Sunday, 9 November 2025

HMT- ன் சொதப்பல்கள்

    ஜப்பான் மேக் ஸ்விஸ் மேக் என்று போய்க்கொண்டிருந்த காலத்தில் ஜப்பானின் சிட்டிசன் நிறுவன தொழில்நுட்ப உதவி +மத்திய அரசின் நிதி+இடவசதி உதவியுடன் ஆரம்பித்து பிறகு சொந்தமாகவே movements தயாரித்து பயன்படுத்தியது ஹெச்.எம்.டி.
        பிரதமராக இருந்த இந்திரா காந்தி ஹெச்.எம்.டி ஜனதா கடிகாரத்தை கட்டியிருந்தார்.அனைவரும் வாங்கக்கூடிய விலை அதைவிட முக்கியமாக நல்ல தரத்தில் நீடித்து உழைக்கக்கூடிய(இப்போதும் நம்மிடம் உள்ள ரஜத், ஜனதா & பைலட் நன்றாக ஓடிக்கொண்டிருக்கின்றன)  தயாரிப்பாக இருந்ததால் மக்களால் விரும்பி வாங்கப்பட்டது.

 

      கிட்டதட்ட விற்பனை ஆன மாடல்கள் பெரும்பாலும் குறைந்த விலையிலான சாவி கொடுக்கும் வகை மெக்கானிக்கல் மாடல்கள் தான்.ஆட்டோமேட்டிக் மாடல்களும் இருந்தன.
     பிறகு அலட்சியம்,திட்டமிடாமை, தொலைநோக்குப்பார்வை இல்லாமை போன்ற காரணங்களால் 2016 இல் மூடப்பட்டது.மக்களின் தொடர் கோரிக்கைக்கு பின்னர் 2019 இல் மீண்டும் விற்பனையை ஆரம்பித்தது ஹெச்.எம்.டி.
  ஆனால் ஒரு பெரிய ஃன்னாவாக இப்போது எந்த கடிகாரமும் ஹெச்.எம்.டியால் தயாரிக்கப்படுவதில்லை! Outsourcing என்ற பேரில் உதிரி பாகங்கள் உட்பட அனைத்தும் வெளியில் இருந்து தருவிக்கப்பட்டு ஒன்றிணைக்கப்படுகிறது.In house movement என்று சொந்தமாக movement தயாரிப்பது கூட நிறுத்தப்பட்டுவிட்டது. மியோட்டா அல்லது சீக்கோ movement கள் தான் பயன்படுத்தப்படுகிறது!
   அதைவிட கொடுமை இந்த ஹெச்.எம்.டி கடிகாரத்தை மக்கள் ஏன் விரும்பினார்களோ அந்த அடிப்படை காரணங்கள் இப்போது இல்லாமல் ஆக்கப்பட்டுவிட்டது!
   குறைந்த விலையில் இயந்திர கடிகாரங்கள் என்பது போய் இப்போது பழைய மாடல் கேசில் குவார்ட்ஸ் மூவ்மென்ட் போட்டு விற்கிறார்கள்.

    ஜனதா கோஹினூர் தாரிக் சங்கம் போன்ற கிளாசிக் மாடல்களின் நிலை இதுதான்.எல்லாமே குவார்ட்ஸ் ஆக்கப்பட்டு விட்டது!அதுவும் நினைத்த நேரத்தில் வாங்கிவிட முடியாது.ஆடிக்கொரு தரம் அமாவாசைக்கொரு தரம் ஸ்டாக் இருப்பதாக வந்த அடுத்த கணமே விற்று தீர்ந்துவிடும்.ஸ்டாக் அலர்ட் போட்டாலும் நீங்கள் தளத்தின் பக்கத்திற்கு சென்று வாங்கும் பொத்தானை அழுத்துவதற்குள் out of stock என்றாகிவிடும்!


 

   இதுபோக புதிய மாடல்கள் என்ற பேரில் அதுவும் குவார்ட்ஸ் தான்.அவை இரண்டாயிரத்துக்கு கீழே விற்கப்படுவதால் பிரச்சனை இல்லை.தானியங்கி மாடல்களான Stellar போன்றவை பத்தாயிரத்துக்கு மேலே செல்லும்.அதுவும் மேற்சொன்னப்படி லேசில் கிடைக்காது!Stellar open heart மாடலுக்கு கடும் தேவை உள்ளது.ஆனாலும் கிடைக்காது!அவைகளில் பல நன்றாகவும் உள்ளன.ஆனால் ஹெச்.எம்.டி நிறுவனத்தின் ஆன்மா அதுவல்லவே!

    இளைய தலைமுறைக்கு குவார்ட்ஸ் தான் பிடிக்கும் என்று எந்த அறிவுஜீவி ஹெச்.எம்.டி நிறுவனத்துக்கு யோசனை சொன்னார்களோ தெரியவில்லை!இன்றைக்கும் தானியங்கி & சாவி கொடுக்கும் மாடல்களின் மீதான மோகம் அப்படியே உள்ளது.ஆனால் நிறுவனம் அதையெல்லாம் உணர்ந்ததாகவே தெரியவில்லை!

   இப்போதும் மேற்சொன்ன கோஹினூர் ஜனதா பைலட் தாரிக் சங்கம் ரஜத் ...etc..etc.. கிளாசிக் மாடல்களை தானியங்கி வகையாகவோ அல்லது பழையபடி சாவி கொடுக்கும் வகையாகவோ தயாரித்து வெளியிட்டால் உடனே விற்று தீரும் நிலைதான் உள்ளது.

 
    இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழியிலும் அந்தந்த மொழியில் எழுதப்பட்ட எண்கள் கொண்டு வெவ்வேறு மாடல்கள் வெளியிடப்பட்டன .தமிழ் எண்களைக்கொண்ட  டயல் மாடல்களும் உண்டு (தமிழனுக்கு சாதா தமிழே வராது.இதுல எண்களை படித்து தள்ளிவிட போகிறான்!- கும்மாங்கோ)

 

    இப்போதும் பலர் பெங்களூருவில் உள்ள ஹெச்.எம்.டி ஷோரூம் சென்று தோண்டித்துருவி அரிய மாடல்களை அள்ளிக்கொண்டு போய்க்கொண்டு தான் உள்ளார்கள்.இதை அந்த நிறுவனமும் உணரவில்லை அரசும் உணரவில்லை.

   Kannadiga pride என்ற வகையில் கர்நாடக அரசே கூட இதை எடுத்து செய்யலாம்(HMT Gandaberunda கன்னட மக்கள் அல்லாதவர்களும் விரும்பிய ஒரு மாடல்) .ஆனாலும் யாரும் செய்ய முனையவில்லை!
உண்மையிலேயே கடிகார ஆர்வலராக உள்ள ஒருவரை தலைமை பொறுப்பில் நியமித்தால் இவைகளை செய்ய முடியும்.ஆனாலும் red tape முனைப்பு இல்லாமை கடிகாரங்கள் குறித்த ஆர்வமில்லாமை... அது இதுவென்று ஏகப்பட்ட தடைகள் உள்ளன!
 
  Timex போன்ற நிறுவனங்கள் தங்களது பழைய கிளாசிக் மாடல்களை reissue என்ற பேரில் ( Q series) பழமை மாறாமல் புதிதாக வெளியிட்டு அவை விற்பனையில் சக்கை போடு போடுகிறது.இதெல்லாம் ஹெச்.எம்.டி கண்ணுக்கு தெரியாமல் போனது ஏனோ?
Timex Q  Series 1972 Reissue 

 

  தற்போதைக்கு கிணற்றில் போட்ட கல் என்ற நிலைதான் உள்ளது!

Saturday, 1 November 2025

கொரியர் அலப்பறைகள்!

 கொரியர் சேவைகள் நாட்டில் பிரபலமாகத்துவங்கியிருந்த நேரம்.மக்கள் ஆச்சரியத்தில் இருந்தார்கள்."அதெப்படி இன்னைக்கு போட்டா நாளைக்கு போயிடுமா?" 

பலர் இதை நம்பி உடனடி பணம் அனுப்ப வேண்டியவர்களுக்கு உறையில் பணத்தை மட்டும் வைத்து கொரியர் செய்தார்கள்.அந்த உறை மிக பத்திரமாக போய் சேர்ந்தது.ஆனால் உள்ளே பணம் இருக்காது!
  இன்னும் சிலர் தங்களை மேதாவியாக கருதிக்கொண்டு உறையில் ஒரு புத்தகத்தை வைத்து அதனுள் ரகசிய அறை உண்டாக்கி அதில் பணத்தை வைத்து அனுப்பினார்கள்.வழக்கம் போல புத்தகம் ரகசிய அறை எல்லாம் பத்திரமாக போய் சேர்ந்தது.பணத்தை தவிர!
    பல வாடிக்கையாளர்கள் இதுகுறித்து கொரியர் அலுவலகத்தில் தகராறு செய்ய, முதலில் "இதற்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை.நீங்கள் கொடுத்த உறையை பத்திரமாக சேர்த்துவிட்டோம்.அவ்வளவுதான்", என்றவர்கள் பிறகு பருப்பு சாரி பொறுப்புத்துறப்பு என்ற வகையில் "பணம் நகை விலை மதிப்புள்ள பொருட்களை அனுப்பினால் நிர்வாகம் பொறுப்பல்ல" என்று அறிவிப்பு பலகை வைத்தார்கள்.
     ஒருவேளை இதே நிகழ்வு ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ நடந்திருந்தால் அத்தனை கொரியர் நிறுவனங்களுக்கும் நிரந்தர திண்டுக்கல் பூட்டு தான்!ஆனால் இந்தியாவாச்சே!எந்த நிறுவனம் வாடிக்கையாளரை எப்படி கசக்கி பிழிந்தாலும் நிவாரணமோ பாதுகாப்பு கிடையவே கிடையாது!எத்தனை வழக்குகளை போட்டாலும் நிலை இதுதான்.ஏதோ அத்தி பூத்தார்போல ஒரு வழக்கில் வாடிக்கையாளருக்கு பொருளின் விலை+ அபராதம் விதிக்கும் நிகழ்வு நடக்கும்.அப்படி நடக்காமல் போல ஆயிரக்கணக்கான சம்பவங்களும் உண்டு.
   தற்காலத்தில் வேறுவகை சேட்டை செய்கிறார்கள்.ஒருகாலத்தில் பதினைந்து பைசா தபால் அட்டையில் "தலைவெட்டியாம்பட்டி P.O" என்றெழுதி பின் கோட் சரியாக போட்டால் வாரம் பத்து நாளில் கண்டிப்பாக உரியவரிடம் ஒப்படைக்கப்படும்!அப்போது எந்த மொபைலும் கிடையாது.ஏன் லேன்ட்லைன் கூட இல்லை!

   ஆனால் கொரியர் சேவைகள்???அதில் குறிப்பிட்டுள்ள மொபைல் போனுக்கு ஒருமுறை மட்டும் அழைப்பு விடுக்கப்படும்.இரண்டு ரிங் தாண்டி எடுக்காவிட்டால் மேட்டர் ஓவர்!அந்த பார்சல் கொரியர் அலுவலகத்தில் விட்டெறியப்படும்(காதல் மன்னன் பட நாயகி போல போன் அடித்த நொடியே எடுக்க வேண்டும்)!அதன்பிறகு அவரவர் சாமர்த்தியம்.இடுப்பில் துண்டை கட்டிக்கொண்டு டெலிவரி ஹப் எங்கே என்று கண்டுபிடித்து "அய்யா சாமி போனை எடுக்காம போனது என்னோட தப்புதான் சாமி" என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து பெற வேண்டும்.
போன் எடுக்க முடியல சாமி!பார்சலை கொடுங்க சாமி!

 
   அதிலும் டெலிவரி ஹப் எங்கே என்று கண்டுபிடிப்பதற்கு வேட்டையாடு விளையாடு ராகவன் லெவலுக்கு யோசித்து-விசாரித்து-ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்க வேண்டும்.ஏனெனில் பல கொரியர் நிறுவனங்கள் தங்கள் அலுவலக தொடர்பு எண்ணையோ, முகவரியையோ ,டெலிவரி செய்ய வந்த பிரகஸ்பதி எண்ணையோ கொடுப்பதில்லை.இணையத்தில் தேடினாலும் கிடைப்பது ஒரு டப்பா டோல் ஃப்ரீ எண்தான்.அது எப்போதுமே வேலை செய்யாது.மின்னஞ்சல் முகவரியும் அவ்வாறே!

  

 இங்க ஒரு கொரியர் கம்பெனி இருந்துச்சே?அது எங்க?
.
இப்படியே அந்த குட்டி யானை டயர் மார்க்கை ஃபாலோ பண்ணிக்கிட்டு போ!

    இதுகூட பரவாயில்லை இன்னும் சில கொரியர் நிறுவனங்கள் போனும் செய்யாமல் வீட்டுக்கும் வராமல் "fake delivery updates" என்ற வகையில் ஒவ்வொரு நாளும் காலையில் "Out for delivery " என்றும் இரவில் "Consignee not available" "Door locked" " Consignee dead.Oor singing Alaala Kanda around his body" என்றெல்லாம் வெக்கமே இல்லாமல் போலி அப்டேட்ஸ் கொடுப்பார்கள்.அப்படி வந்தால் மீண்டும் ராகவனாக மாறி அந்த டெலிவரி ஹப் எங்கே என்று தேடி அங்கே போனால் "போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா?தினம் விடாமல் செய்தோம்" என்று வாய் கூசாமல் அடித்து விடுவார்கள்!

     பெரும்பாலான டெலிவரி ஆசாமிகளுக்கு ஒரு முகவரியை சொந்தமாக கண்டுபிடித்து வரும் திறன் சுத்தமாக இல்லை.நாம் தான் போன் வரும்போது இரண்டாவது ரிங்கில் எடுத்து " ஜே பூர்லேந்து சூர்யா பேசறேன்!அந்த சாக்கடையை தாண்டி ஜம்ப் பண்ணி இடதுகை பக்கம் திரும்பி அண்ணாந்து பார்த்து....etc...etc.." என்று உச்ச ஸ்த்யாயில் வழி சொல்ல வேண்டும். சிம்பிளாக அனைத்தையும் கேட்டுவிட்டு "நான் வேற ஏரியாவுல இருக்கேன். அந்தப்பக்கம் நாளைக்கு வரேன்" என்று பதில் அளிப்பார்கள்.மீண்டும் அடுத்தநாள் "ஜே பூர்லேந்து சூர்யா பேசறேன்.... " என்று கத்த வேண்டும்!

 

     பல தபால்கள் மொத்தமாகவே காணாமல் போய்விடும்."எங்களுக்கு தெரியாது.ஆட்டையாம்பட்டி ஆபீசில் கேளுங்கள்..." அப்படி இப்படி என்று வாடிக்கையாளனை பிங்க் பாங் விளையாடுவார்கள்!
   லண்டனில் டாக்சி ஓட்டுநராக மிக கடுமையான சோதனை ஒன்றுண்டு.
The Knowledge என்று அழைக்கப்படும் அந்த பல்வேறு கட்டங்களை கொண்ட தேர்வு முறையில்
 லண்டன் நகரத்தின் அத்தனை சந்து பொந்துகளும் மனப்பாடமாக தெரிந்திருக்கிறதா என்ற சோதனை உண்டு.ஆனால் இங்கே எதற்கும் எந்த சோதனை பரீட்சை கிடையாது!
   ஆனால் மக்களுக்கு எல்லாமே அதிவிரைவாக நடக்க வேண்டுமே!அதனால் தனியார் கொரியர் கொண்டுவரப்பட்டது."தனியார் கிட்ட கொடுத்தாத்தான் வேலை ஒழுங்கா நடக்கும்" என்ற மக்களின் மூட நம்பிக்கை  பொய்த்துப்போனது!
     சமீபத்தில் கூட ஏர் இந்தியா டாடா வசம் ஒப்படைக்கப்பட்டபோது மக்கள் ஆர்கஸம் அடைந்தார்கள்.ஆனால் இப்போ சேவையின் லட்சணம் என்ன? யார் மனதும் புண்பட்டுவிட கூடாது என்று கவனமாக ஒவ்வொரு வாரத்தைக்கு இடையேயும் பன் பட்டர் ஜாம் வைத்து எழுதும் பாடகர்  ஹரீஷ் ராகவேந்திராவே ஏர் இந்தியா அடாவடிக்கு எதிராக பொங்கினார்!
   தனியார் நிறுவனம் அரசு நிறுவனம் என்பதையெல்லாம் விட அது எப்படி நடத்தப்படுகிறது என்பதே முக்கியம்! நாம் தொடர்ந்து அரசின் தபால் சேவையை மட்டுமே பயன்படுத்துகிறோம்.தபால்காரருக்கு இன்றளவும் இந்த வீட்டில் இன்னார் என்ற விவரம் தெரியும் என்பதால் போனை எடுக்க முடியாத நிலையில் இருந்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அல்லது அண்டை வீட்டாரிடம் கொடுத்து விடுவார்கள்!
ஆனால் நமக்கு அனுப்பும் ஆசாமி அதை செய்யாமல் நம்மை பாடாய் படுத்தி விடுகிறார். 

   கொரியர் தபால்கள் அதிகம் ஆட்கள் குறைவு என்கிறார்கள்.அப்படியே தேவையான அளவு ஆட்களை போட்டுவிட்டாலும்..... ஏனய்யா ஒரு நாளைக்கு மூன்று முறை சாதா சைக்கிளில் தபால் டெலிவரி ஆன காலங்கள் உண்டு.சைக்கிள் பின் பக்கம் முழுக்க தபால்கள்.அது தவிர கையில் முழுங்கை முழுக்க தபால்கள் அடக்கிக்கொண்டு மிகச்சரியாக டெலிவரி செய்த தபால்க்காரர்கள் உண்டு!இந்த வெட்டி சாக்கு எதுக்கு?

 
   GDP இல் இந்தியா ஜப்பானை மிஞ்சியது ஜெர்மனியை மிஞ்சியது என்றெல்லாம் மார்தட்டி கொள்கிறார்கள்.ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு நுகர்வோருக்கு மரியாதை ,கண்ணியமாக நடத்தப்படுதல், நுகர்வோர் உரிமை இதில் எல்லாம் இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் மேற்சொன்ன நாடுகளை இந்தியா தாண்டாது!

.

P.S: "டேய் பாசிஸ்டு!முதலாளித்துவ திமிரில் ஆடாதே! ஒரு தொழிலாளி படும்பாடு தெரியுமாடா? " என்றெல்லாம் பொங்கல் வைத்தால் அவர்களுக்கு தொடர்ச்சியாக பத்து கொரியர் தபால் அனுப்பி தொடர் மண்டைக்குடைச்சல் கொடுக்கப்படும்! ஜா.. ..ஆ.. ஆ.. ஆ..க்கிரதை!