Showing posts with label மிஸ்கின். Show all posts
Showing posts with label மிஸ்கின். Show all posts

Sunday, 16 December 2018

ராட்சசன்,prosthetic மற்றும் தேஜாவூ


   கச்சிதமான திரைக்கதை உள்ள முதல் தமிழ் படம் என்றெல்லாம் சில ஒலக விமர்சகர்கள் பில்டப் கொடுத்திருந்தது படம் பார்ப்பதை மேலும் தள்ளிப்போட வைத்தது.
              படம் நெடுக "இத எங்கையோ பாத்திருக்கமே" மைன்ட் வாய்ஸ் ஓடிட்டே இருந்தது.
உதாரணமா பட துவக்கத்தில் நாயகனுக்கு போலீசில் சேர பெரிதாக விருப்பமில்லை.அவனுக்கு இயக்குனர் ஆகவே விருப்பம்.அவனது மாமாவின் சிபாரிசில் எஸ்ஐ ஆகிறான்.முதல் நாள் தயங்கியபடி ஸ்டேசனுக்குள் நுழைந்தால் அங்கே ஒரு கைதியை மேலதிகாரி போட்டு துவைத்துக்கொண்டிருக்கிறார்...இவன் பயந்தபடியே பார்க்கிறான்..etc..etc..அப்புறம் ஒரு தொடர்கொலை வழக்கு பற்றிய  விசாரணை குழுவில் சேர்க்கப்படுகிறார்...நிற்க..இதெல்லாம் அஞ்சாதே படமா?ராட்சசன் படமா?என்ற முதல் குழப்பம்.
அஞ்சாதே!


       அப்புறம் அந்த பிரேத பரிசோதனை டாக்டர் நிழல்கள் ரவி பண்ணியிருக்கார்.அப்புறம் அங்கங்க மர்மமான பெட்டிகள் கண்டெடுக்கப்படுது ..நிற்க....என்னவோ யுத்தம் செய் மாதிரி..யூதாஸ்(ஜெயப்பிரகாஷ்) கேரக்டர் மாதிரி. ஆனா நிழல்கள் ரவியினது யூதாஸ் போல   metaphysical  தன்மைகள் எதுவும்  இல்லாத  கேரக்டர் !
                 இதெல்லாம் ஒரு மேட்டரா?இயக்குனர் மிஸ்கின் ரசிகனா இருந்திருக்க கூடும் என்று விட்டுட்டேன்.அப்புறம் அந்த முக்கிய காட்சி.அந்த கணக்கு வாத்தி அந்த மாணவியை மட்டும் இருக்க சொல்லிட்டு மத்தவங்களை அனுப்பிவிட்டு சில்மிஷம் செய்துகொண்டிருக்கும் அந்த வேளையில் ..அதெப்படி சொல்ல..பள்ளியில் மேஜிக் ஷோ நடப்பதாக இரண்டும் மாறி மாறி காட்டப்படுது!ஏன்?
பெண் வேடமிட்ட ஆண்!
         மேஜிக்ல முக்கியமான அம்சம் பார்வையாளனின் கவனத்தை ஒரு பொருள்/இடத்தில் குவிய செய்துவிட்டு அந்த மைக்ரோ விநாடிப்பொழுதில் மேஜிக் நிபுணர் வேறொரு வித்தையை செய்து தயாராக இருப்பார்!தயாரானதும் மக்களின் பார்வையை அந்த தயார் செய்யப்பட்ட இடம்/பொருளின் மீது கவனத்தை குவிய செய்வார்.அந்த மாதிரி இந்த இரண்டு காட்சிகள்.இங்கே இயக்குனர் மக்களின் பார்வை நிச்சயமாக படும் என்று கருதும் அந்த கணக்கு வாத்தியின் சேட்டை..அந்த நேரத்தில் பள்ளி மேஜிக் ஷோவில் அந்த வினோத தோற்றத்தில் மேஜிக் செய்துகொண்டிருக்கும் அந்த நபர்.
திசை திருப்பலுக்கு இக்காட்சி!

          இயக்குனர் நிச்சயமாக நம்பியது மக்களின் கவனம் அந்த வினோத தோற்ற நபர் மீது விழாது என்பதே!ஏனெனில் அந்த மாணவிக்கு ஒன்னும் ஆகிட கூடாதே!அந்த நேரத்தில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்து விடாதா?நாயகன் கதவை உடைத்து வந்துவிட மாட்டானா?என்று தவித்துக்கொண்டிருப்பர். அப்ப போய் "என்னாதிது?வினோதமா ஒரு நபர் மேஜிக் பண்ணிட்டு இருக்குது?" என்ற சந்தேகமே எழுந்திருக்காது.

    ஆனா நான் அதை கவனிக்க நேர்ந்தது.கண்டிப்பாக அதை வேறு சிலரும் கவனித்திருக்க கூடும் என்றாலும் அவர்களுக்கு இங்க மறுபடியும் ஒரு தேஜாவூ வந்திருக்காது.இங்கே strike ஆனது ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதிய அலெக்ஸ் க்ராஸ் சீரிஸ்.அலெக்ஸ் க்ராஸ் எனும் ஆப்ரிக்க அமெரிக்க டிடெக்டிவ் -தன் தாய் மற்றும் மகளோடு வசித்துவருகிறார்.மனைவி இறந்து பல வருடங்கள் ஆனாலும் மறுமணம் புரியாதவர்.மகள் படிக்கும் பள்ளியின் ஆசிரியை மீது அவருக்கொரு ரொமாண்டிக் பந்தம் ஏற்படுது...நிப்பாட்டு.இங்கயும் நாயகனுக்கு தன் மகள் இல்லாட்டாலும் மாமா பொண்ணு படிக்கும் அந்த பள்ளியின் ஆசிரியை மீது லவ்வு.சரி இதை விட்டுடுவோம்.முக்கியமான மேட்டருக்கு வருவோம்.
        முன்ன சொன்ன அந்த வினோத உருவம் பார்த்ததும் எனக்கு Along came a spider(அலெக்ஸ் க்ராஸ் வரிசையில் முதல் நாவல்.)திரைப்படமாக மார்கன் ப்ரீமேன் நடித்து வந்தது.அதுல கேரி சோனிஜி என்று வினோத உருவம் கொண்ட ஒரு ஆசிரியர்.
Gary Soneji

பின்னர்தான் தெரியுது.அந்த நபரின் உண்மை பெயரும் அதுவல்ல.தோற்றமும் உண்மையல்ல.செனேடரின் மகள் படிக்கும் பள்ளியில் தீவிர கண்காணிப்பில் அவள் இருக்கும்போதே அவளை பள்ளியில் இருந்து கடத்தி சென்றுவிடுவான்.

மேக்கப் கலைத்த கேரி சோனிஜி  &கிறிஸ்டபர் 


                   அதன் பின் அந்தக்கதை வேறெங்கோ திசைமாறி போய்டும் என்றாலும் இப்படம் அதை நினைவுபடுத்தியது.
அப்புறம் படத்தின் பிற்பகுதியில் கிறிஸ்டபர் பெண் வேடம் கலைத்துவிட்டு ஆணாகவே வரும் காட்சிகள்  பலவற்றில் படத்தில்   வியாதியால் பாதிப்புற்ற லிங்கேசனை நினைவூட்டுகிறார்!
யாரு லிங்கேசன் ?யாரு கிறிஸ்டபர்?
           
                    அப்புறம் ஒரு வில்லன் அதுவும் சைக்கோவான வில்லன் என்றாலே உடனே அந்த நபருக்கொரு பிளேஷ்பேக் போட்டு எப்படி இருந்த இந்தாளு இப்படி ஆகிட்டாரு?என்று பார்வையாளர்களை உச்சுகொட்ட வச்சிட்டு கடைசில அதே நபர் ஈரோ கையால் சாகும்போது கைதட்ட வைத்தல்.ராட்சசன் மட்டுமல்ல 2.0 ல கூட அதான் நடந்துச்சு.
z             உண்மையில் எதுக்கு இந்தமாதிரி  பிளேஷ்பேக் ?இதை தெரிஞ்சிக்கிட்டு குற்றம் செய்வோரின் psychological profile உருவாக்கி அதை வச்சு வேற படங்களின் குற்றவாளிகளை கண்டுபிடிக்க போறோமா?விறுவிறுப்பான படங்களுக்கு அது தேவையில்லை என்பது என் கருத்து.இதுமாதிரியான உளவியல் தன்மைகளை மட்டும்  மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு அவை தேவைப்படும்.
              மற்றபடி இதுவொரு நல்ல வணிக சினிமா.மேற்சொன்ன தேஜாவூ உணர்வுகள் தோன்றாமல் இருந்திருந்தால் படத்தை ரசித்திருக்க முடியும்.மற்றவர்களுக்கு அம்மாதிரியான உணர்வுகள் இல்லை  என்பதை படம் குறித்த அவரவர் பதிவுகளை பார்த்தப்போ புரிஞ்சிது.
              இங்க குறிப்பிட வேண்டிய இன்னொரு விஷயம் prosthetic.கிறிஸ்டபர் கேரக்டருக்கு மேக்கப் பண்ண எவ்வளவு மெனக்கேட்டோம்...எவ்வளவு மணி நேரங்கள் ஆனது..etc...etc.. மாதிரியான தகவல்கள்.முன்பே Synecdoche New York பதிவில் prosthetic பற்றி குறிப்பிட்டிருந்தேன்.குறிப்பாக கமலால் ப்ரோஸ்தட்டிக்

என்றாலே ஒருவித ஒவ்வாமை வந்துவிட்டதை குறிப்பிட்டிருந்தேன்.அதையே இங்கும் சொல்ல வேண்டியுள்ளது.
       குறிப்பாக இந்த படத்தின் ஓட்டத்திலிருந்து விலகி அலெக்ஸ் க்ராஸ் சீரிசுக்கு குறிப்பா Along Came a Spider படத்துக்கு கவனம் சென்றதற்கு காரணமும் வில்லன் அணிந்திருந்த ப்ரோஸ்தட்டிக்  மேக்கப்தான். இந்த prosthetic அணிந்த முகங்கள் எல்லாமே கிட்டத்தட்ட எனக்கு ஒன்றாகவே தெரிகிறது.
 உதாரணமாக Sin City படத்தின் Marv  கேரக்டரின் முகமும் தசாவதாரம் பிளெட்சர் கேரக்டர் முகமும் ஒன்றாகவே இருப்பதை கவனிக்கலாம்(தசாவதாரம் படத்தில் ப்ரொஸ்தடிக் அணிந்த எல்லா   கேரக்டருமே  ஒரேமாதியான முகபாவம் கொண்டதாகவே தோன்றியது)
Fletcher and Marv

அதுபோல சீதக்காதி விசய் சேதுபதி முகம் இந்தியன்  கமல் முகம் போலவே(அவ்வை ஷண்முகியையும் சேர்க்கலாம்)!அது ப்ரொஸ்தடிக் மேக்கப்புக்கே உண்டான limitation என்பதாகத்தான் புரிந்துகொள்ள முடியுது.

       இந்த படத்தில் அந்த மேஜிக் செய்யும் அந்த "பெண்"னை பார்த்ததும் முதலில் ரெமோ பட நர்ஸ் நினைவுக்கு வந்தது :D .அப்போதே அது பெண்ணல்ல பெண் வேடமிட்ட ஆண் என்று விளங்கி இவன்தான் கொலைகாரன் என்பதையும் யூகிக்க முடிந்துவிட்டது(பின்ன எதுக்காக ஒருத்தன் மெனக்கெட்டு பெண் வேடம் போட்டுகினு இங்க மேஜிக் பண்ணுறானாம்?).அதுவே அந்த மேஜிக் செய்யும் கேரக்டரின் பின்புறத்தில் இருந்து கேமரா கோணத்தை வைத்திருந்தால்  அதாவது ஒரு பெண்ணின் உருவம் மட்டும் தெரியும்படி காட்டியிருந்தால் அந்த யூகத்துக்கு  இடமில்லாமல் போயிருக்கும்.
.

   டிஸ்கி:          "மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?" என்று சிலர் கேட்கலாம். ஒரு படம் பார்க்கும்போது தோன்றும் உணர்வுகளை எண்ணங்களை எவ்வித சமரசமுமின்றி பதிவு செய்வதே நம்ம வழக்கம்.வெளியில் இருந்து பார்க்கும் பார்வைகள் மாறுபடலாம்!
                சினிமா விமர்சனம் என்ற வார்த்தையை எங்குமே நான் பயன்படுத்தாமல் இருப்பதற்கு காரணமும் இதுவே!விமர்சனம் என்று வரும்போது தனிப்பட்ட நபரின் எண்ணங்களை மட்டும் பதிவு செய்ய முடியாது.பொதுப்படையான மக்களின் சிந்தனை ஓட்டத்தை கருத்தில் கொண்டே எழுத முடியும்.அது நமக்கு வராது!

Thursday, 21 September 2017

துப்பறிவாளன்



            மிஸ்கின் இயக்கத்தில் விஷால் என்றவுடன் படத்தை பார்க்க கொஞ்சம் தயக்கமாக, ஏன் பயமாகவே இருந்தது.காரணம் தனுசு படங்களை பார்ப்பதை பல வருடங்கள் முன்பு நிப்பாட்டியதைப்போல விசால் படங்களை தவிர்ப்பது உசுருக்கு சேதாரமில்லாம இருக்கும்(குறிப்பாக கழுத்தை ஒரு பக்கமாக வெட்டி வெட்டி பன்ச் வசனம் பேசும் அந்தக்கொடுமை!) என்பதால்!

            அதையும் மீறி இப்படத்தை பார்க்க ஒரே காரணம் மிஸ்கின்.மிஸ்கினோடு ரசனை/மனநிலை ரீதியில் உடன்படும் புள்ளிகள் பிற தமிழ் இயக்குனர்களைக்காட்டிலும் அதிகம் (பித்தநிலை-புத்தகங்கள்-கால்கள் -வயலின்,வயலின்-வயலின்-கதாபாத்திரங்களின் idiosyncrasies). மேலும் தனது படங்கள் மூலம் அட்வைஸ் எல்லாம் பண்ணாமல், க்ளீஷே தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளுதல்(இதைப்பற்றி பிற்பகுதியில் சொல்கிறேன்),புதுமையான சண்டைக்காட்சிகள்(பிசாசு சப்வே,ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ரயில்வே ஸ்டேஷன்) என்று அவரின் படங்கள் எனது அபிமான தமிழ்ப்படங்கள் பட்டியலில் தவறாது இடம்பெறும்.

          ஆர்தர் கொனன் டாயில் படைத்த ஷெர்லாக்-வாட்சன் கதாபாத்திரங்களை பின்பற்றி தமிழிலேயே பல இருநபர்-டீம் கதாபாத்திரங்கள் வந்துவிட்டன.கணேஷ்-வசந்த்,விவேக்-விஷ்ணு என்று குறிப்பிடலாம்.ஒரு கேரக்டர் அசாத்திய புத்திசாலித்தனமாகவும் இன்னொரு கேரக்டர்(side kick) கொஞ்சம் மந்தமாக ,சில வேளைகளில் ஜொள்ளு பார்டிகளாகவும்(வசந்த்&விஷ்ணு),இக்கட்டான நேரத்தில் உதவுபவர்களாகவும்  படைக்கப்பட்டதுண்டு.

              இதில் துப்பறிவாளன் கணியன் பூங்குன்றன் ஷெர்லாக் ஹோம்ஸின் தன்மைகளின் சாயல் கொண்டவர்.(படத்தின் கதையே இரவில் கொல்லப்பட்ட நாயில் இருந்துதான் துவங்குகிறது.The curious incident of the dog in the nighttime!) வீட்டிற்குள் யார் வந்திருக்கிறார்?அவர் எப்படிப்பட்டவர்?எதற்காக வந்திருக்கிறார்?தொலைந்து போன கணவன் மாலைக்குள் வருவான் என்றெல்லாம் விசாரிக்காமலேயே கண்டறியும் வல்லமை கொண்டவர்.ஆனால் ஷெர்லாக் –கணியன் வேறுபாடும் மிகமுக்கிய புள்ளி ஒன்று உண்டு.
       அன்பு கருணை இரக்கம் எதுவுமில்லாத பாலவனைமான உலகில் எங்கோ ஒரு மூலையில் ஒரு துளி மனிதம் மீதம் இருப்பதை காட்டுவது மிஸ்கினின் ட்ரேட்மார்க்  பாணி. ஷெர்லாக் ஒரு sociopath.ஆனால் இதில் மேற்சொன்ன அந்த ஒரு துளி மனிதம் நிரம்பிய மனிதராகவே கணியன் உருவாக்கப்பட்டுள்ளார் .குறிப்பாக அனு இம்மானுவேல் கதாபாத்திரம் சம்மந்தப்பட்ட காட்சிகளில் கணியன் உணர்ச்சிவயப்படக்கூடியவராக;இரக்க உணர்வு கொண்டவராக;பிறர் நலனில்(அதாவது வழக்கு சாராத நபர்கள்) அக்கறை செலுத்துபவராக காட்டப்படுகிறார்.ஆனால் ஷெர்லாக் இப்படிப்பட்டவர் அல்ல!சொந்த அண்ணனையே கண்டுக்காம போகக்கூடியவர்.
         [Spoiler Alert]   
     ஆனால் இந்த கணியன் கேரக்டரின் அந்த துப்பறியும் தன்மை எந்நேரமும் இருக்கா? என்றால் இல்லை என்பதே பதில்.உதாரணமாக அபிஷேக்&ஷாஜி வீட்டுக்குள் வரும்போது விசால் கண்ணைக்கட்டிக்கொண்டிருக்கும் நிலையிலேயே யார் யார் வந்துள்ளார்கள் என்பதை சொல்கிறார்.ஆனால் ஹோட்டல் அறையில் ஜான் விஜய் கொல்லப்பட்டதும் ஃபயர் எக்ஸிட் வழியே கொலையாளியை பிடிக்க செல்பவர் ஒரு அறை வாசலில் ஆண்ட்ரியா நிற்பதை பார்க்காமலேயே வேறு திசையில் செல்வதாக காட்டியது கதாபாத்திரத்தின் திறன் consistent ஆக தொடராமல் போன உணர்வை கொடுக்கிறது.

           நான் கவனித்த –ஒலக விமர்சகர்கள் சிலர் வைத்த குற்றச்சாட்டு- எல்லா கதாபாத்திரங்களும் மிஸ்கின் போலவே நடிப்பதாக குறை கூறியிருந்தார்கள்.இதற்கு முன்னர் வந்த மிஸ்கின் படங்களில்(பிசாசில் கொஞ்சம் ஜாஸ்தி) இருந்ததை நான் மறுக்கவில்லை.ஆனால் இப்படத்தில் அப்படி அதிகமாக துருத்திக்கொண்டு தெரியவில்லை என்பதே என் எண்ணம்.விசால் தன் பாணியில் நடிக்காமல் மிஸ்கின் பாணியில் நடித்தது  பெரிய ஆறுதல்.இல்லாட்டி தனது ட்ரேட்மார்க்-நானும்-மதுரக்காரன்தாண்டா அங்க சேஷ்டைகள் செய்திருப்பார்.ஆனால் பிற கதாபாத்திரங்கள் பெரும்பாலும் அவர்கள் சொந்த  பாணியில்தான் நடித்துள்ளார்கள்.உம்.,பிரசன்னா.
          இன்னொரு குறிப்பிட வேண்டிய விஷயம் விசால் அனுவிடம் எரிந்து விழுவது.இது அவன் இவன் படத்தில் ஆர்யா, மது ஷாலினியை மிரட்டி தலையில் குட்டி பாலத்தில் குட்டிக்கரணம் போடவைத்த காட்சியை நினைவுபடுத்தியது! “பாலாத்தனமாக” இருந்தது.பாலா க்ளீஷே வட்டத்தில் மீளமுடியாது சிக்கிக்கொண்டதை கண்டபின்னரும அவரை பாலோ பண்ண நினைக்கலாமா மிஸ்கின்?

       அப்புறம் மிஸ்கின் படங்களுக்கே உரிய ஒவ்வொரு கதாபாத்திரங்களின் தனித்தன்மை.ஜான் விஜய் கேரக்டரின் fetishism சென்சார் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அரசல் புரசலாக காட்டப்படுகிறது (ஆண்ட்ரியா வாஷ் ரூமில் இருக்கும்போது வெளியில் நின்றபடி “கேட்பது”),வினய் கேரக்டர் ஒவ்வொரு மரணம் நிகழும் முன்போ-பின்போ காபி குடிப்பது,தான் இறக்கும் வேளையிலும் நடைபிணமாக இருக்கும் தனது மனைவியை தலையணையால் அழுத்தி கொல்லும் பாக்யராஜ் என்று  கதாபாத்திரங்கள் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளதை பாராட்டலாம்.
       [Spoiler]    அப்புறம் இரண்டாம்  பத்தியில் சொன்ன “க்ளீஷே தருணங்கள் வரும் நேரத்தில் பார்வையாளனே எதிர்பாராத விதமாக கதாபாத்திரங்கள் நடந்துகொள்ளுதல்”----- இதில் அப்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ஆண்ட்ரியாவும் அந்த மொட்டையும் போலீசால் சுற்றி வளைக்கப்பட்டதும் அந்த மொட்டை முட்டி போட்டுக்கொண்டு தனது டி ஷர்டை கழட்டிவிட்டு ஹராகிரி(Harakiri) செய்துகொள்வது,முதல் காட்சியிலேயே இருவர் மீது விழும் “மின்னல்”.
          படத்தின் இரண்டாம் பாதியில் குறிப்பாக கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த மவுத்ஆர்கன்-பிரசன்னா-கத்தி - விஷயம் முருகதாஸ்-விஜய் படங்களில் வரவேண்டிய காட்சி.தயாரிப்பாளர் விசால் என்பதாலோ என்னவோ மிஸ்கினுக்கு சில நெருக்கடிகள் இருந்திருக்கலாம்.அதனால் வலிந்து வைக்கப்பட்ட காட்சியாகவே அது எனக்கு தோன்றியது.
   அந்த சைனீஸ் உணவகத்தில் வரும் சண்டை நன்றாக இருந்தது என்றாலும் அடிக்க வருபவர்கள் “யாய்ய்” என்று கத்தியபடியே வருவது மிஸ்கின் படங்களில் இல்லாத ஒன்று.துளிகூட ஓசை எழுப்பாமல் தாக்குவதே அவர் படங்களில் இருந்துவந்துள்ளது.விசால் அனுவிடம் “நின்ன எடத்துலையே குழி தோண்டி புதைச்சிடுவேன்” என்று  வ(ப)ழமையான வசனத்தில் மிரட்டுவது,கடைசியில் ஈரோவை கட்டிப்போட்டுவிட்டு கொல்லாமல் விட்டுவிட்டு தப்பிக்க முயலும் வில்லன் என்று விசாலுக்காகவே இவை வலிந்து வைக்கப்பட்டதாக கருதுகிறேன்.

            அரோல் கொரேலி  மிஸ்கினோடு நல்லதொரு புரிதலில் இருப்பது பின்னணி இசையில் காண முடிகிறது.மிஸ்கின் படங்களில் அடிநாதமாக வரும் வயலின் மட்டுமல்லாது இப்படத்தில் Grand Piano வையும் அற்புதமாக பயன்படுத்தியுள்ளார் அரோல்.இக்கூட்டணி தொடரட்டும்.
Jeremy Brett

     சும்மா பேய்கதை-மொக்க காமெடி-காதல் கதை-அட்வைஸ் கதைன்னு தமிழ் திரையுலகில் டார்ச்சர்கள் தொடரும் நிலையில்  ஷெர்லாக் கதாபாத்திரத்தை மிஸ்கின் தன்மையோடு கொடுக்கும் முயற்சியை கண்டிப்பாக   பாராட்டலாம்.அதேநேரம் ஷெர்லாக் டிவி சீரிஸ்கள் சாதரணமாக முக்கால் மணிநேரம்(ஜெரமி ப்ரெட்ட் சீரிஸ்) வரும்.The Hound of Baskerville போன்ற பெரிய கதைகளே ஒன்றரை மணி நேரத்தில் சொல்லி முடிக்கப்படும் என்பதையும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொண்டிருக்கலாம்! (Typical Sherlock ஆன –“Mercurial” Jeremy Brett ஐ குறிப்பிட்டதற்கு நன்றி மிஸ்கின்!)
  

             


            



Saturday, 24 January 2015

பிசாசு

 ஒரு இயக்குனரின் வீச்சு படத்தின் வேர்வரை ஊடுருவுதல் என்பது நல்லதாகவோ அல்லது மொக்கையாகவோ முடிந்துவிடலாம்.உதாரணமாக டி.ஆர் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் டி.ஆர் போலவே பேசுவது, பார்த்திபன் படத்தில் எல்லா கதாபாத்திரங்களும் பார்த்திபன் போலவே வார்த்தைஜாலம்(பெரும்பாலும் இது மிகையாகி 'போதும்டா சாமி' என்று பார்வையாளனை தினறடிப்பதாகவே இருந்துள்ளது.உதாரணம் கதை,திரைக்கதை,வ,இ...படம்).

                  மிஷ்கின் படத்தில் வரும் கதாபாத்திரங்கள் ஒரு புத்தகம் பற்றியோ உலக சினிமா பற்றியோ(யுத்தம் செய்'ல் சேரன் ராஷமன் படம் பற்றி பேசுதல்,இதே படத்தில் எக்ஸ்சார்சிஸ்ட் படம் பற்றிய காட்சிகள்) பேசிக்கொள்வது,தத்துவம் பேசும் கதாபாத்திரம்(இப்படத்தில் பணம் ஏய்க்கும் அந்த இளைஞன்)அல்லது காட்சிகளூடே ஒரு புத்தகத்தை காட்டுதல்(யுத்தம் செய்) இவைகளை ஒலக விமர்சகர்கள் கடுமையாக விமர்சிப்பதை காணமுடிகிறது."சாமானியர்கள் இப்படியா பேசிக்கொள்வார்கள்?" என்று கேட்கிறார்கள்.என்னைப்பொறுத்தளவில் இது ஒரு குறையாக தெரிந்ததில்லை.காரணம் இயல்பு மனிதன் விவாதிப்பதெல்லாம் அடுத்தவன் வூட்டு சுவத்துக்கு அப்பால் என்ன நடக்குது?/டாஸ்மாக் பற்றி/நிஜவாழ்வை விட பன்மடங்கு ஊதி பெருக்கப்பட்ட ஒரு நடிகனின் இமேஜ் பற்றி/நடிகனின் அரசியல் பிரவேசம் பற்றி...blah..blah...ஸ்ஸப்பா...இந்த கருமத்தைத்தானே தினம் நாம் வாழ்வில் கேட்டுக்கொண்டிருக்கிறோம்?அதேநேரத்தில் படத்தில் வருவது போன்ற மனிதர்களே நிஜவாழ்வில் இல்லை என்று சொல்லமுடியாது அல்லவா!
                     ஒரு நல்லவன்/ள் இறந்தால் அவன்/ள்(அது?) பிசாசாக அலைந்தாலும் நல்ல தன்மையக்கொண்டதாகவே இருக்கும் என்பதே கரு.உடனே பிசாசுக்கு சிந்திக்க தெரியுமா?என்று கேட்கிறார்கள்.இவர்கள்தான் ஆங்கில பேய் படங்களை எதிர்கேள்வி கேட்காமல் பார்த்தவர்கள்.சரி படத்துக்கு வருவோம்.
                    படத்தின் குறைகளை முதலில் பார்ப்போம்.
       மிஷ்கின் படமென்றாலே அனைத்து(அல்லது பிரதான கேரக்டர் வரையிலாவது) abrupt ஆக ஜெர்க் அடிப்பது,விழிக்காமல் இமைப்பது,தலைகுனிந்து நிற்பது(இது குரசோவா பாணி) ,ஒருத்தனை லைன் கட்டி ஒவ்வொருத்தராக வந்து அடிப்பது போன்றவைகளைக்கூறலாம்(இசை பற்றி பிறகு பார்ப்போம்).Autuer என்ற சொல்லாடல்படி மேற்சொன்னவை மிஷ்கினின் முத்திரையை பறைசாற்றுவதாக எடுத்துக்கொள்ளலாம் என்றாலும் சில சமயங்களில் அது மிகையாகிப்போவதை காணமுடிகிறது.
         உதாரணமாக சுரங்கப்பாதையில் அந்தச்சிறுமி(அட்டகாசமான கண்டுபிடிப்பு!) பார்வையற்றவர்களை அழைத்துச்செளும் காட்சியில் எல்லாரும் லைனில் நின்றுவிட்டு ஏதோ ஒரு cue க்காக காத்திருந்து பிறகு நகர்வதாக வரும் காட்சி.அக்காட்சி துவங்கும்போதே அவர்கள் நகர்வதாக காட்டக்கூடாதா?(எனக்கு சினிமா கோட்பாடுகள் தெரியாது.எனக்கு தோன்றியதை கேட்கிறேன்).

          பிரதான கதாபாத்திரத்தின் பெயர் ஒற்றைக்கண் சிவராசனா?என்று கேட்க தோன்றுகிறது.சரி மாடர்ன் யூத்துங்க எந்த ஸ்டைலை எப்படி பின்பற்றுகிறார்கள் என்பதில் பல்வேறு குழப்பங்கள் இருப்பதால் அதை தவிர்த்துவிடலாம்.
         விளிம்புநிலை மக்களின் வாழ்வை படமாக்குதல் அத்தியாவசியமான ஒன்றாக இருந்தாலும் "இந்தப்படத்தில் இந்தந்த காட்சிகளில் அவர்கள் இடம்பெறுவார்கள்" என்று வலிந்து திணிப்பது அவர்களுக்கு செய்யும் நியாயமாக இருக்காது.இந்தப்படத்திலேயே அந்தச்சிறுமி&பார்வையற்ற நபர்கள் மிஷிகினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தை நினைவுபடுத்துகிறார்கள்.சப்வேயில் சித்தார்த்தை பீர் பாட்டிலால் கொலைசெய்யவரும் அந்த நபர் பிசாசால் கொலை செய்யப்படுவதற்காக மட்டுமே அந்த சப்வே காட்சிகள் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது.

       மற்றொரு குறை ராதாரவி.அவர் நல்ல நடிகர் என்றாலும் பல காட்சிகளில் ஏதோ ஒட்டாமல் நடித்தது போலவே எனக்கு தோன்றியது.அவரைவிட சித்தார்த்தாக நடித்த நாகா நன்றாக பொருந்தியிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
          இப்போது இசை பற்றி.ஒரு பாடலை/பின்னணி  இசைத்துணுக்கை கேட்கும்போதே இன்னார்தான் இசையமைத்தது என்று சொல்லிவிடலாம்(தற்காலத்தில் லூப்பில் போடுபவர்களை சொல்லல).ஆனால் இவர்  படத்தின் இசையக்கேட்டால் "இது மிஷ்கின் பட இசை" என்று சொல்லுமளவு அவர் எந்த இசையமைப்பாளருடன் பணியாற்றினாலும் தனது பாணி என்ற ஒன்றில் பொருந்துவதாக இருக்குமாறு சரியாக வேலை வாங்குகிறார்.கண்டிப்பாக இதை பாராட்ட வேண்டும்.குறிப்பாக அவர் படங்களில் வயலின்(எனதபிமான இசைக்கருவி) பிரதானமான ஒன்றாகவே இருந்துவந்துள்ளது(அஞ்சாதே துவங்கி).அது இசையராஜாவாக இருந்தாலும் கே'யாக இருந்தாலும் அரோல் கொரேலியாக இருந்தாலும் தன்  மனதில் தோன்றும் பாணியில் அவர்களை இசையமைக்க வைக்கிறார்.பிரதானமாக Bach'ன் பாணி?(என்று எனக்கு தோன்றுகிறது.தவறிருந்தால் மன்னிக்கவும்).அந்த சப்வேயில் வரும் பாடல், அந்த வயலின் நிரவலிசை, பாடிய அந்த பாடகியின் குரல்(என்ன ஒரு உணர்வு!),அதற்கு வாயசைக்கும் சிறுமி நான்கும்  அட்டகாசமாய் ஒரு புள்ளியில் சேர்வதை உணரமுடிந்தது.உயிரை உருக்கும் அப்பாடல்:

           பேயோட்டும் பெண் சம்மந்தப்பட்ட காட்சிகள் இழையோடும் நகைச்சுவை.  பேயோட்ட வெவ்வேறு மதத்தினர் வந்து சடங்குகள் செய்வதை ஒருவித பகடியாகவே காட்டியது நமட்டுச்சிரிப்பை வரவழைக்கிறது.  சவரம் செய்யப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு கதாபாத்திரம் இடையில் எழுந்துவந்தாலும் முழுச்சவரம் செய்த முகத்தோடவே இருக்கும் வழமைக்கு மாறாக பாதி தாடியோடு அவர் வந்தது நல்ல கண்டின்யூவிட்டி.நிறக்குருடு என்ற ஒரு புது விஷயத்தை மகா திருப்பத்தை  கொண்டுவர பயன்படுத்திதை பாராட்டலாம்.நாயகியின் தொப்புள்+மார்பகங்கள் நிலையான செட் பிராபர்டியாக இருக்கும் தமிழ் சினிமாவில் வெறும் பத்து நிமிடத்துக்கு மட்டுமே ஒரு பெண்ணை பயன்படுத்தியது புதுமை.
.
பி.கு: படங்களைப்பற்றி நான் எழுதுவதை விமர்சனம் என்று நானே ஒப்புக்கொள்ள மாட்டேன்.படம் பார்க்கும்போது தோன்றும் எண்ண ஓட்டங்களைப்பதிவு செய்வதே என் வழக்கம்.அந்த வகையிலேயே இதுவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.அந்த சீன்ல திரைக்கதை செம வீக்கா இருப்பது உன் கண்ணுக்கு தெரியலியா?ஒளிப்பதிவு எட்டாவது சீனில் துருத்திக்கொண்டிருந்ததே?அது உனக்கு தெரியலியா என்றெல்லாம் அக்கப்போர் செய்யப்படாது.ஏன்னா அதைப்பற்றியெல்லாம் எனக்கு தெரியாது!
         

Friday, 18 July 2014

Man's Search for meaning

                    மிஸ்கினின் யுத்தம் செய்  படத்தை இரண்டாவது முறை பார்த்ததால் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தை கண்டுகொண்டேன்  என்றே சொல்லவேண்டும்.பொதுவாகவே எந்த சினிமா பார்த்தாலும் அதில்வரும் கதாபாத்திரங்கள் புத்தகங்கள் பற்றியோ எழுத்தார்களை பற்றியோ பேசும்போது அதை குறிப்பெடுத்து கொள்வதுண்டு.உதாரணமாக காதல் வைரஸ் படத்தில் நாயகி "Somerset Maugham -ன் எழுத்து பிடிக்கும்" என்பார்.கஜினி படத்தில் அஸின் மரியோ புட்சோவின் காட்ஃபாதர்  படித்து(படிப்பது போல நடித்து??) கொண்டிருப்பார்.மந்திரப்புன்னகை படத்தில் நாயகனின் அறை மேஜையில்  எஸ்.ரா எழுதிய விழித்திருப்பவனின் இரவு புத்தகம் இருக்கும்.இது போல பல உதாரணங்களை சொல்ல முடியும்.இந்த தேடலுக்கான காரணம் நல்ல புத்தகங்களை தவறவிட்டுவிட கூடாது(அதற்காக சினிமாக்களில்  காட்டப்படும் எல்லா புத்தகங்களும் அற்புதமானவை என்று சொல்ல மாட்டேன்.சில இயக்குனர்கள் சும்மா நாயகி கையில் புக்கு இருக்கணும் என்பதற்காக மூர் மார்கெட்டில் வாங்கிய ஏதேனும் சுய சொறிதல் புக்கை கையில் கொடுத்துவிடும் அபத்தங்களும் இதில் உள்ளன).அத்தகைய புத்தகங்களுக்கான சுய தேடல் என்பது தனியே இருந்தாலும் வேறொரு  மனிதரின் கண்ணோட்டத்தில் சில புத்தகங்கள் கண்ணில் படும் போது அதைத்தவரவிட மனமில்லை.
               அப்படிப்பட்ட தேடலில் கண்ணில் பட்டதுதான் Viktor.E.Frankl எழுதிய Man's Search For Meaning  என்ற புத்தகம்.யுத்தம் செய் க்ளைமாக்ஸில் ஒய்.ஜி.மகேந்திரன் கதாபாத்திரத்தின்  மகன் நிஷாந்த்துக்கு(அந்த நிஷாந்த்   கதாபாத்திரம் மிகப்பெரிய மன அதிர்ச்சியில் இருக்கும்) சேரன் இந்த புத்தகத்தை வழங்குவதாக காட்சி வரும்.அங்கே ப்ரீஸ் செய்து கண்டுபிடித்ததே இப்புத்தகம்.இதை புத்தகம் என்பதைவிட ஒரு ஆசான் என்றே சொல்வேன்.

                பொதுவாகவே வாழ்வில் சோதனைகள் பிரச்சனைகள் வரும்போது "ஐயோ கடவுளே நீ இருக்கியா இல்லையா" என்று ஆண்டவனுக்கே ஜெர்க் கொடுக்கும் சோக பட்சிகள் இவ்வுலகில் பலப்பல... சுய தேடல், சுய பரிசோதனை போன்றவைகளின் மூலம் இந்த சிறுபிள்ளைத்தனமான(கடவுளை வணங்குதல் சிறுபிள்ளைத்தனம் இல்லை.இதைக்கொடு, அதைக்கொடு என்று கேட்பதை சி.பி.தனம்  என்கிறேன்) எண்ணங்களில் இருந்து வெளிவர முடியும் .ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயமாக இல்லை என்பது என் அனுபவம்.
               இப்புத்தக ஆசிரியர் ஒரு சைக்கியாட்ரிஸ்ட். யூதர் என்பதால் நாட்ஸி  கேம்பில் அடைக்கப்படுகிறார்.அங்கே அவர் கண்ட விஷயங்கள் தான் சுயமாக உணர்ந்த அனுபவங்கள் போன்றவைகளை வெறும் உணர்ச்சிவயப்பட்ட நோக்கில் அல்லாமல் சிந்தனை நோக்கில் அலசி ஆராய்ந்து பல்வேறு விஷயங்களை சொல்கிறார்.

             சாதாரணமாக வூட்ல குழாய் அடைப்பு என்றாலே தற்கொலை செய்துகொள்ளும் வீராதி வீரர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை படிக்க வேண்டும்.இதில் வாழ்வில் வரும் கடுமையான சோதனைகள் என்பது வாழ்க்கை நம்மை சோதிக்கிறது என்பதற்கான அடையாளம்.சோதனைகள் பிரச்சனைகள் போன்றவற்றின் மூல காரணத்தை நாம் ஆராய வேண்டும்.அதை நம்மால் தீர்க்க முடியும்/நீக்க முடியும் என்றால் அதை கண்டிப்பாக முயன்று செய்ய வேண்டும்.அப்படி எதுவும் செய்ய முடியாது.பிரச்சனையின் மூல காரணத்தை எதுவும் செய்ய முடியாது என்ற நிலை வரும்போது அந்த பிரச்னையை முழுமையாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆசிரியர்.
         உதாரணம் 1: உங்களுக்கு தொடர் தலைவலி வருகிறது என்று வைத்துகொள்வோம்.நாள் தவறாமல் வந்துவிடுகிறது.நீங்கள் என்ன செய்ய வேண்டும்?."வாழ்க்கை என்னை சோதிக்கிறது.நான் அதை ஏற்றுகொள்கிறேன்" என்று சொல்லகூடாது என்கிறார் ஆசிரியர்.அப்படி சொல்வது Masochism.அப்படி அல்லாமல் அந்த தலைவலிக்கு என்ன காரணம் என்பதை தகுந்த மருத்துவ சோதனை மூலம் ஆராய்ந்து கண் கண்ணாடி அணிய வேண்டுமென்றால் அணிய வேண்டும்.அல்லது வேறு பிரச்சனை என்றால் அதற்கான மருந்துகளை உட்கொள்ள வேண்டும். 
      உதாரணம் 2: ஒருவருக்கு தலையில்  டியூமர்.கடுமையான தலைவலியால் துடிக்கிறார்.மருத்துவ சோதனைக்கு பிறகு இதை ஒன்றும் செய்ய முடியாது.இவர் வாழப்போவது கொஞ்ச நாள்.ஆனால் மருந்துகள் மூலம் வலியை மட்டுப்படுத்தலாம் என்றால் இப்போது வேறு வழியில்லை.வாழ்வின் சோதனையை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.
          அதாவது வாழ்வில் தீர்க்க முடிந்த பிரச்சனைகளை முயன்று தீர்க்க வேண்டும்.தீர்க்க முடியாத பிரச்சனைகள், சோதனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
           வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டும் என்று எதிர்பார்ப்பதை விடுத்து வாழ்க்கை நம்மிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறது என்பதை சிந்திக்க வேண்டும்.ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் வாழ்க்கை நமக்கு சவால்களை விடுத்துக்கொண்டே இருக்கிறது.அய்யய்யோ!!! என்று ஓடாமல் அவைகளை நமது பொறுப்புகளாக ஏற்றுகொள்ள வேண்டும்.
            மேலும் மனிதனுக்கு என்று சில எல்லைகளை மருத்துவம் நிர்ணயித்துள்ளது.இத்தனை நாட்கள் சாப்பிடாமல் இருந்தால் செத்து விடுவான்.இவ்வளவு நீர் ஒவ்வொரு நாளும் தேவை.தினம் பல் விளக்க வேண்டும் என்பதெல்லாம் அந்த concetration camp ல் எப்படி பொய்யாகி போனது என்பதை விளக்குகிறார்.உதாரணமாக "நாள்தோறும் நான் பல் துலக்கும்  போது இருந்ததைவிட இப்போது பல்லே துலக்காமல் இருக்கும் போது  ஈறுகள் இன்னும் ஆரோக்கியமாக இருக்கிறது" என்கிறார்.அதற்காக பல்லே துலக்க கூடாது என்று அர்த்தம் செய்துகொள்ள கூடாது.மனிதனுக்கு இதுதான் எல்லை என்று செய்யப்பட்ட நிர்ணயங்களின் போலித்தன்மையை விளக்கவே இந்த உதாரணத்தை சொல்கிறார் ஆசிரியர்.மிகச்சிறிய சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் இருந்து எழுந்துவிடும் ஒரு நபர் பல்வேறு இரைச்சல்களுக்கிடையில் நிம்மதியாக தூங்கியதை அவர் மேற்கோள் காட்டுகிறார்.
              இவை சொல்பவை ஒரு விஷயத்தை.மனித மனத்தின் எல்லைகளை வரையறுப்பது என்பது இயலாத காரியம்.மேலே சொன்ன உதாரணங்கள் உடல் சம்மந்தப்பட்டவைதானே?என்று கேட்கலாம்.ஆனால் உடல் மனம் என்பது பிண்ணி  பிணையப்பட்ட ஒரு விஷயம்.இரண்டையும் பிரித்து பார்ப்பது என்பது முட்டாள்தனம்.இது என் கருத்து 
          மேலும் concentration camp ல் இருந்து வெளிவந்த மனிதர்கள் பிறகு பொது வெளியில் நடந்துகொள்ளும் விதம் பற்றி சொல்கிறார் ஆசிரியர்.இவரோடு கேம்பில் இருந்த ஒரு நண்பர் பூங்காவில் நடக்கும் போது செடிகளை சேதாரப்படுத்துதல், பொது சொத்துக்களை அடித்து உடைத்தல் போன்றவற்றை செய்து கொண்டிருந்ததாகவும்
"ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று இவர் கேட்டபோது "என்னை கேம்பில் கொடுமைப்படுத்திய இந்த சமூகத்தை இப்படித்தான் பழிவாங்க வேண்டும்" என்பதுபோல (சாரத்தை மட்டும் சொல்கிறேன்) சொல்கிறார்.

         அதற்கு ஆசிரியர் "பிறர் உங்களுக்கு தீமை செய்தார், அல்லது சமூகம் உங்களுக்கு தீங்கு செய்தது என்பதற்காக நீங்களும் அதையே திருப்பி செய்ய வேண்டியதில்லை.அது தவறான விஷயம்" என்கிறார்."சுதந்திரம் என்பது மட்டும் முக்கியமில்லை.அதைவிட முக்கியம் பொறுப்புணர்ச்சி.சுதந்திர தேவிக்கு சிலை உள்ளதுபோல பொறுப்புணர்ச்சியை உணர்த்தும் சிலை ஒன்றையும் அமெரிக்காவில் நிறுவ வேண்டும்.அதுதான் உண்மையான சமநிலை." என்கிறார்.
         மேலும் pyschiatry/psychology போன்றவை மேற்க்கத்திய சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை.அதாவது வாழ்வில் மகிழ்ச்சியை மட்டும் தேடு..துன்பம் வந்தால் அது ஏதோ தெய்வ குத்தம் என்பது போலவும் துன்பப்படுபவன் அதை ஏதோ அவமானகரமான விஷயமாக கருத வேண்டும் என்பது போன்ற சிந்தனைகளை கொண்டவை.அதில் இருந்து முற்றிலும் மாறுபட்டதே logotherapy.கண்ணீர் சிந்துதல் என்பதும் ஒருவன் துன்பத்தை தாண்டி வந்திருக்கிறான் என்பதிலும் எவ்வித அவமானமும் இல்லை.மாறாக அவனின் துயரம் தாங்கும் வலிமையை பாராட்ட வேண்டும்..
புத்தகத்தில் சில அற்புதமான வரிகள்: 

  • “Those who have a 'why' to live, can bear with almost any 'how'.” 
  • “When we are no longer able to change a situation, we are challenged to change ourselves.”  
  • But there was no need to be ashamed of tears, for tears bore witness that a man had the greatest of courage, the courage to suffer

       இதுபோல பல அற்புதமான விஷயங்களை இப்புத்தகம் சொல்கிறது.கண்டிப்பாக அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம்.குறிப்பாக வளர் இளம் பருவத்தினர் இதை வாசிக்க வேண்டும்.இதை பள்ளியில் பாடமாக கூட வைக்கலாம்.இதை அறிமுகம் செய்த இயக்குனர் மிஸ்கினுக்கு நன்றி. 


             "இப்புத்தகத்தை திரைப்படத்தில் காட்டியது திணிப்பு".."இது வெறும் intellectual muscle flexing" என்கிற ரீதியில் சில ஒலக விமர்சகர்கள் சொல்லலாம்.என்னை பொறுத்தளவில் மிஸ்கின் தனது ஒவ்வொரு படத்திலும் இது போல பல புத்தகங்களை அறிமுக செய்ய வேண்டும்.ஒலக விமர்சகர்கள் திண்ணைக்கிழவி போல எதையாவது சொல்லிக்கொண்டேதான் இருப்பார்கள்.
            ஏனய்யா ஒலக விமர்சகர்களே நீங்கள் இதுபோல ஏதேனும் உருப்படியாக புத்தகங்களை அறிமுகம் செய்துவைத்ததுண்டா?