Showing posts with label மனப்பிறழ்வு. Show all posts
Showing posts with label மனப்பிறழ்வு. Show all posts

Saturday, 15 July 2017

Strangers on a Train-Patricia Highsmith

"உனக்கு இடையூறா இருக்கும் மனைவியை நான் கொல்றேன்.எனக்கு இடையூறா இருக்கும் எனது தந்தையை நீ கொன்றுவிடு!"
                   என்று ப்ரூனோ (Bruno) கய் ஹெய்ன்ஸ்(Guy Haynes) -இடம் கேட்பதுதான் கதையின்  மையக்கரு என்று பலர் எழுதியுள்ளதை பார்த்தேன்.
கதையின் மையக்கரு அதுவல்ல!இது பல சிக்கலான முடிச்சுகளை கொண்டது.உதாரணமாக Guy க்கும் ப்ரூனோவுக்குமான உறவு ஒருபாலின சேர்க்கையின் கீற்றை கொண்டது.அப்போதிருந்த சமூக கட்டுப்பாடுகளால் (திரைப்படத்தில் production code கட்டுப்பாட்டால்)கதையில் அது விரிவாக சொல்லப்படவில்லை என்றாலும் அதை புரிந்துகொள்ளமுடிகிறது!

               கய் ஒரு வளர்ந்துவரும் ஆர்கிடெக்ட்.பால்மைரா ப்ராஜெக்ட், சிறுநகர ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் ப்ராஜெக்ட் என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருபவன்!நல்ல திறமைசாலி!மனைவி மிரியம் வேறு சில ஆண்களோடு உறவுகொன்டதை தெரிந்துகொண்டு விவாகரத்து பெற நினைக்கிறான்.இப்போது அவள் கர்ப்பம்!காரணம் அவனல்ல!
               மேலும் மிரியம் தனது கரியருக்கு இடையூறாகவும், விவாகரத்து பெறுவதில் பெரும் தடைக்கல்லாகவும் இருப்பதாகவும் Guy நினைக்கிறான்.அதை ரயிலில் தன்னுடன் வலிந்து பேசிக்கொண்டிருக்கும் ப்ரூனோவிடம் எதேர்ச்சையாக சொல்கிறான்.அப்போதுதான் முதல் வரியில் இருக்கும் வரிகளை ப்ரூனோ சொல்கிறான்.
              இப்ப ப்ரூனோ அவளைக்கொன்றும் விடுகிறான்.இப்போது மொத்த  நெருக்கடியும் கய்யின் மேல்!இப்போது அவன் மிரியம் கொலை தொடர்பாக  தன்னிடம் விசாரிக்கும் போலீசிடம்(முதல் சந்தேகத்திற்குரிய நபர் கைதான்) ப்ரூனோவை காட்டிக்கொடுத்திருக்கலாம்!"நான் எதேர்ச்சையாகத்தான் மிரியம் பற்றி சொன்னேன்.அதை ப்ரூனோ தீவிரமாக எடுத்துக்கொண்டு அவளைக்கொன்றுவிட்டான் பாவி" என்று தன்னை புனிதனாக்கிக்கொண்டு ப்ரூனோவை சிக்க வைத்திருந்தாலேபோதும்!
             அவன் நிம்மதியாக(!!??) வாழ்வை தொடர்ந்திருக்க முடியும்!தான் விரும்பும் ஆன்(Anne) னோடு சந்தோசமாக வாழ்திருக்கலாம்!ஆனால் அவன் அதை செய்யவில்லை!காரணம் ப்ரூனோ செய்த கொலையில் தனக்கும் பங்கிருப்பதாகவும் ப்ரூனோ தண்டனைக்குறியவன் என்றால் தானும் அவ்வாறே என்றும் எண்ணுகிறான்!

             அதனால் இன்னும் நெருக்கடிக்கு உள்ளாகிறான்.இப்போது அவன் ப்ரூனோவின் தந்தையை கொல்லவேண்டும்!ப்ரூனோ விடுவதாக இல்லை.சுத்திசுத்தி வருகிறான்!கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறான் கை.ஆன் அதை பற்றி கேக்கும்போது "வேலைப்பளு!"என்று சமாளிக்கிறான் கய்.
                தன் வீட்டின் ப்ளான்,தெருவின் ப்ளான்,எந்த நேரத்தில் வீட்டில் யார் இருப்பார்கள் என்ற அட்டவணை,தந்தையை கொன்றுவிட்டு எந்தவழியே குதித்து வெளியேறி ரயிலேற வேண்டும் என்பதுவரை மிகத்துல்லியமாக  வரைபடங்களோடு கைக்கு ப்ரூனோ கடிதம் அனுப்புகிறான்.திரும்பத்திரும்ப அதைப்பார்த்து பார்த்து கய்க்கே ப்ரூனோவின் வீட்டில் பலகாலம் வாழ்ந்துவிட்ட உணர்வு!தந்தையை கொல்ல செல்கிறான்!"ஏற்கெனவே பலமுறை ப்ரூனோவின் தந்தையை கொன்றதுபோலவும் இது அதில் ஒரு தடவை" என்பதாக அவனுக்கு தோன்றுகிறது.சுடுகிறான்.தப்புகிறான்.ப்ரூனோ பிளான்படி அல்லாது வேறுவழியில்!காட்டுசெடிகள் கிழிபட்டு மண்டையில் அடிபட்டு வீடு வந்து சேர்கிறான்.
               ஆன் காயம் பற்றி கேக்கும்போது சமாளிக்கிறான்.ப்ரூனோவின் தந்தையின் ஆஸ்தான டிடெக்டிவ் ஜெரார்ட் துப்பறிய ஆரம்பிக்கிறார்!போலீசு மிரியம்&ப்ரூனோவின் தந்தை இருவரையும் கொன்றது யார் என்பது தெரியவில்லை என்று ஃப்ரீயாவிட ஜெரார்டோ மிகத்தீவிரமாக துப்பறிகிறார்
         ஜெரார்ட் துப்பரிவதை பிறகு பார்ப்போம்.இப்போது மிரியத்தை ப்ரூனோவும்,ப்ரூனோவின் தந்தையை கையும் கொன்றாகிவிட்டது!போலீசும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை!இப்ப இவர்கள் இருவரும் ஜாலியாக வாழ்க்கையை வாழ்ந்திருப்பார்களே? என்று கேட்டால் இல்லை!
Patricia Highsmith

         ப்ரூனோவுக்கு என்ன பிரச்சனை?தந்தை மேல போயாச்சு!ஜாலியா சொத்துக்களை குடித்தே அழிக்க தடைகள் ஏதுமில்லை(அவனது தாய் இவைகளை கண்டுகொள்வதில்லை) மஜாவா  இருந்துட்டு போகலாமே!ஆனால் அவனால் அப்படி இருக்கமுடியவில்லை!Guy மீதான ஒரு ஈர்ப்பு(ஒருபாலின ஈர்ப்பாகவே நாம் இதை புரிந்துகொள்ள வேண்டும்) அதையும்தாண்டி Guy தனிப்பட்ட வாழ்விலும்,கரியரிலும்,பொதுவாக சமூகத்திலும் மிகவும் மதிக்கப்படும் ஒரு நபராக இருப்பதை ப்ரூனோ பார்க்கிறான்.
               ப்ரூனோவால்  எதுவாக இருக்கவே முடியாதோ அதுவாகவெல்லாம் கய் இருப்பதே அவன் மீதான ஈர்ப்புக்கு மற்றுமொரு காரணம்.திரைப்படத்தில்கூட
"Oh,i certainly admire people who do things";
" You know it must be pretty exciting to be so important"
என்று கய்யிடம் ப்ரூனோ சொல்வதாக வசனம் வரும்.
                 ப்ரூனோவுக்கு தனிப்பட்ட தொழிலோ வேலையோ இல்லை!அவன் ஒரு ப்ளேபாய்!குடி குடி குடி&சாகசங்கள்(கண்களை கட்டிக்கொண்டு காரை நூறு மைல் வேகத்தில் செலுத்தியிருக்கிறான்) தான்!எந்தளவுக்கு என்றால் குடித்தால்தான் அவன் ஸ்டெடியா இருப்பான் எனுமளவு குடி!தந்தை இருந்தவரையில் பணம் கொடுக்காமல் மிக கண்டிப்பாக இருந்தார்!
                  Guyன் மனநிலை இந்தளவு எளிதாக விளக்கிவிடக்கூடியதாக இல்லை!முதலில் ப்ரூனோவை போலீசிடம் காட்டிக்கொடுக்காமல் இருந்தது,பிறகு அவனின் நெருக்கடிக்கு பணிந்து தந்தையை கொல்வது,பிறகும் விடாமல் ப்ரூனோ தன்னைச்சுற்றியே வரும்போது எரிச்சலோடு ஒருவித ஈர்ப்பையும் உணர்வது,மனைவி ஆனிடம் ப்ரூனோ பற்றி சொல்லும்போதுகூட அவன் தடுமாறுகிறான்.ஒவ்வொருமுறையும் ஒவ்வொரு கதை சொல்கிறான்!ப்ரூனோகடலில் வீழ்ந்து மரித்தபோது "எங்கே என் சகோதரன்" என்கிறான்!
               ப்ரூனோவின் தந்தையை கொன்ற சிலகாலம்வரையில்  பெரிதாக கவலைப்படாத கய் போகப்போக தான் இரு நபர்களாக உடைபட்டுநிற்பதை உணருகிறான்.
ஒருவன் கொலைகாரன்
இன்னொருவன் ஆன்-ஐ திருமணம் முடிக்கவிருக்கும் ஒரு ஆர்கிடெக்ட்.
இந்தப்பிளவு போகப்போக அதிர்கரித்துக்கொண்டே போவதை கய் உணர்கிறான்.
               ஜெரார்ட் ப்ரூனோவுக்கும் கய்க்குமான ரயில்சிநேகத்தை கண்டுபிடிக்கிறார்!போலீசிடம் அதைப்பற்றி சொல்கிறார்(கொலைகளை பரிமாறிக்கொண்டது பற்றி).போலீசு "நீங்கள் பதினைந்து வருடங்களுக்கு முன்பே ரிட்டையர் ஆகியிருக்க வேண்டியவர்!ஓய்வெடுங்கள்" என்று பொறுப்பை தட்டிக்கழிக்கிறது.
             ஜெரார்டுக்கு தெரியும்!சட்டம் இருவரையும் தண்டிக்காவிடினும் அவர்களது குற்ற உணர்ச்சியே அவர்களை தண்டிக்கும் என நம்புகிறார்!உறுமீன் வரும்வரையில் காத்திருக்கிறார்!வழக்கை விசாரித்து முடித்ததாக போலியாக தகவல் பரப்புகிறார்!
           இந்த நேரத்தில் ப்ரூனோ சொகுசு படகிலிருந்து கடலில் குதித்து இறக்கிறான்!
           ஏற்கெனவே குற்ற உணர்ச்சியால் இரண்டாக பிளவுற்றிருந்த கய் இப்போது மேலும்  அதிக நெருக்கடிக்கு ஆளாகிறான்.இருகொலைகளின் பாரத்தையும் தான் தனியொருவனாக சுமக்கவேண்டிய கட்டாயம் மூச்சு திணற வைப்பதை உணர்கிறான்.
          இந்த பாரத்தை இந்த குற்ற உணர்ச்சியை யாரிடமாவது சொல்வதன்மூலம் குறைத்துவிட எத்தனித்து மிரியம் கொலையுண்டதால் அதிகம் பாதிக்கப்பட்ட அதிகவருத்தத்தில் இருக்கும் நபர் யாரென யோசிக்கும்போது அதிர்கிறான்!மிரியத்தின் சகோதரன் அதைப்பற்றி எந்தவித எண்ணங்களுமே இல்லாதவனாக இருக்கிறான்.மிரியத்தின் தாயும் அவ்வாறே!மிரியத்தை திருமணம் செய்வதாக இருந்த ஓவன்(Owen) நினைவுக்கு வருகிறான்.அவனின் பிள்ளையத்தான் மிரியம் சுமந்துகொண்டிருந்தாள்! 

            ஓவனை தனி ஓட்டல் அறைக்கு அழைத்து அனைத்தையும் சொல்கிறான்!அனைத்தையும்!இப்படி அனைத்து  உண்மைகளையும் யாரிடமாவது சொல்லிவிட்டால் தனது மனப்பாரம் அகன்றுவிடும் என்பது வெறும் கற்பனை என்பதை உணர்கிறான்.அனைத்தையும் சொன்னபின்பும் கடுமையான குற்ற உணர்ச்சியை உணர்கிறான்.
            தான் சொன்ன எதையுமே தான் நினைத்த ரியாக்சனோடு உள்வாங்காது indifferent ஆக இருக்கும் ஓவனை பார்த்து கத்துகிறான்!அப்போதும் ஓவன் அசையாது ஸ்காட்ச் அடித்துக்கொண்டிருக்கிறான்.சமூகம்-சட்டம்-தனி மனிதன் போன்ற விஷயங்களை பற்றி லெக்சர் கொடுக்கிறான் கய்.ஓவன் எதையும் கண்டுகொள்ளவில்லை!
       ஆனால் அனைத்தையும் சரியாக வைக்கப்படாத தொலைபேசி(இது ஜெரார்டின் திட்டம்) மூலம் ஜெரார்ட் கேட்டுவிட்டு அறைக்கதவை தட்டியவுடன் திறந்து "என்னை கைது செய்யுங்கள்" என்கிறான் கய்! 


              இதில் முக்கியமாக எழுப்பப்படும் கேள்வி ஒருவரை கொலை செய்தால்; அந்த நபரின் இழப்பை யாருமே பொருட்படுத்தவில்லை என்றால் அந்தக்கொலை குற்றமாகாதா?இதில் மிரியம் கொலையுண்டதாலோ ப்ரூனோவின் தந்தை கொலையுண்டதாலோ யாரும் எதையும் இழக்கவில்லை!அதை யாருமே பொருட்படுத்தவில்லை என்றே சொல்லவேண்டும்!இருந்தாலும் கய்யின் மனதில் ஆட்டிப்படைக்கும் குற்ற உணர்ச்சி அவனை சரணடைய வைக்கிறது! 

                  இப்போது இதை மையமாக வைத்து ஹிச்காக் எடுத்த படத்தைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் இந்த நாவலின் மையக்கருவாக பலராலும் கருதப்படும் நான் மேற்குறிப்பிட்ட அந்த இரண்டுவரிகளை மையமாக வைத்தே எடுக்கப்பட்டிருக்கும்!

            நாவல் அகவயமானது என்றால் ஹிச்காக்கின் படம் புறவயமானது!நாவலில்  கய் ஒரு ஆர்கிடெக்ட்!சினிமாவில் டென்னிஸ் வீரன்.அந்த டென்னிஸ் மேட்சையே வைத்து நகம் கடிக்கும் த்ரில்லை கொடுத்திருப்பார் ஹிச்காக்!சினிமாவில் கய் நல்லவன்-ப்ரூனோ கெட்டவன்!
     நாவலில் அந்தவேறுபாடு போகப்போக அழிந்துவிடும்!கய் நாவலில் கொல்கிறான்.சினிமாவில் கொல்வதில்லை!சினிமா ஒரு பரபரப்பான சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்கவைக்கும் டிபிகல் ஹிச்காக் படம்!நாவலோ முழுக்கமுழுக்க உளவியல் சார்ந்தது!அதற்காக படம் மோசமானது என்று சொல்லவில்லை.standalone திரைப்படமாக அது ஹிச்காக்கின் மற்றுமொரு மகுடம்!

          பல intense ஆனா தருணங்கள் நாவலில் உண்டு.உதாரணமாக ப்ரூனோவுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு தனது உடைகளை அனைத்தையும் கிழித்தெறிந்துவிட்டு மெத்தையில் மயங்கி சரிவதாகவும் மருத்துவர் ஊசி போட்ட உடனேயே அந்த asphyxiating உணர்வு நீங்கியதாகவும் வரும்!கய் ப்ரூனோவின் தந்தையை கொன்றபின் எந்த குற்ற உணர்வுமே இல்லாததைக்கண்டு தன்னைத்தானே வியக்கிறான்.பிறகு அவனே அந்த குற்ற உணர்வின் பாரத்தால் மூச்சுத்திணற வைக்கும் அந்த பிடியால் வீழ்கிறான்!

Tuesday, 13 June 2017

ஆளவந்தான் (2001)


 முன்பு ராமன் ராகவ் பற்றிய பதிவில் குறிப்பிட்டதை மேற்கோளுடன் துவக்கலாம்.
ஆளவந்தான்  நந்து  கேரக்டர்  உங்களுக்கு  நினைவில்  இருக்கலாம் ."பூ  விழாம  தல  விழுந்திருந்தா  நீ  இந்தப்பக்கம்  நா  அந்தப்பக்கம்"  என்று  நந்து  விஜயிடம்  சொல்வதாக  ஒரு  வசனம்  இருக்கும்.நந்து  சித்தியிடம்  வளராமல்  மாமாவிடம்  வளர்ந்திருந்தாலும்  இதே  மாதிரிதான்  ஆகியிருப்பார்.The  inherent desire to sin  என்பது  சிறுவயதிலேயே   நந்துவின்  மனதில்  இருந்த  விஷயம்.அதை  சித்தி  ஊதி  பெருக்கிவிட்டாள்  என்று  வேண்டுமானால்  சொல்லலாம்.

படம் ஆகா!என்றோ சூரமொக்கை என்றோ பைனரியில் மேம்போக்காக கடந்துபோக விரும்பவில்லை.படம் பற்றிய எனது கருத்துக்கள் எண்ணங்களை இங்கே பதிவு செய்கிறேன்!pros and cons என்றெல்லாம் தனித்தனியாக பத்தாப்பு பிள்ளை எக்ஸாம் எழுதுவதுபோல எழுதாமல் random ஆக சில விஷயங்கள்.
.
ஆளவந்தான் படம் பற்றிய விளம்பரங்களை மறக்க முடியாது!அப்போதெல்லாம் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு வெப்சைட் உருவாக்குவார்கள்.படம் வெளிவந்தும் ஒரு நான்கைந்து மாதங்கள் உயிரோடு இருக்கும்.பிறகு டொமைன் நேமுக்கு காசு கட்டாமல் விட்டுவிடுவார்கள்.அதுபோல நான் பார்த்தது ஏப்ரல் 2001 ல்.சைட் dark theme பின்னணியில் Cast&Crew,Synopsis என்றெல்லாம் தமிழ் சினிமா கண்டிராத புதுப்புது வார்த்தைகளை அதில் காண முடிந்தது!

         பரபரப்பாக பேசப்பட்ட(!!??) கமல் நிர்வாணமாக இருக்கும் போட்டோ ,ரியாஸ் கான் இருண்ட பின்னணியில் எடுக்கப்பட்ட போட்டோ என்று அப்போது வந்த மற்ற படங்களின் வெப்சைட்டுகளை காட்டிலும் முற்றிலும் வேறாக இது இருந்தது.(சமகால ரிஷிtheமூவி.காம் பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை :D )

        பிறகு டிரைலர்!டிரைலரின் பின்னணியில் கமல் அமெரிக்கன் ஆங்கில  அக்சென்டில் deep bass  ல் வாய்ஸ் ஓவர் போல பேசியிருந்தார்!உண்மையிலேயே மிரட்டலாக இருந்தது என்பதை மறுக்க முடியாது!இப்போது அந்தமாதிரி பாணி என்பது தேய்வழக்காகி போய்விட்டதையும் சொல்லவேண்டும்(குறிப்பாக இங்குலீஸ் பண்டிட்டு கவுதம் மேனன் அதை தேவைக்கும் அதிகமாய் பயன்படுத்தி கடுப்பேற்றிவிட்டார்).
        விஜய் கேரகடருக்காக கமல் ராணுவத்தில் பயிற்சி பெற்ற வீடியோவெல்லாம் வந்தது!"அடியாத்தீ என் மகன் என்னமா நடிச்சிருக்கான்" என்று உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டார் காந்திமதி.
         அப்புறம்  விஜயும் நந்துவும் arm wrestle பண்ணும் அந்த அதகள ஸ்டில் பெரிய்ய்ய பேனராக மவுன்ட் ரோடில் வைத்திருந்தார்கள்!அருகில் பார்த்தாலே பரவசம் பேனர் பரிதாமாக தெரிந்ததையும் சொல்லவேண்டும்!

         காஷ்மீர் காட்சிகளை இங்கேயே செயற்கை  செட் போட்டு பனியின் பின்னணியில் காட்சி எடுத்ததாக பரப்பரப்பான பேச்சிருந்தது(ஒப்பனிங் காட்சி).25 கோடி செலவானதாக அங்கலாய்த்தார்கள்.ஆனால் 1997 ல் வந்த ரட்சகனுக்கே அவ்வளவு செலவானது என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
         இப்ப ஆளவந்தான் படம் என்பதே முழுக்கமுழுக்க நந்து கேரக்டரை சுற்றியே பின்னப்பட்டது. குணா பட குணாவுக்கும் நந்துவுக்கும் ஒற்றுமை என்று பார்த்தால் பெண்!வேற்றுமை என்று பார்த்தால் அதே பெண்!
        குணாவுக்கு அபிராமி வேண்டும்!அபிராமி வந்தால் எல்லாம் மாறிடும்!உலகமே utopia வாகிவிடும்!நந்துவுக்கு உலகில் உள்ள பெண்கள் எல்லாருமே அவன் சித்தியை நினைவுபடுத்துபவர்கள்(தாய் தவிர்த்து).அவர்களை கொல்வதே உலகை காக்கும் அல்லது குறிப்பாக  தனது சகோதரனை காக்கும்  வழி.பெண்களை (misogynist) அடியோடு வெறுப்பவன்.

         நந்து நெனச்சிருந்தா கவிஞனாகவோ விஞ்ஞானியாவோ வந்திருக்கலாம் என்று டாக்டர் சொல்வதாக காட்சி வரும்.முன்பு குறிப்பிட்டது போல அவன் சிறுவயது குரூரங்களிளிருந்து வெளியே வந்திருக்கலாம்!அவன் வெளியே வர விரும்பவில்லை!தன்னைத்தானே victimise  செய்துகொண்டான்.

       அப்படி தன்னை பாதிகப்பட்டவனாகவே காட்டிக்கொள்வதன் மூலம் தனது சகோதரனுக்கு தன தியாகத்தின் தீவிரத்தை விளங்கவைத்துக்கொண்டே இருக்கமுடியும் என நம்புகிறான்.
          குணா உள்ளூர ஒரு பயணம் என்றால் ஆளவந்தான் வெளிநோக்கிய பயணமாக கொள்ளலாம்.இதில்ஒருபிரச்சனை.உளவியல் ரீதியாக நந்துவை சுற்றியே கதையை நகர்த்தாமல் படத்தைதிசைமாற்றியது!கமல் படமாக கொண்டுபோகாமல் நடுவில் ரசினி படமாக்க முயன்றது.உதாரணமாக நந்து என்பீல்ட் பைக் துவங்கி லாரி வரை சகஜமாக ஓட்டுவது,சாகசங்கள் செய்வது,மேலே பறந்துகொண்டிருக்கும்(Gold winner)பலூனில் பறந்துபோய் விழுவது(இதேமாதிரி காட்சியை லிங்கா படத்தில் ரசினிக்கு வைத்தபோதே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன) இதுமாதிரி திசை திருப்பியது எடுபடவில்லை என்றே சொல்லவேண்டும்!

         அதென்ன ரசினி படம்?அப்போ கமல் படம் என்று சொல்வதற்கான காட்சிகள் உண்டா? என்று கேட்டால் உண்டு!மனீஷாவுடன் நந்து உரையாடும் அந்த ஹோட்டல் அறை காட்சியை சொல்லலாம்!கிளுகிளுப்பாக ஆரம்பித்து மனீஷா திறந்த பாத்ரூமில் சிறுநீர் கழிப்பதாக fetish ஆக மாறும் அந்தக்காட்சிக்கு இணையா இன்றுவரை தமிழில் வரவில்லை!
              அதுவரை வந்த தமிழ்படங்களில் மனநலம் பாதிக்கப்பதேன்றால் மெண்டல் அல்லது நெற்றிபொட்டிற்கு அருகே விரலை வைத்து சுத்தும் சைகை அதிகபட்சம் அம்னீசியா என்பார்கள்!இதில் வித்தியாசமான நோய் .
He is a schizophrenic with paranoid illusions.இதன்பின்னர் வந்த கஜினி போன்ற படங்களில் பல்வேறு புது நோய்களை மேற்கோள் காட்டியிருப்பார்கள்!
மேலும் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகளை பார்த்துத்தான் டரண்டினோ Kill bill படத்தில் அதுமாதிரி வைத்தாரா?என்ற சர்ச்சைக்குள் செல்ல விரும்பவில்லை!ஆனால் இப்படத்தில் வரும் 2D அனிமேஷன் காட்சிகள் ரணகளம்!

           இப்ப மனநல காப்பகத்தில் நந்துவும் சுல்தான்(ரியாஸ் கான்) சம்மந்தப்பட்ட காட்சிகள் பற்றி சொல்லும்போது கண்டிப்பா Twelve Monkeys(1995) படத்தை குறிப்பிட்டாக வேண்டும்.மனநல காப்பகத்தில் இருக்கும் பிராட் பிட்.டைம் டிராவலில் தவறாக அங்கு சிக்கிக்கொள்ளும் ப்ரூஸ் வில்லிஸ்.ப்ரூஸ் அதிகமாக பேசாமல் அமைதியாக இருப்பார்.பிராட் பிட்டோ அவரிடம் தொணதொணவென்று பேசிக்கொண்டும் குதித்துக்கொண்டும் சேட்டைகள் செய்துகொண்டும் இருப்பார்!அதை அப்படியே இங்கே பயன்படுத்தியிருப்பார்.சுல்தான் பிராட் பிட் போல சேஷ்டைகள் செய்வதும் நந்து அதிகம் பேசாது அமைதியாக இருப்பதும்!

     
மேலும் நந்து கேரக்டர் என்பது Bane ன் சாயலும் கொண்டது!
இன்னொரு பிரச்சனை இரட்டை வேடம்!முதலில் என்எஸ்ஜி வீரனாக விஜய் கேரக்டரில் நடித்த கமல் பிறகு தினம் நாற்பது முட்டையின்  வெள்ளைக்கருவெல்லாம் தின்று பயங்கரமாக உடலை ஏற்றி நடித்திருப்பார்.ஆனால் துவக்கத்தில் வரும் காஷ்மீர் மிஷன் காட்சியில் பேருக்குத்தான் விஜய்!உடலளவில் நந்து!தடியான ஒட்டுமீசை மொட்டைத்தலையை மறைக்கும் குளிர்கால தொப்பி என்று ஒருமாதிரி சமாளித்திருப்பார்கள்(இதேமாதிரி உத்தமவில்லனில் மீசையில்லாதும் பாபநாசத்தில் விஜய் போலவே தடியான "ஒட்டாத" ஒட்டுமீசை வைத்தும் நடித்திருப்பார்).அதேபோல இரு கமல்களும் மோதும் அந்த மொட்டைமாடி காட்சியிலும் உடையளவில்  விஜய் -உடலளவில் நந்து என்றுதான் இருக்கும்(அங்கே மொட்டைத்தலையை மறைக்க புல்லட் ப்ரூப் ஹெல்மட்!).இவை படத்தில் கொஞ்சம் தனித்து தெரிந்தன.தொழில்நுட்ப குறைபாட்டால் வேறு வழியில்லாமல் அப்படிஎடுத்திருப்பதாகநினைக்கிறேன்.
ஒட்டுமீசை!மொட்டையை மறைக்க தொப்பி!

             அப்புறம் சிறுவயதில் இருந்தே நந்து மனநல காப்பகத்தில்தான் வளர்ந்தவன்.தொடர்ச்சியாக schizophrenia வுக்கு மருந்துகள் சாப்பிட்டுவன்தவர் திடீரென்று காப்பகத்தில் இருந்து தப்பித்ததும் வெறும் போதை ஊசியை போட்டுக்கொண்டு(அது எங்க விக்குது என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்காம்!)  மாத்திரைகள் உண்டாக்கும் மிகக்கடுமையான  withdrawal effect ஐ கடந்து சென்றார் என்பது பக்கா ரசினி ஸ்டைல் :D

            கடுமையான schizoprenia இருந்தும் பட இறுதியில் "அந்த பொண்ணுகிட்ட சாரி சொல்லிடு"ன்னு விஜயிடம்  சொல்லும் காட்சி அபத்தத்தின் உச்சம்!இப்படியா நந்து கேரக்டரை பில்டப் செய்து ஒரேடியா போட்டு உடைப்பார்கள்?இது டிபிகல் தமிழ் சினிமா பாணி!அதாவது பட துவக்கத்தில் ஒரு கேரக்டருக்கு செமத்திய பில்டப் கொடுப்பதும் இறுதியில் திருந்தி வருந்துவதாகவோ(தனி ஒருவன் அரவிந்த்சாமி!) மன்னிப்பு கேட்பதாகவோ காட்டி அந்த கேரக்டரை மொத்தமா சாகடிப்பது! அதிலும் அந்த கேஸ் சிலிண்டர்களை நந்து பிளக்கும் காட்சி இன்னொரு அபத்தம்!


 
           மனநல காப்பகத்தில் இருபத்தஞ்சு வருஷம் இருந்தவர் தொடர்ந்து மனநல மருந்துகளை(கண்டிப்பா அதில் muscle relaxant இருக்கும்) உட்கொண்டவர் இப்படி அதீத பலசாலியாக மாறுவது எப்படி என்பது யாருக்குமே புரியவில்லை(நந்து ஒரு battalion க்கு சமம் என்று ஒரு வசனம் வேறு வருகிறது).அவ்வளவு psyche மருந்துகளை சாப்பிட்டவன் ஒரு கிளாசைக்கூட  இறுகப்பிடிக்க கூட முடியாது என்பதுதான் நிஜம்!இங்கும் ரசினி ஸ்டைல் போல!
                       மேலும் மனநல பிறழ்வு கதாபாத்திரங்கள் அவ்வப்போது hallucinate ஆகும்!அதை ஒவ்வொரு இயக்குனரும் ஒவ்வொரு ஸ்டைலில் காட்டியிருப்பார்கள்!உதாரணமாக The Dark Knight படத்தில் ஜோக்கர் ஹாலுசிநேட் ஆகும் அந்த கார் காட்சி ரொம்ப subtle ஆ இருக்கும்.
Joker's hallucination
இப்படத்தில் நந்துவின் hallucination கொஞ்சம் flashy ஆக இருக்கும்!
நந்துவின் hallucination

          வணிக சினிமா என்ற ஒற்றை வார்த்தையில் மேற்கண்ட குறைகளை மொத்தமா மூடி மறைத்துவிடலாம்தான்!ஆனாலும் நந்து என்ற அற்புதமான கேரக்டரை மிக மோசமாக பயன்படுத்திக்கொண்டதை விமர்சிக்காமல் இருக்கமுடியாது.
          Shankar-Ehsaan-Loy ன் இசை என்றாலே bass heavy யாத்தான் இருக்கும்(டான்-2,Zingadi na milegi dobara,விஸ்வரூபம்..! etc..etc..) இப்பட பாடல்கள் இன்றும் அபிமானதாக உள்ளன.பின்னணி இசை மறைந்த இசையமைப்பாளர் மகேஷ்.பாடலின் bass hevy தன்மை பின்னணி இசையில் இல்லாமல் போனது!

          திசைமாறாமல் முழுக்கமுழுக்க  நந்துவின் உளவியல் ரீதியான  பயணத்தை மட்டும் தொடர்ந்திருந்தால் படம் அற்புதமாக வந்திருக்கும் என்பது என் எண்ணம்!இருந்தாலும் இன்றும் படத்தை என்னால் ரசிக்க முடிவதற்கு காரணம் நந்து!