Friday, 21 March 2025

800

 பொதுவாக இந்தமாதிரி வாழ்க்கை வரலாற்று படங்கள் பெரும்பாலும் காண்பவரிடம் அவ்வப்போது மனவெழுச்சி ஏற்படுத்தும் தருணங்களை பிரதானமாக வைத்தே எடுக்கப்படுகின்றன.

 

   பார்வையாளன் படத்தின் மைய கதாபாத்திரத்தின் சமகாலத்தவராக இருந்தால் இயக்குனருக்கு மேலும் சுலபம்.காரணம் அந்த தருணம் நிகழ்ந்த காலத்தை பார்வையாளன் தனது தனிப்பட்ட வாழ்வோடு ஏதோ ஒரு வகையில் தொடர்புபடுத்தி கொண்டிருப்பான்.அந்தத்தருணங்களை மிகச்சரியாக திரையில் கொண்டுவந்தாலே போதும்!

    இப்படத்தில் அது சாத்தியப்பட்டுள்ளது. முத்தையா முரளீதரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு நன்றி.இல்லாவிட்டால் திரையில் யார் முரளிதரன்? யார் ரணதூங்கா? என்று பெருங்குழப்பம் வந்திருக்கும்.


    முரளிதரனாக நடித்த மதுர் மிட்டல் அச்சு அசலாக பொருந்துகிறார்.அதிலும் மிக முக்கியமாக பந்து வீசும் அந்த தொனி - ஒரு தனித்தன்மையான பாணியில் ஓடிவந்து கண்களை அகல விரித்து(இதற்கும் ஒரு காட்சி வருகிறது) மணிக்கட்டை சுழட்டி பந்து வீசும் அத்தனை உடல்மொழியும் மிகச்சரியாக வெளிப்படுத்தியுள்ளார்.


 

   படத்தில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக  நடந்த கலவரங்கள் காட்டப்படுகின்றன.தமிழர்கள் குறிவைத்து தாக்கப்படும் காட்சிகளும் உண்டு .அதற்கு பயந்து முரளியை ஒரு கிறிஸ்தவ கான்வெண்டில் சேர்த்து விடுவதாக படம் செல்கிறது.
  கத்திமேல் நடப்பது போன்றதே இப்படத்தை எடுப்பது! ஒருபக்கம் ரொம்பவும் இலங்கையை விமர்சிக்க கூடாது.அதே நேரம் ரொம்பவும் இருட்டடிப்புச் செய்ய கூடாது.இந்தியாவையும் பகைத்துக்கொள்ள கூடாது என்று சர்வ எச்சரிக்கையாக படத்தை எடுத்துள்ளார்கள் .மேலும் இம்மாதிரியான வாழ்க்கை வரலாற்று படங்கள் பார்வையாளனுக்கு ஒருவித நேர்மறை எழுச்சியை கொடுப்பதற்காகவே எடுக்கப்படுகிறது.இதில் ஏன் அந்த கலவரத்தை நுணுக்கமாக காட்டவில்லை?ஏன் இந்த பிரச்சனை குறித்து ஆழமாக பேசவில்லை? என்றெல்லாம் கேட்பதே அபத்தம்.
    

    தற்கால தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தில் இருக்கும் மாஸ்டர் ரித்விக்  இந்தப்படத்தில் அட்டகாசமாக நடித்துள்ளான்.தொடர்ந்து இவன் நடித்த ஐந்து படங்கள் நூறு கோடி வசூல் என்கிறார்கள். தொடர்ந்து பப்படங்களாக கொடுத்து வரும்  ஒங்க இவரு இதையெல்லாம் பார்த்து கற்க வேண்டும் 🤪
பய நடிப்புல பின்னிட்டான்!


 
     அர்ஜுனா ரணதூங்கா மட்டுமே பிரதானமாக காட்டப்படுகிறார்.அவர் இலங்கை அரசியலில் முக்கிய பொறுப்பில் சில காலம் முன்பு இருந்ததாக கேள்விப்பட்டதுண்டு .அதன் காரணமாக கூட இந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.ஆனால் அப்படி எதுவும் இல்லாவிட்டால் கூட தனது அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் ஆஸி நாட்டின் நடுவர்கள் பத்திரிகையாளர்கள் விளையாட்டு வீரர்களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் நேரத்தில் உறுதுணையாக அவருடன் நின்றவர் என்ற வகையில் இந்த படத்தில் எப்படி இருந்தாலும் அவர் பிரதான கேரக்டர் தான்.கிங் ரத்னம் தொப்பை வரையில் ரணதூங்கா கேரக்டரில் பொருந்துகிறார்.

 
    96 உலக கோப்பை வெற்றி காட்டப்படுகிறது.ஈடன் கார்டன் அரை இறுதியில் இந்திய அணி அதன் ரசிகர்களாலேயே எதிர்கொண்ட அவமானங்களை காட்டாமல் மானத்தை காப்பாற்றி உள்ளனர் . ஈடன் கார்டன் கலவர காட்சிகள் இன்னமும் கண்முன் நிற்கிறது!

 
 
 
ஜெயசூர்யா காட்டடி அடித்த ரெண்டு ஷாட்டாவது வச்சிருக்கலாம்.அதேபோல எப்படி முரளிதரன் பந்தை எறிகிறார் என்ற குற்றசாட்டு வந்ததோ அப்படி ஜெயசூர்யா பேட்டில் ஸ்பிரிங் வைத்து அடிக்கிறார் என்று யாரோ கிளப்பி விட்டனர்.ஆனால் அது பெரிதாக எடுபடவில்லை.
 

 
மேலும் பிற்காலத்தில் சங்ககரா எனும் குறும்புக்கார விக்கெட் கீப்பர் கையில் பந்தே இல்லாமல் ரன் அவுட் செய்வது போல பாவனை செய்து பேட்ஸ்மேன்களை கீழே விழவைத்து  கடுப்பேற்றிய காட்சிகளும் இடம்பெறவில்லை .அதை சேர்த்திருக்கலாம் 😃
 

      ஷேன் வார்ன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பார்க்க மார்க் வா மாதிரி இருந்தார்! (தினத்தந்தியில் மார்க் வாக் என்று எழுதுவார்கள்). கபில் தேவ் சட்டென்று பார்க்க கபில் போலவும் சற்றுநேரம் கூடுதலாக பார்த்தால் கவிதாலயா கிருஷ்ணன் போலவும் இருந்தார்.
 


       தமிழனா? சிங்களனா?சிங்கள ஆதரவு தமிழனா?இந்திய தமிழனா?இலங்கை தமிழனா?புலிகள் ஆதரவு தமிழனா?புலிகள் எதிர்ப்பு தமிழனா?அசல் திறமை கொண்ட சுழற்பந்து வீச்சாளனா?இல்லை தில்லாலங்கடி செய்து பந்தை எறியும் மோசடியா? என்றெல்லாம் வாழ்நாள் முழுக்க இப்படியான ஏடாகூட இடியாப்ப சிக்கல் கொண்ட அடையாளமற்ற ஒரு சூழலில் சிக்கிக்கொண்டவர் முரளி.படத்திலும் இதுபோன்ற ஒரு காட்சி வருது.  

 

    தமிழ்ப்பெயர் கொண்டதாலேயே பயிற்சி ஆட்டத்திற்கு மைதானத்துக்கு உள்ளே அனுமதிக்காமல் பையில் வெடிகுண்டு என்ற சந்தேகத்தில் வெளியிலேயே இலங்கை இராணுவம் முரளியை முட்டி போட வைப்பதாக ஒரு காட்சியும் வருகிறது.
    மேலும் வாழ்க்கை வரலாற்று படங்கள் என்றாலே ஒரு பத்திரிகையாளர் கேரக்டர் இருக்கும். இதில் நாசர் அந்த கேரக்டரை செய்துள்ளார் .தனது மகன் முரளி போல வருவான் என்ற நம்பிக்கையில் இருந்தவர் குண்டு வெடிப்பில் கால்களை இழந்து வாழ்க்கையையும் இழந்த ஒருவனின் தந்தையாக வருகிறார்.சில இடங்களில் படத்தின் தொனிக்கு வெளியே சென்று விடும் காட்சிகளாக இருந்தாலும் சில ஏடாகூட சர்ச்சைகள் விமர்சனங்களை தவிர்க்கவே இத்தகைய காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன என்று புரிந்து கொண்டோம் .

   பாகிஸ்தான் டூருக்கு செல்ல பாதுகாப்பு காரணங்களை சொல்லி இந்தியா மறுக்க நட்புக்கரம் நீட்டுவதாக நினைத்து அனுப்பப்பட்ட இலங்கை விளையாட்டு வீரர்கள் மயிரிழையில் தீவிரவாத தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய காட்சிகளும் உண்டு.
 .    
 . முரளிதரன் பந்தை எறிகிறார் என்று கொந்தளித்த அதே ஆஸி ஊடகங்கள் 2007 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆடம் கில்கிறிஸ்ட் கிளவுசுக்குள் கோல்ஃப் பந்தை வைத்து அதன் மூலம் 150+ அடித்ததை விவாதிக்கவில்லை.
  2007 2011 இரண்டிலும் இறுதிப்போட்டிக்கு வந்தது இலங்கை.2007 இல் மழை இருட்டிக்கொண்டு வந்து எதிரில் யார் நிற்கிறார்கள் என்றே தெரியாத நிலையில் இலங்கை பேட்டிங் செய்தது.

 

     இந்த படத்தை எதிர்த்த உள்ளூர் போராளிகள் பற்றி பார்ப்போம்.இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது என்று சொன்னது படத்திற்கு மிகப்பெரும் உதவி தான்.அடுத்து என்ன பேச போகிறோம் என்ன செய்ய போகிறோம் என்ற குழப்பத்தில் என்னாச்சு? பாணி முகபாவத்திலேயே வி.சே நடித்திருப்பார்.அதில் கண்டிப்பாக முரளிதரன் தெரிந்திருக்கவே மாட்டார்.



   மேலும் லைகா நிறுவனத்திற்கு ஆரம்பத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு பிறகு "என்ன மாயமோ மந்திரமோ" மொத்தமாக அடங்கி போனது!எப்ப இங்க இலங்கை பிரச்சனை பெரிதாக ஆதாயம் தராது என்று உணர்ந்தார்களோ அப்போதே அதை கைவிட்டு விட்டார்கள்.ஒருவகையில் இலங்கையில் உள்ள தமிழர்கள் "ஆள விட்டதற்கு நன்றி!" என்று நினைத்திருப்பார்கள்.
 

      தான் பந்தை எறியவில்லை  என முரளிதரன் இருமுறை நிரூபித்தது,அம்பயர் நோபால் கொடுத்த வன்மம் (பொதுவாக ஆசிய அணிகளே இம்மாதிரியான குறிவைத்த தாக்குதல்களில் சிக்கியுள்ளன),96 உலகக்கோப்பை வென்ற தருணம்,முரளிதரன் முதன்முதலில் விளையாடிய மேட்ச் ( டெண்டுல்கர் முதலில் விளையாடிய மேட்சை லைவில் பார்த்தது போல இதையும் நாம்  பார்த்துள்ளோம்) இதெல்லாம் நிஜத்தில் நிகழும்போதே நாம் தொடர்ந்து கண்டு வந்ததால் இப்படத்தின் பல தருணங்கள் மிக நெருக்கமாக உணர முடிந்தது.அத்தகைய அனுபவம் இல்லாதவர்கள் கூட கண்டிப்பாக படத்தை ரசிக்கலாம் .கிரிக்கெட் ஆர்வலராக இருப்பது அவசியம்!

       

  

Friday, 7 March 2025

பின்னணியில் நின்றுவிட்ட குரல்கள்

 ஃபெபி மணியின் பெயரை நாம் ஏற்கெனவே முத்து ஆடியோ கேசட்டில் பார்த்திருந்தாலும் முதலில் கண்டுகொண்டது ஒரு முழுப்பாடலில்.காதல் மன்னன் படத்தில் வரும் கன்னிப்பெண்கள் நெஞ்சத்தில் பாடல்தான் அது.யாருய்யா இவ்வளவு ஸ்டைலா பாடி இருக்காங்க என்று கேசட்டை பார்த்தபோது இவரா?ஏற்கெனவே சில பாடல்களில் வரும் சின்ன சின்ன பகுதிகளை பாடியவர் ஆச்சே! என்று தோன்றியது.
Febi Mani - Tanvi Shah

 
    அதற்கு முன்பு  முத்து - கொக்கு சைவ கொக்கு பாட்டில் கோரஸ்,மின்சார கனவில் ஸ்ட்ராபெரி கண்ணே பாடலில் - பழைய பைத்தியம் நானுமில்லை என்று பாடி இருப்பார்.பாரதி கண்ணம்மா சின்னச்சின்ன கண்ணம்மா  அற்புதமாக பாடியிருப்பார்.இடையில் வரும் வீணையும் அவர் குரலும் அட்டகாசமாக ஒத்திசைந்து ஒலிக்கும்!

 

    ஆனால் அதன்பிறகு இந்த அதியற்புத ஸ்டைலான குரலை முழுப்பாடலுக்கு பெரும்பாலும் யாரும் பயன்படுத்தவில்லை.
   பெரும்பாலும் ஹம்மிங் கோரஸ் போன்றவற்றில் மட்டுமே அவர் பெயரை காண முடிந்தது.குறிப்பாக ஏ.ஆர்.ஆர் அதிகமாக இவர் குரலை அவ்வாறு பயன்படுத்தினார்.

   ஜீன்ஸ் படத்தின் தீம் இசையான "நிசரி சா..." என்று அற்புதமாக பாடியிருப்பார்.பிறகு படையப்பாவில் "கிக்கு ஏறுதே" பாடலின் இடையில் "சஜூனானே சஜூனானே" என்று மிக உருக்கமாக  பாடி இருப்பார்.

 

   Dil Se படத்தில் Dil Se Re பாடலின் இறுதியில் அனுபமா(கொஞ்சம் நிலவு புகழ்) & அனுராதா ஶ்ரீராம் பாடி இருப்பார்கள்.அதுவே தமிழில் சந்தோஷ கண்ணீரே பாடலின் இறுதியில் அனுராதா ஶ்ரீராம் மற்றும் ஃபெபி மணி ஆகியோர் பாடி இருப்பார்கள்."பெண்ணே பெண்ணே பேசாய் பெண்ணே" என்று தொடங்கி இரண்டே இரண்டு வரிகள்.

    ஹிந்தி தமிழ் இரண்டிலுமே இன்னும் கொஞ்சம் இவர்கள் பாடி இருக்கலாமே என்று தோன்றும்.இரண்டு பாடல்களிலும் அனுராதா ஶ்ரீராம் குரல் பொருந்தாமல் ஒலிக்கும்.அந்த பாடலையே ஏ.ஆர்.ஆர் ஃபெபி மணி ஆகியோர் பாட ஒரு டூயட் பாடலாக இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே! என்று தோன்றும்!
 
Annupama


 
ஏ.ஆர்.ஆர் ஹிந்தி தமிழ் என்று இரண்டு மொழிகளில் ஒருசேர இசை அமைத்தால் ஹிந்தி பதிப்பை மட்டுமே கேட்கும் வழக்கம் நமக்குண்டு.ஆனால் இந்த ஒரு பாடலுக்கு மற்றும் விதிவிலக்காக இவர் குரலுக்காக கேட்பதுண்டு.

   
ஹாரிஸ் மாம்ஸ் இவருக்கு சில பாடல்களை பாட கொடுத்தார்.

மஜ்னு ஹரிகோரி போன்சாயி பாடலில் உனக்காக ஒருத்தி வந்தாள் அழகாக எதிரில் நின்றாள் என்று கோரசாக பாடினாலும் இவர் குரல் தனித்து ஒலிக்கும்.
 

 இவர் குரலை இடைநிரவலாக மட்டுமே அரசாட்சி(இருபது வயசு) &  காக்க காக்க படத்தில் பயன்படுத்தி இருப்பார்.தூது வருமா பாடலில் சுனிதா சாரதி பிரதானமாக பாட "தூது இல்லே" என்று இடையில் பாடுவார்.
Sunitha Sarathy

 

    பிறகு ஶ்ரீகாந்த் தேவா இசையில் ஜித்தன் படத்தில் "கோயமுத்தூர் பொண்ணு நீயா" பாடலை ஶ்ரீகாந்துடன் பாடியிருப்பார்.ஆனால் அந்தப்பாடல் அவரது comfort zone க்கு வெளியே வரும் பாடல் என்பதால் அவரது குரல் மிகச்சுமாராக ஒலித்திருக்கும்.
    ஶ்ரீகாந்த் தேவாவை மணமுடித்த கையோடு பாடுவதை நிறுத்திக்கொண்டார்.அவர் பாடுவதை நிறுத்தியது அப்போது வருத்தமாக தெரியாமல் அதன்பிறகு வேறு சில பாடல்களை கேட்கும்போது "இந்தப்பாடலை ஃபெபி பாடியிருந்தால் எவ்வளவு அருமையாக இருந்திருக்கும்" என்று தோன்றியது மூன்று பாடல்களை கேட்டபோது.
   1. கஜினி படத்தில் ரஹத்துள்ள பாடல்
   2.அந்நியன் படத்தில் கண்ணும் கண்ணும் நோக்கியா ஒவ்வொரு முறை கேட்கும் போதும் இதை அவர் பாடியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றும்.
3. அயன் படத்தில் ஹனி ஹனி பாடல்


இப்படி மிகக்குறுகிய காலத்தில் ஒரு அற்புத குரல் பாடுவதை நிறுத்திக்கொண்டது தமிழ்த்திரையிசைக்கு இழப்புதான்.அதிலும் அவரை நிறைய முழு பாடல்களுக்கு பாட வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது அதைவிட பெரிய அவலம்.

***************************
தன்வி ஷா :

     இவரும் ஃபெபி போலத்தான்.துண்டு துக்கடா இடைநிரவல்களுக்கு மட்டுமே வருவார்.யுவன் இசையில்தான் அதிகமாக அப்படி பாடியுள்ளார்.ஏ.ஆர்.ஆர் இசையில் வரலாறு படத்தில் இன்னிசை அளபெடைய பாடலில் இடையில் கொஞ்சமாக வந்துபோவார்( இந்தப்பாடல் மூன்று வகையாக வரும்.அதை விரிவாக வேறொரு பதிவில் பார்ப்போம்).

   அதற்கு முன்பே ஆய்த எழுத்து படத்தில் யாக்கை திரி பாடலில் "ஜென்மம் விதை காதல் பழம்" என்று இடையில் பாடி இருப்பார்.

     நமதபிமான ஷ்ரேயா கோஷால் பாடியதாலேயே பல ஆயிரம் முறை கேட்ட பனித்துளி பனித்துளி பாடலின் இடையில் அற்புதமாக ஹம்மிங் செய்திருப்பார்.

 

   என் காதல் சொல்ல நேரமில்லை என்று யுவன் பாடிய பாடலின் இடையே "இவரைத்தவிற எவரும் இந்த மாதிரி ஹம்மிங் கொடுத்திருக்க முடியாது" என்கிற அளவில் பாடியிருப்பார்.
 இறகைப்போலே  அலைகிறேனே பாடலிலும் பின்னணி ஹம்மிங் தான்.

     

 
இதில் பிரச்சனை என்னவென்றால் அவர் ஹம்மிங் இடைநிரவல் கோரஸ் என்று பாடும்போது அற்புதமாக அவரது comfort zone க்குள் அதேநேரம் ஒரே மாதிரியான சட்டகத்தில் அடைக்காமல் பாட வைத்திருப்பார்கள் யுவன் மற்றும் ஏ.ஆர்.ஆர்.

   ஆனால் தனிப்பாடல்கள் என்றால் க்ளீஷே என்று சொல்லத்தக்க வண்ணம் ஒருமாதிரி ஆங்கிலத்தனமாக மட்டுமே பாட வைத்து (ஜில்லென்று ஒரு காதல் படத்தில் அதே வரிகளில் ,சிவாஜி படத்தில் ஸ்டைல், சரோஜாவில் My Life) அவரது குரலின் வேறு பரிணாமங்கள் வெளிப்பட வாய்ப்பில்லாமல் செய்தனர்.
   புதுப்பேட்டை படத்தில் புல் பேசும் பாடல் கொஞ்சம் அந்த சட்டகத்தில் இருந்து வெளியே வந்த பாடல்.தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் அதே வரிகளில் ஆண்ட்ரியாவுடன் பாடியிருப்பார்.ஏற்கெனவே ஆண்ட்ரியாவும் ஆங்கிலத்தனமான பாடல்களை பாடி வந்ததால்( கண்ணும் கண்ணும் நோக்கியா மாதிரி) அந்த இடத்தில் தன்வியின் தனித்தன்மை அடிபட்டு போனது.
    நாம் விரும்பியது என் காதல் சொல்ல பாடலின் இடையில் அவர் ஹம்மிங் செய்யும் அந்த தொனியில் ஒரு முழுப்பாடல்.அது நடக்கவில்லை.
   ஆனால் ஹிந்தியில்  Pappu can't dance Saala (Jaane Tu ya jaane naa) உள்ளிட்ட பல பிரபல பாடல்களை பாடியுள்ளார்.ஆனால் பதிவின் தலைப்பில் சொல்லப்பட்ட அந்த கருத்துக்கு வெளியே அது சென்று விடும் என்பதால் அதைப்பற்றி எழுதவில்லை.
   மேலும் தலைப்பை இருவிதமாக அர்த்தம் கொள்ளலாம்.
- தமிழில் இந்த இரு குரல்களையும் இப்போது கேட்க முடியாது.
- பெரும்பாலும் இருவரும் பின்னணியில் ஹம்மிங் கோரஸ் இடைநிரவல் என்றே குறுகிய வட்டத்திற்குள் வைக்கப்பட்டுவிட்டனர்.

Sunday, 2 March 2025

டாக்டர்ஸ்

 அனூஜை பல ஆண்டுகளுக்கு முன்பு தற்செயலாக ஒரு யூட்யூப் வீடியோவில் பார்த்தது.அதன்பிறகு அவரது சேனலை தொடர்ந்து பின்பற்றி வருகிறோம்.சிறுவயதில் அவர் போட்ட அறிவியல் விளக்க வீடியோக்கள் பார்த்தபோதே ஒரு prodigy என்று தெரிந்தது.அவர் சேனலை தொடர ஆரம்பித்து ஒரு பனிரெண்டு வருடங்கள் இருக்குமா?நினைவில்லை!
Dr.Anuj Pachhel

 

   அவ்வாறே நீட் UG ல பெரும் சாதனை செய்து நாக்பூர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தார்.ஏன் தில்லி எயிம்ஸ் போகவில்லை என்பதையும் விளக்கினார்.பிறகு நீட் UG ஐ விட பல நூறு மடங்கு கடினமான நீட் PG ஐயும் அசால்ட்டாக தேறினார்.உண்மையில் இவருக்கு ஒரு மூளை தானா?இல்லை external hard disc போல ஏகப்பட்ட மூளைகளை அவ்வப்போது thunderbolt கொண்டு கனெக்ட் செய்துகொள்கிறாரா? என்ற சந்தேகம் உண்டு!

   உச்சத்தில் இருக்கும் ஒரு விழுக்காடு நபர்கள் மட்டுமே படிக்க கூடிய நியூரோ சர்ஜரி படிப்பார் என்று பார்த்தால் எம்டி ஜெனரல் மெடிசின் நாக்பூர் GMC லையே சேர்ந்துவிட்டார்.காரணமாக அவர் சொன்னது "மன திருப்திக்காக யூ ட்யூப் சேனல் நடத்துகிறேன். சர்ஜரி/ஆர்த்தோ/நியூரோ என்று போனால் ஒரு நிமிடம் கூட வீணாக்க முடியாது".
 . 
 யாராவது மேலே வந்துவிட்டால் உடனே அவனை கீழ தள்ளி மிதிக்க ஒரு கூட்டம் இருக்கே! அனூஜ் பற்றி இல்லாததும் பொல்லாததும் அடித்துவிட்டு அவர் ஒரு பிராடு என்பதாக ஒரு வெட்டி கூட்டம் கிளம்ப அவர்களை இவர் கேசமாக கூட மதிக்காமல் தன் வேலையை பார்த்து வருகிறார்! வேறொருவராக இருந்தால் சகதியில் இறங்கி குழாயடி சண்டையில் சிக்கி காணாமல் போயிருப்பார்.அந்த முதிர்ச்சி வியக்கத்தக்க ஒன்று!

       அனூஜ் பள்ளியில் படிப்போருக்கு நீட் சம்மந்தமான அத்தனை உதவிகளையும் செய்து வருகிறார்.அதற்கான வீடியோக்களும் அவர் சேனலில் உள்ளது.அவரது இணையதளமும் உள்ளது.காசர் பாணியில் சொல்வதென்றால் "சார்ந்தோர் பயன்படுத்திக்கொள்க"!




  யோவ் இரும்படிக்கிற இடத்தில உனக்கென்ன வேலை? படிப்புக்கும் உனக்கும் என்ன சம்மந்தம்??? மேட்டருக்கு வா!- கும்மாங்கோ

.
அதுவும் சரிதான் .  முக்கியமாக நம்ம department டான சினிமா பற்றியும் பேசுகிறார். உலக விமர்சன அக்கப்போர் இல்லை.தான் பார்த்த படங்களில் வரும் மருத்துவம் சம்மந்தமான காட்சிகளில் உள்ள பிழைகள் அபத்தங்கள் நகைச்சுவைகள் என்று சுட்டிக்காட்டும் வீடியோக்கள் உள்ளன .

   ஜெராக்ஸ் கடை அட்லீ எடுத்த ஜவான் படம் பற்றியும் பேசியுள்ளார்(AMBU bags!) .ஆயுஷ்மான் குரானா நடித்த Doctor G படத்தின் அவலத்தையும் சுட்டி காட்டுகிறார்.

 
     டாக்டர் G நாம் பார்க்கவில்லை.ஆனால் அப்படத்தின் ஒன்லைனை படித்தபோது அபத்தத்தின் உச்சம் என்று புரிந்தது. 

 

   ஏனய்யா எம். பி. பி.எஸ் படிக்கும்போதே OBG ஒரு பாடமாக வரும்.அதில் மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு மாணவிகளுக்கு மட்டும் பாடம் நடத்துவதில்லை.அனாடமி பாடம் வரும். ஃபிசியாலஜி வரும். அப்படி இருக்கையில் எம். பி. பி.எஸ் முடித்த ஒரு மாணவன் OBG முதுகலையில் சேரும்போது அங்கே என்ன பாடம் என்ன வழிமுறைகள் பெண் உடல்கூறு அமைப்பு மற்றும் அது சார்ந்த  மருத்துவ பிரச்சனைகள் எதுவுமே தெரியாமல் போய் முழித்தபடி நிற்கிறார் .அதுதான் படம் என்று அனூஜ் விளக்கியபோது "நல்லவேளை இந்த படத்தை நாம் பார்க்கவில்லை.பார்த்திருந்தால் முனியாண்டி சொல்லும் உவமையான ' கை காலை கட்டி மலக்கிடங்கில் போட்டது போல'த்தான் இருந்திருக்கும்.தப்பித்தோம்" என்று நினைத்துக்கொண்டோம்!
   என்ன படம் இதெல்லாம்?எந்நேரமும் இடுப்புக்கு கீழேயே சிந்திக்கும் எதோ சில தற்குறிகள் சேர்ந்து இந்தக்கதையை சிந்தித்திருக்க வேண்டும்!எஸ்.ஜே.சூர்யா கூட இப்படியெல்லாம் சிந்தித்தது இல்லையேடா!மருத்துவ கண்ணோட்டம் வேறு!சாமானிய கண்ணோட்டம் வேறு என்பது கூட புரியாத மழு மட்டைகள் உருவாக்கிய படம் போல!
************************
இந்த நேரத்தில் இப்படத்தில் நடித்த ஆயிஷ்மான் குரானா பற்றியும் சொல்ல வேண்டும் .அந்தாதூன் பார்த்தபோது ஆயுஷ்மான் வேறொரு உயரத்திற்கு செல்லப்போகிறார் என்று நினைத்தால் நடந்ததோ வேறு!

     கிரேசி மோகன் நாடகங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு தமிழில் பல காமெடி வேடங்கள் செய்த சாம்ஸ் சுவாமிநாதன் நினைவுக்கு வந்தார்.வடநாட்டு சாம்ஸ் ஆயுஷ்மான் குரானா என்று புரிந்தது.


 
  அவர்தான் தொடர்ந்து ஒருபாலின விழைவு கொண்ட கேரக்டர்,பெண் வேட கேரக்டர்,ஆணுக்குள் பெண்ணாக உணரும் கேரக்டர் என்று "அஜால் குஜால் கேரக்டர் என்றால் கூப்பிடு சாம்சை" என்பது எழுதப்படாத விதியாக தமிழ் சினிமாவில் உள்ளது.

 

   ஆயுஷ்மான் படங்களை அந்தாதூனுக்கு பிறகு நாம்  பார்க்கவில்லை.படங்களின் போஸ்டரை பார்த்தே காத தூரம் ஒடிவிடுவோம்.அவரும் வடநாட்டு சாம்சாக ஒருபாலின விழைவு,பெண் வேடம், ஆணுக்குள் பெண் என்பதாக நடித்து வருவதை போஸ்டர் மூலம் புரிந்து கொண்டோம்.What a wasted talent! Go Woke go broke என்பார்கள்.அதுபோல இப்படியே நடிச்சிட்டு இருந்தால் அவர் நிரந்தர காமெடி பீஸாகவே நீடிப்பார்!

    Inception படத்தில் நடித்த Elliot Page இப்படித்தான் woke பாதிப்பில் அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறிவிட்டார் .இப்போது ஒரே புலம்பல் " தன்னை இப்போதும் எல்லோரும் பெண்ணாகவே கருதுகிறார்கள்" என்று.
 

இனி புலம்பி என்ன பலன்?Woke கோஷ்டி வந்தாலே ஆயிரம் மைல் தாண்டி ஓடிவிட வேண்டும் என்பது புரியாமல் சிக்கியவர் இவர் . ஆயுஷ்மான் கூட இதே அளவு தீவிரமாக அல்லாமல் ஆனால் வலுவாக woke கோஷ்டி பிடியில் சிக்கிவிட்டார். இனி மீள்வது கடினம்!

*************************************

அமெரிக்காவில் Gastro surgeon ஆக இருக்கும் டாக்டர் பழனியப்பன் மாணிக்கம் என்ற Dr.Pal நகைச்சுவை மூலமாகவே சாப்பிடும் உணவு குறித்த ஆரோக்கிய தகவல்கள் மருத்துவ குறிப்புகள் போன்றவற்றை ஆங்கிலத்திலும் தமிழிலும் சொல்லி வருபவர்.
 

அவரும் இப்போது அனூஜ் பாணியில் படங்களில் உள்ள மருத்துவ பிழைகளை சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளார்.அந்நியன் படத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டும் வீடியோ இது:

 

இது ஒரு நல்ல ஆரம்பம் தான்.இப்படி கேலி கிண்டல் செய்தாலாவது மருத்துவம் சார்ந்த காட்சிகளில் இயக்குனர்கள்  கூடுதல் முனைப்போடு செயல்பட ஒரு உந்து சக்தியாக இருக்க கூடும்.நாம் சொல்வது புரச்சி புடலங்காய் என்று ஊரை ஏமாற்றாமல் சினிமா துறையில்  தன்னை தொடர்ந்து மேம்படுத்தி கொள்ளவேண்டும் என்ற முனைப்பு கொண்ட சில அதிசயப்பிறவி இயக்குனர்களை மட்டும்!