சில டுவிஸ்டுகள் ரொம்ப cheesy ஆக இருந்ததாக தோன்றியது.பெரும்பாலும் வில்லனாக நடிப்பவருக்கென தனி மேனரிசம் இருக்கும்.அதை அவர்கள்  வலிந்து செய்வதாகவோ  இயல்பாக வருவதாகவோ இருக்கும்.
      மொத்த சீசன்களிலும்  அசால்டாக வில்லத்தனம் செய்பவர் T Bag கேரக்டரில் நடித்த Robert Knepper .எந்தவித சிரத்தையோ மிகையான முயற்சிகளோ இல்லாது ஒரு நீரோட்டம் போல நடிக்கிறார்.அவரது deep baritone குரல் அவர் பேசும் விதம்,உடல்மொழிகள் எல்லாம் The Dark Knight ல் Heath Ledger செய்த  Joker கதாபாத்திரத்துக்கு முன்னோடி என்று கூறலாம்!
T-Bag

      மற்றொரு முக்கிய கதாபாத்திரம் சுக்ரே.புவர்தோ ரீக்கனான இவர் நட்பிற்கு உதாரணமாக திகழ்கிறார்.மைக்கேல் எங்கே?என்று பனாமா போலீசு இவரை மண்ணில் உயிரோடு புதைக்கும்போதும் சொல்ல மறுக்கும் நண்பர்! 
Sucre

         மேலும் சில தொழில்முறை கொலைகாரர்கள்.கம்பனியால் நியமிக்கப்பட்டவர்கள்.எவரையும் கொல்ல யோசிக்காதவர்கள்.அப்படியே இவர்கள் மற்றவர்களிடம் சிக்கிக்கொண்டு கடுமையான சித்திரவதை செய்தாலும் ஒரு வார்த்தை பேசாதவர்கள்.
           கம்பனி தனக்கு இடையூறாக வருபவர்கள் யாராக இருந்தாலும் மேற்சொன்ன கொலைகாரர்களை வைத்து தீர்த்துக்கட்டுகிறது.பிறகு கொல்லப்பட்டவர்களின் உறவினர் யாரேனும் போய் அந்த கம்பனியின் தலைவனிடம் இதுபற்றி கேட்டால் "It was nothing personal" என்ற பதிலே கிடைக்கும்.அதாவது கொலை செய்வது,செய்யாத குற்றத்திற்காக பிறரை சிக்கவைப்பது,எப்பிஐ,ஹோம்லேண்ட் அமைப்புகளில் பணியாற்றுவோரை கார்னர் செய்து குடும்பத்தை அழித்துவிடுவேன் என்று மிரட்டி தனக்கு சாதகமான காரியங்களை சாதித்துக்கொள்ளுதல் என்று கம்பெனி மிக அபாயகரமான ஒரு அமைப்பு.
Kellerman.எந்த விதிகளும் இல்லாமல் கொல்லு!

        இது ஏதோ கற்பனையாக இந்த டிவி சீரிசுக்காக உருவாக்கப்பட்ட விஷயமல்ல.நிஜத்திலேயே இப்படிப்பட்ட கம்பெனிகள் ஏகத்துக்கும் உண்டு.ஒவ்வொரு நாட்டின் வெளியுறவு கொள்கை,உள்நாட்டு பாதுகாப்பு,மருத்துவம்,கட்டுமானம்,நீர் பங்கீடு,கல்வி  என்று எல்லாவற்றையும் இயக்குவது இதுபோன்ற அமைப்புகளே!
     உலகத்திலேயே சக்திவாய்ந்த பதவி அமெரிக்க சனாதிபதி பதவி என்பார்கள்.உண்மையில் அதுவே ஒரு டம்மி போஸ்டுதான்!காலம் காலமாக அமெரிக்க சனாதிபதியை மட்டுமல்லாது அனைத்து நாட்டு தலைவர்களையும் இயக்குவது இதுபோன்ற அமைப்புகள்தான்!அவர்களை கண்டுபிடிப்பதோ அழிப்பதோ சாத்தியமே இல்லாத ஒன்று.
மைக்கேலின் உடலில் சிறையின் ப்ளூ பிரிண்ட்

       மேலும் வழக்கமாக ஹாலிவுட் படங்களில்(கமலகாசனின் தசாவதாரம் படத்திலும் ப்ளட்சர் கேரக்டர் உண்டு என்பது நினைவிருக்கலாம்) வரும் rogue CIA ஏஜன்ட் இதிலும் உண்டு!அதாவது சிஐஏவில் இருந்தவர்/இருப்பவர்.பிறகு அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படாமல் தன்னிச்சையாக செயல்படுபவரை அப்படி அழைக்கிறார்கள்.ஏய்யா CIA ன்னாலே rogue தான!அப்புறமென்ன தனியா rogue CIA??.
      முதலில் அரசுக்கெதிராகவே(அமெரிக்க சனாதிபதிக்கு எதிராகவே) தைரியமாக நிற்கும் மைக்கேலும் லிங்கனும் பிறகு ஒரு கட்டத்தில் அரசின் ஆசி பெற்றவர்களாக மாறுவதும் -"ஏதோ ஒண்ணு ரெண்டு பேரு அரசாங்கத்தில் அப்படி இருக்கிறார்கள்.அவர்களை ஒழித்துவிட்டால் அமெரிக்க அரசு அறம் சார்ந்தது" என்பதைப்போலெல்லாம் புருடா விட்டு முந்தைய எதிர்ப்பை மழுங்கடிக்கிறார்கள்.
      மேலும் தனது சகோதரனை பகடைக்காயாக பயன்படுத்தி,அமெரிக்க சனாதிபதிக்கு விஷம் வைத்துக்கொன்று சனாதிபதியாகும் வில்லியாக வருபவர் பிறகு திடீரென்று ஒருகட்டத்தில் "எனக்கு புற்றுநோய் உள்ளது.சிலகாலம்தான் வாழ்வேன்.நான் பதவியை ராசினாமா செய்கிறேன்" என்று அந்தர்பல்டி அடிக்கவைக்கிறார்கள்!அதாவது அமெரிக்க சனாதிபதி பதவியில் நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் மனசாட்சி உள்ளவர்கள் மட்டும்தான் அமர்வார்கள் என்ற போலி நம்பிக்கையை மக்களிடம் உண்டாக்க இப்படியொரு வழி!
  அப்புறம் இன்னொரு pattern ஒருவரை முதலில் மிக மிக குரூரரமான ஆளாக காட்டிவிட்டு பின்னர் சந்தர்ப்ப சூழல்களால் அவர் நல்லவராக மாறுவது.பெல்லிக் ஒரு உதாரணம்.
Bellick
 
       சரி இது வணிக நோக்கில் எடுக்கப்பட்ட ஒரு டிவி சீரிஸ்.இதில் இவ்வளவு நதிமூலங்கள் பார்க்க தேவையில்லை என்று வைத்துக்கொண்டாலும் கதையோட்டத்தின் போக்கை மேற்சொன்ன அந்தர்பல்டிகள் மழுங்கடிக்கின்றன என்பதை குறிப்பிடவே இதை சொல்ல வேண்டியதானது.
        சாதாரணமாக இரண்டு மணிநேர திரைப்படத்தை விறுவிறுப்பு குறையாமல் எடுப்பதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் இந்த 70+ மணி நேர சீரிஸில் கிட்டத்தட்ட 50-60 மணி நேரங்கள் விறுவிறுப்பு குறையாமல் பார்த்துக்கொண்டது பெரிய சாதனைதான்.கண்டிப்பாக இதை பார்க்க துவங்கினால் நடுவில் நிப்பாட்ட முடியாத அளவுக்கு விறுவிறுப்பான ஒரு தொடர்.
         
            

Saturday, 5 November 2016

அப்ஸரா-சுஜாதா

My only certainty in life is that one day i shall die இது ராஜா,  மணியிடம்  சொன்னது.

                         யாராவது  கொஞ்சம்  அநாகரீகமாகவோ  எல்லைமீறியோ  நடந்துகொண்டால்/நடக்க்முற்பட்டால்  உடனே  நாம்  சொல்வது  "படிச்சவன்தான  நீ?".இது  எதுக்கு  சொல்றாங்கன்னு  எனக்கு  இன்றுவரை  விளங்கியதில்லை.இங்கே  கல்வி  என்றபேரில்  என்ன  சொல்லித்தரப்படுகிறது?மனனம்  செய்து பரிட்சையில்  வாந்தி  எடுப்பதைத்தாண்டி?அப்படிப்பட்ட  குமாஸ்தா  கல்வியை  படிச்சவன் ,படிக்காதவனிடமிருந்து எதில்  வேறுபடுவான்?
              ஒருவனின்  நடத்தையை ,எண்ண ஓட்டங்களை ,செயல்களை  தீர்மானிப்பது பெரும்பாலும்  அவன்  வளரும் சூழல்,நண்பர்கள்,பணிச்சூழல் ஆகியவைதான்.
            வாத்தியாரின்  இந்தக்கதை சாதாரணமாக  ஒன்றாக  தெரியலாம்.மனம்  பிரழ்ன்ற ஒருவன்  செய்யும்  தொடர்கொலைகள்.ஆனால்  அதில் வரும்  சிறு சிறு கதாபாத்திரங்கள்கூட  தனித்தன்மையோடு ஆசை  கனவுகளோடு இருப்பதாக வரும்.அதான்  வாத்தியார்  ஸ்டைல்.குற்றம்  செய்பவனின் பார்வையில்  திரைப்படங்கள்  எடுப்பது தமிழில்  இப்போது  பிரளமானதாக  இருக்கலாம்!  ஆனால்  அதை  கதைகளில் முன்பே  காட்டியவர் அவரே!

             உதாரணமாக  சரஸ்வதி பாயின்(பாய்  என்ன பாய்?-ராஜா)  இரண்டு  மகள்கள்.பத்து  வயதிருக்கும்.ராகினி  தாரிணி.அவர்கள்  செய்தித்தாளில் வந்துள்ள  புரியாத   தமிழ் படக்கதை(அவர்கள்  படிப்பது  பெங்களூரு கான்வென்டில் என்பதால்  தமிழ்  வாசிக்க முடியாது!)யை  தாயிடம்காட்டி  விளக்கம்  கேட்பதாக  ஒரு  இடம்  வரும்.
மேலும் ரிஷி கபூரின்  வெறியையாக  வரும்  பிரேமா(Rishi is fab yaar-பிரேமா),பார்க்கில்  உள்ள மன்னனின்  சிலையை  பார்த்து  "Hello King" சொல்லும்  அருணா  என அந்தளவு  நுட்பமாக கதாபாத்திரங்களின்  மன ஓட்டங்களை  ரசனைகளை  எண்ணங்களை  பதிவு  செய்திருப்பார்!

              அதேபோல  சகோதரிகளான  சகுந்தலா  அருணா.சகுந்தலா  கருப்பாக  ஒல்லியாக  அழகற்று இருக்கிறாள்.அருணாவோ அனைவரையும்  திரும்பி பார்க்கவைக்கும்  அழகு.சகுந்தலாவை  பெண்  பார்க்க  வந்த  பலர்  அருணாவை கேட்பதால் அவளை  லைப்ரரிக்கு  அனுப்புகிறாள்  அவர்களது  தாய்.அப்போதுதான்  பார்க்கில்  அவள்  கொல்லப்படுகிறாள்.
               இறந்துகொண்டிருக்கும் அருணாவின்  கடைசி  நிமிடங்கள் விவரிக்கப்படும்  இடம் மறக்க முடியாத  ஒன்று.
                அதற்குள்  தன்னை எது  எந்த  திசையில்  இருந்து  தாக்கியது  என  அருணாவுக்கு  தெரியவில்லை.அந்த  கூர்மையான  ஆயுதம் வலப்பக்கத் தோள் எழும்பருகில்  நுழைந்து  பற்பல  ரத்த  குழாய்களையும்  நரம்புகளையும்  துண்டித்து அங்குலக்கனக்கில்  உள்ளே  இறங்க  குபுக்  என்று  ரத்தம் போங்க அருணா  வாய்  திறந்து  காற்று  காற்று  என  திணறினாள்......அப்படியே  வாய்  திறந்துகொண்டு  விழுந்தாள்.அவள்  கைகள்  அவன்  சட்டையை  பற்றின,துவண்டன.அவன்  மேல்  சரிந்து  கீழே விழுந்தாள்.அவன்  பூட்ஸ்  தெரிந்தது.செகண்டுகள் ஜென்ம  ஜென்மங்களாக  விரிவடைந்தன-அருணாவுக்கு.ஏதோ  சொல்ல  வாயெடுக்க  ரத்தம்தான் வாயிலிருந்து   வந்தது.மெதுவாக  அந்த  சிவப்பு  ஓடை மண்ணில்  வழிவதையும்  வழிந்த  சுருக்கில் அது  உறிஞ்சப்படுவதையும் ஆர்வத்துடன்  பார்த்தாள்.தன் புடவை  மேல்  ரத்தத்தை  பார்த்தாள்..
.
.
பார்பராவின்  புத்தகத்திலிருந்து அந்த  செபாஸ்டியன்  என்ற  இளைஞன் ,'பார்த்துவா  லூசிந்தா!பார்த்துவா" என்று  அவளை  அணைத்து(வெட்கமாக இருந்தது) என் பெயர்  லூசிந்தா  இல்லை ,அருணா....அழைத்து  செல்ல  வந்தவன் அவளை  ஆக்கிரமித்துக்கொள்ள,இத்தனை  நாழிக்கு அவா  எல்லாரும்  பஜ்ஜி  சாப்பிட்டிடுண்டு  இருப்பா .பஜ்ஜிக்கு  உப்பு  போட்டேனா?நியாபகம் இல்லையே.புடவையில்  எவ்வளவு ரத்தம்?நாளைக்கு  ஸர்ஃபிலே போட்டு  ரெண்டு  மணி  நேரம்  ஊற வெச்சா  ரத்தக்கறை  எல்லாம்  போய்விடும் !எல்லாம்...எல்ல்ல்ல்ல்ல்...லாம். 
              தனக்கு  ஒழுக்கத்தை  போதித்த  தந்தை(கூன் போடாதே!பளார்) வீட்டு திண்ணையில்  மூணு  சீட்டு  விளையாடியதும்;  தாய்  வேறு  ஆண்களோடு  உறவு கொண்டு  அந்தக்காசில்  இவனை  படிக்கவைத்ததும்  ராஜாவின்  ஆழ்மனதில்  தனியா  வெறுப்பை ,சமூகத்தோடு  ஒன்ற மறுக்கும்  ஒரு  மனநிலையை கொடுத்துவிடுகிறது.அந்த  வெறியிலேயே  அவன்  படித்து  பெரிய  ப்ரோக்ராமர்  ஆகிறான்.

         இப்படி  சிறுவயது மனப்பிறழ்வை ஒருபுறம்   நல்வழிக்கு  பயன்படுத்தினாலும்  இன்னொருபுறம் அதே  அறிவை கொல்வதற்கும்   பயன்படுத்துகிறான்(நீட்ஷேவின் Thus Spake Zarathushtra புத்தகம் ராஜாவின்  ஆபீஸ்  ட்ராவில்  இருப்பதாக கதையில்  வருகிறது)
              மனப்பிறழ்வு  கொண்டவர்கள் கொலை  செய்யும்போது  முழு   பிரக்ஞையோடு கொல்திவதில்லை. 'கொல்வது   தாந்தான்'  என்ற  எண்ணமே  அவர்களுக்கு  இருப்பதில்லை.மேலும்  யாரை  கொல்லவேண்டும்  என்று அவர்களாக  தீர்மானிப்பதில்லை.They  leave it to chance!இதிலும்  அப்ஸரா  என்ற  கம்பெனி  நியான் பார்த்துத்தான்  அவனுக்கொரு  ஐடியா.அதன்படி  ப்ரோக்ராம்  எழுதுகிறான்.
                          அதாவது  கொலை  செய்வதும்  தானில்லை.யாரை  கொலை  செய்வது  என  தீர்மானிப்பதும் தானில்லை  என்ற  உணர்வே  அவர்களிடம் மிதமிஞ்சி  இருப்பதால் கொலை  செய்யும்போது   எவ்வித  பதட்டமும்  இருப்பதில்லை.கொன்றுவிட்டு  நிதானமாக  பார்க்கைவிட்டு  வெளியேற  முடிகிறது."இருட்டில் பந்துவிளையாட  வைக்காதீங்க  குழந்தையை"என்று  ஒரு  தாய்க்கு  அட்வைஸ்  பண்ணமுடிகிறது!அதே போல  கொன்றுவிட்டோமே என்ற குற்ற உணர்வும்  அவர்களுக்கு  இருப்பதில்லை!"ஏன்  விபத்தில் பலர்  இறக்கிறார்களே?அதுபோலத்தானே  இதுவும்?"-இது  அவர்கள்  வாதம்!
           முதலில்  சொன்னதுபோல கதை  என்பது  வழக்கமான  ஒன்றுதான்.ஆனால்  அதை  சொல்லும்விதம்,அதில்தான்  இக்கதை மிளிர்கிறது.
            

Friday, 18 July 2014

Man's Search for meaning

                    மிஸ்கினின் யுத்தம் செய்  படத்தை இரண்டாவது முறை பார்த்ததால் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை கண்டுகொண்டேன்  என்றே சொல்லவேண்டும்.பொதுவாகவே எந்த சினிமா பார்த்தாலும் அதில்வரும் கதாபாத்திரங்கள் புத்தகங்கள் பற்றியோ எழுத்தார்களை பற்றியோ பேசும்போது அதை குறிப்பெடுத்து கொள்வதுண்டு.உதாரணமாக காதல் வைரஸ் படத்தில் நாயகி "Somerset Maugham -ன் எழுத்து பிடிக்கும்" என்பார்.கஜினி படத்தில் அஸின் மரியோ புட்சோவின் காட்ஃபாதர்  படித்து(படிப்பது போல நடித்து??) கொண்டிருப்பார்.மந்திரப்புன்னகை படத்தில் நாயகனின் அறை மேஜையில்  எஸ்.ரா எழுதிய விழித்திருப்பவனின் இரவு புத்தகம் இருக்கும்.இது போல பல உதாரணங்களை சொல்ல முடியும்.இந்த தேடலுக்கான காரணம் நல்ல புத்தகங்களை தவறவிட்டுவிட கூடாது(அதற்காக சினிமாக்களில்  காட்டப்படும் எல்லா புத்தகங்களும் அற்புதமானவை என்று சொல்ல மாட்டேன்.சில இயக்குனர்கள் சும்மா நாயகி கையில் புக்கு இருக்கணும் என்பதற்காக மூர் மார்கெட்டில் வாங்கிய ஏதேனும் சுய சொறிதல் புக்கை கையில் கொடுத்துவிடும் அபத்தங்களும் இதில் உள்ளன).அத்தகைய புத்தகங்களுக்கான சுய தேடல் என்பது தனியே இருந்தாலும் வேறொரு  மனிதரின் கண்ணோட்டத்தில் சில புத்தகங்கள் கண்ணில் படும் போது அதைத்தவரவிட மனமில்லை.
               அப்படிப்பட்ட தேடலில் கண்ணில் பட்டதுதான் Viktor.E.Frankl எழுதிய Man's Search For Meaning  என்ற புத்தகம்.யுத்தம் செய் க்ளைமாக்ஸில் ஒய்.ஜி.மகேந்திரன் கதாபாத்திரத்தின்  மகன் நிஷாந்த்துக்கு(அந்த நிஷாந்த்   கதாபாத்திரம் மிகப்பெரிய மன அதிர்ச்சியில் இருக்கும்) சேரன் இந்த புத்தகத்தை வழங்குவதாக காட்சி வரும்.அங்கே ப்ரீஸ் செய்து கண்டுபிடித்ததே இப்புத்தகம்.இதை புத்தகம் என்பதைவிட ஒரு ஆசான் என்றே சொல்வேன்.

                பொதுவாகவே வாழ்வில் சோதனைகள் பிரச்சனைகள் வரும்போது "ஐயோ கடவுளே நீ இருக்கியா இல்லையா" என்று ஆண்டவனுக்கே ஜெர்க் கொடுக்கும் சோக பட்சிகள் இவ்வுலகில் பலப்பல... சுய தேடல், சுய பரிசோதனை போன்றவைகளின் மூலம் இந்த சிறுபிள்ளைத்தனமான(கடவுளை வணங்குதல் சிறுபிள்ளைத்தனம் இல்லை.இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்பதை சி.பி.தனம்  என்கிறேன்) எண்ணங்களில் இருந்து வெளிவர முடியும் .ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை என்பது என் அனுபவம்.
               இப்புத்தக ஆசிரியர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். யூதர் என்பதால் நாட்ஸி  கேம்பில் அடைக்கப்படுகிறார்.அங்கே அவர் கண்ட விஷயங்கள் தான் சுயமாக உணர்ந்த அனுபவங்கள் போன்றவைகளை வெறும் உணர்ச்சிவயப்பட்ட நோக்கில் அல்லாமல் சிந்தனை நோக்கில் அலசி ஆராய்ந்து பல்வேறு விஷயங்களை சொல்கிறார்.

             சாதாரணமாக வூட்ல குழாய் அடைப்பு என்றாலே தற்கொலை செய்துகொள்ளும் வீராதி வீரர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.இதில் வாழ்வில் வரும் கடுமையான சோதனைகள் என்பது வாழ்க்கை நம்மை சோதிக்கிறது என்பதற்கான அடையாளம்.சோதனைகள் பிரச்சனைகள் போன்றவற்றின் மூல காரணத்தை நாம் ஆராய வேண்டும்.அதை நம்மால் தீர்க்க முடியும்/நீக்க முடியும் என்றால் அதை கண்டிப்பாக முயன்று செய்ய வேண்டும்.அப்படி எதுவும் செய்ய முடியாது.பிரச்சனையின் மூல காரணத்தை எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது அந்த பிரச்னையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
         உதாரணம் 1: உங்களுக்கு தொடர் தலைவலி வருகிறது என்று வைத்துகொள்வோம்.நாள் தவறாமல் வந்துவிடுகிறது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?."வாழ்க்கை என்னை சோதிக்கிறது.நான் அதை ஏற்றுகொள்கிறேன்" என்று சொல்லகூடாது என்கிறார் ஆசிரியர்.அப்படி சொல்வது Masochism.அப்படி அல்லாமல் அந்த தலைவலிக்கு என்ன காரணம் என்பதை தகுந்த மருத்துவ சோதனை மூலம் ஆராய்ந்து கண் கண்ணாடி அணிய வேண்டுமென்றால் அணிய வேண்டும்.அல்லது வேறு பிரச்சனை என்றால் அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 
      உதாரணம் 2: ஒருவருக்கு தலையில்  டியூமர்.கடுமையான தலைவலியால் துடிக்கிறார்.மருத்துவ சோதனைக்கு பிறகு இதை ஒன்றும் செய்ய முடியாது.இவர் வாழப்போவது கொஞ்ச நாள்.ஆனால் மருந்துகள் மூலம் வலியை மட்டுப்படுத்தலாம் என்றால் இப்போது வேறு வழியில்லை.வாழ்வின் சோதனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
          அதாவது வாழ்வில் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை முயன்று தீர்க்க வேண்டும்.தீர்க்க முடியாத பிரச்சனைகள், சோதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
           வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து வாழ்க்கை நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் வாழ்க்கை நமக்கு சவால்களை விடுத்துக்கொண்டே இருக்கிறது.அய்யய்யோ!!! என்று ஓடாமல் அவைகளை நமது பொறுப்புகளாக ஏற்றுகொள்ள வேண்டும்.
            மேலும் மனிதனுக்கு என்று சில எல்லைகளை மருத்துவம் நிர்ணயித்துள்ளது.இத்தனை நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் செத்து விடுவான்.இவ்வளவு நீர் ஒவ்வொரு நாளும் தேவை.தினம் பல் விளக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த concetration camp ல் எப்படி பொய்யாகி போனது என்பதை விளக்குகிறார்.உதாரணமாக "நாள்தோறும் நான் பல் துலக்கும்  போது இருந்ததைவிட இப்போது பல்லே துலக்காமல் இருக்கும் போது  ஈறுகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறது" என்கிறார்.அதற்காக பல்லே துலக்க கூடாது என்று அர்த்தம் செய்துகொள்ள கூடாது.மனிதனுக்கு இதுதான் எல்லை என்று செய்யப்பட்ட நிர்ணயங்களின் போலித்தன்மையை விளக்கவே இந்த உதாரணத்தை சொல்கிறார் ஆசிரியர்.மிகச்சிறிய சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிடும் ஒரு நபர் பல்வேறு இரைச்சல்களுக்கிடையில் நிம்மதியாக தூங்கியதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
              இவை சொல்பவை ஒரு விஷயத்தை.மனித மனத்தின் எல்லைகளை வரையறுப்பது என்பது இயலாத காரியம்.மேலே சொன்ன உதாரணங்கள் உடல் சம்மந்தப்பட்டவைதானே?என்று கேட்கலாம்.ஆனால் உடல் மனம் என்பது பிண்ணி  பிணையப்பட்ட ஒரு விஷயம்.இரண்டையும் பிரித்து பார்ப்பது என்பது முட்டாள்தனம்.இது என் கருத்து 
          மேலும் concentration camp ல் இருந்து வெளிவந்த மனிதர்கள் பிறகு பொது வெளியில் நடந்துகொள்ளும் விதம் பற்றி சொல்கிறார் ஆசிரியர்.இவரோடு கேம்பில் இருந்த ஒரு நண்பர் பூங்காவில் நடக்கும் போது செடிகளை சேதாரப்படுத்துதல், பொது சொத்துக்களை அடித்து உடைத்தல் போன்றவற்றை செய்து கொண்டிருந்ததாகவும்
"ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று இவர் கேட்டபோது "என்னை கேம்பில் கொடுமைப்படுத்திய இந்த சமூகத்தை இப்படித்தான் பழிவாங்க வேண்டும்" என்பதுபோல (சாரத்தை மட்டும் சொல்கிறேன்) சொல்கிறார்.

         அதற்கு ஆசிரியர் "பிறர் உங்களுக்கு தீமை செய்தார், அல்லது சமூகம் உங்களுக்கு தீங்கு செய்தது என்பதற்காக நீங்களும் அதையே திருப்பி செய்ய வேண்டியதில்லை.அது தவறான விஷயம்" என்கிறார்."சுதந்திரம் என்பது மட்டும் முக்கியமில்லை.அதைவிட முக்கியம் பொறுப்புணர்ச்சி.சுதந்திர தேவிக்கு சிலை உள்ளதுபோல பொறுப்புணர்ச்சியை உணர்த்தும் சிலை ஒன்றையும் அமெரிக்காவில் நிறுவ வேண்டும்.அதுதான் உண்மையான சமநிலை." என்கிறார்.
         மேலும் pyschiatry/psychology போன்றவை மேற்க்கத்திய சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை.அதாவது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் தேடு..துன்பம் வந்தால் அது ஏதோ தெய்வ குத்தம் என்பது போலவும் துன்பப்படுபவன் அதை ஏதோ அவமானகரமான விஷயமாக கருத வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளை கொண்டவை.அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதே logotherapy.கண்ணீர் சிந்துதல் என்பதும் ஒருவன் துன்பத்தை தாண்டி வந்திருக்கிறான் என்பதிலும் எவ்வித அவமானமும் இல்லை.மாறாக அவனின் துயரம் தாங்கும் வலிமையை பாராட்ட வேண்டும்..
புத்தகத்தில் சில அற்புதமான வரிகள்: 

  • “Those who have a 'why' to live, can bear with almost any 'how'.” 
  • “When we are no longer able to change a situation, we are challenged to change ourselves.”  
  • But there was no need to be ashamed of tears, for tears bore witness that a man had the greatest of courage, the courage to suffer

       இதுபோல பல அற்புதமான விஷயங்களை இப்புத்தகம் சொல்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.குறிப்பாக வளர் இளம் பருவத்தினர் இதை வாசிக்க வேண்டும்.இதை பள்ளியில் பாடமாக கூட வைக்கலாம்.இதை அறிமுகம் செய்த இயக்குனர் மிஸ்கினுக்கு நன்றி. 


             "இப்புத்தகத்தை திரைப்படத்தில் காட்டியது திணிப்பு".."இது வெறும் intellectual muscle flexing" என்கிற ரீதியில் சில ஒலக விமர்சகர்கள் சொல்லலாம்.என்னை பொறுத்தளவில் மிஸ்கின் தனது ஒவ்வொரு படத்திலும் இது போல பல புத்தகங்களை அறிமுக செய்ய வேண்டும்.ஒலக விமர்சகர்கள் திண்ணைக்கிழவி போல எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.
            ஏனய்யா ஒலக விமர்சகர்களே நீங்கள் இதுபோல ஏதேனும் உருப்படியாக புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்ததுண்டா?