Sunday, 26 October 2025

Eureka!

 இண்டர்ஸ்டெல்லர் படத்தில் ஜோசப் கூப்பர் ( Matthew McConaughey) அயல்வெளியில் இருந்து தனது மகள் மர்ஃபி கூப்பருக்கு(Jessica Chastain) தந்தி சமிக்ஞை மூலம் தொடர்பு கொண்டு புவியீர்ப்பு தொடர்பான சமன்பாடுகளை நிறைவு செய்து அதன் மூலம் மனிதகுலத்தை காப்பாற்றுவதற்கான ஒருவழி கிடைப்பதாக 
ஒரு காட்சி வரும்.படத்தில் மிக முக்கிய காட்சிகளுள் ஒன்று.

 
   அதில் ஒரு கைக்கடிகாரத்தின் முட்கள் தந்தி சமிக்ஞைகளுக்கு ஏற்ப துடிப்பதாகவும் மர்ஃபி அவற்றை குறிப்பெடுத்து சாதாரண மொழிக்கு மாற்றம் செய்வதாகவும் வரும்! Eureka!



அந்தக்காட்சியில் பயன்படுத்தப்பட்ட கடிகாரம் உண்மையில் அப்போது தயாரிப்பில் இல்லாத ஒரு மாடல். நோலன் விருப்பப்படி ஹாமில்டன் நிறுவனத்தின் பிற தயாரிப்புகளில் ஒரு கடிகாரத்தின் முட்கள் மற்றொரு கடிகாரத்தின் டயல் என்பதாக ஒன்று சேர்க்கப்பட்ட ஒரு prop! அவ்வளவே!
 

   ஆனால் அந்தக்காட்சி கடிகார ஆர்வலர்கள் உட்பட அனைவரிடமும் ஒரு உணர்வெழுச்சியை உண்டாக்கியிருந்தது.
   பொதுவாக ஒரு கடிகார நிறுவனம் இம்மாதிரி வெட்டி ஒட்டப்பட்ட மாடல்களை பொது சந்தையில் விற்க விரும்பாது.ஹாமில்டன் நிறுவனமும் அவ்வாறே பிடிவாதம் செய்தது.பிறகு கடிகார ஆர்வலர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக Hamilton  Khaki Field "Murph" version ஐ அந்த மகள் கதாபாத்திரத்தின் பெயரிலேயே வெளியிட்டது. பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட் என்பார்களே! அப்படி விற்று தீர்ந்தது.

   அதில் வினாடி முள்ளின் மேல் Eureka என்பதைக்குறிக்கும் தந்தி சமிக்ஞை இடம்பெற்றிருக்கும்.இது 40mm டயல் மாடல்.பிறகு 38mm டயல் மாடலை வெளியிட்டது.ஆனால் அதில் தந்தி சமிக்ஞை இருக்காது.

 
   எப்படி இருந்தாலும் மக்களின் நிற்பந்தத்தால் ஒரு கடிகார நிறுவனம் பணிந்து ஒரு மாடலை வெளியிட்டது பெரிய சாதனை தான்.அந்த மாடல் கடிகாரத்தை எப்போது பார்த்தாலும் ஹான்ஸ்  சிம்மர் அமைத்த அந்த ஆர்கன் பின்னணி இசை(First step OST) தானாக மனதிற்குள் ஒலிக்கும்!  


    இப்போது அந்த மாடலின் பல்வேறு வகையான சிறு மாறுபாடுகளைக்கொண்ட கடிகாரங்களை ஹாமில்டன் அறிமுகம் செய்து வைத்தாலும் (சென்ற வாரம் கூட வெள்ளை நிற டயல் மாடல், ஸ்டீல் பிரேஸ்லெட் மாடல் உள்ளிட்ட மூன்று மாடல்களை அறிமுகம் செய்தது) கடிகார ஆர்வலர்கள் மத்தியில் அந்த அசல் 40mm "Eureka" Murph model என்றும் முதன்மை இடத்தை பிடித்திருக்கும்!

    இது இந்தியாவில் கிடைக்காது.அமெரிக்காவில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டும்.சுங்கவரி அது இதுவென்று விலை எகிறிவிடும்!அமெரிக்கா ராஜீவ் தயவிருந்தால் சல்லிசாக வாங்கி விடலாம்!