சுஜாதா மோகன் திரையுலகில் பாடவந்து ஐம்பதாண்டுகள் என்றதும் பல பாடல்கள் பல நினைவுகள் & சில வருத்தங்கள் நினைவுக்கு வந்தன.
ஜானி படத்தில் ஒரு இனிய மனது பாடலை ஶ்ரீதேவி படுவதாகவும் அதை ரஜினி கேரக்டர் ஒரு இனிமையான குரலை தவற விட்டுவிட கூடாது என்று தனது வாக்மேனில் பதிவு செய்வதாகவும் படமாக்கி இருப்பார்.
ராசையா அதைப்பார்த்தாவது "இவரது அற்புத குரலில் இன்னும் பல பாடல்களை பதிவு செய்ய வேண்டும்" என்ற எண்ணம் உண்டாகியிருக்க வேண்டும்!
ஆனால் அவர் என்ன செய்தார்?இந்தப்பாடல் சேர்த்து விரல் விட்டு எண்ணக்கூடிய சில பாடல்களை மட்டுமே சுஜாதாவுக்கு கொடுத்தார்.அத்தோடு சரி.எண்பதுகளில் அவர் காணாமல் போனார்!
ஒவ்வொருமுறை ஜானி பாடலை கேட்கும்போதும் வருத்தமும் கோபமுமே மிஞ்சி நிற்கிறது!பன்னிரண்டு வயதில் பாடவந்து பதின்ம வயதுகளில் அத்தனை அற்புதமாக பாடும் திறனெல்லாம் எல்லாருக்கும் வாய்க்காது!
மீண்டும் ரோஜா படத்தில் ரஹ்மான்உன்னி மேனன் & சுஜாதா இருவரையும் மறு அறிமுகம் செய்தார் என்றே சொல்ல வேண்டும்!அதன் பிறகே சுஜாதாவுக்கு மற்ற இசையமைப்பாளர்கள் வாய்ப்பு வழங்கினார்கள்! பூப்பூக்கும் ஓசை பாடியதற்கு தேசிய விருது வாங்கினார்.காற்றுகுதிரையிலே(காதலன்),முதன்முறையே(சங்கமம்) ,காதல் ரோஜாவே ஹம்மிங் என்று மறக்க முடியாத பாடல்கள் உண்டு!
நேற்று இல்லாத மாற்றம் பாடல் உருவாக்கம்
வித்யாசாகரின் இசையில் அவரது குரல் தனித்தன்மையாக ஒலிக்கும்! ஆனந்தம் ஆனந்தம்(முறைமாமன்), உன்சமையல் அறையில்,ஆசை ஆசை ,அழகூரில் பூத்தவளே என்று தொடர்ந்து மெலடி பாடல்களை பாட வைத்தார்.மலையாளத்திலும் அப்படியே!
செங்கோட்டை படத்தில் வரும் பூமியேபூமியே பாடலே ஒரு மெலடி தான்.எஸ்பிபி பாடியிருப்பார்.அதை மலையாளத்தில் யத்ரையோஜென்மமாய் (Summer in Bethlehem) என்று இன்னும் மென்மையான பாடலாக மாற்றி ஶ்ரீனிவாஸ் சுஜாதா ஆகியோரை பாட வைத்திருப்பார்.ஶ்ரீனிவாஸ் சும்மா ஆரம்பத்தில் பாடிவிட்டு செல்ல முழு பாடலும் சுஜாதாவின் ராஜ்ஜியம் தான்!
ராரா(சந்திரமுகி) முதலில் கேட்டபோது சுஜாதா பாடியது என்றே நினைத்தோம்.ஆனால் பின்னிகிருஷ்ணகுமார் பாடியிருந்தார்.இதில் ஒரு வினோத ஒற்றுமை சந்திரமுகியின் அசல் மூலமான மணிச்சிதிரதாழ் படத்தில் ராரா பாடல் வரும் இடத்தில் வந்த ஒருமுறை வந்து பார்த்தாயா? பாடல் தமிழில் வரும்.முழுப்பாடலாக வரும் பாடலை சித்ரா பாட சின்னதாக வரும் பாடலை சுஜாதா பாடியிருப்பார்!
லோகேஷால் மீண்டும் பிரபலமான சக்குசக்கு வத்திக்குச்சி & தாமர பூவுக்கும் பாடல்களை பாடியவரும் அவரே!அடுத்து அதைப்போல் மீண்டும் பிரபலமாக்கப்பட போகும் "வாடி வாடி நாட்டுக்கட்ட" பாடியவரும் அவரே!
எஸ். ஏ.ராஜ்குமார் இன்னும் தாராள மனதுக்காரர்.தனது படங்களில் வந்த அத்தனை முக்கிய பாடல்களையும் சுஜாதாவையே பாட வைத்தார்.
கண்ணாளனே பாடலையே கொஞ்சம் அப்படி இப்படி போட்டு கேட்பதற்கு அசல் பாடல் போலவே இனிமையாக அமைத்த சொல்லாமலே யார் பார்த்தது (பூவே உனக்காக) பாடலை பாடியிருப்பார்.பிறகு சூரிய வம்சம் படத்தில ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ,உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் ஏதோ ஒரு பாட்டு,வானம்பாடியின்வாழ்விலே,மல்லிகை பூவே,எங்கள்வீட்டில்(வானத்தை போல),நிலவே வான்நிலவே(மாயி) என்று கொடுக்க அந்தப்பக்கம் சிற்பி சிட்டு சிட்டுகுருவிக்கு(உள்ளத்தை அள்ளித்தா),காற்றுக்குபூக்கள்(கண்ணன் வருவான்), உனக்கென உனக்கென(விண்ணுக்கும் மண்ணுக்கும்),என்னை தாலாட்டும்பூங்காற்று(உன்னை நினைத்து) என்று பல பிரபல பாடல்களை கொடுத்தார்.
தொண்ணூறுகளில் திரும்பவும் ராசையா அதே தவறை செய்தார்.எழுபதுகளின் இறுதியில் எப்படி விரல்விட்டு எண்ணக்கூடிய பாடல்களை மட்டுமே அவருக்கு பாட கொடுத்தாரோ அதே போல அப்போதும் அப்படியே கொடுத்தார்! ஒருபட்டாம்பூச்சி(காதலுக்கு மரியாதை), மஞ்சள் பூசும் - ஃப்ரெண்ட்ஸ்,சரணம் பவ(சேது),தாலாட்டும் காற்றே (தேவன்) என்று வெகுசில பாடல்கள் மட்டுமே!குறிப்பாக மஞ்சள் பூசும் பாடலின் இரண்டாவது பத்தியில் தென்றல் வந்து ஜன்னல் திறந்தது என்று பாடுவதை ஒவ்வொருமுறை கேட்கும்போதும் "இதுபோன்று எத்தனை பாடல்களில் ராசையா இவரை பாட வைத்திருக்கலாம்!" என்று அங்கலாய்ப்பு தோன்றும்!
தேவா முற்றிலும் புதிதான முறையில் அவரது குரலை பயன்படுத்திய பாடலொன்று உண்டு.என் உயிர் நீதானே படத்தில் கிருஷ்ணராஜ் பாடிய ஜனகனின் மகளே பாடலில் "பொய் சொல்லாதே" என்பதையே பாடல் முழுக்க பல்வேறு உணர்வுகளில் தொனிகளில் ராகங்களில் பாடி இருப்பார்!
அப்புறம் எதிர்பாராத திசைகளில் இருந்தெல்லாம் இவர் பாடிய நல்ல பாடல்கள் உண்டு.சரவணபவகுக (காதலா காதலா),நிலவேநிலவே(பெரியண்ணா),சோலைக்குயில்பாடும் (ஆனந்த பூங்காற்றே),ஹேமோனா (கண்ணோடு காண்பதெல்லாம்),உன் பேர் சொல்ல (மின்சார கண்ணா),நீதானா(உன்னை தேடி) என்று எப்படி எண்பதுகளின் திரையிசைக்குரலாக எப்படி ஜானகி இருந்தாரோ அப்படி தொண்ணூறுகளின் குரலாக இவர் இருந்தார்!
இதையெல்லாம் விட மறக்க முடியாத பாடல்கள் என்றால் காதல் வேதம் என்ற ஆல்பம் தான்.ஏதோ ஒரு கம்பெனி கேசட் வாங்கப்போய் அப்போது கடையில் இந்த கேசட் பார்த்ததும் அத்தனை பாடல்களையும் ஹரிஹரன் பாடியுள்ளாரே (பிறகு ராசையாவின் காசி படத்தில் அதுவே நடந்தது) வித்தியாசமா இருக்கே என்று வாங்கினோம்.இத்தனைக்கும் இசை அமைத்த உத்பல் பிஸ்வாஸ் யாரென்றே நமக்கு தெரியாது.ஆனால் அத்தனை பாடல்களும் அட்டகாசம்.அதில் இரண்டு பாடல்களை சுஜாதா பாயிருப்பார்.என்நெஞ்சில் தூங்கவா நிலாவே கேட்டால் ஆளில்லாத தீவில் நிம்மதியாக சஞ்சரிப்பது போன்ற உணர்வைத்தரும்.இந்த ஆல்பம் அவ்வளவாக மக்களுக்கு தெரியாது என்பதால் வந்த உணர்வாக இருக்கலாம்!
இப்போதும் சுஜாதா என்றால் நினைவுக்கு வரும் பல பாடல்களில் இந்த ஆல்பத்தின் பாடல்களும் அடக்கம்! இப்போது இவரது மகள் ஸ்வேதாமோகனும் பாட வந்துவிட்டார். அவர் பாடும் முறை குரல் வளம் எல்லாம் சுஜாதாவிடமிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்று! சூழல்கள் மாறி சுஜாதாவின் குரலை சரியாக பயன்படுத்தும் அளவுக்கெல்லாம் இப்போது நல்ல நிலையில் திரையிசை இல்லை!இப்போதெல்லாம் யாரும் பாடுவதில்லை! வரி வரியாக பாடல் வரிகளை படிக்க பின்னணியில் இசைக்கருவிகளை உருட்டி ஆட்டோ ட்யூன் ரிக்ஷா ட்யூன் என்று ஒருமாதிரி எதையோ கொடுத்து விடுகிறார்கள்!ராசையா பாடத்தெறிந்த சுஜாதாவுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுக்காமல் பாடவே வராத தனுசை எல்லாம் வைத்து மன்னாடி கொண்டிருக்கிறார்!
படத்தை பார்த்ததற்கு முக்கிய காரணம் அஜூ வர்கீஸ்.சமீபத்தில் ஐடென்டிட்டி படத்தில் சீரியஸான அதுவும் வயதான தோற்றத்தில் நடித்ததை பார்த்ததும் "என்னாத்துக்கு இப்படி ரிஸ்க் எடுக்கிறார்?" என்று தோன்றியது.விளையாட்டான - பெரிய அறிவாளியாக எல்லாம் இல்லாமல் - சிறு சிறு அபத்தமான தவறுகளை செய்து பல்பு வாங்கி பேந்த பேந்த முழிக்கும் - அந்த அஜூ வர்கீஸ் தான் இயல்பானவர்.
கிளி போயி என்றால் கிளிக்கு றெக்க மொளச்சு பறந்து போச்சு என்பதாக அல்லாமல் மலையாள பேச்சு வழக்கில் வாய்ப்பு பறிபோனது,மன நிம்மதி போனது(துடரும் படத்தில் ஷோபனா தனது மகளிடம் மோகன்லாலுக்கு மன நிம்மதி குலைந்தது பற்றி கிளி போயி என்று பேசுவதாக காட்சி வரும்) என்று அர்த்தமாகும்.காசர்கோல்ட் படம் போலவே தான் இதுவும்.அதில் தங்க கடத்தல்.இதில் [(கிங்ஸ் லெவன்)^n] கடத்தல்.ஆனால் அதைவிட இந்தப்படம் கொஞ்சம் பரவாயில்லை.அதில் விநாயகனை வீணடித்திருப்பார்கள்!இதில் அதுபோன்றதொரு கேரக்டரில் சம்பத்!படத்தில் முக்கியமான கேரக்டர் அவரே!
அவருக்கு வரும் தமிழ் வசனங்களை அவரையே பேச சொல்லிவிட்டார்கள் போலும்.மனிதர் ****** ..கோ** என்று பின்னி பெட்டல் எடுத்து விட்டார்.அதிலும் வெற்றிமாறன்கௌதம் மேனன் பாணி வசைகளாக இல்லாமல் தொண்ணூறுகளில் டப்பிங் ஆகிவரும் சுரேஷ் கோபி நடித்த ஆக்ரோஷமான ஆக்ஷன் படங்களில் வருவது போன்ற வசைகள்!மகாத்மா பட ஆரம்ப காட்சியில் சுரேஷ் கோபி பேசும் அந்த வைரமான வசனத்தை நினைவுபடுத்தியது! 😜
வாழ்க்கை படத்தில் மெல்ல மெல்லஎன்னைத்தொட்டு பாட்டில் ஆடிய அதே ரவீந்திரன் இதில் அந்தப்பாட்டுக்கே டான்ஸ்ஆடும் காட்சியில் "இவன் என்னையா ஆடுறான்?" என்று ஆசிப் நக்கலாக கேட்கும் காட்சியும் உண்டு!
மலையாளம் தவிர்த்து தமிழ் கன்னடம் ஹிந்தி ஆகிய மொழி வசனங்களும் சரளமாக வருகிறது.
படம் ஓடும் நேரம் குறைவு என்பதால் திரைக்கதை சொதப்பல்கள் பெரிதாக உறுத்தவில்லை.இன்னும் பத்து நிமிடங்கள் நீண்டிருந்தால் தாங்க முடியாமல் போயிருக்கும்! காவல் அதிகாரி அறிவுரை சொல்லும்போது அவர் பேசுவதற்கு பதில் பின்னணியில் கிங்ஸ் லெவன் எச்சரிக்கை வாசகம்(படங்களின் துவக்கத்தில் வருமே!) ஒலிக்க அது தாங்காமல் ஆசிப் அலி தன்னைத்தானே சுட்டுக்கொள்வது போல வரும் காட்சி மலையாளிகளுக்கே உரிய குசும்பு வெளிப்பட்ட தருணம்!
டாய்லெட்டில் இரு பெண்கள் மோதிக்கொள்ளும் சண்டை காட்சி இன்ப அதிர்ச்சி! இன்னும் கொஞ்ச நேரம் அதை எடுத்திருக்கலாம்.அவ்வளவு இயல்பான சண்டைக்காட்சிகள் அமைத்த அன்பறிவ் இப்ப கிரீன் மேட் ரோப் என்று அந்தப்பக்கம் போனது பெரிய அவலம்!இந்தமாதிரி மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களில் தான் சண்டைக்காட்சிகள் தரமாக வருகிறது.
ரொம்ப பெரிய பட்ஜெட் என்றாலே க்ரீன் மேட் தான்! கொரிய படங்களில் வரும் உக்கிரமான சண்டைக்காட்சிகள் போல அமைக்கக்கூடிய திறமைசாலிகள் இங்கும் உள்ளனர்.குறிப்பாக இந்திய அளவில் தமிழ் சினிமாவில் தான் அத்தனை திறமை கொண்ட சண்டைபயிற்சியாளர்கள் சண்டை கலைஞர்கள் உள்ளனர். அவர்களை சரியாக பயன்படுத்திக்கொள்வதில் இயக்குநர்களுக்கு அப்படியென்ன சிரமம் என்று தெரியவில்லை! கதை காட்சி என்று எல்லாமே குப்பையாக இருக்கும் படங்களில் கூட சில சமயம் அற்புதமான சண்டைக்காட்சிகள் அமைந்துவிடுவதுண்டு.
நாம் பலமுறை குறிப்பிட்ட அசுரவதம் ஹோட்டல் வராண்டா சண்டைக்காட்சி(திலீப் சுப்பராயன்); முகமூடி படத்தில் நரேன் மற்றும் செல்வா மோதிக்கொள்ளும் அந்தக்காட்சி! வெறும் உடல் ரீதியாக செல்வாவை தோற்கடிக்கவே முடியாது என்று புரிந்துகொள்ளும் நரேன் உளவியல் ரீதியாக வீழ்த்தி அந்த பலவீன தருணத்தில் செல்வா இருக்கும்போது மொத்தமாக வீழ்த்திவிடுவார்
திலீப் சுப்பராயன்
முகமூடி படம் குப்பைதான்.ஆனால் அந்தப்படத்தின் இந்த குறிப்பிட்ட சண்டைக்காட்சி தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒன்று. புரூஸ்லீஜாக்கிசான் போன்றோருடன் பணியாற்றிய Tony Leung Siu Hung இப்படத்தில் சண்டைக்காட்சி அமைத்திருப்பார்.அது output ல நல்லாவே தெரியும்.சண்டைக்காட்சிகள் என்றால் அப்படி இருக்க வேண்டும்!
ஒரு படத்தின் சண்டைக்காட்சிகளுக்காக ஹீரோ(அல்லது பிரதானமாக யார் சண்டை போட போகிறார்களோ அவர்கள்), இயக்குனர் ,சண்டைப்பயிற்சியாளர் ஒளிப்பதிவாளர் ஆகியோர் ஒரு ஒருமித்த நிலையில் முன்பே விவாதித்து சரியாக திட்டமிட்டு அதை படமாக்கினால் அற்புதமாக அமையும்!
Tony Leung Siu Hung
கேப்புடன் பற்றி மற்றவர்கள் கூறும்போது சண்டை கலைஞர்களிடம் "நீங்க வேணும்னா ரோப் கட்டிக்குங்க.ஆனா நா ரோப் போட்டு நடிச்சா இத்தன வருஷம் பண்ணது எல்லாம் போலின்னு ஆகிடும்" என்று சொன்னதாக கேள்விப்பட்டதுண்டு.ஆனால் அவரே பிற்காலத்தில் ரோப் போட்டு நடித்து நம்மை பெரும் அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினார்! விவேக் அடிக்கடி கேப்புடன கிண்டல் செய்ய சொல்லும் "செவுத்துல லெஃப்ட் லெக்க வச்சு ரைட் லெக்கால சுழட்டி சுழட்டி அடிப்பார்" வசனம் பலருக்கும் நினைவிருக்கும்.
ஸ்டண்ட்மேன் அழகுசித்ராலட்சுமணனுக்கு அளித்த பேட்டியில் "அப்படி எல்லாம் ஒரு காலை செவுத்துல வச்சிட்டு இன்னொரு கால்ல லேண்ட் ஆகிறது அவ்வளவு சுலபமில்ல.ஆனா அவர் அதை செஞ்சார்".அழகு முறைப்படி களரி பயின்றவர்.
கேப்புடனின் தோள்பட்டை மூட்டு அவ்வப்போது கழண்டு விடும் என்பதால கால்களாலேயே சண்டையிடும் விதத்தில் தனது பாணியை மாற்றிக்கொண்டார் என்றும் சொல்வதுண்டு.
ஆனால் அலெக்சாண்டருக்கு பிந்தைய படங்களில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி என்றாலே காற்றில் எல்லாரும் பறக்க வேண்டும் என்பதாக மாறிப்போனதில் ஏற்பட்ட வீழ்ச்சி! அந்தப்பாணியில் கேப்புடனும் சென்று நகைப்புக்குரிய காட்சிகளாக இன்று பார்க்கப்படும் சில சண்டைக்காட்சிகளில் நடித்து ஏற்கெனவே உயிரை பணயம் வைத்து நடித்த பல சண்டை காட்சிகளுக்காக பாராட்டு பெற்றதை விட இம்மாதிரி பறக்கும் காட்சிகளுக்காக கேலி கிண்டலுக்கு அதிகமாக உள்ளானார்!
ஜான் விக் படத்தில் யாரும் ஆகாயத்தில் பறப்பதில்லை!ஆனாலும் அந்த பிரம்மாண்டத்தை சண்டைக்காட்சிகளில் காணலாம்!சும்மா ரோப் க்ரீன் மேட் சிஜி இருக்குன்னு சகட்டுமேனிக்கு படமாக்கி அதை பிரம்மாண்டம் என்று சொல்லக்கூடாது!
யூ ட்யூப் தமிழ் வீடியோக்கள் குறிப்பாக சிலவற்றை மட்டுமே பார்ப்பதுண்டு.சித்ரா லட்சுமணன் பேட்டிகள் கூட பேட்டி கொடுக்கும் நபர் சார்ந்தே இருக்கும்.பயில்வான் திரை விமர்சனம் மிஷ்கின் பேச்சு, ராதாரவி பேச்சு (இதெல்லாம் எங்க உருப்பட போவுது? - த.மணியன்) என்று மட்டுமே பார்ப்பதுண்டு.
அதையும் தாண்டி சில குப்பைகள் காற்றில் எழும்பி புழுதி கிளப்பி பல நாட்கள் ஒவ்வாமையை உண்டுபண்ணி விடுகிறது. அப்படியான ஒரு சேனல் LEMS.Let's make Engineering Simple. சரி ஊர்ல தடுக்கி விழுந்தால் ஒரு என்ஜினியர் என்று இருக்கும் நிலையில் இது மற்றுமொரு வேலையற்ற என்ஜினியர் உருவாக்கிய சேனல் என்று விட்டுவிடலாம் தான்.ஆனால் இவர்கள் இன்று பல பள்ளிகளில் நாங்கள் workshop நடத்துகிறோம் ; தனியாக கோடை விடுமுறை வகுப்புகள் உண்டு என்றெல்லாம் சொல்லும்போது தான் பீதி கிளம்புகிறது. காரணம் இவர்களின் லட்சணம் எத்தகையது? என்பதை ஒரே ஒரு உதாரணம் மூலம் சொல்கிறோம். ஒரு நாளைக்கு ஆயிரத்தைநூறு கலோரிகள் சாப்பிட்டால் உடல் எடை குறையும்(அதாவது ஒரு நாள் தேவை இரண்டாயிரம் கலோரி என்பதை கணக்கில் கொண்டு) என்றொரு மருத்துவ ஆய்வு சார்ந்த முடிவு உண்டு. அதை மையமாக வைத்து LMES சேனலில் ஒரு வீடியோ.பொரியல் சாரி பொறியியலுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம் என்று யாரும் கேட்க கூடாது.நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஐயாயிரம் வருட இரும்பு பதிவின்படி ஒரு சேனலை உருவாக்கிவிட்டு வானத்திற்கு கீழே மேலே சைடில் என அனைத்தைப்பற்றியும் பேசுவது புதிதல்ல.
அதாவது ஒரு நாளைக்கு ஆயிரத்தைநூறு கலோரிக்கு மூன்று வேளையும் பிரியாணி மட்டுமே சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம் என்றொரு வீடியோ .ஆகா! இதல்லவோ இஞ்சி-ன்-earring தகவல்! இந்த சொறிய சாரி அரிய கண்டுபிடிப்பை ஹார்வர்ட் மருத்துவர்கள் நினைத்துக்கூட பார்த்ததில்லை! மருத்துவ உலகே யோசிக்காத இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியது இந்த LEMS! இப்படியான அரிய கண்டுபிடிப்பாளர் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களிடம் வகுப்பு எடுத்தால் அவர்கள் எப்படியாக வளர்வார்கள்????????
இந்த அவல நகைச்சுவை ஒருபக்கம் என்றால் இந்த LEMS கரகாட்ட கோஷ்டியில் இருந்து விலகிச்சென்ற மற்றொரு பக்ரா buying facts & engineering facts என்று இரு சேனல்கள் ஆரம்பித்துள்ளது.
அதுவும் இப்படித்தான்.சாதா ஏசிக்கும் இன்வெர்ட்டர் ஏசிக்கும் மின்சார பயன்பாட்டில் எந்த வித்தியாசமும் இல்லை என்றொரு வீடியோ!
அடங்கப்பா! இன்வெர்ட்டர் ஏசி என்பதே மிக சிக்கலான ஒரு சாதனம்.நீங்கள் எந்தமாதிரி அறையில் இதை மாட்டுகிறீர்கள் என்பதை பொறுத்தே மின் பயன்பாடு இருக்கும். உதாரணமாக அதிகமான ஜன்னல்கள்,நேரடி சூர்ய வெளிச்சம் அறையின் மேற்கூரையில் விழுதல் அடிக்கடி அறையின் கதவுகள் திறந்து மூடப்படுமா? ஜன்னல் கதவுகள் இடுக்குகளில் சரியான இன்சுலேஷன் உள்ளதா என்று ஏகப்பட்ட காரணிகள் உள்ளன. மேற்சொன்ன இருக்க கூடாது பட்டியல் உள்ள ஒரு அறையில் இன்வெர்ட்டர் ஏசி போட்டால் கண்டிப்பாக சாதா ஏசி அளவுக்கு மின் பயன்பாடு இருக்கும்!
அறை எத்தகையது?பயன்பாடு எவ்வளவு நேரம்?தொடர்ச்சியாகவா அல்லது விட்டு விட்டு பயன்பாடா? என்பதெல்லாம் கவனித்தே இதை பொருத்த....ஆம்... ஏசி மாடல் எந்த மாடலாக இருந்தாலும் அது எந்த லட்சணத்தில் பொருத்தப்பட்டுள்ளது என்பதை பொறுத்தே அதன் செயல்பாடு அமையும்.காப்பர் குழாய்களை வளைக்க bender பயன்படுத்தாமல் கையால் வளைத்து அதனால் ஒரே வாரத்தில் கேஸ் லீக்கான சம்பவங்கள் உண்டு!
மேலும் புதிதாக ஏசி பொருத்தும்முன்
Indoor unit ஐ vacuum செய்தல்,காப்பர் குழாய்கள் மேல் காட்டன் சுற்றுதல்,இதுதவிர தரமான ஸ்டெபிலைஸர் பொருத்துதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறையாவது சர்வீஸ் செய்தல்,Outdoor unit ஐ சீதோஷ்ண மாறுதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் டாப் போடுதல் என்று ஏற்கப்ப சமாச்சாரங்கள் உண்டு. இன்வெர்ட்டர் ஏசி பென்ஸ் கார் மாதிரி.பக்காவாக பராமரிக்காமல் போர்டு போச்சு என்று புலம்புவதில் நியாயமில்லை!
இத்தனை விஷயங்கள் இருக்க இது எதைப்பற்றியும் கவலையேபடாமல் ஏதோ சொந்தமா ஒரு ஆய்வு(!!??)முடிவு என்று அடித்து விட்டுள்ளார்கள்!
இதே சேனலில் முடி உதிர்தல் பிரச்சனைக்கும் தீர்வு சொல்லும் வீடியோவும் உண்டு!
அப்புறம் வழக்கம்போல எந்த யூ ட்யூப் சேனலாக இருந்தாலும் கொஞ்சம் வளர்ந்தால் செய்வதை இந்த சேனலும் செய்கிறது.கண்ணாடி கடை விளம்பரம் சுத்தமான முறையில் புட்டியில் அடைக்கப்பட்ட இளநீர் விளம்பரம் என்று இவர்களுக்கு பிழைப்பு நன்றாகவே ஓடுகிறது! மொத்தத்தில் இவர்கள் இன்ஜினியரிங் கத்து கொடுக்காட்டியும் எப்படி மக்களிடம் குறளி வித்தை காட்டி அதிக பார்வையாளர்கள்,அதிக விளம்பரதாரர்கள்,அப்புறம் அந்த யூ ட்யூப் வெள்ளி கேடயம் தங்க கேடயம் இவைகள் மூலம் அதிக டப்பு பெறுவது என்று டெமோ காட்டியுள்ளார்கள்! பள்ளி கல்லூரிகளில் இவர்கள் கேம்ப் அது இதுவென்று நடத்துவதை பார்த்தால் இந்த சேனல்களை பார்ப்பவர்களை விட பரிதாபத்துக்குரியவர்கள் அந்த மாணவ -மாணவிகள்தான்! . டிஸ்கி : உதயா: ஆமா இவங்க பொறியியல் வல்லுநர்கள் தானே?அப்புறம் ஏன் எந்த பொறியியல் கம்பெனியும் இவர்களுக்கு வேலை கொடுக்கல?