Tuesday, 27 May 2025

மரணமாஸ் - சுராத்து'ஸ் day out!

 படம் நம்மை ஈர்த்ததில் முக்கிய பங்கு பசில் ஜோசப்பின் கெட்டப்புக்கே.அசல் சுராத்தை படத்தில் இரு ரூபங்களில் காணலாம்.

   தோற்றத்தில் மட்டுமல்லாது ; காலி பெருங்காய டப்பாவாக இருந்தாலும் ஓவர் பில்டப் & பந்தா ,தன்னை சுற்றி ஒரு துதி பாடும் கூட்டத்தை தயார் செய்து வைத்திருத்தல்,ஏடாகூடமாக ஏதாவது செய்து ஊரை அலற விடுதல் என்று லூக் (பசில் ஜோசப்) நடத்தையிலும் அசல் சுராத்துதான்.

 

 
    
தனது தந்தையைக்காணோம் என்றதும் பெண்கள் கழிப்பிடத்தில் மகன் தேடும் காட்சி,பட்டாயா தொடர்பான உரையாடல்,அந்த கண்டக்டர் அருவி கேசவ குரூப் மார்பில் குத்தப்பட்ட பச்சை போலவே தனது மார்பில் இருக்க "யப்பா!" என்று உணர்ச்சிவசப்படுதல் அதகளம்!             
           பார்க்கும் எல்லோருக்கும் அதேமாதிரி பச்சை குத்திவிட்ட குரு சோமசுந்தரத்தை ஜோசியராக காட்டியதும் வந்த பீதி ஒரே ஷாட்டோடு அவரை அனுப்பி வைத்து இயக்குனர்  பால் வார்த்தார்! ஒரு பஃப் கிங்ஸ் லெவன் மற்றொரு பஃப் ஆஸ்த்துமா இன்ஹேலர் என்று கேசவ குரூப் இழுப்பதாக காட்டி கீழே எச்சரிக்கை வாசகம் போடும்  சென்சாருக்கே சவால் விட்டுள்ளார்கள் ! 😃
  சீரியல் கொலையாளி வேடம் செய்த ஶ்ரீகுமார்(ராஜேஷ் மாதவன்) மற்றும் கேசவ குரூப்( புலியனம் பௌலோஸ்) ஆகிய இருவருமே பார்க்க ஏதோ  AI உருவாக்கிய உருவம் உயிர்பெற்று வந்ததுபோல இருக்கிறார்கள். குறிப்பாக நேரு உடை அணிந்து வரும் SK   surreal அனுபவத்தை உண்டாக்குகிறார்!
      நமதபிமான சைத்ரா ஆச்சார் நடித்தார் என்ற ஒரே காரணத்திற்காக பார்த்த படம்  Happy Birthday to me .கிட்டத்தட்ட அந்தப்படம் தந்த அனுபவம் இதிலும் கிடைத்தது.பல இடங்களில் விடாது சிரிப்பு தான் 😃 ( உதயா சீரியஸ் காட்சிகளைக்காணும் போதே சிரிப்பான்.இப்ப சிரிப்புக்கு கேட்கணுமா? - கும்மாங்கோ).

     சீரியல் கொலையாளி சுற்றி வளைப்பு என்றதும் வரும் சுராத்து அறிமுக காட்சி அட்டகாசம்! சுராத்து அண்ணாயிஸ்ட்டாக காட்டப்படுகிறார்.அறிமுக காட்சியும் மெர்சல் அண்ணா ஸ்டைல் தான் 😃 . தியேட்டராக இருந்திருந்தால் ஃபயர் விட்டிருக்கலாம்! 



 

    கிராமபஞ்சாயத்து தலைவரின் கூகுள் சர்ச் ஹிஸ்டரியை  பிரிண்ட் போட்டு பஞ்சாயத்து அலுவலகம் வாயிலிலேயே ஒட்டியது,சர்ச் பாவ மன்னிப்பு உரையாடல்களை ரகசிய மைக் மூலம் ஸ்பீக்கரில் ஒலிபரப்பியது,சுராத்து கைது செய்யப்பட்டதும் ஊர் மக்கள் திரண்டு கண்டிப்பது,நீச்சல் வீரர் இறந்ததும் நீச்சலை தடை செய் என்று போராடுதல்,பேப்பர் ஸ்ப்ரே அடித்து கொன்றதாக காதலி சொல்ல "என்ன ஃபிளேவர்?" என்று கூலாக கேட்பது,இடுகாட்டில் "டென்சனா இருக்கு ஒரு பீடி பத்த வச்சிக்கிறேன்" என்று கேசவ குரூப் பையில் இருந்த [(கிங்ஸ் லெவன்)^n] கலந்த பீடியை இழுத்து அடுத்த நொடியே 'விண்வெளி நாயக்கடு'வாக மாறி பேசுதல் என்று சின்ன சின்ன கிறுக்குத்தனங்கள் அட்டகாசம். 



   சீரியல் கொலையாளி (SK) சிறுவர் சிறுமிகள் மத்தியில் நின்றபடி வெட்டு குத்து என்று கதை சொல்லும்போது எல்லோரும் அலறி அழ ஒரு சிறுவன்(அவன் அட்டகாசமாக நடித்துள்ளான்) "மிச்ச கதையை சொல்லு!" என்று கேட்பது( ஒருவேளை அவன் உதயா உள்வட்ட வாசகனாக இருப்பானோ?  - கும்மாங்கோ) என்று வகைதொகை இல்லாது புகுந்து விளையாடி விட்டார்கள். 

 

     கதாநாயகித்தனம் இல்லாத கதாநாயகி என்ற பெருமையை நஸ்ரியாவுக்கு அடுத்து அனிஷ்மா பெறுகிறார்.ஏற்கெனவே இவர் ஐ ஆம் காதலன் படத்தில் நடித்தவர்.அதற்காக இவர் அடுத்த நஸ்ரியா என்றெல்லாம் அடித்து விட மாட்டோம்.கடைசியில்  எல்லாரும் எஸ்கேவிடம் அடிவாங்கி விழுந்து கிடக்கும்போது ஜெஸ்ஸி ஆவேசமாக வந்து நின்றபோது "இவர் புரட்டி எடுப்பதாக காட்டினால் சாதாரண run of the mill காட்சியாகி விடுமே!" என்று வருத்தப்பட்டதை புரிந்துகொண்டதை போல "கலாய்ப்பதில் ஆண் பெண் பேதமே இல்லை" என்று டாப் கியரில் அடித்து தூக்கி விட்டனர்!

  


   வினீத் ஶ்ரீனிவாசன் நடித்த ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா படத்தின் இறுதியில் மிக சீரியஸாக ஒரு அடக்கம் செய்யும் காட்சி வரும்.அதாவது டபுள் அடக்கம்.ஏற்கெனவே அடக்கம் செய்யப்பட்ட ஒரு சவப்பெட்டியின் மேலேயே கொல்லப்பட்டவர்(யாரென்று சொல்ல மாட்டோம்.படம் பார்க்காதவர்கள் கடுப்பாகி விடுவார்கள்) பிரேதத்தை போட்டு மூடி விடுவார்கள்.

 

  இந்தப்படத்திலும் அப்படியான ஒரு முயற்சி வருகிறது.ஆனால் இனி எப்போதாவது அந்த செகண்ட் கிளாஸ் யாத்ரா பட அடக்க காட்சியை பார்த்தால் இந்தப்பட காட்சி நினைவுக்கு வந்து சிரிப்புதான் வரும்!
   சூர்யா தனக்கு கேரளாவில் வாசகர்கள் அதிகம் என்பார்.அது உண்மையோ பொய்யோ ஆனால் சூர்யா, சுராத்து ஆகியோர் குறித்து சூர்யாவின் எழுத்து மூலமாக பரிச்சயம் ஆனவர் யாரோ அவர்களை வில்லங்கமாக சித்தரித்து விட்டார்களோ என்ற சந்தேகம் நமக்கு இப்போதும் உண்டு 🤪 சுராத்து - லூக்
சூர்யா - படம் பார்த்தாலே புரியும்! 😜



ஒரே குறை அந்த கேரக்டர் ஆன்லைனில் கில்மா சாட்டிங் செய்வதாக காட்டியிருந்தால் முழுமை பெற்றிருக்கும்!


    இந்தமாதிரி அவல நகைச்சுவை படங்களாக பார்த்து சிரித்து பழகிவிட்டதால் சாதாரண நகைச்சுவை காட்சிகள் அவ்வளவு சிரிப்பை உண்டாக்குவதில்லை!

     ஒலக விமர்சகர்கள் இப்படம் குறித்து எழுதும்போது அலுத்தபடி "இன்னும் எத்தனை murder mystery படங்களைத்தான் மலையாளத்தில் எடுப்பார்கள்" என்பதாக எழுதியதை படித்ததும் தலை சுற்றியது.
        அடங்கப்பா ஒரு சிபிஐ டயரி குறிப்பு மாதிரியான படமா இது??இது ஒரு அவல நகைச்சுவை படம்.கொலையாளி இவர்தான் என்று ஆரம்பத்திலேயே காட்டி விடுகிறார்கள்.இருந்தும் இப்படியாக எழுதுகிறார்கள்.இவர்களே தமிழில் வரும் மிகை உணர்ச்சி படங்களை உச்சிமுகர்ந்து "இந்த படமெல்லாம் மலையாளத்தில் வந்திருந்தால் கொண்டாடப்பட்டிருக்கும்" என்று மூக்கு சிந்துவார்கள்!
   இன்னொரு க்ரூப் cringe என்று வருகிறது.எல்லாரும் cringe என்ற அனிமல் பார்க் படத்தையே ரசித்தோம்! ஆக cringe சான்றிதழ் வழங்கும் கோஷ்டி மொத்தமாக அத்தகைய படங்களின் பட்டியலை வெளியிடவும்! நீங்கள் பாராட்டும் படங்களை விட cringe ஆகும் படங்கள் அட்டகாசமாக இருக்கிறது!
   நாம் சுராத்துக்காக ரிப்பீட் ஆடியன்சாக படத்தை மீண்டும் பார்ப்போம்!(அப்போ சூர்யாவுக்காக இன்னொருக்கா பாக்க மாட்டியா?- கும்மாங்கோ)
   
 

Sunday, 18 May 2025

வடக்குபட்டி பஸ் ஸ்டாப்

 
 Institute of human anatomy - YouTube channel 

Jonathan Bennion

பார்க்க டாம் குரூஸ் தம்பி மாதிரி இருந்தாலும் இவர்  அனாட்டமி வகுப்பு எடுப்பவர் ! எல்கேஜி பிள்ளைகளுக்கு விளக்குவது போல இவர் பிரேதங்களின் ஒவ்வொரு உறுப்பையும் குறுக்காக நெடுக்காக துல்லியமாக வெட்டி விளக்குவதை பார்க்கும்போது இவரது மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று விளங்கும்!

 
    படங்களில் ஒரே  வாள் வீச்சில் எதிராளியின் மொத்த குடலும் தரையில் கொட்டுவது போன்ற காட்சிகளை கேலி செய்கிறார்.இருபது மீட்டர் சிறுகுடல் உள்வயிற்றுபகுதியின் சுவற்றோடு ஒட்டியபடி இருப்பதும் அதை மாணவர்களுக்கு பாடரீதியாக விளக்க வசிதியாக வெளியில் தனியே எடுப்பதற்கே தனக்கு பல மணிநேரங்கள் ஆனதை சொல்கிறார்.
 

இனி சினிமா எடுப்பவர்கள் உடற்கூறியல் சம்மந்தமான ஆலோசனைகளை தன்னை அணுகிப்பெறலாம் என்றும் கிண்டலாக குறிப்பிடுகிறார்.அவ்வளவு முனைப்பாக எத்தனை இயக்குநர்கள் உள்ளார்கள் என்று யோசித்தபடி.......



****************************************


உலக வரலாற்றில் சோவியத்து/ சீனாவுக்கு ஈடுகொடுக்கும் தணிக்கை முறை கொண்ட ஒரு நிறுவனமென்றால் அது ஜெயா டிவி தணிக்கை குழு தான்!
ஏற்கெனவே தணிக்கை செய்யப்பட்ட படத்தை மேலும் சரமாரியாக வெட்டி எறிந்து குதறி வைப்பதில் அவர்களுக்கு நிகரில்லை! உதாரணமாக ஹரி இயக்கிய தமிழ் படத்தின் உயிர்நாடியே பிரசாந்த் அவமானப்படுத்தபடுவதும் அதனால் கொந்தளித்து ஆசிஷ் வித்யார்த்தியின் கையை வெட்டுவதும் தான்!ஆனால் ஜெயா குழுமத்தில் அது மொத்தமும் கட்!
    காக்க காக்க படம் கொத்து புரோட்டா போட்ட விதத்தை தனிப்பதிவாக தான் எழுத வேண்டும்! கௌதம் மேனனை ஜெயா டிவியில் காக்க காக்க படம் பார்க்க வைத்து அவரது கொந்தளிப்பை நேரலையாக பதிவு செய்யும் ஆசை நமக்கு எப்போதுமே உண்டு!
ஆனால் இதே குழுமம் நடத்தும் செய்தி சேனலில் வெட்டு குத்து குண்டுவெடிப்பு சாலை விபத்து சிசிடிவி வீடியோக்கள் எவ்வித தணிக்கையும் இல்லாமல் 24x7 காட்டப்படும்!என்ன தணிக்கை கொள்கையோ என்ன மண்ணோ!
இது தவிர சாலையில் வரும் காட்சிகளில் பின்னணியில் கடையின் முகப்பு பேனர்,நிறுவனங்களின் இலச்சினை ஆகியவை பட்டர் பேப்பர் போட்டு மறைக்கப்பட்டு நடுவில் கதாபாத்திரத்தின் முகம் மட்டும் தெரியும்.presbyopia வந்தவன் படம் பாக்குற எபெக்ட்!

 மேலும் வசனத்தில் ஒரு கதாபாத்திரம் ஏதாவது ஒரு நிறுவனத்தின் பெயரையோ அது தயாரித்த ஒரு பொருளின் பெயரையோ சொன்னால் அதுவும் மியூட் செய்யப்படும்!
உதாரணமாக பாலக்காட்டு மாதவன் படத்தில் ஷீலா விவேக்கிடம் " மாதவா ஹார்லிக்ஸ் போட்டு கொண்டா" என்று சொல்லும் காட்சியில் ஹார்லிக்ஸ் மியூட் செய்யப்பட்டிருக்கும்!



 இதுக்கு மேல ஒரு அக்கப்போர் சேனலின் இலச்சினை பக்கத்தில் HD என்று சேர்த்து செலவே இல்லாமல் HD சேனல் ஆக்கிய ஒரே சேனல் உலகில் ஜெயா டிவி தான்!

*******************
Bromance :
அண்ணனைத்தேடும் தம்பியின் கதை. அயல்வாசி படம் போலவே இதுவும் ஒரு மெல்லிய முடிச்சை சுற்றி அமைக்கப்பட்ட கதை என்றாலும் அதைவிட இது நமக்கு பிடித்திருந்தது.ஆனால் இவ்வளவு இழுத்திருக்க வேண்டாம்.

     பக்கத்து வீட்டு திருட்டு வைஃபை ரௌட்டரை மாப் மூலம் ஆன் செய்யமுயன்று அதில் ஏற்படும் பின்விளைவுகளை இன்னும் கொஞ்சம் காட்டி இருந்திருக்கலாம். இந்த மாதிரி சின்னச்சின்ன கிறுக்குத்தனங்களை காட்சிப்படுத்துவதில் மலையாள சினிமா முன்னணியில் உள்ளது. 

 
     பின்டோவாக வரும் மேத்யூ தாமஸ் ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி கொந்தளிப்பது, அண்ணனின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வெறும் ஐநூறு ஜிபே பெற்று தனது Asus Tuf gaming RGB variant லேப்டாப்பை ஹரிஹரசுதன் திறப்பது , அண்ணனும் தம்பியும் ஐபோன் ஆப்பிள் வாட்ச் என்று வைத்திருப்பதை கேள்விப்பட்டு "என்னங்கடா BBD sale ஆ?" என்று ஹரிஹர்சுதன் கேட்பது என்று சுவாரசியம் வாய்ந்த தருணங்கள் உண்டு.ஆனால் படம் நெடுக அது இல்லை!
 RDX படத்தில் ரெண்டு இன்ச் குரூட் ஆயில் மேக்கப்போடு வந்த மஹிமா நம்பியார் இதில் அந்தமாதிரி எந்த விஷபரிட்சை தோற்றத்திலும் வராதது பெரும் ஆறுதல்!



இதுபோல  [( கிங்ஸ் லெவன்)^ n] கலந்த கேக்கை ஷபீர் தின்றுவிட்டு அந்த பாவத்தை கழிக்க(!) திரும்பத்திரும்ப ஓதிக்கொண்டிருக்கும் காட்சி ரணகளம்!அந்தமாதிரி காட்சிகளை தமிழ் சினிமாவில் கனவிலும் நினைக்க முடியாது.அப்படியே வைத்தாலும் படம் ரிலீ....ahem ahem....

  சங்கீத் பிரதாப் ஏற்கெனெவே பிரேமலு படத்தில் முக்கிய பங்காற்றியவர்.யாருக்கும் தெரியாமல் ஏதாவது தில்லாலங்கடி வேலை செய்து அது அம்பலப்படுத்தப்பட்ட ஒரு திருட்டு முழி அவரது மிகப்பெரும் பலம்!  அஜூ வர்கீஸ் மாதிரி சீரியஸ் வேடங்கள் பக்கம் போகாமல் இருக்க வேண்டும்.

 

 அந்தப்பக்கம்  கொடுவா பெருமை இந்தப்பக்கம் மலையாளி பெருமை என்று சம்மந்தமே இல்லாமல் நடுவில் வந்த வசனங்கள் ஆயாசத்தை உண்டாக்கியது!
அந்த கூர்க் கதைப்பகுதியே ரொம்பவும் இழுவை! வைஃபை ரௌட்டர் ஆன் செய்யும் காட்சிகள் போல இன்னும் நிறைய வந்திருந்தால் படம் அற்புதமாக இருந்திருக்கும்!

*******************

Wednesday, 14 May 2025

E.D - Extremely Dangerous

 ஒரு வருடத்தில் பலமுறை 'எந்த மொழிப்படமும் பார்க்க வேண்டாம்' என்ற எண்ணம் வரும்.அப்போது மட்டுமே பிரம்மாஸ்திரமாக மலையாள படங்களை பார்ப்பது வழக்கம்.காரணம் எந்த மனநிலையில், எந்த சூழலில் பார்த்தாலும் படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில் ஒன்றிவிட முடியும்.
   இது தனிப்பட்ட அனுபவம் மட்டுமே.நபருக்கு நபர் ரசனைகள் மாறலாம்.கடைசியாக பார்த்த மலையாள படம் ஐ ஆம் காதலன்.மிகவும் ரசித்து பார்த்த அந்தப்படத்திற்கு பிறகு வேறு கருப்பு வெள்ளை ஆங்கில படங்களுக்கு சென்று பிறகு மீண்டும் அந்த வெறுமை தோன்ற அதை கடக்க பார்த்ததுதான் இப்படம்!

 
    ஒருவகையில் தெக்கு வடக்கு படத்தின் ஷங்குன்னி கேரக்டரின் இளம் பருவத்தை படமாக எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்?இப்படித்தான் இருந்திருக்கும்! 😃
    "ரொம்ப ஓவரா போறமோ? போய் பாப்போம் " என்ற வடிவேலு பேசிய வசனத்தை தெக்கு வடக்கு பற்றிய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.அதையே இப்படத்துக்கும் சொல்லலாம்.என்னங்கடா எல்லைக்கோடு? அழிங்கடா எனும்படி இந்த சென்டிமென்ட் அந்த சென்டிமென்ட் சொந்த சென்டிமென்ட் எல்லாத்தையும் போட்டு துவைத்து விட்டார்கள் 😃

 
     குறிப்பாக அம்மா சென்டிமென்ட் எனும் பர்னிச்சர் உடைக்கப்பட்ட விதம் !
  தலைவர் சூர்ய பார்வை படத்தில் ஒருவனிடம் " டேய் டேய் தாலி சென்டிமென்ட் வச்சுத்தான்டா தமிழ் சினிமாவே ஓடுது!அதுக்கே ஆப்படிச்சிட்டியே " அது மாதிரி இங்கே தமிழ் சினிமா வாத்தியார் ஒருகாலத்தில் சொன்னது போல 'ஸ்டரெச்ச்ர்  கேஸாக' இருந்தாலும் அதுக்கு வென்டிலேட்டர் ஆக இருப்பது சென்டிமென்ட் மட்டும்தான்!அதை இப்படத்தில் மொத்தமாக துவம்சம் செய்து விட்டார்கள்!

     
    தெக்கு வடக்கு படத்தில் மாதவன் (விநாயகன்) இறந்ததும் கையில் டார்ச் எடுத்துக்கொண்டு 😃 ஷங்குன்னி செய்யும் சேட்டைகளை மறக்க முடியுமா? குறிப்பாக "சைஸ்" பார்த்து வாழை இலை அறுக்கும் காட்சி 😃😃😃
   இதிலும் அதுபோன்ற காட்சி என்றால் கடைசியில் வரும் பினு கார் ஓட்டும் காட்சி தான் 😃😃😃




   படத்தின் மையக்கரு கொஞ்சம் பாக்யராஜ் பாணி "சமாச்சாரமாக" இருந்தாலும் பாக்யராஜ் பாணியில் சாஃப்ட் பார்ன் அருகே சென்று விளையாடவில்லை.முழுக்க முழுக்க பினுவின் சைக்கோத்தனம்  தான் படத்தின் மையம் ! அமெரிக்கன் சைக்கோ மாதிரி கேரள சைக்கோ என்ற பட்டம் இவருக்கு பொருந்தும்! 😃
இளம் வயதில் கண்ணெதிரே அண்ணனை பறிகொடுத்த அதிர்ச்சி ஒருபக்கம் பிறகு படித்து முடித்து எவ்வளவு முயன்றும் எந்த வேலையும் கிடைக்காமல் வீட்டில் தந்தையிடம் தண்டசோறு பட்டம் வாங்கி தினந்தோறும் வசைக்கு ஆட்பட்டு பிறகு திடீரென்று ஒரு தருணத்தில் தனது தங்கையின் பிறப்பு "ரகசியத்தை" கண்டுபிடித்த பிறகு அப்படியே ஆள் தலைகீழாக மாறி மொத்த குடும்பத்தையும் தனது இரும்புப்பிடியில் கொண்டுவருதல் குறிப்பாக தனது நண்பன் ஒருவன் முதிர்ந்த  தம்பதி குறித்த செய்தி ஒன்றை படிக்கக்கேட்டு பெற்றோர் மீதே சந்தேகப்பட்டு வீட்டில் சிசிடிவி வைத்து தொடர்ந்து கண்காணிப்பது ,மகன் இறந்த அன்று உணவு உண்ணக்கூடாது,மொபைல் பார்க்க கூடாது,டிவி கூடவே கூடாது என்று ஒவ்வொன்றாக பிடுங்கும் காட்சிகள் ரணகளம்!அண்ணா பாணியில் பபுள் கம்மை வாயில் ஸ்டைலாக போட்டுவிட்டு நக்கலாக சிரித்தபடி பெற்றோர்,தங்கை, தங்கை விரும்பும் காதலன்,காதலனின் குடும்பத்தார் என்று எல்லாரையும் போட்டு வாங்கும் காட்சிகள் சிலருக்கு "என்னய்யா இவ்வளவு குரூரமாகவா ஒருத்தன் இருப்பான்" என்று தோன்றக்கூடும்! ஆனால் தெக்கு வடக்கு படத்தை ரசித்தவர்களுக்கு இதை ரசிப்பதில் என்ன பிரச்சனையும் இருக்காது! 😃
இறுதிக்காட்சியில் கார்ல இடமிருக்கு வாங்க என்று சொல்லி எல்லாரையும் தம்மாத்தூண்டு காருக்குள் ஏற்றும் காட்சியே பெரும் அவல நகைச்சுவை தான்.அவர்கள் உட்கார வைக்கப்படுவதை காட்டாமல் உள்ளே அத்தனை பேர் உட்காந்திருப்பதாக காட்டும் போது ஆனந்தம் பட ஶ்ரீவித்யா மாதிரி " கார்ல அவ்வளவு இடம் எங்கடா இருக்கு? சொல்லுங்கடா" என்று கேட்க தோன்றுகிறது!
சுராஜ் வெஞ்சாரமூடுவுக்கு இம்மாதிரியான சைக்கோ கதாபாத்திரங்கள் அட்டகாசமாக பொருந்தி வருகிறது 😃.


   மேலும் மலையாளிகள் படத்துக்கு தலைப்பு வைக்கும் விதம் வேறு எந்த மொழி சினிமாவும் நெருங்க முடியாத உயரத்தில் உள்ளது.ஏகப்பட்ட உதாரணங்கள் சொல்லலாம் என்றாலும் பிரேமம் படம் வந்த அடுத்த ஆண்டே பிரேதம் என்று டைட்டில் வைத்து அவர்களுக்குள்ளேயே கலாய்த்துக்கொண்டார்கள்
இதற்கு ஈ.டி என்று வைத்துள்ளார்கள் ! எஸ்ட்ரா டீஸன்ட் என்று விளக்கம்  வைத்தாலும் அசல் ஈடி தான் நினைவுக்கு வருது! 😃 ஈடி  அவரை பிடித்தது இவரை பிடித்தது என்று கரடி விட்டாலும் இறுதியில் ஒன்றுமே ஆகாது! ஆனால் இப்படத்தில் தீர்க்கமான  ஒரு முடிவு உண்டு 😃

   

Saturday, 3 May 2025

ஊமை விழிகள்,உதயா & ஊடக அவியல் ஆளர்கள்!

 ஊமை விழிகள் படத்தை பார்த்த அந்த சிறுவன் மனதில் அப்படத்தின் ஒருவிஷயம் ஆழ்மனதில் பதிந்தது! பிற்காலத்தில் இயக்குனர் ஆன அந்த சிறுவன் அதை தன் படத்தில் அந்த விஷயத்தை மையமாக வைத்தான்! ( யோவ் கே.என்.சிவராமன் ஸ்டைல் எல்லாம் அவருக்குத்தான்.நீ சொந்த நடையில் எழுது - கும்மாங்கோ).

 எப்பேர்பட்ட பெரும்புள்ளியாக இருந்தாலும் அவர் செய்த தில்லாலங்கடி வேலையை அச்சு/காட்சி ஊடகம் மூலமாக அம்பலப்படுத்தினால் மக்கள் கொத்திதெழுந்து அந்த புள்ளியை சாய்ப்பார்கள்! 
 

 
 
இந்த utopian சிந்தனையைத்தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அமல்படுத்தியுள்ளார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.
  ஷைன் டாம் சாக்கோ கேரக்டர் நிஜத்தில் வாழ்ந்த ஒரு பெரும்புள்ளியை நினைவுபடுத்தும் விதத்தில் இருந்தாலும் அவரின்  விழுதுகள்  இதை எதிர்த்து போராடுகிறேன் பேர்வழி என்று  படத்திற்கு இலவச  பப்ளிசிட்டி கொடுக்காமல் விட்ட சாதுர்யத்தை வியக்கிறோம்!

 

இதுல தியேட்டரில் ஒரு duel வேறு! எழுபதுகளில் நடக்கும் கதை என்பதை உணர்த்த எல்லாருக்கும் பெரிய கிருதா ஒட்டப்பட்டுள்ளது! எஸ்ஜே.சூர்யா  கதைப்படி சத்யஜித்ரே உதவியாளர் என்று எங்கோ படித்த நியாபகம்.நல்லவேளை அந்த மகாகலைஞன் இந்தக்கொடுமைகளை பார்க்காமல் எப்போதோ போய்விட்டார்!
- அப்புறம் அந்த மக்களின் பெருங்கோபம் பற்றி ஒரு சம்பவம்:
 ஹைதராபாத்தில்  ஒரு பிரபல டிவி சீரியலில் நடித்தவர்கள் பங்குபெற்ற நிகழ்வு ஒன்று நடந்தபோது அந்த சீரியலில் வில்லனாக நடித்தவரை  அந்நிகழ்வில் பங்கேற்ற பார்வையாளர்களுள் ஒரு பெண்மணி அவரை விடாது துரத்தி, அடித்து உதைக்கும் வீடியோ இணையத்தில் கிடைக்கும் தேடிப்பாருங்கள்! மக்களின் கோபம் எல்லாமே நியாயமானது& அது பெரும் சக்தி வாய்ந்தது(!)  என்ற வாதம் அங்கே அடிபட்டு போகிறது!மேலும் இத்தகைய மக்கள் தான் ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கிறார்கள் என்பதையும் நினைவுபடுத்திக்கொள்ளல் நன்று!
.
ஜிகர்தண்டா XX படத்தின் கிளைமாக்ஸ் மட்டும் தற்செயலாக டிவியில் பார்த்தபோது தோன்றியது! இதுல XXX வரும் என்று வேறு பீடிகை போட்டு பீதியை கிளப்பியுள்ளார்கள்!
(நல்லவேளை முழுப்படத்தையும் பார்த்திருந்தால் ரெண்டு வால்யூம் எழுதியிருப்ப! - கும்மாங்கோ)


*********************

இப்ப இதே வரிசையில் ஊடக அவியல் ஆளர்கள் எல்லாருமே அரசையே அசைத்துப்பார்க்க கூடியவர்கள் அது இதுவென்று ஏகப்பட்ட திரைப்படங்கள் உண்டு!இது எதுவுமே இல்லாமல் ஜாலியா எதார்த்தமாக ஒரு பத்திரிக்கையாளர் கதாபாத்திரம் என்றால் அது உதயா(படத்த ரெண்டா நாளு பாத்து நொந்த கதையை சொல்லிடாத- கும்மாங்கோ) படத்தில் வரும் பிரமிட் நடராஜன் கேரக்டர் தான்!

 

   இதற்கு முன்பே கல்யாண வைபோகம் படத்தில் சுந்தரராஜன் இந்தமாதிரி ஒரு அஜால் குஜால் பத்திரிக்கையாளர் கேரக்டரில் உதவியாளர் படிக்கும் வாசகர் கேள்விகளுக்கு ஏடாகூடமாக பதில் சொல்லும் காட்சி இருந்தாலும் அதைவிடவும் சிறந்தது இந்தப்படத்தின் காமெடி தான்!

    உதவியாளர் விவேக் வாசகர் கேள்விகளை ஒவ்வொன்றாக படிக்க கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் நக்கலாக சிரித்தபடி பிரமிட் நடராஜன் பதிலளிக்கும் காட்சி அட்டகாசம்!

 
   உண்மையான ஊடக அவியல் ஆளர் சித்தரிப்பு என்றால் கண்டிப்பாக இந்த கேரக்டருக்கு விருது கொடுக்கலாம்!