Sunday, 30 August 2026

Pradeep Ranganathan Chronicles

 

பிரதீப் ரங்கநாதனை ரசிப்பவர்களை "2K கு.ஞ்சான்" "ரசனை கெட்டவர்கள்" " காலம் செல்லச்செல்ல எப்படியெல்லாம் ரசனை வீழ்ச்சி அடைகிறது பாருங்கள்!" என்று ஈஸி சேரில் படுத்தபடி விட்டத்தை பார்த்து அங்கலாய்க்கும் 90s மற்றும் அதற்கு முந்தைய தலைமுறை "கிட்ஸ்கள்" ( நீ 319 நாட்டவுட் என்பதால் இதில் எதிலுமே வரமாட்டியே உதயா - கும்மாங்கோ) என்று ஒரே கொந்தளிப்புகள்! நமக்கு தெரிந்து இதனாலேயே பலர் பிரதீப்பின் படங்களை ரசித்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ள பயப்படுகிறார்கள் என்று உறுதியாக நம்புகிறோம்! 
 
 . 

 


கோமாளி படம் நமக்கு பிடிக்கவில்லை.அது உண்டாக்கிய ஒவ்வாமை பற்றி அப்போதே ஒரு முகநூல் பதிவு போட்டிருந்தோம்.

    அந்த இயக்குநர் ஹீரோவாக இயக்கி நடிக்கிறார் என்றதுமே காததூரம் ஓடிவிட்டோம்(லவ் டுடே).இன்றைக்கும் நாம் அந்த படத்தை பார்க்கவில்லை. சத்யராஜின் மிகையான பாத்திரப்படைப்பு மற்றும்  தனது வழக்கம்போல அதை மிகைநடிப்பால் பார்ப்போரை நடுங்க வைத்திருப்பார் என்ற உறுதியான நம்பிக்கை  என்று பல காரணங்கள்.
     பிறகு டிராகன். அந்த படத்தையும் உடனே பார்க்கவில்லை.பயில்வான் விமர்சனத்தில் "ஜாலியா நாலு வருசம் காலேஜ் படிச்சாமாதிரி ஒரு அனுபவம்" என்றதால்  "பார்க்கலாமோ?" என்ற சந்தேகத்தை மட்டுமே உண்டாக்கியது.
 

பிறகு தற்செயலாக ஒரு காட்சி பார்க்க நேர்ந்தது.பிரதீப் காரில் இருந்தபடியே முடிந்துபோன கிங்ஸ் லெவனை ஸ்டைலாக சுண்டிவிட அது பக்கத்து காரில் இருக்கும் கல்லூரி முதல்வர் மிஷ்கின் மேல் பட்டுவிட அப்போது ஏழரை பிடிப்பதாக வந்த காட்சி பிடித்திருந்தது.நமது அபிமான பாண்டா மிஷ்கினுக்கு ஏற்ற கதாபாத்திரமாக இருக்கே என்று தோன்றியதாலேயே பார்த்தோம்.

 

    படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்போதே பாதியில் நிப்பாட்டி இது மலையாள படத்தின் ரீமேக்கா? என்று ஒருமுறை உறுதி செய்துகொண்டோம். காரணம் மலையாள சினிமாக்களில் தான் இவ்வளவு உற்சாகம் கரைபுரண்டு ஓடும்.தமிழ் சினிமா என்றாலே ஹைடெசிபல் ஒப்பாரி என்றுதான் இருக்கு(ம்).

       அந்தப்படம் பெரும்பாலும் பிடித்திருந்தது.மீண்டும் ஒருமுறை பார்ப்போமா? என்றால் 'கண்டிப்பாக!'.  'பெரும்பாலும்' என்று சொல்ல காரணம் படத்தின் இறுதியில் வந்த டிபிக்கல் தமிழ் சினிமா சென்டிமென்ட் பிழிதல்!

     ஏமாற்றி வேலைக்குப்போய் மஜாவா இருக்கான்.பெரிய பணக்கார பெண்ணை கட்டிக்க போறான் என்றெல்லாம் கதை ஜாலியாத்தான் போச்சு.ஆனா திடீர்னு பேப்பர் சேசிங் செய்ததால் ஒரு பரம ஏழை மாணவனின் கூகுள் வேலை கனவு பறிபோனது(அந்த மாணவனுக்கு ஒரு நோய்வாய்ப்பட்ட தாய் ,அவன் வசிக்கும் ஓட்டை வீடு அது இதுவென்று பக்கா தமிழ் சினிமா சென்டிமென்ட் மசாலா!) அதற்காக ராகவன் எல்லாத்தையும் தியாகம் செய்வதெல்லாம் பக்கா தமிழ் சினிமா பாணி!
    நான் படத்தில் விஜய் ஆண்டனி எல்லா பிராடு வேலைகளையும் செய்துவிட்டு திடீரென்று அந்த சலீம் என்ற மரித்துப்போன இளைஞனின் குடும்பத்தை காப்பாற்றுவதாக காட்டிய அதே டெம்ப்ளேட் சென்டிமென்ட் காட்சிகள் தான் இதில் உறுத்தல்.மற்றபடி ஒரே ரணகளம் தான்.

   



 

.
தோற்றம் :

தோற்றம் சார்ந்து எவரையும் விமர்சித்தல் கூடாது என்று சொன்ன அதே உலக விமர்சகர் குழு பிரதீப்பை தோற்றம் சார்ந்தே விமர்சிப்பது நகைமுரண்.அப்படி " old school hero லுக்" கொண்ட நடிகர்கள் என்று இன்று பார்த்தோமானால் காசர் அஜீத் அரவிந்த்சாமி ஜெயம்ரவி/ரவிமோகன் ஷாம் என்று எல்லாருமே நடுத்தர வயதை தாண்டியவர்கள்/அடைந்துவிட்டவர்கள்.மிஞ்சி இருப்பது ஆத்மன் மட்டுமே ( ஸ்லீப்பர் செல் வேலையை காட்டிட்டியே! - கும்மாங்கோ).

 
      அதனால் தோற்றத்தில் சிறந்து விளங்கும் இளம் நாயகன் என்றெல்லாம் இப்போது (ஆத்மன் தவிர்த்து) யாருமில்லை.அசோக் செல்வன் கவின் ரியோ மணிகண்டன்  ரிஷிகாந்த் போன்றவர்கள் சராசரி தோற்றம் கொண்டவர்கள் என்பதால் இதில் சேர்க்க முடியாது.

     என்னமோ தமிழ் சினிமாவில் இருப்பவர்கள் எல்லாருமே தோற்றத்தில் செம்ம ஸ்மார்ட்டாக  இருப்பது போலவும் பிரதீப் மட்டுமே இப்படி இருப்பதாகவும் சொல்வதே லாஜிக் இல்லாத வாதம்.

    மேலும் பிரதீப்பை தனுசுடன் ஒப்பீடு செய்கிறார்கள்.தனுசு நடிக்கவந்த புதிதில் பார்க்க " பிஹார்காரனா  தோற்றமளித்தாலும் தமிழ் பேசுறானேய்யா" என்பதாகத்தான் இருந்தார்!(ஆத்மன் பாசறை சார்பில் வன்மத்தை கொட்டிட்டியே - கும்மாங்கோ).ஆனால் தோற்றத்தில்  பிரதீப் அப்படி இல்லை.

ஆளு பாக்க வடக்கனா தெரிஞ்சாலும் நல்லா தமிழ் பேசுறியே! 


 

    மேலும் பிரதீப்பின் பலமே funk வைத்த சுருள் தலைமுடி தான்.எனவே மிலிட்டரி கட்டிங்,கிராப் கட்டிங் mohawk ஸ்பைக் மொட்டை எண்ணெய் போட்டு வழித்து சீவுதல்  என்றெல்லாம் வேறு மாதிரி முயற்சித்தால் காலி.பின்னால் வளர்ந்திருக்கும் funk முடியை கூட வெட்ட கூடாது.வெட்டினால் அம்புட்டுதேன்!


 

      ஒருகாலத்தில் ஹர்பஜன் சிங் சீக்கிய வழக்கத்தை மீறி தனது  கத்தரிக்கப்படாத முழு சிகையுடன் ஒரு விளம்பரத்துக்கு போஸ் கொடுத்தார்.அத்தோடு அவரது கிரிக்கெட் வாழ்க்கை சரிவை நோக்கி மிக வேகமாகவே சென்றது!மீளவே இல்லை!

 



    அந்த சுருள் சுருளான பிடரிதான் பிரதீப்புக்கு ஒருவித ஆராவை கொடுக்குது(இதே போன்ற வரிகளை ஒருகாலத்தில் ஒங்க இவருக்கு விமர்சகர்கள் சொன்னது நினைவில் வருகிறது 😃)!அவரது எனர்ஜி லெவல் மற்றுமொரு பலம்.
.




 நடிப்பு:
கண்டிப்பாக பிரதீப்பின் நடிப்பு என்பது அமெச்சூர்த்தனத்தின் உச்சம் என்று சொல்லாம்.அதில் மாற்றுக்கருத்து இல்லை.திடீரென்று ஜெர்க் ஆகி ஜம்ப் பண்ணி பதில் சொல்வது (இதுல கொஞ்சம் கிரெடிட் நாகேஷுக்கு செல்ல வேண்டும்)விரல் வித்தைகள் காட்டுவது செல்போனை தூக்கிப்போட்டு பிடிப்பது சத்தமாக எதிர்வினை ஆற்றுவது.....இரு இரு.. 'இதெல்லாம் ஏற்கெனவே ரஜினி செய்யல?' என்ற எண்ணம் எழாமல் இல்லை.
    ஆனால் அதுதான் பிரதீப்பின் பலமாக மாறிவிட்டது.இனி அவர் subtle ஆக எதிர்வினை ஆற்றுகிறேன் நிதானமாக நடி(ட)க்கிறேன் என்றெல்லாம் செய்தால் படம் பப்படம் ஆகும்!


    மேலும் அவர் இதேபோன்று நகரம் சார்ந்த காதல் கதைகளில் மட்டுமே நடித்தால் மேலும் பல உயரங்களை அடையலாம்.அதை விடுத்து கிராமத்து மண்ணை அப்படியே குழைத்து ஒரு காவியமாக வடித்து அதில் குரூடு ஆயில் மேக்கப்பில் தலையில் சாக்கு மாட்டிக்கொண்டு மழையில் குத்தவச்சு பின்னணியில் கிழவியின் "ஏ....ஆயி" ஒப்பாரி அது இதுவென்று முயன்றால் அத்தோடு அவரது திரை வாழ்க்கை ஓவர்!( விக்ரம் தாக்கப்பட்டார்? - கும்மாங்கோ)

.
சர்ச்சைகள் :

   சர்ச்சை எனும் பெட்ரோலில் தான் தமிழ் சினிமாவில் பலரது கரியர் வண்டிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன( சூரியனை பெயராக கொண்டவரா? - கும்மாங்கோ).பிரதீப் அதை சாமர்த்தியமாகவே பயன்படுத்தி கொள்கிறார்.Dude படத்தின் கதையை விடவெல்லாம் பேரதிர்ச்சி உண்டாக்கும் கதைகள் கே.பி எடுத்துள்ளார்.ஆனால் உலக சினிமா போராளிகள் dude படத்துக்கு எதிராக  மிகையாக கொதித்தெழ அதுவே அப்படத்தின் வெற்றிக்கு  (பிரதீப்,மமிதா,  ஊறும் பிளட் ஆகியவை தவிர்த்து) மற்றுமொரு  காரணமாகி விட்டது. 
 . இப்படத்திலேயே மமிதா உடனான ஜோடி இயல்பானதாக இருந்தது.ஆனா ரெண்டு படம் தாண்டி ஜோடியாக நடித்தால் உடனே இணைய போராளிகள் கொதித்து எழுவது ஒருபுறமிருக்க ஊடகங்கள் கிசுகிசு எழுதியே காலி செய்துவிடுவார்கள்.அந்த காலத்திலேயே உத்தம்குமார் சுசித்ரா சென் சிக்கல் இல்லாது இருபத்தைந்து படங்களில் ஜோடியாக நடித்தனர்(அதற்காக அவர்களோடு இவர்களை இணை வைத்ததாக கொந்தளிக்க வேண்டாம்).இந்த கிசுகிசுக்களுக்கு பயந்தே சிவகார்த்திகேயன் பிரியங்கா மோகனுடன் (இவர்கள் ஜோடியும் இயல்பாக இருந்தது) நடிப்பதை தவிர்த்தார்.இதுல "தெற்குல தான் முற்போக்கு பிதுங்குது" என்று மார்தட்டல் வேற!என்ன கொடுமை.... 
 
Dude படத்திலுமே இளைஞர்களின் நவீன சிந்தனை போக்குக்கு, அணுகுமுறைக்கு  காரணம் உலகமயமாக்கல் என்ற உண்மையை ஒப்புக்கொள்ளாத இயக்குனர் இதற்கெல்லாம் காரணம் "நூறு வருசத்துக்கு முன்னாடி இருந்த தாடிக்கிழவர் தான்" என்று அடித்து விட்டதை அந்த தாடிக்கிழவரே (ஒருவேளை இப்போது இருந்திருந்தால்) நம்பாமல் இயக்குனர் மண்டையில் தடியால் ஒரு போடு போட்டிருப்பார்! பிரதீப்  இந்தமாதிரி அடுத்தவர் கொள்கையை பரப்பும் கைத்தடியாக தன்னை பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்காமல் இருத்தல் நன்று.
 

    சமீபத்தில் தில்லியில் நடந்த மாணவர் போராட்டத்தை பற்றி ஒரு எக்ஸ் பதிவு போட்டு அனைவரையும் கொந்தளிக்க வைத்ததை பார்த்தபோது " எப்போ எங்க ட்ரிக்கர் பட்டனை அழுத்தனும்னு பய கரக்ட்டா புடிச்சிட்டான்" என்று தோன்றியது 😃

 


     சரியான கால இடைவெளியில் அப்பப்போ ட்ரிக்கர் பட்டனை இப்படி தட்டிக்கிட்டு இருந்தாலே லைம்லைட்டில் மெயின்டெய்ன் பண்ணிக்கலாம்! 😀
    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து கையை சுட்டுக்கொண்டுவிட்ட நிலையில் ஏற்கெனவே தான் அமைத்த வெற்றி கூட்டணி இயக்குநர்களுடனோ அல்லது அதுபோன்ற ஒத்த சிந்தனை கொண்ட இளம் இயக்குநர்களுடனோ( விசி மாதிரி ஏற்கெனவே பப்படம் கொடுத்த இயக்குநர்களை தள்ளியே வைத்து) பயணித்தால் அவர் இன்னும் உயரங்களை அடையலாம்!


டிஸ்கி: என்னதான் PR Chronicles எழுதினாலும் நாம எப்பவுமே ஆத்மன் பாசறை ஸ்லீப்பர்செல் தாங்க! (க்கும்.இனி இவன நம்ப முடியாது.கண்காணிக்க வேண்டியதுதான் - கூல் சுரேஷ்)

 




No comments:

Post a Comment