Showing posts with label ஹிந்திப்படம். Show all posts
Showing posts with label ஹிந்திப்படம். Show all posts

Tuesday, 26 February 2019

Double Bill- Andhadhun & சீதக்காதி



சீதக்காதி 
இந்த ஒன்லைன் சொல்லும்போதும் கேக்கும்போதும் “அட!ரொம்ப வித்தியாசமா இருக்கே” ங்கிற எண்ணம் கண்டிப்பா பெரும்பாலோனோருக்கு வரும்.அப்படித்தான் விஜய் சேதுபதிக்கும் வர நடிக்க சம்மதித்திருக்கிறார்  என்பது தெளிவாவே தெரியுது.உண்மையில் இந்தப்படம் மட்டுமல்ல பட படங்களின் கதைகளை இயக்குனர்கள் சொல்லும்போது அற்புதமா இருந்து கடைசில பைனல் கட் பாக்க சொல்ல “நீ என்ன சொன்ன?என்னத்த எடுத்து வச்சிருக்க?” என்று ஹீரோ மனகண்ணில் இயக்குனரை மவுன்ட் ரோடில் ஓட ஓட அடித்து இழுத்து சென்றிருப்பார்கள்!

      உண்மையில் இந்தப்படம் அய்யா என்ற வயதான நாடக நடிகரை சுற்றியே நிகழுது.படத்தின் அஸ்திவாரமே அதான்!அது எவ்வளவு வலுவா பார்வையாளனை துளைக்கும்படி இருக்கணும்?ஆனா இந்த படத்துல அய்யாவின் பயணம் கால வரிசைப்படி காட்டப்படுது.ஐம்பதுகள் தொடங்கி 2013 வரை..கொஞ்சம் கொஞ்சமா மேடை நாடக கலாச்சாரம் மங்கி மறைந்து போய் ஏதோ கடமைக்கு பத்து பேரு உக்காந்து நாடகம் பார்ப்பதாக தற்காலத்தில் காட்டப்படுது.சரி அது பிரச்சனையில்லை.
    அப்போ என்ன பிரச்சனை?விஜய் சேதுபதி தான்!முதலில் இந்த அய்யா கேரக்டர் கமல் நடிப்பதாக இருந்ததாவும் அவர் ஏதோ காரணத்தால் மறுத்துவிட விஜய் சேதுபதி இதை செய்ததாவும் சொல்லப்படுது.உண்மையில் கமலே இதை செய்திருந்தாலும் சரியா வந்திருக்குமான்னு தெரியல.கமல் பெரும்பாலும்(விதிவிலக்குகளும் உண்டு)  கமல் என்ற பிரக்ஞையிலேயே நடிப்பவர் என்பதால் இந்த அய்யா கேரக்டரிலும் தனது அதிமேதாவித்தனம் மிளிரும்(??)வசனங்கள் எதையாச்சும் வச்சிருப்பார்.இதான் சாக்குன்னு செலக்டிவ் நாத்திகம் பேசி தள்ளியிருப்பார்(யப்பா தசாவதாரம் படத்துல கோவிந்த் பேசுன செலக்டிவ் நாத்திக  பாதிப்புலேர்ந்தே இன்னும் வெளிய வர மிடில-கும்மாங்கோ)


இதுல வி.சே வை நொந்து பயனில்லை.அவர் கதைய கேக்குறாரு.அதுவும் கமலுக்காக இருந்த கதை +அவருக்கு மக்கள் மத்தில இருக்கும் நல்ல பேர(உண்மையில் நடிக்கும் திறனுக்கும் இதுக்கும் என்ன தொடர்புன்னு எனக்கு விலங்கல-உதயா) மேலும் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ள ஒரு கேரக்டர்ன்னதும் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்று தெரியுது.அவர் அவரால் முடிஞ்சதை செய்துதான் இருக்கிறார்.இருந்தாலும் அந்த அய்யா கேரக்டருக்கு இது பத்தாது.கமலே பத்த மாட்டார்!வேற யாரு?
      செந்தமிழை(செந்தமிழ்ல இருக்கும் ழ் ஏ 90% தமிழர்களுக்கு உச்சரிக்க வராது) சரியான ஏற்ற  இறக்கத்தோடு பேசுவதோடு உடல்மொழியும் அதோடு 100% பொருந்தி வரும் ஒரு நடிகரை அய்யா கதாபாத்திரம் கோருகிறது.ஆனால் வி.சே வுக்கு சாதாரண தமிழே பேச வராது.எப்பவுமே மெட்ராஸ் பாஷதான்!அவர் வடசென்னை பகுதியை சார்ந்த கேரக்டரா இருந்தாலும் சரி(இப்ப வடசென்னை மீட்பு சீசன் போயிட்டு இருப்பதால் எல்லா படத்துலயும் அந்த ஏரியா கேரக்டர் ஒண்ணு தப்பாம தமிழ்  படங்களில் இடம்பெறும்-உதயா) இல்ல சின்னாளப்பட்டியை  சேர்ந்த ஒரு கேரக்டர் பண்ணாலும் சரி."இன்னா?" என்றுதான் ஆரம்பிப்பார்.மக்களும் விமர்சகர்களும் அதை கண்டுக்கிறது இல்ல! (முன்பே சொன்னது போல மக்களின் அபிமானத்தை பெற்றுவிட்டால் ஒரு நடிகன் நடிப்புலயும் வசன உச்சரிப்புலையும் எப்படி சொதபுனாலும் அதை பெரிதுபடுத்த மாட்டார்கள்)

   உண்மைல இதுல வி.சே வை குறைகூற முடியாது.இப்படியொரு கேரக்டர் கிடைக்குதேன்னு அவர் ஒத்துகிட்டு செய்திருக்கார்.ஆனா இந்த கேரக்டரை செய்யக்கூடிய சரியான நடிகர் ஒருவர் மட்டும்.சிவாஜி கணேசன்!செந்தமிழ் வசனத்தை  ஏற்ற இறக்கத்தோடு தெளிவாக சரியான முகபாவனையோடு வசனம் பேச அவரைவிட்டால் வேறு ஆளில்லை என்பதே உண்மை.குறிப்பா வி.சே செந்தமிழ் தட்டுதடுமாறி பேசும்போதெல்லாம் சிவாஜி நினைப்புதான்!
அதைத்தாண்டி படத்தை மூணு மணி நேரம் இழுத்தது அந்த ஷூட்டிங் காட்சியையே இருவேறு நடிகர்களை வச்சி வளத்துனது என்று பல குறைகள்.முன்னமே சொன்னது மாதிரி கதையாக யோசிச்சதை கேட்டப்போ நல்லா இருக்கும் ஒரு சப்ஜெக்ட் இது.படமாக்குவதில் பெரும் குளறுபடி!

.*******************************************************************************************************************

அந்தாதூன்.
பொதுவா ஒரு படத்தில் கண் பார்வையில்லாத/காது கேட்காத/வாய் பேசாத...அல்லது வேறு வகை உடல்/உளவியல்  குறைபாடுள்ள கேரக்டரை மூன்று template ல்  காட்டுவதே வழக்கம்.
     1.      அந்த கேரக்டர் மேல அனுதாப அலை வீச வைத்து ஆடியன்சை அழுகாச்சியில் மூழ்கடிப்பது
2.      கேலி கிண்டலுக்கு உள்ளாகும் ஒரு கேரக்டராக காட்டுவது.3.      சாமானியர்களை விடவும் நேர்மையானவர்களாகவும் அசாத்திய திறன் பெற்றவர்களாகவும் exaggerate செய்வது

இப்ப பொதுவா இருக்கும் “யாரையும் புண்படுத்த கூடாது” டிரெண்டில் முதல் மற்றும் மூன்றாம்  வகை கேரக்டர்களே திரையை நிறைக்கின்றன.இது உடல் குறைபாடுள்ள கேரக்டர்களுக்கு மட்டுமல்லாமல் வேற மதத்தை குறிப்பிட்ட சில சாதிகளை சார்ந்த கேரக்டர்கள்கூட kid Galahad எனுமளவுக்கு நன்மையின் உண்மையின் நேர்மையின் சின்னமாக காட்டி ‘பொக்குதே!’ன்னு ஆடியன்ஸ் அழாத குறைக்கு தள்ளிவிடுகிறார்கள்.

    அந்தாதூன் படம் அப்படி மூணு  வகைலையும் வராதது பெரும் ஆறுதல்!இதுல கண் பார்வை தெரியாத ஆகாஷ் (ஆயுஷ்மான் குரானா) மீது மேற்சொன்ன மூன்று  அணுகுமுறைகளும் இல்லாமல் புது மாதிரியாக காட்டியுள்ளனர் .ஒருவகையில் இது ப்ளாக் காமெடி படம் என்பதால் இது சாத்தியமாகியுள்ளது.ஆனா நம்மூரு ப்ளாக் காமெடி படங்கள்ல கூட அனுதாப அலைகளை காண முடியும்.
   நல்லவன் கெட்டவன் வரைமுறைகளுக்கு உட்படாத கேரக்டர்களே படத்தை மேலும் சுவாரசியமாக்கும்.100% மசாலா படங்களில் அது சாத்தியமே இல்லை என்றாலும் இடைநிலை சினிமா மற்றும் இடைநிலை+மசாலா படங்களில் அது சாத்தியமே.இந்த படத்தில் பெரும்பாலான கேரக்டர்கள் அந்த ரகம்.ராதிகா ஆப்தே மற்றும் அந்த பழைய நடிகர் அணில் தவான்  தவிர எல்லோருமே ஏதோ ஒரு வகையில் மற்றவர்களை ஏமாற்றி பிழைப்பவர்களாகவே உள்ளனர்

   ஆகாஷ்  கூட கண் தெரியாத ஆசாமியாக நடித்து ஐநூறு ரூபாய்க்கு நல்ல வீடு (என்ஜிஓ மூலம்) பெற்று வாழ்கிறார்.அந்த சிறுவனும் காசுக்கு ஆசைப்பட்டு பல்வேறு சேட்டைகளை செய்கிறான்(ரகசியமா வீடியோ எடுத்து வச்சிக்கிட்டு அதை பார்க்க ஐம்பது ரூபாய் வசூலிப்பது).அந்த உறுப்பு திருடும் டாக்டர் மற்றும் அவருக்கு உதவும் அந்த லாட்டரி விற்கும் பெண் மற்றும் அவளுக்கு துணையா வரும் ஆசாமி எல்லோருமே சந்தர்ப்பவாதிகள்தான்!
             உண்மையில் பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல்தான் இப்படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.ஆனா போகப்போக விறுவிறுப்பாக நன்றாகவே இருந்தது.குறிப்பா ஆயுஷ்மான் கண் தெரியாதவன் மாதிரி நடிக்கிறவன் என்று தெரிந்ததுமே சுவாரசியம் கூடிடுது.அதுக்கப்புறம் அந்த பாடியை டிஸ்போஸ் செய்யும் சமயத்தில் இவன் விடாமல் பியானோ வாசிக்க எப்ப ஒழிவான்?என்று தபு எதிர்பார்க்க கிடைக்கும் ஒரு சின்ன கேப்பில் கணவன் வந்துவிட்டதாவும் அவனது பியானோ இசை கேட்டு கைதட்டி பாராட்டுவதாகவும் ஏற்கெனவே எடுத்த வீடியோ பதிவ்ளிருந்து ஆடியோவை ப்ளூடூத் ஸ்பீக்கர்ல போட்டு அவனை வெளிய அனுப்புறதும்,அப்புறம்  அந்த ஆங்கிலோ இந்தியன் பெண்ணை மாடியில் இருந்து தள்ளி விடும் நேரத்தில் ஒலிக்கும் பீத்தோவன் 5th ம் அட்டகாசம்!
A Fifth of Beethoven :D 

          அதுபோல ராதிகா ஆப்தே ஆயுஷ்மான் காட்சிகளில் காமெடி நல்லாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு.பிறகு அவரை அம்போவென விட்டுட்டாலும் ஆயுஷ்மானை தேடி அவன் வீட்டுக்கு வரும்போது தபு ஏடாகூடமா நின்னுகிட்டு இருக்கும்போது டென்சன் ஆகி கத்திட்டு போவது பட ஆரம்பத்தில் கோபத்தோடு வண்டி ஓட்டும் காட்சிகளில் அவர் சரியாகவே பொருந்துகிறார்.

                சில சின்ன சின்ன விஷயங்கள் கவனித்து செய்துள்ளார் இயக்குனர்.உதாரணமாக ஒரு காலத்தில் தான் ஹீரோவாக நடித்து பிறகு மார்க்கெட்டே இல்லாமல் போன பிரமோத் சின்ஹா(அணில் தவான்)  யூட்யூபில் தனது பட பாடல்கள் காட்சிகளுக்கு வரும் கமண்டுகளுக்கு லைக் போட்டு நன்றி தெரிவிக்கும் காட்சியை சொல்லலாம்.அப்புறம் லாட்டரி விற்கும் சக்கு பார்வையற்ற ஆகாஷை ஒரு லாட்டரி சீட்டை தொட சொல்லி பக்கத்தில் உக்காந்திருக்கும் நபரிடம் “பார்வையற்றவர்கள் ஆனடவனின் ஆசி பெற்றவர்கள்.அவர்கள் தேர்ந்தெடுக்கும் சீட்டு நிச்சயம் பரிசு பெறும்”என்று சொல்லி நூறு ரூபாய் சம்பாதிப்பது,ஆயுஷ்மான் உண்மையில் குருடன்தானா இல்லையா?என்று போலீஸ் அதிகாரியும்  தபுவும் வெவ்வேறு தருணங்களில் சோதிக்கும் காட்சி ரணகளம்! படத்தின் இறுதியில் தான் கண் தானம் பெறவில்லை என்பதுமாதிரி காட்டிட்டு கடைசில அந்த கோக் டின்னை உதைப்பதோடு முடிப்பது இன்னொரு உதாரணம்! சமீபத்தில் ரசித்து பார்த்த(இப்படி சொல்ல வைக்கும் படங்களே அரிதாகிவிட்ட நிலையில்) படங்களுள் ஒன்று!



Saturday, 8 October 2016

ராமன் ராகவ்

                 "ஒவ்வொரு  மனிதனுக்குள்ளும்  ஒரு  மிருகம்  இருக்கு.அதை  வெளியேற்ற  மனிதர்கள்  எல்லைதாண்டி  போவதுண்டு.மதத்தின்  போர்வையில்  சாதியின்  போர்வையில்,  போலீசு,அரசியல்வாதி    போன்ற  அதிகாரத்தின்  போர்வையில்  மனித நேயத்தின்  போர்வையில் எல்லைதாண்டி  கொல்வதுண்டு.நான்  எந்த  முகமூடியின்  பின்னாலும்  ஒளிந்து  கொள்ளாமல்  கொல்கிறேன்.சாப்பிடுவது,  கடவுளை  வணங்குவது  ,தூங்குவது,  மலம்  கழிப்பது  போன்று  கொல்கிறேன்.  உச்சத்தை  கண்டுவிட்டேன்  அதனால்  சரண்டர்  ஆகிறேன்"
                      இதுதான்  ராமன்(நவாசுதின்)  ராகவனிடம் (விக்கி ) சொல்லும்  காரணம்.
                      பொதுவாக  சீரியல்  கொலைகாரன்  அவனை  பிடிக்கப்போகும்  நேர்மையான  போலீசு  போன்ற  வழமையான  சித்தரிப்புகளை  ஒதுக்கிவைத்துவிட்டு  அப்பட்டமாக  சில  உண்மைகளை   காட்டியிருக்கிறார் .போலீசாக  வரும்  ராகவன்  வழக்கமாக  சட்டைக்கு  போடும்  கஞ்சியை  உள்ளுக்கும்  கொஞ்சம்  விட்டுக்கொண்டு  விறைப்பாக  காய்கறி  விக்குறவன்  தொடங்கி  மந்திரி  வரையில்  முஷ்டியை முறுக்கி  "அடிங்..நா  போலீசுடா" என்று  தமாஸ்  பண்ணுவதில்லை.ராகவனின்  கதை  என்பது  தனி.
                   ஆளவந்தான்  நந்து  கேரக்டர்  உங்களுக்கு  நினைவில்  இருக்கலாம் ."பூ  விழாம  தல  விழுந்திருந்தா  நீ  இந்தப்பக்கம்  நா  அந்தப்பக்கம்"  என்று  நந்து  விஜயிடம்  சொல்வதாக  ஒரு  வசனம்  இருக்கும்.நந்து  சித்தியிடம்  வளராமல்  மாமாவிடம்  வளர்ந்திருந்தாலும்  இதே  மாதிரிதான்  ஆகியிருப்பார்.The  inherent desire to sin  என்பது  சிறுவயதிலேயே   நந்துவின்  மனதில்  இருந்த  விஷயம்.அதை  சித்தி  ஊதி  பெருக்கிவிட்டாள்  என்று  வேண்டுமானால்  சொல்லலாம்.

                   ராகவனும்  கிட்டத்தட்ட  அப்படியே.சிறுவயதில்  கஞ்சா  அடிப்பதை  தந்தை  பார்த்துவிடுகிறார்.அதன்பின்  தொடர்  பெல்ட்  விளாசல்கள் ஆழ்மனதில்  இருக்கும்  அந்த  தீய  எண்ணங்கள்/செயல்கள்  மீதான  ஈர்ப்பின் விரிசலை  பெரிதுபடுத்துகிறது.இப்படிப்பட்ட  ஒரு  ஆள்    காவல்துறையில்  சேர்ந்தால்  தனக்குள்  இருக்கும்  அந்த  தீய  எண்ணங்களை  வெளிக்கொண்டுவர  ஒரு  வடிகாலாக  இருக்கும்  என்று  எண்ணுகிறான்  ராகவன்(அது  படத்தில்   சொல்லப்படுவதில்லை  என்றாலும்  அவ்வாறு  புரிந்துகொள்ளலாம்) .போதைக்கு  அடிமையான  ஒரு  insomniac ஆகவும்  sexual pervert  ஆகவும்  இருக்கிறான்.அதிகார  முகமூடியில்  அவன்  நினைத்ததை  செய்யமுடிகிறது.

                 நினைத்த  பெண்ணோடு  உறவு கொள்கிறான்.ஆனால்  திருமணம்  குழந்தை  என்ற  commit  ஆக  அவன்  விரும்பவில்லை.அது  அவனுக்கு   சரிப்படாது  என்பதையும்  உணர்ந்திருக்கிறான்.உறவு  கொள்ளும்  பெண்களை  காயப்படுத்துவதோடு  அல்லாமல்  தன்னையும்  ஒரு  self destructive  path  ல்  வழநடதத்துவதில்  மகிழ்கிறான்.
                   எல்லா  நேரத்திலும்  அதே  கடுமையோடு  ராகவனால்  நடந்துகொள்ள முடிவதில்லை.போதைப்பொருள்  சப்ளை  செய்யும்  அந்த  நைஜீரியன்  ராகவனை  உதைத்து  கீழேதள்ளி  துப்பாக்கியை  காட்டியதும்  நடுங்கிப்போகிறான்.அந்த  நேரங்களில்  மனதின்  இருண்ட  குகைக்குள்  முற்றிலுமாக  சிக்கிக்கொண்டு  வெளிவரமுடியாமல்  கிடக்கிறான்.இருண்ட  மனதிற்கும்  இவனிற்குமான  இடைப்பட்ட  சுவர்  போலவே  அவன்  போதைப்போருட்களையும்  பெண்களுடனான  perverse  உடலுறவுகளையும்   பயன்படுத்துகிறான்.

                    கீழ்லிருந்து  மேல்  வரை  முற்றிலும்  அழுகிப்போன  சமூகத்தின்;  மனித  மதிப்புகள்  முற்றிலுமாக  வீழ்ச்சியடைந்த  ஒரு காலகட்டத்தின்  பிரதிநிதிகளாகவே  ராமண்ணாவும்   ராகவனும்  சித்தரிக்கப்பட்டுள்ளார்கள்.ராகவன்  ஒரு  நடுத்தர  குடும்பத்தில்  இருந்து  வந்தவன்.ராமன்  அடித்தட்டு  சேரியிலிருந்து  வந்தவன்  என்பதெல்லாம்  இங்கே  எந்த  வித்தியாசத்தையும்  ஏற்படுத்துவதில்லை.எல்லா  தரப்பிலும்  எல்லா  தட்டுகளிலும்  இத்தகைய  மனிதர்கள்  நிறைந்த  சமூகமாகவே  நம்  சமூகம்  உள்ளது.
                    ராமனின்     சகோதரி  வீட்டில்  நடக்கும்  அந்த  செக்மன்ட்டில்  Michael Haneke  இயக்கிய  Funny Games(1997) படத்தின்  சாயலை  காணமுடியும்.ஆனால்  funny games  போல  படம்  பார்ப்பவர்களை thesis paper  போலவும் இயக்குனர்  தன்னை  பேராசிரியராகவும்  கற்பனை  செய்துகொண்டு   இம்சை படுத்தும்  வேலையை  அனுராக்  செய்யவில்லை. படத்திலேயே  ரொம்ப  இறுக்கமான  காட்சிகள்  அந்த  காட்சிகள்தான்.தனது  தந்தையையும்  தாயையும்  கொன்றுவிட்டதை   பதற்றமில்லாமல்  மெதுவாக   எட்டிப்பார்க்கும்  அந்த  சிறுவன்  இன்றைய  சிறுவர்  சிறுமிகள்  வன்முறை மீதுகொண்ட    ஈர்ப்பினை  காட்டுவதாகவே  உள்ளது.ஆனால்  இதையெல்லாம் பார்வையாளனுக்கு   preach  செய்வது  என்ற  நிலைக்கு  போய்  கொல்லாமல்  வெறுமனே  காட்சிப்படுத்தி  இருப்பது  ஆறுதலளிக்கிறது!


                    முதலிலேயே  சரணடையும்  ராமனை  போலீசு  கைது  செய்யாமல் ஏன்   அவன்  தப்பிக்கும்  வகையில்  பாழடைந்த குடியிருப்பில்  பூட்டிவிட்டு  செல்கிறார்கள்  என்பது  உறுத்தினாலும்  அதன்பிறகு  வரும்  காட்சிகள்  அந்தக்குறையை  மறக்கடித்துவிடுகிறது.
கடவுளின்  சிசிடிவி  கேமரா!

                  சமூக  அவலங்களை  குற்றங்களை  தண்டிப்பதற்காக  இருக்கும்  காவல்,நீதித்துறை,அதிகார  வர்க்கம்  எல்லாமே  பொது  ஜனத்திரளில்  இருந்து  வந்தவையே.பொதுமக்கள்  சீரழிந்த  நிலையில்  இருக்கும்போது  அதிலிருந்து  ஒருவர் வந்து  அதிகாரியாகவோ  நீதிபதியாகவோ  போலீசாகவோ  ஆனால்  அவர்களும்  அந்த  சமூக  அவலத்தின்   பிரதிநிதியாகத்தான்  இருப்பார்கள்  என்பதை  இப்படம்  உணர்த்துகிறது.Of course  ஒவ்வொரு  மட்டத்திலும்  சில  நல்லவர்களும்  இருக்கத்தான்  செய்கிறார்கள் .  ஆனால்  ஒப்பீட்டளவில்  மிகவும்  குறைவான  அளவில்  மட்டும்!

              ராமன்  கேரக்டர்  மட்டுமே  படம்  முழுக்க  தெரிந்தது.அதில்  நடித்த  நவாசுதின்  கண்ணுக்கு  தெரியவில்லை.நவாஸ்  என்ற  நடிகனை  முழுமையாக  எரித்து  ராமன்  கேரக்டருக்கு  உயிர்  கொடுத்துள்ளார்.இப்படிப்பட்ட  நடிப்பை  தமிழில்  பார்க்க  எனக்கும்தான்  ஆசை..என்ன  செய்ய!ராகவனாக  வரும்  விக்கியும்  நன்றாகவே  கேரக்டருக்கு  பொருந்துகிறார்.சிம்மியும்  கூட!

சிம்மி 

              காலம்  காலமாகவே  ஹிந்தி  படங்களில்  தென்னிந்தியர்கள்  கோமாளிகளாகவே  சித்தரிக்கப்பட்டுவருகிறார்கள்(சிலபல  விதிவிலக்குகளும்  உண்டு  என்றாலும்).தென்னிந்தியாவில்  நான்கு  மாநிலங்கள்  உள்ளன.அவர்களுக்கு  வெவ்வேறு  மொழி  பண்பாடு  எல்லாம்  உண்டு  என்ற  புரிதல்  இல்லாமலேயே  போட்டு  குழப்பியடிப்பார்கள்.உதாரணமாக  அமிதாப்  நடித்த   கூலி (1983)  படத்தில்  ஒரு  தென்னிந்திய குடும்பம்  காட்டப்படும்.அதில்  குடும்பத்தலைவர்  திருப்பதி  பெருமாள்  படத்தின்  முன்பு  நின்றுகொண்டு  "முருகா" என்பார்.நல்லவேளை  படத்தின்  இறுதியில் வரும்    அல்லா  சென்டிமெண்டில்  அல்லாவை  ஏசுவோடு  குழப்பாமல்  இருந்தார்களே(அது  இன்டர்நேசனல்  விஷயம்  உதயா-கும்மாங்கோ)!
             ஷாருக்  நடித்த  ரா  ஒன்  ,சென்னை  எக்ஸ்பிரெஸ்  எல்லாவற்றிலும்  தென்னிந்தியர்கள்  சித்தரிப்பில்   ஏக  குளறுபடி!இந்தப்படத்தில்  சிம்மி  ஒரு  தெலுங்கு  பெண்.அதற்காக  அவரின்  ஒருகையில்  திருப்பதி  லட்டையும்  இன்னொரு  கையில்  ஆவக்காய்  ஊறுகாயையும்  கொடுக்கவில்லை .அனுராகிடம்  அந்த  sensibility  இருப்பது  பாராட்டுக்குரியது. மற்ற  ஹிந்தி  இயக்குனர்களுக்கும்  அது  வரவேண்டும்.

ஒலக எழுத்தாளர்  உள்ளிட்டோர்  சொல்வதுபோல  இது உண்மையான   ராமன்  ராகவின் கதையல்ல.அதை  படமாக்க  60 களின்  செட்  போடவேண்டும்  காஸ்ட்யூம்ஸ்  சிக்கல்  கிராபிக்ஸ்  தேவைப்படும்  போன்ற  பட்ஜெட்  பிரச்சனையால்  நிஜ  ராமன் ராகவின்  கேரக்டரை  தழுவி  படமாக்கப்பட்டதே  இப்படம்!

                              கண்டிப்பாக  இது ஒரு  அற்புதமான  முயற்சி!ஆங்..படத்தில்   சிகரெட்  பிடிப்பது  blah blah blah ; குடிப்பது  blah blah  என்றெல்லாம்  மொண்ணை  எச்சரிக்கைகள்  வரவில்லை!இந்த  அபத்தங்களை  கடுமையாக  எதிர்க்கும்  அனுராகின்  முயற்சியால்  இது  நடந்ததா  என்பது  தெரியவில்லை.ஆனாலும்  அந்த  அபத்த  எச்சரிக்கை  வாசகங்கள்  ஒழிக்கப்பட  வேண்டும்  என்பதே  என்  கருத்தும்!
           
            

Sunday, 6 April 2014

Ishqiya(2010)- நம்பகத்தன்மையற்றவர்களுடன் ஒரு திரை பயணம்

                             பொதுவாகவே வணிக சினிமாக்களின் ஆதார சுருதி என்னன்னா polarization.அதாவது படம் துவங்கி முதல் அரை மணி நேரத்தில் "இவிங்க எல்லாம் அக்மார்க் நல்லவர்கள்.இவிங்க எல்லாம் அக்மார்க் கெட்டவர்கள்.நீ நல்லவனை வாழ்த்து, கெட்டவனை திட்டு" என்ற ரீதியில் நிறுவப்பட்டுவிடும்.ரசிகர்களின் மனப்போக்கும் அதே போலத்தான் செல்லும்.
            உயிர்மை இதழில் தியோடர் பாஸ்கரன் அவர்கள் எழுதியதாஅல்லது வேறு யாரோ எழுதியதா என்று நினைவில் இல்லை.ஆனால் அந்த quote நினைவில் இருக்கு, " அருவியில் குளித்துகொண்டிருக்கும் நாயகியிடம் சில்மிஷம் செய்யும் வில்லனை அடித்து துரத்திவிட்டு எம்.ஜி.ஆர். அதே செயலை செய்வார்".அதாவது நல்லவன் சில்மிஷம் செய்தால் அது ரொமான்சு.இதே வில்லன் (என்று நிறுவப்பட்டவன்) செய்தால் அது கிரிமினல் குத்தம்.இந்த விதியின் படி அமைந்த சினிமாக்கள் பல்லாயிரம்.
               (spoiler alert) ஹாரி பாட்டர் நாவலில் எனதபிமான கதாபாத்திரம் புரொபசர் ஸ்னேப்தான்.கிட்டத்தட்ட ஏழு நாவல்களிலும் அவரை கொடூர வில்லன் ரேஞ்சுக்கு காட்டி கடைசியில் வந்த டுவிஸ்ட் மிக சுவாரஸ்யமானதும் மனதை உருக்குவதுமாக இருந்தது.அதான் ஒரு எழுத்தாளரின் பலம். திரைக்கதை ஆசிரியரின் பலமும் அத்தகைய கதாபாத்திரங்களை திரைப்படங்களில் உருவாக்குவதே!
              இந்த வகையில் இந்த polarity/polarization ஆகியவற்றை உடைத்த படங்கள் அவ்வப்போது வந்துள்ளன.அரிதாக தமிழிலும்.உதாரணமாக தமிழில் வந்த "நான்" ,"நான் அவனில்லை" போன்ற படங்களை சொல்லலாம்.நாயகன் கதாபாத்திரம் நல்லவனா கெட்டவனா என்று ஒரே வரியில் சொல்லிவிட முடியாத படியான செயல்களை செய்தவனை மையபடுத்திய படங்கள் இவை.
              இந்த வரிசையில் ஒரு படம் என்றால் அது Ishqiya.பொதுவாகவே விஷால் பரத்வாஜின் படங்கள் மனித மனத்தின் இருண்ட பாகங்களை படம் பிடித்து காட்டும் தன்மையுடையவை.குறிப்பாக polarisation க்கு உட்படாத கதாபத்திரங்களே அவர் படத்தில் நிறைந்திருக்கும்.உதாரணமாக அவர் இயக்கிய Kaminey படத்தை சொல்லலாம்.இஷ்கியா படத்தை அவர் இயக்கவில்லை.அபிஷேக் சவுபே தான் இயக்குனர்.ஆனால் கதை திரைக்கதை மற்றும் வசனம் வி.பரத்வாஜ்.

              இந்த படத்தில் இரண்டு  திருடன்கள் ,அவர்களை துரத்தும் முஷ்டாக், இவ்விருவருக்கு அடைக்கலம் கொடுக்கும் பெண் கதாபாத்திரம்,அவளது கணவன் கதாபாத்திரம்,கணவனின் கூட்டாளி,சாதி "போர்ப்படை"யில் இணைக்கப்பட்ட பதினைந்து வயது "பெரிய மனுஷன்" ஆகிய அனைவருமே நல்லவன்/கெட்டவன் என்ற இரு துருவங்களில் அடையாளம் காணப்பட/காட்டப்பட  முடியாதவர்கள்.அதுதான் இந்த படத்தின் ஆதார பலமே.
               குறிப்பாக  கிருஷ்ணா(வித்யா) கதாபாத்திரம் மர்மமான, எந்த நேரத்தில் எதை செய்வாரோ என்று சந்தேகப்பட வைக்கும் ஒரு கதாபாத்திரம்.Kahaani படத்தில் கூட வித்யாவுக்கு இதே போன்ற "மர்மமான" ரோல்தான்.அதில் படித்த பெண்மணியாக வருவார்.இதில் படிப்பு வாசனையற்ற ஒரு கிராமத்து பெண்மணியாக வருகிறார்.கிராமத்து பெண்மணி என்றாலே ஒரு பாவாடை தாவணியை போட்டுகினு கழுத்து சுளுக்கும் வரை ஒரு புதரு மண்டிய ஒரு மூஞ்சியை பார்த்துகொண்டே செல்லும் மொக்கை தமிழ்ப்பட பெண்மணி அல்ல இவர்.இவருக்கு துப்பாக்கியை குறிபார்த்து சுட தெரிந்துள்ளது.வேன் ஓட்டுகிறார்.தன்னை நம்பி வந்த அர்ஷத் வர்ஸி மற்றும் நஸீர் ஆகியோருக்கு உதவுவது போல உதவி ஒரு கட்டத்தில் அந்த இரு கில்லாடி கிரிமினல்களையே டபுள் க்ராஸ் செய்கிறார்.இது போன்ற ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் ஆரண்ய காண்டம்  படத்தில் சுப்புவாக   பார்த்திருக்கலாம் .

                 இந்த படத்தின் அச்சாணி போன்ற கேரக்டர்கள் மூவர்.அர்ஷத் வர்ஸி நஸீர் மற்றும் வித்யா பாலன்.மூவரில் ஒருவர் நடிப்பில் சொதப்பியிருந்தால் கூட படத்தை ஒரு நிமிடம் கூட பார்க்க முடியாதபடி ஆகியிருக்கும்.அப்படி எதுவும் நடக்கவில்லை.மூவரும் பட்டையை கிளப்பியிருக்கிறார்கள்.
                 அடைக்கலம் கொடுத்த கிருஷ்ணாவின் வீட்டில் தங்கியிருக்கிறார்கள் அர்ஷத்&நஸீர்.இரவில் அவசரத்தில் வந்து தங்கிய நேரத்தில் அவர்கள் வித்யாவை சரியாக பார்க்காமல் தூங்கிவிடுகிறார்கள்.மறுநாள் காலையில் வித்யா ஒரு அற்புதமான பாடலை பாடுகிறார்(பாடகி:ரேகா பரத்வாஜ்.விஷாலின் மனைவி).அதில் மயங்கும் நசீர் ரொமான்டிக்காக கண்ணாடியில் தன முகத்தை பார்க்கிறார்.வெள்ளை தாடி இருப்பதை காணும் அவர் அங்கிருக்கும் மை டப்பாவை எடுத்து தனது தாடியில் பூசி கருப்பு தாடியாக அதாவது "தனக்கு இன்னும் வயதாகவில்லை.காதலிக்க தயார்" என்று மறைமுகமாக கிருஷ்ணாவுக்கு புரிய வைக்கவே இந்த கூத்து.நசீர் காதலில் விழுந்ததை உணரும் போது வரும் அட்டகாசமான பாடல் இதோ::
 இந்த பாடலின் இசை, பாடிய Rahat Fateh Ali Khan இன் குரல்,,பாடலை படமாக்கிய விதம் இவை எல்லாவற்றையும் தாண்டி பாடலில் அற்புதமான நடிப்பை வெளிபடுத்திய நஸீர்..ஆகா..என்னவொரு அற்புதமான காம்பினேஷன்!!
                  ஆனால் உண்மையில் வித்யா அர்ஷதுடன் இருப்பதை நஸீர் 
பார்க்க,அதனால்  இருவருக்கும் சண்டை வர அதனால் அவர்கள் போட்ட கடத்தல் திட்டத்தில்(கிருஷ்ணாவின் கணவரின் கூட்டாளியை கடத்த திட்டம் போடுகிறார்கள்) மிகப்பெரிய சறுக்கல்.அந்த நேரத்தில் கிருஷ்ணா இவ்விருவரையும் டபுள் க்ராஸ் செய்கிறார்.அதன் பின் என்னானது என்பதை திரையில் பார்க்கவும்.
                            அதிள் ஒரு சுவாரஸ்யமான காட்சியை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.அதுதான் கிருஷ்ணாவின் கணவன் வர்மாவின் கூட்டாளி கேகே என்ற தொழிலதிபர் பற்றியது.அவரை கடத்த அவரின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நேர பிரகாரம் ஒரு போர்டில் எழுதுகிறார்கள் மூவரும்.அதில் கோவிலுக்கு சென்றுவிட்டு கேகே வேறெங்கோ செல்வதை அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள்.அவரை பின் தொடர்ந்து சென்றால் அது ஒரு பழைய ப்யூட்டி பார்லர் என்ற பேரில் இருக்கும் ஒரு கட்டிடம்.பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க..  கேகேயின் மனைவி மாடர்ன் டிரெஸ்சில் கையில் ஒரு கழியுடன் கணவனையும் அவன் கண்களையும் கட்டிபோட்டுவிட்டு  masochism பாணி எழுச்சியை உண்டாக்கி கொண்டிருப்பதும் அதை அடக்க முடியாத சிரிப்புடன் பப்பனும் கிருஷ்ணாவும் ஒளிந்திருந்து பார்ப்பதும் பின் அதை பற்றிய பேச்சு  வரும்போதெல்லாம் இவ்விருவரும் விழுந்து விழுந்து சிரிப்பதும் இது புரியாமல் காலு விழிப்பதும் டிபிகல் விஷால் பரத்வாஜ் ஸ்டைல் .
                        மற்றபடி குறிப்பிடப்பட வேண்டியது இசை.ஏற்கெனவே இரண்டு பாடல்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்.எனதபிமான விஷால் பரத்வாஜ்தான் இசை.அவரின் 7 Khoon Maaf பாடல்களை ஆயிரம் முறையாவது கேட்டிருப்பேன்.இந்த படத்தின் பாடல்களும் அட்டகாசமானவை.இந்த படத்தின் இசைக்காக தேசிய விருது பெற்றார் விஷால்.அது மட்டுமல்லாது
Badi Dheere Jali பாடலுக்காக அவரது மனைவி அற்புதமான பாடகி ரேகா பரத்வாஜும் தேசிய விருது பெற்றார்.அந்த பாடல் இதோ:

பாமரத்தனமான குரலுக்கு சொந்தக்காரர் ரேகா..ராவன்(ஹிந்தி)படத்தில் Ranjha Ranjha பாடலை இவர் பாடியிருப்பார்.இதே பாடலின் தமிழ் வடிவத்தில்(காட்டுச்சிறுக்கி) அனுராதா ஸ்ரீராம் பாடியிருப்பார்.வின்னர் ரேகா தான்.இரண்டு பாடலையும் கேட்டவர்களுக்கு அது தெரியும்


                  மற்றபடி இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய போகிறார்கள் என்ற ஹார்ட் அட்டாக் வரவைக்கும் செய்திக்கெல்லாம் நான் முக்கியதத்துவம் கொடுப்பதில்லை.ஏன்னா அந்த படத்தை தமிழில் பார்க்க வேண்டும் என்று நினைத்தால் தானே அதைப்பற்றி நான் கவலைப்பட வேண்டும்.பார்க்கபோவதில்லை என்று முடிவெடுத்த படம் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?

Wednesday, 9 May 2012

Kahaani -டோன்ட் மிஸ் இட்

                 பொதுவாகவே த்ரில்லர் என்றால் நல்லவன்-கெட்டவன் அப்பால கெட்டவனை ஹீரோ சென்று அழிப்பது(சைக்கிள கேப்பில் தனது கர்ப்பிணி மனைவிக்கு வில்லனால் வரும் ஆபத்தில் இருந்து காப்பாற்றுவது) ஆகாயத்தில் கம்பி கட்டி சுழல்வது ந்யூட்டன் விதிகளுக்கு மாறாக சேட்டைகளை ஆகாயத்தில் செய்வது அதற்கு ஹோ ஹோ ஹோ என்று காதை செவிடாக்கும் இசை கொடுப்பது போன்ற அபத்தங்களையே பார்த்து புளித்து போன எனக்கு(நமக்கு என்றும் கூட சொல்வது பொருந்தும்) இந்த படம் உண்மையிலேயே ஆறுதலாக இருந்தது.
         இந்த படத்தின் காட்சிகளையோ அல்லது முக்கிய திருப்பங்கலையோ சொல்லிவிட்டால் படம் பார்ப்பதே வேஸ்ட்!குறைகள் படத்தில் இருந்தாலும் நாம் அதை மனதில் கொண்டு செல்லாதவாறு திரைக்கதை சில்லிட வைக்கிறது.

         வித்யா பாலன் Dirty picture படத்துக்கு தேசிய விருது பெற்றது சரியா தவறா என்ற விவாதம் முடியும் முன்பே நான் அதற்கு தகுதியான ஆள்தான் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்(க்ளைமாக்சில் அவர் பேசும் அந்த காட்சி ஒரு சிறந்த உதாரணம்) கர்ப்பிணி பெண்களுக்கே உரிய கால்களை சற்று அகட்டி வைத்து நடப்பது காலை ஆட்டிக்கொண்டே இருப்பது போன்ற மிக சிறு உடல்மொழிகளை கூட சரியாகவே செய்துள்ளார்!
        இந்த படைத்திருக்கும் அவர் தேசிய விருது பெறுவார் என சொல்லப்படுகிறது.அதோடு பேசப்படும் இன்னொரு தேசிய விருது நாமினி உளவுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் Nawazuddin Siddiqui .எனக்கு உயிரே படத்தில் அபாரமாக நடித்த ஒரு சிபிஐ (பிரகாஷ் ராஜ டப்பிங் பேசியிருப்பார்) அதிகாரியாக  நடித்த அந்த நபரை நியாபகபடுத்தியது! "அடுத்த இர்பான்கான்" என சொல்லப்படும் இவருக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.மற்றபடி ஒவ்வொருவருமே தங்களது பணியை செவ்வனே செய்துள்ளனர்!சிறுவர்கள் கூட அருமையாக கதைக்கு ஒன்றி நடிக்க வைத்தது இயக்குனரின் திறமையை காட்டுகிறது.
         பின்னணி இசை படத்தில் வரும் முதுகு தண்டு சில்லிடும் காட்சிகளை மேலும் சில்லிட வைப்பதாக உள்ளது  
        மற்றொரு அபார பலம் கொல்கத்தா பின்னணி.மிகவும் அருமையாக அந்த பின்னணி கதையோடு ஒன்றி பயனித்துள்ளது.
       நூறு இரநூறு கோடி செலவில் க்ராபிக்சே சரணம் என எடுக்கப்பட்டு தோல்வி அடைந்த படங்களுக்கு மத்தியில் எட்டு கோடி செலவில் மிக அருமையான ஒரு படம்(கிராபிக்ஸ் மற்றும் நான் மேலே முதல் பாராவில் சொன்ன க்லீஷேக்கள் இல்லாமல்)எடுத்திருப்பது மிக நல்ல விஷயம்.இடைவேளை காட்சி நிஜமாலுமே திகிலூட்டியது. திரைஅரங்கில் பார்த்தோர் எப்படிப்பட்ட ஒரு அதிர்ச்சிக்குஉள்ளாகி இருப்பர் என நினைத்தேன்.நமக்கு அந்த வாய்ப்பு இல்லை!சப் டைட்டில் இல்லாமல் பார்க்க முடியாதே!
அடுத்து  நான் பார்க்கநினைத்திருக்கும் படமும் லோ பட்ஜெட் அதே நேரம் நல்ல திரைப்படம்.அது- Paan Singh Tomar.பார்த்துவிட்டு சொல்கிறேன்